Thursday, April 14, 2005

எட்டு காலம்(ன்) 'த ஹிண்டு'

'த ஹிண்டு' ஆங்கில நாளிதழ் இன்று முதல் தன்னுடைய ப்ரிண்ட் எடிஷனை (அச்சு இதழ்) வடிவு மாற்றம் செய்து 'Classic, yet Contemporary' என்ற தலைப்பில் புது வித ஜிகிடி வேலையெல்லாம் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

The Hindu Link

பார்ப்பதற்குக் கண்ணுக்கு குளிர்ச்சி, இளைஞர்களைக் கவரும் வண்ணம், செய்தி மற்றும் பட அமைப்பு என்றெல்லாம் விளக்கங்கள்.

இன்றைய தின இதழுடன் ஒரு எட்டு பக்க இணைப்பில், எங்கெல்லாம் எப்படி மாறுதல் கொண்டு வந்திருக்கிறார்கள் என விளக்கப் படமும் உண்டு.

பார்க்க ஒரு வித்தியாசமாக இருக்கிறது என்றாலும், மற்ற எல்லா ஆங்கில நாளிதழை விட என்னுடைய 25+ வருட 'த ஹிண்டு' வாசிப்பில் பிடித்தது அதன் 6 பத்தி செய்தி அமைப்புதான்.

நீங்கள் தமிழ் நாளிதழ்களையோ அல்லது இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்களையோ படித்து வந்திருந்தால் இந்த கஷ்டம் புரியும். 8 பத்தி (column) பிரித்து ஒவ்வொரு பெரிய செய்தியின் தொடர்ச்சியும் - நாலாம் பத்தி பார்க்க - 8ஆம் பக்கம் திருப்புக என்றெல்லாம் படுத்துவர். ஆனால் ஹிண்டுவில் மட்டும் 6 பத்திகளில் அந்த தலைப்பில் உள்ள எல்லா
செய்தியும் அங்கேயே கிடைக்கும்.

ஆனால் தற்போது ஹிண்டுவும் எட்டு பத்தி பத்திரிக்கையாகிவிட்டது. இளைஞர்களுக்குத் தான் பத்திரிக்கை என்பது போல எழுத்துகளின் அளவை சிறியதாக்கிவிட்டனர். ஹிண்டு என்பது பெரும்பாலான ரிடையர்ட் ஆசாமிகளுக்கும் வயசாளிகளுக்கும் ஒரு தினப்படி போதை. அப்படிப்பட்ட பாரம்பரியமிக்க பத்திரிக்கை இப்படி எழுத்துக்களை சிறியதாக்கியதை
வன்மையாக கண்டிக்கிறேன். நிச்சயம் நாளை 'லெட்டர்ஸ் டு த எடிட்டரில்' இதைப் பற்றி சில 70+, 80+ தாத்தாக்கள் எழுதுவர். அதேபோல Fontsம் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. ஹிண்டுவின் அழகே, அதன் குண்டு எழுத்துக்கள் மற்றும் தலைப்புகள் தான். அவற்றை குறுக்கி கண்ணை உற்று பார்க்க வைத்திருக்கிறார்கள். எல்லாமே 'யூத்' (இளைஞர்கள்) மார்க்கெட்டை எண்ணிதான் செய்கிறார்கள் என்பது வேதனையான விஷயம். ஹிண்டுவின்
சர்குலேஷனே பெரும்பாலும் (தமிழ்) வயசாளிகளின் ஆதரவினால் தான். ஆனால் என்ன செய்வது - மற்ற தினசரிகளான - இண்டியன் எக்ஸ்பிரஸின் தாள் தரம் மிக மோசமாக இருக்கும். எடைக்குப் போடவோ, புத்தகத்திற்கு அட்டை போடவோ, அலமாரியில் சாமான்களின் கீழ் பாதுகாப்பிற்கு போடக் கூட உபயோகமாகாது. ஹிண்டுவின் தாள் தரம், எடை, உபயோகம் எல்லாமே உயர்தரம். டைம்ஸ் ஆ·ப் இண்டியா போன்ற டேப்ளாய்டுகள் (tabloids) படம்பார்த்து தூக்கி வீசத்தான் லாயக்கு (என்னுடைய அவதானிப்பில்).

மற்றபடி புது ஹிண்டுவின் எடிட்டோரியல் பக்கம் இரு பக்கமாகி ஒரு முழு மாற்றம் கண்டிருக்கிறது. பொதுவாக எடிட்டோரியல் இடது பக்கமும், காலம்னிஸ்ட் ஆர்டிகிள்ஸ் அதே பக்கத்திலும் இருக்கும். வலது பக்கம் தேசிய அளவு முக்கிய செய்திகள் இருக்கும். இன்றைய இதழில் வலது பக்கமும் செய்திகள் அல்லாது Featured Articles வந்துள்ளது. அதற்கு OP-ED என்ற தலைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களாக ஸ்போர்ட்ஸ் பக்கம் கடைசிப்பக்கத்திற்கு முன் இருக்கும். சமீப சில வருடங்களாக கடைசிப் பக்கத்திற்கு வந்து, தற்போது கடைசிக்கு முன்னுக்கு முன் வந்துள்ளது. 2 பக்கம் இருந்ததை 3 பக்கம் ஆக்கியிருக்கிறார்கள். சென்னை போன்ற இடங்களில் முதலும் கடைசியும் தவிர இடைப் பக்கங்களிலும் கலர் இருக்கும். இங்கு பெங்களூரில் முதலும் கடைசியும் மட்டும்தான் கலர் படங்கள்.. ஆகவே இனிமேல் விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்கள் கலரில் பார்க்க முடியுமா என தெரியவில்லை.

மற்ற நாட்களின் பக்கங்கள் கண்ணுக்கு பழக்கமானவுடன் பிறகு பதிகிறேன்.

- அலெக்ஸ் பாண்டியன்
14-ஏப்ரல்-2005

Wednesday, April 13, 2005

தமிழ் மென்பொருள் கருவி !?

வலைப்பதிவாளர்களே, சென்னையில் இருப்போரே - இந்த செய்தியைப் பற்றிய விபரங்கள் தெரியுமா.? ஏதோ தமிழ் மென்பொருள் கருவியாமே - இலவசமா தராங்களாமே ? திறந்த வகை - சரி; அதென்ன உண்மை வகை மென்பொருள் ? தமிழ்மணம் பற்றி, சுரதாவின் இலவச செயலிகள் பற்றி, முகுந்த், மகேன் போன்றோரின் தமிழ் கணினிக் கருவிகள் (?) பற்றி பேரனுக்கும் தாத்தாவுக்கும் கொஞ்சம் யாராவது எடுத்துச் சொன்னால் நன்றி.

Dinamalar link

தமிழ் மென்பொருள் கருவி: 15ம் தேதி சென்னையில் வெளியீடு

சென்னை: மத்திய தொலைத் தொடர்புத் துறையும், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் அறிவியல் கழகமும் இணைந்து இலவச "தமிழ் மென் பொருள் கருவி'களை வெளியிடுகிறது. வரும் 15ம் தேதி நடைபெறவுள்ள இந்த விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு தமிழ் மென் பொருள் கருவிகளை வெளியிடுகிறார்.

தமிழ் மொழியில் இலவச மென் பொருள் கருவிகள் வெளியிடப்பட உள்ளன. இதில், 50 திறந்த வகை மென் பொருள்களும், 100க்கும் மேற்பட்ட உண்மை வகை மென் பொருள்களும் அடங்கும். வெகு விரைவில் இதர இந்திய மொழிகளிலும் இலவச மென் பொருள்கள் வெளியிடப்பட உள்ளன.

இந்த மென் பொருட்களில் "ஒளி எழுத்து உணர்தல், சொற் களஞ்சியம், சொல் திருத்தி' ஆகியவை அடங்கும். மைக்ரோசாப்ட் சார்பிலும் தனியாக தமிழ் மென் பொருள் வெளியிடப்பட உள்ளது.

இந்தியாவில் கம்ப்யூட்டர் உபயோகத்தில் இந்தி அல்லாத மற்ற இந்திய மொழி ஒன்றில் இலவச மென் பொருள் அறிமுகப்படுத்தப்படுவது ஒரு மைல்கல் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியீட்டு விழா சென்னை பார்க் ஷெர்டன் ஓட்டலில் வரும் 15ம் தேதி மாலை ஐந்து மணிக்கு நடைபெறுகிறது.

இலவச தமிழ் மென் பொருளை தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிடுகிறார். மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் விழாவிற்குத் தலைமை தாங்குகிறார். விழாவில், ஜி.கே.வாசன் எம்.பி., இந்து நாளிதழ் ஆசிரியர் என்.ராம், மைக்ரோசாப்ட் தலைவர் ரவி வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

**** **** **** **** **** ****
அனைவருக்கும் பார்த்திப வருட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

- அலெக்ஸ் பாண்டியன்
13-ஏப்ரல்- 2005