Saturday, December 11, 2004

இரண்டு ஐந்துகள்..!

இரண்டு ஐந்துகள்

தலைப்பை யாராவது இரண்டு ஜந்துகள் என படித்தால் நான் பொறுப்பல்ல என்ற முன்னறிவிப்புடன் இந்தப் பதிவு.

சென்ற (என்) பதிவு எழுதி சுமார் ஒரு மாதம் ஆன நிலையில் நாட்டில் பல நடப்புகள்.

1. தீபாவளியன்று கைதான ஜெயேந்திரர் வழக்கு இந்த திசையில் செல்லும் என யாரும் நவம்பர்-14 அன்று யூகித்திருக்கமாட்டார்கள். பாலத்தின் அடியில் நிறைய தண்ணீர் பாய்ந்துவிட்டது (much water has flown under the bridge ?) மீடியா (ஊடகங்கள்) நடத்தும் விஷமத்தனமான செய்தி பரப்புகள், போலீஸோ இன்ன பிறரோ கசியவிடும் தகவல்கள், ஜாமீன் வழக்கில் செய்யப்படும் வாதங்கள் எல்லாமே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதைவிட சட்டத்தின் முன் ஜெயேந்திரருக்கு தீர்ப்பு கிடைக்கும் நாளுக்கு முன்னரே ஊடகங்களும், இன்ன பிற அரசியல் சார் மக்களும், மடத்தையும் ஜெயேந்திரரையும் இனிமேல் தலை நிமிரவிடாதபடி எல்லாம் செய்தாயிற்று. இன்றைய நிலவரப்படி ரகுவா, விஜயேந்திரரா, சுந்தரேச அய்யரா - அடுத்த கைது.. என்பதில் நிற்கிறது. அப்புவுடன் போலீசும், அதிகார குரூப்பும் செய்யும் உள்-டீலிங்கைப் பொறுத்து இந்த கைது விவகாரம் திரும்பும் என பட்சி சொல்கிறது.

2. விளாடிமீர் புடின், இஸ்ரேல் துணை ஜனாதிபதி -- இதைத் தொடர்ந்து - டொனால்ட் ரம்ஸ்·பெல்ட் - இந்திய விஜயம். முதல் இருவரும் - வழக்கம் போல் டெல்லி, பின்னர் - பெங்களூர் - இன்·போஸிஸ் விஜயம். இருவரின் விஜயத்தின் போதும் பெங்களூர் மக்களுக்கு ஏற்பட்ட போக்குவரத்து பிரச்னையப் பார்த்தால் யாரோ சொன்ன ஹெலிகாப்டர் பரிந்துரை - செயல்படுத்தப்படவேண்டும் என்றே தோன்றுகிறது. கணினித்துறையில் இரு நாடுகளும் ஒத்துழைக்க ஆர்வம் என டகால்டி அடித்தாலும், இந்திய வருகையின் முக்கிய காரணம் இராணுவ தளவாட விற்பனை என பட்சி சொல்கிறது.

3. சச்சின் டெண்டுல்கர் (பல காட்சுகள் கோட்டைவிடப்பட்டு) சுனில் காவஸ்கரின் சத எண்ணிக்கையை எட்டி வரலாறு படைத்திருப்பதும், அனில் கும்ப்ளே கபில்தேவின் சாதனையை முறியடித்திருப்பதும் பாராட்டுக்குரியது. இன்றைய சச்சின் ஆட்டத்தில், பல ஸ்ட்ரோக்குகள் விண்டேஜ் சச்சினை கண் முன் கொண்டு வந்தன. ஆ·ப் சைடில் விளாசிய நான்குகள் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சச்சினின் டிரேட்மார்க் விளாசல்கள். சச்சின், கும்ப்ளே சாதனையை குறைத்து மதிப்பிடுபவர்களை பசித்த புலி (பெங்கால் டைகர்) தின்னட்டும். (நன்றி: வாத்தியார்); ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா முன்னால் விளையாட தடவிவிட்டு பங்களாதேஷ்உக்கு எதிரில் என்ன பெரிய சதம் என கங்குலியின் பிரச்சார பீரங்கிகள் முழக்க ஆரம்பிக்கலாம் என பட்சி சொல்கிறது.

4. செல்பேசி மூலம் டெல்லி பள்ளி மாணவர்களின் (எல்லா ஊர்களிலும் பரவி வரும் அபாயம்) விஷமத்தனமான, கண்டிக்கத்தக்க நடவடிக்கைக்கு அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறதோ..? காமிரா செல்பேசிகளைத் தடை செய்ய ஏதாவது சட்டம் இருக்கிறதா ? சில வாரங்கள் முன்பு குமுதத்திலும் இந்த விஷயம் தொடப்பட்டிருந்தது. தற்போது ஸ்டார் நியூஸ், என்.டி.டி.வி, ஜீ நியூஸ் போன்ற தொலைக்காட்சிகளில், வாரா வாரம் இன்வெஸ்டிகேஷன் அல்லது க்ரைம் பகுதிகளில், ஆண்கள் (மாணவர்கள், இளம் வாலிபர்கள்) கிகோலோக்களாக அலைவதை மறைந்த காமிரா கொண்டும், நகரங்களில் ஹாஸ்டலில் தங்கிப்படிக்கும் பெண்கள் சிலர் - இந்த மாதிரி 'கம்பெனி' கொடுக்கும் விஷயங்களில் ஈடுபடுவதை ம.காமிரா கொண்டும் படம் பிடித்து காண்பிக்கிறார்கள்.. நாடு போகும் திசை சரியில்லை என பட்சி சொல்கிறது

5. லல்லு பிரசாத் யாதவும் ராம் விலாஸ் பாஸ்வானும் பீகார் தேர்தல் நெருங்க நெருங்க இன்னமும் தீவிரமாக சண்டை போடுவார்கள் (நாடாளுமன்றத்தில் அருகில் அமர்ந்த படியே) என பட்சி சொல்கிறது.

அடுத்த ஐந்து இதோ

1. சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு 'பெஸ்ட் கண்ணா பெஸ்ட்' குங்குமம் இதழைக் காணும் பேறு பெற்றேன். விஷயமே இல்லாமல் 11 லட்சம் விற்பது எப்படி என புரிந்தது. நல்லவேளை இத்தனை வருடங்கள் காசு கொடுத்து வாங்கிப் படிக்கவில்லை.

2. கமல்ஹாசனின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' மும்பையில் எடுக்கப்படுவதாகவும்.. இதற்கு இளையராஜா நியூயார்க்கில் இசை அமைப்பதாகவும் செய்தி. இருவருக்கும் வாழ்த்துக்கள். சென்னையின் பிரசாத் ஸ்டுடியோவில் வசதி இல்லையா இல்லை வேறு காரணமா ? புரியவில்லை.

3. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதாகச் செய்தி. ஆணை பிறப்பித்து எல்லோர் வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய முதல்வர். ஜெ.யைப் பாராட்டவேண்டும். இன்னும் வாய்க்கால்கள், நீர் பாயும் சிற்றாறுகள், குளங்களை வரும் கோடையில், தூர் வாரி சரி செய்தால், அடுத்த மழையாண்டில் இன்னமும் நன்மை கிடைக்கும். செய்வாரா ? இல்லை ஜ்ஊ.வி. சர்வேயின் நாடியில், விரைவில் தேர்தலை வரவழைத்து.. இதெல்லாம் மறக்கப்படுமா ?

4. தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் நடைபெறுகிறது. இந்த முறையாவது ஒரே தமிழ் எழுத்துருவுக்கு வித்திட்டால் நல்லது. பலரும் யுனிக்கோடுக்கு மாறிவிட்டாலும் இந்த இடப்பிரச்னையால் பல மடற்குழுக்களும் டிஸ்கியே பாவிக்கின்றன. டிஸ்கிதான் சாலச்சிறந்தது அல்லது டாப் (அ. யுனிகோட்) என ஏதாவது ஒன்றை முடிவெடுத்து, அதை அரசு சார்பில் செயல்படுத்துதல் மற்றும் அனைத்து இணைய தமிழ் இதழ்களும் அதைப் பயன்படுத்தும் நாள் வந்தால் ஈடற்ற மகிழ்ச்சி. பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

5. இரண்டு ஐந்தாம் - 55 வயதை எட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். அடுத்த வருடம் - ரஜினித் தாத்தா ?!

- அலெக்ஸ் பாண்டியன்
11-டிசம்பர்-2004

1 comment:

Boston Bala said...

ரெண்டு அஞ்சு... நல்ல பன்ச்!