Wednesday, October 05, 2005

அன்னியர் Vs மண்ணின் மைந்தர் - 2

சென்னைக்கு/தமிழகத்திற்கு தங்கர், குஷ்பு, கராத்தே, பார்க் ஹோட்டல் என்றால் பெங்களூரில் சமீப காலங்களில் அந்நியர் Vs மண்ணின் மைந்தர் மற்றும் போக்குவரத்து, உள்கட்டுமான பிரச்னைகள் பெரிதளவு பேசப்பட்டு வருகின்றன.

வரும் 8ஆம் தேதி, சனிக்கிழமை, பெங்களூர் பேலஸ் மைதானத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் 3D இசை நிகழ்ச்சிக்கு பெரும் விளம்பரங்கள். நிச்சயம் அதில் கன்னடப் பாடல்கள் எதுவும் இருக்கப்போவதில்லை. பெரும்பாலும் இந்தி, தமிழ், தெலுங்குதான் இருக்கக்கூடும்.

சமீபத்தில் நடைபெற்ற இரண்டு விஷயங்கள்.

ஒன்று: சென்ற சனிக்கிழமை IBM கம்பெனியின் ஊழியர்களுக்காக பேலஸ் மைதானத்தில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில், பாடகர்கள் இது பெங்களூர், இங்கு அட்லீஸ்ட் ஓரிரண்டு கன்னடப் பாடலாவது பாடுவோம் என துவங்கியவுடன், ஊழியர் கூட்டத்திலிருந்து கூச்சல் எழுப்பி, கன்னடப்பாடலை நிறுத்தி இந்தி, மற்ற மொழிப்பாடலைப் பாட வைத்துள்ளனர்.

இதையறிந்த கன்னட அமைப்புகள், திங்களன்று காலை IBM கம்பெனியின் முன்பு தர்ணா, போராட்டம், கல் வீச்சு என நடந்தேறியுள்ளது. இதைப் பற்றிய பதிவை தடாகம் (சுருசல்) வலைப்பதிவிலும் காணலாம். IBM கம்பெனி தனது ஊழியர்களுக்கு ஞாயிறு மடல் அனுப்பி, திங்களன்று அதிகாலையிலேயே அலுவலகம் வருமாறும், வாகனங்களை கதவுக்கு அருகில் நிறுத்தாமல், உள்ளே, basementல் நிறுத்துமாறு பணித்து, பெரிய அளவு தாக்குதலிலிருந்து தப்பித்துள்ளது.

இன்னோர் பிரச்னையும் தற்போது மடல்களில் ஓடிக்கொண்டிருக்கிறது (!?) நிமிஷ் அடானி என்பவரை பெங்களூர் ரயில்வே ஸ்டேஷன் டி.டியும், ரயில்வே போலீசாரும் தாக்கிய சம்பவம். இது அநேகமாக கொஞ்சம் பெரிய அளவில் கொண்டு செல்லப்படலாம்.


http://www.ryze.com/posttopic.php?topicid=563043&confid=366http://www.deccanherald.com/deccanherald/oct52005/index2042432005104.asp


இதற்கும் அந்நியர்/ம.மை பிரச்னைக்கும் என்ன சம்பந்தம் என கேட்கலாம். ஆனால் சமீப காலங்களில் கணினித்துறையினர் மீது தாக்குதல், அவர்களின் ATM கார்டைப் பிடுங்கி/திருடி/மிரட்டி பணம் பறித்தல் எல்லாம் நடைபெறுகிறது.. இதற்குக் காரணம் இல்லாதவர் Vs இருப்பவர் என்கிற வகைக்குள் இதனைக் கொண்டுவரலாம் என்றாலும் நடந்த நிகழ்ச்சிகளைக் கவனித்தால் இதில் ஒரு pattern இருப்பது புரியும்.

பெங்களூரின் அந்நியர் Vs மண்ணின் மைந்தர் பிரச்னையின் ஒரு வடிவமாக சமீப காலங்களில் மடல்களில், வாக்குவாதக் களங்களில், இத்தகைய செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. முடிந்த அளவு தமிழ்படுத்திக் கொடுக்கிறேன். ஆனால் எந்த அளவிற்கு குடியேறிகளினால் ஏற்பட்டுள்ள கலாச்சார பாதிப்பால், கன்னடியர்கள் எவ்வளவு தூரம் எண்ணுகிறார்கள் என்பதற்கு இவை சில உதாரணங்கள்.

இதைப் போல மற்ற மாநில மொழிக் காதலர்களும் (!?) அந்தந்த மாநிலங்களில் செய்கிறார்களா என தெரியவில்லை. ஆனால் டெல்லி சென்றால் இந்திதான், தமிழ்நாடு சென்றால் தமிழில் தான் (தங்கிலீஷாக இருந்தாலும்), கேரளம் சென்றால் சேட்டன் மொழிதான் என்றிருக்கையில், பெங்களூரில் மட்டும் மற்றவர்கள் (அந்நியர் ?) இந்த ஊர் மொழியை தெரிந்துகொள்ள மாட்டேன் என பிடிவாதமாக இருப்பது எனக்கு உடன்பாடல்ல. ஒரு ஊரில் வசிக்கிறோம், வாழ்கிறோம், தொழில் செய்கிறோம், பணம் ஈட்டுகிறோம் என்றிருக்கையில், அந்த ஊர் மொழியையும் கற்றுக் கொண்டு ஊரோடு ஒத்து வாழ்வது ஒரு நல்ல பழக்கமே.

(...தொடரும்)

- அலெக்ஸ் பாண்டியன்
05-அக்டோபர்-2005

5 comments:

Boston Bala said...

---அந்த ஊர் மொழியையும் கற்றுக் கொண்டு ஊரோடு ஒத்து வாழ்வது---

நியாயமான வேண்டுகோள். 30 நாளில் புத்தகத்தைக் கையில் எடுத்தாலே, கன்னடம் எளிதாகப் பேச வந்துவிடும்.

ராம்கி said...

//இந்த ஊர் மொழியை தெரிந்துகொள்ள மாட்டேன் என பிடிவாதமாக இருப்பது எனக்கு உடன்பாடல்ல. ஒரு ஊரில் வசிக்கிறோம், வாழ்கிறோம், தொழில் செய்கிறோம், பணம் ஈட்டுகிறோம் என்றிருக்கையில், அந்த ஊர் மொழியையும் கற்றுக் கொண்டு ஊரோடு ஒத்து வாழ்வது ஒரு நல்ல பழக்கமே.

ada... ungalukkum time sarillaya..? If the city is Hyderabad, Trivandrum... ellam ok.. But, Bangalore...

Alex Pandian said...

பா.பா,

ஆமாம். உண்மை. தமிழ் தெரிந்தவர்களுக்கு கன்னடம் கற்றுக் கொள்வது எளிது.
விரைவில் தொடர் ஆரம்பம் :-) (எல்லோரும் வலைப்பதிவிலே தொடர் ஆரம்பிக்கரப்போ)

ராம்கி: பெங்களூரில் கன்னடம் தெரியாமல் சமாளிக்கலாம் என்பதுதான் பிரச்னையே (இங்கு வந்து குடியேறும் மக்கள் கன்னடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதுதான் கன்னடியரின் எதிர்பார்ப்பு. தவறில்லையே)

- அலெக்ஸ்

யாத்திரீகன் said...

எதிர்பார்ப்பு தவறில்லை எனக்கூறும் தாங்கள், அவர்கள் வழிநடத்தும் முறையையும் சரி என சொல்வீர்களா ??

மொழியைத் திணித்ததால்தான் ஹிந்தியே பாடுபடுகின்றது தமிழ்நாட்டில், நீங்கள் சொல்லும் மாநிலங்களில் அவர்களிடம் இந்த நடைமுறை கிடையாது....

மொழிவெறி கூட விட்டு விடலாம், அதற்காக பிறமொழிமேல் தீராத்துவேஷம் கொள்பவர்களும் இவர்கள்தான்..

Alex Pandian said...

செந்தில்,

அவர்கள் வழி நடத்தும் முறை சரி என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் அவர்களின் ஆதங்கம் புரிகிறது என்பதையே சொல்ல வருகிறேன். இந்தி திணிப்பு என்பது வடக்கத்தியர் தமிழகத்தில் திணிப்பதைக் குறிப்பிடுகிறீர்கள். தமிழ் நாட்டில் நாம் எப்படி எல்லோரும் தமிழ் பேசுங்கள் என எதிர்பார்க்கிறோமோ, அதே மாதிரி, கர்நாடகத்தில் அவர்கள் இங்கு வசிப்பவர்கள் கன்னடம் பேசுங்கள் என எதிர்பார்க்கிறார்கள். இல்லை நாங்கள் இந்தியிலும் தமிழிலுமே இங்கு எல்லாம் செய்துகொள்வோம். கன்னடம் பேசமாட்டோம் என்று பலரும் பிடிவாதம் பிடிப்பதில் தான் பிரச்னையே.

அடுத்து வரும் 3ஆம் பகுதியைப் படித்தால் இங்குள்ள சில யதார்த்த நிலை விளங்கும்.

- அலெக்ஸ்