Monday, August 08, 2005

இங்கிலாந்தின் வெற்றி..!

நேற்று எட்ஜ்பாஸ்டன் - பிர்மிங்ஹாமில் முடிவடைந்த ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் மாட்ச் பார்க்காதவர்கள் ஒரு மிகச் சிறப்பான டெஸ்ட்போட்டியை பார்க்க இழந்தார்கள் என்றே கூறவேண்டும். 2 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து டெஸ்டை வென்றுள்ளது. தொடர் 1-1 சமநிலையில்.


Photo courtesy: Rediff.com

இங்கிலாந்து (சமீபகாலங்களில்) முன்னெப்போதுமில்லா ஒரு முனைப்புடன் விளையாடி இந்த போட்டியை ஜெயித்தது. 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பின்பு, வெற்றியை சுலபமாக அடைந்திருக்கவேண்டிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவின் கடைசி விக்கெட் ஜோடியான காஸ்ப்ரோவிஸ், ப்ரெட் லீ இருவரையும் 50க்குமேல் ரன் குவிக்கவிட்டது கொஞ்சம் ஓவராகவே பட்டது. இத்தனைக்கும் ப்ரெட் லீயோ காஸ்பரோவிஸ்ஸோ பெரிதாக நின்று ஆடி, ரன் குவித்தவர்கள் அல்ல (மக்ராத் மற்றும் ஷேன் வார்ன் பலமுறை ஆஸி அணிக்கு இது மாதிரி விளையாடியுள்ளனர்.. நேற்றும் வார்னே சிறப்பாக விளையாடி பிறகு ஹிட் விக்கெட்டில் அவுட் ஆனார்.)


Photo Courtesy: Crickinfo

ஜெயிப்பதற்கு 50 ரன்கள் தேவை - இருப்பதோ ஒரு விக்கெட் என்ற நிலையில், ஆஸி அணி எடுத்த ஒவ்வொரு ரன்னும், பார்வையாளர்கள் (இங்கிலாந்து ஆதரவாளர்கள்) வயிற்றில் புளியைக் கரைத்தது. இதில் பலமுறை 4 ரன்கள். 20க்கும் குறைவாக இலக்கு வந்தபோது சைமன் ஜோன்ஸ் 3rd manல் ஒரு கேட்சைக் கோட்டைவிட்டவுடன் பலருக்கு இதயத்துடிப்பு எகிறியிருக்கும்..

கடைசியில் 3 ரன்கள் இருக்கும் நிலையில் இங்கிலாந்தின் ஹார்மிசன் வீசிய பந்து காஸ்ப்ரோவிஸ் க்ளவுஸைத் தடவியபடி கீப்பர் ஜோன்ஸின் இடதுபக்கம் செல்ல, ஒரு லாவகமான கேட்சைப் பிடித்து இங்கிலாந்து மக்களின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சாதனையைப் படைத்துவிட்டார்.

மாங்கு மாங்கு என போட்டு விக்கெட்டும் எடுத்த ·பிளிண்டா·ப் தான் பாவம், அவருக்கு அந்த கடைசி விக்கேட் கிடைத்திருந்தால், அவரை இன்னும் கொண்டாடியிருப்பார்கள். இயான் போதமிற்குப் பிறகு இங்கிலாந்திற்கு கிடைத்துள்ள ஒரு சிறப்பான ஆல்ரவுண்டர் - ·ப்ளிண்டா·ப்

முதல் டெஸ்டிலேயே கை ஓங்கியிருந்த இங்கிலாந்து அணி, டெஸ்டைத் தோற்றதற்குக் காரணம் மக்ராத் என்னும் Lean Mean Machine தான். இந்த வயதிலும் அந்த 3 விக்கெட்டுகள் நேர்கோட்டிலேயே வீசி, ஒவ்வொரு மட்டையாளரின் மனோதைரியத்தையும் தவிடுபொடியாக்கும் அவர் இந்த டெஸ்டில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்ராத்தும் வார்னேயும் இல்லாத ஆஸி அணி அடுத்த தலைமுறை பந்து வீச்சாளர்கள் அவர்கள் அளவு சிறப்பாக இல்லாமல் கொஞ்சம் தடுமாறும் என்றே சொல்லலாம். வார்னே இந்த போட்டியில் 10 விக்கெட் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


சென்னையில் நடந்த இந்தியா - ஆஸி Tie Testக்குப் பிறகு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் பலமுறை இந்த மாதிரி சில ரன்கள் வித்தியாச வெற்றி தோல்விகள் உண்டு என்றாலும் இந்த டெஸ்ட் போட்டி ஒரு மறக்கமுடியாத போட்டி என்றே சொல்லலாம்.


இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸ் - 407 ; இரண்டாவது இன்னிங்க்ஸ் - 182
ஆஸி முதல் இன்னிங்க்ஸ் - 308 ; இரண்டாவது இன்னிங்க்ஸ் - 279
விரிவான ஸ்கோருக்கு: http://imsports.rediff.com/score/in_match1077.html

For detailed reports
http://news.bbc.co.uk/sport1/hi/cricket/england/4128908.stm

http://sport.guardian.co.uk/ashes2005/story/0,15993,1544816,00.html


- அலெக்ஸ் பாண்டியன்
08-ஆகஸ்ட்-2005

பி.கு: 95க்கு 6 விக்கெட் என மேற்கிந்தியத்தீவு அணி திணறிக்கொண்டு இருக்கையில் தினேஷ் ராமதின் என்ற இளைஞரையும் அவரின் சிறப்பான ஆட்டத்தையும் உலகுக்கு அறிமுகப்படுத்தியதுடன், தோல்வியை தழுவித்தான் தீருவோம் என்றபடி(262 ரன்கள் எடுத்த பின்பும், ஆடிக்கொருதரம் ரன் எடுக்கும் யுவராஜ் செஞ்சுரி அடித்தபின்பும்) விளையாடிய இந்திய அணியைப் பற்றி என்ன எழுதுவது ? யுவராஜ் மற்றும் கை·புக்கு இன்னும் பல விளம்பரங்களும், கோடிகளும் கிடைக்கலாம். இன்னும் பல ஆட்டங்களில் ரன் எடுக்காமலேயே டீமில் இடம் கிடைக்கும்.

2 comments:

rajkumar said...

//யுவராஜ் மற்றும் கை·புக்கு இன்னும் பல விளம்பரங்களும், கோடிகளும் கிடைக்கலாம். இன்னும் பல ஆட்டங்களில் ரன் எடுக்காமலேயே டீமில் இடம் கிடைக்கும். //

Very true

Suresh babu said...

நேற்று அந்த டெஸ்ட் மாட்ச்சை பார்த்தேன். உண்மையிலேயே அருமையான மாட்ச். ஆஸ்திரேலியா அணியின் போராடும் குணத்தைப்பார்த்து ஆதங்கம் தான் எழுந்தது.