Wednesday, November 02, 2005

தீபாவளி 2005 டிவி நிகழ்ச்சிகள்

தீபாவளியென்றாலே தொலைக்காட்சியின் முன்னே உட்கார்ந்து நாள் முழுவதும் கழிக்கும் புதுப் பழக்கம் வந்துவிட்டதில், இந்த முறையும் வென்றது ஜெயா டிவிதான்.

சன் டிவி இன்னும் எத்தனை வருடங்களுக்கு 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' என அறிவித்துக்கொண்டு, ஒரே மாதிரி நிகழ்ச்சிகளைக் கொடுத்து வருவார்கள் என தெரியவில்லை. சினிமா ஆட்கள் தவிர ஒரு சிறப்பு நாளில் இவர்களுக்கு வேறு துறை சார்ந்த பிரபலங்கள் கிடைக்க மாட்டார்களா அல்லது தமிழர்கள் எல்லோரும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைத்தான் பார்ப்பார்கள் மற்ற விஷயங்கள் காட்டினால், விளம்பரம் வராது என்ற முடிவா ? அதுவும் காலை வணக்கம் தமிழகத்தில் சில பட ஹீரோ பரத் ? எத்தனை பேர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருப்பார்கள் ?

எத்தனை தீபாவளிகளுக்கு ரஜினி படம் போட்டே ஓட்டப்போகிறார்கள் - அண்ணாமலை, பாட்ஷா, முத்து - தற்போது படையப்பா.. ரஜினி என்றால் கமலும் இருந்தாக வேண்டுமே அதனால் 'இ.தொ.மு.மு...' வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்'. அதுவும் சுமார் 4 மணி நேரம் இழுத்து.

சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் என்ன தான் நகைச்சுவையாக இருக்கும் என்றாலும் எத்தனை வருடங்கள் அரைத்த மாவையே அரைப்பார்கள் ? அதுவும் ஆரம்பமே வெறிநாய், வீதிநாய், வீட்டு நாய் என்ற பிரயோகங்களுடன் நிகழ்ச்சியைத் துவக்கினார்.. அதுவும் ஒரு நன்னாளில். இவர் இல்லாவிட்டால் விஜய் டிவியில் லியோனி. நகைச்சுவை என்ற பெயரில் ஒரு முறைக்குமேல் கேட்க இயலாத அறுவை.

ராஜ் டிவி என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் சன், ஜெயா, விஜய் டிவி அளவிற்கு நிகழ்ச்சிகளிலோ, தொகுப்பாளர்களிலோ வெற்றி பெறுவதில்லை. ஒளிபரப்பும் டெக்னிகலாக கொஞ்சம் மங்கலாகவே இருக்கும். (என்னதான் சன் டிவியின் அதிகார துஷ்பிரயோகத்தால் Uplink வசதி சரியில்லாமல் இருந்தாலும் - இவ்வளவு கலங்கலாகவா எல்லா நிகழ்ச்சிகளும் இருக்கும்)

ஜெயா டிவி ஜாக்பாட் அடித்தது என்றே சொல்லலாம். இளையராஜாவின் 'அன்றும் இன்றும் என்றும் மேஸ்ட்ரோ' நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. ராஜா இவ்வளவு புன்னகையுடன் இருந்து நான் பார்த்ததில்லை. மிகவும் இயல்பாக செய்யப்பட்டிருந்தது. அவரின் ஆஸ்தான BGM வயலின் அணியும் பல பாடல்களுக்கு மெருகூட்டின. அவரின் ஆரம்பத்தில் பாடிய ஜனனி.. ஜனனி பாடல் ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்தியது உண்மை (குரலில் கொஞ்சம் நடுக்கம் இருந்த போதிலும்). நிகழ்ச்சியின் அடுத்த பாகம் வரும் ஞாயிறன்று. மறக்காமல் பார்க்கவும்.

சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி: தங்கர் பச்சானின் சமீபத்திய வெற்றிப் படம் இவ்வளவு விரைவில் தொலைக்காட்சியில் வந்தது ஓர் ஆச்சரியம். ஆனால் படம் சூப்பர். வலைப்பதிவுகளிலும், இணைய மடற்குழுக்களிலும் நேரம் செலவழித்துக்கொண்டு மனைவியின் திட்டுகளுக்கு ஆளாகும் ஒவ்வொரு தமிழ்க் கணவனும் பார்க்க வேண்டிய ஒன்று :-) படத்தின் வசனங்களும், நவ்யா, தங்கரின் நடிப்பும் அருமை. நிச்சயம் இப்படத்திற்கு சில விருதுகள் உண்டு.

படம் முடிந்த அடுத்த நிகழ்ச்சியாக குஷ்புவின் ஜாக்பாட்..! நடிகர்களும் (எல்லோருமே குஷ்புவுக்குப் பிடித்த நடிகர்கள் - கார்த்திக், பாண்டியராஜன், சத்யராஜ், ஜெயராம்)இயக்குனர்களும் (ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிகுமார், வஸந்த், சூர்யாஹ்).. நடிகர்கள் அதிகம் பரிசு பெற்றனர். இரு குழுக்களுக்கும் ஆரோக்யா பால் அரை லிட்டர் பாக்கெட் 2 மாதம் இலவசமாம்.

தங்கர் - குஷ்பு இருவர் நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து - ஜெயா டிவியில் ? ஏதாவது பெரிய இடத்து Deal இருக்குமென்று பட்சி சொல்கிறது (எது நடந்தாலும் தமிழ் செய்திகள் படிக்கும் நல்லுலகிற்கு) இந்த மாதிரி எண்ணுவதுதான் தற்போதைய வழக்கமாகிவிட்டது :-)

ஒரு காலத்தில் கோலோச்சிய சென்னைத் தொலைக்காட்சி (பொதிகை) சோபை இழந்து காணப்படுகிறது. தலைமையினாலா ? இல்லை சினிமா அதிகம் இல்லாததால் நாம் (நாமும் இந்த சினிமா நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகிவிட்டோம்) தான் அப்படி எண்ணுகிறோமா ?வாத்யாரின் 'ஆயிரத்தில் ஒருவன்' போட்டு பல வாத்யார் ரசிகர்களைக் கவர்ந்தார்கள். அருமை. விடுமுறை நாளில் மகிழ்வாகக் கழிக்கவேண்டுமென்றால் இந்த மாதிரி வாத்யார் படம் பார்த்தால் போதும்.

தமிழகத்தில் உள்ள பல உறவினர்களிடமும் தொலைபேசியதில் - தீபாவளிக்கு புது சட்டை, பலகாரம், வெடி பிறகு என்ன என்று கேட்டால்- வேறென்ன டிவி நிகழ்ச்சிகள் தான் என்கிற அளவிற்கு பெரும்பாலான தமிழர்கள் (எம்மையும் சேர்த்துதான்) டிவி மற்றும் சினிமா நட்சத்திரங்களுடனான தீபாவளி என்றே ஆகிவிட்டது. தொலைத்தது நமது நட்பையும், வெளியே சென்று கூடி மகிழும் அந்தப் பொற்காலத்தையும்.

சென்னையில் தினமும் இனிமேல் குழாயில் தண்ணீர் விடுகிறார்களாம். அடுத்த கோடை வரை தண்ணீரை தக்கவைத்துக் கொள்வார்களா அல்லது ஏப்ரல் தேர்தலோடு எல்லாம் சரியா என்பது போகப் போகத் தெரியும்.

- அலெக்ஸ் பாண்டியன்
2- நவம்பர் - 2005

பி.கு: சென்ற தீபாவளியன்று ஜெயேந்திரர் மீதான கோபத்தைக் கைது, பலவித வழக்குகள், பலவித பெயர் இழுக்கு பத்திரிக்கைச் செய்திகள் என இழுத்தடித்த அரசுத்தரப்பு இந்த ஓர் வருடத்தில் பலமுறை உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கியுள்ளது. அரசுத்தரப்பின் ஒரே வெற்றி ஜெயேந்திரர் அருளாசியை இந்த முறை தொலைக்காட்சிகளில் இல்லாமல் செய்தது மட்டுமே.

7 comments:

சுதர்சன் said...

//அரசுத்தரப்பின் ஒரே வெற்றி ஜெயேந்திரர் அருளாசியை இந்த முறை தொலைக்காட்சிகளில் இல்லாமல் செய்தது மட்டுமே.//

:)

ராம்கி said...

//விடுமுறை நாளில் மகிழ்வாகக் கழிக்கவேண்டுமென்றால் இந்த மாதிரி வாத்யார் படம் பார்த்தால் போதும்.


Ada.. inga paruda.. innoru perusu :-)

Alex Pandian said...

ஜெ.ராம்கி: அச்சச்சோ - நான் பெருசு இல்ல. எல்லாம் ஒங்க செட்டு தான். வேணும்னா பத்ரி செட்டுன்னு வச்சுக்கலாம்.
வாத்யார் படம் கண்டு களிக்க வயது ஒரு காரணம் வேண்டாம் :-)

- அலெக்ஸ்

ரங்கா - Ranga said...

அலெக்ஸ்,

பதிவைப் படித்தபின் மனது மன்னார்குடிக்கு சென்று விட்டது - புதுச் சட்டை சர சரப்பு, இருட்டும் புகையும் புழுதியும் கலந்து கட்டிய தெரு, கையில் சாணிவத்தி (வெடிக்கான வாசனையற்ற பெரிய ஊதுவத்தி), தெருவில் போகும் சைக்கிளுக்கும், மாட்டுவண்டிக்கும் வழிவிட்டு காத்திருந்து வைக்கும் லக்ஷ்மி வெடி, ஊசி வெடி மற்றும் அணுகுண்டு, அவ்வப்போது உள்ளே சென்று இனிப்பு, காரம் (முக்கியமாக தீபாவளி மருந்து) - சொந்த வீட்டு பண்டங்களை விட, அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து வந்தவற்றிற்கு மதிப்பு அதிகம் ;-), பின்பு மதியம் முற்றத்தில் கிரிக்கெட்! (வாசலில் வெடிகள் இன்னும் வெடித்துக் கொண்டிருப்பதால் வீட்டிற்குள்), அரட்டை, சுகமான வானொலி நிகழ்சிகள் - முக்கியமாக இலங்கை வானொலியின் சிறப்பு நிகழ்சி! :-|

பின் சென்னை வந்தபின் இதெல்லாம் மாறிப் போய் தொலைக்காட்சி, கிட்டதட்ட பதிவில் உள்ளது போல! பின் அமெரிக்க வாசம்! இந்த தீபாவளியும் எப்போதும் போல் அலுவலக வேலையில் தான் சென்றது. சக இந்திய ஊழியர்களின் வாழ்த்துக்கள் ஒன்று தான் தீபாவளியை நினைப்பூட்டிக் கொண்டிருந்தது! வார இறுதியில் ப்ரிட்ஜ்வாட்டர் கோவிலுக்குப் போக வேண்டும்.

ramachandranusha said...

அது சரி, கல்கி,கலைமகள், அ.சு வகையறா தீபாவளி மலர்களைப் பார்த்தீங்களா? காஞ்சியாரின் அருளாசி இருக்கா இல்லையா? இந்த விஷயத்தை தெரிஞ்சிக்காட்டி என் தலை வெடிச்சிடும்.
அலெக்ஸ் பார்க்கவில்லை என்றால், வேற யாராவது தீபாவளி மலர்களைப் பார்த்தவங்க பதில் சொல்லி புண்ணியம் தேடிக்குங்க :-)

ராம்கி said...

//வாத்யார் படம் கண்டு களிக்க வயது ஒரு காரணம் வேண்டாம் :-)


அடக்கடவுளே, நீங்களும் மாட்டிக்கிட்டீங்களா? ரஜினி படத்தை கூட ரசிக்க தெரியலைன்னு ஒருத்தர் எழுதித்தான் மாட்டிக்கிட்டாரு.... எல்லாம் நேரம்தான்... வாங்க.. வாங்க.. இப்புடி வந்து குந்துங்க..

Alex Pandian said...

ரங்கா,

அழகான, அருமையான நினைவலைகள்.

உஷா: இன்னும் இந்த தீபாவளி மலர்களை நான் பார்க்கவில்லை. சென்னைவாசிகள் சொல்லவும்


நேற்று (ஞாயிறு) இளையராஜாவின் அ.இ.எ 2ஆம் பகுதி ஒளிபரப்பினார்கள். 3ஆம் பகுதி அடுத்த ஞாயிறு. பிரகாஷ் எழுதியுள்ள மாதிரி இளையராஜாவின் ரசிகர்கள் எல்லோரும் சிடியில் சேமிக்கவேண்டிய ஒரு நிகழ்ச்சி. இணையத்தில் நம்.டிவி மூலம் பார்க்கலாம் என நினைக்கிறேன்.

உஷா: என்னதான் விளம்பரங்களுக்கு நடுவில் ஓர் பாடல் என ஒளிபரப்பை இழுத்து அடித்தாலும், பாடல்களின் ஜீவன் - ராஜான்னா ராஜாதான். சி.குயில் சித்ரா, பாடறியேன், படிப்பறியேன் பாடலை அருமையாகப் பாடி, மரி மரி நின்னேயும்
தொடர்ந்து பாடினார். உடனேயே சுகாசினியின் பேச்சு. மொத்தத்தில் சன் டிவியின் ரமணாவுக்கு சரியான போட்டி.

- அலெக்ஸ்