Thursday, February 10, 2005

பப்பாளி...தக்காளி....திராட்சைக் கொடி..!

முந்தய வார (6-பிப்ரவரி) ஆனந்த விகடனில் இப்படி எழுதியது என்.சொக்கன். டென்னிஸில் இந்தியாவின் புதிய சாதனை நாயகியான சானியா மிர்ஸா. பதினெட்டு வயசு பப்பாளி. மும்பையில் பிறந்த தக்காளி. ஹைதராபாத்தில் வளரும் திராட்சைக் கொடி!
Photo Courtesy: New Indian Express
சமீபத்தில் இந்திய விளையாட்டு அரங்கில், தனது திறமையுடன், உழைப்பு, முயற்சி என முன்னுக்கு வந்துள்ள சானியா மிர்ஸா என்னும் இளைஞிக்கு இப்போதே மாடல் அழகிகள் வரிசையில் முக்கியத்துவம் கொடுத்து அவரது விளையாட்டுத் திறனை மழுங்க அடித்து விடுவார்கள் போலிருக்கிறது. விளையாட்டுத்துறையில் பெண்களில் கிளாமராக யாரும் இல்லாத நேரத்தில் கொஞ்சம் வாளிப்பாக ஒருவர் வந்தவுடன் அவரை முன்னிறுத்தியே பல ஊடகங்கள் தங்கள் கலர்பட அணிவகுப்பை நடத்துகிறது போல. அவர் மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபன் 3 ரவுண்ட் வரை வந்தது சிறந்த சாதனை. ஆனால் முடித்து இந்தியா திரும்பிய உடனேயே டைம்ஸ் ஆ·ப் இண்டியா தினப்பத்திரிக்கை தனது சண்டே எடிஷனின் முதல் பக்கத்தை எடிட்டராக பணியாற்ற வாய்ப்புக் கொடுத்து பல படங்கள் போடுவதும், என்.டி.டி.வியில் ஸ்ரீனிவாசன் ஜெயின் மும்பை பேட்டியில் நிஜமாகவே உங்களுக்கு பாய் ·பிரண்ட் கிடையாதா என வழிவதும், மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவின் தம்பி ஸ்போர்ட்ஸ்டார், ஒரு டென்னிஸ் பந்துக்கு மூக்குத்தி அணிவித்து (ரசித்தேன்..!) விளம்பரம் செய்வதும்... சானியாவுக்கு காலில் சுளுக்கு, மூக்கில் ஜலதோஷம், கையில் சிராய்ப்பு என தினமும் செய்திகள் வருவதும்...ரொம்பவும் ஓவராகவே படுகிறது. இதனால் அவர்தம் ஆட்டமும் திறமையும் பாதிக்காமல் இருக்க வேண்டும்.


வாழ்க சானியா.. வளர்க அவர்தம் டென்னிஸ் சாதனைகள்...! இந்த மீடியா முழக்கத்தில் தனது இலக்குகளைத் தொலைக்காமல், நாட்டுக்கும் தனக்கும் நல்ல பேர் சேர்ப்பார் என எதிர்பார்க்கிறோம்.

########

என்.சொக்கன் இப்படி பப்பாளி, தக்காளி, திராட்சைக்கொடி என எழுதியிருப்பார் என நம்பவில்லை. அவர் நல்லவர். எங்க ஊர்க்காரர் :-)

எந்த இளம்பெண்ணை வர்ணிப்பதாக இருந்தாலும் ஆனந்த விகடனின் சமீபகால உதவி, துணை, இணை பொறுப்பாசிரியர்கள் இதிலெல்லாம் கில்லாடிகள். மூங்கில் தேகம், சந்தனக் கிண்ணம், கொஞ்சும் மோவாய் என பெண்களின் அங்கங்களை உன்னிப்பாய் கவனித்து, வார்த்தை ஜாலமிட்டு, படிப்போரைக் கிறங்கடிக்கும் வார்த்தைகளில் சுண்டி இழுக்கும் வண்ணம் எழுதி, அதற்கேற்றார்போல் படங்களும் போட்டு.. உம்.. என்ன செஞ்சு என்ன.. 'தினுசு கண்ணா தினுசு' சர்குலேஷனில் முந்திகிடுச்சே !

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-


இந்தியாவின் முதல் ஒலக அளகி எனப்படும் ஐஸ்வர்யா ராய் (சுஷ்மிதா சென் - யுனிவர்ஸாக இருந்தாலும்... பெயரும் புகழும், பணமும் குவிவது ராய்க்குத்தான்).. அமெரிக்க டிவி பேட்டியில் முழங்கியிருக்கிறார்... 'நடிகர்கள்
நாடோடிகள்.. எங்கு சான்ஸ் கிடைக்கிறதோ அங்கு செல்வர்' என்கிற தொனியிலும், தான் பெற்றோருடன் வாழ்வது உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல் என்ற மாதிரியில் பதில்கள். இவர் திரைப்படங்களில் என்ன சாதித்துவிட்டார் அல்லது என்ன பெரிய அழகு இருக்கிறது என எல்லோரும் தம்பட்டம் அடிக்கின்றனர் என்பது புரியவில்லை. இன்றைய இளைய சமுதாயத்தினருக்கும் தனது ரூமிலும் கணினித்திரையில் போஸ்டர் ஒட்டிக்கொள்பவருக்கும் வேண்டுமானால் பெரிய அழகியாய்த் தெரியலாம். பெங்களூரிலிருந்து ஓசூர் செல்லும் பேருந்தின் பின்பக்க கண்ணாடி முழுவதும் எல்லாம் ஒட்டி வைத்திருக்கிறார்கள். பின்னால்
வரும் வண்டியோட்டிகள் கவனம் சிதறினால் என்னாவது ?

இவர் நடித்த பெரும்பான்மையான படங்கள் பெரும் வெற்றி பெறாத நிலையிலும் வெறும் இன்றைய மாடர்ன் லுக் என்பதாலேயே இவரைப் பிரபலப்படுத்திக் காட்டுகின்றனரோ என புரியவில்லை. தபு, ஜ்உஹி சாவ்லா, மனீஷா கொய்ராலா, இவர்களிடம்
இல்லாத திறமையா, அழகா ?

என்ன இருக்கிறது ஐஸ்வர்யா ராயிடம் ?

ஐஸின் ரசிகர்கள் கட்டையை எடுப்பதற்கு முன் ஜூட்..!

- அலெக்ஸ் பாண்டியன்
10-பிப்ரவரி-2005

4 comments:

Anonymous said...

அலெக்ஸ் பாண்டியன்,

கட்டுரைக்கு நன்றி - நீங்கள் ஊகித்தபடி, அந்த வர்ணனையை எழுதியது நான் இல்லை ! விகடனில் அதைப் படித்துவிட்டு ஷாக் ஆனதுதான் நான் ! (நல்லவேளை நான் எழுதிய முழுக் கட்டுரையை ஏற்கெனவே என் மனைவியிடம் படிக்கத் தந்திருந்ததால், ஒரு முறைப்பிலிருந்து தப்பினேன் :)

உண்மையில், என் பெயரில் வந்ததேயொழிய, அந்தக் கட்டுரையில் பெரும் பகுதி, நான் எழுதியதில்லை - வேறு யார் எழுதினார்களோ எனக்குத் தெரியாது - விகடனுக்கே வெளிச்சம் !

நீங்கள் என்மீது வைத்துள்ள 'நம்பிக்கை'க்கு நன்றி :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

maalan said...

சில மாதங்களுக்கு முன் அவள் விகடனில் ஜெயந்தி சங்கர் எழுதிய கட்டுரை ஒன்று வெளியானதை அடுத்து சிங்கப்பூரில் சலசலப்பு. போலீஸ் கேசாகிவிடுமோ என்ற பதைப்பு எல்லாம் ஏற்பட்டன. நான் ஜெயந்தியைக் கேட்டபோது, தான் அந்த வரிகளை எழுதவில்லை என்றும், தனது கட்டுரை நிறையவே மாற்றப்பட்டுத் தன் பெயரில் பிரசுரமாகியிருப்பதாகச் சொன்னார். அந்த ஒரு வார காலம் முழுவதும் அவர் மிகுந்த மன வேதனைக்குள்ளாகியிருந்தார்.

இப்போது சொக்கன் தனது கட்டுரை மாற்றப்பட்டுவிட்டதாக சொல்கிறார்.

இது போன்ற சூழ்நிலையில் இளம் எழுத்தாளர்கள் என்ன செய்ய வேண்டும்? துணிந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். கடிதம் மூலமாக மட்டுமன்றி வேறு ஏதேனும் ஒரு இடத்தில் ( இணைய தளம், மடலாடற்குழு, வலைப்பதிவு) தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து விட வேண்டும். முடிந்தால் தங்களது ஒரிஜினல் கட்டுரையையும் பதித்து விட்டால் நல்லது. இது இரண்டு காரணங்களுக்காக:
1. சட்ட பூர்வமான நடவடிக்கைகள் ஏதேனும் வந்தால் தற்காத்துக் கொள்ள இது உதவும்.
2. உண்மை என்ன என்று கொஞ்சம் பேருக்காவது புரியும்.

தொடர்ந்து இதே போல அந்தப் பத்திரிகை நடந்து கொண்டால் அதைத் துணிந்து புறக்கணியுங்கள். Don't worry. It is not the end of the world.

அது சரி. சொக்கன் கையால் எழுதி கிழக்குப்பதிப்பகத்தால் புத்தகமாகும் பாக்கியம் சான்யாவிற்கு உண்டா? அல்லது அதற்கெல்லாம் கிரிக்கெட் விளையாடும் ஆணாகப் பிறந்திருக்க வேண்டுமா?

Alex Pandian said...

சொக்கன் மற்றும் மாலன்,

உங்கள் கருத்துகளுக்கும், விபரங்களுக்கும் நன்றி.

சானியா ஹைதராபாத் ஓபன் போட்டியில் செமிஃபைனல்ஸ் வரை வந்துள்ளார்.
ஜெயிப்பார் என நம்புவோம்.

நல்ல வேளை. அவர் இஸ்லாமிய சமுதாயத்தின் விதிகளை மீறி உடையணிகிறார் என்றெல்லாம் எந்த கோஷ்டியும் இன்னும் கிளம்பவில்லை.

ஆ.வி பற்றி: பாரம்பரிய மிக்க ஒரு பத்திரிக்கை - ஜெயகாந்தன், சுஜாதா, எஸ்.ராம.கி
போன்றோரின் எழுத்துகளை வெட்டாமல்/மாற்றாமல் பிரசுரிக்க ஒத்துக்கொள்ளும்
போது இளம்/புது எழுத்தாளர்களின் எழுத்துக்களை இப்படி திரிப்பது நல்லதாகப் படவில்லை. அதுவும் சொக்கன் போன்றோரின் இமேஜே வேறு. அதே வாரம் பிரசுமாயிருந்த லாஸ் ஏஞ்சலஸ் ராமின் 'நாடகமே உலகம்' இரு பக்க கதையையும்
இவ்வாறு பலமாக வெட்டியுள்ளனர். அந்தக் கதையின் ஒரிஜினலை (தனிப்பட்ட விதத்தில்) ஒரு வருடம் முன்னரே படித்திருந்ததால் (அந்தக் கதையின் தாக்கம் என்னிடம் அதிகம் இருந்ததால் நல்ல ஞாபகம் இருந்தது). அந்தக் கதையின் தாக்கம் பிரசுரிக்கப்பட்ட கதையில் இல்லை. எல்லே இளவலும் தனது கதைக்கு நேர்ந்த இந்த கதிக்கு வருத்தம் தான் தெரிவிக்க முடிந்தது (என்னிடம் :-))

- அலெக்ஸ்

N. Chokkan said...

அன்புள்ள திரு. மாலன்,

ஆனந்த விகடனிலிருந்து அவர்களேதான் தொலைபேசிமூலம் அணுகி, கட்டுரை கேட்டார்கள். எழுதித் தந்தேன் - நான் எழுதியதில் எட்டில் ஒரு பங்கைமட்டும் எடுத்துக்கொண்டு, மிச்சத்தைத் தாங்களே எழுதி முடித்திருக்கிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை இது பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது. குமுதத்தில்கூட வெட்டுவார்களேதவிர, தாங்களாக கண்டதை எழுதி சேர்க்கமாட்டார்கள் - விகடன் இப்படி செய்வது மிக மனவருத்தம் தந்தது.

இணையத்தில் தனியே பிரசுரிக்குமளவு என்னுடைய அந்தக் கட்டுரை தரமானது என்று சொல்லமுடியாது, பத்திரிகை அவசரத்துக்கு எழுதிய கட்டுரைதான் - ஆகவே, அதை இங்கு வெளியிடுவது யாருக்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை :)

>>>> தொடர்ந்து இதே போல அந்தப் பத்திரிகை நடந்து கொண்டால் அதைத் துணிந்து புறக்கணியுங்கள்.

அவர்களாக அணுகும்போது மறுக்க தயக்கமாக இருக்கிறது, அதனால்தான் இந்தமாதிரி பிரச்சனைகள் நேர்ந்துவிடுகிறது !

>>>> சொக்கன் கையால் எழுதி கிழக்குப்பதிப்பகத்தால் புத்தகமாகும் பாக்கியம் சான்யாவிற்கு உண்டா? அல்லது அதற்கெல்லாம் கிரிக்கெட் விளையாடும் ஆணாகப் பிறந்திருக்க வேண்டுமா?

இந்தக் கேள்விக்கு பா.ரா.வும் பத்ரியும்தான் பதில் சொல்லவேண்டும் :)

- என். சொக்கன்,
பெங்களுர்