Saturday, June 18, 2005

வயது வந்தவர்களுக்கு மட்டும்..!

தமிழ்.நெட் முத்துக்கள்: சிலம்பு மடல் - 16

இந்த சிலம்பு மடல் -16 மாதிரிக்கு மட்டுமே - சிலம்பில் காமரசம் எப்படி கையாளப்பட்டுள்ளது - அதனை திரு.இளங்கோவன் எவ்வளவு அருமையாய் நமக்கு எடுத்துக் கொடுத்துள்ளார் என்பது படித்தால் தான் புரியும். காமத்தையும் இவ்வளவு அழகாக தமிழில் சொல்ல முடியுமா என்பதற்கு இந்த மடல் ஒரு எடுத்துக்காட்டு.

யாம் பெற்ற இன்பம் பெறுவீர் வலைப்பதிவர்காள்...! (இது வயது வந்தவர்களுக்கு மட்டும் ;-)

என்னடா இது சிலம்பு மடலுக்கு சிம்பு படமா என்று யோசிக்கிறீர்களா ? அவர்
பெயரும் சிலம்பரசன் தானே ;-)


Photo courtesy: MohanKumar's Globaltamil.com

- அலெக்ஸ் பாண்டியன்
17-June-2005

------------------------------
நன்றி: தமிழ்.நெட் ; திரு.நாக.இளங்கோவன்
23-ஆகஸ்ட்-1999

சிலம்பு மடல் - 16

பத்துடன் ஆறு!
பத்தைப் பெற்றெடுத்த அறுபதும் காமுறும் பதினாறு!


இளந்தென்றல் வீசும் இராக்காலம்;
மீதி நிலாவை மறைத்துவிட்டு,
பாதிநிலா பார்த்து ரசிக்க
கள்ளஒளி காட்டுகின்றது காதலர்பால்:.

ஒளியுமில்லை இருளுமில்லை முற்றத்தில்;

மறைவை மறந்தவரை மறக்கடிக்கும் நிலவொளி!
நிலாவின் கள்ள ஒளி!

புத்தம் புது மங்கை அவள்!
காதலைக் காதலனிடம் காட்டிவிடத் துடிக்கும் மனம்;
உடலோடு ஒன்றாகத் துடிக்கும் உள்ளம்;
உள்ளத்தின் வாசலிலே நாணத்தின் காவல்,
எட்டிப்போன கால்களைக் கட்டிப்போட,
நாணிநிற்கும் நங்கை!

நாணத்திற்குதான் எத்தனை வேலை!!
தூதுபோனது தலைவனுக்கு;
"தொட்டுத் தீண்ட மாட்டாயா? "
சொன்னது அவனிடம்!

தொட்டு விடப்போகின்றேன்!
தொட மட்டுமா வந்தேன்?

அவளில் நிலைகுத்தி நிற்கும் என் கண்களின்
கட்டளைக்கு நான் காத்து நிற்பது அவளுக்குத் தெரியவேண்டாம்!
தொட்டு விடும் தூரத்தில் அவளை அள்ளி விழுங்க என் கண்களுக்கு
இயலாது போகும்;

முகத்தின் ஒவ்வொரு இடமும் அசைவது
அவள் நாணத்தால்; நானறிவேன்;
அச்சுவையை நான் பருகிவிட்டுத்தான் பக்கம் போவேன்!

கால்கள் இடும் நாணக்கோலத்தில்
என்னை எழுதுகிறாளே;
என் உடலெங்கும் குறுகுறுக்கும் அந்த இன்பத்தில்
மெல்ல மெல்ல நனைகிறேன்;

அவள் கைவிரல்கள் ஒன்றையன்று
கட்டிப் பிடிக்கின்றன; பார்க்கிறேன் நான்!

தொடவேண்டி நின்றதால் இருந்த இன்பம்
தொட்டுவிட்டால் எனக்குக் குறைந்திடுமோ ?
இந்த இன்பத்திலேயே இருந்துவிடலாமா?
முதலின்பம் காணப்போனவள் இன்பத்தின் எல்லை
அதுவென்றே நினைக்கிறாள்.
அவளின் மனதிற்குள்
அச்சம் தோன்றியதை அவனன்றி ஆரறிவார் ?

இன்பப் பிச்சைக் கேட்டுக் கரங்களை நீட்டினான்!
பற்றிக்கொள்ள கொம்பின்றி தத்தளித்தக் காமக் கொழுந்து,
கரங்களைப் பற்றி முழுமாரில் மறைத்துக் கொண்டது முகமதனை!

முகத்தின் வியர்வை அரும்புகள் மட்டுமே
இடைவெளி கொடுத்தன அவளுக்கும் அவனுக்கும்!

முதன்முதலில் தொட்டவுடன்
அவன் நெஞ்சிற்குப் பொட்டிட்டது அவள் நெற்றி!

அக்கணமே,
அழுந்தப் பதித்தும் இன்ப அசைவுகளால்
இழுத்துக் கொண்டன குங்குமக் கோடுகள்!

இன்பம்தான் அவனுக்கு!
நெற்றிச் சுட்டியும் அழுந்திப் பதிந்தபோது;

மங்கையின் பற்குறி படுமுன்னே அவள் சூடாமணிக்கு அவசரம்
அவனைத் தீண்டிவிட!

உற்றவனின் நெஞ்சத்தில் குறிவைத்த சுட்டிமேல்
பொறாமை கொண்டாள்!

உள்ளத்தில் தோன்றும் பொறாமையை மறைத்துச்
செயலாற்றி வெற்றி கொள்வதில்தான் பெண்மைக்கு ஈடு ஏது?

மெல்ல முகத்தைத் தூக்கி மன்னவனைப் பார்த்துக் கொண்டே
தன்னைப் புனைந்திருந்தவற்றில்
சுட்டியைக் கழற்றி எட்டிப் போட்டாள்!

அவள் அவிழ்த்த முதல் ஆடை அது.
அவனுக்கு என்ன புரிந்ததோ?

சுட்டியை நீக்கியதும் ஒற்றைக் கரும்பட்டு மயிரொன்று
தென்றலின் செயலால் காதலன் முகத்தில் முத்தமிட்டது;

மூக்கிலும், வாயிலும், குழிவிழுந்த கன்னத்திலும், கண்களிலும்
நெருடி விட்ட அவளின் ஒற்றை மயிர்ளவன் காதுக்குள்ளும்
காமக் கதை சொன்னது!

தன் காதலனை தான் முத்தமிடுமுன் இந்த மயிரும்
முந்திக் கொண்டதே? சூடாமணியைத் தூர எறிந்தது
போல் இம்மயிரை எறிய முடியாதே! சிரித்துக் கொள்கிறாள்!

அந்த மென்மையில் மதிமயங்கியவன் முனகியதைத் தவிர
வேறென்ன செய்ய முடியும்.

ஒற்றை மயிரில் மயங்கியவன் அவளின் கால் வரை கரு நதியாய்
அலைபாயும் அவள் கூந்தலை முகர, கருமேகவிளிம்புக் கதிரவன்போல்
முல்லையும் மல்லியும் அடர்ந்து கிடந்தன அவள் தலையில்.

இதே மலர்களைக் கடவுளர் சூடின் ஒரு வாசமும்,
மங்கையர் சூடின் வேறு வாசமும் வருவதேன்?
கடவுளைக் கட்டிப் பிடித்தாலும்
இத்தனை இன்பம் கிடைக்குமா?

விடைகாண முடியவில்லை அவனால்!
மயிருக்கு வாசம் உண்டோ அறியான்; ஆனால்
பெண்மையின் வாசத்தை அவனால் மறுக்க முடியுமா?

பெண்மனம் அவனுள் புதைந்து கிடக்க
பெண்மணத்தை முகர்வதில்தான் எத்தனை இன்பம்;

எவர்தான் அதை வெறுப்பார்! தூய பெண்ணில் காமம்
உண்டாகும் போது வரும் மணத்தை அல்லது நாற்றத்தை
எந்த ஆடவன் வெறுத்திருக்கக் கூடும்; அவ்வாசமும்
மலர்களின் வாசமும் இணைந்த காதல்மேடையன்று
களியாட்டத்துக்கு காத்திருந்தது;

கூந்தலுக்குள் விரல்கள் துளையிட்டு பின்னங்கழுத்தை
வருடி விட, தலையை மேலும் நிமிர்த்தி,கண்கள் சொருகி,
நிறத்தில் செம்பருத்திப் பூவொத்த மென் பட்டு இதழ்களை
மெல்லப் பிரித்தாள் அவளையும் அறியாமல்; இதழ்கள்
பிளந்தது இதழுக்காகத்தான்;

சீச்சீ! இது என்ன வேதனை!
என் இதழ்கள் சுவைக்கவும் வேண்டும்!
சுவைக்கப் படுதலும் வேண்டும்;
எது எனக்கு முதலில் கிடைக்கும்? இது சொர்க்கமா? நரகமா?
இத்தனைச் சிக்கலா காம வேள்வியில்?;
வெப்பப் பெருமூச்சொன்று வெளியான விநாடி
'சிவபெருமானின் பிறையை ஒட்டியது உன் நெற்றியின் அழகு!'

"பெரியோன் தருக திருநுதல் ஆகஎன;"

என்று காதலன் சொல்ல, அணைக்க வேண்டிய இதழ்கள் திர்த்தவையும் அவளை மயக்கத்தில் ஆழ்த்தியபடியே இருக்க காதலன் அவள் இதழ்களில் ஓடிய வரிகளில் காம வெள்ளத்தை
பருகுதல் வேண்டி ஆங்கு இணைகிறான்; மென்மைக்கு வன்மைதான் பிடிக்கும் போலும்;

இவனின் கீழுதடு அவளின் மேலுதட்டைப் பருக, அவளின் கீழுதடு அவனின் கீழுதட்டுடன் ஏதெதோ செய்ய முயன்று தோற்றுக் கொண்டு இருந்தது;

இவனை அவள் பருக அவனை இவள் பருக நாழிகைகள் நகர்ந்து கொண்டிருக்க, குங்குமம் மெழுகிய கொங்கைகள் வெண்பட்டுக் கச்சையிடம் கெஞ்சிக் கிடந்தன; விடுதலை வேண்டி!

வியர்வை மொட்டுக்களால் கொங்கை விலகிய குங்குமமும் சந்தனமும் கச்சையை நனைத்து கொங்கையின் அசைவுக்கெல்லாம் அழகு சேர்த்துக் கொண்டிருந்தது; இருப்பினும், கொங்கையின்
இச்சைக்கு, கச்சையின் இடைஞ்சலைக் கண்ட காதலன் உதவிக்கு தன் கரங்களைக் கொடுத்தான்; கச்சை நகர்ந்ததும் தாங்கிப் பிடித்துக் கொண்டான் தன் கைகளினாலே!

"திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்
ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல் ?"

தாங்கிப் பிடித்த கைகள் நங்கை முலைமேல் படர்ந்திருந்த ஒற்றை வட முத்து மாலையால் தடைகளை உணர, தவித்துப் போனான்.

திருமுலைகள் மேலே தொய்யில் எழுதியதோடல்லாமல் இந்த மாலைகளையும் அணிவிப்பதுவும் ஏனோ என்று அலுத்துக் கொள்கிறான்; என் கரங்கள் கொள்ளும் இனிமைக்கு இன்னல் விளைவிக்கும் மாலைகளே அகன்று போங்கள் என்று அகற்றி விட்டு முழு முலைகளிடை முகம் புதைத்தான்;

கெஞ்சிய கொங்கைகள்
கொஞ்சின அவன் முகத்தோடு; கொங்கையின் கண்களும் அவனது
கண்களும் பார்த்துக் கொள்ளும் அவ்வப்போது; பார்த்தது தீர
அவனின் கண்கள் கொங்கையின் கண்களைப் பொத்தி விட்டு
விளையாடி மகிழ்ந்ததால் கொங்கைகளுக்கு கொண்டாட்டம்!

இருகனிச்சுவையில் முக்கனிச்சுவையை இகழ்ந்து நகைத்தான்
இதயத்துள்: இருகரம் கொண்டு இருகனி மறைக்க முயன்று
தோற்றுத் துவண்டு போனான்; வென்று விட்ட ஆணவம் அந்த
முலைகளுக்கு! வெற்றிக் களிப்பில் கொங்கைகள் கொஞ்சம்
இளகிவிட இருவரின் மூச்சின் வெப்பமும் வேகமும் இன்ப வேதனையின்
எல்லைகளை அகற்றிக்கொண்டே இருந்தன;

பற்களுக்கும் நகங்களுக்கும் பெருவிருந்து செய்தனர் இருவரும்;
அவள் நகங்கள் அவன் முதுகில் கோலம் போட்டபோதெல்லாம்
அவளின் வளையல்கள் இசையோடு ஆடி மகிழ்ந்தன;

மெல்லிடையாளின் இடை நோகாதிருத்தல் வேண்டி
சிரம் தூக்கி இதழோடு இதழ் பெய்து,
ஒருகரம் முலைதாங்க
மறுகரம் அவள் புறம் தீண்ட,
அரைச்சக்கரமாய் ஆகிப்போனாள் பின்னோக்கி வளைந்து;
மயிலின் முதுகைத் தடவியது போல அவளின் புறத்தை தடவியதும்
மறந்துபோயினர் அவர்களை அவர்கள்;

இடையோடு உறவாட உள்ளங்கைகள் முனைய
மேகலைதான் மெல்ல மறுத்துப் பார்த்தது:
புறத்தை பிடித்த கரம் சற்றே இறுகியதால் மேலும்
வளைந்தனள் மங்கை; மேகலையோ தெறித்துச் சிதறிட
மேகலை தாங்கிய ஆடைகளோ அகன்று போயின:
அகன்று கிடந்தாள் அகன்ற அல்குல் காட்டி!
சிரித்துக் கிடந்த பெண்மையை
வெறித்துப் பார்த்தது ஆண்மை!
வாழையத்த தொடைகள் கொண்டாள்
வாரிவழங்கினாள் வஞ்சனையின்றி,
மாவின் சுவையையும், பலவின் சுவையையும், வாழின் சுவையையும்;
சின்னச் சின்ன அசைவுகளும் சிக்கலை ஏற்றிவிட
கால்களோடு கால்கள் பிணைந்தனர்;
கரங்களோடு கரங்கள் பிணைந்தனர்:
அப்படியே முதுகுகளிலும் கோலமிட்டன அந்த நான்கு கரங்கள்;
வியர்வை ஆறாகப் பெருகிட அதில் வழுக்கிய கரங்களும் கால்களும்
சீறிச்சினந்து பிணைந்து விழுந்தன; பிணையல் பாம்புகள் போல்!!

நின்றுவிடப் போகுதுயிர், தின்று விடு இப்போதே!
கூனிவிடப் போகுமிளமைக்கு தீனியிடு இப்போதே!
வற்றிவிடும் செல்வத்தை வெட்டியெடு இப்போதே!
சுற்றிவரும் பூமி நின்று விடுமுன்னே, வற்றிவிடட்டும் காமம்!
என்றதோர் வேகம்!

அவளின் வளையின் ஓசையுடன்,சிலம்பின் இசை சேர்ந்து,
இருவரின் முனகல் ராகத்தோடு,
இன்பத்தின் எல்லையை சிறிது சிறிதாக அடைந்து கொண்டிருந்தனர்
கோவலனும் கண்ணகியும்!

"தூமப் பணிகளன்றித் தோய்ந்தால் எனஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து-நாமம்
தொலையாத இன்பமெல்லாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று.


அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, June 17, 2005

த.நெ.மு: பாசுர மற்றும் சிலம்பு மடல்கள்

தமிழ்.நெட் முத்துக்கள்: பாசுர மற்றும் சிலம்பு மடல்கள்

ஏற்கனவே எழுதியிருந்தபடி தமிழ்.நெட்டில் பல ஜாம்பவான்கள். பல பெரிய தலைகள். பல நல் முத்துக்களும் உண்டு. ஜெர்மனி (தற்போது தென் கொரியா) நா.கண்ணன் பாசுர மடல்கள் எழுதிவந்தார். மிகவும் ரசித்த தொடர் அது.
http://www.angelfire.com/ak/nkannan/Madals/madalindex.html

அதைப் போல நான் தமிழ்.நெட்டில் ரசித்த இன்னொரு தொடர் -
சென்னை. திரு. நாக.இளங்கோவனின் சிலம்பு மடல்கள். இவை வெளியான காலகட்டங்களில் இது சம்பந்தமான உரையாடல்களும் நன்றாக இருக்கும். சுலைமான் அண்ணன், சடையன் ஷாபு, ஆசீப் மீரான் மற்றும் இன்ன பிறரும் நடுவே புகுந்து கலாய்ப்பார்கள்.

யாமறிந்த புலவர்களிலே - கம்பனைப்போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல் என பாரதி பாடினார். இதில் கம்பனைப் பற்றி பலரும் எழுதி வந்தனர். வருகின்றனர். தற்போது இணையத்து அண்ணாவாம் ஹரியண்ணா பல்வேறு கம்பரசக் கட்டுரைகள் இட்டுள்ளார். வள்ளுவமும் குறளும் இணையம் முழுவதும் வியாபித்துள்ளன. சிலம்பு பற்றி கொஞ்சமே காணக் கிடைக்கலாம் (நான் அதிகம் தேடி/படித்ததில்லை..!)

சிலப்பதிகாரத்தின் சுவையை இன்னும் கூடுமாறு சில பகுதிகளை எடுத்து எழுதியதில் திரு.இளங்கோவனின் பங்கு முக்கியமானது. இந்தக் கட்டுரைத் தொடர் புத்தகமாக வெளிவந்தால் நன்றாக இருக்கும். (சிலம்பு மடல்கள் தவிர - திரு.இளங்கோவன் மற்ற தலைப்புகளிலும் நிறைய எழுதியிருக்கிறார். தேடினால் கிடைக்கும்!) - Book has been released - thanks to Vasan for the info.

NOTE: அடுத்த பதிவு வயது வந்தவர்களுக்கு மட்டும் ;-)

- அலெக்ஸ் பாண்டியன்
17-ஜூன் 2005

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

நன்றி: தமிழ்.நெட் ; திரு.நாக.இளங்கோவன்
Jan-1999
சிலம்பு மடல்கள்

<முன்னுரை>

தமிழர் திருக்காலத்தில் பண்டை இலக்கியங்கள் இணையத்தில் தவழுவது மகிழ்ச்சிக்குரியது. சிலம்பு ஒரு மாபெரும் காப்பியம். இதில் விளையாட எனக்கு அனுபவமோ, பெரிய அறிவோ கிடையாது. இருப்பினும் ஒரு முயற்சியாக என்னைக் கவர்ந்த இடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அவ்வப்போது ஜெய்பீ யின் கைகளைப் பிடித்து நடந்து வருவேன் :-)

இணையத்தோர் படித்து விட்டுத் தங்கள் கருத்துக்களைக் கூறினால் உதவியாயிருக்கும்; பிழையின் திருத்தவும். தொடர்ச்சியாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எடுத்து எழுதுவதே என் நோக்கம். அதுமட்டுமல்ல தமிழகத் தமிழ்ச் சான்றோர் பேரவையின் அமைப்பாளராகவும், பல்வேறு அரசியல் கலப்பற்ற தமிழ்க் குழுக்களின் ஒருங்கிணைப்பாளராகவும், பல நூல்கள் எழுதியவரும், நான் மற்றும் என்னைப் போன்றோர் விரும்பிப் படிக்கும்படி சிலப்பதிகாரத்துக்கு எளிமையான, சிறந்த தெளிவுரை இயற்றிய *சிலம்பொலி சு.செல்லப்பனார் கடந்த மாதம் இயற்கை எய்தினார். அவர் தம் சிறப்பை நினைவு கொள்ளும் வகையிலும் இச் சிறு தொடரை எழுதுகிறேன். மூலத்தை எழுதி என் கருத்தை எழுதுகிறேன். என் புரிந்துணர்விற்கு அடிப்படை அவர்தம் தெளிவுரை யாயினும், என் சிறுமதியால் சிக்கலுறும் கருத்துக்களுக்கு சி.சு.செ எந்த வகையிலும் பொறுப்பில்லை.

சிலம்பொலி.சு.செல்லப்பா அவர்களின் புகழ் தமிழ் உள்ள வரை நிலைத்து நிற்கட்டும்.

<முன்னுரை>

மேலும் படிக்க இந்த சுட்டிகளைத் தட்டவும். (Use TSCII fonts - from http://www.tamil.net/tscii/tools.html)

சிலம்பு மடல் - 1
சிலம்பு மடல் - 2
சிலம்பு மடல் - 2.1
சிலம்பு மடல் - 3
சிலம்பு மடல் - 4
சிலம்பு மடல் - 5
சிலம்பு மடல் - 6
சிலம்பு மடல் - 7
சிலம்பு மடல் - 8
சிலம்பு மடல் - 9
சிலம்பு மடல் - 10
சிலம்பு மடல் - 11
இந்திர விழா
சிலம்பு மடல் - 12
சிலம்பு மடல் - 13
சிலம்பு மடல் - 14
சிலம்பு மடல் - 15
சிலம்பு மடல் - 16
சிலம்பு மடல் - 17
சிலம்பு மடல் - 18
சிலம்பு மடல் - 19
சிலம்பு மடல் - 20
சிலம்பு மடல் - 21
சிலம்பு மடல் - 22
சிலம்பு மடல் - 23
சிலம்பு மடல் - 24
சிலம்பு மடல் - 25
சிலம்பு மடல் - 26
சிலம்பு மடல் - 27
சிலம்பு மடல் - 28
சிலம்பு மடல் - 29
சிலம்பு மடல் - 30
சிலம்பு மடல் - 31
சிலம்பு மடல் - 32/33

அன்பின் நண்பர்களே, கடந்த 99ஆம் வருடம் தைமாதம் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாய்த் தொடர்ந்த என் சிலம்பு மடல்கள் நிறைவடைகின்றன. ஆறுமாதத்தில் முடிக்கவேண்டும் என்று எழுத ஆரம்பித்து இடைவெளி விட்டு விட்டு இரண்டாண்டுகள் ஆகியிருக்கின்றன.

இந்த மடல்கள் என் புலமையின் வெளிப்பாடல்ல! கற்றல் என்ற முயற்சியை உங்களோடு பகிர்ந்து கொண்டேன்! அவ்வளவே!

இதை எழுத நான் ஆதாரமாகக் கொண்டவை நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாராவர்களின் சிலப்பதிகார மூலமும் உரையும், மற்றும் சிலம்பொலி சு.செல்லப்பனார் அவர்களின் சிலப்பதிகாரத் தெளிவுரையும் ஆகும். என் சிறு மதியால் சிக்கலுற்ற கருத்துக்கள் என்னவையே!

எனக்கு உதவிசெய்த நூற்கள் மேற்சொன்னவை என்றால் எனக்கு ஊக்கம் அளித்தது, ஆரம்பமுதல் இன்று வரை என் மடல்கள் அனைத்தையும் பொறுமையுடன் படித்து என்னை ஊக்கப்படுத்திய இந்த தமிழிணைய மற்றும் தமிழுலக நண்பர்கள்தான்.

நான் எழுத மறந்த போதெல்லாம் என்னைத் தட்டி எழுப்பிவிட்ட நண்பர்களுக்கும் குறிப்பாக சுலைமான் மற்றும் ஆசிப், நான் எப்பொழுது எழுதினாலும் ஏற்றுக்கொண்டு பாராட்டி உற்சாகம் அளித்த என் அன்பிற்குரிய நண்பர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றிகளும் ஆயிரமாயிரம்.

அன்போடு என் மடல்களையும் ஏற்றுக் கொண்டு முழுதாய் ஒன்றை முடிக்க வைத்த உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை! எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும், குறைகள் இருந்தாலும் ஒன்றை செய்து முடிக்கும்போது அதனால் ஏற்படும் மனநிறைவே பெருஞ்சுகமாகும்.

தொடர்ந்து கொண்டிருந்தபோது எப்பொழுது முடியும் என்று இருந்த மனம், முடிந்தவுடன் ஏக்கம் கொள்கிறது எனக்கு! கணித்தமிழ் வளர்ச்சி ஏற்படாமல் இருந்திருந்தால் என்னால் இதை எழுதியிருக்க முடியாது! அவ்வகையில் இந்த இரு இணையங்களுமே என்னை கற்க வைத்தன என்று சொன்னால் இது மிகையாகாது.

கடந்த 99ன் தையிலே, இலக்கிய வளம் இணையத்திலே செழிக்க சங்க இலக்கியங்கள் சில படித்துக் கொண்டிருந்த நான், பெரியவர்கள் யாராவது சங்க இலக்கியங்கள் எழுதினால் நிறைய கற்கலாமே என்று கருதி அறிஞர் செயபாரதி அவர்களை எழுதக் கேட்க அவர், 'உன்னால் முடியுந் தம்பி' என்று சொல்ல அதையே கவிஞர் வ.ஐ.ச.செயபாலன் அவர்களும் சொல்ல இருவருமாய் என்னை எழுதத்தூண்டினார்கள். அதை நினைவுகூரும்போது சுகமான நினைவுகளாகின்றன.

இதை எழுதத் தூண்டுகோலாய் இருந்த அன்பிற்குரிய அறிஞர் மரு.செயபாரதி அவர்களுக்கும், கவிஞர் செயபாலன் அவர்களுக்கும் நன்றிகள் கூறி நிறைவு செய்கிறேன்.

வணக்கம்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
16-திசம்பர்-00
---------------------------------

A Missed Oppurtunity

A Missed Oppurtunity

எப்போதுமே சினிமா ஆர்வம் அதிகம் கொண்ட நம் தமிழர்களுக்கு மிகவும் அதிக அளவிலும் வேகமாகவும் செய்தி சொல்ல வேண்டுமென்றால் சினிமாவில் சொன்னால் போதும். பக் என்று பற்றிக் கொள்வார்கள். அது 'என் வழி தனி வழி','நான் ஒரு தடவைசொன்னா...', 'இக்கட சூடு' அல்லது 'தல' போன்ற விஷயங்களாயினும் சரி - உடையில் குறைக்கும் ·பேஷனாக இருந்தாலும் சரி.

இப்படி ஒரு மீடியம் இருக்கையில் (தற்போது தொலைக்காட்சியும்), ஆனால் யாருமே இதன் மூலம் தமிழில் இலவச செயலிகளும், எழுத்துருக்களும் கிடைக்கிறது, இணையத்தில் இருந்து இறக்கிக் கொள்ளலாம், தமிழில் எல்லாமே செய்யலாம் போன்ற செய்திகளை ஒரு திரைப்படத்தில் - விவேக், கவுண்டமணி (சில வருடங்கள் முன் வரை) அல்லது வடிவேலு, பார்த்திபன் அல்லது சூப்பர்ஸ்டாரோ, தமிழ்க் கலைஞர் விஜய்காந்த் போன்றோர் சுமார் 2 நிமிட காட்சி வைத்திருந்தாலே போதும் தமிழர்கள் கணினியில் தமிழ் பழகுவது அதிகரித்திருக்கும்... என் செய்வது..!

தமிழ் என் மூச்சு, தமிழ் என் உயிர், தமிழ் மண்ணுக்கு என் உயிர் என்றெல்லாம் சொல்பவர்கள் கணினியில் தமிழ் பரவ என்ன செய்திருக்கிறார்கள் ?

சுமார் 6 ஆண்டுகள் முன்பு 'காதலர் தினம்' திரைப்படம் வெளிவந்த போது நான் தமிழ்.நெட்டில் பகிர்ந்து கொண்ட ஆதங்கம் இன்றைக்கும் Valid என்ற முறையில் வருத்தம் தான் மிஞ்சுகிறது.

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

அன்பார்ந்த நண்பர்களே,

சமீபத்தில் பார்த்த 'காதலர் தினம்' படத்தில் இணையம் வழியாக இருவர் காதலிக்கும் கதை.

நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் முகமூடி போட்டுத்தான் (நம்ம இணையத்தாருக்கு விளக்கவேண்டுமா என்ன!) அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். Chat மென்பொருள் வாயிலாக உரையாட ஆரம்பிக்கிறார்கள். காட்சியில் கொஞ்சம் விளக்கமாகவே திரையில் எல்லாம் காட்டி ஒருவர் பொய் பெயரில் எப்படி பெயர் கொடுத்து உரையாட ஆரம்பிக்கிறார்கள், எப்படி அது திரையில் தெரிகிறது , இந்தியாவில் இருந்து கொண்டே அமெரிக்கா எனவும் லண்டன் எனவும் ஊர் பெயரை கொடுத்து கலாய்ப்பது(!?) போன்ற விஷயங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

எனக்கென்னமோ இந்த விஷயத்தில் நாம் (தமிழிணைய சமுதாயம்) ஒரு மிகப்பெரிய வாய்ப்பை இழந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அநேகமாக பல பெரிய திரைப்படத்துரை பிரமுகர்களும் நடிகர்களும், நடிகர்களும் வலைத்தளம் வைத்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய தொண்டு (?) ஆற்றி வருகிறார்கள். ஆனால் ஒருவர் கூட தமிழில் பக்கங்களை அமைத்ததாகத் தெரியவில்லை. (கமல்ஹாசன் தன் வலைப்பக்கத்தில் ஜெயகாந்தனின் கதையை (Gurupeetam) GIF வடிவத்தில் போட்டு வைத்ததைத்தவிர) (This site is not there anymore !)

இப்படத்தின் இயக்குனர் கதிர் (அவரும் கணினி மற்றும் இணைய இணைப்பு வைத்துள்ளார்)மாத்திரம் நம் தமிழ் இணையத்தின் பக்கம் எட்டிப்பார்த்திருந்தால் தமிழிலேயே chat செய்யலாம் போன்ற விபரங்களை தெரிந்துகொண்டு அழகாக தமிழிலேயே காதலர்கள் உரையாடுவதாக திரையில் காட்டியிருந்தால் தமிழர் தம் வீட்டுக் கணினிகளில் தமிழ் பரவலுக்கு வாய்ப்பாக இருந்திருக்கும். பார்க்கலாம். வரப்போகும் படங்களிலாவது யாராவது இவ்வாறெல்லாம் தமிழிலேயே செய்ய முடியும் என காட்டுகிறார்களா என.

தமிழ் சினிமாவுக்கு இருக்கும் reachஐ கணக்கிட்டால் நிச்சயம் இணையத்தில் தமிழ் பற்றிய (என்னவெல்லாம் தமிழிலேயே செய்ய முடியும் etc) விஷயங்கள் இன்னும் பல கோடித்தமிழர்களைப் போய்ச்சேரும் என்பது எ.தா..க.

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

இணையத்தார் என்ன நினைக்கிறீர்கள்..?

- அலெக்ஸ் பாண்டியன்
17-June-2005

Thursday, June 16, 2005

த.நெ.மு: மீல்வாக்கி ஹார்லி டேவிட்சன் பேரணி

தமிழ்.நெட் முத்துக்கள்: மீல்வாக்கி ஹார்லி டேவிட்சன் பேரணி (95th year)

அமெரிக்காவில் விஸ்கான்ஸின் மாகாணம் இருக்கிறது. விஸ்கான்ஸின் மாகாணத்தில் மீல்வாக்கி இருக்கிறது. மீல்வாக்கியில் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் கம்பெனி இருக்கிறது. சரி கதைவிடுவதை விட்டு விஷயத்திற்கு வருவோம்.

ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளின் 95ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள், கூத்துக்கள் பற்றி தமிழ்.நெட்டில் வெளியான ஒரு நேர்முக வர்ணனைக் கட்டுரை இதோ.

கட்டுரை 1998ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி எழுதப்பட்டது. சரியாக 7 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் இக்கட்டுரையை நான் இன்றளவும் ரசிக்கும்படி உள்ளது. இதோ உங்களுக்காக...!

- அலெக்ஸ் பாண்டியன்
15-June-2005

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

மீல்வாக்கி ஹார்லி டேவிட்சன் 95ஆம் வருட பிறந்த நாள் கொண்டாட்டங்கள்
எழுதியவர்: தி.கோ.க.ர
நாள்: 15-June-1998

------------ கட்டுரை தொடக்கம் --------------------

போன ஒரு வாரமாகவே இணைய நண்பர்கள் ஏதாவது பேசி என் காதில் சரியாக விழாமல், அல்லது சரியாக விளங்கக் கொள்ளப்படாமல் போயிருந்தால், இப்போது காரணம் புரிந்திருக்கும். ஓர் இலட்சம் அமைத்திப்படுத்து (silencer) என்ற சாமானே இல்லையோ என்ற வகை இந்த இயந்திர ஊர்திகள் இரக்கமின்றி ஊரை உறுமி வெருட்டிப்போனால் மனிதனுக்கு காது கேட்பதேது ? நித்திரை ஏது ?


Photos courtesy: http://www.theharley.com

ஏதோ சிவகாசி முதல்நாள் தொழிலாளர்தின ஊர்வலம் போகற மாதிரி, ஆளுக்காள் அமெரிக்ககொடியும் தவிர இல்லாத பொல்லாத மண்டையோடு தொடங்க மண்வெட்டிப் பிடிவரை போட்ட கொடியெல்லாம் இணைத்துக் கொண்டு ஊரை ஐந்து பத்தோ ஒற்றைப்படையோ இரட்டைப்படையோ எண்ணிக்கை வைத்து பால் மோர் தயிர் பேதமின்றி வயதுக்கு வந்தது வெந்தது பாராமல் சாகடித்து விட்டார்கள். ஏதோ கட்சிப்பேரணி நடத்துவதற்கு ஊராட்சி ஒன்றியம், வட்டம், மாவட்டம், பலாச்சதுரம் வாழைமுக்கோணம் என்று வந்துகூடியது கணக்கில், இண்டியானா, அலபாமா, புளோரிடா, கிழக்கு, மேற்கு, மலை, மத்தியமேற்கு என்று கூட்டம் கூட்டமாக.

சரியென்று நேற்று ஏரிக்கரையில், கண்காட்சி பார்க்கப்போனால், கண்கொள்ளாக்காட்சி. அத்தனை வாகனங்களும் அடுக்க ஒரு ஒழுங்கில் (ஓர் இலட்சம்) கொஞ்ச நேரம் வைத்திருந்தனர்கள். முன்னமே தெரிந்திருந்தால், ஜீன்ஸ பட வெளியீட்டைக் கொஞ்சம் பிற்போட்டு, "கண்ணாலே காண்பதெல்லாம் தலைவா, கைகளுக்கு சொந்தமில்லை" என்று நாலைந்து டலாஸ் கறுப்புக் கண்ணாடி, தோல்மேற்சட்டை, ஜீன்ஸ், வெள்ளை அவித்த நண்டுத்தோல் பச்சைக்குத்தல் ஆசாமிகளுடன் ஐஸை ஆடவிட்டிருக்கலாம் ஷங்கர்.

ஏரிக்கரை ஒரு மாலை நேரத்து (மதி/ம(¡)து) மயக்கத்திற் கடந்தது. என்னைப்போல, கிராமத்து அப்பாவி வாலிபன் (யோவ்! கதாநாயகன் இடைவேளைக்கு முன்னால் அப்படித்தான் காணும் இருக்கவேணும்) கொஞ்சம் குழம்பித்தான் போவான், இது மோட்டார் சைக்கிளுக்கு ஒன்று கூடலா, இல்லை victoria secretற்கோ இல்லை Milwaukee Millers இற்கோ விளம்பரமா என்று; ஆங்காங்கே Millers பொ¢ய (பொரிஈஈஈஈஈஈஈய ஈய என்று வாசிக்கவும்) கலங்களில் (கடற்புறா கணக்கற்குப் பாரவண்டிகளைக் கவனத்திற் கருத்தெடுக்க) புளித்த பானங்கள் வழங்க (சும்மாயில்லை காணும், துட்டுக்குத்தானாம்) அப்பூதியடிகளின் அடிச்சுவட்டில் தாகசாந்தி தண்ணிப்பந்தல் நடத்திக் கொண்டிருக்க, ஆறேழு ஒற்றை இருக்கை ரெட்டை இறக்கை குட்டி விமானங்கள் வெளவால் பட்டத்திற்கு வால் கட்டியது கணக்காக "ஹார்லி 95 வாழ்க! வளர்க!" என்று சிவப்பும் பச்சையும் மஞ்சளும் அந்திச்செம்மஞ்சள் வானத்தில் மில்வாக்கி விண்ணுரசு கட்டிடங்களில் (சும்மா ஒரு கதைக்குத்தான் ஐயா! மில்வாக்கக் கட்டிடங்களாவது, 30 35 மாடிகளைத் தாண்டுவதாவது)


இருந்து எட்டிப்பார்த்த குட்டிப்பெண்களின் கன்னங்களில் முத்தமிட்டுப் போவோம் என்று சுற்றிச் சுற்றி வந்தபடி. என்ன பிரயோசனம் ஒன்று ரோஜாப்பூ இதழ்கள் கீழே கட்டிடங்களுக்கு நிகராகத் திடீரென எழுந்து நின்ற வெப்பத்தினால் விழுந்து கிடந்த கழுகு பலூனில் போடவில்லை. ஆக கழுகு மட்டும் ஏரியையும் கட்டிடங்களையும் கீழே குட்டியாய்ப் புகைப்படத்துக்கு மில்வாக்கி மாதொரு பாகமும் மில்லர்ஸ் மது மறு பாகமுமாய் நின்ற குட்டைத்தாடி இளைஞர்களையும் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டதுதான் மிச்சம்.
பிறகென்ன வீதியில் ஆட்சிக்கு வந்து 95வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வைபவமோ அறியேன்; குறைந்தபட்சம் ஒருவரும் வாழ்த்துப்பா கூடப்பா(டி)டவில்லை, "இத்தனை நாள் இரைச்சலிட்டாய்; இதுபோல என்றைக்கும் இட்டிருப்பாய்" என்பதுபோல. ஆக, ஏடெட்டு இசைக்குழுவினர் (காதில் கடுக்கனும் இல்லை; தலைமுடியில் "கலர்களும்" இல்லை; கால்ச்சராய்கள் கழியவும் இல்லை; இவனுகள் எல்லாம் இசைக்குழு நடத்துகறான்கள்; அமெரிக்க இசைக்கு வந்த சோதனை :(விதி) நாலைந்து "ஹொலிவுட் திரைப்பட வீதிக்குண்டர்குழுக்கள்" மாதிரி கண்ணிற்பட்ட குழுக்கள் அத்தனை கேளிக்கை விளையாட்டுக்களும் இயந்திரத் துவிச் சக்கரவண்டிகளிற் காட்டினார்கள்; மக்கள் அமெரிக்க கரியாக்க (kariyoki) (கறியாக்கச் சாப்பிடப் பிடிக்கவில்லை :() சாப்பிட கயிறு கட்டிய வழிக்குள் 'லைனாக க்யூவரிசையாக' நின்றாற்கள்.

ஏதோ ஒரு WM FM X.XX வானொலி நிலையம் ஒரு பந்தல், இல்லாத 2060ம் ஆண்டு மோட்டார் வாகனம் என்று பெயர்போட்டு அமைத்து அதற்குள் அவர்களின் பாடற்பதிவு ஒர் செறிதகடு (CD) வாங்கியவர்கள், அட்லாண்டிஸினைக் கண்டுபிடிக்கும் போட்டியில் வென்று பாரிஸோ லண்டனோ ரோமோ போகலாம் என்று கூவிக்கொண்டிருந்தார்கள்; சில மக்கள் மாக்களுக்கு மூக்கணாம் கயிறு இலாடம் அடித்தது கணக்கல் ஏதென்று இடம் இல்லாமல் செல்லச்சந்தி, கதிர்காமம் முருகனுக்குச் செதிற்காவடி எடுத்தது கணக்க, எல்லாவிடங்களிலும் வளையம், கம்மல், வேறு வகைப்பட்ட பெயர் தெரியா ஆபரணங்கள், பெயர் தெரியா வகைகளில், பெயர் தெரியா உலோகங்களினால் மந்திரித்துப்போட்டு, ஒர் கையில் சிகரெட்டும் மரு கையில் சுருட்டும் வைத்தபடி, சிகரட் பிடிப்பதற்கும் சுருட்டு புகைப்படத்திற்கும் என்று உலாவிக்கொண்டு நிமிடத்துக் கொரு முறை சின்ன முத்தங்கள். குழந்தைகள் சறுக்கவிளையாட, தாயும் தந்தையும் ஹேர்லி-டேவிஸ்ன் நினைவுச்சின்னங்களில் எதை வாங்குவது என்று சண்டை போட்டு கொண்டார்கள்.

இளம்பெண்கள் கட்டைக்காற்சட்டை மானத்தை வாங்குகறதே என்ற கவலையிற் போலும், மேற்சட்டையை அவிழ்த்து காற்ட்டைக்கு மேலே சுற்றிக் கொண்டார்கள். போதாக்குறைக்கு ஓடிப்பிடித்து விளையாட வேறு. உருப்பெருத்த கிழவிகளும் கிழவர்ளும் தற்காலிகக் கழிப்பிடங்கள் முன்னே காவல் நின்றனர்.மொத்தத்தில் ஹேர்லி-டேவிஸனுக்கும் மில்லர் விக்டோரியா கக்கரட்டுக்கும் நல்ல விற்பனை உத்தி. 49'ம் ஆண்டு செய்தது என்று ஒருவர் மூன்றாம் முறை கைமாறிய வண்டி ஒன்றை 25,000$ என்று விற்பனைக்கு வைத்திருக்க இழுபடக்கூடிய நாடாவிலான 'பந்தனா' அணிந்த 'Treasure Island' கொள்ளைக்காரி வேடத்திலிருந்த கறுப்புக்கண்ணாடி பெண்ணொருத்தி, 20,000$ இற்குத் தருகிறாயா இல்லையா என்று கெஞ்சலும் மிஞ்சலும் கொஞ்சிக்குலாவப் போயும் பேசிக்கொண்டிருந்தார். அவர் கணவரின் முகம் ஆனந்த விடனின் நகைச்சுவைத்துணுக்குகளில் வரும் புடவைக்கடைக்குள் போன பெண்களின் கணவன்மார் என்று கூறி வாணி, சாரதி, கணேஷ் வரையும் படங்களை ஞாபகம் படுத்தியது. இன்னொருபுறம், தொலையிருந்து நெறிப்படுத்தி (remote controller) பயன்படுத்தி, ஒரு கூட்டம் பொம்மை மோட்டார் வாகனங்களிற் போட்டி வைத்துக் கொண்டிருந்தது.


மாட்டுவண்டிகளுக்கும் இப்படி ஒரு பத்தாண்டு மிள்கூடல் எங்கள் ஊரில் வைத்தால் வியாபாரம் செழிக்கும் என்று பட மீள ஐசு பாட பிரசாந்த் ஓடியிருக்கவேண்டிய 1,00,000 மோட்டார் வண்டிகளினை, காலிற் தடக்குப்பட்ட வாண்டுகளினைத் தாண்டிக் காதுக்குள் விரலை விட்டுக்கொண்டு வீட்டுக்குள் நடக்கையிற் தோன்றியது.

நூறாவது வருடம் மில்வோக்கி என்னாவாக கலங்கபோகறதோ..!


- தி.கோ.க.ர
15-June-1998

சொல்லாமல் விட்டது: நற்குணகலரான தெற்காசியப்பையர்களின் (வழமையான) நடத்தைகள்.
=================================================================================

த.நெ.மு: குமாரபாரதி கட்டுரைகள்

தமிழ்.நெட் முத்துக்கள் - மறந்துவிட்ட நெடுஞ்சாலைகளும் கைவிடப் பட்ட தண்டவாளங்களும்

தமிழ்.நெட் பொற்காலத்தில் நான் ரசித்த கட்டுரைகளில் திரு. நியுசிலாந்து குமாரபாரதியின் இந்த தொடரும் ஒன்று - மறந்துவிட்ட நெடுஞ்சாலைகளும் கைவிடப் பட்ட தண்டவாளங்களும்.

இந்த மாதிரியெல்லாம் எழுத நம்மால் முடிகிறதோ இல்லையோ, படித்து இன்புறவாவது செய்யலாம் இவையெல்லாம் புத்தக வடிவில் வந்தால் - தமிழ்/இலங்கை செய்திகளும், நினைவலைகளும் காலம் காலமாக நிற்கும். தமிழ்.நெட் லிஸ்ட் செர்வரோடு அழிந்துவிட்டால் நட்டம் நமக்கு மட்டுமல்ல.

இலங்கையைப் பற்றிய பல விஷயங்களை Nostalgicஆக மிக அழகாக எழுதுவார். அவரின் ஏனைய படைப்புகளைப் படிக்க http://www.tamil.net/list ல் தேடலாம். இங்கு இரண்டு முத்துக்கள் மட்டும்.

அவரின் சொந்தவீட்டில் http://members.tripod.com/Kumarabharathy/ மேலும் சில கட்டுரைகளைப் படிக்கலாம் (நன்றி: வாசன்)


-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- இது ஒரு நீண்ட பதிவு...................

நன்றி: தமிழ்.நெட்; மற்றும் எழுதியவர் திரு. நியுசிலாந்து குமாரபாரதி
17-ஜனவரி-2000

சி குமாரபாரதி

Anbulla Nanbarkalluku

This is a tale where nothing much happens. This Library like no other.
Unlike the glass and chrome multi storied libraries you use. Where the
overhelming confuse and confound one. Not like the venerable connemara
either. People gather for no particular reason, than to gather. I could not
find any convincing reason to thrust this on you, but that aspect does not
seem to deter me. It is the way I work I guess. I see our enfant terrible is
back, with his- sometimes taunting and often tantilising wit. First I
thought I will not encourage him. But, of course you realise he doesnot need
any.

மறந்துவிட்ட நெடுஞ்சாலைகளும் கைவிடப் பட்ட தண்டவாளங்களும் (6)

ஒரு வாசிகசாலைக்கு றேடியோ வருகிறது -part 1

இப்பொழுதெல்லாம் சீடீக்கள், ஒலிநாடாக்கள், வீடியோக்கள் வீடுகளில் எங்கும் இறைந்து கிடக்கின்றன. இவை கைகால்களில் இடறும் அளவுக்கு மலிந்துவிட்டன. வீட்டிற்கு வீடு ஒளியலிச் சாதனங்கள் பரவிவிட்டன. மிகச் சாதாரணமான பாடல்கள்கூட அமர்க்களமான தொழில்நுட்ப பக்க பலத்துடன் இசை என்ற பெயரில் செவிப் பறைகளில் மோதுகின்றன. நாடாக்களும் சீடீக்களும் வைத்திருந்தால் சங்கீதத்தையே பைக்குள் போட்டது போன்ற தோரணை ஏற்பட்டு விடுவது இயல்பாகி வரும் காலம் இது. இந்த நிலையை விமர்சிப்பது நோக்கமல்ல.

தாராளமாக சங்கீதத்தை பைக்குள் போட்டுக் கொள்ளுங்கள். இது என்னைக் கேட்டு செய்யும் காரியமல்ல. ஆனால் முந்தைய நிலையுடன் சேர்த்துப் பார்க்கும் விநோதத்திற்காக இதைச் சொல்ல வருகிறேன். அவ்வளவுதான்.

அந்தக் காலங்களில், அதாவது 1950 களில் என்று வைத்துக் கொள்ளுங்களேன் - யாழ்ப்பாணக் கிராமங்களில் சினிமாப் பாடல் கேட்பது ஒரு அபூர்வமான சடங்காகவே யிருந்தது. தேடிப்போய்க் கேட்டகப்பட வேண்டிய விஷயம் என்பதால் அதற்கொரு அருமை பெருமை இருந்தது எனலாம்.

சடங்கு எனில் அதில் பல விஷயங்கள் அடங்கும். பாடல் கேட்பதில் ஒரு எதிர்பார்ப்பு, பாடலை விடவும் கேட்க்கும் சூழல், சேர்ந்து ரசிப்பவர்களுடன் ஒரு அன்யோன்யம் எல்லாமே இச்சடங்கில் அடங்கும்.இந்த அனுபவத் தொகுதிகள் ரசனைக்கு ஒரு நுட்பமான பரிமாணத்தை, உணர்வை வழங்கி விடுகிறது - என்று இந்த அனுபவத்தை இப்பொழுது திரும்பிப் பார்க்கும் பொழுது உணர்கிறேன். இந்த அனுபவங்களைச் சொல்லு முன்னர் கிராமத்திலிருந்த வாசிகசாலை பற்றிச் சொல்ல வேண்டியுள்ளது. பாடல் கேட்கும் சடங்கில் இது ஒரு களம் என்பதுடன் நான் சொல்லும் காலகட்டத்து வாழ்கையையும் பிரதிபலிக்கிறது என்பதால் இதைக் கொஞ்சம் விஸ்தாரமாகச் சொல்கிறேன்.

அந்தக் கிராமத்தில் ஒரு வாசிகசாலை. வாசிகசாலை என்றவுடனேயே அதை ஆங்கிலப்படுத்தி வெளிநாடுகளிலுள்ள லைபிரரிகளை நினைவில் கொண்டு வராமல் இருப்பது நல்லது. ஏனைனில் இவ்விரு பிம்பங்களும் பொருந்தாதவை. இங்கு நோக்கங்களே மாறுபடுகின்றன். கொஞ்சம் பொறுங்கள். எனக்குத் தெரிந்த வழயில் சொல்ல விடுங்கள். கோவில் தேர் முட்டிக்கு பக்கத்தில் ஒரு மடத்துத் திண்ணை. அதில் இரு நீள மேசைகள். அவற்றின் இருபக்கங்களிலும் வாங்குகள - பென்சுக்கள் இஇந்தத் தளபாடங்கள் எல்லாமமே வீமன்காமம் ஆங்கில கலவன் பாடசாலையிலிருந்து காலொடிந்த நிலையில் இனாமாகக் கொண்டுவரப் பட்டு, பின்னர் செல்லப்பா ஆசாரியாரால் புனருத்தாரணம் செய்யப்பட்டவை. ( கலவன் என்பது ஆண் பெண் சேர்ந்து படிக்கும் பள்ளிகளைக் குறிக்கும் அக்கால அதிகாரபூர்வமான சொல்). இந்த வேலைக்கு கூலியாக அவருக்கு புயல் நிவாரணமாக அமெரிக்கன் கோதுமை மா, பால்ப் பவுடர், சீனி பருப்பு ஆகியவை அளிக்கப்பட்டது. அவரின் ஆயிரம் கண்டு வாழையும் ஐந்நு¡று கண்டு வெற்றிலைக் கொடிகளும் அண்மையில் ஏற்பட்ட புயலால் அழிந்தன எனப் பதிந்து இந்த பொருட்களை (அரச மான்யம்) கொடுத்துச் சமாளித்தவர் விதானையார். உண்மைக்கும் பொய்யுக்கும் இடையில் இஇருந்த ஒரு நுணுக்கமான இடைவெளியில் சமுக நன்மை கருதி செய்யப்பட்ட அட்ஜஸட்மென்டு - ஏற்பாடு இது. நமது சமுக ஸதாபனங்கள் எப்படி வள்ளிசாக - Austere - ஆக இயங்கின என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. வெளிநாட்டில் இயங்கும் சிறிய தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு கூட இந்த நன்மை பயக்கும் பொய்மை என்ற வள்ளுவர் குறள் ஒன்றும் புதியதன்று.

மேசையில் சில தமிழ்த் தினசரிகள். இந் நாழிதழ்கள் வெளிவந்த திகதிகளைப் பற்றி வாசக அன்பர்கள் கவலைப் படுவதில்லை. இந்த வாசிகசாலை வீமன்காமம் கிராம முன்னேற்றச் சங்கத்தினால் நடாத்தப் படுகிறது. (நடாத்தப் படுகிறது என்பதைவிட அது பாட்டிற்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை).

இதனால் புதிய செய்தித்தாள்கள் தலைவர், தனாதிகாரி வீடுகளுக்குப் போய்த்தான் பின்னர் வாசிகசாலைக்கு வரும். இந்த ஏற்பாட்டை இயல்பாக எல்லோரும் ஏற்றுக் கொண்டதால் இது பற்றி பெரிய சர்ச்சைகள் ஏற்படுவதில்லை.

பகலில் வாசிகசாலையாகவும், இரவில் கோயில் திருப்பணிக்காக இஇந்தியாவிலிருந்து வந்த இரு சிற்பிகள் படுக்கும் இடமாகவும் பயன் பட்டது. தவிர மாரி காலங்களில் குருநாதியின் ஆடுகள் நனையாமல் கட்டுமிடமாகவும் இஇருந்தது. வாசிகசாலைக்கு எதிரில் இருந்த சங்கக்கடை மனேச்சர்தான் இதற்குப் பொறுப்பு எனப் பலரும் நினைத்து அது மாதிரியே நடந்தும் வந்தார்கள். பத்திரிகைகளை எடுத்து கடைக்குள் வைத்துப் பூட்டுவது, குருநாதியுடன் ஆடு கட்டுவதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஆட்டுப் புழுக்கைகளை கூட்டுவிப்பது, பழைய பேப்பர்களை நிறுத்து சங்கத்திற்கு காசு கொடுப்பது போன்ற நிர்வாகங்களச் செய்வதால் இவர்தான் லைபிரேரியன் என்ற முடிவுக்கு பலரும் வந்தனர்.

கடையைத்திறந்த பின்பு பத்திரிகைகளைக் கொண்டுவந்து போட்டுவிட்டு, அங்கிருந்த படியே கடையை நிர்வகித்தார். கூப்பன் ( ரேஷன்) அரிசி, மா மட்டுமே விநியோகிக்கும் கூட்டுறவுக் சங்கக்கடை என்பதால் இப்படி ஈயோட்டுவது சாத்தியமாயிற்று. இவரைவிட இன்னும் சில நிரந்தர அங்கத்தவர்களும் தளபாடங்கள் போன்று வாசிகசாலைப் பகைப்புலத்துடன் கலந்துவிட்டவர்கள். இதில் ஊர் ஸ்டேசன் மாஸ்டர் ஒருவர். கொழும்பு புகையிரதங்களை அனுப்பிவிட்டு, மோர்ஸ கோட்டில் கடகட தடதட என்று தட்டிவிட்டு, அடுத்த லோக்கல் வண்டிவரும் வரை வாசகசாலையில் பொழுது போக்குவார். அவ்வப்பொழுது தோரணையாக வெள்ளைத் தொப்பி
போட்டபடி கைகாட்டிகளை ஏற்றியிறக்கி கொடிகாட்டி விசில் ஊதி அனுப்பிவைப்பார். தினமும் சில வண்டிகள்தான் இங்கு நின்று போகும். சிலீப்பர் கட்டைகளை அடுக்கி அதன் மேல் ஒரு பழைய கோச் பெட்டியை து¡க்கி வைத்திருப்பார்கள். இதுதான் மாவிட்டபுரம் ஸ்டேசன் அறை.

ஸ்டேசன் மாஸ்டரைத் தவிர HSC SSC சோதனைகள் பாஸ் பண்ணியகையுடன் கிளறிக்கல் வேலைக்கு விண்ணப்பம் செய்துவிட்டு, வேலைக்கு வரச் சொல்லி தந்தி வரும் என்று தவமிருக்கும் முன்று நான்கு இளைஞர்கள்.கிராமத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள். இந்த இளைஞர்கள் பிற்காலத்தில் பெரிய உத்தியோகத்தில் இருக்கப் போகிறவர்கள் என மற்றவர்கள் எதிர்பார்த்து, அதன்படியே ஏதோவொரு முறையில் பழகியதை அவதானிக்க முடிந்தது. அவர்களும் தங்களுக்கு அப்படி ஒரு சாத்தியக்கூறு இருப்பதை ஒத்துக் கொண்டு அவர்களிடம் எதிர் பார்க்கப் படும் பதில் தோரணையில் நடந்து கொண்டதாக ஞாபகம். இது 1950 களில் யாழ்ப்பாணச் சமுதாய அடையாளம். படித்தவர்களுக்கு ஒரு எதிர் காலம் இருக்கிறது என நம்பிய காலம். தந்திகளும் பாவனையிலிருந்த காலம். ஊரே இவர்கள் வேலை பெற்று கொழும்பு மாநகரம் செல்ல வேண்டும் என உன்னியது. " தம்பி யோசிக்காதை, வைரவர் கைவிட மாட்டார், நான் நேந்து வைச்சிருக்கிறன்" - இது சிட்டுக் குருவி ஜயர்.

இந்தக் கூட்டத்துடன் ஊமைக் குழல் (ஒத்து) பக்கிரிச்சாமி - கோவிலில் காலைப் பூசை முடிந்த கையோடு சேர்ந்து கொள்வார். உள்ளுர் நாதஸ்வரக் கலைஞர், ஆனால் பூர்வீகம் இந்தியா. அத்துடன் கோயில் திருப்பணிச் சிற்பிகளும் அப்ப அப்ப வந்து போவார்கள். இவர்களுக்கிடையே ஒரு தனிப்பட்ட பரிபாஷை நடந்து கொண்டிருக்கும். ஒரே விதமான மொழியைப் பேசும் அபிமானத்தை விடவும், அவர்களுக்கிடையே ஒரு வகை லேகியப் பரிமாற்றம் நடந்து வந்ததை அவதானித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் யானைப் பயில்வான் சிட்டுக்குருவி லேகியம் பிரசித்தம். கடைகளில் அருமையான எனாமல் தகட்டில் விளம்பரப் பலகைகள் தொங்கும்.சிட்டுக் குருவிக்கு மேல் நிற்கும் பயில்வான் யானையை து¡க்கும் படம். இந்த அங்கீகரிக்கப் பட்ட சரக்கைவிடவும் பவர் கூடிய லேகியங்களும் கலைஞர்கள் வட்டாரத்தில் அரசல் புரசலாக நடமாடின. அந்த வகையில்தான் ஏதோ பரிமாற்றம். நான் சொல்வது சென்னைப் பொருட்கள் தடையில்லாமல் கிடைத்த காலத்தைப் பற்றி. காங்கேசன் துறையிலிருந்து தோணிகள் வேதாரணியம் கோடிக் கரை போய்வந்தன. பெரிய கிட்டங்கிகள் காங்கேசன்துறையில் இருந்தன. சில வருடங்களின் பின் 56 வாக்கில் இந்தக் கட்டிடங்கள் கைவிடப் பட்ட நிலையின் காவிப்பாரற்று கிடந்தன. பின்னர் சீமெந்து தொழிற்சாலை கட்டப் பட்டபின்புதான் சீமெந்து கிட்டங்கிகளாயின. பொன்னம்பலம்- செல்வநாயகம் அரசியலும், சுதுமலை இரட்டை கொலை வழக்கு பற்றியும் வரும் செய்திகளுக்கு வியாக்கியானம். இப்படி சில மணி நேரம் பொழுது போகும்.

-------------------------

அன்புள்ள நண்பர்களே!

காங்கேசன்துறை.மாவிட்டபுர்திலிருந்து ஒரு மைல். மாவிட்டபுரம் கோவில் சிலைகள் சிற்பங்கள் இங்குதான் சோழ இளவரசி மாருதப்புரவீகவல்லியால் கொண்டு வந்து இஇறக்கப் பட்டது. இந்த ஜதீகத்தை ஜந்து வருடங்களுக்கு முன்பு வரை (ஏறத்தாழ) தொடர்ச்சி விடாமல் தெப்ப விழாவாக கொண்டாடினார்கள். இதுதான் இலங்கையின் வட நுனி. இந்த rest house முகப்பு பாக்கு நீரணை கடலைப்பார்த்து.வெள்ளைக்காரர்கள் காலந் தொட்டு இயங்கியது. அருமையான இடத்தெரிவு அவர்களுக்குரிய கைராசி. விறாந்தை சாய்வு நாற்காலியில் அமருங்கள் நல்ல காற்றோட்டம். இந்தக் கொலோனியல் பங்களாவுகளுக்கு ஒரு விசேஷ கவர்ச்சி இருக்கிறது. ஆரம்பித்தால் முடிவிராது. பாருங்கள், Seth Thomas மணிக்கூடு இன்னும் கணகணப்பாய் ஓடுது. மூலையில் பீங்கான் தண்ணீர் பில்டர். பீங்கான் குறக்கறி, முள்ளுக் கரண்டி.

சரி . பக்கத்தில் கூப்பிடு து¡ரத்தில் தான் காங்கேசன்துறை ஸ்டேசன். இந்தக் கடலைப் பார்த்தபடி விஸ்கி குடித்திருப்பார்கள். குடித்தபடி து¡ரத்து கிளாஸ்கோவையோ லிவர்பூல் துறைமுகத்தைப் பற்றி கற்பனையில் அமர்ந்திருப்பார்கள். நாங்கள் கோடிக்கரையைத்தான் கற்பனை செய்ய வேண்டும் - VSOA குடித்தபடி. கோடிக்கரை 20 மைல்தான். இருப்புப் பாதை இங்குதான் முடிகிறது. இப்போதெல்லாம் வண்டிகள் ஓடுவதில்லை. தண்டவாளங்களில் புதர் மண்டி விட்டது. நு¡ற்றைம்பது வருடங்களுக்கு முன்னர்தான் கண்டி- யாழ்பாண நெடுஞ்சாலை ஏற்பட்டது. 50 வருடம் பிறகுதான் றெயில் பாதை ஏற்பட்டது. யானை சிறுத்தை நிறைந்த காட்டிற்கூடாக முக்காலி ஸ்டான்ட்களில் நில அளவை கருவிகளை சுமந்தபடி திரிந்திருப்பார்கள். நெடுஞ்சாலையும் தண்டவாளங்களும் பகுதி பகுதியாக ஒவ்வொருவர் கட்டுப் பாட்டிற்குள்.

கடைசி ஸ்டேசன், கடைசி வண்டி, றோட்டின் முடிவு.

சரி வாசிகசாலைக்கு

மறந்துவிட்ட நெடுஞ்சாலைகளும் கைவிடப் பட்ட இரும்புப்பாதைகளும் (7)

ஒரு வாசிகசாலைக்கு றேடியோ வருகிறது -part 2

இப்படியாக பரபரப்பில்லாமல் நாட்கள் நகரும். இந்தச் சூழலில்தான் ஒரு நாள் இரவிரவாக திண்ணை வாசிகசாலை பனம் சலாகைகள் அடிக்கப்பட்டு பத்திரப் படுத்தப் பட்ட தனி அறை ஆக்கப் பட்டது. அறைக்குள் வெள்ளை யடித்தார்கள். கதவும் போட்டு ஓரு நாதாங்கிப் பூட்டும் போடப் பட்டது. கேள்விப் பட்ட விஷயம் இதுதான். பன்னிரண்டு வால்வு றேடியோ வாசிகசாலைக்கு வரப் போவதாக வதந்தி அடிபட்டது.

கிராம முன்னேற்றச் சங்கம் என்பது சுதந்திர இலங்கையின் பரிசோதனை முயற்ச்சி. ஐந்தாண்டுத் திட்டம் பற்றிய படம் போட்ட புத்தகங்களையும், அமெரிக்கா, பிரித்தானிய அரசாங்கங்களின் அன்பளிப்பாக வழவழப்பான சஞ்சிகைகளையும், கூட்டுறவுச் சம்மேளனங்களின் ஆண்டு மலர்களையும் இனாமாக விநியோகிப்பதுடன், பராமரிப்புக்கு ஏதோ கொஞ்சம் காசும் கொடுத்தார்கள். வீமன்காமம் சங்கம் கோவில் உற்சவ காலங்களில் விதானையார்( Tashildar), குருக்களுக்கு உதவியாக ஒரு தொண்டர் படையை வழங்குவார்கள். தேர் தீர்த்தத்திற்கு தண்ணீர்ப் பந்தல் நடத்துவார்கள். மாதாந்தக் கூட்டத்தில் தவறாமல் கணக்கு வழக்கு ( வருடச் செலவு ருபாய் நு¡றுக்கு வரும்) பற்றி பல நுணுக்கமான விவாதங்கள் நடைபெறும். தனாதிகாரி, சுதுமலைப் புகையிலையை முகர்ந்து பார்த்து, சுருட்டைச் சுற்றிக் கொண்டே " நான் வாத்தியாரை இரண்டு ருபாய்க்கு நம்பாமல் இல்லை, பொது விஷயம் எண்ட படியால் ஆலோசிச்சு செய்வம் ". mind you, அக்காலத்தய 2 ரூபாய். இது ஒரு பைம்பல். இச் சொல்லுக்கு இலக்கணச் சுத்தமான தமிழ் சொல்லோ, நிகரான ஆங்கிலச் சொல்லோ உடனடியாகக் அகப்படவில்லை. இந்த camaradrie ஐச் சண்டை என்று கூற முடியாது.

இக் கூட்டங்கள் தவிர ஒழுங்கைக்கு கல்லுப்போடு, வீதிக்கு வெளிச்சம் போடு, ஆடியமாவாசை தேர்க் காலங்களில் கொழும்புப் புகையிதங்களை மாவிட்டபுரத்தில் நிறுத்து என்று கோரி கவர்ண்மெண்ட் ஏஜணட்(collector), டீஆர்ஓ (sub collector), எம்பீக்களுக்கும், மற்றும் கொழும்புவில் தெரிந்த தெரியாத உயர் உத்தியோகத்தருக்கும் பெட்டிசம் எனப்படும் மனு எழுதிக் கொண்டிருப்பார்கள். பெட்டிசம் எழுதுவது அக்கால யாழ்பாண வழக்கம். இதில் கைதேர்ந்தவர்களே சங்கங்களுக்குத் தெரிவு செய்யப் படுவார்கள். இது பெரும் கலையாக வளர்ந்தது. ஏன் இப்பொழுதுகூட வெளிநாட்டில் இயங்கும் தமிழ்ச் சங்கங்களுக்கு மானியம் பெறுவதற்கு இக் கலை விஸ்தரிக்கப்பட்டி ருக்கிறது. பெட்டிசம் எழுதல் சுதந்திரப் போராட்டததிற்கு அலுங்கல் நலுங்கல் இல்லாத மாற்றுமுறை. அதிருப்திக்கு ஒரு ஆபத்தில்லாத வடிகால். ஆறுமுகநாவலர் காலம் தொட்டு வளர்ந்த முறை.

நிற்க. இந்த றேடியோ வந்ததற்கு சங்கத்தில் கொஞ்சம் சலசலப்பு என்று கூறினேன் அல்லவா? தான் எழுதிய பெட்டிசத்தின் பெறுபேறுதான் இது என்பது தலைவர் வாதம். அவர் ஆங்கில ஆசிரியர். அவரின் பெட்டிசம் எழுதும் திறன் பிரசித்தம். நாங்கள் அப் பொழுதெல்லாம் சமயபாடங்களுக்கு, தமிழ் பாடக் கட்டுரைகள் எழுதுவதற்கு ஒரு மாதிரிப் படிவம் (template) வைத்திருப்போம். " கடல் புடை சூழ் நெடுவுலகின் கண்ணே " என ஆரம்பித்து சமயமாயின் " புண்ணிய பூமியாகிய பரத கண்டத்தில் சோழ வளநாட்டடின் " என்று ஒரு பாராவுடன் ஆரம்பிப்பது சம்பிரதாயம். ஆதே போல் இவர் எழுதும் பெட்டிசமும் " வீமன்காமம் வாசிகளான நாம் இத்தால் முறையீடு செய்வது என்னவென்ல், இந்த ஊரில் ஐயாயிரம் மக்கள் வசிக்கிர்கள், 500 பரப்பில் வெற்றிலையும் 1000 பரப்பில் வெற்றிலையும், 1000 பரப்பில் புகையிலையும் செய்யும் கமக்காரர்கள் வசிக்கிர்கள். சோழ இளவரசி மாருதப்புரவீக வல்லி கட்டிய பிரசித்தமான கோவில் ..." என்று வீமன்காமம் பகுதியின் சமுக பொருளாதார வரலாற்றை முதலில் எழுதுவார். " முறையிடுதல், முறைப்பாடு " என்ற சொற் பிரயோகம்
அரசாங்கத்தை மன்ட்டமாகக் கேட்டுக் கொள்ளும் ஒரு தோரணை - an attitude.

ஆனால் சிறாப்பர் (Shroff) தான் தான் சரியான சமயத்தில் DRO விடம் சொல்லி ஏழாலைக்குப் போகவிருந்த றேடியோப் பெட்டியை இங்கு திசை திருப்பி விட்டதாக சொல்லிக் கொண்டிருந்தார். நெளிவு சுழிவு தெரிந்த காரியவாதி. இந்தச் சலசலப்புக்கு அடிப்படைக் காரணம் கோவிலைச் சார்ந்த ஒரு மெலிதான பகமை. சூரன் போர் திருவிழாவில் சிறாப்பர் முருகன் காவும் கூட்டத்தின் தலைவர், தலைவரோ சூரன் காவும் கோஷடியின் முதல்வர். நடனமாடியபடி, மிடுக்காக ஓடி முன்வந்து பின்னோடிச் சென்று, ஒரு பக்கம் தாழ்ந்து (இதற்கேற்ற் போல் தவிலில் கிருதா) இரு கோஷடியினரும் மும்மரமாக போட்டியில் ஈடுபடுவதால். முருகனுக்கும்
சூரனுக்கும் இருந்த பகமை இடம் பெயர்ந்து கோஷடியினருக்கிடையே ஏற்பட்டு விட்டது. இஇவர்கள் இந்தப் பனிப் போரை, மாட்டுச் சவாரிகள், காணிச் சண்டைகளுக்கும் village councilவிசி எலக்சன்களுக்கும், பாராளுமன்ற அரசியலுக்கும் வெற்றிகரமாக விரிவாக்கம் செய்து கொண்டிருந்தனர்.

இந்த புராணத்தைச் சுருக்கிக் கூறினால், ஒரு நாள் Austin 8 இல் றேடியோ பெட்டி கொண்டு வந்து இறக்கப் பட்டது. துரையனே தேர் முட்டி உச்சியில் ஏரியல் கட்டி வயர் இழுத்து றேடியோவை ஸதாபித்தார். எங்களுக்குத் தெரிந்த வரையில் அயல் கிராமங்கள் உட்பட பன்னிரண்டு வால்வு கொண்ட பெட்டி இருக்கவில்லை. ஆறு வால்வுப் பெட்டி கூட அங்கொன்று இங்கொன்றாகத்தான் இருந்ததாகத் தெரிந்து கொண்டோம். ஆனால் இவையெல்லாம் பன்னிரண்டு வால்வு பிலிப்ஸ பெட்டி போல் கணகணப்பாக இழுப்பதில்லை என்று பேசிக் கொண்டோம்.

றேடியோவில் பாட்டுக்களை விட விவசாயம், ஐந்தாண்டுத் திட்டங்கள் பற்றிய விபரங்கள் அதிகமாக இடம் பெற்றன. வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பிக்காத காலம். எப்பொழுதாவது பாட்டு கிடைக்கும். பாட்டு போடும் நேரங்களுக்கு பலர் வந்து போனார்கள்.

இன்றெல்லாம ஆண் குரலும் பெண் குரலும் இணைந்து பாடும் டுயட் வழமையாகிவிட்டன. 40 வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணச் சிற்று¡ரில் இவை கிளர்ச்சியூட்டும் லாகிரியாக இருந்தது. பாடுபவர்கள், நடிப்பவர்களின் பூர்வோத்திரங்கள் திரைக்குப் பின்னால் நடைபெறுவதாகச் சொல்லப் படுவன பற்றி தணிக்கை செய்யப்பட வேண்டிய நீலமான விஷயங்களை பக்கிரிச்சாமி தெரிந்து வைத்திருந்தார். தெரிந்து வைத்திருந்தாரோ, அல்லது உருவாக்கினாரோ யார் கண்டார்கள். காலங்கள் து¡ரங்களுக்கு அப்பால் ஒரு விசித்திரமான உலகம் மங்கல் நீலமாக அந்த வயதில் தெரிந்தது. எனது ஈடன் தோட்டத்தில் பாம்பு மெதுவாக ஊரத் தொடங்கியது.

ஆச்சியின் அலுமாரியைத் திறந்தால் கற்பூரம் லாமிச்சை வேர் மணங்கள் கலந்த ஒரு கதம்பமான வாசனை வீசும். இஇதில் பூர்வீக ஞாபகங்கள் மெதுவாகக் கிளர்வது போல் இஇருக்கும். பழைய நினைவுகளை அசை போடுவதும் இஇது போன்ற ஒரு யாத்திரை. அந்த உலகம் அன்று எனக்கு அன்னயோன்யமாக சுவாரஸ்யமானதாக இருந்திருக்கலாம். அதற்காக எனது கதா பாத்திரங்களும் ஒரு இலட்சிய உலகில் அழகாக வாழ்ந்தார்கள் எனறு நான் நினைத்திருக்கலாம் தான். என்லும் வாழ்க்கையில் ஒரு விட்டேற்றியான தன்மை , இருந்தது. இப்பொழுது இது இல்லை.

இந்தக் காலங்களில் அடிக்கடி கேட்ட ஒரு பாடல் வரியை ஞாபகப் படுத்துகிறேன். (உண்மையில் இது ஒரு வானெலி நிகழ்ச்சி பிரதியாக்கம்!). அக் காலங்களில் கலியாண வீடுகளில் ஒலிபெருக்கி வைத்து போடுவார்கள். அப் போதெல்லாம், கலியாணப் பத்திரிகைகளின் அடியில் ஒரு கை காட்டும் குறி போட்டு "கொண்டாட்டம் நான்கு நாட்டகள் நடை பெறும். ஆசனம் கம்பளம். ஒலி பெருக்கி அமைக்கப் பெறும் " எனப் போடுவது சம்பிரதாயம். பாடல் தேவதாஸ் படத்தில் இடம் பெற்றது என்று நினைக்கிறேன். பாடியவர் கண்டசாலா. இதோ. அந்தியில் ஒரு சந்தோஷம் தரும் சவாரி.

சி குமாரபாரதி

----------------------------------------------

Wednesday, June 15, 2005

சு-டோ-குவும் பாரதிதாசனும்

சு-டோ-குவும் பாரதிதாசனும்

தமிழ்.நெட் முத்துக்கள்: சு-டோ-குவும் பாரதிதாசன் குறுக்கெழுத்துப் புதிரும்

சமீப நாட்களாக 'த ஹிண்டு'விலும் சு-டோ-கு எண் கட்ட விளையாட்டு பிரசுரமாகி வருகிறது. எல்லாம் 'வந்தாச்சு.... வந்தாச்சு..' புகழ் டெக்கான் குரோனிகிளின் போட்டி தான். டெ.கு ஆரம்பித்துவைத்த இந்த பகுதியை தற்போது டைம்ஸ் ஆ·ப் இண்டியாவும் ஆரம்பித்துவிட்டது.


Image Courtesy: The Hindu

தமிழ் மக்களுக்கு குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றும் புதிதல்ல. அந்தக் கால ஆனந்தவிகடனிலிருந்து, குமுதம், குங்குமம், ராணி, தேவி, வாரமலர் என குறுக்கெழுத்துப் போட்டியில் பங்குகொண்டு, ரூ.100 அல்லது பட்டுப் புடவை பரிசும் பெற பெரிதும் விழைவர். ஆனால் ஆங்கில தினசரிகளில் வரும் குறுக்கெழுத்துப் போட்டிகளுக்கு பெரும்பாலும் பரிசுகள் தருவதில்லை. GRE, TOEFL எழுதும் மாணவர்களும், சாய்வு நாற்காலியில் அறுபதைக் கடந்த சில துடிப்பான இளைஞர்களும் பென்சில் வைத்து விளையாடும் விளையாட்டாகவே இருந்து வந்தது.

ஆனாலும் சு-டோ-கு வோ எல்லோரையும் இழுக்கும் விளையாட்டாக இருக்கிறது. வெறும் எண்கள் தான் அதனால் மொழிப்புலமையோ, நயந்தாராவின் உதட்டை சமீபத்தில் கடித்தவரின் பெயரோ, எஸ்.ராமகிருஷ்ணனின் முதல் நாவல் பெயரோ தெரிந்திருக்கவேண்டியதில்லை. எண்கள்... எண்கள்.. எண்கள். "பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு" என்பது போல 1 முதல் 9 வரையிலான எண்களை 3x3 கட்டத்திலும், குறுக்கும் நெடுக்குமாக வரச்செய்யவேண்டும். ஒரே நம்பர் ரிப்பீட் ஆகக் கூடாது. ஒரு C++ அல்லது ஜாவா மென்செயலியில் இதன் விடைகளை இலகுவாகக் கண்டுபிடித்துவிடலாம் என்றாலும், பென்சில் மற்றும் பேப்பரை வைத்து விளையாடுவதில்தான் கிக்கே. சுடோகுவை எப்படி கைகொள்வது என டிப்ஸ் இங்கே http://www.sudoku.com/howtosolve.htm

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

தமிழ்.நெட்டில் 1998ன் ஏப்ரல் மாத இறுதியில் பாவேந்தர் பாரதிதாசனின் வாரம் கொண்டாடப்பட்டது.

பலரும் தங்களுக்குத் தெரிந்த, தங்கள் கைவசம் இருந்த பாரதிதாசன் கவிதைகளை எடுத்து பகிர்ந்தனர். அப்போது கவிதைகளையும், கட்டுரைகளையும் படித்து இன்புற்று இருக்கையில் கிடைத்த இன்னோர் தமிழ்.நெட் புதையல் தான் இந்த குறுக்கெழுத்துப் போட்டி. பாரதிதாசனை வைத்தே புனையப்பட்ட போட்டி. போட்டிக்கு முழுவிடை எனக்குத் தெரியாதெனினும் புதிரைத் தயாரித்தவர்/எழுதியவர் இந்த வாரக் கடைசியில் விடை பகிருவார் (என நம்புகிறேன் :-))

தமிழ்.நெட் முத்துக்கள் தொடரும்....!

- அலெக்ஸ் பாண்டியன்
15-June-2005

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

நன்றி: தமிழ்.நெட்; இதனை எழுதியவர் "தி.கோ.க.ர";
பாவேந்தர் வாரம் - Crossword Puzzle - இது தற்போது இணையத்தில் இல்லை.
25-April-1998

இணையர் கணினித்திரை அளவே துணை ;-)
------------------------------------------------------------
மறுப்பு: முரசு எழுத்துருக்கள் இல்லாதோரும் 14" திரையை விடக் குறைந்த கணினி திரை உள்ள நரையற்ற வாலிபர், திரை பெற்ற வயோதிகர் எவருமே உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

புகுக (முரசு; 14" +) புகல்வேண்டா= (ஏனையோர்)

முதலில் இந்த முயற்சிக்கு பொறி தந்த நண்பரின் நேற்றைய அஞ்சலுக்கு ஒரு முழு நன்றி. ;-)பின்னர் இதில் பொறுமையாய் எவரேனும் ஈடுபட்டால் அதற்கு அரை நன்றி :-(

- (எழுதியவர் - தி.கோ.க.ரா -...!)

குறுக்கெழுத்துப்புதிர்
-----------------
Image hosted by TinyPic.com

நிரப்பற் குறிப்புக்கள்
-----------------

***** : அடைக்கப்பட்ட கட்டம்; இதனுள் எழுத்து ஒன்றும் வராது

<குழப்பமுற்று வந்துள்ளது>: சொல்லில் உள்ள ஒழுங்குப்படி எழுத்துக்கள் குறுக்கெழுத்துக் கட்டங்களில் வந்திருக்கவில்லை

<பின்னிருந்து முன்னாக>: சொல்லின் எழுத்துக்கள் கடைசியிலிருந்து முதலாவதாக பின்புறமிருந்து ஆரம்பித்து எழுதப்பட்டுள்ளன. (தலைக்கீழ்)

<எண்>: இ·து இலக்கங்களினால் மட்டும் நிரப்பப்படும் கட்டங்கள் (0-9)

(X): எடுக்கும் கட்டங்களின் எண்ணிக்கை

குறிப்பு: சுலபத்திற்காக மூலைவிட்டம் வழியே குறுக்காகவும் சில சொற்கள் தர
முயற்சித்துள்ளேன்; தேவைக்கு அதிகமாக கட்டங்களைச் சிறிது சிறிதான
உபசொற்களாகவும் தர முயற்சித்துள்ளேன். கண்டுபிடிக்கும் சுலபத்திற்காக.
அவை மேலும் குழப்புவதாக அமையாது என்றும் நம்புகிறேன். ;-)

விடைகள் வேறொரு நாள் காண்போம்.

அ. மேலிருந்து கீழ்
----------------

1. பாரதிதாசன் எழுதிய பத்திரிக்கை ஒன்று இந்தியா, இலங்கை எல்லாம் இதுவாம்! (5)
2. பாரதிதாசன் தமிழுக்குத் தந்த பரிசு ஒன்று <குழப்பமுற்று வந்துள்ளது> (8)
4. பாரதிதாசன் தமிழர் மனைக்காய் ஒளிர விட்டது (8)
6. பாடல்களில் மிக அழகி; பாரதிதாசனிலும் இ·து உண்டு (3)
9. உலகின் கண்ணில் இவள் விதவை; ஆனால், அவளின் கண்ணிலோ அப்படி அல்ல (2)
10. இரட்டைச் சொற்கள் என்றால் இன்றைக்கு "உணவு என்ன?" ஒற்றைச்சொல் என்றால் தயைகூர்ந்து "சத்தமிட்டுச் சொல்லாதீர்." (4)
11. பெண் கண்களும் இதுவாகலாம் கையெடு ஆயுதங்களும் இதுவாகலாம் என்றார் பல கவிஞர் <பின்னிருந்து முன்னாக> (2)
13. இடுக்கண் வருங்கால் இச்செயல் புரிக ;-) (2)
15. பாரதிதாசன் சுயமயாதை இயக்கத்தே சேர்ந்த ஆண்டு <எண்> (4)
17. வேலன் வியாபித்திருப்பதும் இதுவே; வேங்கை பாயக் கண்டு வியத்திருத்தலும் இதுவே (2)
18. இது பொய்த்தால், கோனுயர்தலும் இல்¨லை குடி உயர்தலும் இல்லை என்றார் மூதாட்டி (2)
19. ஆண்டுக்காலத்தே முன்னிருக்க ஒற்றை எழுத்தால் இழைத்திருக்கும் (1)
20. பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் <எண்> (1)
21. '21 மேலிருந்து கீழுக்கு' தங்கி வாழ தாங்கி தானம் செய்தவன் (2)
22. பாரதிதாசன் இதழாய்த் தொடங்கமுன் அதன் முன்னரே தன் பெயர்நிலத்தே கொடியாய்க் கிடந்தது <பின்னிருந்து முன்னாக> (3)
23. அமைச்சர்கள் இதன் மரியாதையே வெகுவாக மழுங்கடித்துவிட்டனர் என்கிறன தமிழ்ப்பத்திரிகைகள் (3)
24. பாரதிதாசன் இன்னொரு வாரம் மேலாக இருந்திருந்தால் அவர் எட்டியிருப்பது <எண்> (2)
25. தமிழிற்கும் பல இடங்களில் பாவேந்தர் இதன் தலைவர்; பாண்டிச்சேரி அரசியலிலும் கூட பாரதிதாசன் இதன் தலைவர் (2)
28. வெள்ளெழுத்துக்காரன் இல்லையென்றால் பிறர் கையிருக்கும் இது காணக் கண்ணாடி ஏன் ஒருவனுக்கு? <பின்னிருந்து முன்னாக> (2)
29. கால் உள்ள மாது என்றால் கண்டவர்க்கே காதல் வரும்; காலில்லா மாது என்றால் கனவிலும் காமம் வரும் ( நிர்மலா சுரேஷின் ஆ.வி. பொன்விழாக்கவிதை?) (2)ஆ. இடமிருந்து வலமாக
--------------------
1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் நாயகன் இங்கு குழம்பிக்கிடக்கிறான் <குழப்பமுற்று வந்துள்ளது> (4)
3. பாரதிதாசன் சஞ்சரிக்க விடக் கூவியது கொஞ்சக்காலம் <பின்னிருந்து முன்னாக> (3)
5. பாரதி இடத்தும் சம்பந்தப்பட்டது; பாரதிதாசன் இடமும் சம்பந்தப்பட்டது <குழப்பமுற்று வந்துள்ளது> (6)
7. பல பேர்கள் சேர்ந்து இருப்பதால் பழம் தமிழில் இ·து இந்தப் போரில் ஆயிற்று. (2)
8. பெரியார் கண்ட தாசனார் கசிபு <குழப்பமுற்று வந்துள்ளது> (5)
10. இதை வாசிப்பவர் எல்லாம் இதிலே பிணைத்தே உளனர் (4)
13. வேலையில்லாதவன் வேலையா பூனையைப் பிடித்தலும் இப்போக்கிரித்தனம் பண்ணலும்? (2)
16. அன்றைய பெரியார் இதுதான் தன் காலில் நிற்கும் மனிதனுக்கு தேவை என்று கண்டார்; இன்றைய அவர் பெயர் சொல் கொள்கை வழி வரு சிறியார், பிறர் காலில் விழுதலே இக்கொள்கையின் இழிந்த முடிபாய்க் கொண்டார் (6)
17. இச்செயல் செய்தல் இறத்தலுக்குச் சமம். (2)
21. வைர மரமாகவும் நிற்கும்; வரண்ட நிலமாவும் நெடுக்கும் (2)
23. ஒரு கால் இடை சேர்த்து நடக்க போதை தரும் இப்பொல்லா மது (2)
24. இதன் இறுதி இறுதிப்படும் காலத்தே பாரதிதாசன் தன் இறுதி கண்டற்றார் <எண்> (2)
25. என்னை வெட்டிப்போட்டாலும் சொல்வேன் விபூதிக்காரனும் இந்நாமக்காரனும் ஒன்றே (2)
30. பாரதிதாசன் ஆசிரியசேவைக்காலம் <எண்> (2)
31. தமிழர் கற்ற முதலாவது மெய் இதுவேயாம் என்றால் அது பொய்யல்ல பொய்யல்ல (1)
32. i. காயிலே புளித்தாலும் கனியிலே இனித்தாலும் வாயிலே வைக்கவொண்ணா எட்டியாய் கசத்தாலும் எல்லாமே எல்லோர்க்கும் இத்தனைக்குள் அடங்காதோ? <பின்னிருந்து முன்னாக> (2)
ii. பாரதிதாசன் கொட்டிய முரசு <குழப்பமுற்று வந்துள்ளது> (6)
33. இது ஒரு நவீனமான சொல் (2)


இ. மூலைவிட்டம் வழியாக (இடமிருந்து வலமாக) ----------------------
6. விரைந்தோடும் திரவமும் இல்லை; உறைந்திருக்கும் திண்மமும் இல்லை (3)
9. கவிதைகளைச் சுவைத்தலும் இச்செயல் வகைப்படும் (2)
12. இது இன்றித் தீபம் எரியுமோ? (2)
21. பால் வேறுபாடின்றி எல்லாக்குழந்தைகளும் குடிக்கும் (2)
27. பூனைகள் இதைக் புசிக்கும் நேரம்கூட பொருட்டாய்க் கொள்வதில்லை <பின்னிருந்து முன்னாக> (2)ஈ. மூலைவிட்டம் வழியாக /
(வலமிருந்து இடமாக) /
----------------------
2. வாழ்க்கையிலோ வாழ்விடத்திலோ இதிலேறிச் செல்லுகையில் ஏற்படும் படிப்பினைகளை மனதில் வைத்துக் கொள்ளுதல் தடக்கி விழாமல் முன்னேற உதவும் <பின்னிருந்து முன்னாக> (2)
13. வெள்ளையில் இது பட்டால் பளிச் என்று கண் இளித்திருக்கும் <பின்னிருந்து முன்னாக> (2)
23. முருகன் இவன் மருகன் <பின்னிருந்து முன்னாக> (2)
26. ஒரு நாட்டுக்கு மறுநாடு இதுவாகலாம்; ஒரு மனிதனுக்கு மறு மனிதன் இதுதானாகலாம். ஆனால் தன் உயிர் நண்பன் இராமனுக்குக் குகன் இதுவாகுதலும் கூடுமோ ? (பின்னிருந்து முன்னாக) (2)

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

15 நிமிடப் புகழ்

15 நிமிடப் புகழ்
--------------

சில மாதங்கள் முன்பு, சுஜாதா, கற்றதும் பெற்றதும் - விகடன் தொடரில், வலைப்பதிவு எழுதுவோர் 15 நிமிடப் புகழுக்காக ஏங்கி எழுதுகிறார்கள் என்ற தொனியில் எழுதியிருந்தார்.

இந்தப் பதிவுக்குப் போவதற்கு முன் - இரண்டு "முக்கிய" செய்திகள் (தமிழ் வலைப்பதிவு நல்லுலகிற்கு)

1. சந்திரமுகியில் ஜோதிகாவின் லகலகலக வெற்றிக்குக் இந்த சின்னப்பையன் தான் காரணம் என்றால் மேல்கைண்ட் அன்பர்கள் என்னை அடிக்க வரக்கூடும் என்றாலும் அதுதான் உண்மை ;-)

2. தமிழ்மணம் தோற்றுவித்த காசி, சிறுவாணித் தண்ணிர் அருந்தவந்துவிட்டார் என்பது ஒரு புறம் மகிழ்ச்சி. வருக வருக..! இந்த சுட்டியில் உள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுக்காக வீட்டிற்கு ஆட்டோ வராமல் இருக்கவும் (தற்போது தமிழகத்தில் இருப்பதால்) ஜாக்கிரதையாக இருக்க வேண்டுகிறேன் :-) காசியின் சேவை தமிழ் வலைப்பதிவு உலகத்திற்குத் தேவை...!

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

சில வாரங்கள் முன்பு, அம்பலம்.காம் அரட்டையில் சுஜாதாவிடம், தமிழ்மணம் பற்றி தெரியுமா, அங்கு 500+ வலைப்பதிவர்கள் பல்வேறு விஷயங்கள் பற்றி எழுதுகிறார்களே.. சில வலைப்பதிவுகளில் செறிந்த விஷயங்கள் இருக்கின்றனவே என கேட்டேன், அதற்கு பெரும்பாலோனோர் வலைப்பதிவுகளில் irresponsible behaviourஐக் கடைப்பிடிப்பதாகக் கூறினார். ஆனால் தமிழ்மணம் மற்றும் இன்ன பிற தமிழ்வலைப்பதிவு சமாச்சாரங்களை கவனித்து வருவதாகவும் கூறினார். (சமீபத்து தேசிகன் ஏற்பாடு செய்த சுஜாதா கூட்டத்திலும் கிட்டத்தட்ட இதே மாதிரியான பதிலைக் கூறியுள்ளார் ?)

பலரும் ஏன் வலைப்பதிய வந்தனர் ? பெரும்பாலோனோர் முன்னர் மடற்குழுக்களில் பங்கேற்று பின்னர் வலைப்பதிய வந்துள்ளனர். தமிழ்மணம் திரட்டிக் கொடுக்கும் இலவச சேவையும் பலரை உற்சாகப்படுத்தியது. பலர் புதிதாக நேரடியாக வலைப்பதியவும் வந்துள்ளனர்.

மடற்குழுக்களில் பங்குகொள்வோர் பலரும் சில சமயங்களில் மடற்குழுக்களின் moderator எனப்படும் மட்டுறுத்தனரின் உறுத்தலால் வெறும் மடல் பெறுநர்களாகவே இருந்துவிட்டனர். ரொம்பவும் கை துறுதுறுத்தால், தனி மடலில், எழுதியவருக்கு மறுமொழி அளித்தனர். எனக்குத்தெரிந்த பல தமிழ் மடல் குழுக்களில், இதைக் கண்கூடாக காணமுடிந்தது. பல சமயங்களில் முதன்மை மட்டுறுத்தனரைவிட சக-இணை மட்டுறுத்தனர்களின் ஆதிக்கம் அதிகமாக, சிலர் ஒதுங்கிக் கொண்டனர். சில இடங்களில் பஞ்சாயத்து முறை மாதிரி 'நாட்டாமை' செய்யும் வழக்கங்களும், 'நாட்டாமை தீர்ப்ப மாத்து' போன்ற கோஷங்களும் நிறைந்தது.

சில குழுக்களில், சில சமயங்களில், குழுவின் சொந்தக்காரர் (ஓனர் ?) கடுஞ்சொற்களில் unparliamentry statements) சிலரைக் காய்ச்ச, சிலர் வெறுத்து ஒதுங்கியும் விட்டனர். மேலும் பலருக்கு வேலை/ஜோலி என நேரமின்மை போன்ற காரணங்களும் சேர, மடற்குழுக்களிலிருந்து ஒதுங்கினர். ஆனாலும் தமிழில், எழுதுதல், படித்தல் போன்ற போதையிலிருந்து விடுபட முடியாதவர்களுக்கு, வலைப்பதிவு ஒரு வரமாக அமைய, தனது பதிவில் தனக்குப் பிடித்த, பிடிக்காத விஷயங்கள் அனைத்தையும் தனது பாணியில், தனக்குத் தெரிந்த நடையில் எழுதவும், இல்லை எழுத முடியாவிட்டால், சும்மா இருக்கவும் கூட சுதந்திரம்...

இங்கும் சிலர் வெறுத்து ஓடும் அளவிற்கு பின்னூட்டங்கள், பின்னூட்டப் பதிவுகள் என அவ்வப்போது நடைபெறுகிறது. இருந்தாலும் 65% சதவிகிதத்திற்கு மேலே பதிவுகள் - நல்ல செய்திகளை / அலசல்களை / படங்களைத் தருகிறது. பல பதிவுகளும் சினிமா / டிவி / அரசியல் / தங்கள் நினைவலைகள் சார்ந்த பதிவுகளாக இருந்தாலும், படிக்க நன்றாக உள்ளது.

நாம் நினைத்ததையே நம்மைப்போல இன்னோருவரும் ஏதோ நாட்டில் இருந்து யோசித்துள்ளார் என்னும் பகிர்தலே இந்த வலைப்பதிவுகளின் வெற்றி. அதையும் தாண்டி, தமிழ் மீது ஆர்வம் கொண்டவர்கள் பலருக்கும், வார இதழ்களின் சினிமா, தொப்புள், மார்பு படங்கள் தாண்டி, படிக்க ஆர்வமூட்டும் செய்திகள், கட்டுரைகள் என கிடைப்பதும், பின்னூட்டமிட்டு உடனே கருத்து சொல்ல கிடைக்கும் வாய்ப்பும் பல நண்பர்களைப் பெற்றுத் தந்துள்ளது. சில ஊர்களில் வலைப்பதிவோரின் சந்திப்பும் நடைபெறுகிறது.

வலைப்பதிவுகள், தமிழ்மணம் மற்றும் யுனிகோடில் தமிழ் என்னும் இந்த 2003-2005 காலகட்டத்தை இணையத்தில் தமிழின் பொற்காலம் - 2 என என்னளவில் கருதுகிறேன். இதே காலங்களில் தான் இணையத்தில் பல புதிய தமிழ் செய்தி மற்றும் பத்திரிக்கைத்தளங்கள், இணைய இதழ்கள் -
தமிழோவியம்,
திண்ணை,
தட்ஸ்தமிழ்.காம்,
மரத்தடி.காம்,
ராகாகி,
மரபிலக்கியம்,
சந்தவசந்தம் போன்ற குழுக்கள் உச்சத்தை எட்டின.

திசைகள் வரவு பல புதிய படிப்பாளர்களுக்கு வேறு ஒரு இலக்கிய கோணத்தையும் காட்டியுள்ளது. இவை தவிர
அகத்தியர்,
தமிழுலகம்,
ஈ-சுவடி
போன்ற மூத்த குழுக்கள் இன்றளவும் தங்கள் நோக்கதைச் செவ்வனே செயல்படுத்தி வருகின்றனர்.

நெசமாலுமே சொல்கிறேன் இணையத்தில் தமிழ் குழுக்களும், தமிழ்மணமும், வலைப்பதிவுகளும் வந்த பிறகு பலருக்கு ஒரு போதையாகவே ஆகிவிட்டது. தொடர் இணைய இணைப்பு இருப்பவர்களுக்கு ஒவ்வொரு சில மணிநேரத்திற்கும் தமிழ்மணத்தை எட்டிப்பார்த்து, பின்னூட்டமிடாவிட்டால் கைகளில் நடுக்கம் கூட ஏற்படுகிறது என கேள்வி :-)

பொழுதுபோக்கு, அரட்டை, அடிதடி என்பதைத் தாண்டி பல நல்ல விஷயங்களும் நடைபெறுகிறது. 15 நிமிடப் புகழுக்காக மட்டுமே இவை வெற்றி பெறவில்லை. தமிழில் எழுதுவதை மறந்த பலருக்கும் மீண்டும் ஒரு பாட்டை போட்டுக் கொடுத்த இணையத்தில் தமிழ் குழுக்களுக்கும், தமிழ்மணத்திற்கும், காசிக்கும் மற்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நன்றி.

- அலெக்ஸ் பாண்டியன்
15-June-2005

Tuesday, June 14, 2005

இணையத்தில் தமிழின் பொற்காலம் - 1a

இணையத்தில் தமிழின் பொற்காலம் - 1a (தொடர்கிறது)
-------------------------------------------------

தமிழ்.நெட்டில் பேசப்படாத தலைப்புகள் இல்லை. அப்போது தமிழில் எழுதப்படும் ஒரே மடல்குழுவாக இருந்ததால், பல பெரிய தலைகளும் இதில் தான் துவங்கினர். எல்லா தலைப்புகளிலும் கருத்துக்கள் வெளியாகும். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கை, கனடா, அரபு நாடுகள், அமெரிக்கா, லண்டன் - அரசியல், சினிமா, இலக்கியம், வரலாறு என தமிழர்தம் அரட்டை தான். இதில் ஏன் பொற்காலம் எனக் குறிப்பிடுகிறேன் என்றால் இன்றைக்கு திஸ்கி என பல குழுக்களிலும் உபயோகப்படுத்தும் ஒரு standard உருவாகக் காரணம் அப்போது தமிழ்.இணையத்தில் இருந்த பல்வேறு ஆர்வலர்கள்தான். பின்னர் வெப்மாஸ்டர்/திஸ்கி என தனிக்குழு ஏற்படுத்தி தொழில்நுட்ப விஷயங்கள் உரையாடப்பட்டது. அதே போல், Project Gutenberg என்பதைப் போன்ற ஒரு விஷயத்தை தமிழில் செயலாக்க முனைந்ததும் இங்குதான் - இது Project Madurai http://www.tamil.net/projectmadurai/
என்ற முனைப்புடன் பல ஆர்வலர்களால் செழித்தது. சிலர் பொதுவில் உள்ள தமிழ் நூல்களை டைப் அடித்துக் கொடுத்தனர். சிலர் பிழை சரி பார்த்தனர். சிலர் லே-அவுட் செய்து கொடுத்தனர். குழுவாக செயல்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் இலக்கிய வரிகள் இன்று இணையத்தில் பொதுவில், இலவசமாகக் கிடைக்க மதுரைத் திட்டமே முதற்படி. யார் யார் என பட்டியல் இங்கே http://www.tamil.net/projectmadurai/pmcoord.html

என்னென்ன இலக்கியங்கள் மின்பதிப்பேற்றப்பட்டுள்ளது என அறிய இங்கே சொடுக்கவும் http://www.tamil.net/projectmadurai/chrono2.html - திருக்குறள், ஆத்திசூடி, திருவாசகம், திவ்யப் பிரபந்தம், திருமந்திரம், பாரதியார் பாடல்கள், நளவெண்பா, நாலடியார், திருவருட்பா, திருவிவிலியம், ஆசாரக்கோவை, அபிராமி அம்மன் பதிகம், அபிராமி அந்தாதி, கலேவலா, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், பாரதிதாசன் பாடல்கள் என பட்டியல் நீளுகிறது. எல்லாம் PDF கோப்பில் இலவசமாகக் கிடைக்கும்.

என்னைப்போன்ற படிக்க மட்டும் ஆர்வம் காட்டும் பலருக்கும் தமிழ்.இணையம் ஒரு பெரிய களஞ்சியமாகவே இருந்தது. பள்ளியோடு மறந்து விட்ட பல்வேறு விஷயங்கள் தமிழ்.இணையம் மூலம் மறுபடியும் தெரிந்து கொண்டு, தமிழைக் கொண்டாட ஒரு வாய்ப்பு. அதுவும் பல திறமையாளர்கள். பல்வேறு துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் தமிழில் எழுதுவதும், அதுவும் எல்லோருக்கும் படிக்க இலகுவான தமிழில் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பாணியில் எழுதுவதும் பலரையும் கவர்ந்து இழுத்தது. பல ஜாம்பவான்கள்..!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் பாணி.. சிலர் கவிதை, கதைகளில் விற்பன்னர்... சிலர் நகைச்சுவைக் கட்டுரைகளில்.. சிலர் நையாண்டிக் கட்டுரைகளில்... சிலர் forward செய்வதற்கே இருந்தனர் :-) (அதாவது மற்ற தளங்களில் காணப்பட்ட விஷயங்களைப் பகிர்பவர்கள்). ஆனாலும் ஒரு மஜா இருந்தது. எழுதப்பட்ட விஷயங்களில் வீர்யம் இருந்தது. கவலைகள் பகிரப்பட்டன.

பாலா பிள்ளை, டாக்டர்.கல்யாண், மணி மணிவண்ணன், டாக்டர்.ஜெயபாரதி, எல்லே ராம், எல்லே சுவாமிநாதன், கந்தையா ரமணீதரன் (எண்ணற்ற பெயர்கள்), ஆசிப் மீரான், சடையன் ஷாபு, சிங்கை பழனி, சிங்கை கிருஷ்ணன், இண்டி ராம், கோவர்தனன் ராமச்சந்திரன், டாக்டர்.ரமணி, கே.லோகநாதன், நாக.இளங்கோவன், பூபதி மாணிக்கம், வாசன் (நியு மெக்சிகோ), இராம.கி, சுலைமான் அண்ணன், ரங்கபாஷ்யம் கோஷ்டி (இவர்கள் அடிக்காத கூத்து இல்லை!), அன்புமணி, வேல்முருகன், ஜெர்மனி (தற்போது தென் கொரியா) நா.கண்ணன் (காசுமி சான் ?), விக்ரம் குமார், நாசா.டாக்டர் நாக.கணேசன் ஜெயபாலசிங்கம், வ.ஐ.சு.ஜெயபாலன், கேப்டன் மாகோ, பால்மர், கோகுலக் கண்ணன், நியுசிலாந்து குமாரபாரதி, கனடா சுவாமிநாதன் சங்கரன், தமிழரசன் (இவரின் அதீத பிராமணீய எதிர்ப்பு), ஹாங்காங்கிலிருந்து டாக்டர்.பிலிப் என பலரும் பலவித தலைப்புகளில் எழுதிய பொற்காலம். (பெயர் விட்டுப்போனவர்கள் மன்னிக்க)

தேசிகனின் தமிழ்.நெட் சுஜாதா பக்கங்கள் அந்தக் காலங்களிலேயே பிரபலம். சுஜாதாவே தனக்கென ஒரு தளம் வைத்திருந்தார் க்ளிக்சுஜாதா - அவரின் சில சிறுகதைகள் அங்கு இருந்தது. இத்தளம் தற்போது இல்லை. இந்தத் தளத்தைத் துவக்கிவைத்த நாளன்று தேசிகன் தமிழ்.நெட்டில் இட்ட மடலொன்றும் காணலாம். தேசிகனின் சுஜாதா பக்கங்களைத் தற்போது http://www.employees.org/~desikan/sujatha.htm என்ற தளத்தில் காணலாம்.

உங்கள் கையில் நேரம் மற்றும் பொறுமை அதிகம் இருந்தால், உங்களிடம் பழைய அஞ்சல்/இணைமதி மற்றும் திஸ்கி எழுத்துரு இருந்தால் இங்கே தோண்டவும். http://www.tamil.net/list தங்கமெனும் பல தமிழ்ப் படைப்புகளைப் படிக்கலாம். ரசிக்கலாம்.

எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு வருவது போல, அந்த பொற்காலத்திற்கும் சீக்கிரமே நிறைவு வந்தது. பொற்கால நாட்களில் பற்பல சண்டைகளும் சச்சரவுகளும் நடந்தாலும், சீக்கிரமே எல்லோரும் ஒண்ணு மண்ணு ஆகி மீண்டும் நட்புடன் பழகுவர். ஆனாலும் சில சமயங்களில் எழுதுபவர்களை தனிப்பட்ட முறையில் மிக மோசமான வார்த்தைகளில் புண்படுத்தியதால், பலரும் தமிழ்.நெட்டிலிருந்து விலகி தனி மடலாடற்குழுக்கள் ஏற்படுத்தினர்.

மரத்தின் கிளையில் நின்றுகொண்டு அடிமரத்தை வெட்டும் போக்கு நடந்தது. அப்போதுதான் யாகூ, ஈ-குருப்ஸ் போன்றவை இலவச சேவைகள் அளிக்கத் தொடங்க.. பலரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல குழு தொடங்கினர் அல்லது பங்குகொண்டனர். அவரவர்க்கு அதது என்பதுபோல விருப்பம் உள்ளவர்கள் இந்த மடலாடற்குழுக்களில் இருந்தனர். தமிழ் இணையத்திலிருந்து விலகி வந்த பலரும் இந்த குழுக்களிலும் உறுப்பினராய் உள்ளனர். இன்றளவும்..! அப்டி இருந்த தமிழ்.நெட் இப்ப எப்டி இருக்குன்னு பாக்கணுங்களா ? இங்க தட்டுங்க. www.tamil.net

இதைத் தவிர இந்த காலகட்டங்களில் தான் பல்வேறு தமிழ் தின/வார பத்திரிக்கைகளும் இணையத்திற்கு வந்தன. ஒவ்வொன்றும் வெவ்வேறு எழுத்துருவைத்து கொடுமைப் படுத்தினாலும், அதிக அளவில் இணையத்தில் தமிழ் புகுந்தது இந்த கால கட்டங்களில் என்ற வகையில், என்னளவில், 1997 முதல் 2001 ஆண்டு வரையிலான காலகட்டத்தை இணையத்தில் தமிழின் பொற்காலம்-1 என்றே குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழ்.இணைய நாட்களில் நான் ரசித்த, பங்கு கொண்ட சில படைப்புகளை/விஷயங்களை வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

(இ.த.பொ தொடரும்...)

- அலெக்ஸ் பாண்டியன்
14-June-2005

இணையத்தில் தமிழின் பொற்காலம் - 1

இணையத்தில் தமிழின் பொற்காலம் - 1
-----------------------------------

தமிழ்மணத்தின் வீச்சால் பல (500+) மக்கள் வலைப்பதிவில் தமிழில் எழுதத்தொடங்கி இன்று தினமும் 50-60 பதிவுகள் எழுதப்பட்டு திரட்டப்பட்டு படிக்கப்பட்டு, பின்னூட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டும் (சில!) வருகிறது. தமிழில் இவ்வளவு மக்கள் எழுதுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது எழுதப்படும், விவாதிக்கப்படும் பல விஷயங்கள் பல வருடங்கள் முன்பே தமிழிலேயே, இணையத்தில் எழுதப்பட்டு, விவாதிக்கப்பட்டு, சண்டைகளும், இணக்கங்களும், நட்புகளும் தழைத்தோடிய அந்த பொற்காலத்தை (என்னளவில்) தமிழ்மணம் மூலம் இணையத்தில் உலாவரும் புது வாசகர்களுக்கும், எழுதுபவர்களுக்கும் அறிமுகப்படுத்துவதே இந்தப் பதிவின் நோக்கம்.

நான் இணையத்தில் உலாவர ஆரம்பித்தது சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்னர். முதலில் செய்தித் தளங்களும், ஹாட்மெயில், யுடோராமெயில் போன்ற தளங்களுடனே துவங்கிய பழக்கம், ஒரு நாள் யாகூவில் (அப்போ கூகிள் இல்லை!) தமிழ் என இட்டு தேடிய போது, விழுந்த ஒரு கனி தான் தமிழ்.நெட் எனப்படும் தமிழ் இணையம். பாலா பிள்ளை அவர்களால் துவங்கப்பட்டு, முத்து அவர்களின் முரசு அஞ்சல் மூலம் பலரும் தமிழில் உரையாடும் / எழுத்தாடும் மடலாடற்குழு என அறிந்து, பலதும் கற்றும், பலரையும் நண்பர்களாகப் பெற்று, சுமார் 3-4 ஆண்டுகள் தமிழ், இணையம், குழுக்கள், எழுத்துருக்கள் என இருந்த அந்தக் காலத்தைத் தான் முதல் பொற்காலம் என்பேன் (அப்ப இரண்டாவது ஒண்ணு இருக்கா ? இருங்க அதுக்கு அப்புறம் வர்றேன்)

************* (தமிழ் இணையத்திற்கு முன்பாகவே தமிழ் எழுத்துரு முயற்சிகள் சிங்கப்பூர் நா.கோ மற்றும் இன்ன பிற ஆர்வலர்களால் சிறப்பாகச் செய்யப்பட்டது... தமிழ் எழுத்துரு வரலாறை தெரிந்துகொள்ள இந்தப் பக்கங்களில், விவாதங்களில் உள்ள மடல்களைப் படிக்கவும். http://www.infitt.org/tscii/archives/msg00001.html என்ற சுட்டியில் டாக்டர்.கல்யாண் மடல்; அதற்கு அடுத்த மடலில் சுஜாதாவின் பதில்). எழுத்துரு வரலாறில் ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம்.
******************************************************************************

1997 பிற்பகுதி முதல் 2001ஆம் ஆண்டு வரை தொடர்ந்து தமிழிணையத்திலும், அதன் offshootஆகத் துவங்கப்பட்ட பல்வேறு குழுக்களிலும் இருந்தவர்கள், பங்கு கொண்டவர்கள் நிச்சயம் இதனை வழிமொழிவார்கள் என நினைக்கிறேன். "கற்றது கைம்மண் அளவு, கல்லாதது இணைய அளவு" என்பது நிதர்சனமானது தமிழ் மடலாடற் குழுக்களில் தான். முதலில் முரசு அஞ்சலின் இணைமதி, இணைகதிர், டாக்டர்.கல்யாணின் மயிலை போன்ற எழுத்துருக்களில் நடந்த தமிழ் இணைய மடலாடல்கள், பின்னர் தமிழ் இணைய தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆர்வலர்களால், திஸ்கி எனப்படும் தகுதரம் உருவாக்கப்பட்டு பல மடற்குழுக்குகளும் இன்றளவில் திஸ்கியிலேயே நடை பெற்று வருகிறது. (தற்போது சில குழுக்கள் யுனிகோடில் இருந்தாலும்)

இணையத்தில் தமிழ் உலா வந்த விண்டோஸ்-95 மற்றும் 98 காலங்களில் யுனிக்ஸ் - அதாவது HP, Solaris இன்ன பிற யுனிக்ஸ் வகைகளும் பலரும் உபயோகித்து வந்தனர். அதனால் யுனிக்ஸ்க்கான தமிழ் எழுத்துருக்களும் வந்தன. அகரம் எனப்படும் செயலியும் அதன் தமிழ் எழுத்துருவும் எனக்குப் மிகப்பிடித்தமான எழுத்துரு. கண்ணில் ஒத்தி (ஒற்றி?)க் கொள்ளலாம் போல இருக்கும். இதனை வடிவமைத்தை 'நாகு' தற்போது எங்கு இருக்கிறார் என தெரியவில்லை.

அதே மாதிரி முரசு அஞ்சலின் ஆரம்ப கட்டங்களில், யுடோரா செயலியுடன் வந்த அஞ்சல்-text அஞ்சல்-system போன்ற எழுத்துருவும் எனக்கு மிகவும் பிடித்த எழுத்துருக்கள். அதற்குப் பிறகு திஸ்கியிலும், பின்னர் TAB, TAM தற்போது யுனிக்கோடு என encoding systems வந்து ஒவ்வொன்றிலும் பல எழுத்துருக்கள் வந்துவிட்டன. உங்களுக்குப் பிடித்த (கண்ணுக்குக் கனிவாக இருக்கும்- both on screen and on printout) free ttf based TSCII / Unicode fonts -எழுத்துருக்களைப் பட்டியலிடுங்களேன் ? (ஏன் எனவும் கூறவும்).

தமிழ்.இணையத்திற்கு வருகிறேன். (இ.த.பொ தொடரும்...)


- அலெக்ஸ் பாண்டியன்
14-June-2005

Monday, June 13, 2005

பாலகுமாரன் - கை வீசம்மா கை வீசு

பாலகுமாரன் - கை வீசம்மா கை வீசு

பாலகுமாரனின் இந்த நாவலை சுமார் 8 மாதங்களுக்கு முன்பு வாங்கியிருந்தேன் ஆனால் தற்போது தான் படிக்க முடிந்தது. மணியனின் இதயம் பேசுகிறது வார இதழில் தொடராக 80களின் இறுதியில் வந்தது (என நினைக்கிறேன்).

80களில் பாலகுமாரனின் கதைகளில் வருவது போல இதிலும் பெண், பெண்மனசு, ஆண்களால் அலைக்கழிக்கப்படும் பெண் போன்ற பாத்திரங்கள்.

பட்டம்மாள், தனது பெண் ராஜி என்னும் ராஜேஸ்வரியின் (தேவேந்திரனுடன்) திருமணம் தடைபட, சத்திரத்தில் இருக்கும் பாலிகைச் சட்டிகளைக் கரைக்க எடுத்துச் செல்லும் இடத்தில் கதை ஆரம்பித்து, பின்னர் பிளாஷ்பேக்காக விரைகிறது.

சுஜாதாவுக்கு ஸ்ரீரங்கம் என்றால், பாலகுமாரனுக்குக் கும்பகோணம். கும்பகோணத்து தேவதைகள் என எழுதவில்லையே தவிர, பாலாவின் (பாலகுமாரன் கதைகளை ரசிக்கும் பெரும்பாலானோர் அதுவும் பெண்கள், அவரை பாலா, பாலா என விளித்து உருகுவது பலருக்கும் தெரிந்திருக்கலாம்) கதைகளின் பெரும்பாலான மாந்தர் கும்பகோணத்து மனிதர்கள் தாம். கும்பகோணத்தைப் பற்றி பாலாவும் இந்த நாவலில் இப்படி எழுதுகிறார்.....

------
கும்பகோணம் ரொம்ப சந்தோஷமான ஊர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சை. தஞ்சையின் நெற்களஞ்சியமாய் கும்பகோணம் இருந்தது. காவிரியும் முடிகொண்டானும் உரசிப்போகிற பூமி அது. வண்டல் மண் இரண்டு மணிநேர நீர் பாய சேறாகும். மூன்று நாளில் புல் தலையெடுக்கும். ஒரு முறைக் கீறிப் புரட்ட, அதுவே உரமாகும். கண்ணுக்கெட்டின தூரம் வரை பச்சை பார்க்க முடியும். எது போட்டாலும் வளரும்.

ஜனங்கள் சந்தோஷமாய் இருந்தார்கள். எதையும் ரசித்தார்கள். காவிரி நீர் வரவால் சோற்றுக்கு கவலை இல்லை. சுள்ளென்று வெயில் அடிப்பதால் சுறுசுறுப்புக்குக் குறைவில்லை. ஆடலும் பாடலும் கோயிலும் பூஜையும் அங்கே மதிக்கப்பட்டன. விமரிசிக்கப்பட்டன.

ஆனால், பாராட்டு போலவே விமரிசனமும் துள்ளலாய்தான் வரும். நகைச்சுவை கலந்து ஆளை நோகடிக்கும். குத்தி நெஞ்சைக் கிழிக்கும். கூனிக் குறுகவைக்கும். வதைக்கும்.
--------------

மேற்கண்ட கும்பகோண மகிமை சத்தியமான உண்மை. கும்பகோணத்து மனிதர்களுடன் நெருங்கிப் பழகியிருந்தால் இது புரியும்.

கதையில் பட்டம்மாள், நாகராஜனுக்கு இரண்டாம் தாரமாய் "வசித்து" வரும் ஒரு பெண்மணி. மகள் ராஜியும், மகன் வெங்கடேஷ்உம் படிக்கும் காலகட்டத்தில் துவங்கி, ராஜி வளரும் காலங்களில் ஏற்படும் பெண் மனது/உடல் காயங்கள், பண்ணை வீட்டு ராஜசேகருடன் காதல்,
அதனால் ஏற்படும் விளைவுகள் என செல்ல, எல்லாம் மறந்து சென்னை வந்து தேவு எனப்படும் தேவேந்திரன் கூட தங்கும் போது மீண்டும் காதல், ஆனால் ஜாதி காரணமாய் தேவு வீட்டில் திருமணத்தை நிறுத்த, நடுவில் மணிகண்டன் என்னும் கட்டிட காண்ட்ராக்ட் ஆளுடன் ஒரு சஞ்சலம். எல்லாம் முடிந்து பஸ்ஸ்டாண்டில் நின்று தேவு காலில் விழுந்து கதறியும் அவன் தவிக்கவிட்டுப் போக, மீண்டும் குடும்பம் கும்பகோணம் திரும்புகிறது. ராஜி தனது டீச்சரைச் சந்திக்கச் செல்கிறாள். தனியாய் வாழும் டீச்சரின் குரலில் பாலகுமாரனின் சவுக்கடி சாட்டையடிகள். டீச்சர் கொடுக்கும் அட்வைஸ் தான் - கைவீசம்மா கைவீசு.

இன்றைய தமிழ் தொலைக்காட்சித் தொடர்களுக்கேற்ற கதை. மெகா சீரியல் அளவுக்கு இழுக்க முடியாவிட்டாலும், தேவிபாலா, பாஸ்கர் சக்தி மற்றும் இன்ன பிற சீரியல் ஸ்பெஷலிஸ்டுகளிடம் கொடுத்துவிட்டால், ரேட்டிங்கில் முதலிடத்தில் பெற வைத்துவிடுவதற்கான அனைத்து சம்பவங்களும் இக்கதையில் உண்டு.

-----------------------
கைவீசம்மா கைவீசு - பாலகுமாரன்
விலை ரூ.71.
விசா பப்ளிகேஷன்ஸ்,
திருமகள் நிலையம், சென்னை.
-----------------------

இந்த தொடர் எழுதப்பட்ட 80களின் இறுதியில் இந்தக் கதையின் தாக்கம் எப்படி இருக்கும் என புரிகிறது. தற்காலப் பெண்கள் இதிலிருந்து கொஞ்சம் வெளிவந்திருந்தாலும், இன்னும் பல பெண்கள் இந்தக் கதையில் ராஜிக்கு ஏற்படும் நிகழ்வுகளில் சிக்கி உழல்கின்றனர் என்பதும் உண்மை. நன்கு படித்த பெண்களும்.


பாலகுமாரனின் ரசிகர் தளம் இங்கே http://www.balakumaran.net/index.php அன்பர் சாகரன் நடத்தும் தளம்.

சில புத்தகங்களை http://www.udumalai.com/books/balakumaran.htm தளத்திலும் வாங்கலாம் என தெரிகிறது.

http://www.sysindia.com/emagazine/senthamiz/biography.html என்ற தளத்தில் ஏன் அவரை Navelist என குறிப்பிட்டுள்ளனர் என புரியவில்லை. விகடனில் நிறைய எழுதியிருப்பதால் Navelist ஆக்கிவிட்டனரோ :-)

- அலெக்ஸ் பாண்டியன்
13-June-2005

காவிரிக்கரையோரம்...!

முதலில் வலைப்பதிவு துவங்கியபோது (சுமார் ஒரு வருடம் முன்பு).. பாண்டியன் பக்கம் என்றே துவங்கினேன். பிறகு சில நாட்களிலேயே இன்னொருவரும் பாண்டியன் பக்கம் என வலைப்பதிய ஆரம்பிக்க, சரி நமது வலைப்பதிவு பெயரை மாற்றுவோம் என யோசித்ததில் சில எண்ணங்கள்.

தமிழ்மணத்தில் இந்த வார நட்சத்திரமாக வாய்ப்பளித்த தமிழ்மணம் நடத்துனர் / ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி..!

நட்சத்திரம் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது 2 விஷயங்கள்

1. ஸ்ரீப்ரியா நடித்த நட்சத்திரம் என்ற திரைப்படம் (ஞாபகம் இருக்கா - அவள் ஒரு மேனகை என்ற பாடலில் எஸ்.பி.பி குழைவார்)
2. சில மாதங்களில் இரவில் கிழக்குத் திசையில் வானத்தை கவனித்தால் தெரியும் ஒரு நேர்க்கோட்டில் அருகருகில் இருக்கும் மூன்று நட்சத்திரங்கள்

பலரும் வித்தியாசமான பெயர்களை தெரிவு செய்து வருகையில் நமது அடையாளம் என்ன என்று யோசித்ததில் அகப்பட்ட பெயர் தான் 'காவிரிக் கரையோரம்..!'

(பழைய) தஞ்சை மாவட்டத்தில்.... அந்தக் காலங்களில் ஆறுகளில் நீர் ஓடியது :-) ஆனி
மாதமென்றால் சுழித்துகொண்டு ஓடும். மேட்டூரில் (June-12) தண்ணீர் திறந்த 10ஆம் நாள் ஆற்றில் நுங்கும் நுரையுமாக தண்ணீர் வரும். முதல் சில நாட்களில் (வீட்டினர்) குளிக்க அனுமதிக்க மாட்டார்கள். அதற்குப்பிறகு சுமார் 5-6 மாதங்களுக்கு ஆற்றுக் குளியல்தான். அதுவும் அப்போது 501 பார் சோப், பொன்வண்டு பார் சோப் என நீல நிற கட்டி சோப்பை எடுத்துக்கொண்டு காலையில் ஒரு படையாக கிளம்புவோம். வீட்டிலேயே பல் தேய்த்திருந்தாலும், ஆற்றுப் படிகளில் செங்கல்லைத் தேய்த்து கொஞ்சம் பொடியாக்கி, தண்ணீர் படிகளில் ஏறி அந்தப் பொடியை நனைத்து, பல் தேய்த்து பின்னர் ஆண்கள் படித்துறையில் சுமார் அரை மணிநேரம் குளியல். சில தைரியமான (!) கூட்டாளிகள் ஓடிவந்து மதகிலிருந்து குதித்து எழுப்பும் நீர்த்திவலைகளில் மனம் குதூகலிக்கும். அப்போதெல்லாம் ஆனி முதல் தை வரை எல்லா நாட்களிலும் ஆற்றில் தண்ணீர் வரும்.

சில சமயம் பெருமழைக் காலங்களில், படித்துறை முழுதும் மூழ்கி, வெள்ளம் வந்து நீரே மஞ்சள் வண்ணத்தில் அடித்துக்கொண்டு ஓடும். சில சமயம் இடுப்பளவு/முழங்காலளவு தண்ணீரே. அவ்வமயங்களில் ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் சென்று வருவோம்.

சமீப காலங்களில் ஆற்றில் தண்ணீர் ஒரு வாய்க்கால் போல ஒரு ஓரம் ஓடுகிறதாம். சில மாதங்கள் மட்டும் முழுவதும் நனைகிறது.

ஆறு / நல்ல (!) குளம் உள்ள ஊர்களில் வசிப்பவர்கள் / வளர்ந்தவர்களிடம் கேட்டால் இந்த ஆற்றுக்குளியலில் அருமை புரியும். அது தாமிரவருணிக் கரையாக இருந்தாலும் சரி, காவிரியாக இருந்தாலும் சரி அல்லது இன்ன பிற ஆறாக இருந்தாலும் சரி. இந்த ஆற்றுக் குளியலின் அருமையை பாலகுமாரன் ஒரு கதையில்/கட்டுரையில் மிக அழகாக எழுதியிருப்பார்.

பின்னர் திருச்சியின் அகண்ட காவிரியில் கால் நனைத்ததுண்டு. கல்லணையின் கட்டமைப்பு கண்டு வியந்ததுண்டு. மலைக்கோட்டையின் மீதமர்ந்து சுமார் 120டிகிரிக்கு கண்ணை ஓட்டினால் காவிரியின் அழகும் வீரியமும் புரியும். ஆடிப்பெருக்கன்று கட்டுசாதக்கூடையுடன் கூடிவரும் கூட்டமும், கிரகண காலங்களில் நள்ளிரவில் பலரும் 2-3 முறை குளிக்கச் செல்லும் அனுபவமும் பெற்றவர்களுக்கே அதன் மகிழ்வு புரியும்.

கர்நாடகம் வந்த பிறகு தினமும் காவிரித் தண்ணீரில் தான் குளியல் / குடியல் தான்.


Photo Courtesy: The Hindu

தலைக்காவிரி எனப்படும் காவிரி உதயமாகும் இடம் எல்லோரும் செல்ல வேண்டிய ஒரு இடம். கர்நாடகத்தின் கூர்க் மாவட்டத்தில் மடிகேரியின் அருகில் பாகமண்டலா தாண்டி தலைக்காவிரி. அங்கு உள்ள சிறு குளத்தின் மூலையில் உள்ள சின்ன தொட்டியில் தான் காவிரி உதயமாவதாய் செய்தி. இதுவே ஆறாக மாறி, பாகமண்டலா முதல் பின்னர் கிளைநதிகளாய் பிரிந்து, ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர் என அணைக்கட்டுகள் வழியாய் தடைபட்டு, மழை அதிகம்பெய்து வழிந்தால் மட்டுமே ஹொகனேக்கல் வழியாய் மேட்டுர் வரும் நிலை தற்போது. தமிழகத்திற்குத் தெரிந்தோ தெரியாமலோ இன்னும் பல சிறு அணைகள், நீர்ப்பாசன ஏரியா அதிகரித்தல் போன்ற செயல்களில் கர்நாடகம் ஈடுபட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்களில் கர்நாடகத்தின் காவிரிக் கரை இருக்கும். ரஜினி படங்களில் கண்டிப்பாக இருக்கும். சந்திரமுகியிலும் 'தேவுடா தேவுடா' பாடல் எல்லாம் அவரின் ஆஸ்தான படப்பிடிப்பு இடங்களில் தான். சுஜாதா தன்னுடைய 'கற்றதும் பெற்றதும்'ல் பாண்டவர் பூமி பற்றி எழுதும்போது 'வாட்டர் கலர் கிராமம்' என எழுதியிருப்பார். இது நிச்சயம் நீங்கள் கர்நாடகம் வந்து, மைசூர், மண்டியா மாவட்ட கிராமங்களைப் பார்த்தால் தான் புரியும். பசுமையும், வயல்களும், கரும்புத்தோட்டங்களும் நீர்நிலைகளும், ரங்கனத்திட்டுப் பறவைகளும் ஒரு வித்தியாசமான அனுபவம்.

தமிழகத்திலும் பழைய தஞ்சை மாவட்டம் அப்படிப் பச்சைப் பசேலென்று இருந்ததுண்டு. நானும்
அதை ரசித்ததுண்டு. அது ஒரு பொற்காலம்..!


- அலெக்ஸ் பாண்டியன்
13-June-2005