Friday, November 12, 2004

தீபாவளி நிகழ்ச்சிகள்...!

தீபாவளி நிகழ்ச்சிகள்...!

இந்த முறை தீபாவளித் திருநாள் அன்று இரண்டு முக்கிய நிகழ்வுகள்

1. யாசர் அரா·பத் மறைவு (அதிகாலை..)
2. காஞ்சி மட பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திரர் கைது (நள்ளிரவில்..)

பல்வேறு காரணங்களுக்கு இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் சரித்திரத்தில் இடம்பெறும். யாசர் அரா·பத் மறைவு எப்படி பாலஸ்தீனியர்களுக்கு அந்நாட்டு மக்களுக்கு ஒரு மிகுந்த துயரமான செய்தியோ (எதிர்பார்த்த நிகழ்வு என்றாலும்), அதேபோல் ஜெயேந்திரரின் பக்தர்களுக்கு இது மிகவும் ஒரு துயரமான நாள். அதிர்ச்சியான செய்தியும் கூட.


கைதான வழக்கின் சாரம், தீர்ப்பு போன்ற விஷயங்களுக்குச் செல்வதைவிட - ஒரு வயதானவர் ஒரு விசாரணை என்றால் ஓடிவிடாதவர் - 69 வயது டயாபடிக் மனிதரை
நள்ளிரவில் கைதுசெய்து - உணவு மற்றும் இன்ன பிற விஷயங்களுக்கு கஷ்டப்படுத்தி கைது செய்திருக்க வேண்டுமா ? கலைஞர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது - அவர் வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனக் கூறிய நடுநிலையாளர்கள் எல்லாம் இப்போது என்ன சொல்வார்களோ ? மொத்தத்தில் திராவிடர் கழகத்தினருக்கும், சன் டிவி வீரபாண்டியன், வழக்கறிஞர் அருள்மொழி (இவர் தற்போதே சன் நியூஸ் தொலைக்காட்சியில் வந்து கிண்டலடித்து பேச ஆரம்பித்தாகிவிட்டது) போன்றோருக்கும் கொண்டாட்டம் தான். காஞ்சி மடம் என்னும் ஒரு தொன்மை மிக்க ஒரு பீடத்திற்கு ஒரு கரும்புள்ளி.

உண்மை வெளிவரவேண்டும். நியாயமான முறையில் வழக்கு நடத்தப்படவேண்டும்.

**** ***** *****
தொலைக்காட்சிகளில் தீபாவளி நிகழ்ச்சிகளில், இந்த முறை போட்டியே சன்னுக்கும் ஜெயாவுக்கும் தான். மற்ற சானல்களான விஜய்யும், ராஜ் டிவியும் ஒன்றும் பெரிய சரக்கில்லாமல் தத்தளித்தன.

இதில் முதலிடம் பெற்றது ஜெயாதான். உபயம் 'கலக்கப் போவது கமல்' சுபஸ்ரீ தணிகாசலத்தின் இயக்கத்தில், ரமேஷ் அர்விந்த் தொகுத்தளித்த கமல்ஹாசன் பங்கு கொண்ட, சுமார் 3.5 மணிநேர நிகழ்ச்சி.. காலை 9.10 முதல் மதியம் 1 மணி வரை ஒரு நல்ல நிகழ்ச்சி.. கமல்ஹாசனுடன் எஸ்.பி.பி., எஸ்.ஜானகி, சித்ரா, புது இளம் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் வித்யாசாகர், பரத்வாஜ், இயக்குனர் ரவிக்குமார், மனோரமா என பலரும் கலந்துகொண்ட ஒரு மாறுபட்ட ஆனால் அருமையான நிகழ்ச்சி..

கமலுக்கு மீண்டும் இளமை திரும்பியுள்ளது. மகிழ்ச்சியாகவும் காணப்படுகிறார். (பஞ்சதந்திரம் வந்த சமயத்தில் மிகவும் வித்தியாசனமான நிலையில் இருந்த அவர் இப்போது மகிழ்ந்து காணப்படுகிறார் என ரமேஷ் கூறினார்)

இதற்கு அடுத்த சிறப்பான நிகழ்ச்சி ராஜ் டிஜிட்டல் பிளஸ்ஸில் ஒளிபரப்பான கண்ணதாசன் - விஸ்வநாதன் அறக்கட்டளை நிகழ்ச்சி.. 17-10-2004 அன்று துவங்கப்பட்ட அறக்கட்டளையின் மெல்லிசை நிகழ்ச்சி. வாலி மிக அருமையாக நினைவு கூர்ந்தார். எஸ்.பி.பி சில நல்ல பாடல்களைப் பாடினார்.

சன் டிவியில் காலை சிறப்பு வணக்கம் தமிழகத்தில் தமிழ் நடிகை த்ரிஷா ஆங்கிலத்தில் பேசினார். நடுநடுவே தமிழும் வந்தது ஆச்சரியமாக இருந்தது. ரமணா திரைப்படம் 3.5 மணிநேரத்துக்கு ஓடியது.

மாலை ஒளிபரப்பான பாபா - திராபை. ரஜினி ஆர்வலனான எனக்கு ரஜினி படங்களிலேயே மிகவும் மோசமான படமாக இதை சொல்ல முடியும். இப்படிப்பட்ட கதையை, திரைக்கதையை ஏன் தான் ரஜினி, தானே எழுதி பணம் போட்டு படம் எடுத்து, சுட்டுக்கொண்டு.... இதில் எதற்கு சுஜாதாவுக்கும், பாலகுமாரனுக்கும் நன்றி என முதல் டைட்டில் போட்டுள்ளார் என புரியவில்லை.

சன்னில் வந்த விக்ரமின் நேரடி தொலைபேசி நிகழ்ச்சியை விட விஜயில் வந்த விக்ரம் நிகழ்ச்சி பரவாயில்லை ரகம்.. சில பள்ளிக்குழந்தைகள் தங்கள் பள்ளியிலோ வெளியிலோ சொல்லிக்கொடுத்த சிறந்த தமிழ் பாடல்களைப் பாடிக்காட்டினர் ஆனால் விக்ரம் அவர்களை நிறுத்தி - கல்யாணம்தான் கட்டிக்கிட்டு பாடச்சொல்லி தமிழ்ச்சேவை புரிந்தார்.

முன்பெல்லாம் கலக்கும் சென்னைத் தொலைக்காட்சி இந்தமுறை சோபிக்கவில்லை.

மற்றபடி ஜெயம் ரவி, மாதவன் இன்ன பிற நடிக, நடிகையரின் நிகழ்ச்சிகள் வெகு சுமார்.
சன் டிவியின் சாலமன் பாப்பையா பட்டிமன்றமும் வெகு சுமார். எத்தனை தீபாவளிக்கு
இதே சினிமா, புதுப்பாடல், புதுப்படம், திராபை படம் என ஓட்டப்போகிறார்களோ..

அருண் எழுதிய ஒரு மிடில்க்ளாஸ் தீபாவளிதான் நாஸ்டால்ஜியாவாக நன்றாக இருந்தது. அந்த மாதிரி தீபாவளியை 15 வருடம் முன்னர் வரை கொண்டாடிவிட்டு, சமீபகாலமாக வெறும் டிவி சானல் தீபாவளிகளில் ஒரு பண்டிகையின் ஈர்ப்போ தவிப்போ, மகிழ்ச்சியோ இல்லை.

இதோ இந்த பதிவு எழுதிக்கொண்டிருக்கும் இந்த மாலை வேளையில் பெங்களூர் எங்கும் தீபாவளிப் பட்டாசு வெடிச்சத்தம்.

- அலெக்ஸ் பாண்டியன்
12-நவம்பர்-2004

Tuesday, November 09, 2004

நவம்பர் மாதம் - கருநாடு சேனே - தகப்பன் மனசு

நவம்பர் மாதம் - கருநாடு சேனே - தகப்பன் மனசு
-----------------------------------------------

நவம்பர் மாதம் என்றவுடன் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும் ?
- கமல்ஹாசனின் பிறந்தநாள் (7) ?
- பண்டித நேருவின் பிறந்தநாள் (குழந்தைகள் தினம்) (14) ?
- நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அமெரிக்க தேர்தல் ?
- டிசம்பரில் (12) வரப்போகும் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் ?
- தீபாவளி / கார்த்திகை பண்டிகைகள் ?
- தமிழ் நாட்டு மழை ?
- தனுஷ் - ஐஸ்வர்யா மணவிழா (18) ?

கர்நாடகத்தில் உள்ளவர்களுக்குத் தோன்றுவது - அப்பாடா - முதல் தேதி
அன்னிக்கு அலுவலகம் லீவு.

மற்றும் இந்த நாளில் மற்றும் இந்த மாதத்தில் எல்லா இடங்களிலும் மஞ்சள்-சிவப்பு கொடியேற்றி கன ஜோராக "கன்னடா ராஜ்யோத்சவா" நடைபெறும். எல்லா முச்சந்தியிலும் கொடிக்கம்பங்களில் மஞ்சள் சிவப்பு பெயிண்ட் அடித்து, லோக்கல் அரசியல்வாதியை வைத்து கொடியேற்றமும், மாதம் முழுவதும் ராஜ்குமார் பாடல்கள் ஒலிப்பானில் அலறும். பக்கத்தில் மைதானம் இருந்தால் கேட்கவேண்டாம். ஒரு யட்சகானம், அல்லது நாடகங்கள், ஆர்கெஸ்ட்ரா (சில ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், அம்பரீஷ் பாடல்கள் எல்லா வருடமும், எல்லா இடங்களிலும் பாடப்படும்..).. திருட்டு மின்சாரம் எடுத்து எல்லா தெருக்களிலும் வண்ண விளக்கு அலங்காரங்கள். பெரும்பாலான ஆட்டோக்களும், வேன்களும் கன்னடக் கொடி(?)யை கட்டியிருப்பர்.


எதற்கு இத்தனை கொண்டாட்டம் ? 1956ல் கர்நாடக மாநிலம் உதயமானது இந்த நவம்பர்-1ல் என்பதால் இந்த மாதம் முழுவதும் திருவிழாதான். கன்னடக் கழக கண்மணிகள் விழித்துக்கொண்டு, எங்கும் கன்னடம், எதிலும் கன்னடம் கோஷங்கள் வலுப்பெரும்.. எல்லா தியேட்டர்களிலும் கன்னடப் படம் தான் ஓட்டவேண்டும் என்ற முழக்கம்.. முதல்வர் தனக்கு/கூட்டணிக்கு வேண்டிய சித்தாள், மேஸ்திரி, இஸ்திரி போடுபவர் முதற்கொண்டு சகலமானவர்களுக்கும் (100+) ராஜ்யோத்சவா விருதுகள் வழங்குவார்.

இப்படியாப்பட்ட ஒரு நாளில் (நவம்பர்-8ல்) உதயமாகியுள்ளதுதான்
"கருநாடு சேனே"

எல்லா இடங்களிலும் நடிகர் ராஜ்குமாரின் புத்திரர்கள் மூவரும் மற்றும் நடிகர் அம்பரீஷ் படம் போட்ட போஸ்டர்கள். முதல் கூட்டதிலேயே போடப்பட்ட சில தீர்மானங்கள் - இந்த வெள்ளி முதல் மற்ற மொழி திரைப்படங்கள் வெளியிட மற்றும் பார்க்க வரும் மக்களளையும் தடைசெய்வோம்... பிரிகேட் ரோடை பசவண்ணா ரோடு எனவும், கமர்ஷியல் ஸ்ட்ரீட்டை - மைசூர் ஹ்உலி (புலி) திப்பு சுல்தான் தெரு என டிசம்பருக்குள் மாற்றக் கோரி போராட்டம்..
http://www.deccanherald.com/deccanherald/nov092004/s8.asp
மற்றும் எல்லா கடைகள் பெயர்ப் பலகைகளும் கன்னடத்தில் எழுதப்படவேண்டும் என்ற போராட்டம் (இல்லாட்டி தார் அடிக்கப்படும்..)

வீரப்பன் இருக்கும் வரை கொஞ்சம் வாலை சுருட்டிக்கொண்டிருந்த ராஜ்குமார் குடும்பம்
மீண்டும் கன்னட வெறி செய்கைகளை துவக்கியுள்ளதற்குக் காரணங்கள் பல. இவர்கள்
செய்யும் பல காரியங்கள் ராஜ்குமாருக்கு நேரடி ஒப்புதலோ, விருப்பமோ இல்லாமல்
இருந்தாலும் பின்னணியில் இயக்குவது அவர் மனைவி பர்வதம்மா மற்றும் அவரது
ரசிகர் மன்ற தலைவர் சா.ரா.கோவிந்து. இவர்கள் இருவரும் மிகப் பெரிய சினிமா
தயாரிப்பாளர்கள். கடந்த 10 வருடங்களில் ராஜ்குமார் படம் நடிப்பதைக் குறைத்துள்ளதால்
வருமானம் குறைந்த நிலையில், அவரின் மகன்கள் 3 பேரையும் (சிவராஜ்குமார்,
ராகவேந்திர ராஜ்குமார், புனீத் ரா.கு) களத்தில் இறக்கி படம் பண்ணியும் பெரிய
ஹிட் எல்லாம் ஆகி துட்டு வராத நிலையில், இந்த மாதிரி ஏதாவது கன்னடம் காப்பாற்று
செய்கைகள் செய்தால் மக்கள் மனதில் பேர் கொள்ளலாம் என்பதும், மற்ற மொழி
திரைப்படங்களின் (தமிழ், ஹிந்தி, தெலுங்கு) நல்ல அம்சங்களால், கன்னடப் படங்களின்
வியாபாரம் படுத்துவிட்டதாலும்.. அவ்வப்போது ஏதாவது செய்து கொண்டிருப்பர்.
இப்போது கருநாடு சேனே..

வீரப்பன் இருந்தவரை - நேரடியாக தமிழகத்தையோ, தமிழர்களையோ எதிர்த்து
குரல்கொடுக்காமல் அமுக்கி வாசித்தவர்கள் (பண பேரம் நடந்துள்ள போதும்)
இனி தமிழகத்தின் தயவு அவ்வளவு தேவையில்லை என்ற நிலையில், இந்த
புது சேனையை துவங்கியுள்ளது ஆச்சரியமில்லை. என்ன - இந்த விசிலடிச்சான்
குஞ்சுகள்.. ஏதாவது தகறாறு என்றால் தியேட்டரிலும் இன்ன பிற இடங்களிலும்
கல்லடிப்பு துவக்குவார்கள். இன்னோவேட்டிவ் மல்டிப்ளெக்ஸ் என்னும் பிற
மொழி திரையரங்கம் தாக்கப்பட்டதை பலரும் சன் நியூஸில் பார்த்திருக்கலாம்.

நாம் தமிழ் அழிந்து தமிங்கிலம் அதிகமாவதை நினைத்து ஆதங்கப் படுவதுபோல்
கன்னடியரும், கன்னடம் அழிந்து மற்ற மொழிகள் ஆதிக்கம் பெறுவதைப் பற்றியும்,
கர்நாடகாவில் கன்னடம் குறைந்து பிற மொழி பேச்சு அதிகரிப்பதில் கவலை கொண்டுள்ளனர்.

*** **** ****

என்னதான் தனுஷ்-ஐஸ்வர்யா திருமணத்தில் பலருக்கு ஒரு ஆதங்கம் (எனக்கும்)
இருந்தாலும், தகப்பன் என்ற முறையில் ரஜினிக்கும் அவரது துணைவியாருக்கும்
இருக்கும் ஒரு மாதிரியான சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல், எல்லா பத்திரிக்கைகளும்
இதைப் பற்றிய கவர் ஸ்டோரிகளும், யூகங்களும், கட்டுக் கதைகளும் வெளியிட்டு
ரஜினி என்கிற தகப்பனின் மனதை புண்படுத்தி என்ன சுகம் காண்கிறதோ.. அவர்கள்
விமர்சிக்கப்பட தகுதியுள்ள பொதுவாழ்க்கை நடிகராகவே இருக்கட்டும்.. அதற்கான
அவர்களின் வீட்டு திருமணத்தைப் பற்றி இந்த அளவு எழுதுவது தேவையா ? ஒரு தகப்பனின் மனது என்ன பாடுபடும்.. அதுவும் விகடன் மிகவும் கீழ் நிலையில் இறங்கி 'ரவுசு பாண்டி' கற்பனையில் அடுத்த வருட தலைதீபாவளிக்கே சென்றுவிட்டது.... அவர்கள் குடும்பத்தில் இன்னொரு பெண் இருப்பது, நாளை அந்தப் பெண்ணுக்கும் திருமணம் நடக்கவேண்டும், தனுஷ்-ஐஸ் ஜோடி நல்ல முறையில் தங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டும் போன்ற நல்லெண்ணங்களே கிடையாதா ? அவர்கள் காதலை வேண்டுமானால் கிசுகிசு பாணியில் 2 வரிகள் எழுதியிருக்கலாம்.. வாராவாரம் இதுவே கவர்ஸ்டோரியாக எல்லா பத்திரிக்கைகளிலும் வந்தால் ?

ரஜினி என்கிற ஒரு நல்ல மனிதனுக்கும் அவரின் குடும்பத்திற்கும் இதையெல்லாம் தாங்கும்
சக்தியும், நல்வழியும் காட்டுமாறு இறைவனை வேண்டத்தான் நம்மால் இயலும்.

- அலெக்ஸ்
(இந்த அலெக்ஸ் பாண்டியன் பெயரே அவரின் மூன்று முகம் படத்தின் கதாபாத்திரத்தின்
பெயர் தான்)
09-நவம்பர்-2004