Thursday, May 12, 2005

சென்னை - நியுயார்க் - டெல்டா

சென்னை - நியுயார்க் - டெல்டாவின் நேரடி விமானம்.

சென்னையிலிருந்து நியுயார்க்குக்கு தினசரி, நேரடி விமான சர்வீஸை டெல்டா ஏர்லைன்ஸ் துவக்குகிறது. இந்த செய்தியை பலரும் படித்திருக்கலாம்.

இந்த விமானம் சென்னையில் அதிகாலை 2.45க்குக் கிளம்பி பாரீசுக்கு காலை 9.55க்கு சென்றடைகிறது. பாரீஸிலிருந்து மதியம் 1.35க்குக் கிளம்பி, நியுயார்க்கை மாலை 3.50க்கு எட்டுகிறது.நியுயார்க்கில் மாலை 6.10க்கு கிளம்பி மறுநாள் காலை 7.55க்கு பாரீஸ். பாரீஸிலிருந்து 11.10க்குக் கிளம்பி சென்னைக்கு நள்ளிரவு 12.45க்கு வருகிறது. சரியான நேரம் மற்றும் டெர்மினல் விபரங்களை டெல்டாவின் வலைத்தளத்தில் சரிபார்த்துக்கொள்ளவும். டிக்கெட் விலை எவ்வளவு என தெரியவில்லை.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களிலிருந்து லுஃப்தான்ஸா பல விமானங்களை அமெரிக்காவிற்கு கனெக்ஷன் குடுக்க ஆரம்பித்த பிறகு, இந்த செக்டாரில் நல்ல சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. சென்னையிலிருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா / கனடா செல்லும் பல தென்னிந்தியர்கள், இலங்கை மக்கள், பலரும் பாரீஸ், ஃப்ராங்க்ஃபர்ட், லண்டன் வழியை உபயோகிக்கின்றனர். வெகு சிலரே மும்பை சென்று அங்கிருந்து ஆம்ஸ்டர்டாம் வழியை நாடுகின்றனர்.

டெல்டா விமானத்தில் மாதத்திற்கு இரண்டு தமிழ் படம் காண்பிக்கப்படும் என அறிவித்துள்ளனர். 'உலக விமானப் பயணத்திலேயே முதல் முறையாக' என்றெல்லாம் சொல்லி சன் டிவி மாதிரி நச்சரித்து, கொடுமை பண்ணமாட்டார்கள் என நினைக்கிறேன். அப்படியே ஏதாவது பாடாவதி படத்தைப் போட்டால் டெல்டாவிலிருந்து பிரிடிஷ் ஏர்வேஸ் அல்லது லு·ப்தான்ஸாவிற்கு மாறிவிடுகிறோம் என தமிழ்பேசும் நல்லுலகம் எச்சரித்தால், வழிக்கு வருவார்கள் என நினைக்கிறேன்.

ஏனென்றால், லுஃப்தான்ஸாவில் இதே மாதிரி இந்தி படம் - பாடாவதிப்படமாய்ப் போட்டு படுத்தினார்கள். "லவ் இன் நேபால்", "ஷாதி கா லட்டு" போன்ற படங்களை நீங்கள் பார்த்திருந்தால் இந்த அவஸ்தை புரியும்.

பாரீஸிலிருந்து சென்னைக்குக் கிளம்பும் (சார்லஸ் டிகால்) டெர்மினலில் நிச்சயம் திண்டுக்கல் அல்லது திருச்சி பஸ்ஸ்டாண்ட் மாதிரியான காட்சிகளைக் காணலாம். பலரும் பெட்டி, பைகளுடன், குஞ்சு குளுவான்களுடனும், சள சளவென தமிழில் பேசிக்கொண்டு, கைப் பைகளைத் திணிக்க முதலில் இடம்பிடிக்க ஓடும் கூட்டம் என தமிழர் பெருமை அரங்கேறும். பாரீஸ் விமானதள டெர்மினலில், பெரும்பாலும் (அதுவும் டெல்டா டெர்மினலில்) ஈழத்தமிழர்கள்தான் டிக்கெட் சரி பார்ப்பது, பாஸ்போர்ட் சரி பார்ப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பர். பாரீஸிலிருந்து சென்னை வரும் விமானத்திலாவது நல்ல ஒளியும்-ஒலியும் பாடல்களை ஒளிபரப்புவார்கள் என எதிர்பார்ப்போம். அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ தமிழ்/சினிமா மணம் காணாமல், சுமார் 1-2 மாதங்கள் காய்ந்துவிட்டது வருபவர்களுக்கு இந்த விமானத்தில் தமிழ் பாடல்களைக் கேட்டவுடன் ஒரு உணர்வு ஏற்படுமே.. சொல்லித்தெரியாது.

பிரிடிஷ் ஏர்வேஸ் போல நல்ல உணவும் தருவார்கள் என எதிர்பார்ப்போம்.

என்னடா இது விமானப் பயணம் என்றவுடன், சாப்பாடு, சினிமா என்றே எழுதப்பட்டுள்ளதே என நினைக்கிறீர்களா ? நள்ளிரவில் தூக்கம் கெட்டு, சுமார் 12-17 மணிநேரம் சரியான சாப்பாடில்லாமல், விமானத்தில் தரும் மஞ்சள் திரவங்களை (ஆரஞ்சு ஜூஸாம்!) மற்றும் ஐந்து நட்சத்திர பதார்த்தங்களை உண்டு, காலை நீட்ட/குறுக்க முடியாமல் தத்தளித்துப் பார்த்தால் நம்ம ஊர் KPN ஏர்பஸ்ஸோ, ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸின் மேல் பர்த்தோ சொர்க்கமாகத் தெரியும்.

ஆமாம் இந்தியாவில் கிளம்பும்/வந்து சேரும் வெளிநாட்டு விமானங்கள் மட்டும் ஏன் அர்த்தராத்திரியில் போட்டுத் தாக்குகிறார்கள். கொஞ்சம் இங்குமங்கும் நேரத்தை தள்ளிப் போட்டால் வசதியாக இருக்குமே யாருமே (எந்த விமானபோக்குவரத்துத் துறை அமைச்சரும்) இதைக் கண்டு சரிசெய்யமுடியவில்லை. அது என்ன பாரீஸ்காரர்களும், நியுயார்க்காரர்கள் மட்டும் தான் இரவுத்தூக்கம் கெடாமல், விமான சத்தம் இல்லாமல் இருக்கவேண்டுமா ? சென்னை, பெங்களூர் வாசிகள் இரவில் இந்த ஜம்போ விமானங்கள் போடும் சத்தத்தைக் கேட்டே தூங்கவேண்டுமா ? பல்லாவரத்திலும், பம்மலிலும், பெங்களூர் ஹெச்.ஏ.எல் ஏரியாக்களில் சில இரவுகள் வசித்துப்பார்க்கவும். இதன் தாக்கம் புரியும். இதைத் தவிர இருக்கவே இருக்கிறது நம்மூர் டாக்ஸிகள், மற்றும் ஆட்டோக்களின் இரவு நேர வாடகைத் தகராறுகள், மற்றும் இரவு ரோந்துப் போலீஸின் கெடுபிடிகள், குருவிகளின் எஜமான்கள் செய்யும் பயமுறுத்தல்கள்.!

எனினும், டெல்டா..! வருக வருக...!

- அலெக்ஸ் பாண்டியன்
12-மே-2005

2 comments:

பரணீ said...

//காலை நீட்ட/குறுக்க முடியாமல் தத்தளித்துப் பார்த்தால் நம்ம ஊர் KPN ஏர்பஸ்ஸோ, ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸின் மேல் பர்த்தோ சொர்க்கமாகத் தெரியும்//

:-))

NONO said...

Kwait Airwaysயில் போகவில்லையா... பிராங்போட்டில் இருந்து குவைற் சிற்றி வரை நல்லா கால்நீட்டி தூங்கலாம்...
(அனேகமாக எல்லா சீற்றும் காலியாக இருந்தது..)