Sunday, February 13, 2005

காதலர் தினமும் கண்ணாடியும்..!

மற்றுமோர் காதலர் தினம். நாடெங்கும் பூக்களும் வாழ்த்து அட்டைகளும் நல்ல வியாபாரம்.

கல்லூரிக்கருகில்
கடைபோட்டிருப்போரின்
கல்லாவில் காசதிகம் தான்
காண்பீர்
காதலர் தினத்தன்று
(கனா... கனா... கனா... அட கவித மாதிரி இருக்குல்ல..!)

எமக்கும் கவிதைக்கும் அவ்வளவு சினேகம் இல்லை. அது போல காதலர் தினத்திற்கும்.

காதல் என்ன வருடத்திற்கு ஒரு தினம் தான் கொண்டாடப்படவேண்டியதா ? இல்லை நமது பண்பாட்டின் படி காலாகாலமாய் அன்புடன் வாழ்ந்து வரும் தம்பதிகளின் காதல் பெரிதா ? பட்டிமன்றம் போன்ற செயல்களுக்கு நமக்கு நேரமும் இல்லை.

ஆனால் நாடு முழுவதும் இந்த கமர்ஷியல் காதலர்தினக் கலாச்சாரத்தின் தாக்கம் அதிகமாகி வருவது நிச்சயம் எனக்குப் பிடிக்கவில்லை. அங்குமிங்கும் சில சிவசேனைக்காரர்களும் விஸ்வ இந்து பரிஷத் ஆட்களும் சில கடைகளையும், கண்ணாடிகளையும் உடைக்கும் சம்பவம் நடைபெறும். ஆர்சீஸ் கடைக்காரர்களின் இன்றைய, நாளைய வருமானம் சில/பல கோடி என வணிக வாராந்தரிகள் கணக்குப் போடும். எப்படியோ....

காதலர் தினத்தன்று கல்லூரிக்கருகில் செல்ல வாய்ப்பிருந்தால் ஒரு நடை சென்றுவிட்டு வரவும். வலைப்பதிய பல கட்டுரைகள் கிடைக்கலாம்.

- அலெக்ஸ் பாண்டியன்
13-பிப்ரவரி-2005

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

காதலர் தினம் பற்றிய மடல்களில் சுமார் 5 ஆண்டுகள் முன் தமிழ்.நெட்டில் நடந்த ஒரு சுவையான திரிகளில், இண்டி ராம், ஆசீப் மீரான் இவர்கள் எல்லாம் பங்கு பெற்ற திரியில் ஒரு கேள்விக்கு எல்லே சுவாமிநாதன் அவர்கள் எழுதிய ஒரு படைப்பு இதோ தங்கள் ரசிப்புக்கு - யுனிகோட் எழுத்துருவில்...

நன்றி: தமிழ்.நெட் மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் சுவாமிநாதன், இண்டிராம், ஆசீப் மீரான்

---------------------------------------------------------------
<இண்டி ராம்>
>>எவ்வளவு பெரிசுகள் உள்ளன இக்கூட்டத்தில்? காதலுணர்வை மறந்துவிட்டனவா?
>> நிலாவைப் பார்த்ததும் "பொண்டாட்டியின்" நினைவு வருமா?

<ஆசீப் மீரான்>
>அமாவாசை நிலாவைப் பார்த்தால்(?) வருமென்று சில பெருசுகள் பெருமூச்சு
> விடுவதாகக் கேள்வி:-)))

---------------------------------------------------------------
இதோ எல்லே சுவாமிநாதனின் காதலர் தினத்திற்கான படைப்பு
-------------------------------------------------------------

இருள்சூழ் இவ்விரவில் ஒளிரும்
மதிமுகமே மங்காப்பொன்னே
மணிவிளக்கே மரகதமே
வானில் மதி வரத்தயங்குவதேன் ?
உன் வட்ட முகம் கண்டு
தன்முகம் காட்ட வெட்கியோ ?
கடந்த காலம் மறந்தாயோ ?
காதல் எல்லாம் இழந்தாயோ ?
வெண்ணிலவை அழைத்தோம் மறந்தாயோ?
வழக்குரைத்து நின்றோம் மறந்தாயோ?
அருகிலமர்ந்து அம்புலி அழைத்து
அருமைக்குழந்தைகளுக்கு
அன்னமூட்டியது அறியாயோ ?
அன்ன நடையாளே
மின்னல் இடையாளே
கன்னத்தைக் காட்டு கண்ணே
கட்டியோர் முத்தம் தருவேனே
கணவனைக் கனிவோடு பாராமல்
கோபப்பார்வை ஏனோ ?
ஆண்டு பலவாயினும்
அளவிற் குறையுமோ காமம்?
அருகில் வா ஆடிப்பாடி மகிழலாம்

அம்மாவாசை என்று அறியீரா
அதனால் வாராது மதி இன்று
உங்கள் மனைவி நானில்லை
உங்கள் வீடும் இதில்லை
வீடுமாறி வந்துவிட்டீர்
கண் குறைக்கு கண்ணாடி
போட்டால் என்ன கேடு?

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
பிப்ரவரி-2000
====================
---------------------------------------------------------------

No comments: