Saturday, April 09, 2005

பெங்களூர் ராமநவமி இசைக் கச்சேரிகள்

ஸ்ரீராமநவமியை முன்னிட்டு பெங்களூர் ஸ்ரீராமசேவா மண்டலி வருடாவருடம் நடத்தும் ·போர்ட் ஹைஸ்கூலில் நடைபெறும் கச்சேரிகளின் விபரம் பின் வருமாறு,,,

ஸ்ரீராமநவமி கச்சேரிகளுக்கு சீசன் டிக்கெட் வாங்கிவைத்துக் கொண்டால் ஏப்ரல்-28 வரை தினமும் அனுமதியுண்டு.

நேரம்: மாலை 6.30மணி

09-ஏப்ரல் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ், ராஜேஷ்
10-ஏப்ரல் - பாம்பே ஜெயஸ்ரீ
11-ஏப்ரல் - கணேஷ் - குமரேஷ் - வயலின்
12-ஏப்ரல் - சஞ்சய் சுப்ரமணியம்
13-ஏப்ரல் - ஆர்.என்.ஸ்ரீலதா
14-ஏப்ரல் - முத்து மோஹன் (ஹிந்துஸ்தானி)
15-ஏப்ரல் - பாம்பே சிஸ்டர்ஸ்
16-ஏப்ரல் - டி.வி.சங்கரநாராயணன்
17-ஏப்ரல் - குன்னக்குடி வைத்யநாதன் - வயலின்
18-ஏப்ரல் - கத்ரி கோபால்நாத் (சாக்ஸபோன்)
19-ஏப்ரல் - நெய்யாட்டின்கரா வாசுதேவன்
20-ஏப்ரல் - மாம்பலம் சிஸ்டர்ஸ் (விஜயலஷ்மி + சித்ரா) (5.15pm)
21-ஏப்ரல் - மைசூர். டாக்டர்.பாஸ்கர் & கோஷ்டி
22-ஏப்ரல் - டி.என்.கிருஷ்ணன் + விஜயலஷ்மி
23-ஏப்ரல் - ஹதராபாத் பிரதர்ஸ் (டி.சேஷாச்சாரி, ராகவாச்சாரி)
24-ஏப்ரல் - சுதா ரகுநாதன்
25-ஏப்ரல் - எம்.எஸ்.ஷீலா
26-ஏப்ரல் - எஸ்.ஷங்கர்
27-ஏப்ரல் - ப்ரியா சிஸ்டர்ஸ் (ஷண்முகப்ரியா, ஹரிப்ரியா)
28-ஏப்ரல் - விஜய் சிவா
-------------------------------------------------------------------------

29-ஏப்ரல் - நெய்வேலி சந்தானகோபாலன்
30-ஏப்ரல் - மைசூர் நாகராஜ் (வயலின்)
01-மே - நேடுநூரி கிருஷ்ணமூர்த்தி
02-மே - அனுராதா மதுசூதன் (வீணை)
03-மே - டாக்டர்.என்.ரமணி (புல்லாங்குழல்)
04-மே - சசிகிரண் + கணேஷ் (கர்நாடகா பிரதர்ஸ்)
05-மே - எஸ்.சௌம்யா
06-மே - எம்.ஜெயசந்திரன்
07-மே - உன்னிகிருஷ்ணன்
08-மே - நித்யஸ்ரீ மகாதேவன்
09-மே - ஓ.எஸ்.தியாகராஜன்
10-மே - எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் + எம்.நர்மதா (வயலின்)
11-மே - மல்லாடி பிரதர்ஸ் (ஸ்ரீராம் + ரவி)
12-மே - டி.என்.சேஷகோபாலன்
13-மே - எஸ்.வி.நாராயணராவ் நினைவு பரிசு விழா
14-மே - நிறைவு

---------------------------------------------------------------------------------
இசை ரசிகர்கள் இன்புறுவீர்களாக.....! மறக்காமல் குடை எடுத்துச் செல்லவும். மாலையில் மழை வரும்.

- அலெக்ஸ் பாண்டியன்
08-April-2005

Thursday, April 07, 2005

அந்தக் கால சினிமா - எல்லே சுவாமிநாதன்

நூறு இருநூறு எனக் கொடுத்து சந்திரமுகிக்கு எல்லோரும் முன்பதிவு செய்துகொண்டிருக்கும் இவ்வேளையில் ' டூரிங் டாக்கீஸ்' என்ற தலைப்பில் எல்லே சுவாமிநாதன் சுமார் 6 வருடங்களுக்கு முன் தமிழ்.நெட்டில் பதிந்த ஒரு நாஸ்டால்ஜிக் கட்டுரை யுனிகோடில். டூரிங் டாக்கீஸில் படம் பார்த்த அனுபவம் இருந்தால் நிச்சயம் இந்தக் கட்டுரையை சிலாகிக்க முடியும். நீங்கள் தஞ்சை மாவட்டத்துக்காரராக இருந்தால் இன்னும் அதிகமாக உணரலாம்.

- அலெக்ஸ் பாண்டியன்
-----------------------------------------

இதோ அந்த 'டூரிங் டாக்கீஸ்'

******* ****** *******
டூரிங் டாக்கீஸ் - எல்லே சுவாமிநாதன்
******* ****** *******

அடேடே நீங்களும் கும்மோணம் போறேளா? பேஷ், பேச்சுக்கு தொணெயாச்சு.

பாய்கிட்ட டீக்கடையில பேசிட்டிருந்தேள் அந்த கால சினிமா பத்தி, காதுல விழுந்துது.

அந்தக்காலத்துல கீத்துக்கொட்டாயில படம் பாக்கறது ஒரு சந்தோஷமான சமாச்சாரம்னா.. சும்மாவா சொன்னாள் பால்ய ஞாபகம் சுகானுபவம்னு. சின்ன வயசுல சினிமா பாக்க நாலணா காசு கிடைக்கும். கைல அடக்கிண்டு லொங்கு லொங்குனு ஓடுவம். மூணுமைல் போகணும் ஜங்ஷன் கிட்ட சிவாஜி டாக்கீஸ் போக. பொதுவா பழயபடம் போடுவான். கூட்டம் சுமாரா ருக்கும்.

டூரிங் டாக்கீஸ்ம்பா. மூணுமாசம் லைசென்சு. வயவெளிய லீசு எடுத்து கீத்துல கொட்டாய் போட்டிருப்பான். மொதல்ல மணலைக்கொட்டின தரை. பின்னால நாலு வரிச நீள பெஞ்சு. அதுக்கும் பின்னால ரெண்டு வரிச சேரு. தரை மூணணா, பெஞ்சு ஆறாணா, சேரு பன்னிரண்டணா.

படம் லேசுல ஆரம்பிக்கமாட்டான். இருட்டணும். கூட்டம் சேரணும். அதுவரைக்கும் பேண்டு வாசிப்பான். பாட்டு போடுவான். சிலைடு போடுவான், போடுவான், போடுவான் போட்டுண்டே ருப்பான்.. போய்க்கேட்டா பொட்டி வரலே ன்னம், ஆளு போயிருக்கு ஜங்ஷனுக்கும்பான். பெரிய மனுசாள் ஒத்தர் படம் பாக்க வரார்ம்பான்.

ஏதோ சாக்கு..சாயங்காலம் ஜம்னு காத்து வரும். ஏர் கண்டிஷன்லாம் தூக்கி அடிக்கும். வயலோல்லிய? சமயத்துல பாம்பும் வந்துரும். அதுவும் நாகின் படம் போட்டு மகுடி ஊதிட்டா கேக்கவாண்டாம். ஜனங்கள் படம் காட்டறச்சே அதுல மூழ்கிடுவா. வில்லன் வீரப்பா வந்தா வசவு விழும். (தலிவரை அடிச்சிட்டல்ல, பாரு ஒனக்குத்தெக்கப்போறாரு குல்லா). ஹீரோக்கு கைதட்டல், விசில்.

இப்படித்தாம் பாருங்கோ ஒரு தடவே அதிசயமா புதுப்படம் ஒண்ணு சிவாஜி டாக்கீசுக்கு கெடச்சுது. கிராமத்துக்கு சினிமா வண்டி வந்து நோட்டிசு குடுத்துது. நாங்க தயாராயிட்டோம்.

படம் என்ன சதாரம். ஜெமினி கணேசன் நடிச்சது. கிட்டப்பா நடிச்ச சதாரம் பாக்கணும்டா, படம்னா அதான் படம்னு என் தோப்பனார் சொல்லுவர். படம் புதுசா. நாத்திகெழமை. மத்த தியேட்டர்ல எல்லாம் அவுஸ்புல்லாம். இடம் கெடைக்காதவா இங்க வந்தூட்டா. கூட்டம் அலை மோதறது. சின்னப்பசங்க ஆறு பேரு ஒத்தன் முதுகெ ஒத்தன் புடிச்சுக்கிட்டு உள்ளே யாரும் பூராம நெருக்கிண்டு நிக்கறோம். ராகுகாலத்துல கெளம்பிட்டமே தெரியாம, டிக்கிட்டு கெடைக்கணும்னு வினாயகரை பிரார்த்திச்சுகிறோம்.

டிக்கிட்டு குடுக்க ஆரம்பிச்சாச்சு. லயன் மெதுவா உள்ள போறது. டிக்கிட்டு வாங்கி ஒரு வழியா உள்ள போயிட்டம். இடம் பிடிச்சு ஒக்காந்து கீழ உள்ள மணலை மேடா குவிச்சு அனுமார் மாதிரி ஒக்காந்தாச்சு. ஜனம் உள்ள வந்துண்டேயிருக்கு. சினிமாக்கொட்டாய்யாளு ஒத்தன் உள்ள வந்து நெருக்கி ஒக்காருங்கன்னு கத்தறான். பின்னால திரும்பினா பெஞ்செல்லாம் ரொம்பி வழியறது. எடமில்லாம் ஆளல்லாம் நிக்கறான். உள்ள ஒவ்வொத்தனா ஒட்டகம் மாதிரி நுழஞ்சிண்டிருக்கானுகள். ஒடச பெஞ்சு நாற்காலின்னு ஏதோ போட்டு சமாளிக்கப் பாக்கறான். சாத்தியப்படலே. மானேஜர் படம் ஆரம்பிச்சுட்டா , படம் பாக்கற ஆசையில ஜனம் தானா அட்ஜஸ்ட் பண்ணிக்கும்னு நெனச்சு, ரைட் ஆரம்பிடான்னான்.

தெரயில எழுத்தெல்லாம் வரது. பாட்டு காதுல விழல. பின்னால பெஞ்சுல கலாட்டா. ஆறணா கொடுத்து டிக்கிட்டு எடுத்திருக்கம் பெஞ்சுக்கு. மொதல்ல எங்களுக்கு எடம் கொடுத்துட்டு படம் காட்டுடான்னு கத்தறான்கள். மானேஜர் காதுல வாங்காது போல இத்தனிபேரு தரையுல அட்ஜிஸ்ட் பண்ணிட்டு ஒக்காரல. அதுபோல எப்படியாவது அட்ஜிஸ்ட் பண்ணிங்கன்னு சொல்றாரு. யோவ், மானேஜா, ஒனக்கு அறிவில்ல பத்துபேரு பெஞ்ச்ல இருவது பேரு நெர்க்கிகிட்டு இருக்கம், மத்தவன் மடியிலயா போய் ஒக்காரரதுன்னு கத்தல். மானேஜரோட பூர்வோத்திரம், வம்சாவளி பத்தி ஆபாசமா கர்ணகடூரமா வசவு வேற.

இதுக்குள்ள படத்துல பாலய்யா சந்யாசியா ஒக்காந்திருக்கார். ஜெமினி என்னவோ கேக்கரார். ஒரு எழவும் புரியல. படம் திடீர்னு மறஞ்சு போச்சு. ஒரு ஆளு சேரு மேல ஏறி துண்டால படம் வர சதுர ஓட்டய அடச்சிட்டார். என் காசக்குடுரா, இல்லாட்டி ஒக்கார பெஞ்சு போடு, அப்புறம் படம் காட்டுரானு கத்தரார். கடசில போலிஸ்காரா உள்ள வந்தா. எடம் இல்லாத பெஞ்சு ஆளு வெளிய போன்னு வரிசயாய் அனுப்பினா. மானேஜர் அரை மனசோட காசை திருப்பிக்குடுத்தார். சில பேரு பரவாயில்ல தரையிலயே குந்திக்கறோனும்னான். ஒரு அரை மணி கழிச்சு படம் ஆரம்பிச்சுது மறுபடியும். ஒரு வழியா படம் முடியறச்சே பன்னண்டு மணியாயிடுச்சு. திரும்பி போறச்சே மூணு மைல் முப்பது மைல் மாதிரி ருந்துது. இப்பல்லாம் அது மாதிரி நடக்க முடியாது.

என்ன தூக்கம் வரதா..ஜன்னல்கிட்ட காத்து அடிக்கரதோனோ அதான்.. வெத்தல சீவல் வெச்சிருக்கேளா? பஸ்சுக்கு வர அவசரத்துல வெத்தல பொட்டிய ஆத்துல வெச்சுட்டேன். வெத்தல இருந்தா, அதுல துளிரா ரெண்டு கொடுங்கோ. பாக்கு எனக்கு ஒத்துக்காது. பன்னீர் பொகையில இல்லாட்டா வாணாம். நெய்ல வறுத்த சீவல் இருந்தா துளி குடுங்கோ. வாசனெ சுண்ணாம்பு இருக்கோ? ரிந்தான் தாம்பூல மாத்திரை இருக்கா? யதேஷ்டம்...

எனக்கு தூக்கம் வரலை. அதென்ன ஆனந்த விகடனா, தாங்கோ, வாசிச்சிட்டு தரேன்..நீங்க தூங்குங்கோ.. கும்மோணம் வந்தப்பறம் கொரல் குடுக்கறேன்..

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
29 - ஆகஸ்ட்- 1999
-----------------------
நன்றி: தமிழ்.நெட் ; டாக்டர்.எல்லே சுவாமிநாதன்

Wednesday, April 06, 2005

யாஹுவும் கூகிளும் கொஞ்சும் நேரம்..!

இந்த தளத்தில் Yahooவும் Googleம் சேர்ந்து ·பிலிம் காட்டறமாதிரி பண்ணிருக்காங்க. Picture in Picture என்றும் ஒரே டிவியில் ஒரே சமயத்தில் இரண்டு சானல்கள் பாக்கறமாதிரி ஒரே உலாவி ஜன்னலில் இரண்டு தளத்தின் வெளியீடுகளைப் பார்க்க உதவுகிறது.முயன்று பார்க்கவும். yagoohoogle.com

நம்ம தமிழ் மணத்துலயும் இத மாதிரி புதுப் புது விஷயங்களை காசி பண்ணிகிட்டு இருக்கார். லேட்டஸ்டா PDFல் படிக்கும் வசதி.

இந்த மாதிரி சின்னசின்ன Innovative ஐடியாக்களை நாம் நம் எண்ணத்தில் கொண்டு வர பயிற்சி ஏதானும் உண்டா ?

*** *** *** *** ***

சந்திரமுகி படத்தில் ஆஷா போன்ஸ்லேயும், மது பாலகிருஷ்ணனும் பாடியிருக்கும் யுகபாரதியின் இந்தப் பாடல் இன்னும் 3-4 மாதங்களுக்கு எல்லா டிவி சேனல்களிலும் கண்டிப்பாக நீங்கள் கேட்கப்போகும் பாடலாக இருக்கும் என நினைக்கிறேன். இசை: வித்யா சாகர்


Photo Courtesy: Rediff.com

************
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேசக் கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்புத் தூறல் போடாதா

கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீறக் கூடாதா
இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா.....
---

கண்ணில் நூறு அழகு... கையில் நூறழகு உன்னால் பூமி அழகே
உன்னில் நான் அழகு என்னில் நீ அழகு நம்மால் யாவும் அழகே
ஓஓ....கண்ணதாசன் பாடல் வரி போல கொண்ட காதல் வாழும் நிலையாக
கம்பன் பாடிப் போன தமிழ் போல.. எந்த நாளும் தேகம் நலமாக

வள்ளி நீயாக....வயல் நானாக....வெள்ளாமை... நீ ஆஆஆஅ
---
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேசக் கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்புத் தூறல் போடாதா
----
லால்லா.. .லாலலா...லாலலா...

கொக்கிப் போடும் விழி கொத்திப் போகும் இதழ் நித்தம் கோலம் இடுமா
மக்கள் யாவரையும் அன்பில் ஆள, இதில் உன்னைப் போல வருமா

வெளி வேஷம் போடத் தெரியாமல் எனதாசை கூடத் தடுமாறும்
ம்ம் ம்ம் ...பல-கோடி-பேரின் அபிமானம் உனக்காக ஏங்கும் எதிர்காலம்
நீ என் நாடு நான் உன்னோடு... மெய் தானே.... இது ஆஆஆ

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்புத் தூறல் போடாதா

கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீரக் கூடாதா
இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் மீளாதா.....

************

இந்தப்பாடலுக்கு ஆஷா போன்ஸலேயை ஏன் கூட்டி வந்தனர் எனத் தெரியவில்லை (என்னதான் சிவாஜி குடும்ப நண்பி என்றாலும்). கிராமராஜனின் படத்தில் பல வருடங்கள் முன்பே 'ஷெண்பகமே..' பாடியிருந்தாலும் இந்தப் பாடலில் பல இடங்களில் கீச்சுக் குரலில் இடிக்கிறது. சில இடங்களில் அழகு என்பது அளகு என்று ஒலிக்கிறது.. அதற்கு மாறாக மது பாலகிருஷ்ணனின் குரல் தேன் போல் தடவிக் கொடுக்கிறது. இந்த மாதிரி மெலொடிகளும், மது.பா போன்ற குரல்களும்தான் இன்றைய தமிழ் சினிமா பாடல்களின் கோஷ்டிகானத்திற்கு/இரைச்சலுக்கு மத்தியில் கொஞ்சம் ஆறுதல். சித்ரா மற்றும் இன்ன பிற தமிழ் இசைக் குயில்கள் என்னவாயினர் ?

சிலசமயம் 'சிந்து பைரவி'யில் டி.எஸ்.ராகவேந்தர் செய்யும் 'கொஞ்ச நேரம் கொஞ்ச கொஞ்ச வேண்டும் என்னிடம்' மிமிக்ரி நினைவுக்கு வந்து கஷ்டப்படுத்துகிறது.

சந்திரமுகியின் இன்னோர் பாடலான 'ரா...ரா.. சரசக்கு ரா..ரா..' பாடல் சரசத்துக்கு அழைக்கிறது. ரம்யா கிருஷ்ணனைப் படத்தில் சேர்த்திருந்தால் இந்தப்பாடலுக்கு ஒரு தனி மெருகு ஏற்றியிருப்பார். படத்தில் ஜோதிகாவா, நயனதாராவா ? இன்னும் ஒரு வாரம் பொறுங்களேன்.

இரண்டு பாடல்களையும் கேட்க:
Konja Neram
Raa..Raa..

சந்திரமுகியின் பாதி - ஒரிஜினலான 'ஆப்த மித்ரா' கன்னடத்தில் 200 நாட்களைத் தாண்டி ஓடுகிறது.

- அலெக்ஸ் பாண்டியன்
06- ஏப்ரல் - 2005

பி.கு: அப்படீன்னா ரஜினியும் நயனதாராவும் யாகு கூகிள் மாதிரியா எனக் கேட்கவேண்டாம் :-)