Friday, November 12, 2004

தீபாவளி நிகழ்ச்சிகள்...!

தீபாவளி நிகழ்ச்சிகள்...!

இந்த முறை தீபாவளித் திருநாள் அன்று இரண்டு முக்கிய நிகழ்வுகள்

1. யாசர் அரா·பத் மறைவு (அதிகாலை..)
2. காஞ்சி மட பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திரர் கைது (நள்ளிரவில்..)

பல்வேறு காரணங்களுக்கு இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் சரித்திரத்தில் இடம்பெறும். யாசர் அரா·பத் மறைவு எப்படி பாலஸ்தீனியர்களுக்கு அந்நாட்டு மக்களுக்கு ஒரு மிகுந்த துயரமான செய்தியோ (எதிர்பார்த்த நிகழ்வு என்றாலும்), அதேபோல் ஜெயேந்திரரின் பக்தர்களுக்கு இது மிகவும் ஒரு துயரமான நாள். அதிர்ச்சியான செய்தியும் கூட.


கைதான வழக்கின் சாரம், தீர்ப்பு போன்ற விஷயங்களுக்குச் செல்வதைவிட - ஒரு வயதானவர் ஒரு விசாரணை என்றால் ஓடிவிடாதவர் - 69 வயது டயாபடிக் மனிதரை
நள்ளிரவில் கைதுசெய்து - உணவு மற்றும் இன்ன பிற விஷயங்களுக்கு கஷ்டப்படுத்தி கைது செய்திருக்க வேண்டுமா ? கலைஞர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது - அவர் வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனக் கூறிய நடுநிலையாளர்கள் எல்லாம் இப்போது என்ன சொல்வார்களோ ? மொத்தத்தில் திராவிடர் கழகத்தினருக்கும், சன் டிவி வீரபாண்டியன், வழக்கறிஞர் அருள்மொழி (இவர் தற்போதே சன் நியூஸ் தொலைக்காட்சியில் வந்து கிண்டலடித்து பேச ஆரம்பித்தாகிவிட்டது) போன்றோருக்கும் கொண்டாட்டம் தான். காஞ்சி மடம் என்னும் ஒரு தொன்மை மிக்க ஒரு பீடத்திற்கு ஒரு கரும்புள்ளி.

உண்மை வெளிவரவேண்டும். நியாயமான முறையில் வழக்கு நடத்தப்படவேண்டும்.

**** ***** *****
தொலைக்காட்சிகளில் தீபாவளி நிகழ்ச்சிகளில், இந்த முறை போட்டியே சன்னுக்கும் ஜெயாவுக்கும் தான். மற்ற சானல்களான விஜய்யும், ராஜ் டிவியும் ஒன்றும் பெரிய சரக்கில்லாமல் தத்தளித்தன.

இதில் முதலிடம் பெற்றது ஜெயாதான். உபயம் 'கலக்கப் போவது கமல்' சுபஸ்ரீ தணிகாசலத்தின் இயக்கத்தில், ரமேஷ் அர்விந்த் தொகுத்தளித்த கமல்ஹாசன் பங்கு கொண்ட, சுமார் 3.5 மணிநேர நிகழ்ச்சி.. காலை 9.10 முதல் மதியம் 1 மணி வரை ஒரு நல்ல நிகழ்ச்சி.. கமல்ஹாசனுடன் எஸ்.பி.பி., எஸ்.ஜானகி, சித்ரா, புது இளம் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் வித்யாசாகர், பரத்வாஜ், இயக்குனர் ரவிக்குமார், மனோரமா என பலரும் கலந்துகொண்ட ஒரு மாறுபட்ட ஆனால் அருமையான நிகழ்ச்சி..

கமலுக்கு மீண்டும் இளமை திரும்பியுள்ளது. மகிழ்ச்சியாகவும் காணப்படுகிறார். (பஞ்சதந்திரம் வந்த சமயத்தில் மிகவும் வித்தியாசனமான நிலையில் இருந்த அவர் இப்போது மகிழ்ந்து காணப்படுகிறார் என ரமேஷ் கூறினார்)

இதற்கு அடுத்த சிறப்பான நிகழ்ச்சி ராஜ் டிஜிட்டல் பிளஸ்ஸில் ஒளிபரப்பான கண்ணதாசன் - விஸ்வநாதன் அறக்கட்டளை நிகழ்ச்சி.. 17-10-2004 அன்று துவங்கப்பட்ட அறக்கட்டளையின் மெல்லிசை நிகழ்ச்சி. வாலி மிக அருமையாக நினைவு கூர்ந்தார். எஸ்.பி.பி சில நல்ல பாடல்களைப் பாடினார்.

சன் டிவியில் காலை சிறப்பு வணக்கம் தமிழகத்தில் தமிழ் நடிகை த்ரிஷா ஆங்கிலத்தில் பேசினார். நடுநடுவே தமிழும் வந்தது ஆச்சரியமாக இருந்தது. ரமணா திரைப்படம் 3.5 மணிநேரத்துக்கு ஓடியது.

மாலை ஒளிபரப்பான பாபா - திராபை. ரஜினி ஆர்வலனான எனக்கு ரஜினி படங்களிலேயே மிகவும் மோசமான படமாக இதை சொல்ல முடியும். இப்படிப்பட்ட கதையை, திரைக்கதையை ஏன் தான் ரஜினி, தானே எழுதி பணம் போட்டு படம் எடுத்து, சுட்டுக்கொண்டு.... இதில் எதற்கு சுஜாதாவுக்கும், பாலகுமாரனுக்கும் நன்றி என முதல் டைட்டில் போட்டுள்ளார் என புரியவில்லை.

சன்னில் வந்த விக்ரமின் நேரடி தொலைபேசி நிகழ்ச்சியை விட விஜயில் வந்த விக்ரம் நிகழ்ச்சி பரவாயில்லை ரகம்.. சில பள்ளிக்குழந்தைகள் தங்கள் பள்ளியிலோ வெளியிலோ சொல்லிக்கொடுத்த சிறந்த தமிழ் பாடல்களைப் பாடிக்காட்டினர் ஆனால் விக்ரம் அவர்களை நிறுத்தி - கல்யாணம்தான் கட்டிக்கிட்டு பாடச்சொல்லி தமிழ்ச்சேவை புரிந்தார்.

முன்பெல்லாம் கலக்கும் சென்னைத் தொலைக்காட்சி இந்தமுறை சோபிக்கவில்லை.

மற்றபடி ஜெயம் ரவி, மாதவன் இன்ன பிற நடிக, நடிகையரின் நிகழ்ச்சிகள் வெகு சுமார்.
சன் டிவியின் சாலமன் பாப்பையா பட்டிமன்றமும் வெகு சுமார். எத்தனை தீபாவளிக்கு
இதே சினிமா, புதுப்பாடல், புதுப்படம், திராபை படம் என ஓட்டப்போகிறார்களோ..

அருண் எழுதிய ஒரு மிடில்க்ளாஸ் தீபாவளிதான் நாஸ்டால்ஜியாவாக நன்றாக இருந்தது. அந்த மாதிரி தீபாவளியை 15 வருடம் முன்னர் வரை கொண்டாடிவிட்டு, சமீபகாலமாக வெறும் டிவி சானல் தீபாவளிகளில் ஒரு பண்டிகையின் ஈர்ப்போ தவிப்போ, மகிழ்ச்சியோ இல்லை.

இதோ இந்த பதிவு எழுதிக்கொண்டிருக்கும் இந்த மாலை வேளையில் பெங்களூர் எங்கும் தீபாவளிப் பட்டாசு வெடிச்சத்தம்.

- அலெக்ஸ் பாண்டியன்
12-நவம்பர்-2004

2 comments:

Boston Bala said...

'அழகிய தீயே' பார்க்கவில்லையா?

Alex Pandian said...

பாபா முதல் முறையாக பார்க்க நினைத்ததால் (அப்படி என்னதான் இருக்கு இவ்வளவு ஃப்ளாப் ஆக.. ) அழகிய தீயே பார்க்கவில்லை.

- அலெக்ஸ்