Wednesday, October 27, 2004

பெருசு..கண்ணா..பெருசு..!

பெருசு கண்ணா பெருசு

நீங்கள் முதல் முதலாக அமெரிக்கா செல்கிறீர்களா ? உங்களுக்கு ஏற்படும் முதல் தாக்கம் இந்த பெருசு கண்ணா பெருசு தாக்கம் தான்.

மும்பையின் சிறிய சைஸ் பிரிமீயர் பத்மினி / ·பியட் டாக்ஸிகளில் ஏறி - ஏர்போர்ட் கூட்டத்தைக் கடந்து, விமானத்தில் உட்கார்ந்தால் - ஒரே கும்பல், கூட்டம். தமிழ்நாட்டு ஆம்னி பஸ் பயணம் கூட தேவலாம் என்பது போல், ஒருவர் காலை இடித்துக்கொண்டு, கைப்பைகளை வைக்க இடம் இல்லாமல் நொந்து நூடுல்ஸாகி இரவு மணி 2க்கும் 3க்கும் கிளம்பும் அகால நேரத்து பறவைகள்.

உட்கார்ந்து கண்ணை மூடும் நேரத்தில் கொண்டுவரப்படும் திரவ, திட உணவுப் பதார்த்தங்கள். கொடுக்கப்படும் பன், வெண்ணெய், ஊறுகாய், இலை, தழை, அப்புறம் பாஸ்மதி அரிசி, உப்புமா/தோசை சமாச்சாரங்களையும்.. குடிக்க இயலாத ஆரஞ்சுத்தண்ணி (மஞ்சள் கலரில்) - இவற்றையெல்லாம் தாண்டி, தூங்கி, எழுந்து, மறுபடியும் கொண்டுவரப்படும் - ரயிலில் கொடுக்கப்படும் காபி/டீயை விட ஒரு மோசமான டேஸ்ட் உள்ள காபி/டீ.

கொஞ்சம் தூங்கி, கொஞ்சம் சாப்பிட்டு, கொஞ்சம் குடித்து எழுந்தால் - ·பிராங்க்·பர்ட்டோ, பாரீஸோ, ஆம்ஸ்டர்டாமோ, லண்டனோ வரும். உங்களின் இணைப்பு (கனெக்டிங்) விமானம் கிளம்ப நேரம் இருந்தால் இந்த ஏர்போர்ட்களில் கொஞ்சம் உலாவலாம். பல் தேய்க்கலாம், சூடான காபி குடிக்கலாம். ஆனால் உட்கார மாத்திரம் இடம் கிடைக்காது. நம்மூர் பஸ்ஸ்டாண்ட்களிலும், ரயில்வே ஸ்டேஷனிலும் உள்ள அளவு கூட பொது இருக்கைகள் இங்கு இருக்காது. பெரும்பாலான இந்திய/இலங்கை/பாகிஸ்தானிய மக்கள்
அப்படியே தரையில் படுத்தும் நேரத்தை ஓட்டுவர். குழந்தைகளை அழைத்துச் சென்றால் இன்னும் திண்டாட்டம். அதுவும் ·பிராங்க்·பர்ட் ஏர்போர்ட்டில் இருக்கைகள் மிக குறைவு.

ஒரு வழியாக விமானம் கிளம்பி, அமெரிக்கா செல்லும் கூட்டத்தைக் கவனித்தால் முதல் தாக்கம்.. அமர்ந்திருக்கும் பலரும் உடல் பருமனில், எடையில், உயரத்தில் 'பெருசு கண்ணா பெருசு'. சில/பல வயதானவர்களையும் காணலாம்.

மற்றுமோர் 7-8 மணிநேரம் கடந்து நீங்கள் இறங்கப்போகும் அமெரிக்க நகர ஏர்போர்ட்டில் ஏற்படும் முதல் தாக்கம் - Size...

அமெரிக்காவில் 'எல்லாமே' பெரிசு.

ஏர்போர்ட் பெரிசு - சாமான்களை எடுக்க வசதி செய்யும் கன்வேயர் பெல்ட் பெரிசு - (காசு கொடுத்து டிராலிகள் எடுக்க வேண்டும்.. இந்தியாவே தேவலை) - வெளியே வந்தால் - சாலை பெரிசு - கார் பெரிசு - காரின் டிக்கி (டிரங்க்) பெரிசு - காரின் டிரைவரும் நல்ல பெரிய உடற்கட்டுன் இருப்பார்கள் (பெரும்பாலும்). போகவேண்டிய ஓட்டலோ / அபார்ட்மெண்ட்டொ அங்கு சென்றவுடன் பார்க்கும் லி·ப்ட் மிக பெரிசாக இருக்கும். காரிடார்கள் பெரிசு. ரூம்களின் ஜன்னல் பெரிசாக இருக்கும். காபி கோப்பைகள் பெரிசு. டிவி ஸ்கிரீன் பெரிசு. மால் எனப்படும் வணிக வளாகங்கள் பெரிசு. அங்கு உலாவரும் ஆடவரும், பெண்டிரும் பெரிய உடல்வாகுடனே இருப்பர்.

இது எல்லாமே கீழை நாடுகளிலிருந்து செல்லும் நமக்கு comparitively பெரிதாகத் தோன்றும். ஆனால் நமது மனது தான் பெரிசு, விசாலமானது.

- அலெக்ஸ்
27-அக்டோபர்-2004

No comments: