Friday, December 31, 2004

ஆலடி அருணா கொலை !

ஆலடி அருணா கொலை
----------------------------------
முன்னாள் தமிழக அமைச்சர், முன்னாள் எம்.பி - முன்னாள் தி.மு.க தலைவர் ஆலடி அருணா இன்று (31-டிசம்பர்-2004) காலை நடை சென்றுகொண்டிருந்தபோது பைக்கில் வந்த மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார் என டிவி செய்திகள் சொல்கின்றன.

2004 முடிவதற்குள், சுனாமி சேதத்தால் நாடே சோகத்தில் ஆழ்ந்திருக்கும் இந்த வேளையில்
இன்னோர் துயரச் செய்தி. எல்லா அலுவலகங்களிலும் சம்பளத்தில் ஒரு பகுதியை
அளித்தும், மருந்து, துணிமணிகள் இன்ன பிற உதவிகளை அளித்தும் சுனாமியால் வாடும் மக்களுக்கு உதவி செய்து வரும் வேளையில், இப்படி ஓர் செய்தி.

தி.மு.கவில் இருந்த ஒரு சில saner voiceகளில் ஆலடி அருணாவும் ஒருவர். சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க சீட்டு கொடுக்காததில் கொஞ்சம் கோபப்பட்டு, மாற்று முகாம் பக்கம் சாய்ந்த தோற்றத்தை ஏற்படுத்தினாலும் அரசியல்வாதிகளில் கொஞ்சம் வித்தியாசமானவர். சட்டம் சம்பந்த விஷயங்களில் நல்ல படித்த, நல்ல மனிதர். டெல்லியிலும் மத்திய அரசு லெவலில் நல்ல பெயர் எடுத்திருந்தவர்.

ரவி சுப்ரமணியம் கைது - இன்று மாஜிஸ்திரேட் முன்பு ரகசிய வாக்குமூலம், விஜயேந்திரர்
தம்பி கைது, மட மேலாளர் சுந்தரேச ஐயர் - இன்னோர் வழக்கில் கைது... தவிர...

போலீஸ் காவலில் அப்பு - அண்ணா நகர் ரமேஷ் கொலை சம்பந்தமாக சாதக வாக்குமூலம் கொடுக்காத நிலையில், சுனாமி சேத மீட்புப் பணி சக்களத்தி சண்டைகளில் கழகங்கள் ஈடுபட்டிருக்கையில், கலைஞர் மறைவு வதந்தி வாக்குவாதங்கள், நேற்று முளைத்த சிறுபிள்ளைகளுக்கு பதில் சொல்லத்தேவையில்லாத வாதங்கள், இவற்றுக்கிடையே ஆலடி அருணாவை பட்டப்பகலில் வெட்டிக்கொல்லும் அளவிற்கு யாருக்கு அவருடன் தனி விரோதம் இருக்கும் என தெரியவில்லை. தா.கி. கொலைபோல் இதிலும் பெரிய தலை(?)
யாரையாவது சிக்க வைக்கும் தந்திரம் இருக்கும் போலத் தெரிகிறது.

2005ஆம் ஆண்டு அனைவருக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..!

- அலெக்ஸ் பாண்டியன்
31-டிசம்பர்-2004

Monday, December 27, 2004

சென்னையில் சுனாமி..! (26-Dec-2004)

சென்னையில் சுனாமி

சுமத்ரா தீவில் ஏற்பட்ட 8.9அளவு (ரிக்டர் ஸ்கேல்) நிலநடுக்கத்தால், கடலில் ஏற்பட்ட
கொந்தளிப்பு, தென் கிழக்கு ஆசியநாடுகள் அனைத்தையும் பதம் பார்த்து பல உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலும் தமிழ்நாட்டிலும், ஆந்திரக் கரையோரம் மற்றும் கடலோர மாநிலங்கள், அந்தமான், தாய்லாந்து என எல்லா இடங்களிலும் சேதம்.


புகைப்படம்: நன்றி: Dinamalar


இந்த இயற்கை சீற்றத்தால் உயிரிழந்த எண்ணற்ற மக்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்கள்.

காலையில் முதலில் பார்த்த தொலைக்காட்சிச் செய்திகள் - விளைவு என்னமோ சுமார் என்ற மாதிரி தெரிந்தது. நேரம் ஆக ஆக, அலைகள் உள்ளே வந்து இந்த மாதிரி ஒரு நாசத்தை ஏற்படுத்தும் என்பது எதிர்பாராதது. நாகை மற்றும் கடலூரில் இழப்பு மிக அதிகமாக இருப்பதாக சொல்கின்றனர். இது போன்ற ஒரு இயற்கை சீற்றத்தை எதிர்பார்க்காமல், காலையில் கடற்கரை சென்றோர், மீனவர்கள், கடலோர குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் இப்படி ஒரு பிரளயம் ஏற்படும் என முதல் நாள் இரவு நினைத்திராத வகையில் இயற்கை தன் சீற்றத்தைக் காட்டிவிட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வேளாங்கண்ணி வந்த 500 பயணிகளைக் காணவில்லை என்ற செய்தி இன்னும் அதிர்ச்சி. வேளாங்கண்ணி தேவாலயத்திலிருந்து சுமார் 100-200 மீட்டரிலேயே கடல் இருப்பதால், அலையின் உக்கிரத்தில் அங்கு ஆன சேதம் இன்னமே தான் தெரியவரும்.

இலங்கை நாலாபுறமும் கடல் சூழ்ந்துள்ளதால் எல்லாபக்கமும் பலத்த சேதம் என பல தொலைக்காட்சிகளில் காண்பித்து வருகின்றனர். ஒரே நாளில், ஒரு இயற்கை சீற்றத்தில் 10000க்கும் மேற்பட்டோர் அழியுமாறு, பல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் பலத்தை கொண்ட இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைகள், ஏன், எதற்கு, எப்படி.. என இனிமேல் தான் ஆராய்ச்சியில் தெரியவரும்.

சுஜாதா 1976ல் கல்கியில் எழுதிய 'நகர்வலம்' என்ற கதை இந்த கடல் கொந்தளிப்பு மற்றும் சென்னையில் சில பகுதிகள் மூழ்கியது பற்றியது என தினத்தந்தி (27-Dec ப்ரிண்ட் எடிஷன்) குறிப்பிட்டுள்ளது. இன்னொரு திமலா ?

*** *** ***

மறைந்த இசை மேதை எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிக்கும், முன்னாள் பிரதமர் நரசிம்மராவிற்கும்,
மருத்துவர் மாத்ருபூதம் அவர்களுக்கும் எமது அஞ்சலி.

- அலெக்ஸ்
27-டிசம்பர்-2004

Wednesday, December 15, 2004

கணினி வாங்கினோமே...! - லாஸ் ஏஞ்சலஸ் சுவாமிநாதன்

எல்லே சுவாமிநாதன் அவர்களின் மற்றுமோர் படைப்பு. - இது கணினிப்பா(??) வகையைச் சேர்ந்தது. அவரது படைப்பின் தாக்கத்தை / தீர்க்க தரிசனத்தை அவரவர்கள் வாழ்வில் உணர்ந்திருக்கலாம். அவரது அனுமதியுடன் மறுபதிப்பு.

நன்றி: அகத்தியர் குழுமம், தமிழ்.நெட், டாக்டர்.என்.சுவாமிநாதன் - லாஸ் ஏஞ்சலஸ் படைப்பு வெளியான தேதி: 15-நவம்பர்- 1999

========================================
இது கணினிப்பா வகையைச்சேர்ந்தது.

கணினி வாங்கினோமே..!
========================

கடைக்குப் போனோமே
கணினி ஒன்று வாங்கினோமே
கணக்கு போட்டான் அண்ணன்
கட்டம் வட்டம் போட்டேன் நான்
கதை படிச்சாங்க அம்மா
காயிதம் எழுதினாரு அப்பா

ஏழெட்டு மாசமாச்சு
எதிர நின்னு பாத்து பேசரது நின்னு போச்சு
எப்பவும் எல்லாருக்கும் கணினியே கதின்னாச்சு
ஆருக்கு இந்த கணினி அவசியமுன்னு
ஆத்திரம் அடிதடி வரலாச்சு
ஆளுக்காள் அடிக்கடி கத்தலாச்சு

அப்பாவுக்கு பெரிய கோபம் வந்தாச்சு
கணினியால குடும்பம் ஒடைஞ்சாச்சு
காலையில் இதுக்கு ஒரு முடிவாச்சுனு கத்தி
கட்டிலுக்கு தூங்க போயாச்சு

காலையில அப்பா
கணினிய கடாசி எறிஞ்சு
குப்பையில் போடுரதா
கனவெல்லாம் வந்திச்சு

காலையிலே போனாரு அப்பா
கையில வாங்கிவந்தாரு
கைநெறய மூணு புதுக் கணினி
கணினி இப்ப ஆளுக்கு ஒண்ணாச்சு

பேச்சு சத்தம் சிரிப்பு சுத்தமா நின்னே போச்சு
பேசாம எப்பவும் கணினியே பார்க்கலாச்சு
ஆளுக்கொரு அறையிலே அடைஞ்சாச்சு
ஆட்டம் பாட்டம் ஓட்டம் அறவே போச்சு

ஆசையா பேச அருகில ஆருமில்லன்னாச்சு
அதான் இப்ப உங்களுக்கு எழுதாலாச்சு !
========================

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
15-November-1999

Saturday, December 11, 2004

இரண்டு ஐந்துகள்..!

இரண்டு ஐந்துகள்

தலைப்பை யாராவது இரண்டு ஜந்துகள் என படித்தால் நான் பொறுப்பல்ல என்ற முன்னறிவிப்புடன் இந்தப் பதிவு.

சென்ற (என்) பதிவு எழுதி சுமார் ஒரு மாதம் ஆன நிலையில் நாட்டில் பல நடப்புகள்.

1. தீபாவளியன்று கைதான ஜெயேந்திரர் வழக்கு இந்த திசையில் செல்லும் என யாரும் நவம்பர்-14 அன்று யூகித்திருக்கமாட்டார்கள். பாலத்தின் அடியில் நிறைய தண்ணீர் பாய்ந்துவிட்டது (much water has flown under the bridge ?) மீடியா (ஊடகங்கள்) நடத்தும் விஷமத்தனமான செய்தி பரப்புகள், போலீஸோ இன்ன பிறரோ கசியவிடும் தகவல்கள், ஜாமீன் வழக்கில் செய்யப்படும் வாதங்கள் எல்லாமே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதைவிட சட்டத்தின் முன் ஜெயேந்திரருக்கு தீர்ப்பு கிடைக்கும் நாளுக்கு முன்னரே ஊடகங்களும், இன்ன பிற அரசியல் சார் மக்களும், மடத்தையும் ஜெயேந்திரரையும் இனிமேல் தலை நிமிரவிடாதபடி எல்லாம் செய்தாயிற்று. இன்றைய நிலவரப்படி ரகுவா, விஜயேந்திரரா, சுந்தரேச அய்யரா - அடுத்த கைது.. என்பதில் நிற்கிறது. அப்புவுடன் போலீசும், அதிகார குரூப்பும் செய்யும் உள்-டீலிங்கைப் பொறுத்து இந்த கைது விவகாரம் திரும்பும் என பட்சி சொல்கிறது.

2. விளாடிமீர் புடின், இஸ்ரேல் துணை ஜனாதிபதி -- இதைத் தொடர்ந்து - டொனால்ட் ரம்ஸ்·பெல்ட் - இந்திய விஜயம். முதல் இருவரும் - வழக்கம் போல் டெல்லி, பின்னர் - பெங்களூர் - இன்·போஸிஸ் விஜயம். இருவரின் விஜயத்தின் போதும் பெங்களூர் மக்களுக்கு ஏற்பட்ட போக்குவரத்து பிரச்னையப் பார்த்தால் யாரோ சொன்ன ஹெலிகாப்டர் பரிந்துரை - செயல்படுத்தப்படவேண்டும் என்றே தோன்றுகிறது. கணினித்துறையில் இரு நாடுகளும் ஒத்துழைக்க ஆர்வம் என டகால்டி அடித்தாலும், இந்திய வருகையின் முக்கிய காரணம் இராணுவ தளவாட விற்பனை என பட்சி சொல்கிறது.

3. சச்சின் டெண்டுல்கர் (பல காட்சுகள் கோட்டைவிடப்பட்டு) சுனில் காவஸ்கரின் சத எண்ணிக்கையை எட்டி வரலாறு படைத்திருப்பதும், அனில் கும்ப்ளே கபில்தேவின் சாதனையை முறியடித்திருப்பதும் பாராட்டுக்குரியது. இன்றைய சச்சின் ஆட்டத்தில், பல ஸ்ட்ரோக்குகள் விண்டேஜ் சச்சினை கண் முன் கொண்டு வந்தன. ஆ·ப் சைடில் விளாசிய நான்குகள் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சச்சினின் டிரேட்மார்க் விளாசல்கள். சச்சின், கும்ப்ளே சாதனையை குறைத்து மதிப்பிடுபவர்களை பசித்த புலி (பெங்கால் டைகர்) தின்னட்டும். (நன்றி: வாத்தியார்); ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா முன்னால் விளையாட தடவிவிட்டு பங்களாதேஷ்உக்கு எதிரில் என்ன பெரிய சதம் என கங்குலியின் பிரச்சார பீரங்கிகள் முழக்க ஆரம்பிக்கலாம் என பட்சி சொல்கிறது.

4. செல்பேசி மூலம் டெல்லி பள்ளி மாணவர்களின் (எல்லா ஊர்களிலும் பரவி வரும் அபாயம்) விஷமத்தனமான, கண்டிக்கத்தக்க நடவடிக்கைக்கு அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறதோ..? காமிரா செல்பேசிகளைத் தடை செய்ய ஏதாவது சட்டம் இருக்கிறதா ? சில வாரங்கள் முன்பு குமுதத்திலும் இந்த விஷயம் தொடப்பட்டிருந்தது. தற்போது ஸ்டார் நியூஸ், என்.டி.டி.வி, ஜீ நியூஸ் போன்ற தொலைக்காட்சிகளில், வாரா வாரம் இன்வெஸ்டிகேஷன் அல்லது க்ரைம் பகுதிகளில், ஆண்கள் (மாணவர்கள், இளம் வாலிபர்கள்) கிகோலோக்களாக அலைவதை மறைந்த காமிரா கொண்டும், நகரங்களில் ஹாஸ்டலில் தங்கிப்படிக்கும் பெண்கள் சிலர் - இந்த மாதிரி 'கம்பெனி' கொடுக்கும் விஷயங்களில் ஈடுபடுவதை ம.காமிரா கொண்டும் படம் பிடித்து காண்பிக்கிறார்கள்.. நாடு போகும் திசை சரியில்லை என பட்சி சொல்கிறது

5. லல்லு பிரசாத் யாதவும் ராம் விலாஸ் பாஸ்வானும் பீகார் தேர்தல் நெருங்க நெருங்க இன்னமும் தீவிரமாக சண்டை போடுவார்கள் (நாடாளுமன்றத்தில் அருகில் அமர்ந்த படியே) என பட்சி சொல்கிறது.

அடுத்த ஐந்து இதோ

1. சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு 'பெஸ்ட் கண்ணா பெஸ்ட்' குங்குமம் இதழைக் காணும் பேறு பெற்றேன். விஷயமே இல்லாமல் 11 லட்சம் விற்பது எப்படி என புரிந்தது. நல்லவேளை இத்தனை வருடங்கள் காசு கொடுத்து வாங்கிப் படிக்கவில்லை.

2. கமல்ஹாசனின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' மும்பையில் எடுக்கப்படுவதாகவும்.. இதற்கு இளையராஜா நியூயார்க்கில் இசை அமைப்பதாகவும் செய்தி. இருவருக்கும் வாழ்த்துக்கள். சென்னையின் பிரசாத் ஸ்டுடியோவில் வசதி இல்லையா இல்லை வேறு காரணமா ? புரியவில்லை.

3. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதாகச் செய்தி. ஆணை பிறப்பித்து எல்லோர் வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய முதல்வர். ஜெ.யைப் பாராட்டவேண்டும். இன்னும் வாய்க்கால்கள், நீர் பாயும் சிற்றாறுகள், குளங்களை வரும் கோடையில், தூர் வாரி சரி செய்தால், அடுத்த மழையாண்டில் இன்னமும் நன்மை கிடைக்கும். செய்வாரா ? இல்லை ஜ்ஊ.வி. சர்வேயின் நாடியில், விரைவில் தேர்தலை வரவழைத்து.. இதெல்லாம் மறக்கப்படுமா ?

4. தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் நடைபெறுகிறது. இந்த முறையாவது ஒரே தமிழ் எழுத்துருவுக்கு வித்திட்டால் நல்லது. பலரும் யுனிக்கோடுக்கு மாறிவிட்டாலும் இந்த இடப்பிரச்னையால் பல மடற்குழுக்களும் டிஸ்கியே பாவிக்கின்றன. டிஸ்கிதான் சாலச்சிறந்தது அல்லது டாப் (அ. யுனிகோட்) என ஏதாவது ஒன்றை முடிவெடுத்து, அதை அரசு சார்பில் செயல்படுத்துதல் மற்றும் அனைத்து இணைய தமிழ் இதழ்களும் அதைப் பயன்படுத்தும் நாள் வந்தால் ஈடற்ற மகிழ்ச்சி. பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

5. இரண்டு ஐந்தாம் - 55 வயதை எட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். அடுத்த வருடம் - ரஜினித் தாத்தா ?!

- அலெக்ஸ் பாண்டியன்
11-டிசம்பர்-2004

Thursday, November 25, 2004

நன்றியறிதல் - லாஸ் ஏஞ்சலஸ் சுவாமிநாதன்

எல்லே சுவாமிநாதன் அவர்களின் கதை, கட்டுரைகள், நையாண்டிகள் இணையத்தில், மடலாடற்குழுக்களில் உள்ள பலருக்கும் பரிச்சயமே.

கடந்த ஒரு வருடத்தில் பல புது நண்பர்கள் தமிழில் எழுதவும், வலைப்பதிவு துவங்கியும், மடலாடற்குழுக்களில் பங்குகொண்டும் வருபவர்களுக்கு, சில பழைய படைப்புகளை யுனிகோடில் அளித்து, அதே சமயத்தில் டாக்டர்.சுவாமிநாதனின் இடுகைகள் யுனிகோடிலும் கிடைக்க வழிசெய்யும் ஒரு முயற்சி.

இன்று தமிழ், இணையத்தில் இவ்வளவு வளர்ந்துள்ளதற்கு தமிழ்.நெட் எனப்படும் தமிழ் இணைய மடலாடற்குழுவும் திரு.பாலா பிள்ளையும் முக்கிய பங்கு வகுத்துள்ளனர்.
நன்றி: தமிழ்.நெட் / திரு.பாலா பிள்ளை

இந்த படைப்புகளை இங்கு இடுவதற்கு அனுமதி தந்த லாஸ் ஏஞ்சலஸ் டாக்டர்.சுவாமிநாதன் அவர்களுக்கும் நன்றி..! (இந்த படைப்பு 1999ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி, பதிவானது)

=======================
நன்றியறிதல்
===========================

நன்றியறிதலாம் பண்டிகையாம்
இஷ்ட தெய்வத்தைத் தொழ என் நாட்டில்
கஷ்டமாயிருந்தது என்று சொல்லி
கப்பலேறி வந்தான் வெள்ளைக்காரன்

காற்றிலும் கடும் சுரத்திலும் பிழைத்து
இங்கு வந்து சேர்ந்தான் குற்றுயிராக
இங்கிருந்த குடிகளோடு செய்தான் ஒப்பந்தம்
நடுங்கும் குளிரில் ஒடுங்கி வாழ்ந்தான்
சோளம் பயிரிட்டான் சோற்றுக்காக

விளைச்சலைக் கொண்டாட விருந்து வைத்தான்
வான்கோழியையும் சோளத்தையும் சுட்டு
"விளையும் நிலம் கொடுத்தீர்
விளைந்த பயிரால் என் உயிர்காத்தீ"ரென
வணங்கிச் சொன்னான் தன் நன்றியை

பின் வந்தோர் பிடித்துக்கொண்டார்
பக்குவமாக பண்டிகைச் சடங்கை !

நன்றி மறந்தார்
பன்றி மறந்தார்
கன்றை மறந்தார்
கருப்பு ஆடு மறந்தார்
காரம்பசு மறந்தார்
கோழி மறந்தார்
கெண்டை மீனையும் மறந்தார்

என்றுமில்லாத திருநாளாய்
நன்றியறிதல் பண்டிகை என்ற பேரில்
இன்றே கொன்று தின்பேன் வான்கோழியை
இது என் பாட்டன் பூட்டன் செய்த சடங்கன்றோ
இதை மறக்கலாகுமோ முறையாகுமோ என்றார்

மாமிசமின்றி மாங்காயும் மணக்கும் தக்காளியும் போட்ட
மரக்கரி தின்றாலென்ன கேடு ?
மறைந்து ஒளியலானேன் என்னால் முடியும் மட்டும்
இனி எத்தனை நாளோ என் கதை முடிய
இதோ வருகிறான் ஒரு பாவி
இறந்து உம்மேசை மீது கால்பரப்பி நான் கிடந்தால்
இரும்புக்கத்தியால் என்னுடலை அறுத்து தின்னுமுன்
இதயத்து நன்றையறிதலைக் காட்ட
இருசொட்டு கண்ணீர் விடும் என் பொருட்டு.

============================
(ஒரு வான்கோழியின் புலம்பல்)

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
24 Nov 1999

Friday, November 12, 2004

தீபாவளி நிகழ்ச்சிகள்...!

தீபாவளி நிகழ்ச்சிகள்...!

இந்த முறை தீபாவளித் திருநாள் அன்று இரண்டு முக்கிய நிகழ்வுகள்

1. யாசர் அரா·பத் மறைவு (அதிகாலை..)
2. காஞ்சி மட பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திரர் கைது (நள்ளிரவில்..)

பல்வேறு காரணங்களுக்கு இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் சரித்திரத்தில் இடம்பெறும். யாசர் அரா·பத் மறைவு எப்படி பாலஸ்தீனியர்களுக்கு அந்நாட்டு மக்களுக்கு ஒரு மிகுந்த துயரமான செய்தியோ (எதிர்பார்த்த நிகழ்வு என்றாலும்), அதேபோல் ஜெயேந்திரரின் பக்தர்களுக்கு இது மிகவும் ஒரு துயரமான நாள். அதிர்ச்சியான செய்தியும் கூட.


கைதான வழக்கின் சாரம், தீர்ப்பு போன்ற விஷயங்களுக்குச் செல்வதைவிட - ஒரு வயதானவர் ஒரு விசாரணை என்றால் ஓடிவிடாதவர் - 69 வயது டயாபடிக் மனிதரை
நள்ளிரவில் கைதுசெய்து - உணவு மற்றும் இன்ன பிற விஷயங்களுக்கு கஷ்டப்படுத்தி கைது செய்திருக்க வேண்டுமா ? கலைஞர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது - அவர் வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனக் கூறிய நடுநிலையாளர்கள் எல்லாம் இப்போது என்ன சொல்வார்களோ ? மொத்தத்தில் திராவிடர் கழகத்தினருக்கும், சன் டிவி வீரபாண்டியன், வழக்கறிஞர் அருள்மொழி (இவர் தற்போதே சன் நியூஸ் தொலைக்காட்சியில் வந்து கிண்டலடித்து பேச ஆரம்பித்தாகிவிட்டது) போன்றோருக்கும் கொண்டாட்டம் தான். காஞ்சி மடம் என்னும் ஒரு தொன்மை மிக்க ஒரு பீடத்திற்கு ஒரு கரும்புள்ளி.

உண்மை வெளிவரவேண்டும். நியாயமான முறையில் வழக்கு நடத்தப்படவேண்டும்.

**** ***** *****
தொலைக்காட்சிகளில் தீபாவளி நிகழ்ச்சிகளில், இந்த முறை போட்டியே சன்னுக்கும் ஜெயாவுக்கும் தான். மற்ற சானல்களான விஜய்யும், ராஜ் டிவியும் ஒன்றும் பெரிய சரக்கில்லாமல் தத்தளித்தன.

இதில் முதலிடம் பெற்றது ஜெயாதான். உபயம் 'கலக்கப் போவது கமல்' சுபஸ்ரீ தணிகாசலத்தின் இயக்கத்தில், ரமேஷ் அர்விந்த் தொகுத்தளித்த கமல்ஹாசன் பங்கு கொண்ட, சுமார் 3.5 மணிநேர நிகழ்ச்சி.. காலை 9.10 முதல் மதியம் 1 மணி வரை ஒரு நல்ல நிகழ்ச்சி.. கமல்ஹாசனுடன் எஸ்.பி.பி., எஸ்.ஜானகி, சித்ரா, புது இளம் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் வித்யாசாகர், பரத்வாஜ், இயக்குனர் ரவிக்குமார், மனோரமா என பலரும் கலந்துகொண்ட ஒரு மாறுபட்ட ஆனால் அருமையான நிகழ்ச்சி..

கமலுக்கு மீண்டும் இளமை திரும்பியுள்ளது. மகிழ்ச்சியாகவும் காணப்படுகிறார். (பஞ்சதந்திரம் வந்த சமயத்தில் மிகவும் வித்தியாசனமான நிலையில் இருந்த அவர் இப்போது மகிழ்ந்து காணப்படுகிறார் என ரமேஷ் கூறினார்)

இதற்கு அடுத்த சிறப்பான நிகழ்ச்சி ராஜ் டிஜிட்டல் பிளஸ்ஸில் ஒளிபரப்பான கண்ணதாசன் - விஸ்வநாதன் அறக்கட்டளை நிகழ்ச்சி.. 17-10-2004 அன்று துவங்கப்பட்ட அறக்கட்டளையின் மெல்லிசை நிகழ்ச்சி. வாலி மிக அருமையாக நினைவு கூர்ந்தார். எஸ்.பி.பி சில நல்ல பாடல்களைப் பாடினார்.

சன் டிவியில் காலை சிறப்பு வணக்கம் தமிழகத்தில் தமிழ் நடிகை த்ரிஷா ஆங்கிலத்தில் பேசினார். நடுநடுவே தமிழும் வந்தது ஆச்சரியமாக இருந்தது. ரமணா திரைப்படம் 3.5 மணிநேரத்துக்கு ஓடியது.

மாலை ஒளிபரப்பான பாபா - திராபை. ரஜினி ஆர்வலனான எனக்கு ரஜினி படங்களிலேயே மிகவும் மோசமான படமாக இதை சொல்ல முடியும். இப்படிப்பட்ட கதையை, திரைக்கதையை ஏன் தான் ரஜினி, தானே எழுதி பணம் போட்டு படம் எடுத்து, சுட்டுக்கொண்டு.... இதில் எதற்கு சுஜாதாவுக்கும், பாலகுமாரனுக்கும் நன்றி என முதல் டைட்டில் போட்டுள்ளார் என புரியவில்லை.

சன்னில் வந்த விக்ரமின் நேரடி தொலைபேசி நிகழ்ச்சியை விட விஜயில் வந்த விக்ரம் நிகழ்ச்சி பரவாயில்லை ரகம்.. சில பள்ளிக்குழந்தைகள் தங்கள் பள்ளியிலோ வெளியிலோ சொல்லிக்கொடுத்த சிறந்த தமிழ் பாடல்களைப் பாடிக்காட்டினர் ஆனால் விக்ரம் அவர்களை நிறுத்தி - கல்யாணம்தான் கட்டிக்கிட்டு பாடச்சொல்லி தமிழ்ச்சேவை புரிந்தார்.

முன்பெல்லாம் கலக்கும் சென்னைத் தொலைக்காட்சி இந்தமுறை சோபிக்கவில்லை.

மற்றபடி ஜெயம் ரவி, மாதவன் இன்ன பிற நடிக, நடிகையரின் நிகழ்ச்சிகள் வெகு சுமார்.
சன் டிவியின் சாலமன் பாப்பையா பட்டிமன்றமும் வெகு சுமார். எத்தனை தீபாவளிக்கு
இதே சினிமா, புதுப்பாடல், புதுப்படம், திராபை படம் என ஓட்டப்போகிறார்களோ..

அருண் எழுதிய ஒரு மிடில்க்ளாஸ் தீபாவளிதான் நாஸ்டால்ஜியாவாக நன்றாக இருந்தது. அந்த மாதிரி தீபாவளியை 15 வருடம் முன்னர் வரை கொண்டாடிவிட்டு, சமீபகாலமாக வெறும் டிவி சானல் தீபாவளிகளில் ஒரு பண்டிகையின் ஈர்ப்போ தவிப்போ, மகிழ்ச்சியோ இல்லை.

இதோ இந்த பதிவு எழுதிக்கொண்டிருக்கும் இந்த மாலை வேளையில் பெங்களூர் எங்கும் தீபாவளிப் பட்டாசு வெடிச்சத்தம்.

- அலெக்ஸ் பாண்டியன்
12-நவம்பர்-2004

Tuesday, November 09, 2004

நவம்பர் மாதம் - கருநாடு சேனே - தகப்பன் மனசு

நவம்பர் மாதம் - கருநாடு சேனே - தகப்பன் மனசு
-----------------------------------------------

நவம்பர் மாதம் என்றவுடன் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும் ?
- கமல்ஹாசனின் பிறந்தநாள் (7) ?
- பண்டித நேருவின் பிறந்தநாள் (குழந்தைகள் தினம்) (14) ?
- நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அமெரிக்க தேர்தல் ?
- டிசம்பரில் (12) வரப்போகும் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் ?
- தீபாவளி / கார்த்திகை பண்டிகைகள் ?
- தமிழ் நாட்டு மழை ?
- தனுஷ் - ஐஸ்வர்யா மணவிழா (18) ?

கர்நாடகத்தில் உள்ளவர்களுக்குத் தோன்றுவது - அப்பாடா - முதல் தேதி
அன்னிக்கு அலுவலகம் லீவு.

மற்றும் இந்த நாளில் மற்றும் இந்த மாதத்தில் எல்லா இடங்களிலும் மஞ்சள்-சிவப்பு கொடியேற்றி கன ஜோராக "கன்னடா ராஜ்யோத்சவா" நடைபெறும். எல்லா முச்சந்தியிலும் கொடிக்கம்பங்களில் மஞ்சள் சிவப்பு பெயிண்ட் அடித்து, லோக்கல் அரசியல்வாதியை வைத்து கொடியேற்றமும், மாதம் முழுவதும் ராஜ்குமார் பாடல்கள் ஒலிப்பானில் அலறும். பக்கத்தில் மைதானம் இருந்தால் கேட்கவேண்டாம். ஒரு யட்சகானம், அல்லது நாடகங்கள், ஆர்கெஸ்ட்ரா (சில ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், அம்பரீஷ் பாடல்கள் எல்லா வருடமும், எல்லா இடங்களிலும் பாடப்படும்..).. திருட்டு மின்சாரம் எடுத்து எல்லா தெருக்களிலும் வண்ண விளக்கு அலங்காரங்கள். பெரும்பாலான ஆட்டோக்களும், வேன்களும் கன்னடக் கொடி(?)யை கட்டியிருப்பர்.


எதற்கு இத்தனை கொண்டாட்டம் ? 1956ல் கர்நாடக மாநிலம் உதயமானது இந்த நவம்பர்-1ல் என்பதால் இந்த மாதம் முழுவதும் திருவிழாதான். கன்னடக் கழக கண்மணிகள் விழித்துக்கொண்டு, எங்கும் கன்னடம், எதிலும் கன்னடம் கோஷங்கள் வலுப்பெரும்.. எல்லா தியேட்டர்களிலும் கன்னடப் படம் தான் ஓட்டவேண்டும் என்ற முழக்கம்.. முதல்வர் தனக்கு/கூட்டணிக்கு வேண்டிய சித்தாள், மேஸ்திரி, இஸ்திரி போடுபவர் முதற்கொண்டு சகலமானவர்களுக்கும் (100+) ராஜ்யோத்சவா விருதுகள் வழங்குவார்.

இப்படியாப்பட்ட ஒரு நாளில் (நவம்பர்-8ல்) உதயமாகியுள்ளதுதான்
"கருநாடு சேனே"

எல்லா இடங்களிலும் நடிகர் ராஜ்குமாரின் புத்திரர்கள் மூவரும் மற்றும் நடிகர் அம்பரீஷ் படம் போட்ட போஸ்டர்கள். முதல் கூட்டதிலேயே போடப்பட்ட சில தீர்மானங்கள் - இந்த வெள்ளி முதல் மற்ற மொழி திரைப்படங்கள் வெளியிட மற்றும் பார்க்க வரும் மக்களளையும் தடைசெய்வோம்... பிரிகேட் ரோடை பசவண்ணா ரோடு எனவும், கமர்ஷியல் ஸ்ட்ரீட்டை - மைசூர் ஹ்உலி (புலி) திப்பு சுல்தான் தெரு என டிசம்பருக்குள் மாற்றக் கோரி போராட்டம்..
http://www.deccanherald.com/deccanherald/nov092004/s8.asp
மற்றும் எல்லா கடைகள் பெயர்ப் பலகைகளும் கன்னடத்தில் எழுதப்படவேண்டும் என்ற போராட்டம் (இல்லாட்டி தார் அடிக்கப்படும்..)

வீரப்பன் இருக்கும் வரை கொஞ்சம் வாலை சுருட்டிக்கொண்டிருந்த ராஜ்குமார் குடும்பம்
மீண்டும் கன்னட வெறி செய்கைகளை துவக்கியுள்ளதற்குக் காரணங்கள் பல. இவர்கள்
செய்யும் பல காரியங்கள் ராஜ்குமாருக்கு நேரடி ஒப்புதலோ, விருப்பமோ இல்லாமல்
இருந்தாலும் பின்னணியில் இயக்குவது அவர் மனைவி பர்வதம்மா மற்றும் அவரது
ரசிகர் மன்ற தலைவர் சா.ரா.கோவிந்து. இவர்கள் இருவரும் மிகப் பெரிய சினிமா
தயாரிப்பாளர்கள். கடந்த 10 வருடங்களில் ராஜ்குமார் படம் நடிப்பதைக் குறைத்துள்ளதால்
வருமானம் குறைந்த நிலையில், அவரின் மகன்கள் 3 பேரையும் (சிவராஜ்குமார்,
ராகவேந்திர ராஜ்குமார், புனீத் ரா.கு) களத்தில் இறக்கி படம் பண்ணியும் பெரிய
ஹிட் எல்லாம் ஆகி துட்டு வராத நிலையில், இந்த மாதிரி ஏதாவது கன்னடம் காப்பாற்று
செய்கைகள் செய்தால் மக்கள் மனதில் பேர் கொள்ளலாம் என்பதும், மற்ற மொழி
திரைப்படங்களின் (தமிழ், ஹிந்தி, தெலுங்கு) நல்ல அம்சங்களால், கன்னடப் படங்களின்
வியாபாரம் படுத்துவிட்டதாலும்.. அவ்வப்போது ஏதாவது செய்து கொண்டிருப்பர்.
இப்போது கருநாடு சேனே..

வீரப்பன் இருந்தவரை - நேரடியாக தமிழகத்தையோ, தமிழர்களையோ எதிர்த்து
குரல்கொடுக்காமல் அமுக்கி வாசித்தவர்கள் (பண பேரம் நடந்துள்ள போதும்)
இனி தமிழகத்தின் தயவு அவ்வளவு தேவையில்லை என்ற நிலையில், இந்த
புது சேனையை துவங்கியுள்ளது ஆச்சரியமில்லை. என்ன - இந்த விசிலடிச்சான்
குஞ்சுகள்.. ஏதாவது தகறாறு என்றால் தியேட்டரிலும் இன்ன பிற இடங்களிலும்
கல்லடிப்பு துவக்குவார்கள். இன்னோவேட்டிவ் மல்டிப்ளெக்ஸ் என்னும் பிற
மொழி திரையரங்கம் தாக்கப்பட்டதை பலரும் சன் நியூஸில் பார்த்திருக்கலாம்.

நாம் தமிழ் அழிந்து தமிங்கிலம் அதிகமாவதை நினைத்து ஆதங்கப் படுவதுபோல்
கன்னடியரும், கன்னடம் அழிந்து மற்ற மொழிகள் ஆதிக்கம் பெறுவதைப் பற்றியும்,
கர்நாடகாவில் கன்னடம் குறைந்து பிற மொழி பேச்சு அதிகரிப்பதில் கவலை கொண்டுள்ளனர்.

*** **** ****

என்னதான் தனுஷ்-ஐஸ்வர்யா திருமணத்தில் பலருக்கு ஒரு ஆதங்கம் (எனக்கும்)
இருந்தாலும், தகப்பன் என்ற முறையில் ரஜினிக்கும் அவரது துணைவியாருக்கும்
இருக்கும் ஒரு மாதிரியான சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல், எல்லா பத்திரிக்கைகளும்
இதைப் பற்றிய கவர் ஸ்டோரிகளும், யூகங்களும், கட்டுக் கதைகளும் வெளியிட்டு
ரஜினி என்கிற தகப்பனின் மனதை புண்படுத்தி என்ன சுகம் காண்கிறதோ.. அவர்கள்
விமர்சிக்கப்பட தகுதியுள்ள பொதுவாழ்க்கை நடிகராகவே இருக்கட்டும்.. அதற்கான
அவர்களின் வீட்டு திருமணத்தைப் பற்றி இந்த அளவு எழுதுவது தேவையா ? ஒரு தகப்பனின் மனது என்ன பாடுபடும்.. அதுவும் விகடன் மிகவும் கீழ் நிலையில் இறங்கி 'ரவுசு பாண்டி' கற்பனையில் அடுத்த வருட தலைதீபாவளிக்கே சென்றுவிட்டது.... அவர்கள் குடும்பத்தில் இன்னொரு பெண் இருப்பது, நாளை அந்தப் பெண்ணுக்கும் திருமணம் நடக்கவேண்டும், தனுஷ்-ஐஸ் ஜோடி நல்ல முறையில் தங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டும் போன்ற நல்லெண்ணங்களே கிடையாதா ? அவர்கள் காதலை வேண்டுமானால் கிசுகிசு பாணியில் 2 வரிகள் எழுதியிருக்கலாம்.. வாராவாரம் இதுவே கவர்ஸ்டோரியாக எல்லா பத்திரிக்கைகளிலும் வந்தால் ?

ரஜினி என்கிற ஒரு நல்ல மனிதனுக்கும் அவரின் குடும்பத்திற்கும் இதையெல்லாம் தாங்கும்
சக்தியும், நல்வழியும் காட்டுமாறு இறைவனை வேண்டத்தான் நம்மால் இயலும்.

- அலெக்ஸ்
(இந்த அலெக்ஸ் பாண்டியன் பெயரே அவரின் மூன்று முகம் படத்தின் கதாபாத்திரத்தின்
பெயர் தான்)
09-நவம்பர்-2004

Wednesday, November 03, 2004

ரங்க ஷங்கரா - பெங்களூரில் நாடக விழாகன்னட நடிகர் (மறைந்த) ஷங்கர் நாக் பற்றி அறிந்திருப்பீர்கள். அனந்த் நாக் அவர்களின் தம்பி. அருந்ததி நாக் அவர்களின் கணவர். நாடகத்துறையில் சிறந்த பங்களிப்பையும், சுமார் 100 படங்களிலும் நடித்தவர். ஆனால் ஓர் விபத்தில் இளவயதிலேயே இறந்தவர். பெங்களூரில் உள்ள பெரும்பாலான ஆட்டோக்களில் ஷங்கர் நாகின் முகத்தை வரைந்திருக்கக் காணலாம்.

அவரின் நினைவாக அவர் மனைவி அருந்ததி நாகும், இன்ன பிற ஆர்வலர்களும் பெங்களூரில் நாடகத்திற்காக என்றே கட்டிய அரங்கம் தான் ரங்க ஷங்கரா. சுமார் 300 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய, ஏ.சி அரங்கம். நாடகத்திற்கான வசதிகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது. மற்ற அரங்கங்களை விட வாடகை குறைவு. மும்பையில் உள்ள பிருத்வி தியேட்டர் போல நாடங்களை ஊக்குவிக்க, வளர்க்க பாடுபடுவோம் என ஆர்வலர்கள் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட ஆர்.கே.நாராயண் அவர்களின் 'மால்குடி டேஸ்' இயக்கியது ஷங்கர் நாக் தான்.


ரங்க ஷங்கரா அரங்கம் (தென்) பெங்களூரின் ஜே.பி. நகரில் தபால் நிலையம் அருகில் உள்ளது.

இந்த நவம்பர் மாதம் முழுவதும் நாடகங்கள் நடைபெற உள்ளது.

Date Performance Language Group
28th October Maya Sita Prasanga Kannada Rangayana-Mysore
29th October Aveya Mannina Aatada Bandi Kannada Aneka
30th October Dreams of Tipu Sultan English Artistes Repertory Theatre
31st October Malle Nilluvavarege Kannada Kala Gangotri
1st November Ismat Apa Ke Naam Hindustani Motley
2nd November Ismat Apa Ke Naam Hindustani Motley
3rd November Words and Deedah-5 sketches for Nani English Bangalore Little Theatre
4th November Kaanooru Heggadthi Kannada Nataranga
5th November Raja Matthu Rani Kannada Ninasam
6th November Matinee: Meghnad Badh Kabya
Evening: Shanu Roychowdhury Bengali and English Nandikar
7th November Matinee: Shanu Roychowdhury
Evening: Meghnad Badh Kabya Bengali and English Nandikar
8th November Aik Thee Nani Urdu Ajoka
9th November Hayavadhana Kannada Benaka
10th November Parakramana Kannada Abhinaya Taranga
11th November The Maids English Women Artist’s Group
12th November Shastra Parva Kannada Sneha Samuha
13th November Filth English Black Coffee
14th November Namma Nimmolagobba Kannada Prayogaranga
15th November Marathon English Masque
16th November Two Steps Behind English Rage
17th November Commedia dell’Árte Galore Italian and Gibberish Luoghi dell’Arte
18th November Commedia dell’Arte Galore Italian and Gibberish Luoghi dell’Arte
19th November Jungle Mein Mangal Marathi Awishkar
20th November Charan Das Chor
Chattisgarhi Naya Theatre
21st November Agra Bazar Urdu Naya Theatre
22nd November Pampabharatha Kannada Samudaya
23rd November A Mid Summer Night’s Dream Kannada Vedike
24th November Sangya Balya Kannada Ranga Sampada
25th November Dharmaduranta Kannada Sambandha
26th November Prathibimbagalu Kannada Sanchaya
27th November Ganapati English and Rhythm Adishakti
28th November Ganapati English and Rhythm Adishakti
29th November Ritusamharam Manipuri Chorus Repertory Theatre
30th November Ritusamharam Manipuri Chorus Repertory Theatre
1st December Karimayi Kannada Spandana


- அலெக்ஸ்
03-நவம்பர்-2004

Wednesday, October 27, 2004

பெருசு..கண்ணா..பெருசு..!

பெருசு கண்ணா பெருசு

நீங்கள் முதல் முதலாக அமெரிக்கா செல்கிறீர்களா ? உங்களுக்கு ஏற்படும் முதல் தாக்கம் இந்த பெருசு கண்ணா பெருசு தாக்கம் தான்.

மும்பையின் சிறிய சைஸ் பிரிமீயர் பத்மினி / ·பியட் டாக்ஸிகளில் ஏறி - ஏர்போர்ட் கூட்டத்தைக் கடந்து, விமானத்தில் உட்கார்ந்தால் - ஒரே கும்பல், கூட்டம். தமிழ்நாட்டு ஆம்னி பஸ் பயணம் கூட தேவலாம் என்பது போல், ஒருவர் காலை இடித்துக்கொண்டு, கைப்பைகளை வைக்க இடம் இல்லாமல் நொந்து நூடுல்ஸாகி இரவு மணி 2க்கும் 3க்கும் கிளம்பும் அகால நேரத்து பறவைகள்.

உட்கார்ந்து கண்ணை மூடும் நேரத்தில் கொண்டுவரப்படும் திரவ, திட உணவுப் பதார்த்தங்கள். கொடுக்கப்படும் பன், வெண்ணெய், ஊறுகாய், இலை, தழை, அப்புறம் பாஸ்மதி அரிசி, உப்புமா/தோசை சமாச்சாரங்களையும்.. குடிக்க இயலாத ஆரஞ்சுத்தண்ணி (மஞ்சள் கலரில்) - இவற்றையெல்லாம் தாண்டி, தூங்கி, எழுந்து, மறுபடியும் கொண்டுவரப்படும் - ரயிலில் கொடுக்கப்படும் காபி/டீயை விட ஒரு மோசமான டேஸ்ட் உள்ள காபி/டீ.

கொஞ்சம் தூங்கி, கொஞ்சம் சாப்பிட்டு, கொஞ்சம் குடித்து எழுந்தால் - ·பிராங்க்·பர்ட்டோ, பாரீஸோ, ஆம்ஸ்டர்டாமோ, லண்டனோ வரும். உங்களின் இணைப்பு (கனெக்டிங்) விமானம் கிளம்ப நேரம் இருந்தால் இந்த ஏர்போர்ட்களில் கொஞ்சம் உலாவலாம். பல் தேய்க்கலாம், சூடான காபி குடிக்கலாம். ஆனால் உட்கார மாத்திரம் இடம் கிடைக்காது. நம்மூர் பஸ்ஸ்டாண்ட்களிலும், ரயில்வே ஸ்டேஷனிலும் உள்ள அளவு கூட பொது இருக்கைகள் இங்கு இருக்காது. பெரும்பாலான இந்திய/இலங்கை/பாகிஸ்தானிய மக்கள்
அப்படியே தரையில் படுத்தும் நேரத்தை ஓட்டுவர். குழந்தைகளை அழைத்துச் சென்றால் இன்னும் திண்டாட்டம். அதுவும் ·பிராங்க்·பர்ட் ஏர்போர்ட்டில் இருக்கைகள் மிக குறைவு.

ஒரு வழியாக விமானம் கிளம்பி, அமெரிக்கா செல்லும் கூட்டத்தைக் கவனித்தால் முதல் தாக்கம்.. அமர்ந்திருக்கும் பலரும் உடல் பருமனில், எடையில், உயரத்தில் 'பெருசு கண்ணா பெருசு'. சில/பல வயதானவர்களையும் காணலாம்.

மற்றுமோர் 7-8 மணிநேரம் கடந்து நீங்கள் இறங்கப்போகும் அமெரிக்க நகர ஏர்போர்ட்டில் ஏற்படும் முதல் தாக்கம் - Size...

அமெரிக்காவில் 'எல்லாமே' பெரிசு.

ஏர்போர்ட் பெரிசு - சாமான்களை எடுக்க வசதி செய்யும் கன்வேயர் பெல்ட் பெரிசு - (காசு கொடுத்து டிராலிகள் எடுக்க வேண்டும்.. இந்தியாவே தேவலை) - வெளியே வந்தால் - சாலை பெரிசு - கார் பெரிசு - காரின் டிக்கி (டிரங்க்) பெரிசு - காரின் டிரைவரும் நல்ல பெரிய உடற்கட்டுன் இருப்பார்கள் (பெரும்பாலும்). போகவேண்டிய ஓட்டலோ / அபார்ட்மெண்ட்டொ அங்கு சென்றவுடன் பார்க்கும் லி·ப்ட் மிக பெரிசாக இருக்கும். காரிடார்கள் பெரிசு. ரூம்களின் ஜன்னல் பெரிசாக இருக்கும். காபி கோப்பைகள் பெரிசு. டிவி ஸ்கிரீன் பெரிசு. மால் எனப்படும் வணிக வளாகங்கள் பெரிசு. அங்கு உலாவரும் ஆடவரும், பெண்டிரும் பெரிய உடல்வாகுடனே இருப்பர்.

இது எல்லாமே கீழை நாடுகளிலிருந்து செல்லும் நமக்கு comparitively பெரிதாகத் தோன்றும். ஆனால் நமது மனது தான் பெரிசு, விசாலமானது.

- அலெக்ஸ்
27-அக்டோபர்-2004

Saturday, October 23, 2004

சுஜாதாவின் நைலான் கயிறு

சுஜாதாவின் நைலான் கயிறு

சமீபத்தில் பெங்களூரில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பல தமிழ்
நாவல்களும் புத்தகங்களும் (வாஸ்து, ஆயுர்வேத மருத்துவம், வீட்டு
மருத்துவம், ஜோதிடம்..) வாங்கியபிறகு படிக்க நேரம் இல்லாத நிலையில்,
எல்லா புத்தகங்களுக்கும் பாலீதீன் அட்டை போட்டு, பேர், வருடம்/தேதி எழுதி
(முதலில் படித்த பாலகுமாரனின் 'இரும்பு(க்) குதிரைகள்'. அதைப் பற்றி
பின்னர்) சில வாரங்கள் கழித்து நவராத்திரியை முன்னிட்டு கிடைத்த மூன்று
நாட்கள் விடுமுறையில், படிக்க ஆரம்பிக்க முதலில் எடுத்த புத்தகம் நைலான் கயிறு.


திருமகள் நிலையத்தின் புக்ஸ்டாலில் பல புத்தகங்கள் பார்த்தாலும்
கையிலுள்ள பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல சில புத்தங்களை மட்டுமே வாங்க
முடிந்தது. சுஜாதாவின் சில புத்தங்கள் முன்னரே வாங்கிவிட்டதால், இதுவரை
வாங்காத புத்தங்களில் எதை வாங்கலாம் என யோசித்துக்
கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது நைலான் கயிறு.


எல்லோரும் ரொம்ப சிலாக்கியமாகச் சொல்லிக் கேள்விப்பட்டிருந்தபடியால்,
அதை எடுத்து பின் அட்டையைப் பார்த்தேன். விசா பப்ளிகேஷன்ஸ் நல்ல
முறையில் அட்டை தயாரித்து இருந்தனர். மும்பையின் கேட்வே ஆ·ப்
இண்டியா படத்துடனும் சுஜாதாவின் படமும். உள்ளே பிரித்துப் பார்த்தபோது
- இதுதான் சுஜாதாவின் முதல் நாவல் எனவும், 1968ல் தொடராக வந்தது
எனவும் செய்திகள். அட நான் பிறப்பதற்கு முன்பே வெளிவந்து, இன்னமும்
ஒரு தனி அந்தஸ்துடன் இருக்கிறது (36 வருடங்களாக) என்றால் ஏதோ
விஷயம் அல்லது ஸ்பெஷாலிட்டி இருக்கவேண்டும். புத்தகத்தை வாங்கும்
லிஸ்டில் எடுத்து வைத்துக்கொண்டேன்.


புத்தகத்தை படித்து முடிக்க சுமார் 2 மணி நேரம் ஆனது. 140+ பக்கங்கள்
'சுநந்தாவின் டைரியிலிருந்து' என ஒவ்வொரு அத்தியாயமும் ஆரம்பிக்கிறது..
மும்பையின் ஒரு ·ப்ளாட்டில் கிருஷ்ணன் என்னும் திருமணம் ஆகா
(ஆனால் பல பெண்களுடன் சகவாசம் வைத்துள்ள.. மத்திய மேல் தட்டு )
இளைஞன் கொலை செய்யப்படுகிறான். அவனைப் பார்க்க வரும் ஹரிணி
என்னும் பெண்ணும் அவள் தமையன் தேவ் என்கிற தேவதத்தனும் கொலை நடந்த பின்னும், முன்னும் முறையே கொலை நடந்த இடத்தில் இருந்தது
கண்டுபிடிக்கப்பட்டு (மாதவன் என்னும் இன்ஸ்பெக்டர்) அவர்கள் கணேஷ்
என்னும் வக்கீலைத் தேடி வருகின்றனர். அநேகமாக கணேஷ் (வஸந்த்
இதில் இல்லை) வரும் முதல் நாவல் என நினைக்கிறேன். பின்னாளில்
சென்னை தம்பு (செட்டி) தெருவில் அலுவலகம் வைக்கப்போகும் கணேஷ் மும்பையில் (அந்நாள் பம்பாய்) என்ன செய்துகொண்டிருந்தார் என
தெரியவில்லை.கணேஷின் வாதத்திறமையால் குற்றம் சாட்டப் பட்ட தேவதத்தனுக்கு
மாஜித்திரேட்டிடம் விடுதலை. இன்னும் 15 நாளில் ரிட்டையராகப் போகும்
ராமநாதன் என்கிற எஸ்.பி தன் மகள் ரோகிணியுடன் வசித்து வருகிறார்.
மகளுக்கு கல்யாணம் செய்யவேண்டும், பென்ஷன் போன்ற
கவலைகளுடனே, இந்த கொலைக்கேஸை எடுத்துக் கொண்டு இன்ஸ்பெக்டர்
மாதவனுடன் விவாதித்து, கொஞ்சம் கொஞ்சமாக ஆய்ந்து கொலைகாரனைக்
கண்டுபிடிக்கிறார். எப்படி, ஏன், எங்கு, பின்னர் கொலைகாரனுக்கு என்ன முடிவு
(கதையில்) என்பதை புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளவும்.
(தேவதத்தனுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தவுடனேயே கணேஷ் அம்பேல்) மீதி கதையை ராமநாதன்தான் நகர்த்துகிறார்.
சுஜாதா பெர்ரி மேஸன் ரசிகர் போலுள்ளது. அவருடைய முதல் நாவலில்
அதன் தாக்கம் நன்றாகவே தெரிகிறது (இன்ஸ்பிரேஷன்..?). பெர்ரி மேஸன்
இந்தக் கதையில் சில வரிகள் வருகிறார்.
பெர்ரி மேஸனின் சுமார் 50-60 நாவல்களை படித்துள்ளேன். துப்பறியும்
நாவல்கள், வழக்கு, வக்கீல், வாதம், போன்ற கதைகளை விரும்புபவர்கள்
கட்டாயம் படித்து இன்புறலாம். உபரியாக நல்ல ஆங்கிலமும்
கற்றுக்கொள்ளலாம். ஆங்கில நாவல்களில் பொதுவாக காணப்படும் பலான
விஷயங்கள் பெர்ரி மேஸன் நாவல்களில் கிடையாது என்பதால் தைரியமாக
பத்தாவது படிக்கும் (ஆங்கில புத்தகம் படிக்க ஆசையுள்ள)
மாணவ, மாணவிகளுக்கு சிபாரிசு செய்யலாம். அவரின் செக்ரெட்டரி, டெல்லா
ஸ்ட்ரீட் மற்றும் மற்ற கதை மாந்தர்களைப்போல்தான் சுஜாதாவும் தன்
துப்பறியும் நாவல்களில், கணேஷ்-வஸந்த், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்
போன்ற அழியா மாந்தர்களை ஏற்படுத்தியிருப்பார் போலும். பல
விஷயங்களில் மேஸனைப் போலவே கணேஷ்உம். (நம்பிக்கை, நாணயம்,
நேர்மை.. சிலசமயங்களில் கொலை நடக்கும் இடங்களில் திருட்டுத்தனமாக
செல்வது, கோர்டில் நடக்கும் வாதங்களில் சிறப்பான திறமை காட்டுவது,
தனது உதவியாளர்களை மிக நல்ல முறையில் உபயோகப்படுத்துவது..
போன்ற பல ஒற்றுமைகள்.. coincidence ?கதை சூப்பரா எனக் கேட்டால் - தெரியவில்லை. சுமார் 36 வருடம் முன்பு
இந்தக் கதை சிலாகிக்கப்பட்டு, இன்னமும் பலரால் பேசப்படுகிறது. என்னை பாதித்ததா எனக்கேட்டால் இல்லை. ஆனால் 1968ல் இந்த மாதிரி
வருணனைகள் புது யுத்திகள் எல்லாம் தமிழில் வந்தது சிறப்பானதாகப்
பேசப்படுகிறது. மாடியிலிருந்து கொலைகாரன்
ங்

கி

னா

ன்.என எழுதப்பட்டுள்ளது, கார் U வாய்த்திரும்பியது என வருவது எல்லாம்
'புதுசு கண்ணா புதுசு' என அப்போது கொண்டாடியிருப்பார்கள் போல.
1968ல் பம்பாயில் டாக்ஸியில் செல்ல 5 ரூபாய் கொடுத்துவிட்டு மீதியை
வைத்துக்கொள்ளச் சொல்லுவது.. ஹ்உம். சுஜாதா விவரணப்படுத்தும்
புதுடெல்லி அஜ்மல் கான் ரோடும், வெஸ்ட் எக்ஸ்டென்ஷன் ஏரியா,
கரோல்பாக் போன்றவை இன்னமும் அந்த வர்ணனைகளுடன்
ஒத்துப்போகிறது.
கொலை - துப்பறிவது - லாயர் - கேஸ் போன்ற
விஷயங்களில் இதை விட பல நல்ல நாவல்களை சுஜாதா பிறகு
எழுதியுள்ளார். (எனக்குப் பிடித்த உதாரணம்: கொலையுதிர் காலம்)- நைலான் கயிறு (சுஜாதா)விசா பப்ளிகேஷன்ஸ்

திருமகள் நிலையம், சென்னை

விலை: ரூ. 36- அலெக்ஸ் பாண்டியன்

23-அக்டோபர்-2004

Saturday, August 14, 2004

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் !

இந்தியர்கள் / இந்திய வம்சாவளியினர் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் !

வாழ்க பாரதம்..! வாழ்க தமிழ்..! மகாத்மா காந்தி... நேரு... படேல்... பாலகங்காதர திலகர்...வ.ஊ.சி... பாரதியார்..நீடுழி நிற்க இவர்கள் மற்றும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைவரது புகழ்..

அன்புடன்
அலெக்ஸ்

Saturday, May 29, 2004

அம்பரீஷ் - 52, ரவிச்சந்திரன்

29-மே-2004

அம்பரீஷ் - 52

இன்று (மே-29) கன்னட நடிகர் ரிபெல் ஸ்டார் அம்பரீஷின் பிறந்தநாள்..
ஈடிவி கன்னடாவில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சப்டைட்டிலுடன் அவரது
பாடல்களைப் போட்டுக்கொண்டிருந்தனர்.. நடந்து முடிந்த பாராளுமன்றத்
தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜெயித்தவர்களில் (8) ஒருவர். மண்டியாவின்
மண்ணின மகா...

பிறந்தநாள் பேட்டியில் - பல வருடங்களுக்குப் பிறகு கர்நாடகத்தில் நல்ல
மழை பெய்வதால் - இது தொடர்ந்து - விவசாயிகள் மகிழும்படி இருக்கவேண்டும்
என இறைவனைப் பிரார்த்திப்பதாய் கூறினார்.

அம்பரீஷ் - ஜக்குபாய் ரஜினியின் மிக நெருங்கிய தோஸ்த். எப்போது
ஜக்குபாய் பெங்களூர் வந்தாலும் அம்பரீஷை கண்டு/பேசி/கன்சல்ட் செய்யாமல்
செல்வதில்லை

அம்பரீஷ் - ப்ரியா படம் ஞாபகம் வருதா ? அதில் ஸ்ரீதேவிக்கு ஜோடியாக
வந்து எம் வயெத்தரிச்சலைக் கொட்டிக்கொள்வார்.. சிங்கப்பூர் எல்லாம் சென்று
நீச்சல் குளத்தில் சும்மா இருப்பார் (ஸ்ரீதேவியுடன் :-))

அம்பரீஷின் மனைவி சுமலதா. அவர் சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூவில்
ஹீரோயின்.. ஆக கணவன்-மனைவி இருவரும் சுஜாதா சம்பந்தப்பட்ட படத்தில்
நடித்துள்ளது ஒரு just coincedence.

**** ****** ********

நேற்று வெளியான 'ராமகிருஷ்ணா' கன்னடப்படம் - ரவிச்சந்திரன் (பருவராகம் புகழ் ?)- ஜக்கேஷ்
நடித்துள்ள படம்.. லைலா ஓர் ஹீரோயின். படம் தமிழ் ஆண்பாவம் படத்தின்
ரீமேக். ரவிச்சந்திரன் எடுத்த படங்களில் 98 சதவிகிதம் தமிழ் அல்லது தெலுங்கில் ஹிட்டான
அல்லது ·ப்ளாப் ஆன படத்தின் ரீமேக்காக இருக்கும்.

இந்தப் படத்தில் கன்னடர்கள் - கன்னடப்படம் பார்த்து தங்கள் கன்னட மொழி பக்தியை
வெளிப்படுத்தவேண்டும் என்ற வசனம் உள்ளதாம்.. ஆனால் ரிவ்யுவில் - இந்த மாதிரியெல்லாம்
படம் எடுத்தால் கன்னடர்கள் யாரும் கன்னடப் படம் பக்கமே வரமாட்டார்கள் என
கிழித்துவிட்டனர். தமிழில் ஹிட் ஆன ஆண்பாவத்தை இப்படி ரீமேக் செய்திருக்க
வேண்டாம் எனவும் அறிவுரை.

அதென்னவோ தெரியவில்லை - படங்கள் ஓடுவதில்லை என சொல்லிகொண்டிருந்தாலும்
2 மாதத்திற்கொரு முறை ரவிச்சந்திரனோ, அம்பரீஷோ, விஷ்ணுவர்த்தனோ - இவர்கள் படம்
வந்து கொண்டே இருக்கிறது..

எதிரி / ஆய்த எழுத்து / பி.பி.சி

மே-28: 2004

நேற்று 'எதிரி' படம் பார்த்தேன் - மாதவன் ரௌடியாக நடித்து பின்னர்
ரௌடிகளை அடித்து... ஹ்உம்.

படத்தின் ஒரே ஆறுதல் - விவேக்கின் காமெடி; சில இடங்களில் காமவெடி
மற்றும் காயுவாக வரும் கனிகா. சதா வெறும் சாதா

(திருட்டு விசிடியில் கேபிளில் பார்த்ததால் பல இடங்கள் ரசிக்க முடியவில்லை)

**** ****** ********

விஜய் டிவியில் மதன் ஆய்த எழுத்துக்காக வக்காலத்து வாங்கினார் (சுமார்
ஒரு மணி நேரம்.. மைனஸ் விளம்பர இடைவேளைகள்). அதென்ன கமலோ
மணி(சார்) படமோ வந்தால் - மதன் என்னமோ தமிழ் சினிமாவை வேறு
உயரத்திற்கு இஇவர்கள் தூக்கிச் செல்வதாக பஜனை. இது பல டெக்னிகல், கதை
சொல்லும் உத்திகளில் உண்மை என்றாலும் மதன் இந்த குறிப்பிட்ட சிலருக்கு
ஓவராக பஜனை பண்ணுவது என்னமோ மாதிரி இருக்கிறது.

**** ****** ********

பி.பி.சியில் Question Time Indiaவில் டைம்ஸ் ஆ·ப் இண்டியாவின்
ஆசிரியர் திலீப் பட்காவோங்கர் நடத்தும் இந்த (வாராவாரம்) வெள்ளி இரவு 10 மணி நிகழ்ச்சியில்
இந்த முறை மணி சங்கர அய்யர், முன்னாள் பிரதமர் குஜ்ரால், முன்னாள் டில்லி முதல்வர்
சாகிப் சிங் வர்மா, மற்றும் ஒர் ஆசாமி..

பெரும்பாலானவர்கள் மணி சங்கர் எப்போது பெட்ரோல்/டீசல் விலை உயர்த்தப்போகிறாஇர்
என்பதையே கவலையுடன் கேட்டுக்கொண்டிருந்தனர். அநேகமாக பாராளுமன்றத்தொடர்
முடிந்த உடன் விலையேத்துவார் என்பது என் எண்ணம்.

-------------------------------------------------------------------------------------

என்னைக் கவர்ந்த சில தமிழ் திரைப்படங்கள்....!

என்னைக் கவர்ந்த திரைப்படங்கள்...!
(not in any order)

சிவாஜி கணேசன்:

தில்லானா மோகனாம்பாள்
திருவிளையாடல்
பாச மலர்
படிக்காத மேதை
படித்தால் மட்டும் போதுமா
வியட்னாம் வீடு
பார் மகளே பார்
கெளரவம்
நவராத்தி¡¢
கப்பலோட்டிய தமிழன்
கவா¢ மான்
தெய்வ மகன்
திருவருட்செல்வர்
--------------------------------

கமல்ஹாசன்:

மகாநதி
தேவர் மகன்
நாயகன்
மைக்கேல் மதன காம ராஜன்
அபூர்வ சகோதரர்கள்
சலங்கை ஒலி
இந்தியன்
அவ்வை ஷண்முகி
சகல் கலா வல்லவன்
ஒரு கைதியின் டயரி

---------------------------
ரஜினிகாந்த்:

நெற்றிக்கண்
அண்ணாமலை
முள்ளும் மலரும்
பாட்ஷா
மூன்று முடிச்சு
தில்லு முல்லு
மிஸ்டர் பாரத்
மூன்று முகம்
---------------------------------------

----------------------------------
எம்.ஜி.ஆர்.:

அன்பே வா
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
நாடோடி மன்னன்
படகோட்டி
மீனவ நண்பன்
எங்க வீட்டுப் பிள்ளை
நேற்று இன்று நாளை
நாளை நமதே
திருடாதே

---------------------------------
பாலசந்தர் :

எதிர் நீச்சல்
அவள் ஒரு தொடர்கதை
மூன்று முடிச்சு
சிந்து பைரவி
அரங்கேற்றம்
இரு கோடுகள்
பூவா தலையா

---------------------------------
பாரதிராஜா :

முதல் மா¢யாதை
வேதம் புதிது
பதினாறு வயதினிலே
புதிய வார்ப்புகள்
--------------------------------
விசு :

சம்சாரம் அது மின்சாரம்
மணல் கயிறு
குடும்பம் ஒரு கதம்பம்
ஊருக்கு உபதேசம்
---------------------------------
பாக்யராஜ்:

மெளன கீதங்கள்
முந்தானை முடிச்சு
சுவர் இல்லாத சித்திரங்கள்
இன்று போய் நாளை வா
அந்த 7 நாட்கள்
--------------------------------

மணிரத்னம்:

ரோஜா
மெளன ராகம்

--------------------------------
ஷங்கர்:

ஜென்டில்மேன்
ஜீன்ஸ்
இந்தியன்

---------------------------------


Others :

காதலிக்க நேரமில்லை
பூவே பூச்சூடவா
பூவிழி வாசலிலே
பாலைவன ரோஜாக்கள்
ஆண் பாவம்
அமைதிப் படை
கரகாட்டக்காரன்
பயணங்கள் முடிவதில்லை
உதய கீதம்
நான் பாடும் பாடல்
அம்மன் கோவில் கிழக்காலே
சின்னக் கவுண்டர்
வைதேகி காத்திருந்தாள்
வஞ்சிக்கோட்டை வாலிபன்
கல்யாணப் பரிசு

----------------------------------------

Friday, May 14, 2004

என் இனிய தமிழ் வலைப்பூ வாசகர்களே

என் இனிய தமிழ் வலைப்பூ வாசகர்களே,

வணக்கம்..!

இது எனது முதல் வலைப்பதிவு..!

இங்கு எல்லாம் பதியப்படும்.. அவரவர்க்கு அதது..!

நன்றி..
அலெக்ஸ்