Wednesday, June 15, 2005

15 நிமிடப் புகழ்

15 நிமிடப் புகழ்
--------------

சில மாதங்கள் முன்பு, சுஜாதா, கற்றதும் பெற்றதும் - விகடன் தொடரில், வலைப்பதிவு எழுதுவோர் 15 நிமிடப் புகழுக்காக ஏங்கி எழுதுகிறார்கள் என்ற தொனியில் எழுதியிருந்தார்.

இந்தப் பதிவுக்குப் போவதற்கு முன் - இரண்டு "முக்கிய" செய்திகள் (தமிழ் வலைப்பதிவு நல்லுலகிற்கு)

1. சந்திரமுகியில் ஜோதிகாவின் லகலகலக வெற்றிக்குக் இந்த சின்னப்பையன் தான் காரணம் என்றால் மேல்கைண்ட் அன்பர்கள் என்னை அடிக்க வரக்கூடும் என்றாலும் அதுதான் உண்மை ;-)

2. தமிழ்மணம் தோற்றுவித்த காசி, சிறுவாணித் தண்ணிர் அருந்தவந்துவிட்டார் என்பது ஒரு புறம் மகிழ்ச்சி. வருக வருக..! இந்த சுட்டியில் உள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுக்காக வீட்டிற்கு ஆட்டோ வராமல் இருக்கவும் (தற்போது தமிழகத்தில் இருப்பதால்) ஜாக்கிரதையாக இருக்க வேண்டுகிறேன் :-) காசியின் சேவை தமிழ் வலைப்பதிவு உலகத்திற்குத் தேவை...!

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

சில வாரங்கள் முன்பு, அம்பலம்.காம் அரட்டையில் சுஜாதாவிடம், தமிழ்மணம் பற்றி தெரியுமா, அங்கு 500+ வலைப்பதிவர்கள் பல்வேறு விஷயங்கள் பற்றி எழுதுகிறார்களே.. சில வலைப்பதிவுகளில் செறிந்த விஷயங்கள் இருக்கின்றனவே என கேட்டேன், அதற்கு பெரும்பாலோனோர் வலைப்பதிவுகளில் irresponsible behaviourஐக் கடைப்பிடிப்பதாகக் கூறினார். ஆனால் தமிழ்மணம் மற்றும் இன்ன பிற தமிழ்வலைப்பதிவு சமாச்சாரங்களை கவனித்து வருவதாகவும் கூறினார். (சமீபத்து தேசிகன் ஏற்பாடு செய்த சுஜாதா கூட்டத்திலும் கிட்டத்தட்ட இதே மாதிரியான பதிலைக் கூறியுள்ளார் ?)

பலரும் ஏன் வலைப்பதிய வந்தனர் ? பெரும்பாலோனோர் முன்னர் மடற்குழுக்களில் பங்கேற்று பின்னர் வலைப்பதிய வந்துள்ளனர். தமிழ்மணம் திரட்டிக் கொடுக்கும் இலவச சேவையும் பலரை உற்சாகப்படுத்தியது. பலர் புதிதாக நேரடியாக வலைப்பதியவும் வந்துள்ளனர்.

மடற்குழுக்களில் பங்குகொள்வோர் பலரும் சில சமயங்களில் மடற்குழுக்களின் moderator எனப்படும் மட்டுறுத்தனரின் உறுத்தலால் வெறும் மடல் பெறுநர்களாகவே இருந்துவிட்டனர். ரொம்பவும் கை துறுதுறுத்தால், தனி மடலில், எழுதியவருக்கு மறுமொழி அளித்தனர். எனக்குத்தெரிந்த பல தமிழ் மடல் குழுக்களில், இதைக் கண்கூடாக காணமுடிந்தது. பல சமயங்களில் முதன்மை மட்டுறுத்தனரைவிட சக-இணை மட்டுறுத்தனர்களின் ஆதிக்கம் அதிகமாக, சிலர் ஒதுங்கிக் கொண்டனர். சில இடங்களில் பஞ்சாயத்து முறை மாதிரி 'நாட்டாமை' செய்யும் வழக்கங்களும், 'நாட்டாமை தீர்ப்ப மாத்து' போன்ற கோஷங்களும் நிறைந்தது.

சில குழுக்களில், சில சமயங்களில், குழுவின் சொந்தக்காரர் (ஓனர் ?) கடுஞ்சொற்களில் unparliamentry statements) சிலரைக் காய்ச்ச, சிலர் வெறுத்து ஒதுங்கியும் விட்டனர். மேலும் பலருக்கு வேலை/ஜோலி என நேரமின்மை போன்ற காரணங்களும் சேர, மடற்குழுக்களிலிருந்து ஒதுங்கினர். ஆனாலும் தமிழில், எழுதுதல், படித்தல் போன்ற போதையிலிருந்து விடுபட முடியாதவர்களுக்கு, வலைப்பதிவு ஒரு வரமாக அமைய, தனது பதிவில் தனக்குப் பிடித்த, பிடிக்காத விஷயங்கள் அனைத்தையும் தனது பாணியில், தனக்குத் தெரிந்த நடையில் எழுதவும், இல்லை எழுத முடியாவிட்டால், சும்மா இருக்கவும் கூட சுதந்திரம்...

இங்கும் சிலர் வெறுத்து ஓடும் அளவிற்கு பின்னூட்டங்கள், பின்னூட்டப் பதிவுகள் என அவ்வப்போது நடைபெறுகிறது. இருந்தாலும் 65% சதவிகிதத்திற்கு மேலே பதிவுகள் - நல்ல செய்திகளை / அலசல்களை / படங்களைத் தருகிறது. பல பதிவுகளும் சினிமா / டிவி / அரசியல் / தங்கள் நினைவலைகள் சார்ந்த பதிவுகளாக இருந்தாலும், படிக்க நன்றாக உள்ளது.

நாம் நினைத்ததையே நம்மைப்போல இன்னோருவரும் ஏதோ நாட்டில் இருந்து யோசித்துள்ளார் என்னும் பகிர்தலே இந்த வலைப்பதிவுகளின் வெற்றி. அதையும் தாண்டி, தமிழ் மீது ஆர்வம் கொண்டவர்கள் பலருக்கும், வார இதழ்களின் சினிமா, தொப்புள், மார்பு படங்கள் தாண்டி, படிக்க ஆர்வமூட்டும் செய்திகள், கட்டுரைகள் என கிடைப்பதும், பின்னூட்டமிட்டு உடனே கருத்து சொல்ல கிடைக்கும் வாய்ப்பும் பல நண்பர்களைப் பெற்றுத் தந்துள்ளது. சில ஊர்களில் வலைப்பதிவோரின் சந்திப்பும் நடைபெறுகிறது.

வலைப்பதிவுகள், தமிழ்மணம் மற்றும் யுனிகோடில் தமிழ் என்னும் இந்த 2003-2005 காலகட்டத்தை இணையத்தில் தமிழின் பொற்காலம் - 2 என என்னளவில் கருதுகிறேன். இதே காலங்களில் தான் இணையத்தில் பல புதிய தமிழ் செய்தி மற்றும் பத்திரிக்கைத்தளங்கள், இணைய இதழ்கள் -
தமிழோவியம்,
திண்ணை,
தட்ஸ்தமிழ்.காம்,
மரத்தடி.காம்,
ராகாகி,
மரபிலக்கியம்,
சந்தவசந்தம் போன்ற குழுக்கள் உச்சத்தை எட்டின.

திசைகள் வரவு பல புதிய படிப்பாளர்களுக்கு வேறு ஒரு இலக்கிய கோணத்தையும் காட்டியுள்ளது. இவை தவிர
அகத்தியர்,
தமிழுலகம்,
ஈ-சுவடி
போன்ற மூத்த குழுக்கள் இன்றளவும் தங்கள் நோக்கதைச் செவ்வனே செயல்படுத்தி வருகின்றனர்.

நெசமாலுமே சொல்கிறேன் இணையத்தில் தமிழ் குழுக்களும், தமிழ்மணமும், வலைப்பதிவுகளும் வந்த பிறகு பலருக்கு ஒரு போதையாகவே ஆகிவிட்டது. தொடர் இணைய இணைப்பு இருப்பவர்களுக்கு ஒவ்வொரு சில மணிநேரத்திற்கும் தமிழ்மணத்தை எட்டிப்பார்த்து, பின்னூட்டமிடாவிட்டால் கைகளில் நடுக்கம் கூட ஏற்படுகிறது என கேள்வி :-)

பொழுதுபோக்கு, அரட்டை, அடிதடி என்பதைத் தாண்டி பல நல்ல விஷயங்களும் நடைபெறுகிறது. 15 நிமிடப் புகழுக்காக மட்டுமே இவை வெற்றி பெறவில்லை. தமிழில் எழுதுவதை மறந்த பலருக்கும் மீண்டும் ஒரு பாட்டை போட்டுக் கொடுத்த இணையத்தில் தமிழ் குழுக்களுக்கும், தமிழ்மணத்திற்கும், காசிக்கும் மற்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நன்றி.

- அலெக்ஸ் பாண்டியன்
15-June-2005

7 comments:

Moorthi said...

தீர்க்கமான ஒரு அலசல்!

அல்வாசிட்டி.விஜய் said...

அலெக்ஸ், இந்த வார நட்சத்திரமா பட்டைய கிளப்பிட்டு இருங்க. பதிவுகள் நல்ல இருக்கு + ஏராளமான விவரங்கள் தமிழ் இணையங்களைப் பற்றி. நேரமின்மை அமுலில் இருப்பதால் அடிக்கடி பின்னூட்டம் விட முடியவில்லை. ஆனால் தொடர்ந்து படித்து வருகிறேன். தொடருங்கள் அலெக்ஸ். வாழ்த்துக்கள்.

enRenRum-anbudan.BALA said...

அலெக்ஸ்,

பாராட்டுக்கள் இந்தப் பதிவுக்கும், இந்த வார நட்சத்திரமானதற்கும் :)
அருமையான அலசல் !!! தரும் தகவல்களுக்கும் நன்றி !!!
தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள் !!

என்றென்றும் அன்புடன்
பாலா

Akbar Batcha said...

அலெக்ஸ்,

நட்சத்திரமானதிற்கு பாராட்டுக்கள். நானும் நீங்கள் சொன்ன 'தமிழில் எழுத மறந்தவர்களில் ஒருவனே'. ஏறக்குறைய 15 வருடங்கள், தமிழில் எதுவும் எழுதாமலே இருந்து பிறகு இந்த தமிழ்மணத்தால்தான் எழுதத் தொடங்கினேன்.

காவிரிக் கரையில் இக்கரைக்கும் அக்கரைக்கும் ஆற்று நீரில் பொழுதை கழித்தவர்களில் நானும் ஒருவனே.

குழலி / Kuzhali said...

//தமிழ்மணமும், வலைப்பதிவுகளும் வந்த பிறகு பலருக்கு ஒரு போதையாகவே ஆகிவிட்டது. தொடர் இணைய இணைப்பு இருப்பவர்களுக்கு ஒவ்வொரு சில மணிநேரத்திற்கும் தமிழ்மணத்தை எட்டிப்பார்த்து, பின்னூட்டமிடாவிட்டால் கைகளில் நடுக்கம் கூட ஏற்படுகிறது என கேள்வி :-)//

சத்தியமான உண்மை


//தமிழில் எழுதுவதை மறந்த பலருக்கும் மீண்டும் ஒரு பாட்டை போட்டுக் கொடுத்த இணையத்தில் தமிழ் குழுக்களுக்கும், தமிழ்மணத்திற்கும், காசிக்கும் மற்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நன்றி.
//
மீண்டும் தொடர்ந்து எழுத ஊக்கியாக இருந்த தமிழ்மணம்,வலைப்பதிவர்களுக்கும், காசி,மதி மற்றும் அனைத்து அன்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்...

அது சரி இது என்ன நட்சத்திர வாரம்... எனக்கு ஒன்றும் புரியவில்லை... அதுவுமின்றி தமிழ் மணத்தில் 3 மாதமாகத்தான் உலவிவருகின்றேன்...புதிதென்பதால் எனக்கு தெரியாமல் இருக்கலாம்...

Alex Pandian said...

மூர்த்தி, அல்வாசிடி விஜய், எ.அ.பாலா: தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

அக்பர் பாட்ஷா: நீங்களும் காவிரிக்கரைக்காரர் என்பதில் மகிழ்ச்சி. ஈரோட்டு மகிமையையும் எழுதிப் போடுங்க. அப்படியே பவானி சாகர் அணை போன்ற படங்களையும் எடுத்து வுடுங்க.

குழலி: தமிழ்மணத்தில் ஒரு வாரம் முழுவதும் ஒருவர் நட்சத்திர படைப்பாளராக தெரிவு செய்யப்பட்டு, அந்த வாரம் முழுவதும் அவரது படைப்புகள் இடது பக்கத்தில் பெரிய அளவு இடஒதுக்கீட்டில் வரும் :)
http://www.thamizmanam.com/tamilblogs/readers.php - click here and see the left side.

- அலெக்ஸ்

Boston Bala said...

வலைப்பதிவுகள் வளர்ந்த கதையை சொல்லுப்பா என்று யாராவது கேட்டால், இதைக் காட்டலாம் :-)