Friday, August 05, 2005

பெருகி வரும் முதிர்கன்னிகள்

சமீப வருடங்களில், திருமணமாகாத, திருமணம் தள்ளிப் போகும் அல்லது திருமணத்தைத் தள்ளிப் போடும், பெண்கள் அதிகமாக காணப்படுகின்றனர். அதுவும் கணினி / மென்பொருள் துறையில் வேலை செய்யும் பெரும்பாலான மத்யமர் குடும்பத்துப் பெண்களில் இது அதிகமாகி வருகிறது.

இதற்குப் பல்வேறு காரணங்களை என்னளவில் அவதானிக்க முடிகிறது. மத்தியதர குடும்பத்திலிருந்து வரும் பல பெண்கள், முதலில் சில வருடங்கள், வேலைக்குப் போக வேண்டும் என்ற எண்ணத்துடன் துவங்குகின்றனர். ஓரிரண்டு வருடங்கள் வேலை செய்தவுடனேயே கணினித்துறையில் பலருக்கும் வெளிநாடுகள் செல்ல/ அங்கு தங்கி வாழ்க்கை முறைய அறிய வாய்ப்பு ஏற்படுகிறது.

பெரும்பாலும், இத்தகைய பெண்களின் பெற்றோர் ரிடையர் ஆகும் நேரம் அல்லது ரிடையர் ஆகியிருப்பர். தற்போது பெண்ணின் சம்பளமும் குடும்பத்திற்கு ஒரு வித புது நிதிநிலைமையைத் தர, அவர்களும் 'என்ன 25 வயசுதான ஆகுது.. இன்னும் 2 வருஷம் போகட்டும்' என சிலரும், சில சமயம், பெண்களும் இவ்வாறான சில காரணங்களைக் கூறி குடும்பத்தைக் கரையேத்திவிட்டுத் தான் திருமணம் என்றெல்லாம் கூறி) தள்ளிப் போடுகின்றனர்.

*சில* (கவனிக்கவும் - சில) பெண்கள், மிகவும் தீவிரமான வேலை உத்வேகத்துடன் எதிர்நீச்சல், சம்பள அதிகரிப்பு, வெளிநாட்டு விஜயம் என இறங்குகின்றனர். ஓரிரு முறை வெளிநாடு சென்றுவந்தவுடன், அதுவும் 7-10 மாதங்கள் அல்லது 1 வருட விஜயத்திற்குப் பிறகு அவர்களின் இந்தியா பற்றிய எண்ணங்களும், திருமணம், கணவன், குழந்தை, குடும்ப வாழ்க்கை போன்ற விஷயங்களிலிருந்து கொஞ்சம் விலகிப் போய், குறிக்கோள் எல்லாம் வேலை மற்றும் சம்பள/வருமானங்களில் மாறிவிடுகிறது.

எல்லோரும் இப்படி என்று சொல்லவில்லை.

ஆனால் சமீபத்தில் மென்பொருள் துறையில் பல பெண்கள் இவ்வாறு மாறி வருவதை அருகில் பார்க்கும் வாய்ப்பினால் இதை எழுதுகிறேன்.

சுமார் 28-29 வயதைக் கடந்தவுடன், இப்பெண்களுக்கு தாங்கள் எதையும் எதிர்கொள்ளும் தைரியமும், பணபலமும், மனபலமும் கைகூடியதால், மிகவும் செலக்டிவாகப் பார்க்க ஆரம்பித்துவிடுகின்றனர். பெற்றோர் திருமணத்திற்கு முயன்றாலும், ஏதாவது காரணங்கள் சொல்லி, 100% எதிர்பார்ப்பு-கூடலில் சிக்கிவிடுகின்றனர். பையன் இப்படித்தான் இருக்கவேண்டும், அப்படித்தான் இருக்கவேண்டும், இது சரி வராது, அது ஒத்துவராது என ஏகப்பட்ட கண்டிஷன்கள்.

பெற்றோருக்கோ இத்தகைய கண்டிஷன்களை மீறவும் முடியாமல், ஒதுக்கித் தள்ளவும் முடியாத நிலை. காதல் திருமணம்தான் இதற்கு மாற்று என்றாலும், இந்தப் பெண்கள் அந்த உணர்வுகளையும் கடந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது.

சில பெண்கள், தங்களின் மென்மையான பக்கத்தை இழந்து வருவதை நினைத்துப் பார்ப்பதே இல்லை போல தெரிகிறது. பலருக்கும் காதல், அன்பு, மென்மை போன்ற இலக்கணங்களிலருந்து விலகி, வேலை, அவசரம் என ஆண்களிடம் இருக்கும் பலவித போக்குகளைத் தங்களுக்கும் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

சிலர் தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட இந்த காலம் தாழ்த்திய நிலையிலிருந்து விடுபட இயலாமலேயே சில சமயங்களில் வெறுப்பையும் சேர்த்துக் கொள்கின்றனர். இதனால் இவர்களைச் சுற்றியுள்ள நட்புகளும், உடன் பிறந்தோரும் பெற்றோரும் எப்படியாவது திருமணம் ஆகாதா என்ற நிலையில் தவிக்கின்றனர். (நான் சொல்லுவது ஒரு சாதாரண மத்யமர் குடும்பத்து நிலை பற்றி)

தமிழக ஆட்டோவில் முன்பெல்லாம் 'பெண்ணுக்கு திருமண வயது 18' என எழுதியிருப்பர் பின்னர் இது 21ஆக மாறியது. ஆனால் கணினித்துறைப் பெண்களுக்கு இது 28/30ஆக மாறி வருகிறது.

இதனால் வரும் பாதிப்பு இன்னும் 10-15 ஆண்டுகளில் தெரியும். மற்ற துறைகளில் உள்ள பெண்களைக் காட்டிலும் தற்போது கணினித் துறை பெண்களில் இந்த முதிர் கன்னிகள் அதிகமாகி வருகின்றனர். கணினித் துறையின் வேலைப் பளுவும், நேரங்களும் இப்பெண்கள் மற்ற வேலைகளில் இருக்கும் ( 9 முதல் 5 ) பெண்கள் போல தங்கள் வீடு / குடும்பம் / பெற்றோர் (அ) கணவன்/குழந்தைகளைக் கவனிக்கக் கடினமாகவும் உள்ளது.

என்ன தான் டெலிவொர்க்கிங் / வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற வசதிகள் சில கம்பெனிகளில் இருந்தாலும், வீட்டில் குழந்தை அழும்போதோ, வீட்டிற்கு விருந்தினர் வந்திருந்தாலோ இந்த வசதிகள் இருந்தும் சரியாக பங்களிக்க முடியாது. பெண்களின் பங்களிப்பு வீட்டிற்கு மிக முக்கியம், அதிலும் இந்திய குடும்ப அமைப்பில்.

பெண்கள் வேலைக்குச் செல்வது பற்றியது அல்ல இந்த பதிவு. கோ.கணேஷ் கோவில்பட்டியிலிருந்து எழுதிய சில கேள்விகள் இங்கே http://gganesh.blogspot.com/2005/05/blog-post_17.html

நான் சொல்ல வருவது - இந்த வேலை மற்றும் மாறும் விழுமியங்களால் (அப்பாடா.. நானும் இந்த வார்த்தைய உபயோகிச்சுட்டேன்!) பெண்கள் தங்கள் திருமணத்தைத் தள்ளிப்போடுவது என்னென்ன விளைவுகளை (இந்திய குடும்ப அமைப்பில்) வருங்காலங்களில் ஏற்படுத்தும்
என்பதுதான்..! (குழந்தைப் பேறு போன்ற உடல் ரீதியான விஷயங்களும் இதில் வரும் என்றே நினைக்கிறேன்)


- அலெக்ஸ் பாண்டியன்
05-ஆகஸ்ட்-2005

Wednesday, August 03, 2005

ஆடிப் பெருக்கு

ஆடி-18 தமிழகத்தில் ஆடிப்பெருக்கு என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. காவிரி தொடும் ஊர்களில் எல்லாம், இன்றைக்குக் கொண்டாட்டம். சுழித்தோடும் காவிரியில் கால் நனைத்து, இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்தி குடும்பத்தோடு காவிரியை வரவேற்கும் நாள்.

இந்த ஆண்டு கர்நாடக, கேரள நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால், கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி என எல்லா அணைகளிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டு விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையும் நிரம்புகிறது.. கிருஷ்ணராஜ சாகரிலும் திருச்சியிலும், கல்லணையிலும் தண்ணீர் பெருக்கெடுத்தோடும் சில படங்கள்....

நன்றி: தி ஹிண்டு


http://www.hindu.com/2005/08/03/stories/2005080308900300.htmhttp://www.hindu.com/2005/08/03/stories/2005080302870200.htm
http://www.hindu.com/2005/08/03/stories/2005080314400200.htm
http://www.hindu.com/2005/08/03/stories/2005080313070400.htm-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

இன்னோர் பக்கம் மும்பை, மஹாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், ஒரிஸ்ஸாவில் எல்லாம் வெள்ளம். மும்பையின் மழையால் சென்ற ஒரு வார இழப்பு பல நூறு கோடிகள் என செய்தித்தாள்கள் கூறுகின்றன. ஒரு மாதம் முன்பு குஜராத்தில் - பரோடா, அகமதாபாத் போன்ற இடங்களில் இதே போல் வெள்ளம்.

இந்த வெள்ளங்களிலிருந்து அரசும், நகராட்சிகளும் ஏதேனும் பாடம் கற்றுக்கொண்டுள்ளனவா?மும்பை மாதிரி மழை/வெள்ளம் ஏற்பட்டால் பல நகரங்கள், பேரூர்கள் எல்லாவற்றிற்கும் இதே கதிதான் என்றாலும் சுனாமிக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட டிஸாஸ்டர் மானேஜ்மெண்ட் குழு/கமிட்டி என்ன செய்து கொண்டிருக்கிறது ?
பெங்களூர் நிலைமை பற்றி இங்கே.

வடகிழக்குப் பருவ மழையின் போது தமிழகமும், சென்னையும் கூட இந்த மாதிரி நிலைமையை நேர்கொள்ள நேரிடும். தமிழக அரசு, முனிசிபாலிடிகள், கார்போரேஷன் என்ன தயார் நிலை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது ?

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

மும்பை அளவெல்லாம் இல்லாமல் பெய்த சுமாரான மழை ஆனால் பேய்க்காற்று அடித்த 2 நாளில் பெங்களூர் நிலைமை பற்றி நான் முன்பு எழுதிய பதிவு இங்கே -
மழை - மரம் - மின்வெட்டு


- அலெக்ஸ் பாண்டியன்
03-ஆகஸ்ட்-2005