Friday, September 09, 2005

கார் லைசென்ஸ் - எல்லே சுவாமிநாதன்

சரியாக ஆறு வருடங்கள் முன்பு, 8 Sep 1999 அன்று எல்லே சுவாமிநாதன் தமிழ்.இணையத்தில் பதிந்த ஒரு படைப்பு - தமிழ் மணம் வலைப்பதிவு வாசகர்களுக்காக. நன்றி: தமிழ்.நெட் மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் சுவாமிநாதன்.

கார் லைசென்ஸ்
=================
காட்சி - 1

அமெரிக்காவில் ஒரு நகரம். சீனுவாசனும், மனைவி சீதாவும் அமர்ந்திருக்கிறார்கள்.


சீனு: ரகு, டிபன் சாப்பிட்டாச்சா? வரச்சொல்லு. காரை எடுத்திண்டு ஓட்டிப் பாக்கட்டும். நல்லா ஓட்டறான். என்ன இருந்தாலும் ஆம்பிளயில்லயா? என் டிரெய்னிங் வேற.

சீதா: பிள்ளை ரகுவுக்கு சொல்லித்தர மாதிரி பொண்ணு பானுவுக்கும் சொல்லிக்குடுங்க. அவளும் கத்துக்கிட்டா..

சீனு: என்ன, வெளயாடுரியா. அவளுக்கு எதுக்கு இப்ப கார். 17 வயசு பெண் குழந்தை. எங்கயாவது இடிச்சு கை காலுல பட்டுதுன்னா. நீ இந்த ஆசய அவளுக்கு குடுக்காதே.

சீதா: ரகுவுக்கு அவ ஒரு வயசுதானெ சின்னவ. இங்க ஆண், பெண் எல்லாரும் கார் ஓட்ட வேண்டியிருக்கு. நீங்கதான் அதிசயமா பொண்பெத்த மாதிரி. நான் ஓட்டலியா? நீங்க கத்துக்குடுக்க மாட்டேன்னதும் நானே டிரைவிங் ஸ்கூலுக்குப்போய் கத்துக்கலியா?

சீனு: ஒன் கதய விடு. அவ எங்க போகணும்னாலும் நான் அழச்சிண்டு போறேன்.

சீதா: நாளக்கி அவ வேலைக்குப்போனா, நீங்க பின்னாலயே போயி கொண்டுவிட்டு அழச்சிண்டு வரப்போறீங்களா? ரகுவுக்கு மட்டும் ஏன் சொல்லித்தரீங்க?

சீனு: அவன் ஆம்பிளை. நாலு எடத்துக்குப்போகணும். கார் ஓட்டத் தெரியாம நான் அவனை மடில கட்டிண்டு போகமுடியுமா? பானுவுக்கு கார் ஓட்டத் தெரியவாண்டாம். கார் ஓட்டத்தெரிஞ்ச பையனா பாத்து கல்யாணம் பண்ணிடலாம்.

சீதா: அவ ஸ்கூல்ல சினேகிதியெல்லாம் கார் ஓட்டராங்களாம்.

சீனு: ஸ்கூல்ல நிறுத்த எடமில்லாம பத்து தெரு தள்ளி நிறுத்திட்டு நடந்து போறாங்க. இதுக்கு வீட்டுலேருந்து நடந்து போகலாமில்ல. எனக்கும் கார் இருக்குனு காட்டிக்கவா ஸ்கூலுக்கு கார் எடுத்திட்டுப்போறது?

சீதா: ஒங்களத் திருத்தவே முடியாது.

சீனு: நான் இரண்டு வாரம் சிகாகோவுக்கு மீட்டிங்குக்கு போறேன். எங்க போனாலும் நீ ரகுவை ஓட்ட வச்சு பக்கத்துல ஒக்காந்துக்க. அவன் நல்லா ஓட்டறான். இருந்தாலும் இன்னும் ரெண்டு வாரம் ஓட்டரது நல்லது. நான் வந்தப்பறம் டெஸ்டுக்கு போகலாம்.

காட்சி -2
=============
மூன்று வாரம் கழிந்து ஒரு நாள். கார் லைசென்ஸ் பெறுமிடம். கார்கள் வரிசையாக இருக்கின்றன.
பெஞ்சில் சீனுவும் ரகுவும். அருகில் பானு.


சீனு: ரகு சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். நீ நல்லா ஓட்டறே. லைசென்ஸ் ஈசியா கெடைக்கும். லிஸ்டுல பாத்தேன். அதிர்ஷ்டவசமா இன்ஸ்பெக்டர் ஒரு தமிழ் ஆளு. குட் லக்.

(ரகு போகிறான்)

பானு: அப்பா. எனக்கும் இன்னிக்கு டிரைவிங் டெஸ்ட் இருக்கு. நீ ஊருக்கு போனப்போ அம்மா எனக்கு சொல்லிக்குடுத்தாங்க.

சீனு: பானு. இதப்பாரு, ஒங்க அம்மா பைத்தியக்காரத்தனமா ஒன்னை என்னோட அனுப்பிட்டா. ரகு என்னோட ஆறு மாசம் டிரெய்னிங்க் எடுத்தான். நல்லா ஓட்டறான். இப்ப டெஸ்டுக்கு போறான். நான் சிகாகோக்கு போயிருக்கரச்சே ஒங்க அம்மாவோட நீ ஒரு வாரம் ஓட்டியிருக்கே. இத வெச்சிண்டு டெஸ்டுக்கு போனா பெயிலாயிடுவெ. ஒண்ணு செய்வம். நான் ஒனக்கு ஒரு ஆறு மாசம், இல்ல ஒரு வருஷம் கார் ஓட்ட பழக்கரேன். அப்புறம் வரலாம் என்ன?

பானு: இல்லப்பா. வந்தாச்சு. நான் டெஸ்ட் எடுத்துக்கறேன். பெயிலானா பரவாயில்ல. மறுபடியும் வரலாம்.

சீனு: ஒங்கம்மா மாதிரி ஒனக்கு பிடிவாதம். அட, ரகு வந்துட்டான் பாரு. வாடா, என்ன போன சுருக்குல வந்துட்ட, பாஸா.. ஐ, நோ, யு ஆர் ஸ்மார்ட்.

ரகு: இல்லப்பா, வண்டி எடுக்கரச்ச குறுக்க ஒரு கெழவன் கையில ஒரு செகப்பு வெள்ளை போட்ட கைத்தடியோட ரோடை தாண்டினான். அவன் வரதுகுள்ள போயிடணும்னு வேகமா அமுக்கினேன். அது தப்பு, ஆக்சிடன்ட் பண்ணப்பாத்தேன்னு உடனே பெயில் பண்ணிட்டார். நான் வீட்டுக்கு திரும்ப காரை ஓட்டக்கூடாதாம். இன்னொருத்தர்தான் ஓட்டணுமாம். ஒங்க கார் லைசென்ச குடுங்க. அவர் பாக்கணும்மாம். காட்டிட்டு வரேன்.

(வாங்கிப்போகிறான்)

சீதா: அப்பா, என் முறை வந்துடுத்து. நான் போறேன்.

சீனு: பத்திரம். பெயிலாயிட்டா வருத்தப்படாதே. நான் கத்துண்ட போது மூணு தடவை பெயிலாயி அப்புறமா பாஸ் பண்ணினேன். Failure is the stepping stone to success. இதல்லாம் man's sport. பொம்பிளங்களுக்கு அனாவசியம். ஏதோ ஆசைப்படறே. போயிட்டு வா.

(பானு போகிறாள், ரகு வருகிறான்)

ரகு: அப்பா. ஒங்க லைசென்ஸ் முடிஞ்சு போய் பத்து நாளாகுது. சரியான சமயத்துல புதுப்பிக்காததனாலே மறுபடியும் டெஸ்ட் எடுத்துக்கணுமாம். நீங்க இப்பவே டெஸ்ட் எடுத்துக்கிறீங்களான்னு கேக்கச்சொன்னாரு.

சீனு: எல்லாம் ஒங்க அம்மா செஞ்ச தப்பு. மனுசனுக்கு நிம்மதியே இல்ல. லைசென்ஸ் முடியப்போகுதுன்னு ஞாபகப்படுத்த வாண்டாம். எல்லாம் நானே செய்ய வேண்டியிருக்கு. நீ இங்க இரு. பானு வேற டெஸ்டுக்கு போயிருக்கா. அவ வந்தவுடனெ பாஸ் பண்ணிட்டயான்னு கேட்டு அழ விடாதே. அவ காரு விடலேன்னு யாரு அழுதா? நான் டெஸ்டுக்கு போயிட்டு
வரேன். It is a very simple job. Watch me drive.

(சீனு போய்விட்டு அரைமணி கழித்து வருகிறார்).

சீனு: என்னடா பானு எங்க.

ரகு: இன்னும் வரலைப்பா. நீங்க பாஸ் பண்ணிட்டிங்களா.

சீனு: ஒங்கிட்ட சில்லரையா இருக்கா. ஒரு போன் பண்ணணும்.

ரகு: இருக்கு. யாருக்கு போன்?

சீனு: எல்லாம் ஒங்கம்மாவுக்குதான். என்னை டெஸ்டுல பெயில் பண்ணிட்டான்டா. நான் ஓட்டறதே சரியில்லயாம். கண்ணாடிய உபயோகிக்கலயாம். பின்னால சரியா திரும்பி பாக்கலயாம். ரொம்ப வேகமா ஓட்டறேனாம். கோட்டுக்கு முன்னால நிறுத்தலயாம். பாதசாரிகளை மதிக்கலயாம். ஆக்சிடென்ட் பன்ணப்பாத்தேனாம். முப்பது வருஷமா இங்க கார் ஓட்டறேண்டா. கத்துக்குட்டியெல்லாம் இன்ஸ்பெக்டரா போட்டா ரூலை படிச்சிண்டு சாகறான். அட, நம்ம ஊர் ஆளுன்னுன்னாவது பாஸ் போட கூடாதா? விலாவரியா சுழிச்சு சுழிச்சு பெயில் மார்க் போட்டு மானத்தை வாங்கறான். தமிழந்தான் தமிழனுக்கு எதிரி, எங்க போனாலும்.

ரகு: அப்பா, அவரு தமிழரா இருந்தா என்ன தெலுங்கரா இருந்தா என்ன? சட்டப்படிதானே செஞ்சாரு.

சீனு: ஆமாண்டா, பெரிய சட்டம். நான் இந்த ஊர்ல கார் லைசென்ஸ் எடுத்தப்ப இந்த இன்ஸ்பெக்டர் பய பொறந்திருக்க கூட மாட்டான். இப்ப பாரு, நான் மறுபடியும் புஸ்தகம் படிச்சு பரிச்சை எழுதி, ஓட்ட இன்னொரு பரிச்சை எழுதி... இன்னிக்கி நான் காரை எடுக்க முடியாது. அதான் ஒங்கம்மாவை வந்து நம்மை அழச்சிட்டு போக போன் போடணும். அதோ பானு வராளே, அழுதுகிட்டு வரமாதிரி இருக்கு. நீ ஒண்ணும் கேக்காத.

சீனு: பானு ஏம்மா அழறே, கண்ணுல தண்ணி. இது அல்ப விஷயம். காரு ஓட்டரதுல பெயிலாரது சகஜம். நூத்துக்கு அஞ்சுபேர்தான் முதல் தடவை பாஸ் பண்றாங்கன்னு புள்ளி விவரம் சொல்லுது. ஏதோ ஒங்கம்மா மொதல் தடவை குருட்டாம் போக்குல பாஸ் பண்ணிட்டான்னா, எல்லாருக்கும் அது மாதிரி கிடைக்குமா? இப்ப பாரு,ஆறு மாசம் என்னைப் பொறுத்தவரையில என்ன மாதிரி நல்லாவே ஓட்டினான் ஒங்கண்ணன், இங்க பெயிலாயிட்டான். பெரிய அனுபவசாலின்னு பேரு, நானெ பெயிலாயிட்டேன். இப்ப ஒங்க அம்மா வந்து நம்மை வீட்டுக்கு அழச்சிட்டு போவா.

பானு: ஏன் அம்மா வரணும்?

ரகு: நான் பெயிலாயிட்டேன், அப்பாவும் பெயில், நீயும் பெயில் யாருகிட்டயும் லைசென்ஸ் இல்ல. அம்மாக்குதானே லைசென்ஸ் இருக்கு, அதான் அம்மா வரணும் வீட்டுலேருந்து.

பானு: யாரு சொன்னா நா பெயில்னு. ஒரு தப்பு கூட இல்ல. டக்குனு பாஸாயிட்டேன். உடனே லைசென்ஸ் வேணுமின்னா உள்ள போனா போட்டோ எடுத்து கையில கொடுத்திடுவாங்கன்னு சொன்னாங்க. கையில வாங்கிட்டு வரேன். அதான் எனக்கு லேட்டு.
இதோ பாரு லைசென்ஸ¤. போட்டோ இன்னும் கொஞ்சம் அழகா வந்திருக்கலாம். சரியான மேக்கப் கையில இல்ல.

சீனு: அப்படியா, வாழ்த்துக்கள். பின்ன ஏன் அழுத? கண்ணுல தண்ணி வந்துதே.

பானு: அம்மா இப்ப பக்கத்துல இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணித்து.. அவங்கதான் எனக்கு தைரியம் கொடுத்தாங்க.. ரகுவும் அப்பாவும் நீ பொண்ணுன்னு மட்டம் தட்டுனாலும் தளராம தைரியமா பரிட்சைக்கு போ. ஒருத்தர் மட்டம்னு சொன்னதனால நம்ம மட்ட மாயிடமாட்டோம். ஜெயிச்சுக்காட்டணும்னு சொன்னாங்க.

ரகு: லைசென்ஸ் வாங்கிட்டயே. எனக்குதான் அதிர்ஷ்டமில்ல. என் பிரண்டு சொன்னான், பக்கத்து டவுன்ல போனா சுலபமா பாஸ் பண்ணலாமாம். எனக்கு வாச்ச இன்ஸ்பெக்டர் சரியில்ல. நான் டெஸ்ட் எடுக்கரச்சே கெழவனெல்லாம் ரோட்ல வந்து என் கழுத்தை அறக்கறான்.

சீனு: தப்பா நெனச்சிக்காதே பானு. நீ பொண் இல்லியா. ஏதாவது ஆயிடுமோன்னு ஒரு பயம். பாசம். அதுனால ஒனக்கு எதுக்கு இதெல்லாம்னு... ஒங்க அம்மாதான் பிடிவாதமா..

பானு: இந்த விஷயங்கள்ல பொண்ணு ஆணுன்னு வித்தியாசம் இல்ல. எல்லாரும் எல்லாம் கத்துக்க வேண்டியிருக்கு. சமீபத்துல படிச்சேன். மனுசங்க மூணு டைப்பாம், accuser, excuser and chooser னு.. அப்பா, நீங்க ஒரு Accuser, எதுக்கெடுத்தாலும் யாரையாவது குற்றம் சாட்டறீங்க. ரகு, ஒரு Excuser. சரியா வரலேன்னா சாக்கு சொல்லிக்கிட்டு இருக்கான். நானாவது அம்மா மாதிரி Chooserஆ இருக்கப்போறேன். அப்பதான் கெடச்ச வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெறலாம். சரி வாங்க, காருல ஏறுங்க. இப்ப நான் ஓட்டப்போறேன்.
அப்பா, ஒங்களுக்கு பயமா இருந்தா பின் சீட்டுல ஒக்காருங்க. ரகு முன்னால பக்கத்துல ஒக்காரு. ஒங்க ரெண்டுபேருக்கும் எப்படி ஜாக்கிரதயா நல்லா ஓட்டரதுன்னு சொல்லித் தரேன், அம்மா எனக்கு சொல்லிக்குடுத்த மாதிரி.

(சீனுவாசன் ஏதோ சொல்ல நினைத்து, பிறகு வாயைப்பொத்திக்கொண்டு காரில் ஏறுகிறார்.).

====================================

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

5 comments:

யாத்திரீகன் said...

இன்னுமும் இப்படி எல்லாமா ஆளுங்க இருக்காங்க.. ????

ஆனாலும் அருமையான பதிவு....

முக்கியமா.. அந்த மூணு விதமான மனிதர்கள்.. அருமை...

தாணு said...

அருமையான நிகழ்ச்சி. Always `CHOOSERS’ win the race! கிட்டத்தட்ட எங்க வீட்டு கதை கூட!

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
-/பெயரிலி. said...

accuser, excuser and chooser இலே Chooser இற்குப் பதிலாக Looser என்பதைப் போட்டால், நான் மூன்றும் சரி 1/3 ஆகக் கலந்தது ;-)

Alex Pandian said...

செந்தில், தாணு, பெயரிலி,

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

-/பெ : அடுத்த பதிப்பு ஒங்க ஐட்டம் தான் ;-)

- அலெக்ஸ்