Monday, October 31, 2005

நகரமும் ணகரமும் னகரமும்

அனைவருக்கும் இனிய தீபாவளி மற்றும் ரம்ஜான் வாழ்த்துக்கள்..!

இனிவரும் மாதங்களிலாவது இயற்கைப் பேரழிவிலிருந்து மக்களுக்கு விடுப்பு கிடைக்கும் என பிரார்த்திப்போம். இந்த ஆண்டு மட்டுமே மழை, புயல், வெள்ளம், சூறாவளி, பூகம்பம் என பல நாடுகளிலும், பேரழிவுகள். கடந்த 2 நாட்களிலேயே ஆந்திராவில் ரயில் விபத்திலும் பின்னர் புதுடில்லியில் வெடிகுண்டு பாதிப்பு. இத்தகைய நிகழ்வுகள் குறைந்து அனைத்து மக்களுக்கும் அமைதியான வாழ்வு வர வேண்டுவோம்.

<< நகரமும் ணகரமும் னகரமும்>>

'பண்ணித் தமிழ்' கொஞ்சி விளையாடும் தமிழ் நகரங்களில் இந்நாட்களில் பெரும்பாலோர் முக்கியமாக இளைஞர் / இளைஞியர்) ணகரத்திற்கும் னகரத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் உபயோகப்படுத்துகின்றனர். தமிழ் அறிஞர் தாத்தாவின் பேரன் டிவியில் இந்தத் தமிழ்க் கொலை அதிகம்.

அதுவும் சன் மியூசிக் சேனலில் எப்போது பார்த்தாலும் யாரோ ஓர் இள நங்கை தொலைபேசியில் கடலைப் போட்டுக்கொண்டே இருக்கிறார். அவர் என்ன பேசுகிறார் என்பது புரிந்தால் நீங்கள் தமிழக கல்லூரி இளவட்டங்களுடன் அதிகம் பழகுபவராக இருக்கலாம்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு பாடல் ஒளிபரப்பினர். மெல்லத் திறந்தது கதவு படத்தில் வரும் மிக அருமையான பாடல் - 'வா வெண்ணிலா... உன்னைத் தானே வானம் தேடுது..' - அமலாவின் நாட்டியமும், மைக் மோகனின் தேடுதலும்.

அருமையான பாடல், ஆடல். அதற்கு பாடல் செய்தி வெளியிட்ட/டைப் செய்திருந்த இளைஞர்
'வா வென்னிலா' என்றே போட்டிருந்தார். பெரும்பாலானோர் பேசும் போதும் ஒண்ணுமே என்பதற்கு ஒன்னுமே என்றே பேசுகின்றனர். இது தெரியாமல் பேசுகிறார்களா (இவர்கள் அநேகமாக தமிழ் ஒரு பாடமாக படித்திருக்க மாட்டார்கள்) அல்லது மற்றவர்கள் டிவியில் பேசுவதை, கல்லூரியில், கா·பி ஷாப்பில் பேசுவதைக் கேட்டு, தாங்களும் மாறிவிட்டார்களா என்பது தெரியவில்லை. வலைப்பதிவர்கள் கூட பலரும் ஒன்னுமே என்றே உபயோகிக்கின்றனர்.

லகரமும் ளகரமும் ழகரமும் தான் பல வருடங்களாக இந்த பேச்சு வழக்கில் சுட்டிக்காட்டப்படுவதாக இருந்தது. ராதிகா போன்றோர் - சித்தி, அண்ணாமலை, செல்வி சீரியல்களில் ஸ்பஷ்டமாக ழகரத்தை ளகரமாக உச்சரித்து உச்சரித்து, பல தமிழ் சீரியல் பார்ப்போரும் ழகரத்தை ளகரமாக உச்சரிப்பதே சரி போலிருக்கிறது என்ற நிலையை சில நபர்களிடம், குழந்தைகளிடம் காண முடிந்தது. மதுரைக்காரர்களுக்குத்தான் ழகரம் ளகரமாகும் என கேள்விப்பட்டிருக்கிறேன் (No offence meant!)

அந்தக் காலங்களில் பேராசிரியர் நன்னன் - சென்னை தொலைக்காட்சியில் தமிழ் வகுப்பு எடுப்பது கேலியாக பேசப்பட்டது (பத்திரிக்கைகளில், ஜோக்குகளில், கதைகளில்..) ஆனால் இன்றைய தேவை - அந்த நிகழ்ச்சிகளின் மறு ஒலிபரப்பு. ஜெயா டிவியில், காலை 8.10க்கு ஒரு ஆசிரியர் பேசும் ஆங்கிலம், எழுதும் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறார் (நன்றாகவே இருக்கிறது..) அது மாதிரி - தமிழும் 5 அல்லது 10 நிமிட capsuleஆக சன் டிவியின் காலை நிகழ்ச்சியில் செய்திக்கு முன்னர் கற்றுக்கொடுத்தால் கலைஞரின் இத்தனையாண்டுத் தமிழ்ப் பணிக்கு ஒரு துளியூண்டு - பேரனின் சேவையாக இருக்கும். வேண்டுமென்றால் சரவணா, எஸ்.எம், குமரன் சில்க்ஸ் போன்றோரிடம் விளம்பரதாரராக இருக்க வேண்டலாம்.

என்னய்யா இது நகரத்தில் ணகரத்திற்கு வந்த சோதனை ?


-அலெக்ஸ் பாண்டியன்
31-அக்டோபர்-2005

14 comments:

PositiveRAMA said...

தீபாவளி வாழ்த்துக்கள்!

குமரன் (Kumaran) said...

அலெக்ஸ் பாண்டியன். நல்ல பதிவு.

ஒன்னுமே என்று எழுதும் வலைப்பதிவர்களில் நான் ஒருவன். அது சரிதான் என்பது என் கருத்து. ஒன்னுமே என்பது ஒன்றுமே என்னும் சொல்லின் திரிந்த உரு. நீங்கள் ஏன் ஒண்ணுமே என்பது சரி என்று எண்ணுகிறீர்கள் என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா? தவறு இருந்தால் திருத்திக் கொள்கிறேன். நன்றி.

உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

Alex Pandian said...

பாசிடிவ் ராமா, குமரன்,

நன்றி.

இராம.கி போன்ற தமிழறிஞர்களிடம் விளக்கம் கிடைக்கலாம். எண்களை எண்ணும் போது நாம் ஒண்ணு, ரெண்டு, மூணு என்றே பேச்சு வழக்கில் சொல்கிறோம். ஒன்னு, ரெண்டு, மூனு என பெரும்பாலானோர் சொல்வதில்லை. ணகரம் தான் உபயோகப்படுத்தி நான் பார்த்திருக்கிறேன். "ஒன்னுமே" என எழுதுவது/பேசுவது சரியில்லை என்பது எனது சொந்தக் கருத்து.

- அலெக்ஸ்

குமரன் (Kumaran) said...

அலெக்ஸ் நீங்கள் இராம.கி அவர்களிடம் இதைப் பற்றி கேட்டு சொல்கிறீர்களா?

ramachandranusha said...

அலெக்ஜி, அந்நியன் "அனியன்" என்று சென்னை "சே¨னாய்" என்றும் உச்சரிக்கப்படுவதைக் கேட்கும்பொழுது, உண்மையில் செருப்பை கழற்றி அடிக்கலாம் என்று ஆத்திரம் வருகிறது. என்ன ஸ்டைலோ, எழவு?

Nambi said...

கலைஞரின் இத்தனையாண்டுத் தமிழ்ப் பணிக்கு ஒரு துளியூண்டு - பேரனின் சேவையாக இருக்கும்

This guy Karunanidhi and his company DMK made crores of rupees by selling Tholkappiya Poonga. But his 'kithen Cabinet' SUNTV igonres all the basic grammer in Tamil.

SUNTV & co is murdering Tamil by all the possible way. At the same time this guy Karunanidhi claims that he got classical status for Tamil.

The double standard adopted by Karunanishi and his company DMK is more dangerous than "வாழை இலை வஸ்துவை நக்கிப் பிழைக்கும் நாய்கள்".

Karunanidhi and his business DMK, SUNTV are influencing TN politics for too long. MK is too selfish to be in politics. Sooner he retires from Politics or dies better for TN.
The alternative is not JJ. She is a devil.

Nambi

Ramya Nageswaran said...

இந்த விஷயத்தில் சிங்கை தொலைக்காட்சியை பாராட்டித் தான் ஆக வேண்டும். அழகு தமிழ், நல்ல உச்சரிப்பு, மிகக் குறைந்த ஆங்கில சொற்கள் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கலக்குவார்கள். நிகழ்ச்சிகளின் தரம் சில சமயம் கேள்விக் குறி என்றாலும் மொழியில் குற்றம் சொல்ல முடியாது.

Alex Pandian said...

குமரன்,

இராம.கி அவர்கள் பதிவில் ஒரு கேள்வி வைத்துள்ளேன். அவரின் பதிலுக்கு காத்திருக்கலாம்.

உஷாஜி: நீங்கள் என்னைவிடப் பெரியவர். 'ஜி' என்றெல்லாம் அழைக்காதீர்கள் :-)

வடநாட்டு மக்களின் வருகை அதிகமாகிவிட்டதும் இந்த உச்சரிப்பு குளறுபடிக்குக் காரணம். இந்த இந்தி மைந்தர்களுடன் தாங்களும் கூடிப்பேசி, கலக்க நம்மவர்களும் அவர்களைப் போலவே உச்சரிக்க பழகிக்கொள்கின்றனர் என நான் எண்ணுகிறேன். இந்திக்காரப் பெரிசுகளிடம் கேட்டால் - அவர்களும் இந்த வெளிநாடு/ஆங்கில மோகத்தால் இந்தியும் குதறப்படுகிறது - ஹிங்கிலீஷ் ஆகி வருகிறது என அங்கலாய்க்கின்றனர்.

நம்பி: நீங்கள் சொல்லுவதிலும் உண்மை உள்ளது. ஆனாலும் கலைஞர் தமிழ் எனக்குப் பிடிக்கும் :-) அவர்களின் தமிழ் முரசு பத்திரிக்கையைப் படித்தால் அவர்களின்
டபுள் ஸ்டாண்டர்ட் இன்னும் வெளியெ தெரியும். (தினமலரிலிருந்து ஆட்கள்
வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகச் செய்தி - அதனால் தமிழ்/ஆங்கில
கலப்புடன் தான் பல வாக்கியங்கள் / தலைப்புகள் இருக்கிறது)


ரம்யா: ஆமாம் ஒலி. 96.8ன் தொகுப்பாளர்கள் பேச்சை பலமுறை கேட்டுள்ளேன்.

சிங்கை டிவி பார்த்ததில்லை. சுத்தமான அழகு தமிழ். சூரியன் எஃப்.எம், ரேடியோ மிர்சி இவர்கள் எல்லாம் சிங்கைக்காரர்களிடம் 3 மாதம் டியூஷன் எடுத்தாலும் அந்த
அழகு தமிழில் பேசுவது கடினம். பழைய இலங்கை வானொலியும் நன்றாக
இருக்கும்

- அலெக்ஸ்

G.Ragavan said...

தீபாவளி வாழ்த்துகள் அலெக்ஸ்.

நல்ல பிரச்சனை. ஒண்ணுமே என்பது தவறு. ஒன்னுமே என்பதுதான் சரி. ஒன்றுமே என்பதன் கொச்சைதான் ஒன்னுமே.

டீவியில் அறிவிப்பாளர்கள் உச்சரிப்பு மகாகொடுமை. ரொம்பக் கேவலமாக இருக்கிறது. எல்லாம் ஸ்டைல். தமிழில் மட்டுமல்ல...இது போன்ற மலையாள, கன்னட, தெலுங்கு, இந்திச் சேனல்களிலும் இதுதான். நமக்கு மத்த மொழிகள் அன்னியம். தமிழ் தாய்மொழியாயிற்றே. ஆகையால் நம்ம பிரச்சனைக்கு வருவோம்.

போன வாரம் கே.எல் ரேடியோ வாங்கினேன். பெங்களூருல தமிழ் ரேடியோ கேக்க அதுதானே வழி. அதுல முடிஞ்ச வரைக்கும் நல்ல தமிழ்ல அறிவுப்பு செய்றாங்க. கேக்க சந்தோசமா இருக்கு.

இராம.கி said...

அன்பிற்குரிய அலெக்ஸ்,

நீங்கள் கேட்ட கேள்விக்கு மறுமொழியாய் தனிப்பதிவே போட்டிருக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Go.Ganesh said...

ஆமாங்க எணக்கும் இந்த நகர னகர ணகர கனக்கில் பிணக்கு !!!
தமிழம்மாவுக்கும் தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க....

துளசி கோபால் said...

க(ணே)னேசா,

யாருப்பா அந்தத் தமிழம்மா?

ஒரே கு(ள)ழப்பமா இருக்கே!

ஒ(ன்னு)ண்ணுமே புரியலையேப்பா?

அலக்ஸ் கோச்சுக்காதீங்க,ப்ளீஸ்

Alex Pandian said...

>>>> போன வாரம் கே.எல் ரேடியோ வாங்கினேன். பெங்களூருல தமிழ் ரேடியோ கேக்க அதுதானே
வழி

ராகவன்: இந்தப் பிரச்னைக்காக நான் சூரியன் எஃப்.எம் ஆட்களுக்கு (சன் டிவி) ஒரு மின்னஞ்சலும் அனுப்பிச்சேன் - ஓசூரில் ஒரு பண்பலை வானொலி நிலையத்தை தொடங்குமாறு - பதிலே இல்லை :-(
(though they will be thangligsh - atleast some good tamil songs can be heard daily - BTB - how is KL programs ? I heard that Shruthi is also good.)(பெங்களூரில் ஆரம்பித்தால் என்றைக்காவது ஒரு நாள் கல்லெடுத்து அடிப்பார்கள்)

இராம.கி. தங்களின் பதிலுக்கும் சிறப்பு பதிவிற்கும் மிக்க நன்றி. ஒண்ணு, ஒன்னு தவிர - பண்ணுவோம் என்பதை பன்னுவோம் என ண்ணகரம் ஒலிக்கும் இடமெல்லாம் பல இளைஞர்/தொலைக்காட்சி அறிவிப்பாளினிகள் னகரமாக உச்சரிக்கிறார்கள்.

கணேஷ், துளசியக்கா: வருகைக்கு நன்றி.

துளசியக்கா: உங்களைப் போய் யாரும் கோச்சுக்குவாங்களா. தெனமும் ஒரு பதிவுன்னு கலக்கிக்கிட்டு இருக்கீங்க. நியுசீயைப் பத்தி அருமையா பதிவு போட்டு வர்ரீங்க.


- அலெக்ஸ்

துளசி கோபால் said...

ஆஹா இப்பப் புரிஞ்சுபோச்சு யாரு அந்தத் தமிழம்மான்னு!

க(ணே)னேசனுடைய தமிழாசிரியை தமிழரசி அவர்கள்தானே?

நட்சத்திரத்தோட இண்ட்ரோவுலே இருந்து புடிச்சுட்டேன்:-))

அலெக்ஸ், நீங்க கோச்சுக்கமாட்டேன்னு சொன்னதாலே உங்க பதிவுலே கணேஷ்கிட்டே கேக்கறதையெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கேன்.

நியூஸி பதிவுங்க பிடிச்சிருக்கா? ஹை! அப்படியே நம்ம பதிவுக்கும் ஒரு ஆட் ஆச்சு!