Monday, January 10, 2005

ஸ்ரீமத் கம்பராமாயணம் - சுந்தரகாண்டம்

இன்று ஹனுமத் ஜெயந்தி...............
சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வரும் இந்நாட்களில், சமீபத்தில் பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ஒரு புத்தகம் பற்றிய அறிமுகம்.

ஸ்ரீமத் கம்பராமாயணம் - சுந்தரகாண்டம்
கோவை. ஸ்ரீராமகதாரத்ன - வி.தியாகராஜன்
மதி நிலையம் - ரூ.30

இந்தப் புத்தகத்திற்கு திரு.சுத்தானந்த பாரதியார் முகவுரை எழுதியுள்ளார்.
திரு. வே.தியாகராஜன் தனது உரையில், பொள்ளாச்சி.நா.மகாலிங்கம் அவர்களுக்கு பெரும் நன்றியை தெரிவித்துள்ளார்.

பொதுவாக சுந்தரகாண்டம் படித்து வருபவர்களுக்கு அவர்கள் தம் மனக்கிலேசமும், இன்ன பிற துன்பங்களும் நீங்கும் என சொல்வர்.

திரு. தியாகராஜன் கம்பராமாயணச் சொற்பொழிவு செய்துவருபவர்(வந்தவர்) என்பதால் புத்தகமும் கதை சொல்லி பாணியில், பாட்டுகளுக்கு அர்த்தம் சொல்லும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. சுந்தரகாண்டத்தின் எல்லா பாடல்களையும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், இந்தப் புத்தக அளவிற்கு (125 பக்கங்கள்) கதையையும், முக்கிய காட்சிகளையும் சொல்லும் கம்பராமாயணப் பாடல்களை எடுத்துக்கூறி, அதன் பொழிப்புரை போன்ற விளக்கத்தையும் அருமையாக கூறியுள்ளார். இதுவரை ராமர் பட்டாபிஷேக நிகழ்வை 397 முறை சொற்பொழிவில் செய்துள்ளார் என்பது பிரமிக்கத்தக்கது.

முதல் முறையாக கம்பராமாயணம் (அனுபவித்துப்) படிக்கும் (பள்ளிக் காலங்கள் தவிர) என்னைப் போன்ற beginnerகளுக்கு மிகவும் அருமையான நூல். கம்பரின் வார்த்தை விளையாட்டுக்களை அழகாக விளக்கியுள்ளார். ஒரே குறை - பாடலை இட்டு அதன் பின்னர் விளக்கத்திற்குப் பதில் - விளக்கம் தந்து அதன்பின் பாடல் வருகிறது. ஆனால் பாடல்களை பதம்பிரித்து பதிப்பித்திருக்கும் விதம் புரிந்துகொள்ள ஏதுவாய் உள்ளது.

சில இடங்களில் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராண பாடல்களையும், ஆழ்வார்களின் பாடல்களையும் துணைக்கழைத்து, அதன் சிறப்பையும் விளக்கியுள்ளார். புத்தகத்தில் பத்மவாசனின் ஓவியங்கள் மிக அருமை.

இதோ சில பாடல்கள்......

அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக, ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான்
----------------------------
உலகம் ஐந்து பொருட்களால் ஆனது. மண், தண்ணீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவையே.

அனுமன் ஐந்திலே ஒன்றாகிய காற்றின் மகன். ஐந்தில் ஒன்றாகிய மண் (பூமி தேவி) பெற்ற மகள் சீதை. அவளைக் காண்பதற்காக அனுமன் ஐந்தில் ஒன்றாகிய தண்ணீரைத் (கடல்) தாவுகின்றான். ஐந்தில் ஒன்றாகிய ஆகாயத்தை வழியாகக் (ஆறு - வழி) கொண்டு இராமனின்
உயிராகிய சீதையைக் காப்பாற்றச் செல்கிறான். அங்கு சென்று ஐந்தில் ஒன்றாகிய தீயை வைத்து அரக்கரை வென்ற அனுமான் நம்மைக் காப்பான் என்று கூறும் கம்பனின் பாடலே இது.

***** ****** ******

கம்பனின் வரிகளை வியந்து ரசிக்கும் வண்ணம், சிறப்பான பாடல்களை எடுத்துக் காட்டியுள்ளார். சில பாடல்களுக்கு விளக்கம் தேவையில்லாத (எனக்கு) அளவிற்கு சொற் சிலம்பம் மிக உயரியதாய் உள்ளது.

அனுமனிடம் சீதை கணையாழியை வாங்கியதும் ஏற்பட்ட உணர்ச்சியை வெளிப்படுத்தும் இப்பாடல்
--------------------
வாங்கினள்; முலைக் குவையில் வைத்தனள்; சிரத்தால்
தாங்கினள்; மலர்க் கண்மிசை ஒற்றினள்; தடந் தோள்
வீங்கினள்; மெலிந்தனள்; குளிர்ந்தனள்; வெதுப்போடு
ஏங்கினள்; உயிர்த்தனள்; இது இன்னது எனல் ஆமே?
----------------

அனுமன் இலங்கையிலிருந்து திரும்பி வந்து, இராமனிடம் சூடாமணியை அளிக்குமுன்னர் சீதையைக் கண்டுவந்தது குறித்து சொல்வதை நாம் பெரும்பாலும் 'கண்டேன் சீதையை' என்ற சொற்றொடரின் பயன்பாட்டால் அறிவோம். அந்தப் பாடல் இதோ

---------
'கண்டனன், கற்பினுக்கு அணியை, கண்களால்
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென்னகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்' என்று, அனுமன் பன்னுவான்
-------------

சீதாப்பிராட்டி இருந்த தென் திசை நோக்கி வணங்கிய அனுமான், 'சீதையைக் கண்டாயா ?' என இராமன் கேட்பதற்குமுன் 'கண்டனன்' எனத் தொடங்குகிறான். 'கண்டேன் சீதையை' எனக் கூறினால் சீதை கற்புடன் இருக்கின்றாளா என ஐயம் ஏற்படலாம் என்ற எண்ணத்தில் 'கண்டனன் கற்பினுக்கு அணியை' என்று கூறி 'என் கண்களால் கண்டேன்' எனவும் 'அவ்வம்மையின் கண்களை உற்று நோக்கினேன்.. பரிசுத்தவதியின் கண்கள்' என்று கூறுவது போல் 'கண்டனன், கற்பினுக்கு அணியை, கண்களால்' என்றும் கூறி,'பெருமானே இலங்கையில் அம்மையைக் கண்டேன். நீங்கள் துயரத்தை விட்டுவிடுங்கள்' என்று கூறுகின்றான்.

புத்தகத்தின் பின்னட்டையில் காஞ்சிப் பரமாச்சாரியாரின் கனிவு முகமும் அவர்தம் ஆசியும்
------------------
இராமபிரானின் சரிதத்தைப் படித்து 'ராம ராம' என்று மனஸாரச் சொல்லிகொண்டிருந்தால்
சித்தமலங்கள் விலகும். தர்மத்தைவிட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள். நாட்டில் உள்ள எல்லா மக்களிடையேயும் தெய்வபக்தியும் நன்னடத்தையும் வேரூன்றி வளரும்.
------------------
ஸ்ரீமத் கம்பராமாயணம் - சுந்தரகாண்டம்
கோவை. ஸ்ரீராமகதாரத்ன - வி.தியாகராஜன்
மதி நிலையம் - ரூ.30
--------------------------------------------------------------------------------

கம்பனின் இராமாயணத்தை இன்புற பருக விரும்புவோர் இங்கும் சொடுக்கலாம். திஸ்கியில் நடைபெறும் அருமையான விளக்க அரங்கம். பி.பி எனப்படும் தூள்.காம் பாலாஜி சீனிவாசனின் தளம் http://dhool.com/balaji/kambar/
http://www.forumhub.com/tlit/ இங்கும் சிறப்பாக நடைபெற்ற விவாத அரங்கம் இப்போது தூள்.காம் தளத்திற்கு இடம் பெயர்ந்துள்ளது.
-------------------------------------------

ஜெயேந்திரர் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் ஜாமீன் பெற்றது, இந்த வழக்கில்
போலீசும், பின்னுள்ள 'சக்தி'களும் அடுத்து எடுக்கும் திசையை வெளிச்சம்
காட்டும். எல்லாம் நன்மைக்கே!
***** ***** *****


- அலெக்ஸ் பாண்டியன்
10-ஜனவரி-2005


2 comments:

ராம்கி said...

பாண்டியன், நம்ம ஹரியண்ணா எழுதிய அனுமன் புத்தகத்தை வாங்கிவிட்டீர்களா?

Alex Pandian said...

ராம்கி,

ஹரியண்ணா புத்தகம் படித்ததில்லை. புத்தக விபரங்கள் தரவும். நன்றி. அவர்தம் கட்டுரைகளை மடல்குழுக்களிலும் ஹரிமொழி.காம் தளத்திலும் படித்துள்ளேன்.

- அலெக்ஸ்