Friday, September 30, 2005

இனியொரு முறை ஏமாறலாமா தமிழர்களே!

முரசொலியில் கலைஞரின், உடன்பிறப்புக்கு எழுதும் கடிதங்களை விரும்பிப் படிப்பதுண்டு - அதில் துள்ளி விளையாடும் தமிழும், பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற விஷயங்களை எடுத்துக் காட்டி நன்றாக வாதம் புரியும் திறமையும், சில சமயம் நகைச்சுவையாகவும் இருக்கும்.

இன்று அவர் எழுதியுள்ள கடிதம் இதோ - தங்கள் வாசிப்பிற்கு.

- அலெக்ஸ் பாண்டியன்
30-Sep-2005
------------------------------------------------------
நன்றி: முரசொலி:
http://www.murasoli.in/2005/kaditham/2k50928k.htm


இனியொரு முறை ஏமாறலாமா.. தமிழர்களே!

உடன்பிறப்பே,

காலையிலே தடையிலாச் சான்றிதழ் (என்.ஓ.சி) கொடுக்க முடியாது என்று கண்டிப்பு - உடனே கேட்க வேண்டிய முறையிலே கேட்டவுடன்; 24 மணி நேரத்திலே “டால்மியா’’ கையிலே தடையிலாச் சான்றிதழ் தஞ்சமடையும் தமாஷா மட்டுமல்ல; வெட்டப்பட்ட மின்சார இணைப்பும் வெகு உபசாரத் தோடு திரும்பத் தரப்படுகிறது - அதன் தொடர் விளைவாக புதிய கட்டிடம் எழுப்பிய இருபது தொழிலாளிகள் இடிந்து விழுந்த கட்டிடத்துக்குள் பிணமாகிப் போகிறார்கள் - இவையெல்லாமே இந்த ராஜ்யத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னால் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற திகிலூட்டும் நிகழ்ச்சிகள். வேகமும் - சோகமும் நிறைந்த இந்த நாடகத்தில் மகாராணியாக வேடமேற்ற மகாபுண்யவதிதான்; “சராசரி மக்களின் வாழ்வாதாரங்களைக் கொள்ளை யடித்து தங்களின் சட்டைப்பைகளை நிரப்பிக் கொள்வதற்காகவோ சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்?’’ என்று கேள்வியை எழுப்பி; “மக்களின் விலா எலும்புகள் மீது எழுப்பப்படும் சேது திட்டம் வெற்றி பெறாது என்றும், அதற்குத் தமிழ்நாட்டில், தனது அரசு உடந்தையாக இருக்காது என்றும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதாக’’ ‘ருத்திர தாண்டவ’மென எண்ணிக் கொண்டு ‘கோமாளிக் கூத்து’ நடத்திக் காட்டியிருக்கிறார்.

இதற்கிடையே சேது திட்டத்துக்கே தடை கோரி உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு - யார் தொடுத்தது என்று சொல்லத் தேவையில்லை - தடை கொடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் சொன்னதைக் கூட “தமிழரின் தந்தி’’ தாராளமாக தலைப்புச் செய்தி யாகக்கூட உள்பக்கத்தில் வெளியிடத் தயங்கி, நோட்டீஸ் கொடுத்த செய்தியை மட்டும் நாட்டுக்குத் தெரிவிக்க முனைந்துள்ள நாகரிகத்தின் உச்ச கட்டம் - மீனவர் பாதிக்கப்படுவர் - மீன் வளம் குறையும் - பயணத் தொலைவு கூடுமே தவிர - குறையாது - அதிகமான கப்பல்கள் போக முடியாது - இப்படியெல்லாம் சேது சமுத்திரத் திட்டப் பணிகளுக்கு எதிராக - சண்டிராணிகள் சதிராடிக் காட்டுகின்றனர். இது பற்றி மத்திய அமைச்சர் தம்பி பாலுவைக் கேட்டால் “உலகில் உள்ள கப்பல்களில் 84 சதவீதம் கப்பல்கள் அந்தக் கால்வாய் வழியாகப் போக முடியும்’’ என்று உறுதியாய்ச் சொல்லுகிறார்.

ஊழல்தான் நடைபெறுமென்றும்; இது உதவாத திட்டமென்றும்; ஊழலிலே ஊறித் திளைத்து - வளர்ப்பு மகனுக்கு நூறு கோடி ரூபாயில் திருமணம் நடத்தி; சர்வலங்கார பூஷிதைகளாக மேனியெங்கும் வைர, வைடூர்யம், முத்து, பவளமென, பூட்டிக் கொண்டு மேரி அண்டனைட்டாகக் காட்சி தந்தவர், சிறுதாவூர் அரண்மனையென்ற பெயரால் சிறிய குடிசை(?) யொன்று கட்டி வாழ்பவர்; பாசாங்கு மொழி - பம்மாத்து மொழி - பாட்டாளிகளை, பாமரர்களை ஏமாற்றும் பசப்பு மொழி பயின்றுள்ளதைக் காட்டிக் கொள்ள; பல ஆண்டுக் காலத் தமிழர்களின் கனவான சேதுக் கால்வாய்த் திட்டத்தைப் பள்ளம் தோண்டிப் புதைத்தாலும் புதைப்பேன் - உள்ளம் குளிர ஏற்க மாட்டேன் என உறுமுகிறாரே இன்று; இந்த உத்தம புத்திரி; இவர் “2001 தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை பொதுத் தேர்தலுக்காக அ.தி.மு.க. சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டம் பற்றி 83ஆம் பக்கம் தொடங்கி, 84 மற்றும் 85ஆம் பக்கங்களில் குறிப்பிட்டிருப்பது என்ன?

இதோ; உடன்பிறப்பே - நீ மட்டும் படித்தால் போதாது, எல்லோருக்கும் படித்துக் காட்டி - எத்தர்களின் பித்தலாட்டத்தை எடுத்துக்காட்டு!

அ.தி.மு.க. 2001 தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டம் பற்றிய வாக்குறுதி வருமாறு :-

“இந்தியத் தீபகற்பத்தைச் சுற்றி இது வரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத் திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கி லிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்லவேண்டுமானால் இலங் கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு தீர்வாக அமை வதுதான் சேது சமுத்திரத் திட்டம். இத் திட்டத்தின்படி ராமேஸ்வரத்திற்கும், இலங் கையின் தலைமன்னார்க்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் அகற்றி ஆழப் படுத்தி கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்.

இத்திட்டம் காலம் காலமாக ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு வருகிறதே தவிர, சரியாக உருப்படியாக உருவாகவில்லை. ஆங்கிலேயர் காலத்தி லிருந்து பேசத் தொடங்கி, நாடு விடுதலை பெற்ற பின் சற்று அதிகமாகப் பேசப்பட்டு, பல்வேறு நிபுணர்கள் குழுக்கள் நியமிக்கப் பட்டு, அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டு, பின் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இத்திட்டத் திற்கு ஒரு உந்துதலை, 1981இல் ஆட்சியில் இருந்த டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசுதான் கொடுத்தது. இருப் பினும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு, இத்திட்டத்திற்கான உரிய கவனத்தையோ முக்கியத்துவத்தையோ கொடுக்கவில்லை. தற்பொழுது ஆட்சியில் இருக்கின்ற பி.ஜெ.பி. - தி.மு.க. கூட்டணி அரசின் பிரதமர் சென்னை வந்தபோது சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்களித்தார். அதற்கு முன் ராமேஸ்வரம் வந்து சென்ற அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரும் இதே பல்லவியைத் தான் பாடினார். ஆனால் நடந்தது என்ன வென்றால், ஏற்கனவே பல முறை ஆய்வு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்யப் போகிறோம் என்றுதான் இப்போதும் சொல்லப்படுகிறதே தவிர, இத்திட்டத்திற்கென தற்போதைய பட் ஜெட்டில் ஒதுக்கீடு எதுவும் செய்யப்பட வில்லை.

சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல; தென் கிழக்கு ஆசிய நாடு களும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும்; வாணிபமும், தொழிலும் பெருகும்; அந்நிய முதலீடு அதிகரிக்கும்; அந்நியச் செலா வணி அதிகம் கிடைக்கும்; கப்பலின் பயணத் தூரம் வெகுவாகக் குறைவதால் எரி பொருளும், பயண நேரமும் மிச்சமாகும்; ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும்; குறிப் பாக, இராமநாதபுரம் போன்ற மிக மிகப் பிற் பட்ட தமிழக தென் பகுதி மக்களின் வாழ்க் கைத் தரம் மேம்படும்; வேலை வாய்ப்பு பெரு கும்; தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும்; சுற்றுலா வளர்ச்சி யடையும்.

இன்னபிற நன்மைகளைத் தர இருக்கும் இத்திட்டத்தின் தேவையை, முக்கியத் துவத்தை உணர்ந்து, நிதி நெருக்கடியை ஒரு சாக்காகக் கூறிக் கொண்டிருக்காமல், உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்க ளுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு வேண்டிய நிதியைத் தேடி இத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஒரு காலக் கெடுவுக்குள் இத்திட்டத்தை நிறைவேற் றும்படி மைய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும்’’


உடன்பிறப்பே, ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி 1981இல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் சேது திட்டத்துக்கான உந்துதல் கொடுத் தது மட்டுமல்ல; சுமார் 150 ஆண்டுக்கு மேலாக எத் தனையோ தலைவர்கள், நிபுணர்கள், வல்லுநர்கள் வலியுறுத்தி; இப்போதுதான் “வாராது வந்த மாமணி யாய் வரப்பிரசாதம்’’ என்பார்களே; அதுபோல வந் துள்ளது - என் செய்வது; எம்.ஜி.ஆரே இனி முதல்வராக இருக்கத் தகுதியில்லை - தன்மீது பொறாமைப் படுகிறார் என்று தன் கைப்படவே அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு கடிதம் எழுதி; அது “மக்கள் குரல்’’ ஏட்டிலேயே வெளிவந்த பிறகும் - மானாபிமானம் பற்றிக் கவலைப்படாத மனித ஜென்மங்கள் சில, தன் முன்னால் மண்டியிட்டுக் கிடப்பதால் ஏற்படும் மமதையன்றோ; நடுநிலையாளராக இருக்க வேண்டியவர்களையும் தடுமாறச் செய்திடும் கெடுமதியை ஏற்படுத்தி மகிழ்கின்றது.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே “ஏற்கனவே பல முறை ஆய்வு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்யப் போகிறோம் என்றுதான் இப்போதும் சொல்லப்படுகிறதே தவிர, இத்திட்டத் திற்கென தற்போதைய பட்ஜெட்டில் ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை’’ என்று 2001ஆம் ஆண்டு இத் திட்டத்திற்காக வடித்த கண்ணீர் உண்மையானதா? அல்லது இப்போது சேது கால்வாய்த் திட்டத்தை முழு மூச்சாக எதிர்க்கிறாரே? இது உண்மையானதா? என்று சிந்தித்தால் சேதுக் கால்வாய்த் திட்டத்தின் மீது ஆத்திரமில்லை, அதைக் கொண்டு வரக் காரணமாக தி.மு.க.வும், மற்ற தோழமைக் கட்சியினரும் இருந்து விட்டார்களே என்ற எரிச்சல்தான் காரணம் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?

2001ஆம் ஆண்டுக்குக் கூடச் செல்ல வேண்டாம். அண்மையில் 25-6-2005ஆம் தேதியன்று ஜெயலலிதா விடுத்த நீண்ட அறிக்கையில் ஓர் இடத்தில் “என்னுடைய வற்புறுத்தலின் பேரில்தான் 1998ஆம் ஆண்டில் இத்திட்டம் ஒரு முன்னுரிமைத் திட்டமாக மேற்கொள்ளப்பட்டு, தொடக்கச் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வுப் பணி தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் 1998ஆம் ஆண்டு மார்ச் திங்களில் ஒப்படைக்கப் பட்டது. இந்நிறுவனத்தின் அறிக்கையும், 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் அளிக்கப்பட்டது. இவ்வாறாக, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நனவாவதை உறுதிப்படுத்துவதற்கு நான் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறேன்’’ என்று பெருமைப் பட்டுக் கொண்டாரே, அப்போது சேது திட்டம் ஏழைகளின் விலா எலும்புகள் மீது கட்டப்படும் திட்டமாக ஜெயலலிதாவிற்கு தெரியவில்லையா?

இது மாத்திரமல்ல; கடந்த ஆண்டு 9-9-2004 அன்று “தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல் திட்டத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை சேர்க்க வைத்தேன்’’ என்றும், 12-9-2004 அன்று “சேது சமுத்திரத் திட்டம் எனது இடையறாத முயற்சிக்குக் கிடைத்த இமாலய வெற்றி’’ என்றும் ஜெயலலிதா பேசினாரே, அப்போது இத்திட்டத்தினால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஜெயலலிதாவின் எண்ணத்தில் உதிக்கவில்லையா?

உடன்பிறப்பே, இந்த விபரங்களையெல்லாம் உனக்குச் சொல்லி; நீயும் நானும் உணர்ந்தால் மட்டும் போதுமா? - உலகத் தமிழர்களுக்கெல்லாம் சொல்லுகிறேன்;

தமிழா;

உன் மாநிலம் வளமாகிட;

வளங்குலுங்கி செழித்திட;

உலக நாடுகளோடு வாணிபம் பெருகிட;

ஒரு திட்டம்;

செகம் புகழும் சேது சமுத்திரத் திட்டம் -

1860இல் ஆங்கிலேய கமாண்டர் டெய்லர்

வகுத்த திட்டம் -

பெரியாரின் பெரு விருப்பம் -

அறிஞர் அண்ணாவின் அருங்கனவு -

பெருந்தலைவர் காமராசரின் பேரவா -

தமிழன் கால்வாய் என ஆதித்தனார் செய்த தவம் -

தம்பி முரசொலி மாறனும் தம்பி வைகோவும்

முழங்கிய முரசம்!

கோசல்ராம் எழுப்பிய ஒலி!

வாஜ்பய் வழங்கிய உறுதி -

சர் ஏ. ராமசாமி முதலியார் குழுவின் பரிந்துரை -

1958இல் சட்டமன்றத்தில்

எதிர் வரிசையிலிருந்து

ஒலித்த எனது குரல் -

அனைத்துக் கட்சியினரும்

ஆதரித்து வரவேற்ற ஒன்று -

வெட்டென மறக்க வேண்டிய கிட்டாத

திட்டம்
என்று ஏங்கிய வேளையில்

திருமதி சோனியா காந்தி தலைமையிலான காங் கிரசும், தி.மு.க. தலைமையிலான தமிழகக் கட்சி களாம் பா.ம.க., ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., முஸ்லீம் லீக் ஆகியவை கொண்ட கூட்டணியும் சிந் தித்துச் செயலாற்றி - பிரதமர் மன்மோகன் சிங் தீவிர ஆய்வுகளுக்குப் பின் வழங்கி, நாம் பெற்றுள்ள சேதுத் திட்டத்தை நிறைவேற்றும் பணி நிறைந்த மனத்துடன் நடைபெறும்போது; நிர்மூலமாக்குவேன் அதனையென; நிர்த்தாட்சண்யமாகப் பேசும் - அவலத்தைக் கண்டீர்களா; அகிலத்தில் இருக்கும் தமிழர்களே! ஆபத்தை உணர்ந்தீர்களா?

மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் மாங் கல்யம் இழக்க வேண்டும் என்று எண்ணுகிற மாமி யார் எங்கேயோ - எப்போதோ ஒருவரைத் தான் காண முடியும்.

இங்கோ; இப்போதே - தி.மு.க. இருக்கின்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சேதுத் திட்டம் நின்றால் போதும்; தமிழ்நாடு எக்கேடோ கெட்டுப் போகட்டும் என எண்ணுகிறவர் இருக்கிறாரே; இவரை நம்பி இனி யொருமுறை ஏமாறலாமா தமிழர்களே?


அன்புள்ள,

மு.க.

நன்றி: முரசொலி:
http://www.murasoli.in/2005/kaditham/2k50928k.htm

3 comments:

Amala Singh said...

Good post. You have taken lot of pain in putting the contents to unicode.

Alex Pandian said...

அமல சிங்: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
முரசொலிக் கடிதத்தை ஒரு நொடியில் யுனிகோடுக்கு மாற்றிய பெருமை சுரதாவின் தமிழ் செயலிக்கே ... செல்லவும்: http://www.suratha.com/reader.htm

- அலெக்ஸ்

Krishna said...

Nice argument. Difficult to beleive that this man is 82. he has that sharp memory and often defeats others with what they themselves told earlier. But, he too has done the same thing.