Wednesday, January 05, 2005

நெறைஞ்ச மனசு - காதல்

நெறைஞ்ச மனசு
---------------

கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும் பல கோடி ரூபாய்கள் சுனாமி நிவாரண நிதியாக அளிக்கப்பட்டு வருகிறது. பாலிவுட் பெருந்தகைகள், வட/மேற்கு இந்திய தொழிலதிபர்கள் பிரதமரிடமும், தென்னிந்திய நடிக, நடிகைகள், தொழிலதிபர்கள் ஜெ.விடமும் கொடுத்துள்ளனர். கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கும் இன்ன பிற சுனாமி பாதிப்பு பகுதிகளுக்கும் பணம் மற்றும் இதர பொருட்களும் அனுப்பி வருகின்றனர். தமிழர்கள் என்ற பாகுபாடு பார்க்காமல் பெரும்பாலும் எல்லோரும் ஒன்று கூடி தங்களால் ஆன கலெக்ஷனை அனுப்பி வருகின்றனர். கர்நாடக முன்னாள் பா.ஜ தலைவர் அனந்தகுமார், சட்டீஸ்கர் முதல்வரை (பா.ஜ) அழைத்து ஜெ.யிடம் பணம் கொடுத்தனர். இந்தக் காட்சிகள் ஜெயா தொலைக்காட்சி செய்திகளில் இடம் பெறுகிறது. நிச்சயம் பிரதமருக்கும், ஜெ.வுக்கும் மனசு நெறைஞ்சிருக்கும் (அப்பாடா - தலைப்பு கொண்டு வந்தாகிவிட்டது!)

நேற்றைய இச்செய்திப் படங்களில், விஜய்காந்த், விக்ரம், ஷங்கர், ஏவிஎம் குமரன், சரோஜாதேவி, கஸ்தூரிராஜா அண்ட் சன்ஸ் போன்ற பலர் தங்கள் நன்கொடைகளை அளித்தனர். மேலும் பல தொழிலதிபர்கள், அமைச்சர்கள் ஆகியோரும் தங்கள் துறை சார்ந்த கலெக்ஷனை அளித்தனர். ஆனால் எல்லோரும் அந்த அறைக்குள் நுழைவதிலிருந்து அப்படியே உடம்பை வளைத்து கூழைக்கும்பிடுடன் வந்து ஜெ. அருகில் நின்று கொடுத்துவிட்டு ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு செல்வதைக் காட்டினர். பிரதமரைக் காணக்கூட யாரும் (அல்லது டெல்லி தலைவரையோ, மற்ற மாநில முதல்வரையோ) இவ்வாறு கூனி வணக்கம் சொல்வதில்லை. சமீபத்தில் டெல்லி சென்ற போது, மோண்டேக் சிங் அலுவாலியா.. தனது அறையில் இருந்து வெளியே வந்து ஜெ.வுக்கு பணிவு காட்டி அழைத்துச் சென்றார். எல்லோருக்கும் ஜெ.விடம் அச்சமா, பணிவா, பக்தியா, பரவசமா ? புரியவில்லை.

***** ******* *********

காதல்
--------

டெல்லி, மும்பை, பெங்களூரில் வசிப்பவர்கள் கவனிக்க...............

இந்நகரங்களில் ஸ்டார் (தொலைக்காட்சி) குழுமத்தின் அங்கமான ரேடியோ சிட்டி என்னும் பண்பலை வானொலி ஒலிபரப்பாவதை பலரும் கேட்டிருக்கலாம்.

முதலில் ஆங்கிலம், இந்தி என இருந்த இந்த வானொலி, கடந்த ஒரிரு வருடமாக முழுவதும் இந்தியாகிவிட்டது. பெங்களூரில் ஆல் இண்டியா ரேடியோவின் ரெயின்போவும், விவிதபாரதியும், யுவவாணியும் பண்பலையில் ஒலிபரப்பினாலும், ரேடியோ சிட்டி தான் எல்லா இடங்களிலும் (கார்கள், கடைகள், மால்கள்..) பெரும்பாலும் ஒலிக்கிறது. (ஒலிக்க வைக்கிறார்கள்..?)

எல்லா ஊர் பண்பலை வானொலிகள் போல போக்குவரத்து, தொலைபேசி வழி அரட்டைகள், பிரபலங்களின் பேட்டிகள், பிரபலங்களின் பிறந்த, நினைவு நாள் நிகழ்ச்சிகள் என இருந்தாலும் ஒரு நிகழ்ச்சி வித்தியாசமாக இருந்தது.

இம்மூன்று நகரங்களிலும் ஒரே நேரத்தில் ஒலிபரப்பாகும் 'லவ் குரு' எனப்படும் காதல் குரு நிகழ்ச்சிதான் அது.

இது இரவு 11 மணிக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியாகும். அந்த நிசப்தமான நேரத்தில் நிகழ்ச்சியை நடத்துபவரின் ஒருவிதமான நட்பு + உரிமை கலந்த குரலில் பலவித காதல் பிரச்னைகளுக்கும் ஆலோசனை வழங்கப் படுகிறது. நமது வார/நாள்/மாத இதழ்களிலும் வரும் ஆலோசனை/அந்தரங்கம் பகுதி மாதிரி. ஆலோசனை கேட்பவர்கள் தங்கள் குரலிலேயே தொலைபேசி மூலம் கேள்விகளை இட்டுவிடுவதை, பதில்கள் கலந்து ஒலிபரப்பு. இடையிடையே காதல் ரசம் ததும்பும் இந்திப் பாடல்கள்.

இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா ? ஆலோசனை கேட்போர் பலரும் பெரும்பாலும் பள்ளியிலோ கல்லூரியிலோ படிப்பவர்கள். கேட்கும் ஆலோசனைகள் சில சமயம் அடல்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள்... அல்லது முறை தவறிய பாலியல் சமாச்சாரங்கள். சில கேள்விகள் எடக்கு மடக்காகவும் சில அப்பாவித்தனமாகவும் உள்ளன. ஆனால் நிகழ்ச்சி நடத்துபவர், கண்ணியமாக, பொறுமையாக, நட்புடன் நல்ல அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

வேறு எந்த (இந்திய) ஊர் வானொலிகளிலாவது இந்த மாதிரி விஷயங்கள் நடைபெறுகிறதா ?
நாடு ரொம்ப ஸ்பீடா முன்னேறுதுங்கோவ்..

*** **** *****
- அலெக்ஸ் பாண்டியன்
05-Jan-2005

No comments: