Monday, December 26, 2005

ஒரு நாள் எடிட்டர்

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்றைய டைம்ஸ் ஆ·ப் இண்டியாவின் ஒரு நாள் எடிட்டர். இல்லை.. - அதாவது எடிட்டர் என்ற பதவி அவர் ஏற்கக்கூடாது என்பதால் ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.இதற்கு முன்பே டைம்ஸ் ஆ·ப் இண்டியா பத்திரிக்கை ஒரு Gimmickக்காக சில பிரபலங்களை ஒரு நாள் எடிட்டராக இருக்க வைத்து புண்ணியம் (?!) தேடிக்கொண்டது.

எகனாமிக் டைம்ஸின் ஒரு நாள் எடிட்டராக ப.சிதம்பரமும், TOIல் இன்·போஸிஸ் நாராயணமூர்த்தி, சானியா மிர்சா என பத்திரிக்கைகளின் செய்தித் தொகுப்பையும் வெளியிடுதலையும் தங்கள் கைவண்ணத்தைக் காண்பித்தனர். ப.சியின் வெளியீடு நன்றாகவே இருந்தது.

இன்றைய டைம்ஸில், கலாம் மிகச் சிறப்பாக பல செய்திகளை வெளியிடச் செய்துள்ளார். டைம்ஸ்ம் தனது ஆடைஅவிழ்ப்புச் சமாச்சாரங்களை இன்றைக்கு மட்டும் குறைத்துக்கொண்டு, பல நல்ல விஷயங்களை வெளியிட்டுள்ளது.

Photos/News/சுட்டிகள்: நன்றி: Times of India (timesofindia.indiatimes.com)


http://timesofindia.indiatimes.com/articleshow/1345677.cms


Page 8

Page 10

Page 12

Page 14

இந்த மாதிரியான விஷயங்கள் டைம்ஸில் வருவது அரிது. அதற்காகவாவது குடியரசுத்தலைவருக்கு நன்றி. சுனாமி பற்றிய சோகச் செய்திகளைவிட அதிலேயே பல பாஸிடிவ் செய்திகளை வெளியிட வைத்த கலாம் அவர்களுக்கு மேலும் நன்றி. இந்த அளவிற்கு பாஸிடிவ் எண்ணங்கள் கொண்ட ஒருவர் நமது நாட்டின் குடியரசுத்தலைவராக இருப்பது நமது அதிர்ஷ்டமே.

கலாம் அவர்களின் பாஸிடிவ் எண்ணங்களை கிரிடிசைஸ் செய்யும் ஒரு புகழ் பெற்ற பெண் பத்திரிக்கையாளரின் கட்டுரை - http://www.deccanherald.com/deccanherald/dec242005/tavleen.asp


- அலெக்ஸ் பாண்டியன்
26-டிசம்பர்-2005


உபரி கொசுறுச் செய்தி / படம்: நன்றி: தினத்தந்தி :-)))))

Wednesday, December 07, 2005

சான்றோர் பெருமை ?!

எல்லாரும் அப்பப்ப படம் காட்ட ஆரம்பிச்சதால், இதோ இன்னோர் படம் காட்டும் பதிவு :-)))))))) கீழுள்ள குறள்களுக்கும் படத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமானால் அது ......... உங்கள் கருத்துக்கே விட்டு விடுகிறேன்.

=========================================
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது (68)

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும் (63)

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் (67)

=========================================Microsoft Chairman Bill Gates with Information Technology and Communication Minister Dayanidhi Maran at the Minister's residence in New Delhi. Photo courtesy: The Hindu
Microsoft Chairman and Chief Software Architect, Bill Gates (L) talks to Congress President and Chairperson of India's ruling United Progressive Alliance Sonia Gandhi while her son and member of Indian Parliament Rahul Gandhi (R) looks on in New Delhi. Photo Courtesy: Rediff.com
Health Minister Anbumani Ramadoss with Microsoft Chairman Bill Gates in New Delhi. Photo Courtesy: The Hindu


படங்கள் / செய்தி: நன்றி: தி ஹிண்டு, ரிடிஃப்
================================================

அலெக்ஸ் பாண்டியன்
07-டிசம்பர்-2005

Monday, November 28, 2005

தாக்கரே Vs தாக்கரே

தமிழகத்திலும் இது மாதிரி நிகழக்கூடும். சில அறிகுறிகள் இப்போதே தெரிகிறது. சிவசேனா சுப்ரீமோ பால் தாக்கரே எப்போது இரண்டு பேரை (மகன், மருமகன்) கட்சிக்குள் பெரிய தலைகளாக வளர்த்து விட்டாரோ அப்போதிலிருந்தே இருவருக்குள்ளும் மாமியார் மருமகள் மாதிரி உள்ளுக்குள் கனன்ற கோபதாபம் தான்.

சமீபத்திய தேர்தல் தோல்விகளாலும், சிவசேனாவிலிருந்து காங்கிரஸ் சென்று, பல கட்சிக்காரர்களையும் அங்கே இழுத்து, தேர்தலில் சிவசேனா டெப்பாசிட் இழக்கவைத்த நாராயண் ரானேயோ, இதற்கு முன்னால் சேர்ந்த சஞ்சய் நிருபம் என ஒவ்வொருவராய் தாக்கரேயின் நிழலிலிருந்து விலகி சிவசேனைக்கு நஷ்டமேற்படுத்தினர்.http://www.hindu.com/2005/11/28/stories/2005112813920100.htm

Courtesy: The Hindu

தற்போது மருமகன் ராஜ் தாக்கரேயும் போர்க்கொடி தூக்கியுள்ளார். மகன் உத்தவ் தாக்கரேயின் தலைமையின்மையையும், தேர்தல் தோல்விகளும் சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் வயது காரணமான (முன்பு மாதிரி) செயல்படமுடியாமையும் அக்கட்சியினை முடிவை நோக்கி அழைத்துச் செல்கிறது.

இந்த விஷயங்களைத் திசை திருப்புவதற்கு, பெல்காம் மேயர் அவரை சந்தித்தவுடன், பெல்காமில் ஒரு மராட்டியருக்கு ஏதேனும் ஏற்பட்டாலும், மும்பையிலும் மகாராஷ்டிரத்திலும் உள்ள கன்னடியருக்கு வேட்டு என கொக்கரிக்கின்றனர். (மகாராஷ்டிர கவர்னர் கன்னடிகரான எஸ்.எம்.கிருஷ்ணா என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்).


Courtesy: Indian Express
நேற்று ராஜ் தாக்கரேயை சமாதானப்படுத்த வந்த 'சாம்னா' பத்திரிக்கை ஆசிரியர் சஞ்சய் ராட் கார் ராஜின் ஆதரவாளர்களால் அடித்து நொறுக்கும் காட்சி பல இந்தி டிவி சேனல்களில் ஒளிபரப்பப் பட்டது.. பல லட்சம் மதிப்பிருக்கும் காரை கும்பல் அடித்து நொறுக்குவதை போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது இன்னோர் கதை.

இதற்கு முக்கிய காரணம். மருமகனாக இருந்தாலும் ராஜ் தாக்கரேதான் கட்சியில் பெரிய செல்வாக்கு உடையவர். தொண்டர் பலம் பொருந்தியவர். அடித்தட்டு தொண்டர்கள் வரை தொடர்பு வைத்திருப்பவர். பால் தாக்கரேக்குப் பிறகு ராஜ் தான் வருவார் என 10 வருடம் முன்பே பலரும் கணித்து எழுதி வந்தனர். ஆனால் பிள்ளைப் பாசம் - கட்சித் தலைவர் பதவி உத்தவுக்குச் சென்றது. உத்தவுக்கு அவ்வளவு தலைமைப் பண்புகளோ, பேச்சுத் திறனோ, தொண்டர் தொடர்போ இல்லை.

தமிழகத்திலும் இந்த மாதிரி உரசல் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பேரன்களுக்கும் மகனுக்கும் இந்த மாதிரி மோதல்கள் பின்னால் வராமலிருக்க தலைவர் என்ன செய்யப்போகிறார் ? சமீபத்தில் குடும்ப டிவி/பத்திரிக்கையிலிருந்து ஒதுங்கிக் கொண்டதும் இதனால் தானா ?

மருமகன் இருக்கும் காலத்திலேயே கட்சிக்காரர்களின் / அமைச்சர்களின் Performance பற்றி மருமகனார் விரிவாக எடுத்துரைக்க, பலருக்கும் டோஸ் விழுந்தது. சமீபத்தில் பேரனும் பல அமைச்சர்களின் செயல்திறனை எடுத்துரைக்க, அவர்களுக்கும் டோஸ். மகன் தான் தலைவர் என இங்கும் பிள்ளைப் பாசம் தலைதூக்கினால், மற்ற கட்சிப் பெருந்தலைகள் என்ன செய்வர் ?

'ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை வாடியிருக்குமாம் கொக்கு' என்பதைப் போல் சில கூட்டணித் தலைவர்கள் மௌனம் காத்து காத்திருப்பது இதற்குத் தானோ ?

---o0o--- ---o0o--- ---o0o--- ---o0o---

தமிழகத்தின் மழை, வெள்ள சேதப் படங்களை பலரும் நேரிலோ, பத்திரிக்கைகளிலோ, டிவியிலோ பார்த்திருக்கலாம். சிதம்பரம், கடலூர் மற்றும் திருச்சி, தஞ்சை, நாகை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதம் மிகவும் அதிகம். பல லட்சம் ஏக்கர்களில் பயிர்கள் அழிந்துள்ளன. நீரில்லாமல் பயிர்கள் சென்ற வருடங்களில் வாடியது என்றால் இம்முறை அதிக நீரால் அழிந்துள்ளது. இந்த சேதத்திலிருந்து மக்கள் மீண்டு வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். (ராம்கி வேற 26ன்னு தேதி போட்டு பயமுறுத்தரார்)

டிசம்பர் 1 முதல் 15க்குள் இன்னோர் முறை வங்காள விரிகுடாவில் புயல் சின்னம் வரும் என சிலர் தெரிவித்துள்ளனர். மத்தியிலிருந்து வரப்போகும் மூவாயிரம் கோடியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு போய்ச் சேர்ந்தால் நன்று.

- அலெக்ஸ் பாண்டியன்
28-நவம்பர்-2005

Tuesday, November 22, 2005

பீகார் - தேர்தல் முடிவுகள்

லல்லு ராப்ரியின் பல்லாண்டு ஆட்டம் முடிவுக்கு வருவது போல தெரிகிறது. மாலை, நாளைக்குள் எல்லா முடிவுகளும் வெளிவரலாம். நிதிஷ் குமார் பதவியேற்கும் நாள் அதிக தூரத்திலில்லை என்பது தெரிகிறது. இதனால் மத்திய அரசுக்கு ஏதேனும் ஆட்டம் உண்டா என்பது சில வாரங்களில் தெரியும்.

நன்றி: http://www.ndtv.com

மொத்த இடங்கள்: 243
JDU+ 147
RJD+ 65
LJP+ 14
Others 17
----------------------

இந்தத் தேர்தல் மூலம் பீகாரில் ஏதேனும் மாற்றம் வந்து மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தால் அதுவே இந்த தேர்தல் முடிவுகளின் வெற்றியாக இருக்கும்.

தேர்தல் ஆணையர் பி.பி.டாண்டனுக்கு ஒரு ஷொட்டு.

நான் பீகார் மாநிலத்தில் சிறுவயதில் முதல் 5 வருடங்கள் வசித்துள்ளேன். எல்.கே.ஜி போன்ற படிப்புகள் அங்கே தான். பின்னர் வேலைக்குச் சேர்ந்த புதிதில் சில ஊர்களுக்கு அலுவலக வேலையாய் பயணம் செய்ய நேரிட்டது. ஒரு நல்ல மாநிலம், அரசியல்வாதிகளால் எப்படி பின்னடைவு ஏற்பட்டது என்பது பீகார் உலகிலேயே ஓர் முன்னுதாராணம்.

வருடம் முழுவதும் வற்றா நதியாம் கங்கையும், பலவித கனிம, தாது வளங்களும் நிறைந்த பீகார் மாநிலம் (ஜார்கண்டில் சில வளங்களை விட்டுக் கொடுத்திருந்தாலும்) இன்னும் பின்னடந்து காணப்படுவதற்குக் காரணம் அங்கு ஆண்ட காங்கிரஸ், லல்லு கட்சிகள் தான்.

மக்களின் அறியாமை, படிப்பறிவின்மை, சாதி வெறி என எல்லாவற்றையும் தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்தி, எதிர்த்தவர்களை, சாமானியர்களை அச்சுறுத்தி, கடத்தல்கள், கொலைகள், மிரட்டல்கள் என அரசியல்வாதிகள் (எல்லா கட்சியினரும்) போட்ட ஆட்டத்தில் சரியான சாலை வசதியோ, மின்சாரமோ, சுகாதாரமோ,மருத்துவ மற்றும் படிப்பு வசதிகளோ இல்லாமல் பீகார் மாநில மக்கள் பட்ட கஷ்டம் இனிமேலாவது சரியானால் நல்லது.

இவ்வளவையும் தாண்டி ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.ஐ.டி தேர்வுகளில் பீகார் மாநில மாணவர்கள் முன்னுக்கு அதிக அளவில் வந்துள்ளார்கள் எனில், அவர்களின் திறமைக்கும் முயற்சிக்கும் ஒரு பெரிய சல்யூட்.

நிதிஷ் குமாரின் ஆட்சியில் பாலும் தேனும் உடனே பெருக்கெடுத்து ஓடப்போவதில்லை. ஆனால் உள் கட்டமைப்பு (சாலை, மின்சாரம், போக்குவரத்து, கல்வி) போன்றவை முன்னேறி, கடத்தல்களும், கொலைகளும், தாதாயிசமும் குறைந்தால் அவரின் பணிக்கு முன் நன்றி, வாழ்த்துக்கள்..! செய்வாரா ? காலம் தான் பதில் சொல்லும்.

- அலெக்ஸ் பாண்டியன்
22-ஆகஸ்ட்-2005

Friday, November 18, 2005

புத்தகமும் நகையும்


பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் சென்ற வார இறுதியில் 6 மணிநேரம் அலசினோம்.


சென்ற வருடத்தை விட இந்த வருடம் நன்றாக இருக்கிறது. ஸ்டால்களின் லே-அவுட்டும் நன்றாக செய்திருக்கிறார்கள். மொத்தமும் மூடிய கொட்டகைக்குள் என்பதால் மழை பெய்தாலும் சுகமாக உள்ளேயே நேரத்தைக் கழிக்கலாம்.http://www.hindu.com/mp/2005/11/16/stories/2005111601320100.htm

படம் நன்றி: த ஹிண்டு

தமிழக / தமிழ் புத்தக / பதிப்பக ஸ்டால்கள் 7-8 இருக்கின்றன. நிறைய புத்தகங்கள். தவிர, ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், உருது என பல்வேறு மொழிகளில் புத்தகங்கள். ISKCON ஸ்டாலில் ஊதுபத்தி, படங்களுடன் கிடைக்கிறது. திருமகள் நிலையம், சுரா, கிழக்கு, காலச்சுவடு, கிரி டிரேடிங், நர்மதா என பல தமிழ் பதிப்பக ஸ்டால்கள். பெரும்பாலானவற்றில் கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் அலை ஓசை, சிவகாமியின் சபதம் போன்றவை அதிகம். சாண்டில்யன், பாலகுமாரன், சுஜாதா, வைரமுத்து புத்தகங்களும் நிறைய. காலச்சுவடு ஸ்டாலில் சு.ரா.வின் பல புத்தகங்கள், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம், பி.ஏ.கிருஷ்ணனின் 'புலி நகக் கொன்றை' ஜெயமோகன் நாவல்கள், சல்மாவின் சமீபத்திய '...ஜாமங்கள்' புத்தகம் என பலவித பெயர்பெற்ற புத்தகங்களும் கண்ணில் பட்டன. சில புத்தகங்கள் புரட்ட முடியாதபடி முழுவதும் சீல் செய்யப்பட்ட பேக்கிங்.

வழக்கமான, பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், சமையல், வாஸ்து, பக்தி சம்பந்தப்பட்டது, கோலங்கள், அரிச்சுவடி என எல்லாவித தமிழ் புத்தகங்களும் இருக்கிறது. நான் தேடிய சில புத்தகங்கள் (தேவன், சோ..) கிடைக்கவில்லை. சென்னை செல்லும் போதுதான் வாங்க வேண்டும்.

பாலகுமாரன் (பச்சை வயல் மனது, காசும் பிறப்பும், தாயுமானவன், ஆயிரம் கண்ணி, கரையோர முதலைகள்), சுஜாதா நாவல்கள் (ஆதலினால் காதல் செய்வீர், பிரிவோம் சந்திப்போம்-1) வாங்கியது தவிர, கிழக்குப் பதிப்பகத்தில் திருக்குறள், சைக்கிள் முனி, மெல்லினம், நாலு மூலை, மிஸ்டர் கிச்சா, கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன். 'அள்ள அள்ள பணம்' (சோம.வள்ளியப்பன்)மற்றும் இன்·போஸிஸ் நாராயணமூர்த்தி' (என். சொக்கன்) புத்தகங்களுக்கும் நல்ல அமைப்பு. பாராவின் 'புவியியலோரிடம்' கிடைக்கவில்லை (அது வேறு பதிப்பகம் போல)புத்தகங்களை நன்றாக அடுக்கி வைத்திருந்தனர். ஹரியண்ணாவின் 'அனுமன் - வார்ப்பும் வனப்பும்' நன்றாக இருக்கிறது. எல்லா (கி.ப) புத்தகங்களிலும் எழுத்தாளரின் வயசைப்
போடுகின்றனர். இது எந்த வருடத்திய வயது என்பது எப்படிக் கண்டுபிடிப்பது :-)

அதே மாதிரி இரா.முருகன் பெங்களூரில் வசிக்கிறார் என பின்னட்டை செய்தி.. ஆனால் அவரோ பெங்களூர் வாசத்தை முடித்து, சென்னையில் வீடு மாறி, தற்போது ஸ்காட்லாண்டில் எடின்பரோ நகரவீதிகளை Full formல் எஞ்சாய் செய்துகொண்டிருக்கிறார். (நமக்கும் அவரது
அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார் - சற்றே நகுக, ரா.கா.கி மற்றும்
http://vembanattukkaayal.blogspot.com மூலம். எமது ஸ்காட்லாண்டு அனுபவம் பற்றி வேறோர் பதிவில்.

கிரி டிரேடிங்கில் சில இசை ஒலி நாடாக்களும் (காசெட்டு), சில சினிமா பட குறுந்தகடுகளும்(விசிடி) வாங்கினேன். (பலே பாண்டியா, கலாட்டா கல்யாணம், கப்பலோட்டிய தமிழன் - ஒவ்வொன்றும் ரூ.100க்கு நல்ல கலெக்ஷன். ப்ரிண்டும் பரவாயில்லை). இதைத் தவிர, வடிவேலு, விவேக், கவுண்டமணி, செந்தில் காமெடி கலெக்ஷன், எம்.ஜி.ஆர், சிவாஜி, கண்ணதாசன், ரஜினி, கமல் பாடல்கள் என விசிடி கலெக்ஷன் வைத்துள்ளனர் (பெரும்பாலனவை மதுரை Modern கம்பெனியின் தயாரிப்புகள்) வாத்யாரின் டூயட் பாடல்கள் (விசிடி) நன்றாக இருக்கும் என்பதால் அது ஒன்று (ரூ.50) வாங்கினேன். சில பாடல்களும் கிளுகிளுப்பு மயம். வாத்யாரின் கலர்ப் பட டூயட்டுகளில் என்றுமே ஒரு தனி கிக் உண்டு. அவரை மாதிரி ஹீரோயினைக் 'கை'யாளுவதில் தெறமை கொண்டவர்கள் வெகு சிலரே ;-)

காந்திஜியின் சத்தியசோதனை புத்தகங்களும் (பரிசளிக்க) வாங்கினேன்.

குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கென்றே பல ஸ்டால்கள். நிறைய அகராதிகளும் கண்பட்டது.(?)

நாங்கள் சென்ற சமயத்தில் கர்நாடக ஆளுனர் டி.என்.சதுர்வேதி ஒரு நடை வந்துபோனார். பெரிய அளவில் ஆர்ப்பாட்டம், ஆள், அம்பு எதுவும் இல்லை (ஓரிரு புகைப்படக்காரர்கள், ஒரு செக்யூரிடி). அவரருகில் மக்களும் சகஜமாக அவரவர்கள் புத்தக தேடல்களில் நடந்துகொண்டிருந்தனர். (இதுவே நம்மூர் பிரபலம் / அரசியல்வாதியாக இருந்திருந்தால் ?)

'த ஹிண்டு'வும் ஒரு ஸ்டால் வைத்துள்ளனர். நன்றான வடிவமைப்பு. Macmillan, British council library, ISKCON என பல்வேறு விதமான, பல்வேறு தலைப்புகளில் - அவரவர்க்கு அதது !

புத்தக ஸ்டால்களுக்கு வெளியே அடிகாஸின் உணவகமும், சூடான மிளகாய் பஜ்ஜியும் உண்டு.

நர்மதா பதிப்பகத்தின் பல புத்தகங்களில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர் - புத்தகம் வாங்குவதை செலவு என்று கருதாமல் ஒரு மூலதனம் என்று கருதவும் என்ற பொருள்படி -- நல்ல செய்தி.

பெங்களூரில் உள்ள புத்தகப் புழுக்களே - 20ஆம் தேதி வரை கண்காட்சி உண்டு. பர்ஸில் நிறைய பணமும், கையில் சுமார் 4-5 மணிநேரமும், வைத்திருந்தால் நிச்சயம் ஒரு நாள் உருப்படியாய் செலவழிக்கலாம். எல்லா கடைகளிலும் 10% தள்ளுபடி உண்டு. கூட்டம் இல்லாத நாளாய்ப் பார்த்துப் போனால் பொறுமையாய்த் தேடலாம்.

புத்தகங்கள் வாங்கியாச்சு - படிக்கலையா என்று கேட்டால் - போன வருஷம் வாங்கினதையே இன்னும் எல்லாம் படிச்சு முடிக்கலை - அது இருக்கு படிக்கவேண்டியது இன்னும் நிறைய என்பது தான் பதில் :-)

--o0o-- --o0o-- --o0o-- --o0o-- --o0o--

கண்காட்சி வளாகத்தில் கண்ட ஒரு விஷயம்.

தமிழ் புத்தக ஸ்டால்களில் தொடர்ந்து ஒரு தமிழ் தம்பதியினரைக் காண முடிந்தது. கணவர் ஒவ்வொரு ஸ்டாலிலும் புத்தகங்களைப் பிரித்து, பிரித்து, நேரம் கடத்தி, பின்னர் சிலதை வாங்கிக் கொண்டிருக்க, கூட வந்த அவரது மனைவி பொறுமை இழந்து ஒவ்வொரு இடத்திலும் சீக்கிரம், சீக்கிரம் என அவசரப் படுத்திக் கொண்டிருந்தார்.

"இந்தப் புஸ்தகம் தான் வீட்ல இருக்கே.. இது பாலகுமாரன்து..ஏற்கனவே வாங்கியாச்சு இல்ல அட்டைபடத்த மாத்திட்டங்க" என கணவரிடம் தொணதொணக்க... ஒரு கட்டத்தில்

கணவர் "ஒங்க கூட புடவை கடைக்கும், நகை கடைக்கும் நான் வந்தப்பலாம் இப்படித்தான நாங்களும் ·பீல் பண்ணுவோம்.. ஒனக்கு நகை/டிரெஸ் எப்படி முக்கியமோ அத மாதிரி எனக்கு தமிழ் பொஸ்தகம் முக்கியம்" என சொல்ல மனைவி கப்சிப்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? புத்தகமா / டிரெஸ்/நகையா ?

--o0o-- --o0o-- --o0o-- --o0o-- --o0o--


- அலெக்ஸ் பாண்டியன்
18-நவம்பர்-2005

Thursday, November 10, 2005

பெங்களூர் புத்தகக் கண்காட்சி 2005

பெங்களூர் வலைப்பதிவாளர்களே- நாளது 11-நவம்பர்- 2005 முதல் 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் புத்தகக் கண்காட்சியில் தங்களுக்கு வேண்டிய புத்தகங்களைத் தேடுவீர். பெறுவீர். தமிழ் புத்தகங்களும் கிடைக்கும் என தகவல். சென்ற ஆண்டு தமிழக பதிப்பகங்களும் நிறைய இருந்தன. நானும் பல தமிழ் புத்தகங்கள் வாங்கினேன்.

---------------------------
10 lakh books to be on display

The Hindu: http://www.hindu.com/2005/11/10/stories/2005111019250400.htm
-----------------------
இடம்: பேலஸ் மைதானம்
நேரம்: காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை
நுழைவுக் கட்டணம்: ரூ.10

- அலெக்ஸ் பாண்டியன்
10-நவம்பர்- 2005

Monday, November 07, 2005

வோல்வோ பஸ்ஸில் ஒரு பயணம்

தமிழ்நாட்டில் சாலைவசதிகளும், பஸ் வசதிகளும் முன்னேறியிருப்பதற்கு எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்த ஈரோடு முத்துசாமி அவர்கள் ஒரு மிகப்பெரிய காரணி.

அந்தக் காலத்தில் தான் தமிழகத்தின் பஸ் மற்றும் சாலை வசதிகள் பெரிய அளவில் முன்னேற்றம் காணப்பட்டது. (மற்ற அரசுகள் செய்திருந்தாலும் - முன்னோடி என முத்துசாமி மற்றும் எம்.ஜி.ஆர் அரசைத் தான் சொல்வேன் - என்னளவில்). அவரின் மூலம் ஈரோட்டில் இதற்கான பொறியியல் கல்லூரி கூட உருவாக்கப்பட்டது. ஏன் அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு இதில் இட ஒதுக்கீடும் உண்டு என கேள்விப்பட்டுள்ளேன். தற்போது எங்கே இருக்கிறார் அந்த முத்துசாமி ?

ஆந்திரத்தையும், கர்நாடகத்தையும் (ஏன் - மற்ற வட இந்திய மாநிலங்களையும் கூட ஒப்பிட்டால் தமிழகத்தில் தான் பஸ் வசதி சிறந்தது என்பதில் ஐயமில்லை. கடந்த 5 ஆண்டுகளில் அரசு பஸ்களின் நிலைமை மிகவும் மோசம் ஆகியுள்ளது என்பது உண்மையானாலும், 24 மணிநேரமும் தனியாரோ அரசு பஸ்ஸோ - ஏதாவது ஒரு பஸ் பிடித்து தமிழகத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு பஸ்ஸிலேயே பயணம் செய்யலாம். இந்த வசதி வேறெந்த மாநிலத்திலும் கிடையாது என நினைக்கிறேன்.

கலைஞரின் அரசில் குக்கிராமத்திற்கெல்லாம் மினி பஸ் ஏற்படுத்தியதும் ஒரு முன்னோடியான திட்டம் (அதில் பல ஊழல், இன்ன பிற புகார்கள் வந்திருந்தாலும், அதை நிறுத்தி பின் தற்போதைய அரசு மீண்டும் துவக்கியிருந்தாலும்)

தற்போது ஆந்திர மற்றும் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிகவும் முன்னேறியுள்ளன. தனியார் மூலம் கணினி வழி, டிக்கெட் வாங்கும் வசதிகள், வோல்வோ, ஹைடெக் பஸ்கள், நேரத்திற்கு (பெரும்பாலும்) சென்றடையும் பஸ்கள், பல ஊர்களுக்கு புது வழித்தடங்கள் என கலக்குகிறார்கள். கால் நீட்டும் வசதியும் பரவாயில்லை. ஆனால் தமிழக அரசு பஸ்கள் பழைய நிலையிலேயே இருப்பதாகத் தெரிகிறது. தினமும் அலுவலகம் வரும்/செல்லும் வழியில் பல தமிழக அரசுப் பேருந்துகளைப் பார்க்க முடிகிறது. டிவிடி/விசிடி என வைத்துள்ளார்களே ஒழிய பெரும்பாலான தூரப் பிரயாண பஸ்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. (சென்னை, பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, கன்னியாகுமாரி, மதுரை, திருநெல்வேலி, நாகப்பட்டிணம் செல்லும் பஸ்களை அடிக்கடி காண்பதுண்டு)

ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில் ராஜீவ்காந்தி பெயரில் புதுபுது பஸ்கள் எல்லாம் விட்டு சில மாதங்களிலேயே அவை அல்லாட ஆரம்பித்து செங்கோட்டையனுக்கும் அரசுக்கும் மிகுந்த அவப்பெயரைத் தேடித்தந்தன. தற்போது யார் இந்தத் துறை அமைச்சர் என்பது தெரியவில்லை நயினார் நாகேந்திரன் ? பி. விஸ்வநாதன் என http://www.tn.gov.in/department/transport.htm சொல்கிறது) அல்லது தமிழக போக்குவரத்துத் துறையில் என்ன முன்னேற்றங்கள் செய்துள்ளார்கள் என தெரியவில்லை. இன்னும் கணினி வழி முன்பதிவு செய்ய விண்ணப்ப படிவத்திற்கு எட்டணாவோ, காலணவோ வசூலிக்கிறார்கள் எனத் தெரிகிறது. வேறெந்த போக்குவரத்து முன்பதிவு நிலையங்களில் இந்த விண்ணப்ப படிவத்திற்கு காசு வசூலிப்பதில்லை (ரயில் படிவத்திற்கும்). படிவம் வீணடிக்கப்படக்கூடாதுதான் அதற்காக வரிசையில் நிற்கும் போது காலணா, எட்டணா தேடுவது கடினம் என்பது புரிவதில்லை போல.

http://www.setctn.com வலைத்தளத்தில் பல விபரங்கள் கொடுத்துள்ளார்கள்.

http://www.tn.gov.in/deptst/RoadAndTransport.htm இங்கு கொடுக்கப்பட்டுள்ள விபரங்களில் (2004 வரை) தற்போதைய அரசின் சிறப்பான சாதனையாக எனக்கு எதுவும் பிடிபடவில்லை. புரிந்தவர்கள்/தெரிந்தவர்கள் கூறவும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

--o0o-- --o0o-- --o0o-- --o0o-- --o0o--சென்றவார இறுதியில் முதல் முறையாக வோல்வோ பஸ்ஸில் பயணம் செய்ய வாய்ப்பு. பொதுவாக பயணங்கள் என்றாலே அலுத்துவிட்ட எனக்கு, கடந்த சில வருடங்களாக பெரும்பாலும் ரயிலில் தான் பயணம். அதனால் பஸ்ஸில் நெடுந்தூரப் பயணம் செய்து பல வருடங்கள் ஆயிற்று.

10 வருடங்களுக்கு முன்பு வரை பஸ்ஸில் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்துள்ளேன் அதுவும் தமிழகத்தின் குறுக்கும் நெடுக்கும் பல ஊர்களுக்கு. சாலைகளும் மிகவும் நன்றாக இருந்த காலகட்டம் (மழைக்காலங்கள் தவிர). சாதாபஸ், சூப்பர் டீலக்ஸ், மற்றும் திருச்சி, தஞ்சை பக்கத்து தனியார் பஸ்கள் என பலவித பஸ்களிலும் பயணம் செய்துள்ளேன். தமிழக பஸ்களின் ஒரே மைனஸ் - இடப் பற்றாக்குறை. காலை நீட்டுவதற்கு மிகவும் கஷ்டப்படவேண்டும்.கடந்த 1 வருடமாக பெங்களூரில் உள்ள பல தனியார் மற்றும் அரசு போக்குவரத்து கழகங்கள் (ஆந்திரா, கர்நாடகம்) தங்களது நெடுந்தூரப் பயண பஸ்களை வோல்வோவுக்கு மாற்றிவிட்டன. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சில தடங்களில் அதிக காசு கொடுத்து இந்த
மாதிரியான பேருந்துகளில் தான் செல்ல வேண்டும். சாதா பஸ்வேண்டுமானால் தமிழக அரசு பேருந்துகளில் செல்லலாம்.

ஏ.சி பஸ்ஸில் பயணம் செய்வது எமக்கு ஒவ்வாது ஏனெனில் இரவில் பயணம் செய்யும் போது அந்த குளிர்காற்று முகத்தில் அடிக்கும் மறுநாள் ஜல்ப் பிடிக்கும். இதனாலேயே கொஞ்சம் வசதி குறைவாக இருந்தாலும் சாதா பஸ்ஸில் செல்வது (அதாவது ஜன்னல் திறக்கும் வசதி இருக்கும் பஸ்கள்)

முதல் முறையாக இந்த வோல்வோ பஸ்ஸில் செல்வதற்கு யோசித்தேன். ஆனால் சென்ற இடத்திற்கு இந்த பஸ்தான் இருந்ததால், முதல் முறை வோல்வோ பஸ் பயணம். பெங்களூர் எல்லை தாண்டியவுடன் சித்தூர் வரை மிக அருமையான சாலை. பஸ்ஸில் குலுங்கலோ அலுங்கலோ இல்லை. ஆனால் மூடிய கண்ணாடிகள் (ஜன்னல் இல்லை) என்பதால் பல பெண்மணிகளுக்கு குழந்தைகளுக்கு பஸ் பிரயாணத்தால் வாந்தி வரும் பலருக்கும் இத்தகைய பஸ்கள் உகந்தது அல்ல என்பது எனது கருத்து. ஜன்னல் இருக்கும் பஸ்களில் வெளிக்காற்று (natural air) வருவதால் பெரும்பாலருக்கு வாந்தி வருவது மட்டுப்படுத்தப்படும் அல்லது வந்தாலும் பஸ்ஸை நிறுத்தச் சொல்லத் தேவலையில்லை ஜன்னலைத் திறந்து 'உவ்வெக்' என தீர்த்துக்கொள்ளலாம் (நடைமுறையைச் சொன்னேன் ஐயா..!)

வோல்வோ பஸ்ஸில் shock absorbers மிகவும் சிறப்பாக உள்ளதால் பஸ் மிதந்து செல்கிறது. சாலையும் சிறப்பாக இருந்துவிட்டால் இன்னும் கன ஜோர். ஆனால் ஏ.சி.போடுவதால் பஸ்ஸினுள் ஒருவித சப்தம் (மிதமானது தான்) கேட்டுக்கொண்டே இருப்பதால் - வாந்தி வராதவர்களுக்கும் வயிற்றைப் புரட்டும் ஓர் உணர்வு (பல ஆண்டுகளுக்கும் முந்தைய ஓர் கேள்வி பதிலில் சுஜாதா - பஸ்ஸில் வாந்தி வருவதற்கு - காதில் ஏற்படும் ஒரு வித அதிர்வுதான் காரணம் என எழுதியிருந்தார் அது உண்மை என்பது இந்த மாதிரியான சப்தம்/அதிர்வில் பயணம் செய்தவர்களுக்குப் புரியும்).

மற்றபடி பஸ்ஸின் கட்டமைப்பு (கீழ்ப்பகுதியில் நிறைய சாமான்கள் ஏற்றிக்கொள்ளலாம்), வேகம் செல்லுவதே தெரியாத ஓர் சொகுசு, விசிடி/டிவிடி உபயோகத்தில் நல்ல தரத்தில் ஒளிக்காட்சி என பஸ் பிரயாணத்தில் இன்னோர் மைல்கல் (ஆனால் 7 மணிநேரத்திற்குத் தாண்டி பயணம் செய்ய வேண்டுமென்றால் யோசிக்கவேண்டும் :-))

வோல்வோ பஸ் கட்டுமான தொழிற்சாலை (?) பெங்களூர் - சித்தூர் சாலையில் ஹொசகோடே என்ற இடத்தில் உள்ளது. பெங்களூரின் நகரப் பேருந்துகளிலும் இந்த ஆண்டின் இறுதியில் சுமார் 25 வோல்வோ பஸ்களைக் காணலாம்.

சில சுட்டிகள்
http://www.volvo.com/bus/india/en-in/home.htm
http://www.ksrtc.org/
http://apsrtc.gov.in/
http://apsrtc.gov.in/Coaches/Types-Facilities/Types-Facilities.htm

படங்கள் நன்றி: KSRTC மற்றும் APSRTC websites.


- அலெக்ஸ் பாண்டியன்
07-நவம்பர்-2005

Wednesday, November 02, 2005

தீபாவளி 2005 டிவி நிகழ்ச்சிகள்

தீபாவளியென்றாலே தொலைக்காட்சியின் முன்னே உட்கார்ந்து நாள் முழுவதும் கழிக்கும் புதுப் பழக்கம் வந்துவிட்டதில், இந்த முறையும் வென்றது ஜெயா டிவிதான்.

சன் டிவி இன்னும் எத்தனை வருடங்களுக்கு 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' என அறிவித்துக்கொண்டு, ஒரே மாதிரி நிகழ்ச்சிகளைக் கொடுத்து வருவார்கள் என தெரியவில்லை. சினிமா ஆட்கள் தவிர ஒரு சிறப்பு நாளில் இவர்களுக்கு வேறு துறை சார்ந்த பிரபலங்கள் கிடைக்க மாட்டார்களா அல்லது தமிழர்கள் எல்லோரும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைத்தான் பார்ப்பார்கள் மற்ற விஷயங்கள் காட்டினால், விளம்பரம் வராது என்ற முடிவா ? அதுவும் காலை வணக்கம் தமிழகத்தில் சில பட ஹீரோ பரத் ? எத்தனை பேர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருப்பார்கள் ?

எத்தனை தீபாவளிகளுக்கு ரஜினி படம் போட்டே ஓட்டப்போகிறார்கள் - அண்ணாமலை, பாட்ஷா, முத்து - தற்போது படையப்பா.. ரஜினி என்றால் கமலும் இருந்தாக வேண்டுமே அதனால் 'இ.தொ.மு.மு...' வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்'. அதுவும் சுமார் 4 மணி நேரம் இழுத்து.

சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் என்ன தான் நகைச்சுவையாக இருக்கும் என்றாலும் எத்தனை வருடங்கள் அரைத்த மாவையே அரைப்பார்கள் ? அதுவும் ஆரம்பமே வெறிநாய், வீதிநாய், வீட்டு நாய் என்ற பிரயோகங்களுடன் நிகழ்ச்சியைத் துவக்கினார்.. அதுவும் ஒரு நன்னாளில். இவர் இல்லாவிட்டால் விஜய் டிவியில் லியோனி. நகைச்சுவை என்ற பெயரில் ஒரு முறைக்குமேல் கேட்க இயலாத அறுவை.

ராஜ் டிவி என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் சன், ஜெயா, விஜய் டிவி அளவிற்கு நிகழ்ச்சிகளிலோ, தொகுப்பாளர்களிலோ வெற்றி பெறுவதில்லை. ஒளிபரப்பும் டெக்னிகலாக கொஞ்சம் மங்கலாகவே இருக்கும். (என்னதான் சன் டிவியின் அதிகார துஷ்பிரயோகத்தால் Uplink வசதி சரியில்லாமல் இருந்தாலும் - இவ்வளவு கலங்கலாகவா எல்லா நிகழ்ச்சிகளும் இருக்கும்)

ஜெயா டிவி ஜாக்பாட் அடித்தது என்றே சொல்லலாம். இளையராஜாவின் 'அன்றும் இன்றும் என்றும் மேஸ்ட்ரோ' நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. ராஜா இவ்வளவு புன்னகையுடன் இருந்து நான் பார்த்ததில்லை. மிகவும் இயல்பாக செய்யப்பட்டிருந்தது. அவரின் ஆஸ்தான BGM வயலின் அணியும் பல பாடல்களுக்கு மெருகூட்டின. அவரின் ஆரம்பத்தில் பாடிய ஜனனி.. ஜனனி பாடல் ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்தியது உண்மை (குரலில் கொஞ்சம் நடுக்கம் இருந்த போதிலும்). நிகழ்ச்சியின் அடுத்த பாகம் வரும் ஞாயிறன்று. மறக்காமல் பார்க்கவும்.

சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி: தங்கர் பச்சானின் சமீபத்திய வெற்றிப் படம் இவ்வளவு விரைவில் தொலைக்காட்சியில் வந்தது ஓர் ஆச்சரியம். ஆனால் படம் சூப்பர். வலைப்பதிவுகளிலும், இணைய மடற்குழுக்களிலும் நேரம் செலவழித்துக்கொண்டு மனைவியின் திட்டுகளுக்கு ஆளாகும் ஒவ்வொரு தமிழ்க் கணவனும் பார்க்க வேண்டிய ஒன்று :-) படத்தின் வசனங்களும், நவ்யா, தங்கரின் நடிப்பும் அருமை. நிச்சயம் இப்படத்திற்கு சில விருதுகள் உண்டு.

படம் முடிந்த அடுத்த நிகழ்ச்சியாக குஷ்புவின் ஜாக்பாட்..! நடிகர்களும் (எல்லோருமே குஷ்புவுக்குப் பிடித்த நடிகர்கள் - கார்த்திக், பாண்டியராஜன், சத்யராஜ், ஜெயராம்)இயக்குனர்களும் (ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிகுமார், வஸந்த், சூர்யாஹ்).. நடிகர்கள் அதிகம் பரிசு பெற்றனர். இரு குழுக்களுக்கும் ஆரோக்யா பால் அரை லிட்டர் பாக்கெட் 2 மாதம் இலவசமாம்.

தங்கர் - குஷ்பு இருவர் நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து - ஜெயா டிவியில் ? ஏதாவது பெரிய இடத்து Deal இருக்குமென்று பட்சி சொல்கிறது (எது நடந்தாலும் தமிழ் செய்திகள் படிக்கும் நல்லுலகிற்கு) இந்த மாதிரி எண்ணுவதுதான் தற்போதைய வழக்கமாகிவிட்டது :-)

ஒரு காலத்தில் கோலோச்சிய சென்னைத் தொலைக்காட்சி (பொதிகை) சோபை இழந்து காணப்படுகிறது. தலைமையினாலா ? இல்லை சினிமா அதிகம் இல்லாததால் நாம் (நாமும் இந்த சினிமா நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகிவிட்டோம்) தான் அப்படி எண்ணுகிறோமா ?வாத்யாரின் 'ஆயிரத்தில் ஒருவன்' போட்டு பல வாத்யார் ரசிகர்களைக் கவர்ந்தார்கள். அருமை. விடுமுறை நாளில் மகிழ்வாகக் கழிக்கவேண்டுமென்றால் இந்த மாதிரி வாத்யார் படம் பார்த்தால் போதும்.

தமிழகத்தில் உள்ள பல உறவினர்களிடமும் தொலைபேசியதில் - தீபாவளிக்கு புது சட்டை, பலகாரம், வெடி பிறகு என்ன என்று கேட்டால்- வேறென்ன டிவி நிகழ்ச்சிகள் தான் என்கிற அளவிற்கு பெரும்பாலான தமிழர்கள் (எம்மையும் சேர்த்துதான்) டிவி மற்றும் சினிமா நட்சத்திரங்களுடனான தீபாவளி என்றே ஆகிவிட்டது. தொலைத்தது நமது நட்பையும், வெளியே சென்று கூடி மகிழும் அந்தப் பொற்காலத்தையும்.

சென்னையில் தினமும் இனிமேல் குழாயில் தண்ணீர் விடுகிறார்களாம். அடுத்த கோடை வரை தண்ணீரை தக்கவைத்துக் கொள்வார்களா அல்லது ஏப்ரல் தேர்தலோடு எல்லாம் சரியா என்பது போகப் போகத் தெரியும்.

- அலெக்ஸ் பாண்டியன்
2- நவம்பர் - 2005

பி.கு: சென்ற தீபாவளியன்று ஜெயேந்திரர் மீதான கோபத்தைக் கைது, பலவித வழக்குகள், பலவித பெயர் இழுக்கு பத்திரிக்கைச் செய்திகள் என இழுத்தடித்த அரசுத்தரப்பு இந்த ஓர் வருடத்தில் பலமுறை உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கியுள்ளது. அரசுத்தரப்பின் ஒரே வெற்றி ஜெயேந்திரர் அருளாசியை இந்த முறை தொலைக்காட்சிகளில் இல்லாமல் செய்தது மட்டுமே.

Monday, October 31, 2005

நகரமும் ணகரமும் னகரமும்

அனைவருக்கும் இனிய தீபாவளி மற்றும் ரம்ஜான் வாழ்த்துக்கள்..!

இனிவரும் மாதங்களிலாவது இயற்கைப் பேரழிவிலிருந்து மக்களுக்கு விடுப்பு கிடைக்கும் என பிரார்த்திப்போம். இந்த ஆண்டு மட்டுமே மழை, புயல், வெள்ளம், சூறாவளி, பூகம்பம் என பல நாடுகளிலும், பேரழிவுகள். கடந்த 2 நாட்களிலேயே ஆந்திராவில் ரயில் விபத்திலும் பின்னர் புதுடில்லியில் வெடிகுண்டு பாதிப்பு. இத்தகைய நிகழ்வுகள் குறைந்து அனைத்து மக்களுக்கும் அமைதியான வாழ்வு வர வேண்டுவோம்.

<< நகரமும் ணகரமும் னகரமும்>>

'பண்ணித் தமிழ்' கொஞ்சி விளையாடும் தமிழ் நகரங்களில் இந்நாட்களில் பெரும்பாலோர் முக்கியமாக இளைஞர் / இளைஞியர்) ணகரத்திற்கும் னகரத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் உபயோகப்படுத்துகின்றனர். தமிழ் அறிஞர் தாத்தாவின் பேரன் டிவியில் இந்தத் தமிழ்க் கொலை அதிகம்.

அதுவும் சன் மியூசிக் சேனலில் எப்போது பார்த்தாலும் யாரோ ஓர் இள நங்கை தொலைபேசியில் கடலைப் போட்டுக்கொண்டே இருக்கிறார். அவர் என்ன பேசுகிறார் என்பது புரிந்தால் நீங்கள் தமிழக கல்லூரி இளவட்டங்களுடன் அதிகம் பழகுபவராக இருக்கலாம்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு பாடல் ஒளிபரப்பினர். மெல்லத் திறந்தது கதவு படத்தில் வரும் மிக அருமையான பாடல் - 'வா வெண்ணிலா... உன்னைத் தானே வானம் தேடுது..' - அமலாவின் நாட்டியமும், மைக் மோகனின் தேடுதலும்.

அருமையான பாடல், ஆடல். அதற்கு பாடல் செய்தி வெளியிட்ட/டைப் செய்திருந்த இளைஞர்
'வா வென்னிலா' என்றே போட்டிருந்தார். பெரும்பாலானோர் பேசும் போதும் ஒண்ணுமே என்பதற்கு ஒன்னுமே என்றே பேசுகின்றனர். இது தெரியாமல் பேசுகிறார்களா (இவர்கள் அநேகமாக தமிழ் ஒரு பாடமாக படித்திருக்க மாட்டார்கள்) அல்லது மற்றவர்கள் டிவியில் பேசுவதை, கல்லூரியில், கா·பி ஷாப்பில் பேசுவதைக் கேட்டு, தாங்களும் மாறிவிட்டார்களா என்பது தெரியவில்லை. வலைப்பதிவர்கள் கூட பலரும் ஒன்னுமே என்றே உபயோகிக்கின்றனர்.

லகரமும் ளகரமும் ழகரமும் தான் பல வருடங்களாக இந்த பேச்சு வழக்கில் சுட்டிக்காட்டப்படுவதாக இருந்தது. ராதிகா போன்றோர் - சித்தி, அண்ணாமலை, செல்வி சீரியல்களில் ஸ்பஷ்டமாக ழகரத்தை ளகரமாக உச்சரித்து உச்சரித்து, பல தமிழ் சீரியல் பார்ப்போரும் ழகரத்தை ளகரமாக உச்சரிப்பதே சரி போலிருக்கிறது என்ற நிலையை சில நபர்களிடம், குழந்தைகளிடம் காண முடிந்தது. மதுரைக்காரர்களுக்குத்தான் ழகரம் ளகரமாகும் என கேள்விப்பட்டிருக்கிறேன் (No offence meant!)

அந்தக் காலங்களில் பேராசிரியர் நன்னன் - சென்னை தொலைக்காட்சியில் தமிழ் வகுப்பு எடுப்பது கேலியாக பேசப்பட்டது (பத்திரிக்கைகளில், ஜோக்குகளில், கதைகளில்..) ஆனால் இன்றைய தேவை - அந்த நிகழ்ச்சிகளின் மறு ஒலிபரப்பு. ஜெயா டிவியில், காலை 8.10க்கு ஒரு ஆசிரியர் பேசும் ஆங்கிலம், எழுதும் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறார் (நன்றாகவே இருக்கிறது..) அது மாதிரி - தமிழும் 5 அல்லது 10 நிமிட capsuleஆக சன் டிவியின் காலை நிகழ்ச்சியில் செய்திக்கு முன்னர் கற்றுக்கொடுத்தால் கலைஞரின் இத்தனையாண்டுத் தமிழ்ப் பணிக்கு ஒரு துளியூண்டு - பேரனின் சேவையாக இருக்கும். வேண்டுமென்றால் சரவணா, எஸ்.எம், குமரன் சில்க்ஸ் போன்றோரிடம் விளம்பரதாரராக இருக்க வேண்டலாம்.

என்னய்யா இது நகரத்தில் ணகரத்திற்கு வந்த சோதனை ?


-அலெக்ஸ் பாண்டியன்
31-அக்டோபர்-2005

Tuesday, October 25, 2005

சென்னை - தமிழக வெள்ள நிலவரம்

வெள்ளம் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆறுகளும், ஏரிகளும் நிரம்பி வழிகிற நிலைமை. பெங்களூரில் வெள்ள நிலைமை. இன்றும் இன்னும் மோசமாகவே உள்ளது. பலத்த மழை பெய்து வருகிறது.நன்றி: www.tamilmurasu.in

சென்னை மற்றும் தமிழக நிலவரங்கள் டிவி, செய்தித்தளங்களில் தெரிய வருகிறது என்றாலும், பெரும்பாலான மக்கள் அபாய இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வழி செய்யப்படும் என்று நம்புவோம்.

தமிழக, சென்னை வலைப்பதிவர்கள் - தங்கள் செய்திகளை பகிரவும் நன்றி. வெளியூர் பயணம் செல்ல நினைத்திருக்கும் பலருக்கும் இச்செய்தி வாயிலாக தங்கள் பயணத்தை, செல்லும் இடத்தின் நிலவரத்தை அறிய உதவும்.


- அலெக்ஸ்
25-October-2005

Monday, October 24, 2005

நீரில் மிதக்கும் பெங்களூர்..!

தேவகவுடா, நாராயணமூர்த்தி, பெங்களூர், உள்-கட்டமைப்பு, ஏர்போர்ட் என சென்றவாரம் முழுவதும் பரபரப்பாய் இருந்த பெங்களூர் நகரம் மற்றும் மக்களுக்கு கேதரீனா, வில்மா, காஷ்மீர் பூகம்பம், சுநாமி எல்லாம் எங்கோ நடந்தது/நடக்கிறது - நாம் பொருளதவியும், உடலுதவியும் செய்தால் போதும் என்றும் நம்மை இதெல்லாம் பாதிக்காது என இருந்த மக்களுக்கு இயற்கையின் சீற்றம் நேற்றும் இன்றும் புரிந்திருக்கும்.
(நன்றி: பத்ரியின் தேவகவுடா, நாராயணமூர்த்தி பதிவு)Courtesy: Deccan Herald


பொதுவாகவே இந்த வருடம் மழை கர்நாடகத்தில் அதிகம். அதுவும் பெங்களூரில் மிக அதிகம். சென்ற சில மாதங்களில் பெய்த மழையின் சீற்றத்தில் எந்த பாடமும் கற்காத அல்லது கற்றும் எதுவும் செய்யாத மெத்தனமான அரசு இயந்திரங்கள் இந்த முறை மிகவும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.


Courtesy: The Hindu

சனிக்கிழமை இரவும் ஞாயிறு இரவும் பெய்த கனமழையால் பல ஏரிகள் உடைப்பெடுத்து, பெங்களூரின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இத்தனைக்கும் கடல்மட்டத்திலிருந்து பல ஆயிரம் அடிகள் உயரத்திலும், இடங்கள் மேடு பள்ளமாக இருந்தும். காரணம் ஏரிகளையெல்லாம் ப்ளாட் போட்டு - கட்டங்கள் எழுப்பியது, கழிவுநீர் கால்வாய்கள் எல்லாம் அடைக்கும் அளவிற்கு ப்ளாஸ்டிக் மற்றும் குப்பைகளைக் கொட்டியது, அவரவர்கள் இஷ்டத்திற்கு கட்டிடங்களை எழுப்பி, நீர் செல்லும் வழிகளை மாற்றியமைத்தது என சொல்லிக் கொண்டே போகலாம்.

என்ன சொல்லி என்ன.. துளிக்கூட மக்களின் துயருக்கு செயலில் முன்னேற்றம் காட்டாத அரசை நம்பி என்ன பயன் ?

- அலெக்ஸ்
24-அக்டோபர்-2005

More info/Pictures: http://thatskannada.indiainfo.com/news/2005/10/23/rain_effect.html

http://timesofindia.indiatimes.com/articleshow/1272450.cms
A scene near one of the top IT company building (Bosch, Sasken, Cap Gemini) on
the Hosur Road. In another IT company (Wipro) building - water has entered upto
first floor destroying many of the equipments.

Monday, October 17, 2005

பத்து ரூபாய் விகடன்

8 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆனந்த விகடன் அடுத்த வாரம்/இதழ் முதல் 10ரூபாயாம். 60காசுக்கு விகடன் விற்ற காலம் முதல் காசு கொடுத்து வாங்கிப் படித்து வரும் எம்மைப் போன்றவற்கு, இந்த உடனடி ரூ 2 விலையேற்றம் அதிகம் என்றே படுகிறது.

விகடன் ரூ.6.00 என்று இருந்தவரை இருந்த உள்ளடக்கம் வேறு - சிறுகதை, தொடர்கதை, அரசியல், சமூக, நையாண்டிக் கட்டுரைகள், சங்கீதம், சினிமா (சில பக்கங்கள்), ஜோக்ஸ் என சிறப்பாக இருந்தது. கடந்த 4 வருடங்களாக விகடனில் வெறும் சினிமா சினிமா சினிமா - அவ்வளவுதான். அதுவும் தொப்புள், மார்பகப் படங்கள் விஜய், ரஜினி, அஜீத், சிம்ரன் மற்றும் இன்ன பிற ஓர் பாட்டு ஆடும் குலுக்கல் நடிகைகளின் (நமீதா..) படங்கள், செல்வராகவன்-சோனியா இதுதான் உள்ளடக்கமாகி வருகிறது. மதன் பதில்களிலும், ஏன், சுஜாதாவின் கற்றது பெற்றது, தொடரிலும் பெரும்பாலும் சினிமா. அவ்வப்போது காணாமல் போய் வரும் ஞாநி, அ.அ.ஆ தொடர்களிலும் சினிமா, கவர்ச்சிப் படங்கள்.

உருப்படியாக வரும் சில விஷயங்கள் என்றால் அது எஸ்.ராமகிருஷ்ணனின் தொடரும், இணையத்தில் தேடி எழுதப்படுவதாக இருந்தாலும், தமிழ் மக்களுக்குச் சென்றடைய வைக்கும் விதத்தில் உலக விஷயங்களை எடுத்துத் தரும் பா.ரா., சொக்கன் கட்டுரைகள் இவைதாம். அதிலும் இந்த வார சொக்கனின், நெ.1 கட்டுரை ஜெனி·பர் லோ·பஸ் பற்றியது என்பதால் ஆசிரியர் குழு படங்களில் புகுந்து விளையாடியுள்ளார்கள். சேரனின் டூரிங் டாக்கீஸ் கட்டுரை மாத்திரம் நல்ல படங்களோடு வெளியாகியுள்ளது.. மற்ற படி அதுவும் ஒரு சினிமா சம்பந்தப்பட்ட படைப்பே. தமிழருவி மணியனின் கட்டுரைகளோ இன்ன பிற சிறு சிறுகதை/ கட்டுரைகளோ எத்தனை பேர் படிக்கப் போகிறார்கள்.

குஷ்பு சொன்னது சரியா தவறா, அதற்கு திருமா, மருத்துவர் குழுக்கள் செய்வது சரியா தவறா, பார்க் ஹோட்டலில் நடைபெற்றதற்கு லைசென்ஸ் ரத்து செய்தது சரியா தவறா என்றெல்லாம் விவாதிக்கும், போராட்டம் செய்யும் மக்கள் பலரும் தங்கள் வீட்டு வரவேற்பரை மேஜையிலும் ஆனந்த விகடன் இதழை வைத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். விகடனுக்கும் தமிழ் முரசுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது. கடைசிப் பக்கத்தில் (தினமலர் உதவி ஆசிரியர்களை Poach செய்துள்ளார்கள் என கேள்வி) தமிழ் முரசு வெளியிடும் பின்-அப் படங்களுக்கும் (அதுவும் 2 ரூபாய்க்கு சாஷே இலவசம்).. புதன் முதல் -கோவை, சேலத்திலும் தமிழ் முரசு கிடைக்குமாம்) விகடனின் உள்ளடக்கத்திற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் எனக்குப் படவில்லை.

ஷக்தி சிதம்பரத்தின் சிபிராஜ், சத்யராஜ் நடிக்கும் கோவை பிரதர்ஸ் படத்தின் (விகடனில் வெளியாகியுள்ள) ஸ்டில்கள்... ஆபாசம் என்றால் ஆபாசம். இதெல்லாம் இப்ப சாதாரணம் என்றால் சாதாரணம்.

மொத்தத்தில் 8 ரூபாயிலிருந்து ஒரேயடியாக 10 ரூபாய் விலையேற்றியதற்கு உருப்படியாக உள்ளே ஒன்றும் இல்லை. மாதம் ரூ.40/50 அல்லது வருடத்திற்கு ரூ.530 செலவு செய்வது இனிமேல் யோசிக்கவேண்டும். ஆசிரியர் குழு 757 அண்ணா சாலையிலிருந்து புதிய இடத்திற்கு க்ரீன்வேஸ் சாலைக்குச் சென்று பளபள கட்டிடத்தில் அகலப்பாட்டை இணைய இணைப்புடன், பளபள படங்கள் மாத்திரம் போட்டுக் கொண்டிருக்காது என எதிர்பார்த்தால், எம்மை மாதிரியான பல்லாண்டு வாசகர்கள் விகடனுக்கு இனி தேவையில்லை போலிருக்கிறது.


- அலெக்ஸ் பாண்டியன்
17-அக்டோபர்-2005

Wednesday, October 05, 2005

அன்னியர் Vs மண்ணின் மைந்தர் - 2

சென்னைக்கு/தமிழகத்திற்கு தங்கர், குஷ்பு, கராத்தே, பார்க் ஹோட்டல் என்றால் பெங்களூரில் சமீப காலங்களில் அந்நியர் Vs மண்ணின் மைந்தர் மற்றும் போக்குவரத்து, உள்கட்டுமான பிரச்னைகள் பெரிதளவு பேசப்பட்டு வருகின்றன.

வரும் 8ஆம் தேதி, சனிக்கிழமை, பெங்களூர் பேலஸ் மைதானத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் 3D இசை நிகழ்ச்சிக்கு பெரும் விளம்பரங்கள். நிச்சயம் அதில் கன்னடப் பாடல்கள் எதுவும் இருக்கப்போவதில்லை. பெரும்பாலும் இந்தி, தமிழ், தெலுங்குதான் இருக்கக்கூடும்.

சமீபத்தில் நடைபெற்ற இரண்டு விஷயங்கள்.

ஒன்று: சென்ற சனிக்கிழமை IBM கம்பெனியின் ஊழியர்களுக்காக பேலஸ் மைதானத்தில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில், பாடகர்கள் இது பெங்களூர், இங்கு அட்லீஸ்ட் ஓரிரண்டு கன்னடப் பாடலாவது பாடுவோம் என துவங்கியவுடன், ஊழியர் கூட்டத்திலிருந்து கூச்சல் எழுப்பி, கன்னடப்பாடலை நிறுத்தி இந்தி, மற்ற மொழிப்பாடலைப் பாட வைத்துள்ளனர்.

இதையறிந்த கன்னட அமைப்புகள், திங்களன்று காலை IBM கம்பெனியின் முன்பு தர்ணா, போராட்டம், கல் வீச்சு என நடந்தேறியுள்ளது. இதைப் பற்றிய பதிவை தடாகம் (சுருசல்) வலைப்பதிவிலும் காணலாம். IBM கம்பெனி தனது ஊழியர்களுக்கு ஞாயிறு மடல் அனுப்பி, திங்களன்று அதிகாலையிலேயே அலுவலகம் வருமாறும், வாகனங்களை கதவுக்கு அருகில் நிறுத்தாமல், உள்ளே, basementல் நிறுத்துமாறு பணித்து, பெரிய அளவு தாக்குதலிலிருந்து தப்பித்துள்ளது.

இன்னோர் பிரச்னையும் தற்போது மடல்களில் ஓடிக்கொண்டிருக்கிறது (!?) நிமிஷ் அடானி என்பவரை பெங்களூர் ரயில்வே ஸ்டேஷன் டி.டியும், ரயில்வே போலீசாரும் தாக்கிய சம்பவம். இது அநேகமாக கொஞ்சம் பெரிய அளவில் கொண்டு செல்லப்படலாம்.


http://www.ryze.com/posttopic.php?topicid=563043&confid=366http://www.deccanherald.com/deccanherald/oct52005/index2042432005104.asp


இதற்கும் அந்நியர்/ம.மை பிரச்னைக்கும் என்ன சம்பந்தம் என கேட்கலாம். ஆனால் சமீப காலங்களில் கணினித்துறையினர் மீது தாக்குதல், அவர்களின் ATM கார்டைப் பிடுங்கி/திருடி/மிரட்டி பணம் பறித்தல் எல்லாம் நடைபெறுகிறது.. இதற்குக் காரணம் இல்லாதவர் Vs இருப்பவர் என்கிற வகைக்குள் இதனைக் கொண்டுவரலாம் என்றாலும் நடந்த நிகழ்ச்சிகளைக் கவனித்தால் இதில் ஒரு pattern இருப்பது புரியும்.

பெங்களூரின் அந்நியர் Vs மண்ணின் மைந்தர் பிரச்னையின் ஒரு வடிவமாக சமீப காலங்களில் மடல்களில், வாக்குவாதக் களங்களில், இத்தகைய செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. முடிந்த அளவு தமிழ்படுத்திக் கொடுக்கிறேன். ஆனால் எந்த அளவிற்கு குடியேறிகளினால் ஏற்பட்டுள்ள கலாச்சார பாதிப்பால், கன்னடியர்கள் எவ்வளவு தூரம் எண்ணுகிறார்கள் என்பதற்கு இவை சில உதாரணங்கள்.

இதைப் போல மற்ற மாநில மொழிக் காதலர்களும் (!?) அந்தந்த மாநிலங்களில் செய்கிறார்களா என தெரியவில்லை. ஆனால் டெல்லி சென்றால் இந்திதான், தமிழ்நாடு சென்றால் தமிழில் தான் (தங்கிலீஷாக இருந்தாலும்), கேரளம் சென்றால் சேட்டன் மொழிதான் என்றிருக்கையில், பெங்களூரில் மட்டும் மற்றவர்கள் (அந்நியர் ?) இந்த ஊர் மொழியை தெரிந்துகொள்ள மாட்டேன் என பிடிவாதமாக இருப்பது எனக்கு உடன்பாடல்ல. ஒரு ஊரில் வசிக்கிறோம், வாழ்கிறோம், தொழில் செய்கிறோம், பணம் ஈட்டுகிறோம் என்றிருக்கையில், அந்த ஊர் மொழியையும் கற்றுக் கொண்டு ஊரோடு ஒத்து வாழ்வது ஒரு நல்ல பழக்கமே.

(...தொடரும்)

- அலெக்ஸ் பாண்டியன்
05-அக்டோபர்-2005

Monday, October 03, 2005

அன்னியர் Vs மண்ணின் மைந்தர் - 1

என்ன இது அந்நியன் படம் ரிலீஸாகி 100 நாட்களுக்கு அப்புறமும் வலைப்பதிவுகளில் அந்நியன் சமாச்சாரமா என அடுத்த பதிவுக்குத் தாண்டாதீர்கள். இது வேறு அந்நியர் :-)

கடந்த சில மாதங்களாக பெங்களூரில் (கர்நாடகத்தில்) உள்ள கணினி தொழில்நுட்பக் கம்பெனிகள், நவம்பரில் நடைபெறப்போகும் IT.in (முன்பு IT.COM)ல் பங்கு பெறமாட்டோம் என அறிவித்தனர். (தற்போது கொஞ்சம் விட்டுக்கொடுத்துள்ளனர்.)அதற்குக் காரணம் பெங்களூரின் மோசமான சாலை மற்றும் இன்னபிற உள்கட்டுமான (Infrastructure) நிலை தான்.

மழை பெய்தால் நகரமே தத்தளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான கணினித்துறை மக்கள் செல்லும் ITPL, Electronics City போன்ற இடங்களுக்கான வழிகளில் அலுவலகம் செல்ல/வீடு திரும்ப பல மணிநேரங்கள். இந்த நிலையில் தேவ கவுடாவின் நித்திய கண்டம் பூர்ணாயுசு போன்ற மிரட்டல்களில் தரம் சிங் அரசு, எந்த திட்டத்தையும் முனைப்புடன் செயல்படுத்துவதில்லை எனவும், பல மேம்பாலங்கள் 3-4 வருடங்களாக கட்டிமுடிக்கப்படாமலேயே உள்ளது எனவும் கணினித்துறை கம்பெனிகளின் தலைவர்கள் போராட்டத்தை அறிவிக்க, அதற்கு அரசு அமைச்சர்களும் தங்கள் பங்குக்கு பிரச்னையை திசை திருப்ப, "இவ்வளவு கேட்கிறீர்களே.. நீங்கள் என்ன செய்தீர்கள் கர்நாடகத்திற்கு, கர்நாடக மக்களுக்கு ? அங்கு (வட கர்நாடகம்) வெள்ளத்தில் மக்கள் தவிக்கும்போது உதவி ஏதேனும் செய்தீர்களா (சுனாமி சமயத்தில் செய்த மாதிரி) ? அல்லது உங்கள் கம்பெனிகளில் உள்ளூர்காரர்களுக்கு (கன்னடர்களுக்கு) வேலைதான் கொடுக்கிறீர்களா ? பெரு வாரியாக எல்லாரும் உங்கள் கம்பெனிகளில் வெளிமாநிலத்தவர்கள் ? ஏன் கொடுக்க வேண்டும் உங்களுக்கு வசதி ?" என கட்டபொம்மன் பாணியில் அறிக்கைகள்.

தற்போது மண்ணின் மைந்தர்களுக்கு இந்த கணினித்துறை கம்பெனிகள் வேலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என போராட்டம் தொடங்கியுள்ளது.


Kannada activists protesting in front of the IBM Company regarding apathy toward Kannadigas in Bangalore on Saturday.
Photo Courtesy: The New Indian Express


இன்·போஸிஸ், IBM போன்ற கம்பெனிகள் முன்பு 'கன்னடா ரக்ஷண வேதிகே' என்னும் கன்னட தீவிரவாத அமைப்பு தர்ணா தொடங்கியுள்ளது.

உள்ளூர் ஆங்கில தினசரியான டெக்கான் ஹெரால்டில் தலையங்கங்களும், ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியிலும், இதைப் பற்றிய தீவிர விவாதங்கள்.

http://www.viggy.com/forum/topic.asp?TOPIC_ID=1548


ஹொகனேக்கல், காவிரி பிரச்னைகள் போதாதென்று, பிற மாநிலத்தவருக்கு எதிராக துவேஷம் வளர்க்கும் விதமாக Times of India பத்திரிக்கை சில செய்திகளையும் வெளியிட்டு வருகிறது. TOIயின் வாசகர்கள் என்றால் அது பெரும்பாலும் தென்னிந்தியர் அல்லாதோர் தான். அதனால் 2001 வரைக்குமான வெளிமாநில மக்களின் குடியேற்றம் பற்றி கட்டம் கட்டி முதல் பக்கத்தில் வெளியிடும் TOI, வெகு சாமர்த்தியமாக 1991 முதல் 2001 வரை, 1991க்கு முன்பு என எண்கள் வெளியிட்டு, தமிழ்நாடு,ஆந்திரம், கேரளம் இங்கிருந்துதான் அதிக மக்கள் வந்துள்ளனர் என செய்தியை வெளியிடுகிறது.

ஆனால் 2001 முதல் 2005 வரையிலான குடியேறிகளின் எண்கள் கிடைத்தால் அதில் முதலிடம் நிச்சயம் தென்னிந்திய மாநிலங்களாக இருக்காது. அந்த அளவிற்கு வட இந்திய மக்கள் கடந்த 5 வருடங்களில் பெங்களூரில் குவிந்துள்ளனர். இதன் சரியான எண்ணிக்கை கிடைத்தால் நிச்சயம் பகிர்கிறேன்.

TOIயின் இந்த திரித்தல்களுக்கு சில/பல கன்னட அமைப்புகள் வேண்டுமானால் ஏற்று, கலாட்டா செய்யலாமே தவிர, பெரும்பாலான கன்னட மக்களுக்கு, கடந்த 5 ஆண்டுகளில் குடியேறிகள் வந்தது தமிழகத்திலிருந்தா, வடஇந்தியாவிலிருந்தா என நன்றாகத் தெரியும். இந்திக்காரர்களின் வரவால் பெங்களூரின்/கர்நாடக கலாச்சார அமைப்பே மாறியுள்ளது என்பது பல தலையங்கங்களிலும், கட்டுரைகளிலும் எழுதித் தீர்த்துவிட்டார்கள். இதில் தமிழருக்கும் கன்னடருக்கும் மூட்டி விடுவது போல் சில அமைப்புகள் செயல்படுவது சரியல்ல.

More heated arguements
http://www.viggy.com/forum/topic.asp?TOPIC_ID=1071


http://www.viggy.com/forum/topic.asp?TOPIC_ID=1517http://67.18.142.206/deccanherald/discboard/aspBoardDetail.asp?Id=105
இன்·போஸில் உள்ள காண்டீன், செக்யூரிடி, போக்குவரத்திற்காகவது கன்னடர்களைப் பயன்படுத்தவேண்டும் என்று கேட்கும் அளவிற்கு நிலைமை.


இதில் சேம் சைடு கோல் போடும் அமைச்சர்களும் உண்டு

(......தொடரும்)

ஒரு வழியில் பார்த்தால், தமிழருக்கும் கன்னடருக்கும் கலாச்சார, பண்பாட்டுத்துறையில் பல ஒற்றுமைகள்.

- அலெக்ஸ் பாண்டியன்
03-அக்டோபர்-2005

Friday, September 30, 2005

இனியொரு முறை ஏமாறலாமா தமிழர்களே!

முரசொலியில் கலைஞரின், உடன்பிறப்புக்கு எழுதும் கடிதங்களை விரும்பிப் படிப்பதுண்டு - அதில் துள்ளி விளையாடும் தமிழும், பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற விஷயங்களை எடுத்துக் காட்டி நன்றாக வாதம் புரியும் திறமையும், சில சமயம் நகைச்சுவையாகவும் இருக்கும்.

இன்று அவர் எழுதியுள்ள கடிதம் இதோ - தங்கள் வாசிப்பிற்கு.

- அலெக்ஸ் பாண்டியன்
30-Sep-2005
------------------------------------------------------
நன்றி: முரசொலி:
http://www.murasoli.in/2005/kaditham/2k50928k.htm


இனியொரு முறை ஏமாறலாமா.. தமிழர்களே!

உடன்பிறப்பே,

காலையிலே தடையிலாச் சான்றிதழ் (என்.ஓ.சி) கொடுக்க முடியாது என்று கண்டிப்பு - உடனே கேட்க வேண்டிய முறையிலே கேட்டவுடன்; 24 மணி நேரத்திலே “டால்மியா’’ கையிலே தடையிலாச் சான்றிதழ் தஞ்சமடையும் தமாஷா மட்டுமல்ல; வெட்டப்பட்ட மின்சார இணைப்பும் வெகு உபசாரத் தோடு திரும்பத் தரப்படுகிறது - அதன் தொடர் விளைவாக புதிய கட்டிடம் எழுப்பிய இருபது தொழிலாளிகள் இடிந்து விழுந்த கட்டிடத்துக்குள் பிணமாகிப் போகிறார்கள் - இவையெல்லாமே இந்த ராஜ்யத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னால் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற திகிலூட்டும் நிகழ்ச்சிகள். வேகமும் - சோகமும் நிறைந்த இந்த நாடகத்தில் மகாராணியாக வேடமேற்ற மகாபுண்யவதிதான்; “சராசரி மக்களின் வாழ்வாதாரங்களைக் கொள்ளை யடித்து தங்களின் சட்டைப்பைகளை நிரப்பிக் கொள்வதற்காகவோ சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்?’’ என்று கேள்வியை எழுப்பி; “மக்களின் விலா எலும்புகள் மீது எழுப்பப்படும் சேது திட்டம் வெற்றி பெறாது என்றும், அதற்குத் தமிழ்நாட்டில், தனது அரசு உடந்தையாக இருக்காது என்றும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதாக’’ ‘ருத்திர தாண்டவ’மென எண்ணிக் கொண்டு ‘கோமாளிக் கூத்து’ நடத்திக் காட்டியிருக்கிறார்.

இதற்கிடையே சேது திட்டத்துக்கே தடை கோரி உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு - யார் தொடுத்தது என்று சொல்லத் தேவையில்லை - தடை கொடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் சொன்னதைக் கூட “தமிழரின் தந்தி’’ தாராளமாக தலைப்புச் செய்தி யாகக்கூட உள்பக்கத்தில் வெளியிடத் தயங்கி, நோட்டீஸ் கொடுத்த செய்தியை மட்டும் நாட்டுக்குத் தெரிவிக்க முனைந்துள்ள நாகரிகத்தின் உச்ச கட்டம் - மீனவர் பாதிக்கப்படுவர் - மீன் வளம் குறையும் - பயணத் தொலைவு கூடுமே தவிர - குறையாது - அதிகமான கப்பல்கள் போக முடியாது - இப்படியெல்லாம் சேது சமுத்திரத் திட்டப் பணிகளுக்கு எதிராக - சண்டிராணிகள் சதிராடிக் காட்டுகின்றனர். இது பற்றி மத்திய அமைச்சர் தம்பி பாலுவைக் கேட்டால் “உலகில் உள்ள கப்பல்களில் 84 சதவீதம் கப்பல்கள் அந்தக் கால்வாய் வழியாகப் போக முடியும்’’ என்று உறுதியாய்ச் சொல்லுகிறார்.

ஊழல்தான் நடைபெறுமென்றும்; இது உதவாத திட்டமென்றும்; ஊழலிலே ஊறித் திளைத்து - வளர்ப்பு மகனுக்கு நூறு கோடி ரூபாயில் திருமணம் நடத்தி; சர்வலங்கார பூஷிதைகளாக மேனியெங்கும் வைர, வைடூர்யம், முத்து, பவளமென, பூட்டிக் கொண்டு மேரி அண்டனைட்டாகக் காட்சி தந்தவர், சிறுதாவூர் அரண்மனையென்ற பெயரால் சிறிய குடிசை(?) யொன்று கட்டி வாழ்பவர்; பாசாங்கு மொழி - பம்மாத்து மொழி - பாட்டாளிகளை, பாமரர்களை ஏமாற்றும் பசப்பு மொழி பயின்றுள்ளதைக் காட்டிக் கொள்ள; பல ஆண்டுக் காலத் தமிழர்களின் கனவான சேதுக் கால்வாய்த் திட்டத்தைப் பள்ளம் தோண்டிப் புதைத்தாலும் புதைப்பேன் - உள்ளம் குளிர ஏற்க மாட்டேன் என உறுமுகிறாரே இன்று; இந்த உத்தம புத்திரி; இவர் “2001 தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை பொதுத் தேர்தலுக்காக அ.தி.மு.க. சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டம் பற்றி 83ஆம் பக்கம் தொடங்கி, 84 மற்றும் 85ஆம் பக்கங்களில் குறிப்பிட்டிருப்பது என்ன?

இதோ; உடன்பிறப்பே - நீ மட்டும் படித்தால் போதாது, எல்லோருக்கும் படித்துக் காட்டி - எத்தர்களின் பித்தலாட்டத்தை எடுத்துக்காட்டு!

அ.தி.மு.க. 2001 தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டம் பற்றிய வாக்குறுதி வருமாறு :-

“இந்தியத் தீபகற்பத்தைச் சுற்றி இது வரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத் திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கி லிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்லவேண்டுமானால் இலங் கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு தீர்வாக அமை வதுதான் சேது சமுத்திரத் திட்டம். இத் திட்டத்தின்படி ராமேஸ்வரத்திற்கும், இலங் கையின் தலைமன்னார்க்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் அகற்றி ஆழப் படுத்தி கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்.

இத்திட்டம் காலம் காலமாக ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு வருகிறதே தவிர, சரியாக உருப்படியாக உருவாகவில்லை. ஆங்கிலேயர் காலத்தி லிருந்து பேசத் தொடங்கி, நாடு விடுதலை பெற்ற பின் சற்று அதிகமாகப் பேசப்பட்டு, பல்வேறு நிபுணர்கள் குழுக்கள் நியமிக்கப் பட்டு, அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டு, பின் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இத்திட்டத் திற்கு ஒரு உந்துதலை, 1981இல் ஆட்சியில் இருந்த டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசுதான் கொடுத்தது. இருப் பினும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு, இத்திட்டத்திற்கான உரிய கவனத்தையோ முக்கியத்துவத்தையோ கொடுக்கவில்லை. தற்பொழுது ஆட்சியில் இருக்கின்ற பி.ஜெ.பி. - தி.மு.க. கூட்டணி அரசின் பிரதமர் சென்னை வந்தபோது சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்களித்தார். அதற்கு முன் ராமேஸ்வரம் வந்து சென்ற அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரும் இதே பல்லவியைத் தான் பாடினார். ஆனால் நடந்தது என்ன வென்றால், ஏற்கனவே பல முறை ஆய்வு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்யப் போகிறோம் என்றுதான் இப்போதும் சொல்லப்படுகிறதே தவிர, இத்திட்டத்திற்கென தற்போதைய பட் ஜெட்டில் ஒதுக்கீடு எதுவும் செய்யப்பட வில்லை.

சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல; தென் கிழக்கு ஆசிய நாடு களும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும்; வாணிபமும், தொழிலும் பெருகும்; அந்நிய முதலீடு அதிகரிக்கும்; அந்நியச் செலா வணி அதிகம் கிடைக்கும்; கப்பலின் பயணத் தூரம் வெகுவாகக் குறைவதால் எரி பொருளும், பயண நேரமும் மிச்சமாகும்; ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும்; குறிப் பாக, இராமநாதபுரம் போன்ற மிக மிகப் பிற் பட்ட தமிழக தென் பகுதி மக்களின் வாழ்க் கைத் தரம் மேம்படும்; வேலை வாய்ப்பு பெரு கும்; தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும்; சுற்றுலா வளர்ச்சி யடையும்.

இன்னபிற நன்மைகளைத் தர இருக்கும் இத்திட்டத்தின் தேவையை, முக்கியத் துவத்தை உணர்ந்து, நிதி நெருக்கடியை ஒரு சாக்காகக் கூறிக் கொண்டிருக்காமல், உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்க ளுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு வேண்டிய நிதியைத் தேடி இத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஒரு காலக் கெடுவுக்குள் இத்திட்டத்தை நிறைவேற் றும்படி மைய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும்’’


உடன்பிறப்பே, ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி 1981இல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் சேது திட்டத்துக்கான உந்துதல் கொடுத் தது மட்டுமல்ல; சுமார் 150 ஆண்டுக்கு மேலாக எத் தனையோ தலைவர்கள், நிபுணர்கள், வல்லுநர்கள் வலியுறுத்தி; இப்போதுதான் “வாராது வந்த மாமணி யாய் வரப்பிரசாதம்’’ என்பார்களே; அதுபோல வந் துள்ளது - என் செய்வது; எம்.ஜி.ஆரே இனி முதல்வராக இருக்கத் தகுதியில்லை - தன்மீது பொறாமைப் படுகிறார் என்று தன் கைப்படவே அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு கடிதம் எழுதி; அது “மக்கள் குரல்’’ ஏட்டிலேயே வெளிவந்த பிறகும் - மானாபிமானம் பற்றிக் கவலைப்படாத மனித ஜென்மங்கள் சில, தன் முன்னால் மண்டியிட்டுக் கிடப்பதால் ஏற்படும் மமதையன்றோ; நடுநிலையாளராக இருக்க வேண்டியவர்களையும் தடுமாறச் செய்திடும் கெடுமதியை ஏற்படுத்தி மகிழ்கின்றது.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே “ஏற்கனவே பல முறை ஆய்வு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்யப் போகிறோம் என்றுதான் இப்போதும் சொல்லப்படுகிறதே தவிர, இத்திட்டத் திற்கென தற்போதைய பட்ஜெட்டில் ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை’’ என்று 2001ஆம் ஆண்டு இத் திட்டத்திற்காக வடித்த கண்ணீர் உண்மையானதா? அல்லது இப்போது சேது கால்வாய்த் திட்டத்தை முழு மூச்சாக எதிர்க்கிறாரே? இது உண்மையானதா? என்று சிந்தித்தால் சேதுக் கால்வாய்த் திட்டத்தின் மீது ஆத்திரமில்லை, அதைக் கொண்டு வரக் காரணமாக தி.மு.க.வும், மற்ற தோழமைக் கட்சியினரும் இருந்து விட்டார்களே என்ற எரிச்சல்தான் காரணம் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?

2001ஆம் ஆண்டுக்குக் கூடச் செல்ல வேண்டாம். அண்மையில் 25-6-2005ஆம் தேதியன்று ஜெயலலிதா விடுத்த நீண்ட அறிக்கையில் ஓர் இடத்தில் “என்னுடைய வற்புறுத்தலின் பேரில்தான் 1998ஆம் ஆண்டில் இத்திட்டம் ஒரு முன்னுரிமைத் திட்டமாக மேற்கொள்ளப்பட்டு, தொடக்கச் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வுப் பணி தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் 1998ஆம் ஆண்டு மார்ச் திங்களில் ஒப்படைக்கப் பட்டது. இந்நிறுவனத்தின் அறிக்கையும், 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் அளிக்கப்பட்டது. இவ்வாறாக, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நனவாவதை உறுதிப்படுத்துவதற்கு நான் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறேன்’’ என்று பெருமைப் பட்டுக் கொண்டாரே, அப்போது சேது திட்டம் ஏழைகளின் விலா எலும்புகள் மீது கட்டப்படும் திட்டமாக ஜெயலலிதாவிற்கு தெரியவில்லையா?

இது மாத்திரமல்ல; கடந்த ஆண்டு 9-9-2004 அன்று “தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல் திட்டத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை சேர்க்க வைத்தேன்’’ என்றும், 12-9-2004 அன்று “சேது சமுத்திரத் திட்டம் எனது இடையறாத முயற்சிக்குக் கிடைத்த இமாலய வெற்றி’’ என்றும் ஜெயலலிதா பேசினாரே, அப்போது இத்திட்டத்தினால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஜெயலலிதாவின் எண்ணத்தில் உதிக்கவில்லையா?

உடன்பிறப்பே, இந்த விபரங்களையெல்லாம் உனக்குச் சொல்லி; நீயும் நானும் உணர்ந்தால் மட்டும் போதுமா? - உலகத் தமிழர்களுக்கெல்லாம் சொல்லுகிறேன்;

தமிழா;

உன் மாநிலம் வளமாகிட;

வளங்குலுங்கி செழித்திட;

உலக நாடுகளோடு வாணிபம் பெருகிட;

ஒரு திட்டம்;

செகம் புகழும் சேது சமுத்திரத் திட்டம் -

1860இல் ஆங்கிலேய கமாண்டர் டெய்லர்

வகுத்த திட்டம் -

பெரியாரின் பெரு விருப்பம் -

அறிஞர் அண்ணாவின் அருங்கனவு -

பெருந்தலைவர் காமராசரின் பேரவா -

தமிழன் கால்வாய் என ஆதித்தனார் செய்த தவம் -

தம்பி முரசொலி மாறனும் தம்பி வைகோவும்

முழங்கிய முரசம்!

கோசல்ராம் எழுப்பிய ஒலி!

வாஜ்பய் வழங்கிய உறுதி -

சர் ஏ. ராமசாமி முதலியார் குழுவின் பரிந்துரை -

1958இல் சட்டமன்றத்தில்

எதிர் வரிசையிலிருந்து

ஒலித்த எனது குரல் -

அனைத்துக் கட்சியினரும்

ஆதரித்து வரவேற்ற ஒன்று -

வெட்டென மறக்க வேண்டிய கிட்டாத

திட்டம்
என்று ஏங்கிய வேளையில்

திருமதி சோனியா காந்தி தலைமையிலான காங் கிரசும், தி.மு.க. தலைமையிலான தமிழகக் கட்சி களாம் பா.ம.க., ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., முஸ்லீம் லீக் ஆகியவை கொண்ட கூட்டணியும் சிந் தித்துச் செயலாற்றி - பிரதமர் மன்மோகன் சிங் தீவிர ஆய்வுகளுக்குப் பின் வழங்கி, நாம் பெற்றுள்ள சேதுத் திட்டத்தை நிறைவேற்றும் பணி நிறைந்த மனத்துடன் நடைபெறும்போது; நிர்மூலமாக்குவேன் அதனையென; நிர்த்தாட்சண்யமாகப் பேசும் - அவலத்தைக் கண்டீர்களா; அகிலத்தில் இருக்கும் தமிழர்களே! ஆபத்தை உணர்ந்தீர்களா?

மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் மாங் கல்யம் இழக்க வேண்டும் என்று எண்ணுகிற மாமி யார் எங்கேயோ - எப்போதோ ஒருவரைத் தான் காண முடியும்.

இங்கோ; இப்போதே - தி.மு.க. இருக்கின்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சேதுத் திட்டம் நின்றால் போதும்; தமிழ்நாடு எக்கேடோ கெட்டுப் போகட்டும் என எண்ணுகிறவர் இருக்கிறாரே; இவரை நம்பி இனி யொருமுறை ஏமாறலாமா தமிழர்களே?


அன்புள்ள,

மு.க.

நன்றி: முரசொலி:
http://www.murasoli.in/2005/kaditham/2k50928k.htm

Monday, September 12, 2005

சின்ன மாமியே.. உன் சின்ன மகளெங்கே..?

எழுபதுகளின் கடைசியிலும், எண்பதுகளின் ஆரம்பத்திலும், இலங்கை வானொலியில் ஒலிபரப்பான பிரபலமான பல நிகழ்ச்சிகள் உண்டு. இன்றைய தமிழ் தொலைக்காட்சி மற்றும் பண்பலை வானொலிகளுக்கு இலங்கை தமிழ் வானொலியே முன்னோடி என்றால் மிகையில்லை.

ஒலிச்சித்திரம் (அரங்கேற்றம், அந்தமான் காதலி, லோரி டிரைவர் (ரோ)ஜாக்கண்ணு, கவரிமான், பைலட் பிரேம்நாத், கௌரவம் எல்லாம் ஞாபகம் வருகிறதா ?), இசை விருந்து, பொங்கும் பூபுனல், நகைச்சுவை விருந்து (மதியம் 1.30/1.45க்கு - பெரும்பாலும் கே.ஏ.தங்கவேலு -கல்யாணப்பரிசு, அறிவாளி, ஹிட்லர் உமாநாத் (இந்தப் பக்கம் சைபர் கிளாஸுனு கட்டியிருப்பாங்க..!), இந்தியன் வங்கி(பின்னர் இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி) பாடல் வரிசை, பாட்டுக்குப் பாட்டு.. பேட்டிகள் என கன ஜோராய் இருக்கும்.

இவை தவிர பொப் இசைப் பாடல்களும் ஒலிபரப்பாகும். இதில் மிகப் பிரபலமான ஒரு பாடல் பற்றி சுமார் 6- 7 வருடங்களுக்கு முன்னர் தமிழ்.நெட்டில் உரையாடியபோது பெயரிலி எடுத்தளித்த ' சின்ன மாமியே' பாடலின் வரிவடிவம் இதோ..!
நன்றி கனா.ரனா.

>சின்ன மாமியே.. உன் சின்ன மகளெங்கே..?
> பள்ளிக்குச் சென்றாளா..? படிக்கச் சென்றாளா..?
>
>வாடா மருமகா.. என் அளகு மன்மதா..
> பள்ளிக்குத் தான் சென்றாள்.. படிக்கத்தான் சென்றாள்..
> ...
> ...
> ...
>(மீதி வரிகளை இந்தப் பாடல் தெரிந்த நண்பர்கள் கூறவும்..)
>
>நான் மிகவும் ரசித்த பாடல் இது.

- அலெக்ஸ் பாண்டியன்
12-Sep-2005

கனா.ரனா எழுதியது .:::::::::::::::::::::::::::::::

எனக்கு சரியாகத் தெரியாது; என் வீட்டில் இது கேட்பதும் ஆங்கிலப்படம் பார்ப்பதும் சீட்டுக்கட்டு எனப்படும் cards விளையாடுவதும் இன்னும் ஒரு சரியான கன்னிக்கு வாழ்க்கைப்படாத ஆண்கன்னன் (ஒத்த ஓட்டைக்குடையே இல்லை அதற்குள்ளே கொடை) செய்கிறவேலை இல்லை என்று தடை இருந்ததால், விளையும் பயிர் முளையிலெயே சரியாக கல்வி நீர் பாய்ச்சப்பட்டாமல், விளைச்சல் சரியில்லை அதனால், முழுமையாக சொற்கள் இருக்காமல் மன வருத்தப்படுவதில்லை. (அந்த அளவுக்கு(?)=இவை கருத்தான பாடல்கள் அல்ல; ஆனால், துள்ளல் துள்ளல்தான்)

சின்ன மாமியே.. உன் சின்ன மகளெங்கே..?
பள்ளிக்குச் சென்றாளோ..? படிக்கச் சென்றாளோ..?

வாடா மருமகா.. என் அழகு மன்மதா..
பள்ளிக்குத் தான் சென்றாள்.. படிக்கத்தான் சென்றாள்..

ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை அங்கே படிக்கவிட்டுக் கெடாதே
ஊர் சுத்தும் பொடியளெல்லாம் கன்னியரைக் கண்டவுடன்
கண்ணடிக்கும் காலமல்லவோ?

ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள் வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே
ஒழுக்கமில்லாக் கன்னியென்றா நினைத்து விட்டாய் என் மகளை
இடுப்பொடியத் தந்திடுவேனே நான்

ஏணனை மாமி மேலே மேலே துள்ளூறியே
பாரணை மாமி படுகுழியில் தள்ளுறியே
தேனெணை மாமி அவளெனக்கு
தெவிட்டாத சுகமெநக்கு;
பாரணை மாமி கட்டுகிறேன் தாலியே. (சின்ன மாமியே)

================================================================
நன்றி கனா.ரனா.

More writeup on this song at:
http://www.dhool.com/sotd2/491.html

Friday, September 09, 2005

கார் லைசென்ஸ் - எல்லே சுவாமிநாதன்

சரியாக ஆறு வருடங்கள் முன்பு, 8 Sep 1999 அன்று எல்லே சுவாமிநாதன் தமிழ்.இணையத்தில் பதிந்த ஒரு படைப்பு - தமிழ் மணம் வலைப்பதிவு வாசகர்களுக்காக. நன்றி: தமிழ்.நெட் மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் சுவாமிநாதன்.

கார் லைசென்ஸ்
=================
காட்சி - 1

அமெரிக்காவில் ஒரு நகரம். சீனுவாசனும், மனைவி சீதாவும் அமர்ந்திருக்கிறார்கள்.


சீனு: ரகு, டிபன் சாப்பிட்டாச்சா? வரச்சொல்லு. காரை எடுத்திண்டு ஓட்டிப் பாக்கட்டும். நல்லா ஓட்டறான். என்ன இருந்தாலும் ஆம்பிளயில்லயா? என் டிரெய்னிங் வேற.

சீதா: பிள்ளை ரகுவுக்கு சொல்லித்தர மாதிரி பொண்ணு பானுவுக்கும் சொல்லிக்குடுங்க. அவளும் கத்துக்கிட்டா..

சீனு: என்ன, வெளயாடுரியா. அவளுக்கு எதுக்கு இப்ப கார். 17 வயசு பெண் குழந்தை. எங்கயாவது இடிச்சு கை காலுல பட்டுதுன்னா. நீ இந்த ஆசய அவளுக்கு குடுக்காதே.

சீதா: ரகுவுக்கு அவ ஒரு வயசுதானெ சின்னவ. இங்க ஆண், பெண் எல்லாரும் கார் ஓட்ட வேண்டியிருக்கு. நீங்கதான் அதிசயமா பொண்பெத்த மாதிரி. நான் ஓட்டலியா? நீங்க கத்துக்குடுக்க மாட்டேன்னதும் நானே டிரைவிங் ஸ்கூலுக்குப்போய் கத்துக்கலியா?

சீனு: ஒன் கதய விடு. அவ எங்க போகணும்னாலும் நான் அழச்சிண்டு போறேன்.

சீதா: நாளக்கி அவ வேலைக்குப்போனா, நீங்க பின்னாலயே போயி கொண்டுவிட்டு அழச்சிண்டு வரப்போறீங்களா? ரகுவுக்கு மட்டும் ஏன் சொல்லித்தரீங்க?

சீனு: அவன் ஆம்பிளை. நாலு எடத்துக்குப்போகணும். கார் ஓட்டத் தெரியாம நான் அவனை மடில கட்டிண்டு போகமுடியுமா? பானுவுக்கு கார் ஓட்டத் தெரியவாண்டாம். கார் ஓட்டத்தெரிஞ்ச பையனா பாத்து கல்யாணம் பண்ணிடலாம்.

சீதா: அவ ஸ்கூல்ல சினேகிதியெல்லாம் கார் ஓட்டராங்களாம்.

சீனு: ஸ்கூல்ல நிறுத்த எடமில்லாம பத்து தெரு தள்ளி நிறுத்திட்டு நடந்து போறாங்க. இதுக்கு வீட்டுலேருந்து நடந்து போகலாமில்ல. எனக்கும் கார் இருக்குனு காட்டிக்கவா ஸ்கூலுக்கு கார் எடுத்திட்டுப்போறது?

சீதா: ஒங்களத் திருத்தவே முடியாது.

சீனு: நான் இரண்டு வாரம் சிகாகோவுக்கு மீட்டிங்குக்கு போறேன். எங்க போனாலும் நீ ரகுவை ஓட்ட வச்சு பக்கத்துல ஒக்காந்துக்க. அவன் நல்லா ஓட்டறான். இருந்தாலும் இன்னும் ரெண்டு வாரம் ஓட்டரது நல்லது. நான் வந்தப்பறம் டெஸ்டுக்கு போகலாம்.

காட்சி -2
=============
மூன்று வாரம் கழிந்து ஒரு நாள். கார் லைசென்ஸ் பெறுமிடம். கார்கள் வரிசையாக இருக்கின்றன.
பெஞ்சில் சீனுவும் ரகுவும். அருகில் பானு.


சீனு: ரகு சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். நீ நல்லா ஓட்டறே. லைசென்ஸ் ஈசியா கெடைக்கும். லிஸ்டுல பாத்தேன். அதிர்ஷ்டவசமா இன்ஸ்பெக்டர் ஒரு தமிழ் ஆளு. குட் லக்.

(ரகு போகிறான்)

பானு: அப்பா. எனக்கும் இன்னிக்கு டிரைவிங் டெஸ்ட் இருக்கு. நீ ஊருக்கு போனப்போ அம்மா எனக்கு சொல்லிக்குடுத்தாங்க.

சீனு: பானு. இதப்பாரு, ஒங்க அம்மா பைத்தியக்காரத்தனமா ஒன்னை என்னோட அனுப்பிட்டா. ரகு என்னோட ஆறு மாசம் டிரெய்னிங்க் எடுத்தான். நல்லா ஓட்டறான். இப்ப டெஸ்டுக்கு போறான். நான் சிகாகோக்கு போயிருக்கரச்சே ஒங்க அம்மாவோட நீ ஒரு வாரம் ஓட்டியிருக்கே. இத வெச்சிண்டு டெஸ்டுக்கு போனா பெயிலாயிடுவெ. ஒண்ணு செய்வம். நான் ஒனக்கு ஒரு ஆறு மாசம், இல்ல ஒரு வருஷம் கார் ஓட்ட பழக்கரேன். அப்புறம் வரலாம் என்ன?

பானு: இல்லப்பா. வந்தாச்சு. நான் டெஸ்ட் எடுத்துக்கறேன். பெயிலானா பரவாயில்ல. மறுபடியும் வரலாம்.

சீனு: ஒங்கம்மா மாதிரி ஒனக்கு பிடிவாதம். அட, ரகு வந்துட்டான் பாரு. வாடா, என்ன போன சுருக்குல வந்துட்ட, பாஸா.. ஐ, நோ, யு ஆர் ஸ்மார்ட்.

ரகு: இல்லப்பா, வண்டி எடுக்கரச்ச குறுக்க ஒரு கெழவன் கையில ஒரு செகப்பு வெள்ளை போட்ட கைத்தடியோட ரோடை தாண்டினான். அவன் வரதுகுள்ள போயிடணும்னு வேகமா அமுக்கினேன். அது தப்பு, ஆக்சிடன்ட் பண்ணப்பாத்தேன்னு உடனே பெயில் பண்ணிட்டார். நான் வீட்டுக்கு திரும்ப காரை ஓட்டக்கூடாதாம். இன்னொருத்தர்தான் ஓட்டணுமாம். ஒங்க கார் லைசென்ச குடுங்க. அவர் பாக்கணும்மாம். காட்டிட்டு வரேன்.

(வாங்கிப்போகிறான்)

சீதா: அப்பா, என் முறை வந்துடுத்து. நான் போறேன்.

சீனு: பத்திரம். பெயிலாயிட்டா வருத்தப்படாதே. நான் கத்துண்ட போது மூணு தடவை பெயிலாயி அப்புறமா பாஸ் பண்ணினேன். Failure is the stepping stone to success. இதல்லாம் man's sport. பொம்பிளங்களுக்கு அனாவசியம். ஏதோ ஆசைப்படறே. போயிட்டு வா.

(பானு போகிறாள், ரகு வருகிறான்)

ரகு: அப்பா. ஒங்க லைசென்ஸ் முடிஞ்சு போய் பத்து நாளாகுது. சரியான சமயத்துல புதுப்பிக்காததனாலே மறுபடியும் டெஸ்ட் எடுத்துக்கணுமாம். நீங்க இப்பவே டெஸ்ட் எடுத்துக்கிறீங்களான்னு கேக்கச்சொன்னாரு.

சீனு: எல்லாம் ஒங்க அம்மா செஞ்ச தப்பு. மனுசனுக்கு நிம்மதியே இல்ல. லைசென்ஸ் முடியப்போகுதுன்னு ஞாபகப்படுத்த வாண்டாம். எல்லாம் நானே செய்ய வேண்டியிருக்கு. நீ இங்க இரு. பானு வேற டெஸ்டுக்கு போயிருக்கா. அவ வந்தவுடனெ பாஸ் பண்ணிட்டயான்னு கேட்டு அழ விடாதே. அவ காரு விடலேன்னு யாரு அழுதா? நான் டெஸ்டுக்கு போயிட்டு
வரேன். It is a very simple job. Watch me drive.

(சீனு போய்விட்டு அரைமணி கழித்து வருகிறார்).

சீனு: என்னடா பானு எங்க.

ரகு: இன்னும் வரலைப்பா. நீங்க பாஸ் பண்ணிட்டிங்களா.

சீனு: ஒங்கிட்ட சில்லரையா இருக்கா. ஒரு போன் பண்ணணும்.

ரகு: இருக்கு. யாருக்கு போன்?

சீனு: எல்லாம் ஒங்கம்மாவுக்குதான். என்னை டெஸ்டுல பெயில் பண்ணிட்டான்டா. நான் ஓட்டறதே சரியில்லயாம். கண்ணாடிய உபயோகிக்கலயாம். பின்னால சரியா திரும்பி பாக்கலயாம். ரொம்ப வேகமா ஓட்டறேனாம். கோட்டுக்கு முன்னால நிறுத்தலயாம். பாதசாரிகளை மதிக்கலயாம். ஆக்சிடென்ட் பன்ணப்பாத்தேனாம். முப்பது வருஷமா இங்க கார் ஓட்டறேண்டா. கத்துக்குட்டியெல்லாம் இன்ஸ்பெக்டரா போட்டா ரூலை படிச்சிண்டு சாகறான். அட, நம்ம ஊர் ஆளுன்னுன்னாவது பாஸ் போட கூடாதா? விலாவரியா சுழிச்சு சுழிச்சு பெயில் மார்க் போட்டு மானத்தை வாங்கறான். தமிழந்தான் தமிழனுக்கு எதிரி, எங்க போனாலும்.

ரகு: அப்பா, அவரு தமிழரா இருந்தா என்ன தெலுங்கரா இருந்தா என்ன? சட்டப்படிதானே செஞ்சாரு.

சீனு: ஆமாண்டா, பெரிய சட்டம். நான் இந்த ஊர்ல கார் லைசென்ஸ் எடுத்தப்ப இந்த இன்ஸ்பெக்டர் பய பொறந்திருக்க கூட மாட்டான். இப்ப பாரு, நான் மறுபடியும் புஸ்தகம் படிச்சு பரிச்சை எழுதி, ஓட்ட இன்னொரு பரிச்சை எழுதி... இன்னிக்கி நான் காரை எடுக்க முடியாது. அதான் ஒங்கம்மாவை வந்து நம்மை அழச்சிட்டு போக போன் போடணும். அதோ பானு வராளே, அழுதுகிட்டு வரமாதிரி இருக்கு. நீ ஒண்ணும் கேக்காத.

சீனு: பானு ஏம்மா அழறே, கண்ணுல தண்ணி. இது அல்ப விஷயம். காரு ஓட்டரதுல பெயிலாரது சகஜம். நூத்துக்கு அஞ்சுபேர்தான் முதல் தடவை பாஸ் பண்றாங்கன்னு புள்ளி விவரம் சொல்லுது. ஏதோ ஒங்கம்மா மொதல் தடவை குருட்டாம் போக்குல பாஸ் பண்ணிட்டான்னா, எல்லாருக்கும் அது மாதிரி கிடைக்குமா? இப்ப பாரு,ஆறு மாசம் என்னைப் பொறுத்தவரையில என்ன மாதிரி நல்லாவே ஓட்டினான் ஒங்கண்ணன், இங்க பெயிலாயிட்டான். பெரிய அனுபவசாலின்னு பேரு, நானெ பெயிலாயிட்டேன். இப்ப ஒங்க அம்மா வந்து நம்மை வீட்டுக்கு அழச்சிட்டு போவா.

பானு: ஏன் அம்மா வரணும்?

ரகு: நான் பெயிலாயிட்டேன், அப்பாவும் பெயில், நீயும் பெயில் யாருகிட்டயும் லைசென்ஸ் இல்ல. அம்மாக்குதானே லைசென்ஸ் இருக்கு, அதான் அம்மா வரணும் வீட்டுலேருந்து.

பானு: யாரு சொன்னா நா பெயில்னு. ஒரு தப்பு கூட இல்ல. டக்குனு பாஸாயிட்டேன். உடனே லைசென்ஸ் வேணுமின்னா உள்ள போனா போட்டோ எடுத்து கையில கொடுத்திடுவாங்கன்னு சொன்னாங்க. கையில வாங்கிட்டு வரேன். அதான் எனக்கு லேட்டு.
இதோ பாரு லைசென்ஸ¤. போட்டோ இன்னும் கொஞ்சம் அழகா வந்திருக்கலாம். சரியான மேக்கப் கையில இல்ல.

சீனு: அப்படியா, வாழ்த்துக்கள். பின்ன ஏன் அழுத? கண்ணுல தண்ணி வந்துதே.

பானு: அம்மா இப்ப பக்கத்துல இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணித்து.. அவங்கதான் எனக்கு தைரியம் கொடுத்தாங்க.. ரகுவும் அப்பாவும் நீ பொண்ணுன்னு மட்டம் தட்டுனாலும் தளராம தைரியமா பரிட்சைக்கு போ. ஒருத்தர் மட்டம்னு சொன்னதனால நம்ம மட்ட மாயிடமாட்டோம். ஜெயிச்சுக்காட்டணும்னு சொன்னாங்க.

ரகு: லைசென்ஸ் வாங்கிட்டயே. எனக்குதான் அதிர்ஷ்டமில்ல. என் பிரண்டு சொன்னான், பக்கத்து டவுன்ல போனா சுலபமா பாஸ் பண்ணலாமாம். எனக்கு வாச்ச இன்ஸ்பெக்டர் சரியில்ல. நான் டெஸ்ட் எடுக்கரச்சே கெழவனெல்லாம் ரோட்ல வந்து என் கழுத்தை அறக்கறான்.

சீனு: தப்பா நெனச்சிக்காதே பானு. நீ பொண் இல்லியா. ஏதாவது ஆயிடுமோன்னு ஒரு பயம். பாசம். அதுனால ஒனக்கு எதுக்கு இதெல்லாம்னு... ஒங்க அம்மாதான் பிடிவாதமா..

பானு: இந்த விஷயங்கள்ல பொண்ணு ஆணுன்னு வித்தியாசம் இல்ல. எல்லாரும் எல்லாம் கத்துக்க வேண்டியிருக்கு. சமீபத்துல படிச்சேன். மனுசங்க மூணு டைப்பாம், accuser, excuser and chooser னு.. அப்பா, நீங்க ஒரு Accuser, எதுக்கெடுத்தாலும் யாரையாவது குற்றம் சாட்டறீங்க. ரகு, ஒரு Excuser. சரியா வரலேன்னா சாக்கு சொல்லிக்கிட்டு இருக்கான். நானாவது அம்மா மாதிரி Chooserஆ இருக்கப்போறேன். அப்பதான் கெடச்ச வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெறலாம். சரி வாங்க, காருல ஏறுங்க. இப்ப நான் ஓட்டப்போறேன்.
அப்பா, ஒங்களுக்கு பயமா இருந்தா பின் சீட்டுல ஒக்காருங்க. ரகு முன்னால பக்கத்துல ஒக்காரு. ஒங்க ரெண்டுபேருக்கும் எப்படி ஜாக்கிரதயா நல்லா ஓட்டரதுன்னு சொல்லித் தரேன், அம்மா எனக்கு சொல்லிக்குடுத்த மாதிரி.

(சீனுவாசன் ஏதோ சொல்ல நினைத்து, பிறகு வாயைப்பொத்திக்கொண்டு காரில் ஏறுகிறார்.).

====================================

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

Monday, August 29, 2005

இங்கிலாந்தின் வெற்றி - திரில்லர் - 2

மற்றுமோர் ஞாயிறு இரவு. மற்றுமோர் ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட்போட்டி. மற்றுமோர் திரில்லர் ஆட்டம். முடிவு: இங்கிலாந்தின் வெற்றி. தொடரை 2-1 என இங்கிலாந்து முந்தியுள்ளது. அடுத்த ஆட்டம் ஓவல் மைதானத்தில்.

நீங்கள் உண்மையான கிரிக்கெட் ரசிகராக இருக்கும் பட்சத்தில் தவறவிடக்கூடாத டெஸ்ட் போட்டிகளாக இந்த ஆஷஸ் தொடர் மிளிருகிறது. ஒவ்வொரு போட்டியும் திரில்லர். ஆஸி அணிக்கு ஈடுகொடுத்து இங்கிலாந்து ஆடி, ஆஸி அணியையே திணறடித்துவிட்டது.மக்ராத் இல்லாத ஆஸி அணி திணறும் என்றே முந்தைய பதிவுகளில் எழுதியிருந்தேன். அதே கதை தான் இந்தப் போட்டியிலும். இருந்தாலும் ஜெயிப்பதற்கு 129 ரன்களே வேண்டியிருந்த நிலையில், இங்கிலாந்து தட்டுத் தடுமாறி 7 விக்கெட்டுகளை இழந்து எங்கே தோற்றுவிடுவார்களோ என ரசிகர்களின் இதயத்தை எகிற வைத்தபடி விளையாடினர். சும்மா சொல்லக்கூடாது. ஷேன் வார்னே 600+ விக்கெட்டுகளுக்கு அப்புறமும் சிம்ம சொப்பனமாக பந்து வீசுகிறார். பிரெட் லீயும் பயங்கர வெறியுடன் நேற்று பந்து வீசினார். ஆஸி அணியின் போராட்ட குணம் இன்னும் மிச்சமுள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது என்றாலும், ஆஸி அணியின் பல ஜாம்பவான்களுக்கு வயதாகிவிட்டது என்பதால் ஆஸி அணியின் முதன்மை இடம் ஆட்டம் கண்டுவிட்டது. இனிமேல் புது இளரத்தம் வந்து அணியைப் பலப்படுத்தினால் தான் அவ்வணிக்கு சிறப்பு. பார்க்கலாம்.

சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி அணியை Follow-on ஆடச் செய்ததே ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது என்றால் அந்த அணியின் கடந்த 15 ஆண்டு ஆட்டத்தின் சிறப்பு புரியும் என நினைக்கிறேன்.

இங்கிலாந்து அணியின் ·பிளிண்டா·ப் முதல் இன்னிங்க்ஸில் சதம் எடுத்து சிறப்பாக ஆடினார். பந்தும் நன்றாக வீசி - ஆட்ட நாயகனாக தேர்வானார். இவர் இன்னோர் இயான் போதம் போல வளர்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை.


சுட்டிகள்/photos: நன்றி Rediff.com
http://in.rediff.com/cricket/2005/aug/28eng.htm


http://in.rediff.com/cricket/2005/aug/29ashes.htm


http://in.rediff.com/cricket/2005/aug/29ashes.htm- அலெக்ஸ் பாண்டியன்
29-ஆகஸ்ட்-2005

பி.கு. 'Bond... Shane Bond' என்னும் புயலுக்கு முன் தான் என்றில்லை மிகவும் மோசமான நிலையிலுள்ள ஜிம்பாப்வே அணியின் மூத்த, வயதான பௌலர் ஹீத் ஸ்ட்ரீக்கிடமும் நாங்கள் தடுமாறித்தான் விளையாடுவோம் அடுத்த விளம்பரப் படத்திற்கு கால்ஷீட் கொடுக்கணும் என்ற நிலையில் ஆடிக்கொண்டிருக்கும் தற்போதைய இந்திய அணியின் ஆட்டத்தை விட்டு விட்டு ஆஷஸ் தொடரை கவனிக்குமாறு உண்மையான கிரிக்கெட் ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

Friday, August 19, 2005

விகடன், குமுதம் பத்திரிக்கைகளுக்கு 'A' ?

தொப்புள் படங்களையும், 13 இஞ்ச் ரஸ்புடின்களையும் செய்தியாக வெளியிடும் குமுதம், விகடன் போன்ற பத்திரிக்கைகளும் 'ஏ' என்று முத்திரை குத்தப்படக்கூடிய ஒரு நல்ல விஷயம் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

டைம்ஸ் ஆ·ப் இண்டியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகள் பல நகரங்களிலும் கொடுக்கும் 4 பக்க இணைப்பில் ஆபாசமான புகைப்படங்களையும் செய்திகளையும் வெளியிடுவதாகவும், இதனால் குடும்பத்தில் பெரியவர்கள், சிறுவர்களுக்கு இப்பத்திரிக்கைகள் ஏற்றதல்ல.. அடல்ட் கண்டெண்ட் இருப்பதாக அவர்களே 'ஏ' சர்டிபிகேட் போன்ற ஒரு விதத்தில் முத்திரை குத்தப்பட வேண்டும் என்று ஒரு PIL (Public Interest Litigation) போடப்பட்டு சுப்ரீம் கோர்டின் 3 பெஞ்ச் நீதிபதிகளும் அதை ஒரு வழக்காக எடுத்துக் கொண்டுள்ளனர். http://www.deccanherald.com/deccanherald/aug192005/index2030402005818.asp

TOI, HT போன்றே தமிழிலும் விகடனும் (நம்.1 அல்லவா), குமுதமும் குடும்பத்தினர் படிக்கும் பத்திரிக்கை அல்ல, இளைஞர்கள், வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க என முத்திரை குத்த வேண்டி வந்தால் விகடன் - இணை, துணை, முதல், பெரிய, பொறுப்பாசிரியர்கள் என்ன கட்டுரை எழுதுவார்கள் ? நமீதா படங்கள் இல்லாமல் பத்திரிக்கை விற்குமா ?

அப்படியாவது விகடன், குமுதம் கொஞ்சம் மாறி - சத்தான நல்ல விஷயங்களையும், கதை கட்டுரைகளையும் கொடுக்க வேண்டி வந்தால் நல்லதே. மற்றபடி TOI, HT எல்லாம் தலைப்பைப் பார்த்துவிட்டு தூர ஒதுக்க வேண்டிய பத்திரிக்கைகளே. ஆனானப்பட்ட 'த ஹிண்டு'வே இப்போதெல்லாம் பெங்களூர் இணைப்பில் இம்மாதிரி விஷயம் தொட்ட செய்திகளையும் வெளியிடுகிறது.


http://www.hindu.com/mp/2005/07/25/stories/2005072502180400.htm
Photo courtesy: The Hindu


http://www.hindu.com/mp/2005/07/26/stories/2005072601180100.htm


வலைப்பதிவர்கள் எண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன :-)

- அலெக்ஸ் பாண்டியன்
19-ஆகஸ்ட்-2005

Tuesday, August 16, 2005

பாண்டிங்கின் அபார ஆட்டம்

இந்தப் பதிவுக்குத் தலைப்பு பாண்டிங்கின் அபார ஆட்டம் அல்லது இங்கிலாந்தின் வெற்றி - 2 எதைக் கொடுக்கலாம் என ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை நிச்சயிக்கவிடாத ஒரு மற்றுமோர் சுவாரசியாமான ஆஷஸ் டெஸ்ட் போட்டி.

நேற்று முடிவடைந்த மான்செஸ்டர் - Old Trafford - டெஸ்ட் மாட்சில், இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியும் கடைசி வரை நீயா நானா என போட்டி போட்டு ஆடினர்.படங்கள், செய்திக்கு நன்றி: http://www.rediff.com

ஒரு அணியின் தலைவர் எவ்வாறு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஆஸி அணித்தலைவர் ரிக்கி பாண்டிங்க் அபாரமாக ஆடி 156 ரன்கள் எடுத்து அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றினார். வழக்கம் போலவே ஆஸி அணியின் கடை ஆட்டக்காரர்கள் மிகுந்த பொறுப்புடனும், பொறுமையுடனும் ஆடி - அணியைக் காப்பாற்றினர் - ஷேன் வார்னே, ப்ரெட் லீ மற்றும் மக்ராத் சிறப்பான ஆட்டம்.

வெற்றி பெற 423 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் ஆட்டத்தைத் துவங்கிய ஆஸி அணி - நாலாவது இன்னிங்க்ஸில், 5ஆம் நாள் ஆட்டத்தில், அதுவும் பிட்ச்சில் பல புண்பட்ட சுவடுகள் ஏற்பட்ட நிலையில், பாண்டிங்கின் Captain's knock மிக உயர்ந்த தரத்துடையது. Flintoffஉம் சைமன் ஜோன்ஸ், மற்றும் ஹார்மிசன் வீசும் பந்துகளை தன்னுடைய மட்டையின் நடுவில் வாங்கி, அவ்வப்போது சிறப்பான ஷாட்களை ஆடி, கடைநிலை ஆட்டக்காரரின் தடுமாற்றங்களைக் காப்பாற்றி, அணித் தலைவர் என்ற பொறுப்புக்கு இலக்கணமாக விளையாடினார் என்றால் மிகையல்ல.

ஆஸி அணியில் தலைவர் பொறுப்பில் வரும் பலரும் இத்தகைய பொறுப்பான ஆட்டத்தை பலமுறை ஆடியுள்ளனர். ஆலன் பார்டர், மார்க் டெய்லர், ஸ்டீவ் வா, தற்போது பாண்டிங். இவர்களுக்கு ஈடு கொடுத்து அணியை பலமுறை காப்பாற்றியதும் ஷேன் வார்னே, மக்ராத் போன்ற பந்து வீச்சாளர்கள் தான்.

ஷேன் வார்னே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக ஒருவர் 600 விக்கெட் எடுத்ததும் இந்த டெஸ்டில் தான்.

இங்கிலாந்து அணியும் கடைசி பந்து வரை போராடி, பின் ஆட்டம் டிரா ஆனது. தொடர் 1-1 சமநிலையில். இங்கிலாந்து அணித்தலைவர் மைக்கேல் வான்னும் இந்த டெஸ்டில் சதம் அடித்தும், தன்னுடைய அணியின் பவுலர்களை நல்ல முறையில் உபயோகித்தும் வெற்றியின் விளிம்பிற்கு எடுத்துச் சென்றார். சில வீச்சாளர்கள் கடைசி 30 ஓவர்களில், பல பந்துகளை வெளியில் வீசியதால், கொஞ்சம் வேஸ்ட் ஆன தோற்றம் இருந்தாலும், மொத்தத்தில் இன்னோர் மிகவும் சுவாரசியமான டெஸ்ட் மாட்ச். அதுவும் கடைசி 20 ஓவர்கள் மிகவும் த்ரில்லிங்.

விரிவான ஸ்கோருக்கு இங்கே

http://in.rediff.com/cricket/2005/aug/15pont.htm- அலெக்ஸ் பாண்டியன்
16-ஆகஸ்ட்-2005

பி.கு: இந்திய அணியின் தலைவர்கள் இந்த மாதிரியெல்லாம் ஆடி டெஸ்ட் மாட்சில் அணிக்கு பெருமை சேர்த்திருக்கிறார்களா (சமீப காலங்களில்..) என்று கேட்டால் - இங்கே க்ளிக்கவும்.

Monday, August 08, 2005

இங்கிலாந்தின் வெற்றி..!

நேற்று எட்ஜ்பாஸ்டன் - பிர்மிங்ஹாமில் முடிவடைந்த ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் மாட்ச் பார்க்காதவர்கள் ஒரு மிகச் சிறப்பான டெஸ்ட்போட்டியை பார்க்க இழந்தார்கள் என்றே கூறவேண்டும். 2 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து டெஸ்டை வென்றுள்ளது. தொடர் 1-1 சமநிலையில்.


Photo courtesy: Rediff.com

இங்கிலாந்து (சமீபகாலங்களில்) முன்னெப்போதுமில்லா ஒரு முனைப்புடன் விளையாடி இந்த போட்டியை ஜெயித்தது. 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பின்பு, வெற்றியை சுலபமாக அடைந்திருக்கவேண்டிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவின் கடைசி விக்கெட் ஜோடியான காஸ்ப்ரோவிஸ், ப்ரெட் லீ இருவரையும் 50க்குமேல் ரன் குவிக்கவிட்டது கொஞ்சம் ஓவராகவே பட்டது. இத்தனைக்கும் ப்ரெட் லீயோ காஸ்பரோவிஸ்ஸோ பெரிதாக நின்று ஆடி, ரன் குவித்தவர்கள் அல்ல (மக்ராத் மற்றும் ஷேன் வார்ன் பலமுறை ஆஸி அணிக்கு இது மாதிரி விளையாடியுள்ளனர்.. நேற்றும் வார்னே சிறப்பாக விளையாடி பிறகு ஹிட் விக்கெட்டில் அவுட் ஆனார்.)


Photo Courtesy: Crickinfo

ஜெயிப்பதற்கு 50 ரன்கள் தேவை - இருப்பதோ ஒரு விக்கெட் என்ற நிலையில், ஆஸி அணி எடுத்த ஒவ்வொரு ரன்னும், பார்வையாளர்கள் (இங்கிலாந்து ஆதரவாளர்கள்) வயிற்றில் புளியைக் கரைத்தது. இதில் பலமுறை 4 ரன்கள். 20க்கும் குறைவாக இலக்கு வந்தபோது சைமன் ஜோன்ஸ் 3rd manல் ஒரு கேட்சைக் கோட்டைவிட்டவுடன் பலருக்கு இதயத்துடிப்பு எகிறியிருக்கும்..

கடைசியில் 3 ரன்கள் இருக்கும் நிலையில் இங்கிலாந்தின் ஹார்மிசன் வீசிய பந்து காஸ்ப்ரோவிஸ் க்ளவுஸைத் தடவியபடி கீப்பர் ஜோன்ஸின் இடதுபக்கம் செல்ல, ஒரு லாவகமான கேட்சைப் பிடித்து இங்கிலாந்து மக்களின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சாதனையைப் படைத்துவிட்டார்.

மாங்கு மாங்கு என போட்டு விக்கெட்டும் எடுத்த ·பிளிண்டா·ப் தான் பாவம், அவருக்கு அந்த கடைசி விக்கேட் கிடைத்திருந்தால், அவரை இன்னும் கொண்டாடியிருப்பார்கள். இயான் போதமிற்குப் பிறகு இங்கிலாந்திற்கு கிடைத்துள்ள ஒரு சிறப்பான ஆல்ரவுண்டர் - ·ப்ளிண்டா·ப்

முதல் டெஸ்டிலேயே கை ஓங்கியிருந்த இங்கிலாந்து அணி, டெஸ்டைத் தோற்றதற்குக் காரணம் மக்ராத் என்னும் Lean Mean Machine தான். இந்த வயதிலும் அந்த 3 விக்கெட்டுகள் நேர்கோட்டிலேயே வீசி, ஒவ்வொரு மட்டையாளரின் மனோதைரியத்தையும் தவிடுபொடியாக்கும் அவர் இந்த டெஸ்டில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்ராத்தும் வார்னேயும் இல்லாத ஆஸி அணி அடுத்த தலைமுறை பந்து வீச்சாளர்கள் அவர்கள் அளவு சிறப்பாக இல்லாமல் கொஞ்சம் தடுமாறும் என்றே சொல்லலாம். வார்னே இந்த போட்டியில் 10 விக்கெட் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


சென்னையில் நடந்த இந்தியா - ஆஸி Tie Testக்குப் பிறகு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் பலமுறை இந்த மாதிரி சில ரன்கள் வித்தியாச வெற்றி தோல்விகள் உண்டு என்றாலும் இந்த டெஸ்ட் போட்டி ஒரு மறக்கமுடியாத போட்டி என்றே சொல்லலாம்.


இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸ் - 407 ; இரண்டாவது இன்னிங்க்ஸ் - 182
ஆஸி முதல் இன்னிங்க்ஸ் - 308 ; இரண்டாவது இன்னிங்க்ஸ் - 279
விரிவான ஸ்கோருக்கு: http://imsports.rediff.com/score/in_match1077.html

For detailed reports
http://news.bbc.co.uk/sport1/hi/cricket/england/4128908.stm

http://sport.guardian.co.uk/ashes2005/story/0,15993,1544816,00.html


- அலெக்ஸ் பாண்டியன்
08-ஆகஸ்ட்-2005

பி.கு: 95க்கு 6 விக்கெட் என மேற்கிந்தியத்தீவு அணி திணறிக்கொண்டு இருக்கையில் தினேஷ் ராமதின் என்ற இளைஞரையும் அவரின் சிறப்பான ஆட்டத்தையும் உலகுக்கு அறிமுகப்படுத்தியதுடன், தோல்வியை தழுவித்தான் தீருவோம் என்றபடி(262 ரன்கள் எடுத்த பின்பும், ஆடிக்கொருதரம் ரன் எடுக்கும் யுவராஜ் செஞ்சுரி அடித்தபின்பும்) விளையாடிய இந்திய அணியைப் பற்றி என்ன எழுதுவது ? யுவராஜ் மற்றும் கை·புக்கு இன்னும் பல விளம்பரங்களும், கோடிகளும் கிடைக்கலாம். இன்னும் பல ஆட்டங்களில் ரன் எடுக்காமலேயே டீமில் இடம் கிடைக்கும்.

Friday, August 05, 2005

பெருகி வரும் முதிர்கன்னிகள்

சமீப வருடங்களில், திருமணமாகாத, திருமணம் தள்ளிப் போகும் அல்லது திருமணத்தைத் தள்ளிப் போடும், பெண்கள் அதிகமாக காணப்படுகின்றனர். அதுவும் கணினி / மென்பொருள் துறையில் வேலை செய்யும் பெரும்பாலான மத்யமர் குடும்பத்துப் பெண்களில் இது அதிகமாகி வருகிறது.

இதற்குப் பல்வேறு காரணங்களை என்னளவில் அவதானிக்க முடிகிறது. மத்தியதர குடும்பத்திலிருந்து வரும் பல பெண்கள், முதலில் சில வருடங்கள், வேலைக்குப் போக வேண்டும் என்ற எண்ணத்துடன் துவங்குகின்றனர். ஓரிரண்டு வருடங்கள் வேலை செய்தவுடனேயே கணினித்துறையில் பலருக்கும் வெளிநாடுகள் செல்ல/ அங்கு தங்கி வாழ்க்கை முறைய அறிய வாய்ப்பு ஏற்படுகிறது.

பெரும்பாலும், இத்தகைய பெண்களின் பெற்றோர் ரிடையர் ஆகும் நேரம் அல்லது ரிடையர் ஆகியிருப்பர். தற்போது பெண்ணின் சம்பளமும் குடும்பத்திற்கு ஒரு வித புது நிதிநிலைமையைத் தர, அவர்களும் 'என்ன 25 வயசுதான ஆகுது.. இன்னும் 2 வருஷம் போகட்டும்' என சிலரும், சில சமயம், பெண்களும் இவ்வாறான சில காரணங்களைக் கூறி குடும்பத்தைக் கரையேத்திவிட்டுத் தான் திருமணம் என்றெல்லாம் கூறி) தள்ளிப் போடுகின்றனர்.

*சில* (கவனிக்கவும் - சில) பெண்கள், மிகவும் தீவிரமான வேலை உத்வேகத்துடன் எதிர்நீச்சல், சம்பள அதிகரிப்பு, வெளிநாட்டு விஜயம் என இறங்குகின்றனர். ஓரிரு முறை வெளிநாடு சென்றுவந்தவுடன், அதுவும் 7-10 மாதங்கள் அல்லது 1 வருட விஜயத்திற்குப் பிறகு அவர்களின் இந்தியா பற்றிய எண்ணங்களும், திருமணம், கணவன், குழந்தை, குடும்ப வாழ்க்கை போன்ற விஷயங்களிலிருந்து கொஞ்சம் விலகிப் போய், குறிக்கோள் எல்லாம் வேலை மற்றும் சம்பள/வருமானங்களில் மாறிவிடுகிறது.

எல்லோரும் இப்படி என்று சொல்லவில்லை.

ஆனால் சமீபத்தில் மென்பொருள் துறையில் பல பெண்கள் இவ்வாறு மாறி வருவதை அருகில் பார்க்கும் வாய்ப்பினால் இதை எழுதுகிறேன்.

சுமார் 28-29 வயதைக் கடந்தவுடன், இப்பெண்களுக்கு தாங்கள் எதையும் எதிர்கொள்ளும் தைரியமும், பணபலமும், மனபலமும் கைகூடியதால், மிகவும் செலக்டிவாகப் பார்க்க ஆரம்பித்துவிடுகின்றனர். பெற்றோர் திருமணத்திற்கு முயன்றாலும், ஏதாவது காரணங்கள் சொல்லி, 100% எதிர்பார்ப்பு-கூடலில் சிக்கிவிடுகின்றனர். பையன் இப்படித்தான் இருக்கவேண்டும், அப்படித்தான் இருக்கவேண்டும், இது சரி வராது, அது ஒத்துவராது என ஏகப்பட்ட கண்டிஷன்கள்.

பெற்றோருக்கோ இத்தகைய கண்டிஷன்களை மீறவும் முடியாமல், ஒதுக்கித் தள்ளவும் முடியாத நிலை. காதல் திருமணம்தான் இதற்கு மாற்று என்றாலும், இந்தப் பெண்கள் அந்த உணர்வுகளையும் கடந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது.

சில பெண்கள், தங்களின் மென்மையான பக்கத்தை இழந்து வருவதை நினைத்துப் பார்ப்பதே இல்லை போல தெரிகிறது. பலருக்கும் காதல், அன்பு, மென்மை போன்ற இலக்கணங்களிலருந்து விலகி, வேலை, அவசரம் என ஆண்களிடம் இருக்கும் பலவித போக்குகளைத் தங்களுக்கும் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

சிலர் தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட இந்த காலம் தாழ்த்திய நிலையிலிருந்து விடுபட இயலாமலேயே சில சமயங்களில் வெறுப்பையும் சேர்த்துக் கொள்கின்றனர். இதனால் இவர்களைச் சுற்றியுள்ள நட்புகளும், உடன் பிறந்தோரும் பெற்றோரும் எப்படியாவது திருமணம் ஆகாதா என்ற நிலையில் தவிக்கின்றனர். (நான் சொல்லுவது ஒரு சாதாரண மத்யமர் குடும்பத்து நிலை பற்றி)

தமிழக ஆட்டோவில் முன்பெல்லாம் 'பெண்ணுக்கு திருமண வயது 18' என எழுதியிருப்பர் பின்னர் இது 21ஆக மாறியது. ஆனால் கணினித்துறைப் பெண்களுக்கு இது 28/30ஆக மாறி வருகிறது.

இதனால் வரும் பாதிப்பு இன்னும் 10-15 ஆண்டுகளில் தெரியும். மற்ற துறைகளில் உள்ள பெண்களைக் காட்டிலும் தற்போது கணினித் துறை பெண்களில் இந்த முதிர் கன்னிகள் அதிகமாகி வருகின்றனர். கணினித் துறையின் வேலைப் பளுவும், நேரங்களும் இப்பெண்கள் மற்ற வேலைகளில் இருக்கும் ( 9 முதல் 5 ) பெண்கள் போல தங்கள் வீடு / குடும்பம் / பெற்றோர் (அ) கணவன்/குழந்தைகளைக் கவனிக்கக் கடினமாகவும் உள்ளது.

என்ன தான் டெலிவொர்க்கிங் / வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற வசதிகள் சில கம்பெனிகளில் இருந்தாலும், வீட்டில் குழந்தை அழும்போதோ, வீட்டிற்கு விருந்தினர் வந்திருந்தாலோ இந்த வசதிகள் இருந்தும் சரியாக பங்களிக்க முடியாது. பெண்களின் பங்களிப்பு வீட்டிற்கு மிக முக்கியம், அதிலும் இந்திய குடும்ப அமைப்பில்.

பெண்கள் வேலைக்குச் செல்வது பற்றியது அல்ல இந்த பதிவு. கோ.கணேஷ் கோவில்பட்டியிலிருந்து எழுதிய சில கேள்விகள் இங்கே http://gganesh.blogspot.com/2005/05/blog-post_17.html

நான் சொல்ல வருவது - இந்த வேலை மற்றும் மாறும் விழுமியங்களால் (அப்பாடா.. நானும் இந்த வார்த்தைய உபயோகிச்சுட்டேன்!) பெண்கள் தங்கள் திருமணத்தைத் தள்ளிப்போடுவது என்னென்ன விளைவுகளை (இந்திய குடும்ப அமைப்பில்) வருங்காலங்களில் ஏற்படுத்தும்
என்பதுதான்..! (குழந்தைப் பேறு போன்ற உடல் ரீதியான விஷயங்களும் இதில் வரும் என்றே நினைக்கிறேன்)


- அலெக்ஸ் பாண்டியன்
05-ஆகஸ்ட்-2005

Wednesday, August 03, 2005

ஆடிப் பெருக்கு

ஆடி-18 தமிழகத்தில் ஆடிப்பெருக்கு என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. காவிரி தொடும் ஊர்களில் எல்லாம், இன்றைக்குக் கொண்டாட்டம். சுழித்தோடும் காவிரியில் கால் நனைத்து, இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்தி குடும்பத்தோடு காவிரியை வரவேற்கும் நாள்.

இந்த ஆண்டு கர்நாடக, கேரள நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால், கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி என எல்லா அணைகளிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டு விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையும் நிரம்புகிறது.. கிருஷ்ணராஜ சாகரிலும் திருச்சியிலும், கல்லணையிலும் தண்ணீர் பெருக்கெடுத்தோடும் சில படங்கள்....

நன்றி: தி ஹிண்டு


http://www.hindu.com/2005/08/03/stories/2005080308900300.htmhttp://www.hindu.com/2005/08/03/stories/2005080302870200.htm
http://www.hindu.com/2005/08/03/stories/2005080314400200.htm
http://www.hindu.com/2005/08/03/stories/2005080313070400.htm-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

இன்னோர் பக்கம் மும்பை, மஹாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், ஒரிஸ்ஸாவில் எல்லாம் வெள்ளம். மும்பையின் மழையால் சென்ற ஒரு வார இழப்பு பல நூறு கோடிகள் என செய்தித்தாள்கள் கூறுகின்றன. ஒரு மாதம் முன்பு குஜராத்தில் - பரோடா, அகமதாபாத் போன்ற இடங்களில் இதே போல் வெள்ளம்.

இந்த வெள்ளங்களிலிருந்து அரசும், நகராட்சிகளும் ஏதேனும் பாடம் கற்றுக்கொண்டுள்ளனவா?மும்பை மாதிரி மழை/வெள்ளம் ஏற்பட்டால் பல நகரங்கள், பேரூர்கள் எல்லாவற்றிற்கும் இதே கதிதான் என்றாலும் சுனாமிக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட டிஸாஸ்டர் மானேஜ்மெண்ட் குழு/கமிட்டி என்ன செய்து கொண்டிருக்கிறது ?
பெங்களூர் நிலைமை பற்றி இங்கே.

வடகிழக்குப் பருவ மழையின் போது தமிழகமும், சென்னையும் கூட இந்த மாதிரி நிலைமையை நேர்கொள்ள நேரிடும். தமிழக அரசு, முனிசிபாலிடிகள், கார்போரேஷன் என்ன தயார் நிலை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது ?

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

மும்பை அளவெல்லாம் இல்லாமல் பெய்த சுமாரான மழை ஆனால் பேய்க்காற்று அடித்த 2 நாளில் பெங்களூர் நிலைமை பற்றி நான் முன்பு எழுதிய பதிவு இங்கே -
மழை - மரம் - மின்வெட்டு


- அலெக்ஸ் பாண்டியன்
03-ஆகஸ்ட்-2005

Wednesday, July 27, 2005

மும்பையில் 94.4 செ.மீ மழை

மும்பையில் வரலாறு காணாத மழை

நேற்று (செவ்வாயன்று) மும்பையில் பெய்துள்ள 94.4 செ.மீ மழை இந்திய வரலாற்றிலேயே ஒரே நாளில் பெய்துள்ள அதிக பட்ச மழையாம். செரபுஞ்சியில் ஒரே நாளில் 83 செ.மீ மழை பெய்தது 1910ஆம் வருடம்.


Photo and news courtesy: Rediff.com

மேலதிக விபரங்களுக்கு: http://www.rediff.com/news/2005/jul/27rain4.htm

இதனால் மும்பைக்குச் செல்லும் ரயில்கள், விமானங்கள், பஸ்கள் எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளது. விபரமான படங்கள் மற்றும் செய்திகளுக்கு இங்கே http://specials.rediff.com/news/2005/jul/26sld1.htm

மும்பை மக்கள் சகஜ வாழ்க்கைக்கு மீண்டு வர இறைவனை வேண்டுவோம்.

இந்தியாவின் பல பகுதிகளில் (கர்நாடகம், கோவா, ஆந்திரம்) கடந்த சில நாட்களாக இவ்வாறு பலத்த மழை பெய்து வருகிறது. ஒரு புறம் கோடையில் தண்ணீர் இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டனர் என்றால் இப்போது அதீத மழையினால்...!

- அலெக்ஸ் பாண்டியன்
27-July-2005

Monday, July 18, 2005

BPO வேன்கள் - வேகமா, வெறியா ?

நீங்கள் பெங்களூரிலோ, சென்னையிலோ, ஹைதராபதிலோ, மும்பை அல்லது குர்காவ்ன் (டில்லி அருகில்) வசித்திருந்தால் தினமும் கால் செண்டர் மற்றும் ITES, BPO துறைக் கம்பெனிகளின் பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வேன்/கார் ஆகியவற்றை அடிக்கடி சாலையில் கடந்திருக்கலாம்.

பெரும்பாலும் இவை டாடா சுமோ அல்லது டொயோட்டா க்வாலிஸ், அல்லது டாடா இண்டிகா வகை வண்டிகளே. இவ்வகை வண்டிகளின் பின்னால் சில ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.

" நான் எப்படி வண்டியோட்டுகிறேன்... தொலைபேசி: ........"
" இந்த வண்டி ABC நிறுவனத்தின் தொழிலாளர்களுக்காக மட்டுமே இயக்கப்படுகிறது.
இந்த வண்டியின் ஓட்டுனர் தாறுமாறாகவோ விதிகளை மீறி ஓட்டினாலோ இந்த
.......... தொலைபேசி எண்ணில் புகார் கூறவும்"

போன்ற வாசகங்கள் காணப்படும்.

நீங்கள் 2-சக்கரமோ, 4-சக்கரமோ ஒட்டுபவராய் இருக்கவேண்டும் என்பதில்லை. சும்மா சாலையோரமாய் நடப்பவர் அல்லது சாலையைக் கடப்பவராக இருந்தாலே போதும். இந்த வண்டி ஓட்டுனர்களின் திறமை (?) புரியும். பெரும்பாலும் சந்திலும் சிந்துபாடும் இந்த ஓட்டுனர்களின் வேகம், மற்றவர்களுக்கு சாலையில் நடப்பதே அச்சத்தைக் கொடுக்கும்.

அதுவும் சமீபகாலங்களில், பெங்களூரில் பலவித விபத்துகளிலும் வரும் முதல் பட்டியல் இந்த வண்டிகளால் தான் News courtesy: The Hindu.

இன்னோர் விஷயமும் புரியவில்லை. எப்போது பார்த்தாலும் இந்த வேன்/கார்களில் ஒரே ஒரு நபர் உட்கார்ந்திருப்பார். அதாவது ஒரு ஆளை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று அலுலவகம் கொண்டுவிட, மீண்டும் வீடு - இதற்கு ஒவ்வோரு ஆளுக்கும் அல்லது சிலருக்காக என வைத்துக்கொண்டால், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த முறையில் வண்டிஓட்டமுடியும் ? Economical sense என்பது இந்த வகைச் செலவில் கவனிக்கப்படுவதில்லையோ. கால் செண்டர் பிஸினஸ் வளர, வளர், ஆட்கள் கூடும், ஆட்கள் கூடக் கூட, இவ்வகை வண்டிகளின் எண்ணிக்கை கூடும். ஆனால் எப்படி கட்டுப்படியாகும் ?


சமீப காலமாக கணினித்துறை / பி.பி.ஓ மக்கள் மீது நடைபெறும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது. இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகி வருவது தான் இதன் காரணமா ?


எனக்குப் புரியவில்லை..!

- அலெக்ஸ் பாண்டியன்
18-ஜூலை - 2005

Monday, June 20, 2005

நன்றி நவிலல்....!

நன்றி நவிலல்....!

தமிழ்மணம் வாசகர்களே..! ஒருங்கிணைப்பாளர்களே ! எனது வலைப்பதிவையும் நட்சத்திரமாய் ஒரு வாரம் மின்ன வைத்த அனைவருக்கும் நன்றி..!

வலைப்பதிவுக்கு வந்து படித்தவர்களுக்கும் பின்னூட்டம் கொடுத்து ஊக்கப்படுத்தியவர்களுக்கும், வந்து நட்சத்திரக் குறியீட்டை + க்ளிக்கிய அன்பர்களுக்கும், எனது பதிவுகளில் உள்ள சில கருத்துகளைச் சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!

பெரும்பாலும் தமிழ்.நெட் எனப்படும் தமிழ்.இணையத்திலிருந்து கட்டுரைகளை இட்டிருந்தாலும் அக்கட்டுரைகள் மற்றும் இன்ன பிற மடற்குழுக்கள்/இணைய தளங்கள் பற்றி தெரிந்து, தமிழில் இணையத்தில் நடைபெறும் பல்வேறு ஆக்கங்கள் பற்றி பல புதிய வாசகர்கள், தமிழ் இணைய உலாவுவர்கள் தெரிந்துகொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.

தமிழ்.நெட் எனும் பொற்காலம்-1ல் பெற்ற நண்பர்கள் போல், தமிழ்மணம் வீசும் பொற்காலம்-2லும் பல புதிய நண்பர்களையும் பெற உதவி செய்த தமிழ்மணம் சேவைக்கும், காசியின் தீர்க்க தரிசனத்திற்கும் காசியின் ஊர்ப் பயண காலங்களில், தளத்தை கவனித்து வரும் செல்வராஜ், மதி அவர்களுக்கும் நன்றிகள்...!

இந்த ஒரு வாரத்தில் இவ்வளவு பதிவுகள் போட முடியுமா என்று யோசித்தபோது மதி கொடுத்த யோசனையும் நன்று.

வழக்கமான பதிவுகள் தொடரும் (ஆனால் பெரும்பாலும் வாரத்திற்கு ஒன்று...;-))

எங்கோ படித்த ரசித்த ஒன்று....
------------------
நாம் இருவர் நமக்கு இருவர்
என்றாள் அவள்
நான் கூறினேன் எனக்கு முன்னமே
இருவர் என்று !

-----------------

- அலெக்ஸ் பாண்டியன்
20-June-2005

Sunday, June 19, 2005

இணையத்தில் தமிழ் இதழ்கள்

இணையத்தில் தமிழ் இதழ்கள்
-------------------------------------

தினமும் காலையிலோ, மாலையிலோ, இணையத்தைத் தொட்டவுடன் நீங்கள் செல்லும் தளங்கள் யாவை ? பெரும்பாலோருக்கு ஆங்கில / தமிழ் செய்தித் தளங்கள், தங்களுடைய யாகூ, ஹாட்மெயில், ஜிமெயில் போன்றவையாக இருக்கும். மடற்குழு உறுப்பினர்களுக்கு மடல்கள். தமிழ்மணம் ரசிகர்களுக்கு கடந்த ஒரு வருடமாக தமிழ்மணத்தின் வாசகர் பக்கமும் இருந்து வரும்.

இதைத் தாண்டி தங்கள் துறை சார்ந்த, தொழில் சார்ந்த அல்லது பொழுதுபோக்கு (சினிமா, இசை, அரட்டை) தளங்களுக்கு கையிருப்பு நேரத்தை வைத்து, பலரும் மேய்கின்றனர். மாலன் சமீபத்தில் இந்த பொன்னான 180 மணிகள் பற்றி எழுதியிருந்தார். பலருக்கும் ஒரு நாளில் சுமார் 180 நிமிடங்களே இணையத்தை மேய கிடைக்கிறது. அதில் எதைப் படிப்பது, எதை விடுவது என குழப்பமும் வரும். (கணினித் துறை மக்கள் தேசிகன் எழுதியது போல நாள் முழுதும் இதையே வேலைக்கு நடுவில் செய்துகொண்டு இருக்கிறார்கள்)

தமிழில் உள்ள தளங்களில் நீங்கள் தவறாது, அல்லது தினமும், 2 தினத்துக்கு ஒரு முறையாவது படிக்கும் தளங்கள் எவை ? ஏன் படிக்கிறீர்கள் (அதாவது அந்தத் தளத்தில் உங்களை ஈர்த்தது என்ன ?) இப்படிப்பட்ட கேள்விகள் எனக்குள்ளும் அடிக்கடி எழும். என்னுடைய பார்வையில் இந்திய / தமிழ் தளங்களை இங்கு பட்டியலிடுகிறேன். (எல்லாம் TSCII or Unicodeல் இருந்தால்
நன்றாக இருக்கும் ஆனால் அது தனி கதை)

இணையத்தில் கடந்த 8 ஆண்டுகளாகத் தமிழைப் படித்துவரும் எனக்கு முதல் தளம் தினகரன் தமிழ் நாளிதழ் தான். அன்று எப்படி இருந்ததோ அதே மாதிரி இன்னும் இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வரும் செய்தித் தளங்களில் ஆரம்பம் முதல் இன்று வரை சிம்பிளான லே-அவுட் கொண்டுள்ளது. தேதி வாரியாக, தொகுதி வாரியாக (அரசியல், பொது, சினிமா, விளையாட்டு என) இலகுவாக செல்லலாம். செய்திகள் நன்கு தொகுக்கப்பட்டுள்ளது. http://www.dinakaran.com/daily/default.html

தினகரனுக்குப் பிறகு விகடனின் தளம். இலவச சேவை இருந்த வரை, விகடனின் எல்லா பக்கங்களுக்கும் செல்ல லே-அவுட் நன்றாக இருந்தது (தற்போதும்). எழுத்துருவும் கண்ணுக்கு இனிமையாக உள்ளது. http://www.vikatan.com

தினமலர் செய்தித் தளமும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது ஆனால் அடிக்கடி ஜாவாஸ்கிரிப்ட் எரர் என தொல்லைப் படுத்தும். தினகரன் மாதிரி செய்திகள் தொகுதி பிரிக்கப்படாமல் எல்லாமும் முக்கியச் செய்திகள் பக்கத்தில் கலந்து கட்டி இருக்கும். இதில் நமக்குத் தேவையான செய்திகளைத் தேடவேண்டும். தினமலரின் வார மலரும், பிற சிறப்புப்பக்கங்களும் நன்றாக தொகுக்கப்படுகிறது. 'பிற இதழ்கள்' என்ற பகுதியில், விகடன், குமுதம், கல்கி, மங்கையர் மலர், பாக்யா இதழ்களிலிருந்து சில கட்டுரைகள் வழக்கமாக இடம்பெறுகின்றன. மேற்சொன்ன இதழ்களின் தளங்களில் படிக்க முடியாதவர்கள் இங்கேயே சில கட்டுரைகளைப் படிக்கலாம். http://www.dinamalar.com

தினத்தந்தியின் கலரும், வடிவமைப்பும் ஒரு கட்டாக இருக்கிறது - எல்லா ஊர் எடிஷன்களும் கொடுக்கப்படுகின்றது. ஞாயிறு மலர், சிறப்பு மலர் பக்கங்களும் நன்றாக வருகின்றன. http://www.dailythanthi.com/home.asp

குமுதம் முதல் முதலில் வந்தபோது நன்றாக இருந்தது. பின்னர் ஐடி, பாஸ்வேர்ட் எல்லாம் ஆரம்பித்த பிறகு சில சமயங்களில் எழுத்துரு சரியாகத் தெரிவதில்லை. வெட்டி, ஒட்டி படிக்கவேண்டியிருக்கிறது. முன் தேதியிட்ட இணைப்புகளுக்குச் செல்வதும் கடினம். நினைவில் வைத்து வலைப்பக்கதை நாடவேண்டும். குமுதம் குழுமத்தில் எல்லா இதழ்களும் இங்கே கிடைக்கிறது என்றாலும் வெட்டி ஒட்டி படிப்பது போர். http://www.kumudam.com

கல்கி ஒன்று தான் TSCII எழுத்துருக்களைப் பயன்படுத்துகிறது. பார்க்க அழகாக இருக்கிறது.
முதல் அவதாரத்தில், பொன்னியின் செல்வன் தொடராக வந்த போது படங்களும் (பத்மவாசன்)
அத்தியாயங்களும் சேமிக்க இலகுவாக இருந்தன. தற்போது கல்கியின் கட்டுரைகளும்,
ஏவிஎம் சரவணனின் தொடரும் நன்றாக இருக்கிறது. http://www.kalkiweekly.com

திண்ணை TSCII பிறகு TAB என அவதாரம் எடுத்தாலும், லே-அவுட் அவ்வளவு சிலாக்கியமாக
இல்லை. நான் படிப்பது பெரும்பாலும் கடிதங்கள் பகுதி மட்டும் தான். மத்தளராயர் முன்பெல்லாம் தொடர்ந்து எழுதியபோது ஒரு 'ஜிவ்' இருந்தது. http://www.thinnai.com

தமிழோவியம் நன்றாக இருந்தது. கண்ணுக்கு இதமாக இருக்கும் எழுத்துருக்கள் தமிழோவியத்தில். http://www.tamiloviam.com

ஆறாம்திணை - இலவச சேவையாக இருந்தபோது படிக்க முடிந்தது. தற்போது முகப்புப்பக்கம் எப்போதாவது எட்டிப்பார்ப்பதோடு சரி. லே-அவுட்டும் அவ்வளவு சிலாக்கியமில்லை http://www.aaraamthinai.com

மாலனின் திசைகள், தனியாளாய் செதுக்கப்படுகிறது. லே-அவுட் இன்னும் கொஞ்சம் மெருகேற்றினால் நன்றாக இருக்கும். கட்டுரைகள் பலவும் பாதுகாக்கப் படவேண்டியவை.
http://www.thisaigal.com

சமீப காலங்களில் தட்ஸ்தமிள்.காம் தளம் செய்திகளுக்கு (உடனுக்குடன் தெரியவர) சிறப்பாக இருக்கிறது. இந்திய / தமிழக செய்திகளை முந்தித்தருவது இந்தத் தளம்தான் என நினைக்கிறேன். சில சமயம், மற்ற இடங்களிலிருந்து அப்பட்ட காப்பி, மற்றும் கண்ணியமில்லா சொற்களை செய்திகளுக்கு இடையில் புகுத்துவது போன்றவையும் இங்கு காணலாம். http://www.thatstamil.com

எல்லா தமிழ் இதழ்களும் ஒரே என்கோடிங்கில் (encoding) வரும் அந்த பொன்னாள்
என்னாளோ ?


- அலெக்ஸ் பாண்டியன்
19-June-2005

Saturday, June 18, 2005

வயது வந்தவர்களுக்கு மட்டும்..!

தமிழ்.நெட் முத்துக்கள்: சிலம்பு மடல் - 16

இந்த சிலம்பு மடல் -16 மாதிரிக்கு மட்டுமே - சிலம்பில் காமரசம் எப்படி கையாளப்பட்டுள்ளது - அதனை திரு.இளங்கோவன் எவ்வளவு அருமையாய் நமக்கு எடுத்துக் கொடுத்துள்ளார் என்பது படித்தால் தான் புரியும். காமத்தையும் இவ்வளவு அழகாக தமிழில் சொல்ல முடியுமா என்பதற்கு இந்த மடல் ஒரு எடுத்துக்காட்டு.

யாம் பெற்ற இன்பம் பெறுவீர் வலைப்பதிவர்காள்...! (இது வயது வந்தவர்களுக்கு மட்டும் ;-)

என்னடா இது சிலம்பு மடலுக்கு சிம்பு படமா என்று யோசிக்கிறீர்களா ? அவர்
பெயரும் சிலம்பரசன் தானே ;-)


Photo courtesy: MohanKumar's Globaltamil.com

- அலெக்ஸ் பாண்டியன்
17-June-2005

------------------------------
நன்றி: தமிழ்.நெட் ; திரு.நாக.இளங்கோவன்
23-ஆகஸ்ட்-1999

சிலம்பு மடல் - 16

பத்துடன் ஆறு!
பத்தைப் பெற்றெடுத்த அறுபதும் காமுறும் பதினாறு!


இளந்தென்றல் வீசும் இராக்காலம்;
மீதி நிலாவை மறைத்துவிட்டு,
பாதிநிலா பார்த்து ரசிக்க
கள்ளஒளி காட்டுகின்றது காதலர்பால்:.

ஒளியுமில்லை இருளுமில்லை முற்றத்தில்;

மறைவை மறந்தவரை மறக்கடிக்கும் நிலவொளி!
நிலாவின் கள்ள ஒளி!

புத்தம் புது மங்கை அவள்!
காதலைக் காதலனிடம் காட்டிவிடத் துடிக்கும் மனம்;
உடலோடு ஒன்றாகத் துடிக்கும் உள்ளம்;
உள்ளத்தின் வாசலிலே நாணத்தின் காவல்,
எட்டிப்போன கால்களைக் கட்டிப்போட,
நாணிநிற்கும் நங்கை!

நாணத்திற்குதான் எத்தனை வேலை!!
தூதுபோனது தலைவனுக்கு;
"தொட்டுத் தீண்ட மாட்டாயா? "
சொன்னது அவனிடம்!

தொட்டு விடப்போகின்றேன்!
தொட மட்டுமா வந்தேன்?

அவளில் நிலைகுத்தி நிற்கும் என் கண்களின்
கட்டளைக்கு நான் காத்து நிற்பது அவளுக்குத் தெரியவேண்டாம்!
தொட்டு விடும் தூரத்தில் அவளை அள்ளி விழுங்க என் கண்களுக்கு
இயலாது போகும்;

முகத்தின் ஒவ்வொரு இடமும் அசைவது
அவள் நாணத்தால்; நானறிவேன்;
அச்சுவையை நான் பருகிவிட்டுத்தான் பக்கம் போவேன்!

கால்கள் இடும் நாணக்கோலத்தில்
என்னை எழுதுகிறாளே;
என் உடலெங்கும் குறுகுறுக்கும் அந்த இன்பத்தில்
மெல்ல மெல்ல நனைகிறேன்;

அவள் கைவிரல்கள் ஒன்றையன்று
கட்டிப் பிடிக்கின்றன; பார்க்கிறேன் நான்!

தொடவேண்டி நின்றதால் இருந்த இன்பம்
தொட்டுவிட்டால் எனக்குக் குறைந்திடுமோ ?
இந்த இன்பத்திலேயே இருந்துவிடலாமா?
முதலின்பம் காணப்போனவள் இன்பத்தின் எல்லை
அதுவென்றே நினைக்கிறாள்.
அவளின் மனதிற்குள்
அச்சம் தோன்றியதை அவனன்றி ஆரறிவார் ?

இன்பப் பிச்சைக் கேட்டுக் கரங்களை நீட்டினான்!
பற்றிக்கொள்ள கொம்பின்றி தத்தளித்தக் காமக் கொழுந்து,
கரங்களைப் பற்றி முழுமாரில் மறைத்துக் கொண்டது முகமதனை!

முகத்தின் வியர்வை அரும்புகள் மட்டுமே
இடைவெளி கொடுத்தன அவளுக்கும் அவனுக்கும்!

முதன்முதலில் தொட்டவுடன்
அவன் நெஞ்சிற்குப் பொட்டிட்டது அவள் நெற்றி!

அக்கணமே,
அழுந்தப் பதித்தும் இன்ப அசைவுகளால்
இழுத்துக் கொண்டன குங்குமக் கோடுகள்!

இன்பம்தான் அவனுக்கு!
நெற்றிச் சுட்டியும் அழுந்திப் பதிந்தபோது;

மங்கையின் பற்குறி படுமுன்னே அவள் சூடாமணிக்கு அவசரம்
அவனைத் தீண்டிவிட!

உற்றவனின் நெஞ்சத்தில் குறிவைத்த சுட்டிமேல்
பொறாமை கொண்டாள்!

உள்ளத்தில் தோன்றும் பொறாமையை மறைத்துச்
செயலாற்றி வெற்றி கொள்வதில்தான் பெண்மைக்கு ஈடு ஏது?

மெல்ல முகத்தைத் தூக்கி மன்னவனைப் பார்த்துக் கொண்டே
தன்னைப் புனைந்திருந்தவற்றில்
சுட்டியைக் கழற்றி எட்டிப் போட்டாள்!

அவள் அவிழ்த்த முதல் ஆடை அது.
அவனுக்கு என்ன புரிந்ததோ?

சுட்டியை நீக்கியதும் ஒற்றைக் கரும்பட்டு மயிரொன்று
தென்றலின் செயலால் காதலன் முகத்தில் முத்தமிட்டது;

மூக்கிலும், வாயிலும், குழிவிழுந்த கன்னத்திலும், கண்களிலும்
நெருடி விட்ட அவளின் ஒற்றை மயிர்ளவன் காதுக்குள்ளும்
காமக் கதை சொன்னது!

தன் காதலனை தான் முத்தமிடுமுன் இந்த மயிரும்
முந்திக் கொண்டதே? சூடாமணியைத் தூர எறிந்தது
போல் இம்மயிரை எறிய முடியாதே! சிரித்துக் கொள்கிறாள்!

அந்த மென்மையில் மதிமயங்கியவன் முனகியதைத் தவிர
வேறென்ன செய்ய முடியும்.

ஒற்றை மயிரில் மயங்கியவன் அவளின் கால் வரை கரு நதியாய்
அலைபாயும் அவள் கூந்தலை முகர, கருமேகவிளிம்புக் கதிரவன்போல்
முல்லையும் மல்லியும் அடர்ந்து கிடந்தன அவள் தலையில்.

இதே மலர்களைக் கடவுளர் சூடின் ஒரு வாசமும்,
மங்கையர் சூடின் வேறு வாசமும் வருவதேன்?
கடவுளைக் கட்டிப் பிடித்தாலும்
இத்தனை இன்பம் கிடைக்குமா?

விடைகாண முடியவில்லை அவனால்!
மயிருக்கு வாசம் உண்டோ அறியான்; ஆனால்
பெண்மையின் வாசத்தை அவனால் மறுக்க முடியுமா?

பெண்மனம் அவனுள் புதைந்து கிடக்க
பெண்மணத்தை முகர்வதில்தான் எத்தனை இன்பம்;

எவர்தான் அதை வெறுப்பார்! தூய பெண்ணில் காமம்
உண்டாகும் போது வரும் மணத்தை அல்லது நாற்றத்தை
எந்த ஆடவன் வெறுத்திருக்கக் கூடும்; அவ்வாசமும்
மலர்களின் வாசமும் இணைந்த காதல்மேடையன்று
களியாட்டத்துக்கு காத்திருந்தது;

கூந்தலுக்குள் விரல்கள் துளையிட்டு பின்னங்கழுத்தை
வருடி விட, தலையை மேலும் நிமிர்த்தி,கண்கள் சொருகி,
நிறத்தில் செம்பருத்திப் பூவொத்த மென் பட்டு இதழ்களை
மெல்லப் பிரித்தாள் அவளையும் அறியாமல்; இதழ்கள்
பிளந்தது இதழுக்காகத்தான்;

சீச்சீ! இது என்ன வேதனை!
என் இதழ்கள் சுவைக்கவும் வேண்டும்!
சுவைக்கப் படுதலும் வேண்டும்;
எது எனக்கு முதலில் கிடைக்கும்? இது சொர்க்கமா? நரகமா?
இத்தனைச் சிக்கலா காம வேள்வியில்?;
வெப்பப் பெருமூச்சொன்று வெளியான விநாடி
'சிவபெருமானின் பிறையை ஒட்டியது உன் நெற்றியின் அழகு!'

"பெரியோன் தருக திருநுதல் ஆகஎன;"

என்று காதலன் சொல்ல, அணைக்க வேண்டிய இதழ்கள் திர்த்தவையும் அவளை மயக்கத்தில் ஆழ்த்தியபடியே இருக்க காதலன் அவள் இதழ்களில் ஓடிய வரிகளில் காம வெள்ளத்தை
பருகுதல் வேண்டி ஆங்கு இணைகிறான்; மென்மைக்கு வன்மைதான் பிடிக்கும் போலும்;

இவனின் கீழுதடு அவளின் மேலுதட்டைப் பருக, அவளின் கீழுதடு அவனின் கீழுதட்டுடன் ஏதெதோ செய்ய முயன்று தோற்றுக் கொண்டு இருந்தது;

இவனை அவள் பருக அவனை இவள் பருக நாழிகைகள் நகர்ந்து கொண்டிருக்க, குங்குமம் மெழுகிய கொங்கைகள் வெண்பட்டுக் கச்சையிடம் கெஞ்சிக் கிடந்தன; விடுதலை வேண்டி!

வியர்வை மொட்டுக்களால் கொங்கை விலகிய குங்குமமும் சந்தனமும் கச்சையை நனைத்து கொங்கையின் அசைவுக்கெல்லாம் அழகு சேர்த்துக் கொண்டிருந்தது; இருப்பினும், கொங்கையின்
இச்சைக்கு, கச்சையின் இடைஞ்சலைக் கண்ட காதலன் உதவிக்கு தன் கரங்களைக் கொடுத்தான்; கச்சை நகர்ந்ததும் தாங்கிப் பிடித்துக் கொண்டான் தன் கைகளினாலே!

"திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்
ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல் ?"

தாங்கிப் பிடித்த கைகள் நங்கை முலைமேல் படர்ந்திருந்த ஒற்றை வட முத்து மாலையால் தடைகளை உணர, தவித்துப் போனான்.

திருமுலைகள் மேலே தொய்யில் எழுதியதோடல்லாமல் இந்த மாலைகளையும் அணிவிப்பதுவும் ஏனோ என்று அலுத்துக் கொள்கிறான்; என் கரங்கள் கொள்ளும் இனிமைக்கு இன்னல் விளைவிக்கும் மாலைகளே அகன்று போங்கள் என்று அகற்றி விட்டு முழு முலைகளிடை முகம் புதைத்தான்;

கெஞ்சிய கொங்கைகள்
கொஞ்சின அவன் முகத்தோடு; கொங்கையின் கண்களும் அவனது
கண்களும் பார்த்துக் கொள்ளும் அவ்வப்போது; பார்த்தது தீர
அவனின் கண்கள் கொங்கையின் கண்களைப் பொத்தி விட்டு
விளையாடி மகிழ்ந்ததால் கொங்கைகளுக்கு கொண்டாட்டம்!

இருகனிச்சுவையில் முக்கனிச்சுவையை இகழ்ந்து நகைத்தான்
இதயத்துள்: இருகரம் கொண்டு இருகனி மறைக்க முயன்று
தோற்றுத் துவண்டு போனான்; வென்று விட்ட ஆணவம் அந்த
முலைகளுக்கு! வெற்றிக் களிப்பில் கொங்கைகள் கொஞ்சம்
இளகிவிட இருவரின் மூச்சின் வெப்பமும் வேகமும் இன்ப வேதனையின்
எல்லைகளை அகற்றிக்கொண்டே இருந்தன;

பற்களுக்கும் நகங்களுக்கும் பெருவிருந்து செய்தனர் இருவரும்;
அவள் நகங்கள் அவன் முதுகில் கோலம் போட்டபோதெல்லாம்
அவளின் வளையல்கள் இசையோடு ஆடி மகிழ்ந்தன;

மெல்லிடையாளின் இடை நோகாதிருத்தல் வேண்டி
சிரம் தூக்கி இதழோடு இதழ் பெய்து,
ஒருகரம் முலைதாங்க
மறுகரம் அவள் புறம் தீண்ட,
அரைச்சக்கரமாய் ஆகிப்போனாள் பின்னோக்கி வளைந்து;
மயிலின் முதுகைத் தடவியது போல அவளின் புறத்தை தடவியதும்
மறந்துபோயினர் அவர்களை அவர்கள்;

இடையோடு உறவாட உள்ளங்கைகள் முனைய
மேகலைதான் மெல்ல மறுத்துப் பார்த்தது:
புறத்தை பிடித்த கரம் சற்றே இறுகியதால் மேலும்
வளைந்தனள் மங்கை; மேகலையோ தெறித்துச் சிதறிட
மேகலை தாங்கிய ஆடைகளோ அகன்று போயின:
அகன்று கிடந்தாள் அகன்ற அல்குல் காட்டி!
சிரித்துக் கிடந்த பெண்மையை
வெறித்துப் பார்த்தது ஆண்மை!
வாழையத்த தொடைகள் கொண்டாள்
வாரிவழங்கினாள் வஞ்சனையின்றி,
மாவின் சுவையையும், பலவின் சுவையையும், வாழின் சுவையையும்;
சின்னச் சின்ன அசைவுகளும் சிக்கலை ஏற்றிவிட
கால்களோடு கால்கள் பிணைந்தனர்;
கரங்களோடு கரங்கள் பிணைந்தனர்:
அப்படியே முதுகுகளிலும் கோலமிட்டன அந்த நான்கு கரங்கள்;
வியர்வை ஆறாகப் பெருகிட அதில் வழுக்கிய கரங்களும் கால்களும்
சீறிச்சினந்து பிணைந்து விழுந்தன; பிணையல் பாம்புகள் போல்!!

நின்றுவிடப் போகுதுயிர், தின்று விடு இப்போதே!
கூனிவிடப் போகுமிளமைக்கு தீனியிடு இப்போதே!
வற்றிவிடும் செல்வத்தை வெட்டியெடு இப்போதே!
சுற்றிவரும் பூமி நின்று விடுமுன்னே, வற்றிவிடட்டும் காமம்!
என்றதோர் வேகம்!

அவளின் வளையின் ஓசையுடன்,சிலம்பின் இசை சேர்ந்து,
இருவரின் முனகல் ராகத்தோடு,
இன்பத்தின் எல்லையை சிறிது சிறிதாக அடைந்து கொண்டிருந்தனர்
கோவலனும் கண்ணகியும்!

"தூமப் பணிகளன்றித் தோய்ந்தால் எனஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து-நாமம்
தொலையாத இன்பமெல்லாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று.


அன்புடன்
நாக.இளங்கோவன்