Sunday, May 29, 2005

மழை - மரம் - மின் வெட்டு

கடந்த ஒரு வாரமாக பெங்களூரில் இடியுடன் கூடிய கன மழை மாலை நேரங்களில் பெய்து வருகிறது. இதில் வெள்ளியன்று மதியம் 2.30/3.00 மணிக்குத் துவங்கிய இயற்கையின் சீற்றம், பெங்களூர் என்னும் தொழில்நுட்ப,சிலிக்கான் சிட்டி, மற்றும் இன்னபிற பெயர்களையெல்லாம் அடியோடு பெயர்த்துவிட்டுத்தான் ஓய்ந்தது.சென்றவாரத்தின் சில நாட்களில் பெய்த மழையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மரம் விழுதல், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுதல், மின்சாரம் தடை என இருந்தது.

வெள்ளியன்று மாலை அடித்த சூறைக்காற்று, இடி, மின்னல் மற்றும் பேய் மழையில் அநேகமாக எல்லா ஏரியாக்களிலும் பல மரங்கள் வேரோடு வீழ்ந்தன. பல (கணக்கெடுப்பில் சுமார் 250 மரங்கள் வரை என ஏடுகள் (?) தெரிவிக்கின்றன) இவை பெரும்பாலும் பக்கத்தில் செல்லும் மின்சார கம்பிகளில், கம்பங்களில், டிரான்ஸ்பார்மர்களில் விழுந்ததால், பல ஏரியாக்களிலும் கடந்த 48 மணிநேரமாக மின்சாரம் இல்லை. பல இடங்களில் மின்சார கம்பங்களும் அடியோடு பெயர்ந்து விழுந்துள்ளன. எங்கும் இவை மக்கள் மீது விழவில்லை என்பதே ஒரே ஆறுதல். மற்றபடி, பல மரங்கள் பஸ்கள் மீதும், பல வீடுகளின் மீதும், கார்களின் மீதும் விழுந்து பலத்த சேதம்.Photo Courtesy: Deccan Herald

பெங்களூரில் பல இடங்களிலும் Open Drain எனப்படும் திறந்த வழி சாக்கடைகள் பெரிய அளவில் இருக்கும். சாதாரண மழைக்கே இவையெல்லாம் ரொம்பி வழிந்து சாலைகளிலும், அருகாமை வீடுகளிலும் உள்ளே வந்து நாறடிக்கும். சமீபத்திய மழைக்குக் கேட்கவே வேண்டாம். பல அபார்ட்மெண்ட்டுகளில், பேஸ்மெண்டில் தண்ணீரும், சாக்கடையும் புகுந்து, கார்கள் எல்லாம் நாசமாகி, மின்சார பேனல்கள் எல்லாம் வீணாகியுள்ளது. ஒரு கல்லூரியில், அலுவலக கோப்புகள் எல்லாம் நீரில் மிதப்பதாக படம் போட்டுள்ளனர்.

சுமார் 48 மணிநேரம் மின்சாரம் இல்லாததால், தண்ணீர் இல்லை. குளிர்சாதனபெட்டியில் இருக்கும் உணவுப் பொருட்கள் வீணாகும் நிலை. கோடைக்காலத்தில் கொசுத்தொல்லைவேறு. மரங்களும், மின்கம்பங்களும் விழுந்த வீடுகளில், அதை வெட்ட ஆள் தேடும் சிரமம் வேறு. எல்லா இடங்களிலும் விழுந்துள்ளதால், ஆட்கள் கிடைப்பதும் அரிதாகி, மின்சார வாரிய மற்றும் மாநகராட்சி ஊழியர்களின் பாடும் திண்டாட்டம். உள்ளே புகுந்த தண்ணீரை வெளியேற்றவும் மின்சாரம் / மோட்டார் தேவை. இத்தனைக்கும் மழை சுமார் 60 மி.மி.தான் இதையும் விட அதிகம் மழை பெய்தால் இந்தியாவின் சிலிக்கான் சிட்டி இன்னும் மோசமாகவே தெரியவரலாம்.

சென்னையில் ஒரு பிற்பகலில் இருண்டு, Twister எனப்படும் சூறைக்காற்று,கரையோரப்பகுதிகளில்
கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குதல், பெங்களூர் பகுதியில் இத்தனை மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு சாய்த்திருக்கிறது என்றால் இயற்கையின் சீற்றம் இன்னும் தணியவில்லை என்று தெரிகிறது. இதில் பல மரங்கள் வீழ்ந்ததற்குக் காரணம் பெங்களூரின் சமீபத்திய பல அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டிடங்கள் கட்டும் பணிகள் மற்றும், பல்வேறு கட்டமைப்பு விஷயங்களைக் காரணமாகக் கூறுகின்றனர். அதாவது மரங்கள் வேர் நன்றாக வளர துளியும் இடம் இல்லாமல் எல்லா இடங்களிலும் கட்டிடமோ சிமெண்டோ பூசப்பட்டிருப்பதால், மரங்களின் வேர்களில் பிடிப்புத்தன்மை இல்லாமல் சூறைக்காற்றுக்கு எல்லாம் பலியாகிவிட்டது.


- அலெக்ஸ் பாண்டியன்
29- மே - 2005

2 comments:

Boston Bala said...

பார்த்து அலெக்ஸ்... மெதுவாக நீந்தி அலுவலுக்கு செல்க; வேகமாக துடுப்பை வலிக்க வேண்டாம் :-)

Alex Pandian said...

பா.பாலாஜி,

:-)

நேற்றும் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. பல இடங்களில்
முட்டியளவு தண்ணீர். க்ளிக்கவும் -
http://www.deccanherald.com/deccanherald/jun012005/index214772005531.asp


- அலெக்ஸ்