Wednesday, June 15, 2005

சு-டோ-குவும் பாரதிதாசனும்

சு-டோ-குவும் பாரதிதாசனும்

தமிழ்.நெட் முத்துக்கள்: சு-டோ-குவும் பாரதிதாசன் குறுக்கெழுத்துப் புதிரும்

சமீப நாட்களாக 'த ஹிண்டு'விலும் சு-டோ-கு எண் கட்ட விளையாட்டு பிரசுரமாகி வருகிறது. எல்லாம் 'வந்தாச்சு.... வந்தாச்சு..' புகழ் டெக்கான் குரோனிகிளின் போட்டி தான். டெ.கு ஆரம்பித்துவைத்த இந்த பகுதியை தற்போது டைம்ஸ் ஆ·ப் இண்டியாவும் ஆரம்பித்துவிட்டது.


Image Courtesy: The Hindu

தமிழ் மக்களுக்கு குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றும் புதிதல்ல. அந்தக் கால ஆனந்தவிகடனிலிருந்து, குமுதம், குங்குமம், ராணி, தேவி, வாரமலர் என குறுக்கெழுத்துப் போட்டியில் பங்குகொண்டு, ரூ.100 அல்லது பட்டுப் புடவை பரிசும் பெற பெரிதும் விழைவர். ஆனால் ஆங்கில தினசரிகளில் வரும் குறுக்கெழுத்துப் போட்டிகளுக்கு பெரும்பாலும் பரிசுகள் தருவதில்லை. GRE, TOEFL எழுதும் மாணவர்களும், சாய்வு நாற்காலியில் அறுபதைக் கடந்த சில துடிப்பான இளைஞர்களும் பென்சில் வைத்து விளையாடும் விளையாட்டாகவே இருந்து வந்தது.

ஆனாலும் சு-டோ-கு வோ எல்லோரையும் இழுக்கும் விளையாட்டாக இருக்கிறது. வெறும் எண்கள் தான் அதனால் மொழிப்புலமையோ, நயந்தாராவின் உதட்டை சமீபத்தில் கடித்தவரின் பெயரோ, எஸ்.ராமகிருஷ்ணனின் முதல் நாவல் பெயரோ தெரிந்திருக்கவேண்டியதில்லை. எண்கள்... எண்கள்.. எண்கள். "பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு" என்பது போல 1 முதல் 9 வரையிலான எண்களை 3x3 கட்டத்திலும், குறுக்கும் நெடுக்குமாக வரச்செய்யவேண்டும். ஒரே நம்பர் ரிப்பீட் ஆகக் கூடாது. ஒரு C++ அல்லது ஜாவா மென்செயலியில் இதன் விடைகளை இலகுவாகக் கண்டுபிடித்துவிடலாம் என்றாலும், பென்சில் மற்றும் பேப்பரை வைத்து விளையாடுவதில்தான் கிக்கே. சுடோகுவை எப்படி கைகொள்வது என டிப்ஸ் இங்கே http://www.sudoku.com/howtosolve.htm

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

தமிழ்.நெட்டில் 1998ன் ஏப்ரல் மாத இறுதியில் பாவேந்தர் பாரதிதாசனின் வாரம் கொண்டாடப்பட்டது.

பலரும் தங்களுக்குத் தெரிந்த, தங்கள் கைவசம் இருந்த பாரதிதாசன் கவிதைகளை எடுத்து பகிர்ந்தனர். அப்போது கவிதைகளையும், கட்டுரைகளையும் படித்து இன்புற்று இருக்கையில் கிடைத்த இன்னோர் தமிழ்.நெட் புதையல் தான் இந்த குறுக்கெழுத்துப் போட்டி. பாரதிதாசனை வைத்தே புனையப்பட்ட போட்டி. போட்டிக்கு முழுவிடை எனக்குத் தெரியாதெனினும் புதிரைத் தயாரித்தவர்/எழுதியவர் இந்த வாரக் கடைசியில் விடை பகிருவார் (என நம்புகிறேன் :-))

தமிழ்.நெட் முத்துக்கள் தொடரும்....!

- அலெக்ஸ் பாண்டியன்
15-June-2005

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

நன்றி: தமிழ்.நெட்; இதனை எழுதியவர் "தி.கோ.க.ர";
பாவேந்தர் வாரம் - Crossword Puzzle - இது தற்போது இணையத்தில் இல்லை.
25-April-1998

இணையர் கணினித்திரை அளவே துணை ;-)
------------------------------------------------------------
மறுப்பு: முரசு எழுத்துருக்கள் இல்லாதோரும் 14" திரையை விடக் குறைந்த கணினி திரை உள்ள நரையற்ற வாலிபர், திரை பெற்ற வயோதிகர் எவருமே உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

புகுக (முரசு; 14" +) புகல்வேண்டா= (ஏனையோர்)

முதலில் இந்த முயற்சிக்கு பொறி தந்த நண்பரின் நேற்றைய அஞ்சலுக்கு ஒரு முழு நன்றி. ;-)பின்னர் இதில் பொறுமையாய் எவரேனும் ஈடுபட்டால் அதற்கு அரை நன்றி :-(

- (எழுதியவர் - தி.கோ.க.ரா -...!)

குறுக்கெழுத்துப்புதிர்
-----------------
Image hosted by TinyPic.com

நிரப்பற் குறிப்புக்கள்
-----------------

***** : அடைக்கப்பட்ட கட்டம்; இதனுள் எழுத்து ஒன்றும் வராது

<குழப்பமுற்று வந்துள்ளது>: சொல்லில் உள்ள ஒழுங்குப்படி எழுத்துக்கள் குறுக்கெழுத்துக் கட்டங்களில் வந்திருக்கவில்லை

<பின்னிருந்து முன்னாக>: சொல்லின் எழுத்துக்கள் கடைசியிலிருந்து முதலாவதாக பின்புறமிருந்து ஆரம்பித்து எழுதப்பட்டுள்ளன. (தலைக்கீழ்)

<எண்>: இ·து இலக்கங்களினால் மட்டும் நிரப்பப்படும் கட்டங்கள் (0-9)

(X): எடுக்கும் கட்டங்களின் எண்ணிக்கை

குறிப்பு: சுலபத்திற்காக மூலைவிட்டம் வழியே குறுக்காகவும் சில சொற்கள் தர
முயற்சித்துள்ளேன்; தேவைக்கு அதிகமாக கட்டங்களைச் சிறிது சிறிதான
உபசொற்களாகவும் தர முயற்சித்துள்ளேன். கண்டுபிடிக்கும் சுலபத்திற்காக.
அவை மேலும் குழப்புவதாக அமையாது என்றும் நம்புகிறேன். ;-)

விடைகள் வேறொரு நாள் காண்போம்.

அ. மேலிருந்து கீழ்
----------------

1. பாரதிதாசன் எழுதிய பத்திரிக்கை ஒன்று இந்தியா, இலங்கை எல்லாம் இதுவாம்! (5)
2. பாரதிதாசன் தமிழுக்குத் தந்த பரிசு ஒன்று <குழப்பமுற்று வந்துள்ளது> (8)
4. பாரதிதாசன் தமிழர் மனைக்காய் ஒளிர விட்டது (8)
6. பாடல்களில் மிக அழகி; பாரதிதாசனிலும் இ·து உண்டு (3)
9. உலகின் கண்ணில் இவள் விதவை; ஆனால், அவளின் கண்ணிலோ அப்படி அல்ல (2)
10. இரட்டைச் சொற்கள் என்றால் இன்றைக்கு "உணவு என்ன?" ஒற்றைச்சொல் என்றால் தயைகூர்ந்து "சத்தமிட்டுச் சொல்லாதீர்." (4)
11. பெண் கண்களும் இதுவாகலாம் கையெடு ஆயுதங்களும் இதுவாகலாம் என்றார் பல கவிஞர் <பின்னிருந்து முன்னாக> (2)
13. இடுக்கண் வருங்கால் இச்செயல் புரிக ;-) (2)
15. பாரதிதாசன் சுயமயாதை இயக்கத்தே சேர்ந்த ஆண்டு <எண்> (4)
17. வேலன் வியாபித்திருப்பதும் இதுவே; வேங்கை பாயக் கண்டு வியத்திருத்தலும் இதுவே (2)
18. இது பொய்த்தால், கோனுயர்தலும் இல்¨லை குடி உயர்தலும் இல்லை என்றார் மூதாட்டி (2)
19. ஆண்டுக்காலத்தே முன்னிருக்க ஒற்றை எழுத்தால் இழைத்திருக்கும் (1)
20. பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் <எண்> (1)
21. '21 மேலிருந்து கீழுக்கு' தங்கி வாழ தாங்கி தானம் செய்தவன் (2)
22. பாரதிதாசன் இதழாய்த் தொடங்கமுன் அதன் முன்னரே தன் பெயர்நிலத்தே கொடியாய்க் கிடந்தது <பின்னிருந்து முன்னாக> (3)
23. அமைச்சர்கள் இதன் மரியாதையே வெகுவாக மழுங்கடித்துவிட்டனர் என்கிறன தமிழ்ப்பத்திரிகைகள் (3)
24. பாரதிதாசன் இன்னொரு வாரம் மேலாக இருந்திருந்தால் அவர் எட்டியிருப்பது <எண்> (2)
25. தமிழிற்கும் பல இடங்களில் பாவேந்தர் இதன் தலைவர்; பாண்டிச்சேரி அரசியலிலும் கூட பாரதிதாசன் இதன் தலைவர் (2)
28. வெள்ளெழுத்துக்காரன் இல்லையென்றால் பிறர் கையிருக்கும் இது காணக் கண்ணாடி ஏன் ஒருவனுக்கு? <பின்னிருந்து முன்னாக> (2)
29. கால் உள்ள மாது என்றால் கண்டவர்க்கே காதல் வரும்; காலில்லா மாது என்றால் கனவிலும் காமம் வரும் ( நிர்மலா சுரேஷின் ஆ.வி. பொன்விழாக்கவிதை?) (2)ஆ. இடமிருந்து வலமாக
--------------------
1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் நாயகன் இங்கு குழம்பிக்கிடக்கிறான் <குழப்பமுற்று வந்துள்ளது> (4)
3. பாரதிதாசன் சஞ்சரிக்க விடக் கூவியது கொஞ்சக்காலம் <பின்னிருந்து முன்னாக> (3)
5. பாரதி இடத்தும் சம்பந்தப்பட்டது; பாரதிதாசன் இடமும் சம்பந்தப்பட்டது <குழப்பமுற்று வந்துள்ளது> (6)
7. பல பேர்கள் சேர்ந்து இருப்பதால் பழம் தமிழில் இ·து இந்தப் போரில் ஆயிற்று. (2)
8. பெரியார் கண்ட தாசனார் கசிபு <குழப்பமுற்று வந்துள்ளது> (5)
10. இதை வாசிப்பவர் எல்லாம் இதிலே பிணைத்தே உளனர் (4)
13. வேலையில்லாதவன் வேலையா பூனையைப் பிடித்தலும் இப்போக்கிரித்தனம் பண்ணலும்? (2)
16. அன்றைய பெரியார் இதுதான் தன் காலில் நிற்கும் மனிதனுக்கு தேவை என்று கண்டார்; இன்றைய அவர் பெயர் சொல் கொள்கை வழி வரு சிறியார், பிறர் காலில் விழுதலே இக்கொள்கையின் இழிந்த முடிபாய்க் கொண்டார் (6)
17. இச்செயல் செய்தல் இறத்தலுக்குச் சமம். (2)
21. வைர மரமாகவும் நிற்கும்; வரண்ட நிலமாவும் நெடுக்கும் (2)
23. ஒரு கால் இடை சேர்த்து நடக்க போதை தரும் இப்பொல்லா மது (2)
24. இதன் இறுதி இறுதிப்படும் காலத்தே பாரதிதாசன் தன் இறுதி கண்டற்றார் <எண்> (2)
25. என்னை வெட்டிப்போட்டாலும் சொல்வேன் விபூதிக்காரனும் இந்நாமக்காரனும் ஒன்றே (2)
30. பாரதிதாசன் ஆசிரியசேவைக்காலம் <எண்> (2)
31. தமிழர் கற்ற முதலாவது மெய் இதுவேயாம் என்றால் அது பொய்யல்ல பொய்யல்ல (1)
32. i. காயிலே புளித்தாலும் கனியிலே இனித்தாலும் வாயிலே வைக்கவொண்ணா எட்டியாய் கசத்தாலும் எல்லாமே எல்லோர்க்கும் இத்தனைக்குள் அடங்காதோ? <பின்னிருந்து முன்னாக> (2)
ii. பாரதிதாசன் கொட்டிய முரசு <குழப்பமுற்று வந்துள்ளது> (6)
33. இது ஒரு நவீனமான சொல் (2)


இ. மூலைவிட்டம் வழியாக (இடமிருந்து வலமாக) ----------------------
6. விரைந்தோடும் திரவமும் இல்லை; உறைந்திருக்கும் திண்மமும் இல்லை (3)
9. கவிதைகளைச் சுவைத்தலும் இச்செயல் வகைப்படும் (2)
12. இது இன்றித் தீபம் எரியுமோ? (2)
21. பால் வேறுபாடின்றி எல்லாக்குழந்தைகளும் குடிக்கும் (2)
27. பூனைகள் இதைக் புசிக்கும் நேரம்கூட பொருட்டாய்க் கொள்வதில்லை <பின்னிருந்து முன்னாக> (2)ஈ. மூலைவிட்டம் வழியாக /
(வலமிருந்து இடமாக) /
----------------------
2. வாழ்க்கையிலோ வாழ்விடத்திலோ இதிலேறிச் செல்லுகையில் ஏற்படும் படிப்பினைகளை மனதில் வைத்துக் கொள்ளுதல் தடக்கி விழாமல் முன்னேற உதவும் <பின்னிருந்து முன்னாக> (2)
13. வெள்ளையில் இது பட்டால் பளிச் என்று கண் இளித்திருக்கும் <பின்னிருந்து முன்னாக> (2)
23. முருகன் இவன் மருகன் <பின்னிருந்து முன்னாக> (2)
26. ஒரு நாட்டுக்கு மறுநாடு இதுவாகலாம்; ஒரு மனிதனுக்கு மறு மனிதன் இதுதானாகலாம். ஆனால் தன் உயிர் நண்பன் இராமனுக்குக் குகன் இதுவாகுதலும் கூடுமோ ? (பின்னிருந்து முன்னாக) (2)

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

No comments: