Monday, June 20, 2005

நன்றி நவிலல்....!

நன்றி நவிலல்....!

தமிழ்மணம் வாசகர்களே..! ஒருங்கிணைப்பாளர்களே ! எனது வலைப்பதிவையும் நட்சத்திரமாய் ஒரு வாரம் மின்ன வைத்த அனைவருக்கும் நன்றி..!

வலைப்பதிவுக்கு வந்து படித்தவர்களுக்கும் பின்னூட்டம் கொடுத்து ஊக்கப்படுத்தியவர்களுக்கும், வந்து நட்சத்திரக் குறியீட்டை + க்ளிக்கிய அன்பர்களுக்கும், எனது பதிவுகளில் உள்ள சில கருத்துகளைச் சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!

பெரும்பாலும் தமிழ்.நெட் எனப்படும் தமிழ்.இணையத்திலிருந்து கட்டுரைகளை இட்டிருந்தாலும் அக்கட்டுரைகள் மற்றும் இன்ன பிற மடற்குழுக்கள்/இணைய தளங்கள் பற்றி தெரிந்து, தமிழில் இணையத்தில் நடைபெறும் பல்வேறு ஆக்கங்கள் பற்றி பல புதிய வாசகர்கள், தமிழ் இணைய உலாவுவர்கள் தெரிந்துகொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.

தமிழ்.நெட் எனும் பொற்காலம்-1ல் பெற்ற நண்பர்கள் போல், தமிழ்மணம் வீசும் பொற்காலம்-2லும் பல புதிய நண்பர்களையும் பெற உதவி செய்த தமிழ்மணம் சேவைக்கும், காசியின் தீர்க்க தரிசனத்திற்கும் காசியின் ஊர்ப் பயண காலங்களில், தளத்தை கவனித்து வரும் செல்வராஜ், மதி அவர்களுக்கும் நன்றிகள்...!

இந்த ஒரு வாரத்தில் இவ்வளவு பதிவுகள் போட முடியுமா என்று யோசித்தபோது மதி கொடுத்த யோசனையும் நன்று.

வழக்கமான பதிவுகள் தொடரும் (ஆனால் பெரும்பாலும் வாரத்திற்கு ஒன்று...;-))

எங்கோ படித்த ரசித்த ஒன்று....
------------------
நாம் இருவர் நமக்கு இருவர்
என்றாள் அவள்
நான் கூறினேன் எனக்கு முன்னமே
இருவர் என்று !

-----------------

- அலெக்ஸ் பாண்டியன்
20-June-2005

Sunday, June 19, 2005

இணையத்தில் தமிழ் இதழ்கள்

இணையத்தில் தமிழ் இதழ்கள்
-------------------------------------

தினமும் காலையிலோ, மாலையிலோ, இணையத்தைத் தொட்டவுடன் நீங்கள் செல்லும் தளங்கள் யாவை ? பெரும்பாலோருக்கு ஆங்கில / தமிழ் செய்தித் தளங்கள், தங்களுடைய யாகூ, ஹாட்மெயில், ஜிமெயில் போன்றவையாக இருக்கும். மடற்குழு உறுப்பினர்களுக்கு மடல்கள். தமிழ்மணம் ரசிகர்களுக்கு கடந்த ஒரு வருடமாக தமிழ்மணத்தின் வாசகர் பக்கமும் இருந்து வரும்.

இதைத் தாண்டி தங்கள் துறை சார்ந்த, தொழில் சார்ந்த அல்லது பொழுதுபோக்கு (சினிமா, இசை, அரட்டை) தளங்களுக்கு கையிருப்பு நேரத்தை வைத்து, பலரும் மேய்கின்றனர். மாலன் சமீபத்தில் இந்த பொன்னான 180 மணிகள் பற்றி எழுதியிருந்தார். பலருக்கும் ஒரு நாளில் சுமார் 180 நிமிடங்களே இணையத்தை மேய கிடைக்கிறது. அதில் எதைப் படிப்பது, எதை விடுவது என குழப்பமும் வரும். (கணினித் துறை மக்கள் தேசிகன் எழுதியது போல நாள் முழுதும் இதையே வேலைக்கு நடுவில் செய்துகொண்டு இருக்கிறார்கள்)

தமிழில் உள்ள தளங்களில் நீங்கள் தவறாது, அல்லது தினமும், 2 தினத்துக்கு ஒரு முறையாவது படிக்கும் தளங்கள் எவை ? ஏன் படிக்கிறீர்கள் (அதாவது அந்தத் தளத்தில் உங்களை ஈர்த்தது என்ன ?) இப்படிப்பட்ட கேள்விகள் எனக்குள்ளும் அடிக்கடி எழும். என்னுடைய பார்வையில் இந்திய / தமிழ் தளங்களை இங்கு பட்டியலிடுகிறேன். (எல்லாம் TSCII or Unicodeல் இருந்தால்
நன்றாக இருக்கும் ஆனால் அது தனி கதை)

இணையத்தில் கடந்த 8 ஆண்டுகளாகத் தமிழைப் படித்துவரும் எனக்கு முதல் தளம் தினகரன் தமிழ் நாளிதழ் தான். அன்று எப்படி இருந்ததோ அதே மாதிரி இன்னும் இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வரும் செய்தித் தளங்களில் ஆரம்பம் முதல் இன்று வரை சிம்பிளான லே-அவுட் கொண்டுள்ளது. தேதி வாரியாக, தொகுதி வாரியாக (அரசியல், பொது, சினிமா, விளையாட்டு என) இலகுவாக செல்லலாம். செய்திகள் நன்கு தொகுக்கப்பட்டுள்ளது. http://www.dinakaran.com/daily/default.html

தினகரனுக்குப் பிறகு விகடனின் தளம். இலவச சேவை இருந்த வரை, விகடனின் எல்லா பக்கங்களுக்கும் செல்ல லே-அவுட் நன்றாக இருந்தது (தற்போதும்). எழுத்துருவும் கண்ணுக்கு இனிமையாக உள்ளது. http://www.vikatan.com

தினமலர் செய்தித் தளமும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது ஆனால் அடிக்கடி ஜாவாஸ்கிரிப்ட் எரர் என தொல்லைப் படுத்தும். தினகரன் மாதிரி செய்திகள் தொகுதி பிரிக்கப்படாமல் எல்லாமும் முக்கியச் செய்திகள் பக்கத்தில் கலந்து கட்டி இருக்கும். இதில் நமக்குத் தேவையான செய்திகளைத் தேடவேண்டும். தினமலரின் வார மலரும், பிற சிறப்புப்பக்கங்களும் நன்றாக தொகுக்கப்படுகிறது. 'பிற இதழ்கள்' என்ற பகுதியில், விகடன், குமுதம், கல்கி, மங்கையர் மலர், பாக்யா இதழ்களிலிருந்து சில கட்டுரைகள் வழக்கமாக இடம்பெறுகின்றன. மேற்சொன்ன இதழ்களின் தளங்களில் படிக்க முடியாதவர்கள் இங்கேயே சில கட்டுரைகளைப் படிக்கலாம். http://www.dinamalar.com

தினத்தந்தியின் கலரும், வடிவமைப்பும் ஒரு கட்டாக இருக்கிறது - எல்லா ஊர் எடிஷன்களும் கொடுக்கப்படுகின்றது. ஞாயிறு மலர், சிறப்பு மலர் பக்கங்களும் நன்றாக வருகின்றன. http://www.dailythanthi.com/home.asp

குமுதம் முதல் முதலில் வந்தபோது நன்றாக இருந்தது. பின்னர் ஐடி, பாஸ்வேர்ட் எல்லாம் ஆரம்பித்த பிறகு சில சமயங்களில் எழுத்துரு சரியாகத் தெரிவதில்லை. வெட்டி, ஒட்டி படிக்கவேண்டியிருக்கிறது. முன் தேதியிட்ட இணைப்புகளுக்குச் செல்வதும் கடினம். நினைவில் வைத்து வலைப்பக்கதை நாடவேண்டும். குமுதம் குழுமத்தில் எல்லா இதழ்களும் இங்கே கிடைக்கிறது என்றாலும் வெட்டி ஒட்டி படிப்பது போர். http://www.kumudam.com

கல்கி ஒன்று தான் TSCII எழுத்துருக்களைப் பயன்படுத்துகிறது. பார்க்க அழகாக இருக்கிறது.
முதல் அவதாரத்தில், பொன்னியின் செல்வன் தொடராக வந்த போது படங்களும் (பத்மவாசன்)
அத்தியாயங்களும் சேமிக்க இலகுவாக இருந்தன. தற்போது கல்கியின் கட்டுரைகளும்,
ஏவிஎம் சரவணனின் தொடரும் நன்றாக இருக்கிறது. http://www.kalkiweekly.com

திண்ணை TSCII பிறகு TAB என அவதாரம் எடுத்தாலும், லே-அவுட் அவ்வளவு சிலாக்கியமாக
இல்லை. நான் படிப்பது பெரும்பாலும் கடிதங்கள் பகுதி மட்டும் தான். மத்தளராயர் முன்பெல்லாம் தொடர்ந்து எழுதியபோது ஒரு 'ஜிவ்' இருந்தது. http://www.thinnai.com

தமிழோவியம் நன்றாக இருந்தது. கண்ணுக்கு இதமாக இருக்கும் எழுத்துருக்கள் தமிழோவியத்தில். http://www.tamiloviam.com

ஆறாம்திணை - இலவச சேவையாக இருந்தபோது படிக்க முடிந்தது. தற்போது முகப்புப்பக்கம் எப்போதாவது எட்டிப்பார்ப்பதோடு சரி. லே-அவுட்டும் அவ்வளவு சிலாக்கியமில்லை http://www.aaraamthinai.com

மாலனின் திசைகள், தனியாளாய் செதுக்கப்படுகிறது. லே-அவுட் இன்னும் கொஞ்சம் மெருகேற்றினால் நன்றாக இருக்கும். கட்டுரைகள் பலவும் பாதுகாக்கப் படவேண்டியவை.
http://www.thisaigal.com

சமீப காலங்களில் தட்ஸ்தமிள்.காம் தளம் செய்திகளுக்கு (உடனுக்குடன் தெரியவர) சிறப்பாக இருக்கிறது. இந்திய / தமிழக செய்திகளை முந்தித்தருவது இந்தத் தளம்தான் என நினைக்கிறேன். சில சமயம், மற்ற இடங்களிலிருந்து அப்பட்ட காப்பி, மற்றும் கண்ணியமில்லா சொற்களை செய்திகளுக்கு இடையில் புகுத்துவது போன்றவையும் இங்கு காணலாம். http://www.thatstamil.com

எல்லா தமிழ் இதழ்களும் ஒரே என்கோடிங்கில் (encoding) வரும் அந்த பொன்னாள்
என்னாளோ ?


- அலெக்ஸ் பாண்டியன்
19-June-2005