Thursday, February 03, 2005

ஒரு பெட்டிக் கடையும் இரண்டு இளம் பெண்களும்

சில நாட்களுக்கு முன் மாலைநேரப் பசியாற, பக்கத்தில் உள்ள ஓர் தர்ஷனிக்கு நடந்து கொண்டிருந்தோம். பெங்களூரில் தர்ஷனிகள் - நம்ம ஊர் 'பவன்'களுக்கு சமம். நின்று சாப்பிட்டு உடனே திரும்பலாம். அல்லது அதே இட்லியை அதிக விலை கொடுத்து உள்ளே உட்கார்ந்து சாப்பிட்டும் வரலாம்.

மாலை நேரமாதலால் ஒரே இளைஞர்கள், இளைஞிகள் கூட்டம். கல்லூரியிலிருந்தும், பள்ளியிலிருந்தும், ஜிம்மிலிருந்தும் திரும்பும் பலர்.. அலுவலகத்தில் இன்னும் பல மணிநேரம் செலவழிக்கவேண்டிய கணினித்துறை மக்களும் அடங்குவர்.

பல்வேறு மாநில, நாட்டு மக்களும் கல்லூரிகளில் படிப்பதால் (உதாரணம் - மணிப்பூர், மிசோரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், மிடில் ஈஸ்ட் எனப்படும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாட்டு மாணவர்கள்) ஆனால் எல்லோரும் பார்க்க இந்தியர்கள் தோற்றத்திலேயே இருப்பதால் பெரிதாக வித்தியாசம் தெரியாது. எல்லோருக்கும் அவரவர்க்கு அதது என்பது போல காபி ஷாப், பழச்சாறு கடை, வறுவல் கடை, தர்ஷனி, சாகர் அல்லது பேக்கரி என எல்லா கடைகளும் கலந்து கட்டி இருப்பதால் மாலை நேரம் ஒரே கும்பலாக இருக்கும். பல
தென்னிந்திய, வட இந்திய மாணவிகள் உடையில் இறக்கமும், கிறக்கமும் காட்டி வலம் வருவர். சில ஜோடிகள் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து ஒட்டி உரசி 'கை போட்டபடி' வருவர். (ஐயா.. இதெல்லாம் இருட்டினப்புறம் இல்லை.. நல்ல வெளிச்சம் உள்ள மாலைப் போழ்தினிலேயே)

சில ஜோடிகள் சாலையின் நடைபாதைப் பகுதியில் இரண்டுசக்கர வாகனங்களை நிறுத்தி ஒருவரை ஒருவர் கிராஸாக உட்கார்ந்து.. அதென்ன 'விதி' படத்துல சொல்வாங்களே 'ஒரே எளனில ரெண்டு கொளா போட்டு குடிச்சாங்க'.. அந்த மாதிரி ஒரே பழச்சாறு டம்ளரை மாற்றி மாற்றி அருந்துவதும், ஒரே பஜ்ஜியை காக்காய்க் கடி கடிப்பதுமாய் இருப்பர். சிலர் இரண்டு முக்காலிகளை அருகருகில் போட்டு, ஒருவர் கால், இன்னோருவர் காலின் உள்ள அமையுமாறு அமர்ந்து ஒருவர் தொடையை இன்னொருவர் தடவ.. சில ஜோடிகள் கழுத்தைக் கட்டியபடி, சிலர் 'ஸ்மூச்சிங்' எனப்படும் வகையில்... (என்ன கண்ணறாவி இது என நீங்கள் முணுமுணுப்பது புரிகிறது.. நேரில் தினமும் பார்க்கும் எமக்கு எப்படி இருக்கும்..!)

அப்படியாப்பட்ட ஒரு நாளிலே, தர்ஷனியில் சாப்பிட்டுவிட்டு ஒரு சிறிய பெட்டிக்கடைப் பக்கம் ஒதுங்கி 2 கடலை மிட்டாய் வாங்க, கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு மாருதி காரில் இரண்டு இளம் பெண்கள் வந்திறங்கினர். எதிர்ப்புற சாலையில் வண்டியை நிறுத்திவிட்டு, பெட்டிக்கடைப் பக்கம் வந்தனர். ஒருவர் சுரிதார், ஒருவர் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டீ-ஷர்ட். சுரிதார் இளைஞி நிச்சயம் தென்னிந்தியப் பெண். ஜீன்ஸ் இளைஞியும் பார்த்தால் வட இந்தியப் பெண் போல தெரியவில்லை. நாங்கள் எங்கள் கடலை மிட்டாய் பிஸினஸை(!) முடித்துக்கொண்டு சற்றே நகர்ந்தவுடன், ஜீன்ஸ் பெண் அந்த பெட்டிக்கடையின் ஓரம் ஒதுங்கினார் - பக்கவாட்டில் மழைச்சாரல் தடுப்புப்பக்கம் நின்று கொள்ள, சுரிதார்ப் பெண் நாங்கள் ஆண்கள் ஒதுங்கியவுடன், பெட்டிக்கடைக்காரரிடம் ஏதோ கேட்க, ஜீன்ஸ் பெண் ஏதோ சைகை செய்ய, ஒரு சிறு 'இதுவா அதுவா' போன்ற உரையாடல்.. கடைசியில் கடைக்காரர் பொருளை எடுத்துக் கொடுக்க, சுரிதார் பெண் பணத்தைக் கொடுத்து அதை வாங்கி, மறைவில் ஒதுங்கி நின்றிருந்த ஜீன்ஸ் பெண்ணிடம் அளிக்க - ஒரு 'இளிப்பு'.. கையில் சந்தோஷத்துடன் வாங்கி கைக்குள் அடக்க.... என்ன பொருள் என கேட்கிறீர்களா... 'கோல்ட் ·ப்ளேக் ·பில்டர்' சிகரெட் ஒரு பாக்கெட். அஷ்டே..!

o0o o0o o0o

சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் பற்றி தமிழ் வலைப்பதிவுகளில் பெரிதாகப் பார்த்த ஞாபகம் இல்லாத சில விஷயங்கள்.. (சிலர் பதிவு செய்திருந்தனர்).

ஆந்திர தெலுகு தேசம் எம்.எல்.ஏ ரவி கொல்லப்பட 2 நாட்களுக்கு ஆந்திராவே பற்றி எரிந்தது. பல நூறு பஸ்களும், கடைகளும் சூறை. சன் அல்லது இதர டிவி சானல்களில் அக்காட்சியைப் பார்த்தவர்கள் நிச்சயம் பொருமியிருப்பார்கள். அந்த அளவிற்கு வன்முறை.. சிலர் போலீஸையே அடித்தனர். ரவிக்கும் பல கிரிமினல் தொடர்புகள் உண்டு என்றாலும், தெலுகு தேசம் கட்சிக்கும், சந்திரபாபு நாயுடுகாருக்கும் மிகப் பெரிய இழுக்கு ஏற்படுத்திய மாநில அளவு வன்முறை. நாயுடுவும் தானும் மற்றவர்களைபோல தான் என வெளிப்படுத்திய ஒரு நிகழ்வு.

உத்திரப்பிரதேசத்தில் அலகாபாத்தில், மாயாவதி கட்சி (ப.ச.க) எம்.எல்.ஏ கொல்லப்பட அங்கும் வன்முறை தாண்டவம். உத்திரப்பிரதேசத்தில் இதெல்லாம் சர்வ சாதாரணம் என்பது தெரிந்தது.

மகாராஷ்டிரத்தில் சதாராவில் நடந்த கோயில் விழா கூட்ட நெரிசலில் 250க்கும் மேற்பட்டவர்கள் பலி. இதைப்பற்றி யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை (முதல் நாள் தவிர.. சில டிவி சானல்கள் ஒரு நாள் செய்தி சொல்லிவிட்டு அடுத்த விஷயத்திற்கு தாவிவிட்டனர்.

பீஹாரில் பள்ளிக் குழந்தைகள் கடத்தப்பட்டு வரும் நிலை - தேர்தலுக்காக நடக்கும் பல்வேறு கூத்துகள்.

எங்கே போகிறோம்...?

o0o o0o o0o

இதில் ஜோக் - ஜெ.ஜெ.யின் சமீபத்திய '39 தொகுதிகளிலும் மறுதேர்தல் நடத்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்' - சட்டசபைப் பேச்சு


- அலெக்ஸ் பாண்டியன்
03-பிப்ரவரி - 2005

5 comments:

Kangs(கங்கா) said...

பெங்களுர் ரோடையே நேரில் பார்த்த மாதிரி வருணனை. நல்ல ஜமாய்ங்க

Boston Bala said...

பெங்களூர் சாலைகளைப் பார்த்து ரொம்ப வயத்தெரிச்சல் போல ;;-)

Moorthi said...

பில்டர் வெச்சிதான அடிக்கிறாங்க...என்னமோ கஞ்சா அடிக்கிறா மாதிரி பதருறீங்க...பரவால்ல கண்டுக்காம விட்ருங்க. நீங்களும் நானும் சொல்லித் திருத்தமுடிந்தால் நிச்சயம் திருத்துவோம்.

LA_Ram said...
This comment has been removed by a blog administrator.
LA_Ram said...

அய்யோ பாவம், ரெண்டு பச்சைப் புள்ளைங்க ஸொம்னா வெறும்ன தம்மு அடிக்கறதுக்கு நாட்ல இன்னா பாடு படுதுங்க. கண்லே ரத்தமே வருது சார். 'தனி ஒருவளுக்குத் தம்மடிக்க உரிமையில்லையெனில் அந்தப் பொட்டிக் கடையையே கொளுத்துவோம்'.

ஏன் சார் அலெக்சு, நீயும் அடிக்க மாட்டே, அடிக்கறவங்களியும் ஸொம்னா வுடமாட்டே, படா பேஜாரா கீதுபா.