Tuesday, March 08, 2005

பெங்களூர் நிறுவனங்கள் மீது தாக்குதல் அபாயம் ?

பெங்களூர் கணினி நிறுவனங்கள் மீது லஷ்கர்-ஏ-தோய்பா தீவிரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக புதுடில்லியில் நடந்த சம்பவங்கள், நேற்று பெங்களூர் கண்டோன்மெண்ட் ஸ்டேஷனில் பிடிபட்ட கத்தி, துப்பாக்கிகள், குண்டுகள், கமிஷனரின் பேட்டி என ஒருவித அலர்ட் ஏற்பட்டிருக்கிறது.

இதன் பின்னணியை கொஞ்சம் ஆராய்வோம். மும்பை மற்றும் டில்லிக்குப் பிறகு நாட்டில் தற்போது அதிக அளவில் பணம் புழங்கும், வெளிநாட்டினர் வந்து செல்லும் இடம், உலக அரங்கில் ஒரு பெரிய பெயர், உலகத் தலைவர்கள் எல்லோரும் இந்தியா வந்தால் பெங்களூரில் கையை நனைத்துவிட்டுத்தான் செல்வேன் என பிடிவாதம் பிடிக்கும் அளவிற்கு, பெங்களூர் தீவிரவாதிகளுக்கு ஓர் இலகு இலக்காக மாறிவிட்டது. இங்கு ஏதேனும் தாக்குதல் நடந்தால் - அது கண்டிப்பாக கணினி உலக கம்பெனிகளுக்கும் ஏன் இந்தியாவின் பொருளாதாரத்திற்குமே வேட்டு வைக்கக்கூடிய அபாயம் உண்டு. நேற்று கூட வெனிசுவேலா அதிபர் வந்து சென்றார்.

ஏற்கனவே அமெரிக்கக் கம்பெனிகள், செக்யூரிடி செக்யூரிடி என பலமுறை சொல்லிவிட்டதால்
அநேகமாக எல்லா பெங்களூர் கம்பெனிகளும், Disaster recovery என்ற திட்டத்தில் சென்னையிலிருந்தோ கொல்கத்தாவிலிருந்தோ சேவையைத் தொடர, எல்லா கட்டமைப்பும் ஏற்படுத்தியுள்ளன என்றாலும், தாக்குதல் நடந்தபின் (ஈன்ஷா அல்லாஹ்!) மீண்டு வந்து பிஸினஸ் பிடிப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான செயல். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய பாகிஸ்தான் போர் மூளும் அபாயம் இருந்த போது, எல்லா பிஸினஸ் தலைகளும் அமெரிக்க நிறுவனத்தினரிடம் மிகவும் வாதாடி, போராடித்தான் பெங்களூருக்கும், சென்னைக்கும் பிஸினஸ் கொண்டு வந்தனர். அதுவும் சென்னையில் சுநாமி, பெங்களூரில் தீவிரவாத தாக்குதல் கொல்கத்தாவில் கம்யூனிசம் என போக்கிடம் இல்லா நிலைமை தோன்றினால் (மும்பையும் டில்லியும் ஏற்கனவே தீவிரவாத தாக்குதல் இலக்கில் இருப்பதால்).. இத்தகைய ஒரு நிலை நிச்சயம் புது பிஸினஸை பாதிக்கும்.

மேலும் பெங்களூரில் கணினி நிறுவனங்கள் தவிர, பெல், பி.எச்.ஈ.எல், என்.ஏ.எல், டி.ஆர்.டி.ஓ, எச்.ஏ.எல் மற்றும் விமானப்படை, இராணுவம் என மிக முக்கியமான அரசாங்க நிறுவனங்களும் உள்ளன. (மற்றவர்கள், தனியார்கள் எல்லாம் முக்கியம் இல்லையா என கேட்கக்கூடாது.. எல்லாரும் முக்கியம்தான்.. ஆனால் இங்கெல்லாம் தாக்குதல் நடந்தால் அதன் தீவிரமும், Impactம் அதிகம். உலக அளவில் ஒரு அவப் பெயரும், பொருளாதார அளவில் வேலைவாய்ப்பில், மிகக் கடுமையான சோதனைகளை சந்திக்க நேரிடும்.

சென்ற வாரத்தில் ஒரு நாள் அலுவலகம் நுழைகையிலேயே எல்லா பைகளையும் சோதனை செய்தனர். என்னவென்று விபரமாக சொல்லவில்லை. ஆனால் அரசு இயந்திரம் கடந்த 3 நாட்களாகத்தான் இந்த தாக்குதல் அபாயம் பற்றிய செய்திகளை கசிய விட்டுள்ளது. தற்போது உள்ள செக்யூரிட்டி முறைகள் இன்னும் பலப்படுத்தப்படவேண்டும். எல்லா அலுவலகங்களிலும், சிசிடிவி போன்ற உபகரணங்கள் வைத்திருந்தாலும், சில நடைமுறை குறைபாடுகளை பயன்படுத்திக்கொண்டு, தீவிரவாதிகள் ஊடுருவ சாத்தியமுண்டு. மேலும் மேற்சொன்ன அரசு சார் நிறுவனங்களுக்கு இருக்கும் கட்டிட அமைப்பு, ஆள் படை, அம்பு எல்லாம் தனியார் நிறுவனங்களுக்கு இருக்காது. தினமும் 10ஆயிரம் மக்கள் சுமார் அரைமணிநேர இடைவெளியில் அலுவலக வாயிலில் நுழையும் போது, அங்கு நிற்கும் செக்யூரிடி காவலாளி என்னதான் எல்லோரையும் முகமும், அடையாள அட்டையும் பார்த்து வழிவிட்டாலும், புல்லுருவிகள் ஊடுருவதைத் தடுப்பதற்கு மிகவும் தீவிரமான திறன் வேண்டும்.

கணினி நிறுவன தொழிலாளிகள் தவிர, இப்போது எல்லா நிறுவனங்களிலும், கேண்டீன்கள், வாகனங்கள் ஓட்டுவோர் (நூற்றுக்கணக்கில் பஸ்கள், வேன்கள், கார்கள்..), புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்களின் தொழிலாளிகள் என பல்வேறு தரப்பட்டவரும் புழங்கும் இடமாகத் தான் கணினி நிறுவனங்களும் அரசு நிறுவனங்களும் உள்ளன. இவ்வளவு பெரிய பாலில், துளி விஷம் கலந்தாலே.... நினைத்துப்பார்க்கவே கலக்கமாக இருக்கிறது.

நல்லதே நடக்கும் என நம்புவோம்.!


- அலெக்ஸ் பாண்டியன்
08-மார்ச்-2005

No comments: