Monday, October 17, 2005

பத்து ரூபாய் விகடன்

8 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆனந்த விகடன் அடுத்த வாரம்/இதழ் முதல் 10ரூபாயாம். 60காசுக்கு விகடன் விற்ற காலம் முதல் காசு கொடுத்து வாங்கிப் படித்து வரும் எம்மைப் போன்றவற்கு, இந்த உடனடி ரூ 2 விலையேற்றம் அதிகம் என்றே படுகிறது.

விகடன் ரூ.6.00 என்று இருந்தவரை இருந்த உள்ளடக்கம் வேறு - சிறுகதை, தொடர்கதை, அரசியல், சமூக, நையாண்டிக் கட்டுரைகள், சங்கீதம், சினிமா (சில பக்கங்கள்), ஜோக்ஸ் என சிறப்பாக இருந்தது. கடந்த 4 வருடங்களாக விகடனில் வெறும் சினிமா சினிமா சினிமா - அவ்வளவுதான். அதுவும் தொப்புள், மார்பகப் படங்கள் விஜய், ரஜினி, அஜீத், சிம்ரன் மற்றும் இன்ன பிற ஓர் பாட்டு ஆடும் குலுக்கல் நடிகைகளின் (நமீதா..) படங்கள், செல்வராகவன்-சோனியா இதுதான் உள்ளடக்கமாகி வருகிறது. மதன் பதில்களிலும், ஏன், சுஜாதாவின் கற்றது பெற்றது, தொடரிலும் பெரும்பாலும் சினிமா. அவ்வப்போது காணாமல் போய் வரும் ஞாநி, அ.அ.ஆ தொடர்களிலும் சினிமா, கவர்ச்சிப் படங்கள்.

உருப்படியாக வரும் சில விஷயங்கள் என்றால் அது எஸ்.ராமகிருஷ்ணனின் தொடரும், இணையத்தில் தேடி எழுதப்படுவதாக இருந்தாலும், தமிழ் மக்களுக்குச் சென்றடைய வைக்கும் விதத்தில் உலக விஷயங்களை எடுத்துத் தரும் பா.ரா., சொக்கன் கட்டுரைகள் இவைதாம். அதிலும் இந்த வார சொக்கனின், நெ.1 கட்டுரை ஜெனி·பர் லோ·பஸ் பற்றியது என்பதால் ஆசிரியர் குழு படங்களில் புகுந்து விளையாடியுள்ளார்கள். சேரனின் டூரிங் டாக்கீஸ் கட்டுரை மாத்திரம் நல்ல படங்களோடு வெளியாகியுள்ளது.. மற்ற படி அதுவும் ஒரு சினிமா சம்பந்தப்பட்ட படைப்பே. தமிழருவி மணியனின் கட்டுரைகளோ இன்ன பிற சிறு சிறுகதை/ கட்டுரைகளோ எத்தனை பேர் படிக்கப் போகிறார்கள்.

குஷ்பு சொன்னது சரியா தவறா, அதற்கு திருமா, மருத்துவர் குழுக்கள் செய்வது சரியா தவறா, பார்க் ஹோட்டலில் நடைபெற்றதற்கு லைசென்ஸ் ரத்து செய்தது சரியா தவறா என்றெல்லாம் விவாதிக்கும், போராட்டம் செய்யும் மக்கள் பலரும் தங்கள் வீட்டு வரவேற்பரை மேஜையிலும் ஆனந்த விகடன் இதழை வைத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். விகடனுக்கும் தமிழ் முரசுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது. கடைசிப் பக்கத்தில் (தினமலர் உதவி ஆசிரியர்களை Poach செய்துள்ளார்கள் என கேள்வி) தமிழ் முரசு வெளியிடும் பின்-அப் படங்களுக்கும் (அதுவும் 2 ரூபாய்க்கு சாஷே இலவசம்).. புதன் முதல் -கோவை, சேலத்திலும் தமிழ் முரசு கிடைக்குமாம்) விகடனின் உள்ளடக்கத்திற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் எனக்குப் படவில்லை.

ஷக்தி சிதம்பரத்தின் சிபிராஜ், சத்யராஜ் நடிக்கும் கோவை பிரதர்ஸ் படத்தின் (விகடனில் வெளியாகியுள்ள) ஸ்டில்கள்... ஆபாசம் என்றால் ஆபாசம். இதெல்லாம் இப்ப சாதாரணம் என்றால் சாதாரணம்.

மொத்தத்தில் 8 ரூபாயிலிருந்து ஒரேயடியாக 10 ரூபாய் விலையேற்றியதற்கு உருப்படியாக உள்ளே ஒன்றும் இல்லை. மாதம் ரூ.40/50 அல்லது வருடத்திற்கு ரூ.530 செலவு செய்வது இனிமேல் யோசிக்கவேண்டும். ஆசிரியர் குழு 757 அண்ணா சாலையிலிருந்து புதிய இடத்திற்கு க்ரீன்வேஸ் சாலைக்குச் சென்று பளபள கட்டிடத்தில் அகலப்பாட்டை இணைய இணைப்புடன், பளபள படங்கள் மாத்திரம் போட்டுக் கொண்டிருக்காது என எதிர்பார்த்தால், எம்மை மாதிரியான பல்லாண்டு வாசகர்கள் விகடனுக்கு இனி தேவையில்லை போலிருக்கிறது.


- அலெக்ஸ் பாண்டியன்
17-அக்டோபர்-2005

11 comments:

மோகன்தாஸ் said...

இப்பல்லாம் விகடனை நெட்டில் படிப்பதால் கட்டுப்படி ஆகிறதா படுது எனக்கு.

பழூர் கார்த்தி said...

// விகடன் ரூ.6.00 என்று இருந்தவரை இருந்த உள்ளடக்கம் வேறு - சிறுகதை, தொடர்கதை, அரசியல், சமூக, நையாண்டிக் கட்டுரைகள், சங்கீதம், சினிமா (சில பக்கங்கள்), ஜோக்ஸ் என சிறப்பாக இருந்தது //

முற்றிலும் உடன்படுகிறேன். விகடன் தனது தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து வருகிறது என்றே தோன்றுகிறது

சுதர்சன் said...

//எம்மை மாதிரியான பல்லாண்டு வாசகர்கள் விகடனுக்கு இனி தேவையில்லை//

விகடன் படிப்பதை நிறுத்தி சில காலம் ஆகிறது. இருந்தாலும் ஓரிரண்டு முறை பின்னர் வாங்கிப் பார்த்தேன், ஒன்றையுமே இழந்ததாகத் தோன்றவில்லை.

இளவஞ்சி said...

சரியாச்சொன்னீங்க அலெக்ஸ்...

விகடன் இப்போ மினிசைஸ் சினிமா எக்ஸ்ப்ரஸ் மாதிரிதான் இருக்கு! அதுவும் ஹீரோயின் பேட்டிகளுக்கு முன்னால முன்னுரைன்னு அவங்க பெனாத்தறது இருக்கு பாருங்க.. பத்திக்கிட்டு வரும்...

முன்னாடி மாதிரி காசுகுடுத்து பாதாம்பால் சாப்பிடற திருப்தி இல்லை.. தவிர்க்கமுடியாம காசு குடுத்து தம்மை வாங்கி அடிச்சுட்டு அப்பறம் நம்மையே நொந்துக்கற விரக்திதான் கிடைக்குது!

அதுசரி.. 60பைசாக்கு விகடன் வாங்குனீங்களா? எந்த வருசம்னு சொன்னா உங்க வயசைக்கண்டுபிடிக்கறதுக்கு வசதியா இருக்கும் :)

Dharumi said...

"அதுசரி.. 60பைசாக்கு விகடன் வாங்குனீங்களா? எந்த வருசம்னு சொன்னா உங்க வயசைக்கண்டுபிடிக்கறதுக்கு வசதியா இருக்கும் :)"
- ஏன் இளவஞ்சி, இவர் எனக்கே அண்ணனா என்ன?

Alex Pandian said...

மோஹந்தாஸ், சோ.பையர், சுதர்ஸன், இளவஞ்சி, தருமி,

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

மோஹன்: நீங்க எடுத்துப் போட்ட ஷ்ரேயா படங்கள் நல்லா இருந்தது. சேமிச்சுகிட்டேன் :-)

சுதர்சன்: கடந்த சில வாரங்களில் ஒரு வாரம் பேப்பர் போடும் பையர், விகடன் கொண்டு வரவில்லை. கொஞ்சம் வித்டிராவல் சிண்ட்ரோம் மாதிரி இருந்தது. ஆனால்
அடுத்த வாரம் பார்த்தவுடன் ஒன்றும் பெரியதாக இழக்கவில்லை என புரிந்தது.

இளவஞ்சி: >>>> அதுசரி.. 60பைசாக்கு விகடன் வாங்குனீங்களா? எந்த வருசம்னு >>>>>>>

எழுபதுகளின் மத்தியில்/கடைசியில். சிறுவயதிலிருந்து; ஜோக்ஸ் படிப்பது
பிடிக்கும். விகடன், குமுதம் படித்துத்தான் கதைகள் படிக்கத் துவங்கினேன் என்றால் மிகையில்லை. விகடன் விலையை ஏற்றிவிட்டது அல்லவா. குமுதமும் அதை
பின்பற்றுவார்கள். சமீபகாலங்களில் குமுதம் விகடனின் பல உத்திகளை பின்பற்றி வருகிறது. பல விஷயங்களில் முன்னோடியாக இருந்த குமுதம் தற்போது விகடனைப் பின்பற்றுவது - காலத்தின் கோலம்.

தருமி: உங்களுக்கெல்லாம் நான் தம்பிதான் :-)

- அலெக்ஸ்

immigrant said...

This is something I saw in Forumhub.com a few days ago; seems to reflect your opinion:

From this page

From: YezhaiThamizhan (@ ) on: Fri Aug 1 11:51:51

Just think about who's writing the reviews - the so called 'vikatan vimarsana kuzhu' - is nothing but a bunch of college grads chosen by them under 'Vikatan Maanavar Nirubar' scheme or whatever they call it. I'm 100% sure they don't have a woman in that Kuzhu. And they have no clue about the difference between a good movie and a bad one. So the marks are awarded in Random of course, based on their whims. And you can also see they'll always give unnecessary 'build-up' or hype for certain movies that are not simply worth it. Dhool got 44 ???? Are they kidding us ??

This shows in their other sections as well. Their column names are all in part English - sample this -

"Hello" Madhan, Anu Akka "Aunty", "Mister" Meow, "Jittu" some crap, "Cable Wallah" etc. And yet you may see in their articles about how they complain Thamizh movies having English names. Paradox!! I'm sure when questioned they'll give the same lame excuse that the 'youngsters like it'.

Kumudam is no exception, although I believe they're better in reviewing the movies.

Bottomline, Don't judge the movies based on reviews in Vikatan.

Suresh babu said...

சரியாகச்சொன்னீர்கள். விகடன் எப்போதோ அதன் தனித்துவத்தை இழந்துவிட்டது.. நம்பர் 1 பட்டத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு இன்னும் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள்.

நல்லடியார் said...

விகடனும் சரி, குமுதமும் சரி வெவ்வேறு பெயர்களில் (மினி,ஸ்பெசல்,பக்தி etc என) வெளியிட்டு காசு பார்க்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 7-8 வருஷமாச்சு.

செய்திகள் இலவசமாக கிடைக்கும் தகவல் யுகத்தில் பத்து ரூபாய் என்பது டூமச்தான். ஏற்கனவே குறைந்துவிட்ட (புத்தக) வாசகர்களை இன்னும் குறைக்கும் என்பது நிஜம்.

துளசி கோபால் said...

அலெக்ஸ்,

நீங்க சொன்னது ரொம்பச் சரி.
விகடன் & குமுதத்திலே சினிமாவைத்தவிர ஒரு மண்ணுமில்லே.

எல்லாம் காசுக்குப் பிடிச்ச கேடு. இந்த லட்சணத்துலே ஆயுள் சந்தாவேற தராங்களாம்.
சீக்கிரம் நம்ம ஆயுளை முடிக்கறதுக்கு?

Alex Pandian said...

இம்மிக்ரண்ட், சுரேஷ் பாபு, நல்லடியார், துளசி,

கருத்துகளுக்கு நன்றி.

விகடனின் முழு பொறுப்பும் தற்போது இளையதலைமுறையிடம் வந்துவிட்டதும் ஒரு காரணம் என நினைக்கிறேன். பல முக்கிய பொறுப்புகளும், மாணவ பத்திரிக்கைத் திட்டத்தில் வளர்ந்தவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் வருவது நல்லது தான். எனினும் பத்திரிக்கைக்கு என்று ஒரு பாரம்பரியம் இருந்து வந்த நிலையில் இப்படி சினிமா மட்டுமே உள்ளடக்கம் என்ற வகையில் மாற்றியது தான் கொஞ்சம் அதிகமாகவே கசக்கிறது.


- அலெக்ஸ்