Monday, March 14, 2005

கிழக்கே போகும் ரயில் - 1

அட்ச ரேகை, தீர்க்க ரேகை என எல்லோரும் படித்திருப்பீர்கள். அதாவது Latitude and Longitude. இப்படி 12.98 N, 77.58 E உள்ள ஒரு ஊரிலிருந்து 13.6N 80.18E யில் உள்ள ஒரு ஊருக்கு ரயில் வண்டியில் சென்றால் அது கிழக்கே போகும் ரயில்தானே ? 1979ஆம் ஆண்டு வெளியான 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் ரயிலின் கடைசி பெட்டியில் சாக்பீஸால் கதாநாயகி செய்தி எழுத, அது நகரத்தில் உள்ள கதாநாயகனுக்கு போய்ச் சேரும். இப்போதோ கையடக்க செல்பேசியில் எண்களை அழுத்தினால் செய்தி உடனே உலகெங்கும் செல்லும் வசதி வந்துவிட்டது. கதையை நிறுத்திவிட்டு விஷயத்திற்கு வருகிறேன்.

பெங்களூரிலிருந்து சென்னைக்கு தினமும் சுமார் 7 ரயில்கள் சென்று/வந்து கொண்டிருந்தாலும் அனைத்திலும் எல்லா தினங்களிலும் (பெரும்பாலும்) அதுவும் வார இறுதிகளில் கூட்டம், கூட்டம்.. கூட்டம். இதில் தினமும் தமிழக அரசின் விரைவு போக்குவரத்தும், கர்நாடக அரசின் சொகுசு பேருந்துகளும், தனியாரின் அதி சொகுசு பேருந்துகளும், ஏறி இறங்கி செல்ல வழியுள்ள - ஹோசூர், கிருஷ்ணகிரி, வேலூர் முறையும் இருந்தாலும், அதென்னவோ எல்லா மார்க்கத்திலும் கூட்டம்.

சமீபத்தில் ஒரு நாள் ஒரு உறவினர் திருமணத்திற்கு சென்னைக்குச் செல்ல வேண்டியிருந்தது. கடந்த சில வருடங்களாக, வருடத்திற்கு ஒரு முறைதான் சென்னை செல்ல நேர்ந்தது. அதுவும் ஒரே நாள் பயணம் - காலை சென்று, மாலை திரும்பும் பயணங்கள்.

தேசிகன் தன்னுடைய பெங்களூர் சென்னைப் பயணங்கள் பற்றி இங்கு எழுதியுள்ளார். அவர் குறிப்பிட்ட அந்த வர்ணனைகள அனைத்தையும் இந்த ஒரு நாள் பயணத்தில் காண முடிந்தது. அதுவும் இந்த இளைஞர்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே. ஏதோ டிக்கெட் வாங்கிவிட்டால் தாங்கள் தான் ரயிலுக்கு உரிமையாளர்கள் போல் அரட்டை, ரகளை. அதுவும் வண்டி பெங்களூரில் கிளம்புவதே நள்ளிரவிற்கு அருகில். அதுவும் பெங்களூர் புறநகர் தாண்டும் போது, நள்ளிரவு ஆகிவிடுகிறது. அதையும் தாண்டி சுமார் 2-3 மணிநேரங்கள் சத்தம்போட்டு அரட்டை. கம்பார்ட்மெண்டில் உள்ள, பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள் தூக்கம் கெடும் என்ற எண்ணங்கள் துளிக்கூட இல்லாமல் சத்தம். சத்தத்தைக் குறையுங்கள் என்று சொன்னாலும் கேட்காத ஒருவித தான்தோன்றித்தனம்.

இதன் நடுவே பெப்ஸி பாட்டிலும், ரம் பாட்டிலும் திறந்து ஒரே தண்ணிமயம். கம்பார்ட்மெண்ட் முழுவதும் புளித்த பழ வாசனையில் (?) மற்றவர்கள் எப்படித் தூங்கினார்களோ - அடியேனுக்கு சுத்தமாகத் தூக்கம் கெட்டது.

அதுவும் இரவு நேர ரயில் இப்போதெல்லாம் மிகவும் வேகமாக செல்கிறது. ரயிலின் வேகம் மணிக்கு 90-100 கி.மீ வேகத்தில் சில சமயம். அப்படியே ஆட்டம். இதில் எங்கே தூக்கம். ஒவ்வொரு ஸ்டேஷனும் வருவது - கண்ணில் வெளிச்சம் - என ஒரு மாதிரி கண் அசந்த நேரத்தில் பெரம்பூர் வந்துவிட்டது :-)

(தொடரும்)

- அலெக்ஸ் பாண்டியன்
14-மார்ச்-2005

No comments: