Thursday, April 07, 2005

அந்தக் கால சினிமா - எல்லே சுவாமிநாதன்

நூறு இருநூறு எனக் கொடுத்து சந்திரமுகிக்கு எல்லோரும் முன்பதிவு செய்துகொண்டிருக்கும் இவ்வேளையில் ' டூரிங் டாக்கீஸ்' என்ற தலைப்பில் எல்லே சுவாமிநாதன் சுமார் 6 வருடங்களுக்கு முன் தமிழ்.நெட்டில் பதிந்த ஒரு நாஸ்டால்ஜிக் கட்டுரை யுனிகோடில். டூரிங் டாக்கீஸில் படம் பார்த்த அனுபவம் இருந்தால் நிச்சயம் இந்தக் கட்டுரையை சிலாகிக்க முடியும். நீங்கள் தஞ்சை மாவட்டத்துக்காரராக இருந்தால் இன்னும் அதிகமாக உணரலாம்.

- அலெக்ஸ் பாண்டியன்
-----------------------------------------

இதோ அந்த 'டூரிங் டாக்கீஸ்'

******* ****** *******
டூரிங் டாக்கீஸ் - எல்லே சுவாமிநாதன்
******* ****** *******

அடேடே நீங்களும் கும்மோணம் போறேளா? பேஷ், பேச்சுக்கு தொணெயாச்சு.

பாய்கிட்ட டீக்கடையில பேசிட்டிருந்தேள் அந்த கால சினிமா பத்தி, காதுல விழுந்துது.

அந்தக்காலத்துல கீத்துக்கொட்டாயில படம் பாக்கறது ஒரு சந்தோஷமான சமாச்சாரம்னா.. சும்மாவா சொன்னாள் பால்ய ஞாபகம் சுகானுபவம்னு. சின்ன வயசுல சினிமா பாக்க நாலணா காசு கிடைக்கும். கைல அடக்கிண்டு லொங்கு லொங்குனு ஓடுவம். மூணுமைல் போகணும் ஜங்ஷன் கிட்ட சிவாஜி டாக்கீஸ் போக. பொதுவா பழயபடம் போடுவான். கூட்டம் சுமாரா ருக்கும்.

டூரிங் டாக்கீஸ்ம்பா. மூணுமாசம் லைசென்சு. வயவெளிய லீசு எடுத்து கீத்துல கொட்டாய் போட்டிருப்பான். மொதல்ல மணலைக்கொட்டின தரை. பின்னால நாலு வரிச நீள பெஞ்சு. அதுக்கும் பின்னால ரெண்டு வரிச சேரு. தரை மூணணா, பெஞ்சு ஆறாணா, சேரு பன்னிரண்டணா.

படம் லேசுல ஆரம்பிக்கமாட்டான். இருட்டணும். கூட்டம் சேரணும். அதுவரைக்கும் பேண்டு வாசிப்பான். பாட்டு போடுவான். சிலைடு போடுவான், போடுவான், போடுவான் போட்டுண்டே ருப்பான்.. போய்க்கேட்டா பொட்டி வரலே ன்னம், ஆளு போயிருக்கு ஜங்ஷனுக்கும்பான். பெரிய மனுசாள் ஒத்தர் படம் பாக்க வரார்ம்பான்.

ஏதோ சாக்கு..சாயங்காலம் ஜம்னு காத்து வரும். ஏர் கண்டிஷன்லாம் தூக்கி அடிக்கும். வயலோல்லிய? சமயத்துல பாம்பும் வந்துரும். அதுவும் நாகின் படம் போட்டு மகுடி ஊதிட்டா கேக்கவாண்டாம். ஜனங்கள் படம் காட்டறச்சே அதுல மூழ்கிடுவா. வில்லன் வீரப்பா வந்தா வசவு விழும். (தலிவரை அடிச்சிட்டல்ல, பாரு ஒனக்குத்தெக்கப்போறாரு குல்லா). ஹீரோக்கு கைதட்டல், விசில்.

இப்படித்தாம் பாருங்கோ ஒரு தடவே அதிசயமா புதுப்படம் ஒண்ணு சிவாஜி டாக்கீசுக்கு கெடச்சுது. கிராமத்துக்கு சினிமா வண்டி வந்து நோட்டிசு குடுத்துது. நாங்க தயாராயிட்டோம்.

படம் என்ன சதாரம். ஜெமினி கணேசன் நடிச்சது. கிட்டப்பா நடிச்ச சதாரம் பாக்கணும்டா, படம்னா அதான் படம்னு என் தோப்பனார் சொல்லுவர். படம் புதுசா. நாத்திகெழமை. மத்த தியேட்டர்ல எல்லாம் அவுஸ்புல்லாம். இடம் கெடைக்காதவா இங்க வந்தூட்டா. கூட்டம் அலை மோதறது. சின்னப்பசங்க ஆறு பேரு ஒத்தன் முதுகெ ஒத்தன் புடிச்சுக்கிட்டு உள்ளே யாரும் பூராம நெருக்கிண்டு நிக்கறோம். ராகுகாலத்துல கெளம்பிட்டமே தெரியாம, டிக்கிட்டு கெடைக்கணும்னு வினாயகரை பிரார்த்திச்சுகிறோம்.

டிக்கிட்டு குடுக்க ஆரம்பிச்சாச்சு. லயன் மெதுவா உள்ள போறது. டிக்கிட்டு வாங்கி ஒரு வழியா உள்ள போயிட்டம். இடம் பிடிச்சு ஒக்காந்து கீழ உள்ள மணலை மேடா குவிச்சு அனுமார் மாதிரி ஒக்காந்தாச்சு. ஜனம் உள்ள வந்துண்டேயிருக்கு. சினிமாக்கொட்டாய்யாளு ஒத்தன் உள்ள வந்து நெருக்கி ஒக்காருங்கன்னு கத்தறான். பின்னால திரும்பினா பெஞ்செல்லாம் ரொம்பி வழியறது. எடமில்லாம் ஆளல்லாம் நிக்கறான். உள்ள ஒவ்வொத்தனா ஒட்டகம் மாதிரி நுழஞ்சிண்டிருக்கானுகள். ஒடச பெஞ்சு நாற்காலின்னு ஏதோ போட்டு சமாளிக்கப் பாக்கறான். சாத்தியப்படலே. மானேஜர் படம் ஆரம்பிச்சுட்டா , படம் பாக்கற ஆசையில ஜனம் தானா அட்ஜஸ்ட் பண்ணிக்கும்னு நெனச்சு, ரைட் ஆரம்பிடான்னான்.

தெரயில எழுத்தெல்லாம் வரது. பாட்டு காதுல விழல. பின்னால பெஞ்சுல கலாட்டா. ஆறணா கொடுத்து டிக்கிட்டு எடுத்திருக்கம் பெஞ்சுக்கு. மொதல்ல எங்களுக்கு எடம் கொடுத்துட்டு படம் காட்டுடான்னு கத்தறான்கள். மானேஜர் காதுல வாங்காது போல இத்தனிபேரு தரையுல அட்ஜிஸ்ட் பண்ணிட்டு ஒக்காரல. அதுபோல எப்படியாவது அட்ஜிஸ்ட் பண்ணிங்கன்னு சொல்றாரு. யோவ், மானேஜா, ஒனக்கு அறிவில்ல பத்துபேரு பெஞ்ச்ல இருவது பேரு நெர்க்கிகிட்டு இருக்கம், மத்தவன் மடியிலயா போய் ஒக்காரரதுன்னு கத்தல். மானேஜரோட பூர்வோத்திரம், வம்சாவளி பத்தி ஆபாசமா கர்ணகடூரமா வசவு வேற.

இதுக்குள்ள படத்துல பாலய்யா சந்யாசியா ஒக்காந்திருக்கார். ஜெமினி என்னவோ கேக்கரார். ஒரு எழவும் புரியல. படம் திடீர்னு மறஞ்சு போச்சு. ஒரு ஆளு சேரு மேல ஏறி துண்டால படம் வர சதுர ஓட்டய அடச்சிட்டார். என் காசக்குடுரா, இல்லாட்டி ஒக்கார பெஞ்சு போடு, அப்புறம் படம் காட்டுரானு கத்தரார். கடசில போலிஸ்காரா உள்ள வந்தா. எடம் இல்லாத பெஞ்சு ஆளு வெளிய போன்னு வரிசயாய் அனுப்பினா. மானேஜர் அரை மனசோட காசை திருப்பிக்குடுத்தார். சில பேரு பரவாயில்ல தரையிலயே குந்திக்கறோனும்னான். ஒரு அரை மணி கழிச்சு படம் ஆரம்பிச்சுது மறுபடியும். ஒரு வழியா படம் முடியறச்சே பன்னண்டு மணியாயிடுச்சு. திரும்பி போறச்சே மூணு மைல் முப்பது மைல் மாதிரி ருந்துது. இப்பல்லாம் அது மாதிரி நடக்க முடியாது.

என்ன தூக்கம் வரதா..ஜன்னல்கிட்ட காத்து அடிக்கரதோனோ அதான்.. வெத்தல சீவல் வெச்சிருக்கேளா? பஸ்சுக்கு வர அவசரத்துல வெத்தல பொட்டிய ஆத்துல வெச்சுட்டேன். வெத்தல இருந்தா, அதுல துளிரா ரெண்டு கொடுங்கோ. பாக்கு எனக்கு ஒத்துக்காது. பன்னீர் பொகையில இல்லாட்டா வாணாம். நெய்ல வறுத்த சீவல் இருந்தா துளி குடுங்கோ. வாசனெ சுண்ணாம்பு இருக்கோ? ரிந்தான் தாம்பூல மாத்திரை இருக்கா? யதேஷ்டம்...

எனக்கு தூக்கம் வரலை. அதென்ன ஆனந்த விகடனா, தாங்கோ, வாசிச்சிட்டு தரேன்..நீங்க தூங்குங்கோ.. கும்மோணம் வந்தப்பறம் கொரல் குடுக்கறேன்..

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
29 - ஆகஸ்ட்- 1999
-----------------------
நன்றி: தமிழ்.நெட் ; டாக்டர்.எல்லே சுவாமிநாதன்

No comments: