Monday, October 17, 2005

பத்து ரூபாய் விகடன்

8 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆனந்த விகடன் அடுத்த வாரம்/இதழ் முதல் 10ரூபாயாம். 60காசுக்கு விகடன் விற்ற காலம் முதல் காசு கொடுத்து வாங்கிப் படித்து வரும் எம்மைப் போன்றவற்கு, இந்த உடனடி ரூ 2 விலையேற்றம் அதிகம் என்றே படுகிறது.

விகடன் ரூ.6.00 என்று இருந்தவரை இருந்த உள்ளடக்கம் வேறு - சிறுகதை, தொடர்கதை, அரசியல், சமூக, நையாண்டிக் கட்டுரைகள், சங்கீதம், சினிமா (சில பக்கங்கள்), ஜோக்ஸ் என சிறப்பாக இருந்தது. கடந்த 4 வருடங்களாக விகடனில் வெறும் சினிமா சினிமா சினிமா - அவ்வளவுதான். அதுவும் தொப்புள், மார்பகப் படங்கள் விஜய், ரஜினி, அஜீத், சிம்ரன் மற்றும் இன்ன பிற ஓர் பாட்டு ஆடும் குலுக்கல் நடிகைகளின் (நமீதா..) படங்கள், செல்வராகவன்-சோனியா இதுதான் உள்ளடக்கமாகி வருகிறது. மதன் பதில்களிலும், ஏன், சுஜாதாவின் கற்றது பெற்றது, தொடரிலும் பெரும்பாலும் சினிமா. அவ்வப்போது காணாமல் போய் வரும் ஞாநி, அ.அ.ஆ தொடர்களிலும் சினிமா, கவர்ச்சிப் படங்கள்.

உருப்படியாக வரும் சில விஷயங்கள் என்றால் அது எஸ்.ராமகிருஷ்ணனின் தொடரும், இணையத்தில் தேடி எழுதப்படுவதாக இருந்தாலும், தமிழ் மக்களுக்குச் சென்றடைய வைக்கும் விதத்தில் உலக விஷயங்களை எடுத்துத் தரும் பா.ரா., சொக்கன் கட்டுரைகள் இவைதாம். அதிலும் இந்த வார சொக்கனின், நெ.1 கட்டுரை ஜெனி·பர் லோ·பஸ் பற்றியது என்பதால் ஆசிரியர் குழு படங்களில் புகுந்து விளையாடியுள்ளார்கள். சேரனின் டூரிங் டாக்கீஸ் கட்டுரை மாத்திரம் நல்ல படங்களோடு வெளியாகியுள்ளது.. மற்ற படி அதுவும் ஒரு சினிமா சம்பந்தப்பட்ட படைப்பே. தமிழருவி மணியனின் கட்டுரைகளோ இன்ன பிற சிறு சிறுகதை/ கட்டுரைகளோ எத்தனை பேர் படிக்கப் போகிறார்கள்.

குஷ்பு சொன்னது சரியா தவறா, அதற்கு திருமா, மருத்துவர் குழுக்கள் செய்வது சரியா தவறா, பார்க் ஹோட்டலில் நடைபெற்றதற்கு லைசென்ஸ் ரத்து செய்தது சரியா தவறா என்றெல்லாம் விவாதிக்கும், போராட்டம் செய்யும் மக்கள் பலரும் தங்கள் வீட்டு வரவேற்பரை மேஜையிலும் ஆனந்த விகடன் இதழை வைத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். விகடனுக்கும் தமிழ் முரசுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது. கடைசிப் பக்கத்தில் (தினமலர் உதவி ஆசிரியர்களை Poach செய்துள்ளார்கள் என கேள்வி) தமிழ் முரசு வெளியிடும் பின்-அப் படங்களுக்கும் (அதுவும் 2 ரூபாய்க்கு சாஷே இலவசம்).. புதன் முதல் -கோவை, சேலத்திலும் தமிழ் முரசு கிடைக்குமாம்) விகடனின் உள்ளடக்கத்திற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் எனக்குப் படவில்லை.

ஷக்தி சிதம்பரத்தின் சிபிராஜ், சத்யராஜ் நடிக்கும் கோவை பிரதர்ஸ் படத்தின் (விகடனில் வெளியாகியுள்ள) ஸ்டில்கள்... ஆபாசம் என்றால் ஆபாசம். இதெல்லாம் இப்ப சாதாரணம் என்றால் சாதாரணம்.

மொத்தத்தில் 8 ரூபாயிலிருந்து ஒரேயடியாக 10 ரூபாய் விலையேற்றியதற்கு உருப்படியாக உள்ளே ஒன்றும் இல்லை. மாதம் ரூ.40/50 அல்லது வருடத்திற்கு ரூ.530 செலவு செய்வது இனிமேல் யோசிக்கவேண்டும். ஆசிரியர் குழு 757 அண்ணா சாலையிலிருந்து புதிய இடத்திற்கு க்ரீன்வேஸ் சாலைக்குச் சென்று பளபள கட்டிடத்தில் அகலப்பாட்டை இணைய இணைப்புடன், பளபள படங்கள் மாத்திரம் போட்டுக் கொண்டிருக்காது என எதிர்பார்த்தால், எம்மை மாதிரியான பல்லாண்டு வாசகர்கள் விகடனுக்கு இனி தேவையில்லை போலிருக்கிறது.


- அலெக்ஸ் பாண்டியன்
17-அக்டோபர்-2005