Monday, August 29, 2005

இங்கிலாந்தின் வெற்றி - திரில்லர் - 2

மற்றுமோர் ஞாயிறு இரவு. மற்றுமோர் ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட்போட்டி. மற்றுமோர் திரில்லர் ஆட்டம். முடிவு: இங்கிலாந்தின் வெற்றி. தொடரை 2-1 என இங்கிலாந்து முந்தியுள்ளது. அடுத்த ஆட்டம் ஓவல் மைதானத்தில்.

நீங்கள் உண்மையான கிரிக்கெட் ரசிகராக இருக்கும் பட்சத்தில் தவறவிடக்கூடாத டெஸ்ட் போட்டிகளாக இந்த ஆஷஸ் தொடர் மிளிருகிறது. ஒவ்வொரு போட்டியும் திரில்லர். ஆஸி அணிக்கு ஈடுகொடுத்து இங்கிலாந்து ஆடி, ஆஸி அணியையே திணறடித்துவிட்டது.



மக்ராத் இல்லாத ஆஸி அணி திணறும் என்றே முந்தைய பதிவுகளில் எழுதியிருந்தேன். அதே கதை தான் இந்தப் போட்டியிலும். இருந்தாலும் ஜெயிப்பதற்கு 129 ரன்களே வேண்டியிருந்த நிலையில், இங்கிலாந்து தட்டுத் தடுமாறி 7 விக்கெட்டுகளை இழந்து எங்கே தோற்றுவிடுவார்களோ என ரசிகர்களின் இதயத்தை எகிற வைத்தபடி விளையாடினர். சும்மா சொல்லக்கூடாது. ஷேன் வார்னே 600+ விக்கெட்டுகளுக்கு அப்புறமும் சிம்ம சொப்பனமாக பந்து வீசுகிறார். பிரெட் லீயும் பயங்கர வெறியுடன் நேற்று பந்து வீசினார். ஆஸி அணியின் போராட்ட குணம் இன்னும் மிச்சமுள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது என்றாலும், ஆஸி அணியின் பல ஜாம்பவான்களுக்கு வயதாகிவிட்டது என்பதால் ஆஸி அணியின் முதன்மை இடம் ஆட்டம் கண்டுவிட்டது. இனிமேல் புது இளரத்தம் வந்து அணியைப் பலப்படுத்தினால் தான் அவ்வணிக்கு சிறப்பு. பார்க்கலாம்.

சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி அணியை Follow-on ஆடச் செய்ததே ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது என்றால் அந்த அணியின் கடந்த 15 ஆண்டு ஆட்டத்தின் சிறப்பு புரியும் என நினைக்கிறேன்.

இங்கிலாந்து அணியின் ·பிளிண்டா·ப் முதல் இன்னிங்க்ஸில் சதம் எடுத்து சிறப்பாக ஆடினார். பந்தும் நன்றாக வீசி - ஆட்ட நாயகனாக தேர்வானார். இவர் இன்னோர் இயான் போதம் போல வளர்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை.


சுட்டிகள்/photos: நன்றி Rediff.com
http://in.rediff.com/cricket/2005/aug/28eng.htm


http://in.rediff.com/cricket/2005/aug/29ashes.htm


http://in.rediff.com/cricket/2005/aug/29ashes.htm



- அலெக்ஸ் பாண்டியன்
29-ஆகஸ்ட்-2005

பி.கு. 'Bond... Shane Bond' என்னும் புயலுக்கு முன் தான் என்றில்லை மிகவும் மோசமான நிலையிலுள்ள ஜிம்பாப்வே அணியின் மூத்த, வயதான பௌலர் ஹீத் ஸ்ட்ரீக்கிடமும் நாங்கள் தடுமாறித்தான் விளையாடுவோம் அடுத்த விளம்பரப் படத்திற்கு கால்ஷீட் கொடுக்கணும் என்ற நிலையில் ஆடிக்கொண்டிருக்கும் தற்போதைய இந்திய அணியின் ஆட்டத்தை விட்டு விட்டு ஆஷஸ் தொடரை கவனிக்குமாறு உண்மையான கிரிக்கெட் ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.