Wednesday, March 23, 2005

உலகின் இரண்டாவது 'குடி'மகன் ?

உலகின் இரண்டாவது 'குடி'மகன் ?

கடந்த சில நாட்களில் செய்திகளைப் படித்திருந்தால் இந்தச் செய்தியையும் பார்த்திருக்கலாம். UB குழுமத்தின் சேர்மன் விஜய் மல்லையா, ஷா வாலஸ் என்ற கம்பெனியை 1300 கோடி ரூபாய்க்கு வாங்கிவிட்டார். இதனுடன் விஜய் மல்லையாதான் உலகிலேயே இரண்டாவது லிக்கர் பேரன் (liquor baron) என்று அறியப்படுகிறது.

விஜய் மல்லையாவின் பல்வேறு முகங்கள்


Photo courtesy: The Week

- Page-3 பார்டி சர்க்யூட்டில் ஒரு பெரும் புள்ளி - பெரும்பாலான பெங்களூர், மும்பையின் மிக மிக மேல் தட்டு பார்டிகளில் அவர் கண்டிப்பாக இருப்பார்
- ராஜ்ய சபா எம்.பி
- UB குரூப் சேர்மன்
- குதிரைப் பந்தைய ஆர்வலர்
- சுப்ரமணியம் சுவாமியின் ஜனதா கட்சியின் (ஏர் உழவன் சின்னம் ஞாபகம் இருக்கா ?) தலைவர்
- கிங்·பிஷர் ஏர்லைன்ஸ் என்னும் குறைந்த கட்டண விமான சேவையைத் துவக்க உள்ளார்
- நவ நாகரீக நாரீமணிகளுடன் தோன்றுவார் - ப்ளேபாய் போன்ற இமேஜ் உண்டு
- சமீபத்தில் இங்கிலாந்திலிருந்து திப்பு சுல்தானின் வாளை பல கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து, இந்தியாவிற்கு மீட்டு வந்தார்

நேற்றைய ஸ்டார் நியூஸ் செய்தியில் இவையெல்லாவற்றையும் கலந்து ஒரு தொகுப்பு ஒளிபரப்பினர். வித்தியாசமான தொழிலதிபர் + அரசியல் பங்காளி.

அடுத்த முறை உங்கள் கைகளின் கிண்ணங்களில் கீழ்கண்ட மதுவகைகள் இருந்தால் விஜய் மல்லையாவிற்கு ஒரு சீயர்ஸ் சொல்லிவிட்டு "........................" கல்பவும்.


Photo Courtesy: Brandchannel.com

- கிங்·பிஷர்
- கல்யாணி
- கோல்டன் பில்ஸனர்
- ஸிங்காரோ
- மக்டொவல் - சிங்கிள் மால்ட், டிப்ளோமாட்
- ஹெர்பர்ட்சன்ஸ் - பேக்பைபர்
- ராயல் சாலஞ்ச்
- ப்ளூ ரிபாண்ட்
- கில்பீஸ்
- பஸ்ஸர்ஸ்
- டைரக்டர்ஸ் ஸ்பெஷல்
- கோல்கொண்டா
- வொய்ட் மிஸ்சீ·ப் வோட்கா
- ஹேய்வார்ட்ஸ்
- ............................................

- அலெக்ஸ் பாண்டியன்
23-மார்ச்-2005

Tuesday, March 22, 2005

கிழக்கே போகும் ரயில் - 3

சற்றே நீளமான பதிவு.

சென்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் இப்போதெல்லாம் மாநகரப் பேருந்து வருவதால், வெளியூர் செல்லும் பலரும் பஸ்ஸிலேயே வந்து ஸ்டேஷனில் இறங்கலாம். இது ஒரு சிறப்பான அமைப்பு. தமிழக அரசுக்கு ஒரு ஜே! வெளியூரிலிருந்து வந்து இறங்குவோரும், பஸ்ஸிலேயெ பயணிக்க அதிக தூரம் செல்லவேண்டாம். சுரங்க வழியில் இறங்கி ஏறினால், பொது மருத்துவமனைப் பக்கம் சென்று பஸ்ஸில் ஏறிக்கொள்ளலாம் இது பெரு நகரங்களில் சென்னையில் மட்டுமே இவ்வளவு வசதியாக இருக்கிறது என நினைக்கிறேன். மற்ற ஊர்களில் கொஞ்சம் தூரம் நடக்கவேண்டும். பெங்களூரில் கெம்ப கௌடா பஸ் நிலையத்தில்
இருந்து ரயில் நிலையம் நடக்க சுமார் ஒரு கி.மீ மேம்பாலத்தில் ஏறி, சுரங்கத்தில் இறங்கி, பின்னர் ஏற வேண்டும்.

இல்லை.. இந்த நடப்பு எல்லா நமக்குதவாது என்றெண்ணினால் இருக்கவே இருக்கு ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகள். கால் டாக்ஸிகள் வருவதற்கு முன், ஆட்டோக்காரர்களின் தகராறுகள் அதிகம். தற்போது ஷேர் ஆட்டோவும், கால் டாக்ஸியும், பேருந்துகளும் இருப்பதால், கொஞ்சம் சுமாரான பேரத்தில் ஆட்டோக்காரர்கள் வருகின்றனர். பெங்களூரில் ஆட்டோவிற்கு செலவழிப்பதில் சென்னையில் 75% அதிகம் செலவிடவேண்டும் எனக்கு ஒரே நாளில் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிக்கே ரூ.500 ஆனது.

ரொம்ப நாள் (மாதம், வருடம் ?) கழித்து வெளிமாநிலத்திலிருந்து சென்னைக்கு வந்திறங்குவோர் கண்ணில் அறைவது சென்னையின் போஸ்டர் மற்றும் பேனர்கள்தான்.

பெரும்பாலும் சினிமா போஸ்டர்கள் அல்லது அரசியல் போஸ்டர்கள். வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு போஸ்டர்/பேனர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதுவும் பெரும்பாலான போஸ்டர்கள் ஊரையே மறைத்தமாதிரி (ஜெ. ஆற்காட்டார் - அவர் தம்பி போன்றோர் உங்கள் நினைவுக்கு வந்தால் நீங்கள் தமிழக அரசியலில் அப்டுடேட் ஆக இருக்கின்றீர்கள் என அர்த்தம்- இதை வைத்து தான் அன்று சட்டப்பேரவையை விட்டு திமுகவினர் வெளியே(ற்)றி அண்ணாசாலை வரை நடைபயணம் எல்லாம் நடந்தது. சென்னையே ஸ்தம்பித்தது என்றெல்லாம் தினகரனில் செய்தி வெளிவந்தாலும் அந்த மதிய நேரத்தில் அண்ணாசாலை வழியே பயணம் செய்த எனக்கு எதுவும் ஸ்தம்பித்த மாதிரி தெரியவில்லை. செய்தித்தாள்கள் எவ்வளவு தூரம் செய்திகளைத் திரிக்கின்றன என்பதற்கு இது ஓர் உதாரணம்)

பெரும்பாலான பேனர்களில், தமிங்கிலம் அல்லது இங்கிதமிழாக இருக்கிறது.. மாக்ஸ் நியூயார்க் லை·ப், சந்திரமுகி, டாடா இண்டிகாம், ஹ்யுண்டாய் என துல்லியமான பேனர்கள். என்னதான் பார்க்க அழகாக இருந்தாலும் ஊரின் கட்டிடங்களையே மறைக்கும் அளவிற்கு, அதுவும் சென்னையின் அண்ணா சாலையின் அழகே அந்த பழங்காலக் கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்கள்.. ஆனால் அனைத்தையும் மறைத்தவாறு பேனர்கள், போஸ்டர்கள்.

*** **** *****

நாங்கள் சென்ற அன்று கொஞ்சம் தூறியது போல இருந்ததாலும், மேகமூட்டமாக இருந்ததாலும், வெயில் அவ்வளவு தெரியவில்லை. சென்னையின் மெயின் சாலைகள் பல இடங்களிலும் நன்றாகவே இருந்தன. உள் சாலைகள் மோசமாக சில இடங்களில் இருந்தாலும், முக்கிய சாலைகளை நன்றாகவே பராமரிக்கிறார்கள் என தெரிகிறது

சென்னை, மும்பை, கல்கத்தா இந்த மூன்று ஊர்களிலும் தான் பிரிடிஷாரின் தயவில் அடிப்படை ரயில் கட்டமைப்பு ஏற்பட்டிருந்ததால், அதை இன்னமும் மெருகு படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள், தினமும் சென்றுவர, லோக்கல் டிரெயின் எனப்படும் எலக்ட்ரிக் ரயில்கள் இயங்கி வருகின்றன. அதுவும் பறக்கும் ரயில் எனப்படும் எம்.ஆர்.டி.எஸ் என்னதான் சூப்பர் ஹிட் இல்லையென்றாலும், தாம்பரம்-பீச் இடையே ஓடும் ரயில்கள் சூப்பர் டூப்பர் ஹிட் - பல வருடங்களாக. பலருடைய வாழ்க்கையில் இந்த ரயில்கள் ஓர் அங்கம். பலருக்கு இதில் காதலும், சிலருக்கு சாதலும், வெகு பலருக்கு நட்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சேத்துப்பட்டு தொடங்கி தாம்பரம் வரை உள்ள ஸ்டேஷன்களை கவனித்து வருதலே பல(சிறுவயதின)ருக்கு ஒரு விளையாட்டாய் இருக்கும். மீட்டர் கேஜில் ஓடி வந்த ரயில்கள் சமீபகாலமாக அகல கேஜில் மாறிவிட்டது. அது மாதிரி இந்த ரூட்டில் உள்ள பல லாண்ட்மார்க்குகள் காலத்தால் அழியாதவை. அது சேத்துப்பட்டு அருகே வரும் நேரு பூங்காவாக இருக்கட்டும், மாம்பலம் சப்வேயாக இருக்கட்டும், கோடம்பாக்கம் மேம்பாலம், கிண்டி மேம்பாலம், மீனம்பாக்கம் விமானங்கள்.. இப்போது மேலும் பல சப்வேக்கள், பாலங்கள்... எனக்குத் தெரிந்து இந்த ரூட்டில் உள்ள ஸ்டேஷன்களில்தான் வித்தியாசமான ஸ்டேஷன் போர்டுகள் காணக்கிடைக்கும் (அதாவது 20-30 வருடங்களுக்கு முன்னரே.. தற்போது பல ஊர்களில் இதே மாதிரி போர்டுகள் வந்துவிட்டன).. அதாவது டையமண்ட் மாதிரி இருக்கும் போர்டில், நீலமும் சிவப்பும், வெள்ளையும் கலந்த ஒரு வித பளிச் ஸ்டேஷன் பெயர் போர்டுகள். சில சமயம், ரயில் வேகமாக செல்லும் போது, அதை சரியாகப் படிக்க ஒரு போட்டியும் நடக்கும்.

இன்னொன்று.. இந்த லோக்க ரயில்களில் இருக்கும் மர சீட்டுகள். பலரும் உட்கார்ந்து தேய்த்ததாலோ என்னவோ, பாலீஷ் போட்ட மாதிரி பளபளவென இருக்கும். ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட்டபின், மதிய வேளை 3 அல்லது 4 மணிக்கு எழும்பூரில் ஏறி உட்கார்ந்தால் - கண் ஒரு சொக்கும் பாருங்கள்... ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்தால் பல்லாவரம் வந்திருக்கும்.

இந்த லோக்கல் ரயில் வாழ்க்கை என்பது சில நகர மக்களுக்கே அனுபவிக்க கொடுத்து வைத்திருக்கும் (சென்னை, மும்பை, கொல்கத்தா).

பெங்களூர்வாசிகளுக்கு இன்னும் 20 வருடம் கழிந்தாலும் பறக்கும் ரயில், பாதாள ரயில் எல்லாம் கனவே. புதுடில்லியில் பாதாள ரயில் வந்துவிட்டது என்றாலும், லோக்கல் ரயிலில் இருக்கும் மத்யமர் பார்வை கிடைக்காது. ஹைதராபாத்திலும் மெட்ரோ ரயில் ஓடுகிறது.

கல்கத்தாவின் பாதாளரயில் இந்திரா காந்தியால் அவர் அமரராவதற்குமுன் ஒரு வாரம் முன்பு (1984ல்) துவங்கப்பட்டது. கல்கத்தாவில் சுத்தமாக பராமரிக்கப்படும் ஒரே பொதுவிடம் பாதாள ரயிலான மெட்ரோ தான். கல்கத்தா பற்றி பின்னர் ஒரு பதிவில்.

**** **** *****

ஒரு நாள் சென்னைப் பயணம் முடிந்து அன்றிரவே மறுபடியும் பெங்களூர் மெயில். இரவு சுமார் 11.10க்கு கிளம்புகிறது. ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுவதற்குள் பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்துவிடுகிறது. நல்லவேளை செல்லும் போது இருந்த இளைஞர் குழாமின் குடி, கூத்து தொந்தரவு இல்லை. இந்த இளைஞர்களின் வெட்கமில்லா நடவடிக்கைகள் பற்றி அந்துமணியின் தினமலர் வாரமலர் பா.கே.ப.வில் ஒரு செய்தி வந்துள்ளது. நீங்கள் தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவில் வேறு இடத்திலோ இந்த மாதிரி பொது இடத்தில் கண்டிருந்தால் இதன் தாக்கம் உங்களுக்குப் புரியும்.

ஒரு முறை பெங்களூரிலிருந்து டில்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸில் இதே கசப்பான
அனுபவம் எனக்கும் ஏற்பட்டது.

ராஜ்தானி ரயில் கிளம்ப சில நிமிடங்கள் இருக்கும் வேளையில் ஒரு இளம் பெண் வந்து எங்களின் எதிர் இருக்கையில் அமர்ந்தார். அவரை வழியனுப்ப அவரது அண்ணனோ, அப்பாவோ வந்திருந்தனர். அவர்கள் சென்றவுடன் வண்டி கிளம்பி, டிடி.ஆர் வந்து டிக்கெட் சரிபார்க்க வரும் நேரத்தில் ஒரு ஆடவன் (30+) தன்னுடைய சீட்டை மாற்றி அந்தப் பெண்ணுடன் அமர்ந்துகொண்டான். நேரம் ஆக ஆக, இருவரும் சில்மிஷங்களிலும் ஈடுபட ஆரம்பிக்க... அருகில் இருந்த அனைத்து சீட்காரர்களாலும் எதுவும் சொல்ல இயலவில்லை. இதில், வயதானவர்கள், பெண்கள், சிறு குழந்தைகள், மாணவன் என எல்லோரும் அடக்கம். பெங்களூரிலிருந்து டில்லி செல்லும் வரையிலான 36 மணிநேரமும் குடும்பத்துடன் இருந்த எங்களுக்கு அது கொடுமையாகத் தான் இருந்தது. இவர்கள் இருவரும் நிச்சயம் கணவன் மனைவி இல்லை. அல்லது திருமணம் (நிச்சயம்) ஆனவர்களாகவும் தெரியவில்லை.

இது மாதிரி பொது இடங்களில், கூட்டி வரும் பெண்களின் மீது கைபோடுதல், முத்தமிடுதல், இன்னபிற பலான சங்கதிகள் அதிகரித்து வருகிறது. இவை பெரும்பாலும் அப்பெண்ணின் ஒப்புதலோடு அல்லது சில சமயம் பெண்களின் தூண்டுதலில் நடைபெறுகிறது. நமக்குத் தான்
பார்க்க சகிக்கவில்லை அல்லது தட்டிக்கேட்கவும் முடியவில்லை. எங்கே போகிறது சமுதாயம் ?

ரயிலின் கடைசி பெட்டியில் செய்தி எழுதி பரஞ்சோதிக்கு அனுப்பும் பாஞ்சாலியின் காதல் எங்கே ? ரயில் கிழக்கேயும் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தக்கால பரஞ்சோதிகளும் பாஞ்சாலிகளும் மேற்கத்திய மோகத்தில் மலிந்து கொண்டிருக்கின்றனர்.

- அலெக்ஸ் பாண்டியன்
22-மார்ச்-2005


கிழக்கே போகும் ரயில் - 1

கிழக்கே போகும் ரயில் - 2

Monday, March 21, 2005

அலசல் - தூள் - இரு டிவி நிகழ்ச்சிகள்

அலசல் - தூள் - இரு தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

சுமார் 10 வருடங்கள் (?) முன்பு தமிழ்நாட்டில் ரபிபெர்னார்டின் நேருக்கு நேர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அப்போதெல்லாம் நேரடிப் பேட்டி என்றால் மணீலாவிலிருந்து ஒளிபரப்பாகும் (இந்தியாவிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்ய அரசின் அனுமதியில்லாத காலம்). மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி. அதுவும் வாழப்பாடி ராமமூர்த்தி Full Formல் ஒரு பேட்டி கொடுத்தது இன்னும் நினைவில் உள்ளது.

அப்பேர்ப்பட்ட நேருக்கு நேர் நிகழ்ச்சி - சன் டிவியில் சன் நியூஸ் சேனலில் தற்போது (saturday 9pm) ஒளிபரப்புகிறார்கள். கடந்த சில/பல வருடங்களாக வீரபாண்டியன் நடத்திவருகிறார். அவரும் நல்ல கேள்விகளை முன்வைப்பவர். ஆனாலும் பல சமயங்களில் அது திமுக சார்பு பேட்டியாகவே இருக்கும் அல்லது அவர்கள் கூட்டணி சார்பாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் ஏன் கறுப்பு பேக்ரவுண்டில் பேட்டி எடுக்கிறார்கள் என புரியவில்லை. வெளிச்சம் வீரபாண்டியன் மற்றும் பேட்டி தருபவர் உடலுக்கு மட்டும் இருக்கும். மற்ற எல்லாம் கறுப்பு பின்னணி. வீரபாண்டியன் யாரிடம் பேட்டி கண்டாலும், என்ன விஷயத்தை முன்வைத்து பேட்டி கண்டாலும், ஒரு சில கேள்விகளாவது இட ஒதுக்கீடு அல்லது அது சம்பந்தப்பட்ட தலைப்பில் இருக்கும். நிகழ்ச்சியை மிகவும் ஒரு நல்ல முறையில் எடுத்துச் செல்வார். அவரது வாதங்களும் எளிய முறையில், பேட்டி தருபவருக்கு கோபம் ஏற்படுத்தினாலும் , நாகரீகமான முறையில் இருக்கும்.

ரபி பெர்னார்ட் ஜெயாடிவிக்கு போனாலும் போனார். எல்லாம் உப்புமா பேட்டிகள். அம்மா செயலுக்கு ஜால்ரா போடும் சிலரைக் கூப்பிட்டு ஜெ.யின் சாதனை விளக்க பேட்டியாக இருக்குமே தவிர, உருப்படியான அரசியல் பேட்டியாக ஒருக்காது. இதே சேனலில் வரும் சுதாங்கன் பேட்டிகள் கொஞ்சம் பரவாயில்லை ஆனாலும் அதுவும் ஜால்ரா மாதிரியே இருக்கும். பரபரபுக்காக அனுராதா ரமணனின் ஜெயேந்திரர்-எதிர்ப்பு பேட்டி.

சரி விஷயத்திற்கு வருகிறேன். இப்படி சன் டிவியும், ஜெயாடிவியும் பேட்டிகளை ஒருதலைப்பட்சமாக நடத்தி வருகையில், கடந்த சில வாரங்களாக சென்னை தொலைக்காட்சி - பொதிகை நிலையம் - அலசல் என்றொரு அரசியல் பேட்டி நிகழ்ச்சியை ஞாயிறு இரவு 10 மணிக்கு நடத்தி வருகிறது. பேட்டி காண்பவர் லேனா தமிழ்வாணன் (with the trademark black spectacles). சென்றவாரம் திராவிடர் கழக தலைவர் (பொது செயலாளர் ?) கி.வீரமணியின் பேட்டியும், நேற்று எம்.ஜி.ஆர் கழகம் தலைவர் ஆர்.எம்.வீ யின் பேட்டியும் ஒளிபரப்பானது.

அலசல் நிகழ்ச்சியின் நான் பார்த்த இரு பேட்டிகளும் மிக அருமை. எளிமையான, நாகரீகமான கேள்விகள் ஆனால் ஆழ்ந்த கேள்விகள். எல்லா விஷயங்களையும் (including controversial topics) தொடப்பட்ட கேள்விகள். பேட்டியின் போது பேட்டி தருபவரும் பதிலளிக்க ஆர்வமூட்டும் வகையில் கேள்விகள். வீரமணியும் எல்லா கேள்விகளுக்கும் நல்ல பதிலளித்தார். ஆர்.எம்.வீயும் அப்படியே. ஜெ. சம்பந்தப்பட்ட சில கேள்விக்களுக்கும் வெளிப்படையான பதில்கள். அவர் ஏன் எம்.ஜி.ஆருக்கு ஜெ.நெருக்கமானது தனக்குப் பிடிக்கவில்லை. சினிமா தயாரிப்பாளராக தான் எடுத்த முடிவுகள் எப்படி (ரிக்ஷாக்காரன் - மஞ்சுளா நாயகி..) பின். ஜானகி அணி, பின் ஜெ.ஆட்சியில் அமைச்சர், இலாகாக்கள் பறிப்பு, கொடுப்பு பின் பறிப்பு, கட்சியை விட்டு நீக்கம், பின்னர் தனிக்கட்சி, கலைஞருடன் கூட்டு என எல்லா விஷயங்களுக்கும் பதில் சொன்னார். ரஜினியின் பாட்ஷா பட வெற்றி, பின்னர் ஏன் படத் தயாரிப்புகள் இப்போது இல்லை என பதிலளித்தார்.

நிகழ்ச்சியை (முன்பு துக்ளக்கில் இருந்த) சாவித்திரி கண்ணன் என்பவர் இயக்கி வழங்குகிறார். லேனாவின் சாய்சும் அருமை. லேனா, மாலன் இருவரும் இந்த 50+ ( சரியா?) வயதிலும் இளமையாக இருப்பதன் ரகசியம் என்னவோ ? லேனா எந்த சார்பும் இல்லாமல் கேள்வி கேட்பதால் ஒரு நியூட்ரல் தன்மை நிகழ்ச்சியில் வெளிப்படுகிறது. வரும் வாரங்களில் இன்னும் பல தலைவர்களின் பேட்டிகள் வரும். எதிர்பார்ப்போம். (விஜய் டிவியில் பாராளுமன்ற தேர்தல் முன் நடத்திய பேட்டி நிகழ்ச்சிகளும் அருமை)

பொதிகையில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாவது பலருக்குத் தெரியுமா என்பதே தெரியவில்லை. அதுதான் பொதிகை !

**** ***** ******

இதே நேரத்தில் (ஞாயிறு இரவு 10மணி) ஜெயா டிவியில் 'தூள்' என்றொரு அரசியல் நையாண்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இரு நபர்கள் அதிமுகவைத் தவிர அனைத்து எதிர் கட்சிகளையும் வாரும், கிண்டலடிக்கும் நிகழ்ச்சி. தமிழ்பட்டி என தமிழ்நாடும், முத்துக்காளை என கலைஞரும், தனபால்சாமி என வைகோவும் உருவகப்படுத்தப்படுகின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் சமீபத்தில் நடந்த திண்டுக்கல் திமுக மாநாட்டை கேலி செய்து, தயாநிதி மாறன், அழகிரி, ஸ்டாலின் மற்றும் வைகோ, காங்கிரஸ் ஆகியோரைக் கிண்டல் செய்தனர்.

பெரும்பாலும் காங்கிரஸ், திமுக, மதிமுக ஆட்களைக் கிண்டல் செய்தே இந்நிகழ்ச்சி இருக்கும் இது வரை நான் பார்த்த எபிசோடுகளில், மிகவும் அநாகரீகமாக (சன் டிவியின் டாப்டென் அல்லது ' சின்ன பாப்பா பெரிய பாப்பா' அளவில்) எதுவும் பார்த்த ஞாபகம் இல்லை. இதையே சன் டிவி ஜெ.யையும், பி.ஜே.பியினரையும், கிண்டல் செய்து ஒரு நிகழ்ச்சி நடத்தி இருந்தால், நிச்சயம் அது நையாண்டி என்பதைத் தாண்டி ஒரு படி மேலே இருக்கும் என நினைக்க வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் தி.மு.க திண்டுக்கல் மாநாட்டில் பேச்சாளர்கள் பேசிய பேச்சுக்கள் பெரும்பாலான (தமிழ்) பத்திரிக்கைகள் இணையத்தில் முழுக்க பதியவில்லை. துக்ளக்கில் வெளியாகியுள்ளது. திமுக பேச்சாளர்கள், அதுவும் வெற்றிகொண்டான், நாராயண் அவர்களின் 'கெட்ட வார்த்தை' பதிவுகளில் உள்ள சிலவையையும் உபயோகப்படுத்தியுள்ளது தெரியவருகிறது. அம்மா கட்சியினரும் இதற்கெல்லாம் சளைத்தவர்கள் அல்ல.


- அலெக்ஸ் பாண்டியன்
21 - மார்ச் - 2005