Friday, December 31, 2004

ஆலடி அருணா கொலை !

ஆலடி அருணா கொலை
----------------------------------
முன்னாள் தமிழக அமைச்சர், முன்னாள் எம்.பி - முன்னாள் தி.மு.க தலைவர் ஆலடி அருணா இன்று (31-டிசம்பர்-2004) காலை நடை சென்றுகொண்டிருந்தபோது பைக்கில் வந்த மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார் என டிவி செய்திகள் சொல்கின்றன.

2004 முடிவதற்குள், சுனாமி சேதத்தால் நாடே சோகத்தில் ஆழ்ந்திருக்கும் இந்த வேளையில்
இன்னோர் துயரச் செய்தி. எல்லா அலுவலகங்களிலும் சம்பளத்தில் ஒரு பகுதியை
அளித்தும், மருந்து, துணிமணிகள் இன்ன பிற உதவிகளை அளித்தும் சுனாமியால் வாடும் மக்களுக்கு உதவி செய்து வரும் வேளையில், இப்படி ஓர் செய்தி.

தி.மு.கவில் இருந்த ஒரு சில saner voiceகளில் ஆலடி அருணாவும் ஒருவர். சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க சீட்டு கொடுக்காததில் கொஞ்சம் கோபப்பட்டு, மாற்று முகாம் பக்கம் சாய்ந்த தோற்றத்தை ஏற்படுத்தினாலும் அரசியல்வாதிகளில் கொஞ்சம் வித்தியாசமானவர். சட்டம் சம்பந்த விஷயங்களில் நல்ல படித்த, நல்ல மனிதர். டெல்லியிலும் மத்திய அரசு லெவலில் நல்ல பெயர் எடுத்திருந்தவர்.

ரவி சுப்ரமணியம் கைது - இன்று மாஜிஸ்திரேட் முன்பு ரகசிய வாக்குமூலம், விஜயேந்திரர்
தம்பி கைது, மட மேலாளர் சுந்தரேச ஐயர் - இன்னோர் வழக்கில் கைது... தவிர...

போலீஸ் காவலில் அப்பு - அண்ணா நகர் ரமேஷ் கொலை சம்பந்தமாக சாதக வாக்குமூலம் கொடுக்காத நிலையில், சுனாமி சேத மீட்புப் பணி சக்களத்தி சண்டைகளில் கழகங்கள் ஈடுபட்டிருக்கையில், கலைஞர் மறைவு வதந்தி வாக்குவாதங்கள், நேற்று முளைத்த சிறுபிள்ளைகளுக்கு பதில் சொல்லத்தேவையில்லாத வாதங்கள், இவற்றுக்கிடையே ஆலடி அருணாவை பட்டப்பகலில் வெட்டிக்கொல்லும் அளவிற்கு யாருக்கு அவருடன் தனி விரோதம் இருக்கும் என தெரியவில்லை. தா.கி. கொலைபோல் இதிலும் பெரிய தலை(?)
யாரையாவது சிக்க வைக்கும் தந்திரம் இருக்கும் போலத் தெரிகிறது.

2005ஆம் ஆண்டு அனைவருக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..!

- அலெக்ஸ் பாண்டியன்
31-டிசம்பர்-2004

Monday, December 27, 2004

சென்னையில் சுனாமி..! (26-Dec-2004)

சென்னையில் சுனாமி

சுமத்ரா தீவில் ஏற்பட்ட 8.9அளவு (ரிக்டர் ஸ்கேல்) நிலநடுக்கத்தால், கடலில் ஏற்பட்ட
கொந்தளிப்பு, தென் கிழக்கு ஆசியநாடுகள் அனைத்தையும் பதம் பார்த்து பல உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலும் தமிழ்நாட்டிலும், ஆந்திரக் கரையோரம் மற்றும் கடலோர மாநிலங்கள், அந்தமான், தாய்லாந்து என எல்லா இடங்களிலும் சேதம்.


புகைப்படம்: நன்றி: Dinamalar


இந்த இயற்கை சீற்றத்தால் உயிரிழந்த எண்ணற்ற மக்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்கள்.

காலையில் முதலில் பார்த்த தொலைக்காட்சிச் செய்திகள் - விளைவு என்னமோ சுமார் என்ற மாதிரி தெரிந்தது. நேரம் ஆக ஆக, அலைகள் உள்ளே வந்து இந்த மாதிரி ஒரு நாசத்தை ஏற்படுத்தும் என்பது எதிர்பாராதது. நாகை மற்றும் கடலூரில் இழப்பு மிக அதிகமாக இருப்பதாக சொல்கின்றனர். இது போன்ற ஒரு இயற்கை சீற்றத்தை எதிர்பார்க்காமல், காலையில் கடற்கரை சென்றோர், மீனவர்கள், கடலோர குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் இப்படி ஒரு பிரளயம் ஏற்படும் என முதல் நாள் இரவு நினைத்திராத வகையில் இயற்கை தன் சீற்றத்தைக் காட்டிவிட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வேளாங்கண்ணி வந்த 500 பயணிகளைக் காணவில்லை என்ற செய்தி இன்னும் அதிர்ச்சி. வேளாங்கண்ணி தேவாலயத்திலிருந்து சுமார் 100-200 மீட்டரிலேயே கடல் இருப்பதால், அலையின் உக்கிரத்தில் அங்கு ஆன சேதம் இன்னமே தான் தெரியவரும்.

இலங்கை நாலாபுறமும் கடல் சூழ்ந்துள்ளதால் எல்லாபக்கமும் பலத்த சேதம் என பல தொலைக்காட்சிகளில் காண்பித்து வருகின்றனர். ஒரே நாளில், ஒரு இயற்கை சீற்றத்தில் 10000க்கும் மேற்பட்டோர் அழியுமாறு, பல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் பலத்தை கொண்ட இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைகள், ஏன், எதற்கு, எப்படி.. என இனிமேல் தான் ஆராய்ச்சியில் தெரியவரும்.

சுஜாதா 1976ல் கல்கியில் எழுதிய 'நகர்வலம்' என்ற கதை இந்த கடல் கொந்தளிப்பு மற்றும் சென்னையில் சில பகுதிகள் மூழ்கியது பற்றியது என தினத்தந்தி (27-Dec ப்ரிண்ட் எடிஷன்) குறிப்பிட்டுள்ளது. இன்னொரு திமலா ?

*** *** ***

மறைந்த இசை மேதை எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிக்கும், முன்னாள் பிரதமர் நரசிம்மராவிற்கும்,
மருத்துவர் மாத்ருபூதம் அவர்களுக்கும் எமது அஞ்சலி.

- அலெக்ஸ்
27-டிசம்பர்-2004