Wednesday, August 03, 2005

ஆடிப் பெருக்கு

ஆடி-18 தமிழகத்தில் ஆடிப்பெருக்கு என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. காவிரி தொடும் ஊர்களில் எல்லாம், இன்றைக்குக் கொண்டாட்டம். சுழித்தோடும் காவிரியில் கால் நனைத்து, இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்தி குடும்பத்தோடு காவிரியை வரவேற்கும் நாள்.

இந்த ஆண்டு கர்நாடக, கேரள நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால், கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி என எல்லா அணைகளிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டு விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையும் நிரம்புகிறது.. கிருஷ்ணராஜ சாகரிலும் திருச்சியிலும், கல்லணையிலும் தண்ணீர் பெருக்கெடுத்தோடும் சில படங்கள்....

நன்றி: தி ஹிண்டு


http://www.hindu.com/2005/08/03/stories/2005080308900300.htmhttp://www.hindu.com/2005/08/03/stories/2005080302870200.htm
http://www.hindu.com/2005/08/03/stories/2005080314400200.htm
http://www.hindu.com/2005/08/03/stories/2005080313070400.htm-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

இன்னோர் பக்கம் மும்பை, மஹாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், ஒரிஸ்ஸாவில் எல்லாம் வெள்ளம். மும்பையின் மழையால் சென்ற ஒரு வார இழப்பு பல நூறு கோடிகள் என செய்தித்தாள்கள் கூறுகின்றன. ஒரு மாதம் முன்பு குஜராத்தில் - பரோடா, அகமதாபாத் போன்ற இடங்களில் இதே போல் வெள்ளம்.

இந்த வெள்ளங்களிலிருந்து அரசும், நகராட்சிகளும் ஏதேனும் பாடம் கற்றுக்கொண்டுள்ளனவா?மும்பை மாதிரி மழை/வெள்ளம் ஏற்பட்டால் பல நகரங்கள், பேரூர்கள் எல்லாவற்றிற்கும் இதே கதிதான் என்றாலும் சுனாமிக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட டிஸாஸ்டர் மானேஜ்மெண்ட் குழு/கமிட்டி என்ன செய்து கொண்டிருக்கிறது ?
பெங்களூர் நிலைமை பற்றி இங்கே.

வடகிழக்குப் பருவ மழையின் போது தமிழகமும், சென்னையும் கூட இந்த மாதிரி நிலைமையை நேர்கொள்ள நேரிடும். தமிழக அரசு, முனிசிபாலிடிகள், கார்போரேஷன் என்ன தயார் நிலை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது ?

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

மும்பை அளவெல்லாம் இல்லாமல் பெய்த சுமாரான மழை ஆனால் பேய்க்காற்று அடித்த 2 நாளில் பெங்களூர் நிலைமை பற்றி நான் முன்பு எழுதிய பதிவு இங்கே -
மழை - மரம் - மின்வெட்டு


- அலெக்ஸ் பாண்டியன்
03-ஆகஸ்ட்-2005

2 comments:

A-A said...

ஆடி பதினெட்டாம் நாளன்று "ஆடிப் பெருக்கு" என்னும் விழா நடைபெறும்.

இந்த சமயத்தில் "அகத்தியர்" என்னும் விண்மீன் உதயமாகும்.
இதனை "Canopus" என்று சொல்வார்கள்.

இச்சமயத்தை ஒட்டி மலைப்பகுதிகளில் மழைபெய்யும். அந்தப் புதுமழை,
தமிழகத்தின் ஆறுகளில் புதுவெள்ளத்தைக் கொண்டுவரும். முக்கியமாக மேலைத்தொடர் மலைகளிலும் மைசூர் பீடபூமிப் பகுதிகளிலும் பெய்யும் மழை, காவேரியில் வெள்ளத்தை ஏற்படுத்தும்.

இந்த வெள்ளம் தமிழக சமுதாய வாழ்வியலில் மிக முக்கியமானது.

"சோழநாடு சோறுடைத்து" என்பது ஔவையின் வாக்கு.

அந்தப் பிராட்டி, அவளுக்கு முன்னர் எத்தனை தலைமுறையாக வழங்கிய பழமொழியைச் சொன்னாளோ? யார்கண்டது?

இந்தப் புதுவெள்ளம் நிறைய வண்டலை அடித்துக் கொண்டுவந்து
சேர்க்கும். அதனால் சோழநாட்டின் டெல்ட்டாப்பிரதேசம் எப்போதும்
வளமையுடன் திகழும். விதவித உரங்கள் இல்லாத ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே, சோழநாட்டின் வயல்களில் ஒரு யானை படுக்கும் இடத்தின் பரப்பளவேயுள்ள நிலம் ஏழு பேருக்கு ஓராண்டுக்குப் போதுமான நெல்லை விளைவிக்குமாம். சங்கப்பாடல் சொல்கிறது.

மிகப்பழமையானதொரு காலகட்டத்தில் "வராகி" என்னும் தேவியை வழிபட்டிருக்கிறார்கள். இவள் உழவுக்கும் விளைச்சலுக்கும் பூமிக்கும் உரிய தேவதையாக விளங்கினாள்.

ஆடி மாதத்தில் இவளைச்
சிறப்பாக வழிபட்டிருக்கிறார்கள். ஆடிமாதமே இவளுக்கு உரியதுதான்.
ஆடியில் இவளுக்கென்று ஒரு நவராத்திரியைக் கொண்டாடினார்கள்.
இந்த நவராத்திரிக்குப் பெயர் ஆஷாட நவராத்திரி என்பார்கள்.

வராகிக்கு தஞ்சைப் பெரிய கோயிலில் ஒரு சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதி, தஞ்சையின் பெரிய
கோயிலை ராஜராஜ சோழர் கட்டுமுன்னரேயே அங்கு இருந்ததாகச் சொல்வார்கள். இவளைப் பற்றி சில மர்மமான, விசித்திரமான, ஆச்சரியமான
தகவல்களைச் சொல்வார்கள்.

ஆடி ஒரு புனிதமான மாதம். இந்த மாதத்தில் பதினெட்டு புனிதமான நாட்கள் இருக்கின்றன. ஆடிவெள்ளி, ஆடிச்செவ்வாய், ஆடிக்கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, குரு பௌர்ணமி, பதினெட்டாம்பெருக்கு போன்றவை அவை.

'ஆடிப்பட்டம் தேடி விதைக்க வேண்டும்' என்பது விவசாயத்தில் வழங்கும் மொழி.

ஒரு விசித்திரம் என்னவென்றால், "அகத்தியம்" என்னும் விண்மீன் உதயமாகும் சமயத்தில்தான் எகிப்தில் நைல் நதியிலும் புதுவெள்ளம்
ஓடும். யுகாண்டா, சூடான், எதியோப்பியா ஆகிய நாட்டு மலைகளில் பெய்யும் மழைகளின் காரணமாக இந்தப் புது வெள்ளம் ஏற்படும்.

அந்த மலைக்காடுகளின் வண்டலை அடித்துக்கொண்டு நீர் வரும்.
இது நைலின் டெல்ட்டாப் பிரதேசத்தை வளப்படுத்தும்.
பண்டைய எகிப்தியர்கள் இதனை - அகத்தியரின் உதயத்தையும்
நைலின் புதுவெள்ளப்பெருக்கையும் - விழாவாகக் கொண்டாடியிருக்கின்றனர்.

அன்புடன்

ஜெயபாரதி

Alex Pandian said...

டாக்டர்.ஜேபி, ( aka ஆ. ஆ)

வலைப்பதிவுக்கு வந்து அகத்திய களஞ்சியத்திலிருந்து ஆடி மகிமை தகவல்கள்
பகிர்ந்ததற்கு மிக்க நன்றி

- அலெக்ஸ்