Tuesday, June 14, 2005

இணையத்தில் தமிழின் பொற்காலம் - 1a

இணையத்தில் தமிழின் பொற்காலம் - 1a (தொடர்கிறது)
-------------------------------------------------

தமிழ்.நெட்டில் பேசப்படாத தலைப்புகள் இல்லை. அப்போது தமிழில் எழுதப்படும் ஒரே மடல்குழுவாக இருந்ததால், பல பெரிய தலைகளும் இதில் தான் துவங்கினர். எல்லா தலைப்புகளிலும் கருத்துக்கள் வெளியாகும். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கை, கனடா, அரபு நாடுகள், அமெரிக்கா, லண்டன் - அரசியல், சினிமா, இலக்கியம், வரலாறு என தமிழர்தம் அரட்டை தான். இதில் ஏன் பொற்காலம் எனக் குறிப்பிடுகிறேன் என்றால் இன்றைக்கு திஸ்கி என பல குழுக்களிலும் உபயோகப்படுத்தும் ஒரு standard உருவாகக் காரணம் அப்போது தமிழ்.இணையத்தில் இருந்த பல்வேறு ஆர்வலர்கள்தான். பின்னர் வெப்மாஸ்டர்/திஸ்கி என தனிக்குழு ஏற்படுத்தி தொழில்நுட்ப விஷயங்கள் உரையாடப்பட்டது. அதே போல், Project Gutenberg என்பதைப் போன்ற ஒரு விஷயத்தை தமிழில் செயலாக்க முனைந்ததும் இங்குதான் - இது Project Madurai http://www.tamil.net/projectmadurai/
என்ற முனைப்புடன் பல ஆர்வலர்களால் செழித்தது. சிலர் பொதுவில் உள்ள தமிழ் நூல்களை டைப் அடித்துக் கொடுத்தனர். சிலர் பிழை சரி பார்த்தனர். சிலர் லே-அவுட் செய்து கொடுத்தனர். குழுவாக செயல்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் இலக்கிய வரிகள் இன்று இணையத்தில் பொதுவில், இலவசமாகக் கிடைக்க மதுரைத் திட்டமே முதற்படி. யார் யார் என பட்டியல் இங்கே http://www.tamil.net/projectmadurai/pmcoord.html

என்னென்ன இலக்கியங்கள் மின்பதிப்பேற்றப்பட்டுள்ளது என அறிய இங்கே சொடுக்கவும் http://www.tamil.net/projectmadurai/chrono2.html - திருக்குறள், ஆத்திசூடி, திருவாசகம், திவ்யப் பிரபந்தம், திருமந்திரம், பாரதியார் பாடல்கள், நளவெண்பா, நாலடியார், திருவருட்பா, திருவிவிலியம், ஆசாரக்கோவை, அபிராமி அம்மன் பதிகம், அபிராமி அந்தாதி, கலேவலா, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், பாரதிதாசன் பாடல்கள் என பட்டியல் நீளுகிறது. எல்லாம் PDF கோப்பில் இலவசமாகக் கிடைக்கும்.

என்னைப்போன்ற படிக்க மட்டும் ஆர்வம் காட்டும் பலருக்கும் தமிழ்.இணையம் ஒரு பெரிய களஞ்சியமாகவே இருந்தது. பள்ளியோடு மறந்து விட்ட பல்வேறு விஷயங்கள் தமிழ்.இணையம் மூலம் மறுபடியும் தெரிந்து கொண்டு, தமிழைக் கொண்டாட ஒரு வாய்ப்பு. அதுவும் பல திறமையாளர்கள். பல்வேறு துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் தமிழில் எழுதுவதும், அதுவும் எல்லோருக்கும் படிக்க இலகுவான தமிழில் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பாணியில் எழுதுவதும் பலரையும் கவர்ந்து இழுத்தது. பல ஜாம்பவான்கள்..!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் பாணி.. சிலர் கவிதை, கதைகளில் விற்பன்னர்... சிலர் நகைச்சுவைக் கட்டுரைகளில்.. சிலர் நையாண்டிக் கட்டுரைகளில்... சிலர் forward செய்வதற்கே இருந்தனர் :-) (அதாவது மற்ற தளங்களில் காணப்பட்ட விஷயங்களைப் பகிர்பவர்கள்). ஆனாலும் ஒரு மஜா இருந்தது. எழுதப்பட்ட விஷயங்களில் வீர்யம் இருந்தது. கவலைகள் பகிரப்பட்டன.

பாலா பிள்ளை, டாக்டர்.கல்யாண், மணி மணிவண்ணன், டாக்டர்.ஜெயபாரதி, எல்லே ராம், எல்லே சுவாமிநாதன், கந்தையா ரமணீதரன் (எண்ணற்ற பெயர்கள்), ஆசிப் மீரான், சடையன் ஷாபு, சிங்கை பழனி, சிங்கை கிருஷ்ணன், இண்டி ராம், கோவர்தனன் ராமச்சந்திரன், டாக்டர்.ரமணி, கே.லோகநாதன், நாக.இளங்கோவன், பூபதி மாணிக்கம், வாசன் (நியு மெக்சிகோ), இராம.கி, சுலைமான் அண்ணன், ரங்கபாஷ்யம் கோஷ்டி (இவர்கள் அடிக்காத கூத்து இல்லை!), அன்புமணி, வேல்முருகன், ஜெர்மனி (தற்போது தென் கொரியா) நா.கண்ணன் (காசுமி சான் ?), விக்ரம் குமார், நாசா.டாக்டர் நாக.கணேசன் ஜெயபாலசிங்கம், வ.ஐ.சு.ஜெயபாலன், கேப்டன் மாகோ, பால்மர், கோகுலக் கண்ணன், நியுசிலாந்து குமாரபாரதி, கனடா சுவாமிநாதன் சங்கரன், தமிழரசன் (இவரின் அதீத பிராமணீய எதிர்ப்பு), ஹாங்காங்கிலிருந்து டாக்டர்.பிலிப் என பலரும் பலவித தலைப்புகளில் எழுதிய பொற்காலம். (பெயர் விட்டுப்போனவர்கள் மன்னிக்க)

தேசிகனின் தமிழ்.நெட் சுஜாதா பக்கங்கள் அந்தக் காலங்களிலேயே பிரபலம். சுஜாதாவே தனக்கென ஒரு தளம் வைத்திருந்தார் க்ளிக்சுஜாதா - அவரின் சில சிறுகதைகள் அங்கு இருந்தது. இத்தளம் தற்போது இல்லை. இந்தத் தளத்தைத் துவக்கிவைத்த நாளன்று தேசிகன் தமிழ்.நெட்டில் இட்ட மடலொன்றும் காணலாம். தேசிகனின் சுஜாதா பக்கங்களைத் தற்போது http://www.employees.org/~desikan/sujatha.htm என்ற தளத்தில் காணலாம்.

உங்கள் கையில் நேரம் மற்றும் பொறுமை அதிகம் இருந்தால், உங்களிடம் பழைய அஞ்சல்/இணைமதி மற்றும் திஸ்கி எழுத்துரு இருந்தால் இங்கே தோண்டவும். http://www.tamil.net/list தங்கமெனும் பல தமிழ்ப் படைப்புகளைப் படிக்கலாம். ரசிக்கலாம்.

எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு வருவது போல, அந்த பொற்காலத்திற்கும் சீக்கிரமே நிறைவு வந்தது. பொற்கால நாட்களில் பற்பல சண்டைகளும் சச்சரவுகளும் நடந்தாலும், சீக்கிரமே எல்லோரும் ஒண்ணு மண்ணு ஆகி மீண்டும் நட்புடன் பழகுவர். ஆனாலும் சில சமயங்களில் எழுதுபவர்களை தனிப்பட்ட முறையில் மிக மோசமான வார்த்தைகளில் புண்படுத்தியதால், பலரும் தமிழ்.நெட்டிலிருந்து விலகி தனி மடலாடற்குழுக்கள் ஏற்படுத்தினர்.

மரத்தின் கிளையில் நின்றுகொண்டு அடிமரத்தை வெட்டும் போக்கு நடந்தது. அப்போதுதான் யாகூ, ஈ-குருப்ஸ் போன்றவை இலவச சேவைகள் அளிக்கத் தொடங்க.. பலரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல குழு தொடங்கினர் அல்லது பங்குகொண்டனர். அவரவர்க்கு அதது என்பதுபோல விருப்பம் உள்ளவர்கள் இந்த மடலாடற்குழுக்களில் இருந்தனர். தமிழ் இணையத்திலிருந்து விலகி வந்த பலரும் இந்த குழுக்களிலும் உறுப்பினராய் உள்ளனர். இன்றளவும்..! அப்டி இருந்த தமிழ்.நெட் இப்ப எப்டி இருக்குன்னு பாக்கணுங்களா ? இங்க தட்டுங்க. www.tamil.net

இதைத் தவிர இந்த காலகட்டங்களில் தான் பல்வேறு தமிழ் தின/வார பத்திரிக்கைகளும் இணையத்திற்கு வந்தன. ஒவ்வொன்றும் வெவ்வேறு எழுத்துருவைத்து கொடுமைப் படுத்தினாலும், அதிக அளவில் இணையத்தில் தமிழ் புகுந்தது இந்த கால கட்டங்களில் என்ற வகையில், என்னளவில், 1997 முதல் 2001 ஆண்டு வரையிலான காலகட்டத்தை இணையத்தில் தமிழின் பொற்காலம்-1 என்றே குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழ்.இணைய நாட்களில் நான் ரசித்த, பங்கு கொண்ட சில படைப்புகளை/விஷயங்களை வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

(இ.த.பொ தொடரும்...)

- அலெக்ஸ் பாண்டியன்
14-June-2005

11 comments:

செல்வராஜ் (R.Selvaraj) said...

தமிழ்.இணையம் பற்றிய வரலாற்றுரை நன்று. தனிப்பட்ட முறையில் அந்தக் காலகட்டத்தில் இணையத் தொடர்பு இல்லாத காரணத்தால் இதிலே பங்கு கொள்ள முடியவில்லை என்பதால் எனக்கு அது ஒரு இருண்ட காலமாய் இருந்தது. அதன்பின் சில வருடங்களுக்கு பிறகு கிடங்கிலே தோண்டிப் பலவற்றைப் படித்துத் தெரிந்து கொண்டேன் - குறிப்பாய் தகுதரம் பற்றிய விவாதங்கள்.

துளசி கோபால் said...

அன்புள்ள அலெக்ஸ் பாண்டியன்,

நான் இதுவரை தெரிந்து கொள்ள இயலாமல் இருந்த 'இணையத்தில் தமிழ்' என்ற
விவரங்கள் தந்திருக்கின்றீர்கள். இது உண்மையாகவே 'வரலாறு'தான்!!!
அறிந்து கொள்ள முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி!!!

எனக்குத் 'தமிழ்இணையம்' ச்சும்மா கொஞ்சகாலமாகத்தான் பழக்கம்!

அருமையான தகவல்களுக்கு மிகவும் நன்றி!!

என்றும் அன்புடன்,
துளசி கோபால்( நியூசி)

பி.கு: 'நியூசிலாந்து குமாரபாரதி' பற்றி மேல் விவரம் ஏதாவது தெரியுமா?

LA_Ram said...

கடந்த பத்தே பத்து வருடங்குள்ளே தான் தமிழ் இணையத்தின் பொற்காலம் பொதிந்திருக்கிறது, அதிலே நானும் ஏதோ ஒரு அணில் மாதிரி என்னால் ஆனவற்றைச் செய்தேன் என்று நினைக்கும்போது, 'அந்தக் கால ஞாபகங்கள்' வந்து கொஞ்சம் தொண்டையை அடைப்பது நிஜம். வழக்கம் போல நல்ல பதிவு, கீப் இட் அப்!

நற்கீரன் said...

பல நல்ல தகவல்கள்.
தமிழ் இணையம் இப்பொழுதுதான் ஆரம்பம் போல தெரிகின்றது, இதற்க்கு பல பொற்காலங்கள் வேண்டும். தமிழ் வரலாறு போல், ஒரு சோழ பொற்காலம், அதன் பின் எல்லாம் பிற்காலம் என்று ஆகிவிடக்கூடாது.

Alex Pandian said...

செல்வராஜ்: உண்மை. தகுதரம் உருவாகிய விதம் - அதன் உரையாடல்கள் எல்லாம் மிகவும் சிறந்த முறையில் நடந்தது. 6 வருடங்களுக்கும் மேலாக இணையத்தில், மடலாடற்குழுக்களில் நின்று சக்கை போடு போடுகிறது என்றால் அதனை ஏற்படுத்திய ஆர்வலர்களின் உயர்ந்த நோக்கும், தொலைதூரப் பார்வையும், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கும், பின்னர் 'இ' பிரச்னையால் திஸ்கி- 1.7 வந்ததும் வரலாறே.


துளசி: தங்கள் மடல்களையும், பதிவுகளையும் படித்துவருகிறேன். மிக நன்றாக எழுதுகிறீர்கள். உங்கள் ஜூரி அனுபவங்கள் அருமை. தமிழ்.நெட்டில் குமாரபாரதி அவர்கள் எழுதிய மடல்கள், கட்டுரைகள் எல்லாம் மிக ஆழமானவை. பலராலும் படித்துப் பாராட்டப்பட்டவை. இங்கு காணலாம் சில மடல்களை. தமிழ்.நெட் லிஸ்டைத் தேடினால் இன்னும் பல படைப்புகள் கிடைக்கும். அவர் இன்னும் நியுசியில் இருக்கிறாரா என தெரியவில்லை.


எல்லே ராம்: தமிழ் நெட்டின் சிறப்பே - பல அணில்கள் ஒன்று சேர்ந்து ஆக்கபூர்வமாய் செயல்பட்டது தான் (என்ன தான் கருத்து வேற்றுமைகள் வந்திருந்தாலும்). என்னளவில் தமிழ்.நெட் மூலம் கிடைத்த நண்பர்கள் தாம் மிகப் பெரிய பேறு.


நற்கீரன்: வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

- அலெக்ஸ்

Desikan said...

அன்புள்ள அலெக்ஸ் பாண்டியன்,

மிக அழகாக நடையில் 'unbiased''ஆக கூறியுள்ளீர்கள்.

என் சிறு பங்கை நினைவுகூர்ந்ததற்கு மிக்க நன்றி.

அன்புடன்,
தேசிகன்

Narain said...

//பாலா பிள்ளை, டாக்டர்.கல்யாண், மணி மணிவண்ணன், டாக்டர்.ஜெயபாரதி, எல்லே ராம், எல்லே சுவாமிநாதன், கந்தையா ரமணீதரன் (எண்ணற்ற பெயர்கள்), ஆசிப் மீரான், சடையன் ஷாபு, சிங்கை பழனி, சிங்கை கிருஷ்ணன், இண்டி ராம், கோவர்தனன் ராமச்சந்திரன், டாக்டர்.ரமணி, கே.லோகநாதன், நாக.இளங்கோவன், பூபதி மாணிக்கம், வாசன் (நியு மெக்சிகோ), இராம.கி, சுலைமான் அண்ணன், ரங்கபாஷ்யம் கோஷ்டி (இவர்கள் அடிக்காத கூத்து இல்லை!), அன்புமணி, வேல்முருகன், ஜெர்மனி (தற்போது தென் கொரியா) நா.கண்ணன் (காசுமி சான் ?), விக்ரம் குமார், நாசா.டாக்டர் நாக.கணேசன் ஜெயபாலசிங்கம், வ.ஐ.சு.ஜெயபாலன், கேப்டன் மாகோ, பால்மர், கோகுலக் கண்ணன், நியுசிலாந்து குமாரபாரதி, கனடா சுவாமிநாதன் சங்கரன், தமிழரசன் (இவரின் அதீத பிராமணீய எதிர்ப்பு), ஹாங்காங்கிலிருந்து டாக்டர்.பிலிப் என பலரும் பலவித தலைப்புகளில் எழுதிய பொற்காலம். (பெயர் விட்டுப்போனவர்கள் மன்னிக்க)//

ஆஹா, நினைவு படுத்தி விட்டீர்கள். நிறைய நபர்களின் பெயர்கள் மறந்து பரிதவித்துக் கொண்டிருந்தேன். நல்ல பதிவு. தொடருங்கள்.

Alex Pandian said...

துளசி: இந்த சுட்டியிலிருந்து திரு.குமாரபாரதி அவர்களின் மடல்களைத் தேடலாம்
http://www.tamil.net/list/2000-01/
http://www.tamil.net/list/2000-01/frm00028.html

அவரின் இந்த மெயில் முகவரி இன்னும் வேலை செய்கிறதா என அறியேன்.

தேசிகன்: நன்றி. அந்த நாட்களிலிருந்தே தங்கள் பங்களிப்பை, சுஜாதா படைப்புகளை வலையேற்றும் செய்திகளை கவனித்து வந்திருக்கிறேன். வளர்க தங்கள் பணி..! ஸ்ரீரங்கம் வெங்கடேச பவன் பற்றி விரைவில் எழுதுகிறேன். நீங்களும் அனுபவித்திருக்கலாம்.

- அலெக்ஸ்

-/பெயரிலி. said...

/அவரின் இந்த மெயில் முகவரி இன்னும் வேலை செய்கிறதா என அறியேன்./
அவர் இப்போது அவுஸ்ரேலியாவின் மத்தியபகுதியிலே வசிக்கிறார். அங்கே தமிழ்வானொலியிலும் பகுதி நேரமாகத் தொழில்புரிகிறார். அவரது தொடர்பு அஞ்சல்ல், தொலைபேசி இலக்கங்கள் வேண்டின், ஒரு தனி அஞ்சல் தாருங்கள்.

Anonymous said...

துளசி:

சி.குமாரபாரதியின் ஆக்கங்களை இங்கு காணலாம்

http://members.tripod.com/Kumarabharathy/

எழுத்துரு குழப்பமிருந்தால் மாதிரிக்கு ஒரு கட்டுரை

http://home.comcast.net/~kollidam/kbarathi_pdf.pdf-வாசன்

Alex Pandian said...

பெயரிலி, வாசன்: நன்றி.

அவருக்கு யுனிகோடையும், தமிழ்மணத்தையும் கோடிகாட்டிவிட்டால் இங்கும் அவர் எழுத்துக்களைப் பகிரவும், நமக்குப் படிக்கவும் வாய்ப்பு.

குமாரபாரதியின் இரண்டு மடல்களை இங்கு இடுகிறேன். புதிய இணைய மக்களுக்கு அவரின் இலங்கை பற்றிய குறிப்புகள் நிச்சயம் படிக்கப் பிடிக்கும்.

- அலெக்ஸ்