Thursday, June 16, 2005

த.நெ.மு: குமாரபாரதி கட்டுரைகள்

தமிழ்.நெட் முத்துக்கள் - மறந்துவிட்ட நெடுஞ்சாலைகளும் கைவிடப் பட்ட தண்டவாளங்களும்

தமிழ்.நெட் பொற்காலத்தில் நான் ரசித்த கட்டுரைகளில் திரு. நியுசிலாந்து குமாரபாரதியின் இந்த தொடரும் ஒன்று - மறந்துவிட்ட நெடுஞ்சாலைகளும் கைவிடப் பட்ட தண்டவாளங்களும்.

இந்த மாதிரியெல்லாம் எழுத நம்மால் முடிகிறதோ இல்லையோ, படித்து இன்புறவாவது செய்யலாம் இவையெல்லாம் புத்தக வடிவில் வந்தால் - தமிழ்/இலங்கை செய்திகளும், நினைவலைகளும் காலம் காலமாக நிற்கும். தமிழ்.நெட் லிஸ்ட் செர்வரோடு அழிந்துவிட்டால் நட்டம் நமக்கு மட்டுமல்ல.

இலங்கையைப் பற்றிய பல விஷயங்களை Nostalgicஆக மிக அழகாக எழுதுவார். அவரின் ஏனைய படைப்புகளைப் படிக்க http://www.tamil.net/list ல் தேடலாம். இங்கு இரண்டு முத்துக்கள் மட்டும்.

அவரின் சொந்தவீட்டில் http://members.tripod.com/Kumarabharathy/ மேலும் சில கட்டுரைகளைப் படிக்கலாம் (நன்றி: வாசன்)


-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- இது ஒரு நீண்ட பதிவு...................

நன்றி: தமிழ்.நெட்; மற்றும் எழுதியவர் திரு. நியுசிலாந்து குமாரபாரதி
17-ஜனவரி-2000

சி குமாரபாரதி

Anbulla Nanbarkalluku

This is a tale where nothing much happens. This Library like no other.
Unlike the glass and chrome multi storied libraries you use. Where the
overhelming confuse and confound one. Not like the venerable connemara
either. People gather for no particular reason, than to gather. I could not
find any convincing reason to thrust this on you, but that aspect does not
seem to deter me. It is the way I work I guess. I see our enfant terrible is
back, with his- sometimes taunting and often tantilising wit. First I
thought I will not encourage him. But, of course you realise he doesnot need
any.

மறந்துவிட்ட நெடுஞ்சாலைகளும் கைவிடப் பட்ட தண்டவாளங்களும் (6)

ஒரு வாசிகசாலைக்கு றேடியோ வருகிறது -part 1

இப்பொழுதெல்லாம் சீடீக்கள், ஒலிநாடாக்கள், வீடியோக்கள் வீடுகளில் எங்கும் இறைந்து கிடக்கின்றன. இவை கைகால்களில் இடறும் அளவுக்கு மலிந்துவிட்டன. வீட்டிற்கு வீடு ஒளியலிச் சாதனங்கள் பரவிவிட்டன. மிகச் சாதாரணமான பாடல்கள்கூட அமர்க்களமான தொழில்நுட்ப பக்க பலத்துடன் இசை என்ற பெயரில் செவிப் பறைகளில் மோதுகின்றன. நாடாக்களும் சீடீக்களும் வைத்திருந்தால் சங்கீதத்தையே பைக்குள் போட்டது போன்ற தோரணை ஏற்பட்டு விடுவது இயல்பாகி வரும் காலம் இது. இந்த நிலையை விமர்சிப்பது நோக்கமல்ல.

தாராளமாக சங்கீதத்தை பைக்குள் போட்டுக் கொள்ளுங்கள். இது என்னைக் கேட்டு செய்யும் காரியமல்ல. ஆனால் முந்தைய நிலையுடன் சேர்த்துப் பார்க்கும் விநோதத்திற்காக இதைச் சொல்ல வருகிறேன். அவ்வளவுதான்.

அந்தக் காலங்களில், அதாவது 1950 களில் என்று வைத்துக் கொள்ளுங்களேன் - யாழ்ப்பாணக் கிராமங்களில் சினிமாப் பாடல் கேட்பது ஒரு அபூர்வமான சடங்காகவே யிருந்தது. தேடிப்போய்க் கேட்டகப்பட வேண்டிய விஷயம் என்பதால் அதற்கொரு அருமை பெருமை இருந்தது எனலாம்.

சடங்கு எனில் அதில் பல விஷயங்கள் அடங்கும். பாடல் கேட்பதில் ஒரு எதிர்பார்ப்பு, பாடலை விடவும் கேட்க்கும் சூழல், சேர்ந்து ரசிப்பவர்களுடன் ஒரு அன்யோன்யம் எல்லாமே இச்சடங்கில் அடங்கும்.இந்த அனுபவத் தொகுதிகள் ரசனைக்கு ஒரு நுட்பமான பரிமாணத்தை, உணர்வை வழங்கி விடுகிறது - என்று இந்த அனுபவத்தை இப்பொழுது திரும்பிப் பார்க்கும் பொழுது உணர்கிறேன். இந்த அனுபவங்களைச் சொல்லு முன்னர் கிராமத்திலிருந்த வாசிகசாலை பற்றிச் சொல்ல வேண்டியுள்ளது. பாடல் கேட்கும் சடங்கில் இது ஒரு களம் என்பதுடன் நான் சொல்லும் காலகட்டத்து வாழ்கையையும் பிரதிபலிக்கிறது என்பதால் இதைக் கொஞ்சம் விஸ்தாரமாகச் சொல்கிறேன்.

அந்தக் கிராமத்தில் ஒரு வாசிகசாலை. வாசிகசாலை என்றவுடனேயே அதை ஆங்கிலப்படுத்தி வெளிநாடுகளிலுள்ள லைபிரரிகளை நினைவில் கொண்டு வராமல் இருப்பது நல்லது. ஏனைனில் இவ்விரு பிம்பங்களும் பொருந்தாதவை. இங்கு நோக்கங்களே மாறுபடுகின்றன். கொஞ்சம் பொறுங்கள். எனக்குத் தெரிந்த வழயில் சொல்ல விடுங்கள். கோவில் தேர் முட்டிக்கு பக்கத்தில் ஒரு மடத்துத் திண்ணை. அதில் இரு நீள மேசைகள். அவற்றின் இருபக்கங்களிலும் வாங்குகள - பென்சுக்கள் இஇந்தத் தளபாடங்கள் எல்லாமமே வீமன்காமம் ஆங்கில கலவன் பாடசாலையிலிருந்து காலொடிந்த நிலையில் இனாமாகக் கொண்டுவரப் பட்டு, பின்னர் செல்லப்பா ஆசாரியாரால் புனருத்தாரணம் செய்யப்பட்டவை. ( கலவன் என்பது ஆண் பெண் சேர்ந்து படிக்கும் பள்ளிகளைக் குறிக்கும் அக்கால அதிகாரபூர்வமான சொல்). இந்த வேலைக்கு கூலியாக அவருக்கு புயல் நிவாரணமாக அமெரிக்கன் கோதுமை மா, பால்ப் பவுடர், சீனி பருப்பு ஆகியவை அளிக்கப்பட்டது. அவரின் ஆயிரம் கண்டு வாழையும் ஐந்நு¡று கண்டு வெற்றிலைக் கொடிகளும் அண்மையில் ஏற்பட்ட புயலால் அழிந்தன எனப் பதிந்து இந்த பொருட்களை (அரச மான்யம்) கொடுத்துச் சமாளித்தவர் விதானையார். உண்மைக்கும் பொய்யுக்கும் இடையில் இஇருந்த ஒரு நுணுக்கமான இடைவெளியில் சமுக நன்மை கருதி செய்யப்பட்ட அட்ஜஸட்மென்டு - ஏற்பாடு இது. நமது சமுக ஸதாபனங்கள் எப்படி வள்ளிசாக - Austere - ஆக இயங்கின என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. வெளிநாட்டில் இயங்கும் சிறிய தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு கூட இந்த நன்மை பயக்கும் பொய்மை என்ற வள்ளுவர் குறள் ஒன்றும் புதியதன்று.

மேசையில் சில தமிழ்த் தினசரிகள். இந் நாழிதழ்கள் வெளிவந்த திகதிகளைப் பற்றி வாசக அன்பர்கள் கவலைப் படுவதில்லை. இந்த வாசிகசாலை வீமன்காமம் கிராம முன்னேற்றச் சங்கத்தினால் நடாத்தப் படுகிறது. (நடாத்தப் படுகிறது என்பதைவிட அது பாட்டிற்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை).

இதனால் புதிய செய்தித்தாள்கள் தலைவர், தனாதிகாரி வீடுகளுக்குப் போய்த்தான் பின்னர் வாசிகசாலைக்கு வரும். இந்த ஏற்பாட்டை இயல்பாக எல்லோரும் ஏற்றுக் கொண்டதால் இது பற்றி பெரிய சர்ச்சைகள் ஏற்படுவதில்லை.

பகலில் வாசிகசாலையாகவும், இரவில் கோயில் திருப்பணிக்காக இஇந்தியாவிலிருந்து வந்த இரு சிற்பிகள் படுக்கும் இடமாகவும் பயன் பட்டது. தவிர மாரி காலங்களில் குருநாதியின் ஆடுகள் நனையாமல் கட்டுமிடமாகவும் இஇருந்தது. வாசிகசாலைக்கு எதிரில் இருந்த சங்கக்கடை மனேச்சர்தான் இதற்குப் பொறுப்பு எனப் பலரும் நினைத்து அது மாதிரியே நடந்தும் வந்தார்கள். பத்திரிகைகளை எடுத்து கடைக்குள் வைத்துப் பூட்டுவது, குருநாதியுடன் ஆடு கட்டுவதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஆட்டுப் புழுக்கைகளை கூட்டுவிப்பது, பழைய பேப்பர்களை நிறுத்து சங்கத்திற்கு காசு கொடுப்பது போன்ற நிர்வாகங்களச் செய்வதால் இவர்தான் லைபிரேரியன் என்ற முடிவுக்கு பலரும் வந்தனர்.

கடையைத்திறந்த பின்பு பத்திரிகைகளைக் கொண்டுவந்து போட்டுவிட்டு, அங்கிருந்த படியே கடையை நிர்வகித்தார். கூப்பன் ( ரேஷன்) அரிசி, மா மட்டுமே விநியோகிக்கும் கூட்டுறவுக் சங்கக்கடை என்பதால் இப்படி ஈயோட்டுவது சாத்தியமாயிற்று. இவரைவிட இன்னும் சில நிரந்தர அங்கத்தவர்களும் தளபாடங்கள் போன்று வாசிகசாலைப் பகைப்புலத்துடன் கலந்துவிட்டவர்கள். இதில் ஊர் ஸ்டேசன் மாஸ்டர் ஒருவர். கொழும்பு புகையிரதங்களை அனுப்பிவிட்டு, மோர்ஸ கோட்டில் கடகட தடதட என்று தட்டிவிட்டு, அடுத்த லோக்கல் வண்டிவரும் வரை வாசகசாலையில் பொழுது போக்குவார். அவ்வப்பொழுது தோரணையாக வெள்ளைத் தொப்பி
போட்டபடி கைகாட்டிகளை ஏற்றியிறக்கி கொடிகாட்டி விசில் ஊதி அனுப்பிவைப்பார். தினமும் சில வண்டிகள்தான் இங்கு நின்று போகும். சிலீப்பர் கட்டைகளை அடுக்கி அதன் மேல் ஒரு பழைய கோச் பெட்டியை து¡க்கி வைத்திருப்பார்கள். இதுதான் மாவிட்டபுரம் ஸ்டேசன் அறை.

ஸ்டேசன் மாஸ்டரைத் தவிர HSC SSC சோதனைகள் பாஸ் பண்ணியகையுடன் கிளறிக்கல் வேலைக்கு விண்ணப்பம் செய்துவிட்டு, வேலைக்கு வரச் சொல்லி தந்தி வரும் என்று தவமிருக்கும் முன்று நான்கு இளைஞர்கள்.கிராமத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள். இந்த இளைஞர்கள் பிற்காலத்தில் பெரிய உத்தியோகத்தில் இருக்கப் போகிறவர்கள் என மற்றவர்கள் எதிர்பார்த்து, அதன்படியே ஏதோவொரு முறையில் பழகியதை அவதானிக்க முடிந்தது. அவர்களும் தங்களுக்கு அப்படி ஒரு சாத்தியக்கூறு இருப்பதை ஒத்துக் கொண்டு அவர்களிடம் எதிர் பார்க்கப் படும் பதில் தோரணையில் நடந்து கொண்டதாக ஞாபகம். இது 1950 களில் யாழ்ப்பாணச் சமுதாய அடையாளம். படித்தவர்களுக்கு ஒரு எதிர் காலம் இருக்கிறது என நம்பிய காலம். தந்திகளும் பாவனையிலிருந்த காலம். ஊரே இவர்கள் வேலை பெற்று கொழும்பு மாநகரம் செல்ல வேண்டும் என உன்னியது. " தம்பி யோசிக்காதை, வைரவர் கைவிட மாட்டார், நான் நேந்து வைச்சிருக்கிறன்" - இது சிட்டுக் குருவி ஜயர்.

இந்தக் கூட்டத்துடன் ஊமைக் குழல் (ஒத்து) பக்கிரிச்சாமி - கோவிலில் காலைப் பூசை முடிந்த கையோடு சேர்ந்து கொள்வார். உள்ளுர் நாதஸ்வரக் கலைஞர், ஆனால் பூர்வீகம் இந்தியா. அத்துடன் கோயில் திருப்பணிச் சிற்பிகளும் அப்ப அப்ப வந்து போவார்கள். இவர்களுக்கிடையே ஒரு தனிப்பட்ட பரிபாஷை நடந்து கொண்டிருக்கும். ஒரே விதமான மொழியைப் பேசும் அபிமானத்தை விடவும், அவர்களுக்கிடையே ஒரு வகை லேகியப் பரிமாற்றம் நடந்து வந்ததை அவதானித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் யானைப் பயில்வான் சிட்டுக்குருவி லேகியம் பிரசித்தம். கடைகளில் அருமையான எனாமல் தகட்டில் விளம்பரப் பலகைகள் தொங்கும்.சிட்டுக் குருவிக்கு மேல் நிற்கும் பயில்வான் யானையை து¡க்கும் படம். இந்த அங்கீகரிக்கப் பட்ட சரக்கைவிடவும் பவர் கூடிய லேகியங்களும் கலைஞர்கள் வட்டாரத்தில் அரசல் புரசலாக நடமாடின. அந்த வகையில்தான் ஏதோ பரிமாற்றம். நான் சொல்வது சென்னைப் பொருட்கள் தடையில்லாமல் கிடைத்த காலத்தைப் பற்றி. காங்கேசன் துறையிலிருந்து தோணிகள் வேதாரணியம் கோடிக் கரை போய்வந்தன. பெரிய கிட்டங்கிகள் காங்கேசன்துறையில் இருந்தன. சில வருடங்களின் பின் 56 வாக்கில் இந்தக் கட்டிடங்கள் கைவிடப் பட்ட நிலையின் காவிப்பாரற்று கிடந்தன. பின்னர் சீமெந்து தொழிற்சாலை கட்டப் பட்டபின்புதான் சீமெந்து கிட்டங்கிகளாயின. பொன்னம்பலம்- செல்வநாயகம் அரசியலும், சுதுமலை இரட்டை கொலை வழக்கு பற்றியும் வரும் செய்திகளுக்கு வியாக்கியானம். இப்படி சில மணி நேரம் பொழுது போகும்.

-------------------------

அன்புள்ள நண்பர்களே!

காங்கேசன்துறை.மாவிட்டபுர்திலிருந்து ஒரு மைல். மாவிட்டபுரம் கோவில் சிலைகள் சிற்பங்கள் இங்குதான் சோழ இளவரசி மாருதப்புரவீகவல்லியால் கொண்டு வந்து இஇறக்கப் பட்டது. இந்த ஜதீகத்தை ஜந்து வருடங்களுக்கு முன்பு வரை (ஏறத்தாழ) தொடர்ச்சி விடாமல் தெப்ப விழாவாக கொண்டாடினார்கள். இதுதான் இலங்கையின் வட நுனி. இந்த rest house முகப்பு பாக்கு நீரணை கடலைப்பார்த்து.வெள்ளைக்காரர்கள் காலந் தொட்டு இயங்கியது. அருமையான இடத்தெரிவு அவர்களுக்குரிய கைராசி. விறாந்தை சாய்வு நாற்காலியில் அமருங்கள் நல்ல காற்றோட்டம். இந்தக் கொலோனியல் பங்களாவுகளுக்கு ஒரு விசேஷ கவர்ச்சி இருக்கிறது. ஆரம்பித்தால் முடிவிராது. பாருங்கள், Seth Thomas மணிக்கூடு இன்னும் கணகணப்பாய் ஓடுது. மூலையில் பீங்கான் தண்ணீர் பில்டர். பீங்கான் குறக்கறி, முள்ளுக் கரண்டி.

சரி . பக்கத்தில் கூப்பிடு து¡ரத்தில் தான் காங்கேசன்துறை ஸ்டேசன். இந்தக் கடலைப் பார்த்தபடி விஸ்கி குடித்திருப்பார்கள். குடித்தபடி து¡ரத்து கிளாஸ்கோவையோ லிவர்பூல் துறைமுகத்தைப் பற்றி கற்பனையில் அமர்ந்திருப்பார்கள். நாங்கள் கோடிக்கரையைத்தான் கற்பனை செய்ய வேண்டும் - VSOA குடித்தபடி. கோடிக்கரை 20 மைல்தான். இருப்புப் பாதை இங்குதான் முடிகிறது. இப்போதெல்லாம் வண்டிகள் ஓடுவதில்லை. தண்டவாளங்களில் புதர் மண்டி விட்டது. நு¡ற்றைம்பது வருடங்களுக்கு முன்னர்தான் கண்டி- யாழ்பாண நெடுஞ்சாலை ஏற்பட்டது. 50 வருடம் பிறகுதான் றெயில் பாதை ஏற்பட்டது. யானை சிறுத்தை நிறைந்த காட்டிற்கூடாக முக்காலி ஸ்டான்ட்களில் நில அளவை கருவிகளை சுமந்தபடி திரிந்திருப்பார்கள். நெடுஞ்சாலையும் தண்டவாளங்களும் பகுதி பகுதியாக ஒவ்வொருவர் கட்டுப் பாட்டிற்குள்.

கடைசி ஸ்டேசன், கடைசி வண்டி, றோட்டின் முடிவு.

சரி வாசிகசாலைக்கு

மறந்துவிட்ட நெடுஞ்சாலைகளும் கைவிடப் பட்ட இரும்புப்பாதைகளும் (7)

ஒரு வாசிகசாலைக்கு றேடியோ வருகிறது -part 2

இப்படியாக பரபரப்பில்லாமல் நாட்கள் நகரும். இந்தச் சூழலில்தான் ஒரு நாள் இரவிரவாக திண்ணை வாசிகசாலை பனம் சலாகைகள் அடிக்கப்பட்டு பத்திரப் படுத்தப் பட்ட தனி அறை ஆக்கப் பட்டது. அறைக்குள் வெள்ளை யடித்தார்கள். கதவும் போட்டு ஓரு நாதாங்கிப் பூட்டும் போடப் பட்டது. கேள்விப் பட்ட விஷயம் இதுதான். பன்னிரண்டு வால்வு றேடியோ வாசிகசாலைக்கு வரப் போவதாக வதந்தி அடிபட்டது.

கிராம முன்னேற்றச் சங்கம் என்பது சுதந்திர இலங்கையின் பரிசோதனை முயற்ச்சி. ஐந்தாண்டுத் திட்டம் பற்றிய படம் போட்ட புத்தகங்களையும், அமெரிக்கா, பிரித்தானிய அரசாங்கங்களின் அன்பளிப்பாக வழவழப்பான சஞ்சிகைகளையும், கூட்டுறவுச் சம்மேளனங்களின் ஆண்டு மலர்களையும் இனாமாக விநியோகிப்பதுடன், பராமரிப்புக்கு ஏதோ கொஞ்சம் காசும் கொடுத்தார்கள். வீமன்காமம் சங்கம் கோவில் உற்சவ காலங்களில் விதானையார்( Tashildar), குருக்களுக்கு உதவியாக ஒரு தொண்டர் படையை வழங்குவார்கள். தேர் தீர்த்தத்திற்கு தண்ணீர்ப் பந்தல் நடத்துவார்கள். மாதாந்தக் கூட்டத்தில் தவறாமல் கணக்கு வழக்கு ( வருடச் செலவு ருபாய் நு¡றுக்கு வரும்) பற்றி பல நுணுக்கமான விவாதங்கள் நடைபெறும். தனாதிகாரி, சுதுமலைப் புகையிலையை முகர்ந்து பார்த்து, சுருட்டைச் சுற்றிக் கொண்டே " நான் வாத்தியாரை இரண்டு ருபாய்க்கு நம்பாமல் இல்லை, பொது விஷயம் எண்ட படியால் ஆலோசிச்சு செய்வம் ". mind you, அக்காலத்தய 2 ரூபாய். இது ஒரு பைம்பல். இச் சொல்லுக்கு இலக்கணச் சுத்தமான தமிழ் சொல்லோ, நிகரான ஆங்கிலச் சொல்லோ உடனடியாகக் அகப்படவில்லை. இந்த camaradrie ஐச் சண்டை என்று கூற முடியாது.

இக் கூட்டங்கள் தவிர ஒழுங்கைக்கு கல்லுப்போடு, வீதிக்கு வெளிச்சம் போடு, ஆடியமாவாசை தேர்க் காலங்களில் கொழும்புப் புகையிதங்களை மாவிட்டபுரத்தில் நிறுத்து என்று கோரி கவர்ண்மெண்ட் ஏஜணட்(collector), டீஆர்ஓ (sub collector), எம்பீக்களுக்கும், மற்றும் கொழும்புவில் தெரிந்த தெரியாத உயர் உத்தியோகத்தருக்கும் பெட்டிசம் எனப்படும் மனு எழுதிக் கொண்டிருப்பார்கள். பெட்டிசம் எழுதுவது அக்கால யாழ்பாண வழக்கம். இதில் கைதேர்ந்தவர்களே சங்கங்களுக்குத் தெரிவு செய்யப் படுவார்கள். இது பெரும் கலையாக வளர்ந்தது. ஏன் இப்பொழுதுகூட வெளிநாட்டில் இயங்கும் தமிழ்ச் சங்கங்களுக்கு மானியம் பெறுவதற்கு இக் கலை விஸ்தரிக்கப்பட்டி ருக்கிறது. பெட்டிசம் எழுதல் சுதந்திரப் போராட்டததிற்கு அலுங்கல் நலுங்கல் இல்லாத மாற்றுமுறை. அதிருப்திக்கு ஒரு ஆபத்தில்லாத வடிகால். ஆறுமுகநாவலர் காலம் தொட்டு வளர்ந்த முறை.

நிற்க. இந்த றேடியோ வந்ததற்கு சங்கத்தில் கொஞ்சம் சலசலப்பு என்று கூறினேன் அல்லவா? தான் எழுதிய பெட்டிசத்தின் பெறுபேறுதான் இது என்பது தலைவர் வாதம். அவர் ஆங்கில ஆசிரியர். அவரின் பெட்டிசம் எழுதும் திறன் பிரசித்தம். நாங்கள் அப் பொழுதெல்லாம் சமயபாடங்களுக்கு, தமிழ் பாடக் கட்டுரைகள் எழுதுவதற்கு ஒரு மாதிரிப் படிவம் (template) வைத்திருப்போம். " கடல் புடை சூழ் நெடுவுலகின் கண்ணே " என ஆரம்பித்து சமயமாயின் " புண்ணிய பூமியாகிய பரத கண்டத்தில் சோழ வளநாட்டடின் " என்று ஒரு பாராவுடன் ஆரம்பிப்பது சம்பிரதாயம். ஆதே போல் இவர் எழுதும் பெட்டிசமும் " வீமன்காமம் வாசிகளான நாம் இத்தால் முறையீடு செய்வது என்னவென்ல், இந்த ஊரில் ஐயாயிரம் மக்கள் வசிக்கிர்கள், 500 பரப்பில் வெற்றிலையும் 1000 பரப்பில் வெற்றிலையும், 1000 பரப்பில் புகையிலையும் செய்யும் கமக்காரர்கள் வசிக்கிர்கள். சோழ இளவரசி மாருதப்புரவீக வல்லி கட்டிய பிரசித்தமான கோவில் ..." என்று வீமன்காமம் பகுதியின் சமுக பொருளாதார வரலாற்றை முதலில் எழுதுவார். " முறையிடுதல், முறைப்பாடு " என்ற சொற் பிரயோகம்
அரசாங்கத்தை மன்ட்டமாகக் கேட்டுக் கொள்ளும் ஒரு தோரணை - an attitude.

ஆனால் சிறாப்பர் (Shroff) தான் தான் சரியான சமயத்தில் DRO விடம் சொல்லி ஏழாலைக்குப் போகவிருந்த றேடியோப் பெட்டியை இங்கு திசை திருப்பி விட்டதாக சொல்லிக் கொண்டிருந்தார். நெளிவு சுழிவு தெரிந்த காரியவாதி. இந்தச் சலசலப்புக்கு அடிப்படைக் காரணம் கோவிலைச் சார்ந்த ஒரு மெலிதான பகமை. சூரன் போர் திருவிழாவில் சிறாப்பர் முருகன் காவும் கூட்டத்தின் தலைவர், தலைவரோ சூரன் காவும் கோஷடியின் முதல்வர். நடனமாடியபடி, மிடுக்காக ஓடி முன்வந்து பின்னோடிச் சென்று, ஒரு பக்கம் தாழ்ந்து (இதற்கேற்ற் போல் தவிலில் கிருதா) இரு கோஷடியினரும் மும்மரமாக போட்டியில் ஈடுபடுவதால். முருகனுக்கும்
சூரனுக்கும் இருந்த பகமை இடம் பெயர்ந்து கோஷடியினருக்கிடையே ஏற்பட்டு விட்டது. இஇவர்கள் இந்தப் பனிப் போரை, மாட்டுச் சவாரிகள், காணிச் சண்டைகளுக்கும் village councilவிசி எலக்சன்களுக்கும், பாராளுமன்ற அரசியலுக்கும் வெற்றிகரமாக விரிவாக்கம் செய்து கொண்டிருந்தனர்.

இந்த புராணத்தைச் சுருக்கிக் கூறினால், ஒரு நாள் Austin 8 இல் றேடியோ பெட்டி கொண்டு வந்து இறக்கப் பட்டது. துரையனே தேர் முட்டி உச்சியில் ஏரியல் கட்டி வயர் இழுத்து றேடியோவை ஸதாபித்தார். எங்களுக்குத் தெரிந்த வரையில் அயல் கிராமங்கள் உட்பட பன்னிரண்டு வால்வு கொண்ட பெட்டி இருக்கவில்லை. ஆறு வால்வுப் பெட்டி கூட அங்கொன்று இங்கொன்றாகத்தான் இருந்ததாகத் தெரிந்து கொண்டோம். ஆனால் இவையெல்லாம் பன்னிரண்டு வால்வு பிலிப்ஸ பெட்டி போல் கணகணப்பாக இழுப்பதில்லை என்று பேசிக் கொண்டோம்.

றேடியோவில் பாட்டுக்களை விட விவசாயம், ஐந்தாண்டுத் திட்டங்கள் பற்றிய விபரங்கள் அதிகமாக இடம் பெற்றன. வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பிக்காத காலம். எப்பொழுதாவது பாட்டு கிடைக்கும். பாட்டு போடும் நேரங்களுக்கு பலர் வந்து போனார்கள்.

இன்றெல்லாம ஆண் குரலும் பெண் குரலும் இணைந்து பாடும் டுயட் வழமையாகிவிட்டன. 40 வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணச் சிற்று¡ரில் இவை கிளர்ச்சியூட்டும் லாகிரியாக இருந்தது. பாடுபவர்கள், நடிப்பவர்களின் பூர்வோத்திரங்கள் திரைக்குப் பின்னால் நடைபெறுவதாகச் சொல்லப் படுவன பற்றி தணிக்கை செய்யப்பட வேண்டிய நீலமான விஷயங்களை பக்கிரிச்சாமி தெரிந்து வைத்திருந்தார். தெரிந்து வைத்திருந்தாரோ, அல்லது உருவாக்கினாரோ யார் கண்டார்கள். காலங்கள் து¡ரங்களுக்கு அப்பால் ஒரு விசித்திரமான உலகம் மங்கல் நீலமாக அந்த வயதில் தெரிந்தது. எனது ஈடன் தோட்டத்தில் பாம்பு மெதுவாக ஊரத் தொடங்கியது.

ஆச்சியின் அலுமாரியைத் திறந்தால் கற்பூரம் லாமிச்சை வேர் மணங்கள் கலந்த ஒரு கதம்பமான வாசனை வீசும். இஇதில் பூர்வீக ஞாபகங்கள் மெதுவாகக் கிளர்வது போல் இஇருக்கும். பழைய நினைவுகளை அசை போடுவதும் இஇது போன்ற ஒரு யாத்திரை. அந்த உலகம் அன்று எனக்கு அன்னயோன்யமாக சுவாரஸ்யமானதாக இருந்திருக்கலாம். அதற்காக எனது கதா பாத்திரங்களும் ஒரு இலட்சிய உலகில் அழகாக வாழ்ந்தார்கள் எனறு நான் நினைத்திருக்கலாம் தான். என்லும் வாழ்க்கையில் ஒரு விட்டேற்றியான தன்மை , இருந்தது. இப்பொழுது இது இல்லை.

இந்தக் காலங்களில் அடிக்கடி கேட்ட ஒரு பாடல் வரியை ஞாபகப் படுத்துகிறேன். (உண்மையில் இது ஒரு வானெலி நிகழ்ச்சி பிரதியாக்கம்!). அக் காலங்களில் கலியாண வீடுகளில் ஒலிபெருக்கி வைத்து போடுவார்கள். அப் போதெல்லாம், கலியாணப் பத்திரிகைகளின் அடியில் ஒரு கை காட்டும் குறி போட்டு "கொண்டாட்டம் நான்கு நாட்டகள் நடை பெறும். ஆசனம் கம்பளம். ஒலி பெருக்கி அமைக்கப் பெறும் " எனப் போடுவது சம்பிரதாயம். பாடல் தேவதாஸ் படத்தில் இடம் பெற்றது என்று நினைக்கிறேன். பாடியவர் கண்டசாலா. இதோ. அந்தியில் ஒரு சந்தோஷம் தரும் சவாரி.

சி குமாரபாரதி

----------------------------------------------

No comments: