Monday, June 13, 2005

பாலகுமாரன் - கை வீசம்மா கை வீசு

பாலகுமாரன் - கை வீசம்மா கை வீசு

பாலகுமாரனின் இந்த நாவலை சுமார் 8 மாதங்களுக்கு முன்பு வாங்கியிருந்தேன் ஆனால் தற்போது தான் படிக்க முடிந்தது. மணியனின் இதயம் பேசுகிறது வார இதழில் தொடராக 80களின் இறுதியில் வந்தது (என நினைக்கிறேன்).

80களில் பாலகுமாரனின் கதைகளில் வருவது போல இதிலும் பெண், பெண்மனசு, ஆண்களால் அலைக்கழிக்கப்படும் பெண் போன்ற பாத்திரங்கள்.

பட்டம்மாள், தனது பெண் ராஜி என்னும் ராஜேஸ்வரியின் (தேவேந்திரனுடன்) திருமணம் தடைபட, சத்திரத்தில் இருக்கும் பாலிகைச் சட்டிகளைக் கரைக்க எடுத்துச் செல்லும் இடத்தில் கதை ஆரம்பித்து, பின்னர் பிளாஷ்பேக்காக விரைகிறது.

சுஜாதாவுக்கு ஸ்ரீரங்கம் என்றால், பாலகுமாரனுக்குக் கும்பகோணம். கும்பகோணத்து தேவதைகள் என எழுதவில்லையே தவிர, பாலாவின் (பாலகுமாரன் கதைகளை ரசிக்கும் பெரும்பாலானோர் அதுவும் பெண்கள், அவரை பாலா, பாலா என விளித்து உருகுவது பலருக்கும் தெரிந்திருக்கலாம்) கதைகளின் பெரும்பாலான மாந்தர் கும்பகோணத்து மனிதர்கள் தாம். கும்பகோணத்தைப் பற்றி பாலாவும் இந்த நாவலில் இப்படி எழுதுகிறார்.....

------
கும்பகோணம் ரொம்ப சந்தோஷமான ஊர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சை. தஞ்சையின் நெற்களஞ்சியமாய் கும்பகோணம் இருந்தது. காவிரியும் முடிகொண்டானும் உரசிப்போகிற பூமி அது. வண்டல் மண் இரண்டு மணிநேர நீர் பாய சேறாகும். மூன்று நாளில் புல் தலையெடுக்கும். ஒரு முறைக் கீறிப் புரட்ட, அதுவே உரமாகும். கண்ணுக்கெட்டின தூரம் வரை பச்சை பார்க்க முடியும். எது போட்டாலும் வளரும்.

ஜனங்கள் சந்தோஷமாய் இருந்தார்கள். எதையும் ரசித்தார்கள். காவிரி நீர் வரவால் சோற்றுக்கு கவலை இல்லை. சுள்ளென்று வெயில் அடிப்பதால் சுறுசுறுப்புக்குக் குறைவில்லை. ஆடலும் பாடலும் கோயிலும் பூஜையும் அங்கே மதிக்கப்பட்டன. விமரிசிக்கப்பட்டன.

ஆனால், பாராட்டு போலவே விமரிசனமும் துள்ளலாய்தான் வரும். நகைச்சுவை கலந்து ஆளை நோகடிக்கும். குத்தி நெஞ்சைக் கிழிக்கும். கூனிக் குறுகவைக்கும். வதைக்கும்.
--------------

மேற்கண்ட கும்பகோண மகிமை சத்தியமான உண்மை. கும்பகோணத்து மனிதர்களுடன் நெருங்கிப் பழகியிருந்தால் இது புரியும்.

கதையில் பட்டம்மாள், நாகராஜனுக்கு இரண்டாம் தாரமாய் "வசித்து" வரும் ஒரு பெண்மணி. மகள் ராஜியும், மகன் வெங்கடேஷ்உம் படிக்கும் காலகட்டத்தில் துவங்கி, ராஜி வளரும் காலங்களில் ஏற்படும் பெண் மனது/உடல் காயங்கள், பண்ணை வீட்டு ராஜசேகருடன் காதல்,
அதனால் ஏற்படும் விளைவுகள் என செல்ல, எல்லாம் மறந்து சென்னை வந்து தேவு எனப்படும் தேவேந்திரன் கூட தங்கும் போது மீண்டும் காதல், ஆனால் ஜாதி காரணமாய் தேவு வீட்டில் திருமணத்தை நிறுத்த, நடுவில் மணிகண்டன் என்னும் கட்டிட காண்ட்ராக்ட் ஆளுடன் ஒரு சஞ்சலம். எல்லாம் முடிந்து பஸ்ஸ்டாண்டில் நின்று தேவு காலில் விழுந்து கதறியும் அவன் தவிக்கவிட்டுப் போக, மீண்டும் குடும்பம் கும்பகோணம் திரும்புகிறது. ராஜி தனது டீச்சரைச் சந்திக்கச் செல்கிறாள். தனியாய் வாழும் டீச்சரின் குரலில் பாலகுமாரனின் சவுக்கடி சாட்டையடிகள். டீச்சர் கொடுக்கும் அட்வைஸ் தான் - கைவீசம்மா கைவீசு.

இன்றைய தமிழ் தொலைக்காட்சித் தொடர்களுக்கேற்ற கதை. மெகா சீரியல் அளவுக்கு இழுக்க முடியாவிட்டாலும், தேவிபாலா, பாஸ்கர் சக்தி மற்றும் இன்ன பிற சீரியல் ஸ்பெஷலிஸ்டுகளிடம் கொடுத்துவிட்டால், ரேட்டிங்கில் முதலிடத்தில் பெற வைத்துவிடுவதற்கான அனைத்து சம்பவங்களும் இக்கதையில் உண்டு.

-----------------------
கைவீசம்மா கைவீசு - பாலகுமாரன்
விலை ரூ.71.
விசா பப்ளிகேஷன்ஸ்,
திருமகள் நிலையம், சென்னை.
-----------------------

இந்த தொடர் எழுதப்பட்ட 80களின் இறுதியில் இந்தக் கதையின் தாக்கம் எப்படி இருக்கும் என புரிகிறது. தற்காலப் பெண்கள் இதிலிருந்து கொஞ்சம் வெளிவந்திருந்தாலும், இன்னும் பல பெண்கள் இந்தக் கதையில் ராஜிக்கு ஏற்படும் நிகழ்வுகளில் சிக்கி உழல்கின்றனர் என்பதும் உண்மை. நன்கு படித்த பெண்களும்.


பாலகுமாரனின் ரசிகர் தளம் இங்கே http://www.balakumaran.net/index.php அன்பர் சாகரன் நடத்தும் தளம்.

சில புத்தகங்களை http://www.udumalai.com/books/balakumaran.htm தளத்திலும் வாங்கலாம் என தெரிகிறது.

http://www.sysindia.com/emagazine/senthamiz/biography.html என்ற தளத்தில் ஏன் அவரை Navelist என குறிப்பிட்டுள்ளனர் என புரியவில்லை. விகடனில் நிறைய எழுதியிருப்பதால் Navelist ஆக்கிவிட்டனரோ :-)

- அலெக்ஸ் பாண்டியன்
13-June-2005

6 comments:

கிஸோக்கண்ணன் said...

அலெஸ், 'கை வீசம்மா கை வீசு' என்ற நாவல் படிச்ச ஞாபகம் இருக்கு. கதைதான் ஞாபகத்துக்கு வருகுதில்லை. அந்த நாட்களில் நானும் விரும்பிப் படிச்சதுண்டு அவரது கதைகளை. எனது நண்பனொருவனுக்கு ஒரு நாவல் நான் கொடுக்க அவனும் உருகிப் படிச்சதாகச் சொன்னான். அவன் படிச்ச நாவல்களில் 75% வீதமனாவை பாலகுமாரனின் நாவல்கள்தான்.

இந்தவாரம் மறக்க முடியாத இனிமையான வாரமாய் ஆக வாழ்த்துக்கள்.

குப்சாமி said...

அலெக்ஸ்,

வணக்கம். கும்பகோணத்தில் குடுமிராமநாதன் என்று ஒருவன் இருக்கிறானாமே... அவனைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன். சுவாரஸ்யமாக இருக்கும்.

Anonymous said...

கரையோர முதலைகள் பா.கு எழுதியதில் மிக சிறந்தவொன்றென எனது அபிப்பிராயம்.

அண்மைய படைப்பான " இட்லி,அப்பம்..?" ( முழுபெயர் மறந்துவிட்டது) முடிவு நோக்கி போகின்ற போது நீர்த்து போனது.

வாசன்

Anonymous said...

athu IDLI VADAI THAYIRSADAM

Alex Pandian said...

கிஸோக்கண்ணன்:

நன்றி. பாலகுமாரனின் பாக்கெட் நாவல்களை விட, வார இதழ்களில் தொடராக வந்த நாவல்கள் மிகவும் நன்றாக இருந்தது என்பது எனது கணிப்பு.

குப்சாமி:

குடுமி ராமநாதனா ? யாருப்பா அது. அம்மா கட்சியிலே ஒருத்தரு ஒரு தடவை ஜெயிச்சாரு அவரா ? எனக்குத் தெரியாதுப்பா.

வாசன்: ஆமாம். இட்லி, வடை, தயிர்சாதம் - ஆரம்பத்தில் மிகவும் நன்றாக துவங்கி கடைசி அத்தியாயங்களில் சுமாராகிப் போன தொடர்கதை அது. ஆனாலும் பைண்ட் செய்து வைத்திருக்கிறேன்.


- அலெக்ஸ்

Chandravathanaa said...

பாலகுமாரனின் வை வீசம்மா கை வீசை வாசித்தேன் போலத்தன் ஞாபகம். சரியாகச் சொல்ல முடியவில்லை.
இப்படியான பதிவுகளையெல்லாம் வாசிக்கும் போது பல புத்தகங்கள் அறிமுகமாகி...
அவைகளை எப்படியாவது பெற்று வாசிக்க வேண்டுமென்ற ஆவல் என்னுள் எழுந்துள்ளது.