Monday, June 13, 2005

காவிரிக்கரையோரம்...!

முதலில் வலைப்பதிவு துவங்கியபோது (சுமார் ஒரு வருடம் முன்பு).. பாண்டியன் பக்கம் என்றே துவங்கினேன். பிறகு சில நாட்களிலேயே இன்னொருவரும் பாண்டியன் பக்கம் என வலைப்பதிய ஆரம்பிக்க, சரி நமது வலைப்பதிவு பெயரை மாற்றுவோம் என யோசித்ததில் சில எண்ணங்கள்.

தமிழ்மணத்தில் இந்த வார நட்சத்திரமாக வாய்ப்பளித்த தமிழ்மணம் நடத்துனர் / ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி..!

நட்சத்திரம் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது 2 விஷயங்கள்

1. ஸ்ரீப்ரியா நடித்த நட்சத்திரம் என்ற திரைப்படம் (ஞாபகம் இருக்கா - அவள் ஒரு மேனகை என்ற பாடலில் எஸ்.பி.பி குழைவார்)
2. சில மாதங்களில் இரவில் கிழக்குத் திசையில் வானத்தை கவனித்தால் தெரியும் ஒரு நேர்க்கோட்டில் அருகருகில் இருக்கும் மூன்று நட்சத்திரங்கள்

பலரும் வித்தியாசமான பெயர்களை தெரிவு செய்து வருகையில் நமது அடையாளம் என்ன என்று யோசித்ததில் அகப்பட்ட பெயர் தான் 'காவிரிக் கரையோரம்..!'

(பழைய) தஞ்சை மாவட்டத்தில்.... அந்தக் காலங்களில் ஆறுகளில் நீர் ஓடியது :-) ஆனி
மாதமென்றால் சுழித்துகொண்டு ஓடும். மேட்டூரில் (June-12) தண்ணீர் திறந்த 10ஆம் நாள் ஆற்றில் நுங்கும் நுரையுமாக தண்ணீர் வரும். முதல் சில நாட்களில் (வீட்டினர்) குளிக்க அனுமதிக்க மாட்டார்கள். அதற்குப்பிறகு சுமார் 5-6 மாதங்களுக்கு ஆற்றுக் குளியல்தான். அதுவும் அப்போது 501 பார் சோப், பொன்வண்டு பார் சோப் என நீல நிற கட்டி சோப்பை எடுத்துக்கொண்டு காலையில் ஒரு படையாக கிளம்புவோம். வீட்டிலேயே பல் தேய்த்திருந்தாலும், ஆற்றுப் படிகளில் செங்கல்லைத் தேய்த்து கொஞ்சம் பொடியாக்கி, தண்ணீர் படிகளில் ஏறி அந்தப் பொடியை நனைத்து, பல் தேய்த்து பின்னர் ஆண்கள் படித்துறையில் சுமார் அரை மணிநேரம் குளியல். சில தைரியமான (!) கூட்டாளிகள் ஓடிவந்து மதகிலிருந்து குதித்து எழுப்பும் நீர்த்திவலைகளில் மனம் குதூகலிக்கும். அப்போதெல்லாம் ஆனி முதல் தை வரை எல்லா நாட்களிலும் ஆற்றில் தண்ணீர் வரும்.

சில சமயம் பெருமழைக் காலங்களில், படித்துறை முழுதும் மூழ்கி, வெள்ளம் வந்து நீரே மஞ்சள் வண்ணத்தில் அடித்துக்கொண்டு ஓடும். சில சமயம் இடுப்பளவு/முழங்காலளவு தண்ணீரே. அவ்வமயங்களில் ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் சென்று வருவோம்.

சமீப காலங்களில் ஆற்றில் தண்ணீர் ஒரு வாய்க்கால் போல ஒரு ஓரம் ஓடுகிறதாம். சில மாதங்கள் மட்டும் முழுவதும் நனைகிறது.

ஆறு / நல்ல (!) குளம் உள்ள ஊர்களில் வசிப்பவர்கள் / வளர்ந்தவர்களிடம் கேட்டால் இந்த ஆற்றுக்குளியலில் அருமை புரியும். அது தாமிரவருணிக் கரையாக இருந்தாலும் சரி, காவிரியாக இருந்தாலும் சரி அல்லது இன்ன பிற ஆறாக இருந்தாலும் சரி. இந்த ஆற்றுக் குளியலின் அருமையை பாலகுமாரன் ஒரு கதையில்/கட்டுரையில் மிக அழகாக எழுதியிருப்பார்.

பின்னர் திருச்சியின் அகண்ட காவிரியில் கால் நனைத்ததுண்டு. கல்லணையின் கட்டமைப்பு கண்டு வியந்ததுண்டு. மலைக்கோட்டையின் மீதமர்ந்து சுமார் 120டிகிரிக்கு கண்ணை ஓட்டினால் காவிரியின் அழகும் வீரியமும் புரியும். ஆடிப்பெருக்கன்று கட்டுசாதக்கூடையுடன் கூடிவரும் கூட்டமும், கிரகண காலங்களில் நள்ளிரவில் பலரும் 2-3 முறை குளிக்கச் செல்லும் அனுபவமும் பெற்றவர்களுக்கே அதன் மகிழ்வு புரியும்.

கர்நாடகம் வந்த பிறகு தினமும் காவிரித் தண்ணீரில் தான் குளியல் / குடியல் தான்.


Photo Courtesy: The Hindu

தலைக்காவிரி எனப்படும் காவிரி உதயமாகும் இடம் எல்லோரும் செல்ல வேண்டிய ஒரு இடம். கர்நாடகத்தின் கூர்க் மாவட்டத்தில் மடிகேரியின் அருகில் பாகமண்டலா தாண்டி தலைக்காவிரி. அங்கு உள்ள சிறு குளத்தின் மூலையில் உள்ள சின்ன தொட்டியில் தான் காவிரி உதயமாவதாய் செய்தி. இதுவே ஆறாக மாறி, பாகமண்டலா முதல் பின்னர் கிளைநதிகளாய் பிரிந்து, ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர் என அணைக்கட்டுகள் வழியாய் தடைபட்டு, மழை அதிகம்பெய்து வழிந்தால் மட்டுமே ஹொகனேக்கல் வழியாய் மேட்டுர் வரும் நிலை தற்போது. தமிழகத்திற்குத் தெரிந்தோ தெரியாமலோ இன்னும் பல சிறு அணைகள், நீர்ப்பாசன ஏரியா அதிகரித்தல் போன்ற செயல்களில் கர்நாடகம் ஈடுபட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்களில் கர்நாடகத்தின் காவிரிக் கரை இருக்கும். ரஜினி படங்களில் கண்டிப்பாக இருக்கும். சந்திரமுகியிலும் 'தேவுடா தேவுடா' பாடல் எல்லாம் அவரின் ஆஸ்தான படப்பிடிப்பு இடங்களில் தான். சுஜாதா தன்னுடைய 'கற்றதும் பெற்றதும்'ல் பாண்டவர் பூமி பற்றி எழுதும்போது 'வாட்டர் கலர் கிராமம்' என எழுதியிருப்பார். இது நிச்சயம் நீங்கள் கர்நாடகம் வந்து, மைசூர், மண்டியா மாவட்ட கிராமங்களைப் பார்த்தால் தான் புரியும். பசுமையும், வயல்களும், கரும்புத்தோட்டங்களும் நீர்நிலைகளும், ரங்கனத்திட்டுப் பறவைகளும் ஒரு வித்தியாசமான அனுபவம்.

தமிழகத்திலும் பழைய தஞ்சை மாவட்டம் அப்படிப் பச்சைப் பசேலென்று இருந்ததுண்டு. நானும்
அதை ரசித்ததுண்டு. அது ஒரு பொற்காலம்..!


- அலெக்ஸ் பாண்டியன்
13-June-2005

7 comments:

LA_Ram said...

இன்னொரு காவிரிக்கரைக்காரன் என்கிற முறையில், மிகவும் ரசித்தேன். தொடரவும்.

அப்டிப்போடு... said...

திருச்சி., காவேரி இப்பிடி ஊர் ஞாபகத்தை தூண்டி விட்டுட்டிங்களே., கர்நாடகால நமக்குத் தெரிஞ்ச் இடம் பெங்களுர், அல்சூர்., சாமுண்டேஸ்வரி., ராஜராஜேஸ்வரி கோவில்கள் அம்புட்டுதான். அப்புறம் 'நிம்மட காவேரி' ந்னு வசனம் பேசுற ஆளு நல்லாருக்காரா?

ராம்கி said...

பாண்டியன்,

காவிரியில தண்ணீர் வந்தாலும் வராட்டாலும் எங்க ஊரு பக்கம் பச்சைப் பசேல்னுதான் இருக்குது. சாம்பிளுக்கு சில போட்டோவை கூடிய சீக்கிரம் நானே எடுத்துவிடறேன்!

Chandrasekaran said...

Adade, neengalum Trichy-aa ? Mela Chinthamani, Keezha Chinthamani, Ammamandapam,.... hmmm... andha naalelaam thirumbaadhu !

Anbudan
-Salpetta Chandru

மாயவரத்தான்... said...

ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது அப்படீன்னு சும்மாவா சொன்னாங்க? ராம்கி அண்ணாத்தே.. சீக்கிரமா நம்மூரு போட்டோவெல்லாம் எடுத்து விடுங்க சாரே! அலெக்ஸ் அண்ணாத்தே.. மாயுரம் மாபியா சார்பில் உங்களை வருக வருக என்று வரவேற்கிறோம்.!

Alex Pandian said...

காவிரிக்கரைக்காரர்களே, மற்றும் மாயவரம் மாஃபியா மக்களே,

வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

அப்டிபோடு: யாருங்க அது ' நிம்மட காவேரி'ன்னு பேசறவரு ? ராஜ்குமாரா ? நல்லாத்தான் கீறாரு. அப்பப்போ செக்கப்புக்கும் போயிட்டு வர்றாரு.

ராம்கி: மாயாவரம் இன்னும் பசுமையா இருக்கா ? இந்த ஏப்ரல்-மே-ஜுன் மாசத்துல ? படம் போடுங்க பாக்கறோம். சந்தோஷமா இருக்கும்.

சல்பேட்டா சந்துரு: திருச்சில பல இடங்கள்ளையும் சுத்தி / இருந்து வந்திருந்தாலும் சமீப காலமா ஸ்ரீரங்கம் தான். (வெங்கடேச பவன் பத்தி ஒரு பதிவுல எழுதறேன்)

- அலெக்ஸ்

த.பரசுராமன் said...

நானும் காவிரிக்கரைக்காரன்தான். நம்ம ஊரு ஈரோடு-பள்ளிபாளையம். நம்ம ஏரியா சார்பா உங்களை வரவேற்கிறேன்.