Friday, January 21, 2005

பென்னி ஹின்னும் பெங்களூர் ரகளைகளும்

நேற்று இரவு முதல் பெங்களூரில் பல இடங்களிலும் கல்வீச்சு,பஸ் மற்றும் இதர வாகன கண்ணாடி உடைப்பு, டயர்களில் காற்று எடுப்பு என வன்முறை கும்பல்களின் கைவரிசை பல ஏரியாக்களிலும் நடைபெற்று வருகிறது. இன்றைக்கு பந்த் என்ற போர்வையில் இத்தகைய கலவர வேலைகள் இன்னும் அதிகமாகியுள்ளது.

காரணம்: அமெரிக்க எவாஞ்சலிஸ்ட் பென்னி ஹின் பெங்களூரில் இன்று முதல் நடத்த இருக்கும் 'பிரார்த்தனைக் கூட்டம்'. தினமும் பத்து லட்சம் வீதம், மூன்று நாட்கள் (21, 22, 23) முப்பது லட்சம் மக்கள் திரளுவார்கள் எனவும், இந்தியாவிற்கான பிரார்த்தனை மற்றும் ஹீலிங் எனப்படும் குணமாக்கும் அதிசயங்கள் நடத்தப்படும் என்றும் விரிவான ஏற்பாடாக பெங்களூரில் உள்ள ஜக்கூர் ஏர்போர்ட்டில் பல்லாயிரக்கணக்கான சதுரடியில் பல்லாயிர வாட் ஸ்பீக்கர்களுடனும், பெரிய சைஸ் ஸ்கிரீன்களும் ஏற்பாடு. கர்நாடகம் தவிர, கேரள, ஆந்திர, தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களிலிருந்தும் பலர் வருவர் என எதிர்பார்ப்பு.

அவர் வருவதை எதிர்த்து, பாஜக, வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பல மடாதிபதிகளும் விதான் சவுதா வரைசென்று கோஷமிட்டு, கடந்த சில வாரங்களாக இன்றைய தினத்திற்கு தூபம் போடுவதுபோல் அறிக்கை போர்கள்.. இதன் நடுவே முதல்வர் தரம்சிங் தானும் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்வதாகவும் சொல்ல - அறிக்கை விவாதங்கள் சூடு பறக்க - இதன் நடுவில் சோனியா காந்தியின் சொல்படிதான் பென்னி ஹின்இங்கு களமிறக்கப்படுவதாக பிரச்சாரமும், பென்னி ஹின் பிரார்த்தனைக்காக வரவில்லை.. பல லட்சக்கணக்கான அப்பாவி, ஏழை இந்துக்களை மதமாற்றம் செய்யத் தூண்டுவதாகவே இந்த நிகழ்ச்சி அமையும் என பலமான பிரச்சாரத்தின் பின்னணியில் இன்றைய பெங்களூர் கலவரங்கள்..

நடுவில் மாட்டிக்கொண்டது - இன்றைய சுபமுகூர்த்த தினத்தில் திருமணம் நடத்துவோரும், பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமியர்களும் - மற்ற அனைத்து அலுவலகப்
பணியாளர்களும்தான். ஹோசூர் செல்லும் சாலையில், எலக்ட்ரானிக் சிடி செல்லும் மற்றும் ஐடிபிஎல் இன்னபிற கணினித்தொழில் நுட்ப அலுவலகங்கள் செல்லும் பஸ்களும், வேன்களும், ரிங்ரோடில் செல்லும் லாரிகளும்.

http://www.rediff.com/news/2005/jan/21bang2.htm
http://www.rediff.com/news/2005/jan/21bang1.htm

நிலைமை விரைவில் கட்டுக்குள் திரும்பும் என நம்புவோம்.

*** **** *****

சங்கரராமன் கொலையில் சார்ஜ்ஷீட் இன்று... எஸ்.பி. பிரேம்குமார் வரதராஜப்பெருமாளிடமும், அம்பாளிடமும் குற்றப்பத்திரிக்கை ஆணவங்களை வைத்து சிறப்பு பூஜை செய்து.. மாஜிஸ்திரேட்டிடம் சமர்பித்துள்ளார்.

அரசு தரப்பு வக்கீல் மாற்றம், எஸ்.பியின் பாதுகாவலர்கள் மாற்றம், எஸ்.பி.க்கும், டி.எஸ்.பிக்கும் கருத்து வேறுபாடுகள், ரவி சுப்ரமணியம் அப்ரூவர், விகடன் மற்றும் நக்கீரன் நிருபர்களுக்கு மட்டும் கிடைக்கும் பிரத்யேக போலீஸ் மற்றும் ஜெயேந்திரர் தரப்பு உள்தகவல்கள், இத்தனை நாட்கள் பேட்டியும், அறிக்கையுமாக இருந்த மஞ்சள் துண்டு பெரியவர் 21 லட்சம் மகன் மூலம் அளித்தபிறகு காட்டும் மவுனம்...உம்.. we are about to see a long drawn battle in different courts with possible impact in TN elections too.

சூப்பர் ஸ்டார் பெயரையும் இதில் இழுத்து பரபரக்கின்றனர். படையப்பாவில் கடைசியில் அவர் சொல்லும் வசனம்தான் நியாபகத்துக்கு வருகிறது.

- அலெக்ஸ் பாண்டியன்
21-ஜனவரி-2005

Tuesday, January 18, 2005

சரித்திரச் சின்னத்தின் மறைவு - எல்லே சுவாமிநாதன்

எல்லே சகோதரர்களான எல்லே சுவாமி மற்றும் எல்லே ராம் இவர்களின் எழுத்துக்களை இணையத்தில் பலரும் படித்திருப்பீர்கள். இவர்கள் சுயசரிதை எழுதினால் அதில் பல சுவையான சம்பவங்களும், தெரிந்துகொள்ளக்கூடிய செய்திகளும் கிடைக்கும். சுயசரிதையாக எழுதப்படாவிட்டாலும், எல்லே சுவாமியின் இந்த படைப்பு அவர்களின் வாழ்வில் மற்றுமோர் டைமென்ஷெனைக் (தமிழில் என்ன ?) காட்டுகிறது. பழைய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த - கும்பகோணம், மாயூரம் (மயிலாடுதுறை) சேர் இணைய மக்கள் இவ்வெழுத்துக்களில் நிச்சயம் ஒரு சுகம் காண்பர்.

- அலெக்ஸ்
19-ஜனவரி-2005

இதோ எல்லே சுவாமிநாதனின் படைப்பு: 'சரித்திரச் சின்னத்தின் மறைவு'
நன்றி: தமிழ்.நெட் , டாக்டர்.எல்லே சுவாமிநாதன்

------------------- சரித்திரச் சின்னத்தின் மறைவு ------------

எங்க கிராமத்துக்கு வரணும்னா நீங்க ஜங்ஷன்லேருந்து பஸ்ல, இல்லாட்டி வாடகை கார்ல வந்திருக்கணும். அதைவிட்டுட்டு உங்களை யாரு தரங்கம்பாடி வண்டில ஏறச்சொன்னாங்க.

டவுன் ஸ்டேஷன்ல ஒரு நிமிஷம் தான் வண்டி நிக்கிம். ஸ்டேஷன் வர்து முன்னே வளைவில ஒரு ஒத்த பனைமரம் தெரியுதுல்ல, ஒடனே சன்ன வழியா பொட்டிய தூக்கி எறிஞ்சுட்டு அது மேல குதிச்சுரணும். ஊருல பாதிப்பேரு நொண்டறதுக்கு இப்படிக் குதிச்சதும் ஒரு காரணம். வண்டி நிக்கற வேகத்துல கெளம்பிடுவான். வெளில நிக்குது பாரு மாட்டுவண்டி. குடுத்ததை குடுங்கம்பான், போய்ச் சேந்ததும் அவன் கேட்டத கொடுக்கலேன்னா வம்புதான். வெக்கல் வெல தெரியுமா, அரிசி வெல தெரியுமான்னு கத்துவான். ரயில்வே கேட்டு தாண்டி ஒரு பிள்ளையார் கோயில். கும்பிட்டுங்க. சக்தி வாய்ந்த தெய்வமுங்க. நீங்க படிச்ச கேள்விய மட்டும் பரிச்சையில கேக்க வெச்சு பாஸ் பண்ணி வெச்சுருவாரு. மூலயில பாத்தீங்களா, மா.மூ.லி.ன்னு போட்டிருக்கு, அதாங்க மாயூரம் முனிசிபல் லிமிட். இனிமே தான் கிராமம் ஆரம்பம். சைக்கிள்ளயும் வரலாம். ஆனா ஒரு மிதி அழுத்தி மிதிச்சா கிராமத்தவிட்டு வெளிய போயிருவோம். சின்ன ஊரு பாருங்க.

மொதல்ல பெருமா கோயிலு. பக்கத்துல ஒரு சாரியில ஏழு வீடு. கொடிகட்டி ஆண்டாங்க. இப்ப பெருங்காயம் வச்ச டப்பாவ ஆயிருச்சு. தெருக்கோடில செல்லியம்மன் திடலு. சூலம் நட்டு எலுமிச்சை குத்தியிருக்கு பாருங்க. ஒரு உருவகந்தான், சூலம் தெரியுதா, செல்லியம்மன் தெரியுதாங்கறது ஒங்க நம்பிக்கைய பொறுத்தது. இங்கதான் அறுப்புக்கு அப்புறம் தாளடிப்பாங்க. பக்கத்துல ஒரு கொளம். இன்னும் பத்து வீடு. அப்பால குடியானத்தெரு. அப்புறம் அரிசன தெரு. சுத்தி வயலு தோட்டம். தூரத்துல இருந்து பாக்கரவங்களுக்கு இங்க ஒரு கெராமம், சனங்க இருக்கரது தெரியாது. கல்லுக்குள்ள தேரைமாதிரின்னு வெச்சுக்குங்க.

பெருமா கோயிலு செவத்தெ பாருங்க. படிங்க. "காரம், மணம்.."அதில்லீங்க. அது மைதீன் பொகையில நோட்டீசு. காரைச்சுவத்துல ஓட்டாஞ்சல்லியால எழுதியிருக்குல்ல அதைச்சொன்னேன். "...க்கும் ...க்கும் கள்ளத்தொடர்பு" . சே, சே அதை யாருங்க படிக்கச்சொன்னா. ஊருன்னா நாலுந்தான் இருக்கும். நான் எழுதலே.

அதுக்கு மேல பாருங்க. "NS/SV இலவசக பாடசாலை- தமிழ், சம்ஸ்கிருதம் சொல்லித் தரப்படும்". NS நாந்தேன். SVங்கறது எஸ் வெங்கடராமன். "இலவசக" மட்டும் பளிச்சினு தெரியும். பின்னாளில் வெங்கடராமன் சொல்லுவான் "பார்ரா,தப்பா இலவசகன்னு எழுதின வார்த்தை மட்டும் பளிச்சினு இருக்கு, சரியா எழுதினதெல்லாம் மங்கியிருக்கு. எல்லாம் இந்த வேணுகோபாலப்பெருமாள் செய்யற குறும்பு. வேணுன்னே நம்ம மானத்தை வாங்கறாரு".

ஒரு பள்ளிக்கூடம் நடத்தி பாடம் சொல்லிதரவேண்டும் என்ற ஆசையில் செய்தோம். வாத்தியாரா ஒரு வெளயாட்டு. நாணு என்ற மனவளர்ச்சி குன்றிய ஒரு பையன் தான் எங்களுடைய முதல் (கடைசியும் கூட) மாணாக்கன். அவன் படிப்பு ஏறாமல் தலை மயிரைப் பிய்த்துக் கொண்டு கத்தியதற்கு எங்கள் பயிற்சியும் ஒரு காரணமோ என்று பிற்பாடு வருந்தியதுண்டு. யாரோ தூண்டிவிட்டு அவனும் அப்புறம் படிக்க வரதுக்கு காசு கேட்டான்.
காசா? சாமியே நடந்து போவுதாம், பூசாரி புல்லட் கேட்டாராம் ! பள்ளிக்கூடத்தை மூடிவிட்டோம்.

தமிழே தடுமாட்டம். இந்த அழகுல சம்ஸ்கிருதம் வேற சொல்லித் தரப்படும்ம்மா.. நாங்க அப்பதான் சமஸ்கிருத வகுப்புல சேந்திருக்கம். அதுவே ஒரு தனி கதை. பள்ளிக்கூடம் தெறந்து 2 நாளாவுது. கணக்கு வாத்தியார் பத்து கணக்கு எழுதிப்போட்டு வீட்டுப்பாடமா போட்டு வாங்கடான்னாரு. நாங்க வெளயாட்டா இருந்துட்டம். திங்கக் கெழமை வாத்தியார் ஷவரம்பண்ணிக்கிட்டு மூஞ்சி எரிச்சலோட கணக்கு போட்டவன் கைதூக்குங்குறாரு.

கொக்கு மாதிரி பத்து கை ஒசருது. கடுப்பாயிட்டாரு. போடாதவன் எழுந்து நில்லுரான்னாரு. முப்பத்தி சொச்சம் பேரு நிக்கறான். இவ்வளவு பேரு போடல, மன்னிச்சு வுட்டுருவாருன்னு நெனச்சோம். இல்ல. என்னடா ஒரு மனுசன் மெனக்கிட்டு பலகையில எழுதிப் போட்டுருக்கேன், கணக்குப்போடாம கைவீசிக்கிட்டு இங்க சரைக்கவாடா வந்தீங்கன்னு கத்திகிட்டு, போட்டு மொத்தராரு. நாலு வரிசை பெஞ்சு. ரெண்டு வரிசை ஒதை வாங்கியாச்சு. அடுத்தது எங்க வரிசை. எனக்கு முன்னாடி வெங்கட் ராமன். அப்பவும் பாருங்க, அவனுக்கு மொதல்ல அடி விழும்னு எனக்கு ஒரு அல்ப சந்தோஷம். அப்ப ஒரு பியூன் உள்ள வந்தான். ஒரு நோட்டீசை வாத்தியார்கிட்ட கொடுத்தான். சமஸ்கிருதம் படிக்க விரும்புபவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று போட்டிருந்தது.

யாருக்கு சமஸ்கிருதம் படிக்கணும்னு வாத்தியார் கேக்கிறாரு. நான் போறேன்னு எஸ்வி சொன்னான். என்னைப்பாத்து நீயும் வரியாங்கறான். எனக்குபுரிஞ்சிருத்து, அடியிலேருந்து தப்பத்தான் அங்க போறான்னு. நானும் போறேன் சார்னு சொன்னேன். சரி போயி பேரைக் குடுத்துட்டு வாங்கன்னு அனுப்பினர்.

வெளிய போயி பேரு கொடுத்துட்டு தண்ணி குடிச்சிட்டு மத்த கிளாஸ் எல்லாம் எப்படி நடக்குதுன்னு பாத்திட்டு கிளாஸ் முடிஞ்சப்பறமா வந்தொம். சம்ஸ்கிருதம் எங்களுக்கு சரியா வரல. தனியா ஒரு ரூமுல பத்துபேருக்கு ஒரு வாத்தியார். கனா,தனா, பானாவுலேயெ நாலஞ்சு இருக்கு. வாத்தியார் வயசானவரு. எழுதிபோட்டுட்டு தூங்கிவாரு. அதை திருப்பி எழுதவே எங்களுக்கு முடியலே. நாங்க புள்ளிக்கட்டம் போட்டு வெளயாடுவம். கால் பரிச்சையில மார்க்கு சொல்லிக்கரமாதிரியில்ல. இதுலயே இருந்தா பெயிலாயிருவோமுனு பயம் வந்து தமிழுக்கு மாறிட்டம். தமிழும் பெரிசா வந்திடலே.

என்னங்க என்னதான் அமுக்கி அமுக்கி மொண்டாலும் சொம்பு அளவுக்குத்தானே தண்ணி ரொம்பும் ? கோவில் செவத்துல கையால் கிறுக்கின அந்த பள்ளிக்கூட விளம்பரம் மட்டும் லேசில அழியல. அதத்தாண்டி போறச்சே எங்களுக்கு தினமும் சிரிப்பு வரும்.

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சுவர் சித்திரத்தை சமீபத்துல ஒரு புண்ணியவான் கோயிலுக்கு கும்பாபிஷேகம் பண்ணறச்சே சிமிட்டு பூசி அழிச்சிட்டாரு. யாரோ லாஸ் ஏஞ்சலஸ் ராமாம். சினிமாக் காரங்களாம். நாட்டுல சுவடிகள்தான் அழிஞ்சுபோறதுன்னா, இது மாதிரி சரித்திர சின்னங்களுமா அழியணும்...இப்ப தரங்கம்பாடி வண்டியும் நின்னுருச்சு. கட்டுபடி ஆவலியாம் கவர்மெண்டுக்கு.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
01-March-1999
============================================