Saturday, October 23, 2004

சுஜாதாவின் நைலான் கயிறு

சுஜாதாவின் நைலான் கயிறு

சமீபத்தில் பெங்களூரில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பல தமிழ்
நாவல்களும் புத்தகங்களும் (வாஸ்து, ஆயுர்வேத மருத்துவம், வீட்டு
மருத்துவம், ஜோதிடம்..) வாங்கியபிறகு படிக்க நேரம் இல்லாத நிலையில்,
எல்லா புத்தகங்களுக்கும் பாலீதீன் அட்டை போட்டு, பேர், வருடம்/தேதி எழுதி
(முதலில் படித்த பாலகுமாரனின் 'இரும்பு(க்) குதிரைகள்'. அதைப் பற்றி
பின்னர்) சில வாரங்கள் கழித்து நவராத்திரியை முன்னிட்டு கிடைத்த மூன்று
நாட்கள் விடுமுறையில், படிக்க ஆரம்பிக்க முதலில் எடுத்த புத்தகம் நைலான் கயிறு.


திருமகள் நிலையத்தின் புக்ஸ்டாலில் பல புத்தகங்கள் பார்த்தாலும்
கையிலுள்ள பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல சில புத்தங்களை மட்டுமே வாங்க
முடிந்தது. சுஜாதாவின் சில புத்தங்கள் முன்னரே வாங்கிவிட்டதால், இதுவரை
வாங்காத புத்தங்களில் எதை வாங்கலாம் என யோசித்துக்
கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது நைலான் கயிறு.


எல்லோரும் ரொம்ப சிலாக்கியமாகச் சொல்லிக் கேள்விப்பட்டிருந்தபடியால்,
அதை எடுத்து பின் அட்டையைப் பார்த்தேன். விசா பப்ளிகேஷன்ஸ் நல்ல
முறையில் அட்டை தயாரித்து இருந்தனர். மும்பையின் கேட்வே ஆ·ப்
இண்டியா படத்துடனும் சுஜாதாவின் படமும். உள்ளே பிரித்துப் பார்த்தபோது
- இதுதான் சுஜாதாவின் முதல் நாவல் எனவும், 1968ல் தொடராக வந்தது
எனவும் செய்திகள். அட நான் பிறப்பதற்கு முன்பே வெளிவந்து, இன்னமும்
ஒரு தனி அந்தஸ்துடன் இருக்கிறது (36 வருடங்களாக) என்றால் ஏதோ
விஷயம் அல்லது ஸ்பெஷாலிட்டி இருக்கவேண்டும். புத்தகத்தை வாங்கும்
லிஸ்டில் எடுத்து வைத்துக்கொண்டேன்.


புத்தகத்தை படித்து முடிக்க சுமார் 2 மணி நேரம் ஆனது. 140+ பக்கங்கள்
'சுநந்தாவின் டைரியிலிருந்து' என ஒவ்வொரு அத்தியாயமும் ஆரம்பிக்கிறது..
மும்பையின் ஒரு ·ப்ளாட்டில் கிருஷ்ணன் என்னும் திருமணம் ஆகா
(ஆனால் பல பெண்களுடன் சகவாசம் வைத்துள்ள.. மத்திய மேல் தட்டு )
இளைஞன் கொலை செய்யப்படுகிறான். அவனைப் பார்க்க வரும் ஹரிணி
என்னும் பெண்ணும் அவள் தமையன் தேவ் என்கிற தேவதத்தனும் கொலை நடந்த பின்னும், முன்னும் முறையே கொலை நடந்த இடத்தில் இருந்தது
கண்டுபிடிக்கப்பட்டு (மாதவன் என்னும் இன்ஸ்பெக்டர்) அவர்கள் கணேஷ்
என்னும் வக்கீலைத் தேடி வருகின்றனர். அநேகமாக கணேஷ் (வஸந்த்
இதில் இல்லை) வரும் முதல் நாவல் என நினைக்கிறேன். பின்னாளில்
சென்னை தம்பு (செட்டி) தெருவில் அலுவலகம் வைக்கப்போகும் கணேஷ் மும்பையில் (அந்நாள் பம்பாய்) என்ன செய்துகொண்டிருந்தார் என
தெரியவில்லை.கணேஷின் வாதத்திறமையால் குற்றம் சாட்டப் பட்ட தேவதத்தனுக்கு
மாஜித்திரேட்டிடம் விடுதலை. இன்னும் 15 நாளில் ரிட்டையராகப் போகும்
ராமநாதன் என்கிற எஸ்.பி தன் மகள் ரோகிணியுடன் வசித்து வருகிறார்.
மகளுக்கு கல்யாணம் செய்யவேண்டும், பென்ஷன் போன்ற
கவலைகளுடனே, இந்த கொலைக்கேஸை எடுத்துக் கொண்டு இன்ஸ்பெக்டர்
மாதவனுடன் விவாதித்து, கொஞ்சம் கொஞ்சமாக ஆய்ந்து கொலைகாரனைக்
கண்டுபிடிக்கிறார். எப்படி, ஏன், எங்கு, பின்னர் கொலைகாரனுக்கு என்ன முடிவு
(கதையில்) என்பதை புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளவும்.
(தேவதத்தனுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தவுடனேயே கணேஷ் அம்பேல்) மீதி கதையை ராமநாதன்தான் நகர்த்துகிறார்.
சுஜாதா பெர்ரி மேஸன் ரசிகர் போலுள்ளது. அவருடைய முதல் நாவலில்
அதன் தாக்கம் நன்றாகவே தெரிகிறது (இன்ஸ்பிரேஷன்..?). பெர்ரி மேஸன்
இந்தக் கதையில் சில வரிகள் வருகிறார்.
பெர்ரி மேஸனின் சுமார் 50-60 நாவல்களை படித்துள்ளேன். துப்பறியும்
நாவல்கள், வழக்கு, வக்கீல், வாதம், போன்ற கதைகளை விரும்புபவர்கள்
கட்டாயம் படித்து இன்புறலாம். உபரியாக நல்ல ஆங்கிலமும்
கற்றுக்கொள்ளலாம். ஆங்கில நாவல்களில் பொதுவாக காணப்படும் பலான
விஷயங்கள் பெர்ரி மேஸன் நாவல்களில் கிடையாது என்பதால் தைரியமாக
பத்தாவது படிக்கும் (ஆங்கில புத்தகம் படிக்க ஆசையுள்ள)
மாணவ, மாணவிகளுக்கு சிபாரிசு செய்யலாம். அவரின் செக்ரெட்டரி, டெல்லா
ஸ்ட்ரீட் மற்றும் மற்ற கதை மாந்தர்களைப்போல்தான் சுஜாதாவும் தன்
துப்பறியும் நாவல்களில், கணேஷ்-வஸந்த், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்
போன்ற அழியா மாந்தர்களை ஏற்படுத்தியிருப்பார் போலும். பல
விஷயங்களில் மேஸனைப் போலவே கணேஷ்உம். (நம்பிக்கை, நாணயம்,
நேர்மை.. சிலசமயங்களில் கொலை நடக்கும் இடங்களில் திருட்டுத்தனமாக
செல்வது, கோர்டில் நடக்கும் வாதங்களில் சிறப்பான திறமை காட்டுவது,
தனது உதவியாளர்களை மிக நல்ல முறையில் உபயோகப்படுத்துவது..
போன்ற பல ஒற்றுமைகள்.. coincidence ?கதை சூப்பரா எனக் கேட்டால் - தெரியவில்லை. சுமார் 36 வருடம் முன்பு
இந்தக் கதை சிலாகிக்கப்பட்டு, இன்னமும் பலரால் பேசப்படுகிறது. என்னை பாதித்ததா எனக்கேட்டால் இல்லை. ஆனால் 1968ல் இந்த மாதிரி
வருணனைகள் புது யுத்திகள் எல்லாம் தமிழில் வந்தது சிறப்பானதாகப்
பேசப்படுகிறது. மாடியிலிருந்து கொலைகாரன்
ங்

கி

னா

ன்.என எழுதப்பட்டுள்ளது, கார் U வாய்த்திரும்பியது என வருவது எல்லாம்
'புதுசு கண்ணா புதுசு' என அப்போது கொண்டாடியிருப்பார்கள் போல.
1968ல் பம்பாயில் டாக்ஸியில் செல்ல 5 ரூபாய் கொடுத்துவிட்டு மீதியை
வைத்துக்கொள்ளச் சொல்லுவது.. ஹ்உம். சுஜாதா விவரணப்படுத்தும்
புதுடெல்லி அஜ்மல் கான் ரோடும், வெஸ்ட் எக்ஸ்டென்ஷன் ஏரியா,
கரோல்பாக் போன்றவை இன்னமும் அந்த வர்ணனைகளுடன்
ஒத்துப்போகிறது.
கொலை - துப்பறிவது - லாயர் - கேஸ் போன்ற
விஷயங்களில் இதை விட பல நல்ல நாவல்களை சுஜாதா பிறகு
எழுதியுள்ளார். (எனக்குப் பிடித்த உதாரணம்: கொலையுதிர் காலம்)- நைலான் கயிறு (சுஜாதா)விசா பப்ளிகேஷன்ஸ்

திருமகள் நிலையம், சென்னை

விலை: ரூ. 36- அலெக்ஸ் பாண்டியன்

23-அக்டோபர்-2004

1 comment:

Jsri said...

ஆமா நீங்களே சொல்லியிருக்கற மாதிரி அப்ப அதெல்லாம் ரொம்ப ரொம்ப
புதுசு. ஆங்கில நாவல்கள் படிக்க ஆரம்பிக்காதவங்களுக்கு/ படிக்காதவங்களுக்கு- கேக்கவே வேண்டாம். நானே ரொம்ப லேட்டாதான் படிச்சேன். 80-லன்னு நினைக்கறேன். அப்பவே பிடிச்சிருந்தது. :) அதுக்காக இப்ப படிக்கறதெல்லாம் ரொம்ம்ம்ப ஓவர்.