Monday, April 18, 2005

குன்னக்குடி எக்ஸ்பிரஸ்

வார இறுதியில் சந்திரமுகியா மும்பை எக்ஸ்பிரஸா என வார மத்தியில் யோசித்துக் கொண்டிருந்தபோது சரி பார்த்துக் கொள்ளலாம் என இருந்துவிட்டேன். புத்தாண்டின் மறுதினம் இணையத்தில் பல இடங்களில் விமர்சனம் படித்தபிறகு இரண்டுமே அப்படி ஒன்றும் அவசரமில்லை என தோன்றியது.

ராமநவமி கச்சேரிகளில் ஞாயிறன்று குன்னக்குடி ஆர்.வைத்யநாதனின் வயலின் கச்சேரிக்குச் செல்ல வாய்ப்பு. விட மனசில்லை. சுமார் 5.45க்கே ஆஜராகிவிட்டோம். அப்போது ஓர் இளம்பெண் பாடிக்கொண்டிருந்தார். மணி ஆக ஆக அரங்கம் (பெங்களூர் ·போர்ட் ஹைஸ்கூல் மைதானம்) நிரம்ப, சுட்டிப்பெண் தன்னுடைய கச்சேரியை நிறைவு செய்ய, வந்தனர் குன்னக்குடி அண்ட் பார்ட்டி.

Photo Courtesy: Thanks to The Hindu

இப்போதெல்லாம் குன்னக்குடி எங்கு கச்சேரிக்குச் சென்றாலும் அவரது பக்க வாத்ய வித்வான்கள் ஒரே செட் - மிருதங்கம், கஞ்சிரா, கடம், தம்புரா, மோர்சிங், தபேலா மற்றும் அவரது ஆஸ்தான சவுண்ட் சர்வீஸ் சிஸ்டம்.

குன்னக்குடியாரின் கச்சேரியில் இன்னோர் சிறந்த விஷயம். வாசிக்கப்போகும் பாடலின் விபரங்களை தெரியப்படுத்துவது. எம்மைப் போன்ற சாதாரண இசை ரசிகர்களுக்கு இது மிகவும் உபயோகமாக உள்ளது. மேலும் அவர் தன்னுடைய ஆஸ்தான சவுண்ட் சிஸ்டம் ஏற்படுத்திக்கொள்வது ஒலியின் துல்லியத்திற்கும், எக்ஸ்ட்ரா எஃபெக்டுக்கும் உதவுகிறது. அதே மாதிரி பக்க வாத்திய வித்வான்கள் அனைவரையும் சிறப்பாக அறிமுகப்படுத்திய பிறகே நிகழ்ச்சியைத் துவங்குகிறார்.

6.45க்கு வணக்கத்துடன் பேசிய குன்னக்குடியார், கன்னடத்தில் சில வார்த்தைகள் பேசத்தெரியும் எனகூறி மக்களை பரவசப்படுத்தினார். பத்மஸ்ரீ பட்டம் பெற்ற பிறகு கர்நாடகத்தில் நடக்கும் முதல் கச்சேரி எனவும், ராமநவமி கச்சேரிகளை நடத்தும் (மறைந்த) எஸ்.வி.நாராயணஸ்வாமி ராவ் அவர்கள் நிறுவனத்தார் நடத்தும் கச்சேரிகளில் கடந்த 25 ஆண்டுகளாக பங்கு பெறுவதாகவும் கூறி முதலாவதாக கம்பீர நாட்டையில் 'ஞான விநாயகனே'வைத் தூண்டிலிட்டார்.

நீங்கள் தமிழகத்தில் ரயிலில் பயணம் செய்வதுண்டா ? பாஸஞ்சரில் ? மெயிலில் ? ஆர்டினரி (?) எக்ஸ்பிரஸில் ? வைகை அல்லது பல்லவன் எக்பிரஸில் ? அடிக்கடி இப்படியாப்பட்ட ரயில்களில் பயணம் செய்திருந்தால், வைகை அல்லது பல்லவனில் எழும்பூரில் கிளம்பி சில நிமிடங்களில் வேகமெடுக்கும் வைகை எக்ஸ்பிரஸ் மாதிரியான வண்டிக்கு வித்தியாசம் தெரியும். தட தட வென வண்டி செல்லும் வேகத்திற்கு உங்கள்
உடல் ஈடுகொடுக்க கொஞ்சம் நேரம் ஆகும்.

அதே போல மற்ற சங்கீத கச்சேரிகளைக் கேட்டுவிட்டு (ஆடியோ அல்லது நேரில்), குன்னக்குடியாரின் கச்சேரியில் உட்கார்ந்தால் முதல் பாடலிலேயே வைகை எக்ஸ்பிரஸ் வேகம் தான். அவரின் வயலின் வில்வித்தை மற்றும் அதிலிருந்து எழும்பும் நாதம், உங்களை திடுமென்று வேறு ஒரு தளத்திற்கு அழைத்துச் செல்லும்... அதெல்லாம் அனுபவித்தால் தான் தெரியும். பலமுறை குன்னக்குடியாரின் கச்சேரிகளை நேரில் கேட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் இந்த அனுபவம் ஒரு வித சிலிர்ப்பு தான். ப்யூரிஸ்ட் போன்ற சங்கீதத்தின் மிக நுணுக்கங்கள் தெரிந்த பலரும் இந்த எக்ஸ்பிரஸ் வேக ஆட்டத்திற்கு வருவதில்லை. சுனில் காவஸ்கர் மற்றும் விஸ்வநாத் ஆட்டங்களின் ரசிகர்கள், ஷாஹித் ஆ·ப்ரிடி அல்லது சேவாக் ஆட்டத்தை உயர்வாக எண்ணமாட்டார்கள். ஆனால் ரசிகர்களின் விருப்பம் தெரிந்து பல வருடங்களாக கோலோச்சி வரும் குன்னக்குடியாரின் நாதத்திற்கு பலர் அடிமை.

எழும்பூரில் கிளம்பிய அதிவேக எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் சென்று நின்று, கொஞ்சம் இளைப்பாறி, பின்னர் மீண்டும் அதிவேகத்தில் செங்கல்பட்டு அல்லது திண்டிவனம் செல்லுமல்லவா ? அதே மாதிரி கம்பீர நாட்டைக்குப் பிறகு அமிர்தவர்ஷினியைக் குழைத்து (ஞாயிறன்று மழை வரவில்லை!) மலயமாருதத்தில் இழைத்து, கமாஸில் ரசிகர்களைக் கட்டிப்போட்டு ஒரு வித வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது, எதிர் திசையில் ஒரு ரயில் வந்தால், ஏதோ ஒரு கிராமத்து ஸ்டேஷனில் கிராஸிங்குக்காக சிக்னலில் வண்டி நிற்குமே அதே மாதிரி நடுவில் ஒரு இடைவெளி.

ஆர்ட் ஆ·ப் லிவிங், குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் அரங்கத்திற்கு வர, அவருக்கான பூர்ண கும்ப மரியாதைகள், பொன்னாடை (குன்னக்குடிக்கு குருஜி போர்த்தினார், குருஜிக்கு நிகழ்ச்ச்சி அமைப்பாளர்கள்), சம்பிரதாயப் பேச்சு. ரவிஷங்கர் தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊர்க்காரர். தற்போது தமிழ்நாட்டிலும் பிரபலமாகி வரும் பக்தி மார்க்கம். குன்னக்குடியாரின் வயலின் இசை கேட்க அமர்ந்தார். சிறிது நேரத்திற்குள், அவரை ஒவ்வொருவராய் தொணதொணத்து, சில நிமிடங்கள் மட்டும் கேட்டு பின்னர் சென்றுவிட்டார்.

எதிர்திசை ரயில் சென்றவுடன், நமது எக்ஸ்பிரஸ் ஒரு புது உத்வேகத்துடன் கிளம்பும். விட்ட நேரத்தைப் பிடிப்பதற்காக. அப்படி ஒரு வேகத்தில் ஹிந்தோளத்தில் 'ஸாமஜ வரகமானவை' குழைத்துக் கொடுத்தார். அடுத்து அசாவேரியும், பின்னர் 'ஜகஜனனி' பாடலும் இசைத்து வண்டி விழுப்புரம் வந்து இன்ஜின் மாற்ற கொஞ்சம் ஓய்வெடுக்க, தற்போது ரசிகர்கள் சாய்ஸ்.. மெயின் ஐட்டம் - சங்கராபரணம், ஆபேரி, சண்முகப்ரியா எது வேண்டும் என
குன்னக்குடியார் கேட்க - ரசிகர்கள் ஆபேரி என குரலிட, சங்கராபரணமும், சண்முகப்ரியாவும் ராகமாலிகாவில் வரும் என சொல்லி, ஆபேரியை ஆலாபனை செய்ய ஆரம்பித்தார்.

தில்லானா மோகனாம்பாளில் ஜில் ஜில் ரமாமணி நாதஸ்வர வித்வான் சண்முகசுந்தரத்திடம் ஒரு கேள்வி கேட்பார் 'ஒங்க நாயனத்துல மாத்ரம் எப்படித்தான் அப்படி ஒரு ஜவுண்ட் வருதோ' என. அதே மாதிரி மற்ற எல்லா வயலின்களையும் விட, குன்னக்குடியாரின் வயலினில் மாத்திரம் எப்படி அந்த எக்கோ எ·பெக்டும், சவுண்டும் வருகிறது என்பது அவருக்கே தெரிந்த சூட்சுமம். மற்ற எல்லா பாடகர்கள், இசைக் கருவிகள் வாசிக்கும் வித்வான்களுக்கு இளைய தலைமுறை / அடுத்த தலைமுறை வித்வான்கள் வந்துவிட்ட நிலையில், குன்னக்குடியார் பாணிக்கு இன்னமும் ஒரு அடுத்த தலைமுறை வரவில்லை என்பது ஆச்சரியம்.

சுமார் பத்து நிமிட ஆலாபனையில், ஆபேரியில் நமக்கு எங்கேயோ கேட்ட பாடலாக இருக்கே என்பது போன்ற பல பாடல்களின் தாக்கம் வரவழைத்து, நகுமோவைத் துவக்க, சுமார் 35-40 நிமிடங்கள் ரசிகர்கள் இசை என்கிற இன்ப வெள்ளத்தில் நீந்தினார்கள் என்றே சொல்லவேண்டும். நடுவில் சில நிமிடங்கள் வயலினின் தூண்டில் இல்லாமலேயே வெறும் விரல்களால் நிமிண்டி வீணை மற்றும் சிதாரின் ஒலிகளில், ஸ்வரங்களை இசைக்க ஒவ்வோர் முறையும் உச்ச ஸ்தாயிக்கும், கீழ் ஸ்தாயிக்கும் ஒலிகள் சென்றுவர, அவையில் கரகோஷம். பாடலை முடிக்குமுன் எல்லா துக்கடா பாடல்களையும் உள்ளே கொணர்ந்து பின்னர் நகுமோவுடன் இணைத்து வாசித்துக்கொண்டிருக்கையில் இன்னோர் பெரிய தலை அவைக்கு வர... 'முன்னாள் பிரதமர் தேவ கவுடா மற்றும் பட்டாளம்' அவர்களுக்கு நமஸ்காரா என்று நகுமோவை ஒரு வழியாக நிறைவு செய்தார்.

நகுமோவின் நிறைவுக்கு இடையே வாசித்த துக்கடாக்களில், தூர்தர்ஷனின் ஆரம்பகால துவக்க இசை, 'வருவாண்டி தருவாண்டி மலையாண்டி', ஜகதோத்தாரண போன்ற ஹிட் பாடல்களைக் கொண்டுவர, பல கன்னட மாமிகள், இவையெல்லாம் ஏதோ தெரிந்த பாடல் மாதிரி இருக்கு என பேசிக் கொண்டனர். தமிழ் ரசிகர்கள் சிலர் தான் பாடல்களை அடையாளம் கண்டு கொண்டனர். குன்னக்குடி எக்ஸ்பிரஸ் குன்னக்குடி சென்றடைந்ததா காரைக்குடி சென்றதா என நிகழ்ச்சியின் இறுதி பாகத்தைக் கேட்க இயலாமால் (நேரமாகிவிட்டதால்) கிளம்ப நேர்ந்தது.

நீங்கள் விரும்பும் இசை எதுவாக இருக்கட்டும் - அவற்றில் சிறந்த விற்பன்னரின் நேரடி நிகழ்ச்சியை சுமார் 3 மணிநேரம் ஓரிடத்தில் அமர்ந்து, கண்டு கேட்டால் வரும் ectasy இருக்கிறதே அது அனுபவித்தால் தான் தெரியும்... ஏறக்குறைய சொர்க்கம்..!

வாழ்க குன்னக்குடியார்..! வளர்க அவர்தம் புகழ் ..!

****** ****** ******

ப்யூரிஸ்டுகளே... உங்களுக்கும் விருந்து உண்டு.. இந்த வாரம் டி.என்.கிருஷ்ணன் கச்சேரி 22-April வருகிறது.. நீங்களும் ரசியுங்கள்.

***** ****** *****
ஆபேரியில் அமைந்த சில திரைப்பாடல்கள் என தமிழ் திரை இசைப்பக்கம் காட்டும் சுட்டிகள்

- சிங்காரவேலனே தேவா (கொஞ்சும் சலங்கை)
- இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை (திருவிளையாடல்)
- சின்னஞ் சிறு வயதில் (மீண்டும் கோகிலா)
- ராகங்கள் பதினாறு உருவான.. (தில்லு முல்லு)
- பூவே பூச்சூடவா.. (பூவே பூச்சூடவா)
- கங்கைக் கரைத் தோட்டம் (வானம்பாடி)
- குருவாயூரப்பா குருவாயூரப்பா.. (புதுப் புது அர்த்தங்கள்)
- வாராயோ வெண்ணிலாவே (மிஸ்ஸியம்மா)


- அலெக்ஸ் பாண்டியன்
18-ஏப்ரல்-2005