Wednesday, November 02, 2005

தீபாவளி 2005 டிவி நிகழ்ச்சிகள்

தீபாவளியென்றாலே தொலைக்காட்சியின் முன்னே உட்கார்ந்து நாள் முழுவதும் கழிக்கும் புதுப் பழக்கம் வந்துவிட்டதில், இந்த முறையும் வென்றது ஜெயா டிவிதான்.

சன் டிவி இன்னும் எத்தனை வருடங்களுக்கு 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' என அறிவித்துக்கொண்டு, ஒரே மாதிரி நிகழ்ச்சிகளைக் கொடுத்து வருவார்கள் என தெரியவில்லை. சினிமா ஆட்கள் தவிர ஒரு சிறப்பு நாளில் இவர்களுக்கு வேறு துறை சார்ந்த பிரபலங்கள் கிடைக்க மாட்டார்களா அல்லது தமிழர்கள் எல்லோரும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைத்தான் பார்ப்பார்கள் மற்ற விஷயங்கள் காட்டினால், விளம்பரம் வராது என்ற முடிவா ? அதுவும் காலை வணக்கம் தமிழகத்தில் சில பட ஹீரோ பரத் ? எத்தனை பேர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருப்பார்கள் ?

எத்தனை தீபாவளிகளுக்கு ரஜினி படம் போட்டே ஓட்டப்போகிறார்கள் - அண்ணாமலை, பாட்ஷா, முத்து - தற்போது படையப்பா.. ரஜினி என்றால் கமலும் இருந்தாக வேண்டுமே அதனால் 'இ.தொ.மு.மு...' வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்'. அதுவும் சுமார் 4 மணி நேரம் இழுத்து.

சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் என்ன தான் நகைச்சுவையாக இருக்கும் என்றாலும் எத்தனை வருடங்கள் அரைத்த மாவையே அரைப்பார்கள் ? அதுவும் ஆரம்பமே வெறிநாய், வீதிநாய், வீட்டு நாய் என்ற பிரயோகங்களுடன் நிகழ்ச்சியைத் துவக்கினார்.. அதுவும் ஒரு நன்னாளில். இவர் இல்லாவிட்டால் விஜய் டிவியில் லியோனி. நகைச்சுவை என்ற பெயரில் ஒரு முறைக்குமேல் கேட்க இயலாத அறுவை.

ராஜ் டிவி என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் சன், ஜெயா, விஜய் டிவி அளவிற்கு நிகழ்ச்சிகளிலோ, தொகுப்பாளர்களிலோ வெற்றி பெறுவதில்லை. ஒளிபரப்பும் டெக்னிகலாக கொஞ்சம் மங்கலாகவே இருக்கும். (என்னதான் சன் டிவியின் அதிகார துஷ்பிரயோகத்தால் Uplink வசதி சரியில்லாமல் இருந்தாலும் - இவ்வளவு கலங்கலாகவா எல்லா நிகழ்ச்சிகளும் இருக்கும்)

ஜெயா டிவி ஜாக்பாட் அடித்தது என்றே சொல்லலாம். இளையராஜாவின் 'அன்றும் இன்றும் என்றும் மேஸ்ட்ரோ' நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. ராஜா இவ்வளவு புன்னகையுடன் இருந்து நான் பார்த்ததில்லை. மிகவும் இயல்பாக செய்யப்பட்டிருந்தது. அவரின் ஆஸ்தான BGM வயலின் அணியும் பல பாடல்களுக்கு மெருகூட்டின. அவரின் ஆரம்பத்தில் பாடிய ஜனனி.. ஜனனி பாடல் ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்தியது உண்மை (குரலில் கொஞ்சம் நடுக்கம் இருந்த போதிலும்). நிகழ்ச்சியின் அடுத்த பாகம் வரும் ஞாயிறன்று. மறக்காமல் பார்க்கவும்.

சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி: தங்கர் பச்சானின் சமீபத்திய வெற்றிப் படம் இவ்வளவு விரைவில் தொலைக்காட்சியில் வந்தது ஓர் ஆச்சரியம். ஆனால் படம் சூப்பர். வலைப்பதிவுகளிலும், இணைய மடற்குழுக்களிலும் நேரம் செலவழித்துக்கொண்டு மனைவியின் திட்டுகளுக்கு ஆளாகும் ஒவ்வொரு தமிழ்க் கணவனும் பார்க்க வேண்டிய ஒன்று :-) படத்தின் வசனங்களும், நவ்யா, தங்கரின் நடிப்பும் அருமை. நிச்சயம் இப்படத்திற்கு சில விருதுகள் உண்டு.

படம் முடிந்த அடுத்த நிகழ்ச்சியாக குஷ்புவின் ஜாக்பாட்..! நடிகர்களும் (எல்லோருமே குஷ்புவுக்குப் பிடித்த நடிகர்கள் - கார்த்திக், பாண்டியராஜன், சத்யராஜ், ஜெயராம்)இயக்குனர்களும் (ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிகுமார், வஸந்த், சூர்யாஹ்).. நடிகர்கள் அதிகம் பரிசு பெற்றனர். இரு குழுக்களுக்கும் ஆரோக்யா பால் அரை லிட்டர் பாக்கெட் 2 மாதம் இலவசமாம்.

தங்கர் - குஷ்பு இருவர் நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து - ஜெயா டிவியில் ? ஏதாவது பெரிய இடத்து Deal இருக்குமென்று பட்சி சொல்கிறது (எது நடந்தாலும் தமிழ் செய்திகள் படிக்கும் நல்லுலகிற்கு) இந்த மாதிரி எண்ணுவதுதான் தற்போதைய வழக்கமாகிவிட்டது :-)

ஒரு காலத்தில் கோலோச்சிய சென்னைத் தொலைக்காட்சி (பொதிகை) சோபை இழந்து காணப்படுகிறது. தலைமையினாலா ? இல்லை சினிமா அதிகம் இல்லாததால் நாம் (நாமும் இந்த சினிமா நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகிவிட்டோம்) தான் அப்படி எண்ணுகிறோமா ?வாத்யாரின் 'ஆயிரத்தில் ஒருவன்' போட்டு பல வாத்யார் ரசிகர்களைக் கவர்ந்தார்கள். அருமை. விடுமுறை நாளில் மகிழ்வாகக் கழிக்கவேண்டுமென்றால் இந்த மாதிரி வாத்யார் படம் பார்த்தால் போதும்.

தமிழகத்தில் உள்ள பல உறவினர்களிடமும் தொலைபேசியதில் - தீபாவளிக்கு புது சட்டை, பலகாரம், வெடி பிறகு என்ன என்று கேட்டால்- வேறென்ன டிவி நிகழ்ச்சிகள் தான் என்கிற அளவிற்கு பெரும்பாலான தமிழர்கள் (எம்மையும் சேர்த்துதான்) டிவி மற்றும் சினிமா நட்சத்திரங்களுடனான தீபாவளி என்றே ஆகிவிட்டது. தொலைத்தது நமது நட்பையும், வெளியே சென்று கூடி மகிழும் அந்தப் பொற்காலத்தையும்.

சென்னையில் தினமும் இனிமேல் குழாயில் தண்ணீர் விடுகிறார்களாம். அடுத்த கோடை வரை தண்ணீரை தக்கவைத்துக் கொள்வார்களா அல்லது ஏப்ரல் தேர்தலோடு எல்லாம் சரியா என்பது போகப் போகத் தெரியும்.

- அலெக்ஸ் பாண்டியன்
2- நவம்பர் - 2005

பி.கு: சென்ற தீபாவளியன்று ஜெயேந்திரர் மீதான கோபத்தைக் கைது, பலவித வழக்குகள், பலவித பெயர் இழுக்கு பத்திரிக்கைச் செய்திகள் என இழுத்தடித்த அரசுத்தரப்பு இந்த ஓர் வருடத்தில் பலமுறை உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கியுள்ளது. அரசுத்தரப்பின் ஒரே வெற்றி ஜெயேந்திரர் அருளாசியை இந்த முறை தொலைக்காட்சிகளில் இல்லாமல் செய்தது மட்டுமே.

Monday, October 31, 2005

நகரமும் ணகரமும் னகரமும்

அனைவருக்கும் இனிய தீபாவளி மற்றும் ரம்ஜான் வாழ்த்துக்கள்..!

இனிவரும் மாதங்களிலாவது இயற்கைப் பேரழிவிலிருந்து மக்களுக்கு விடுப்பு கிடைக்கும் என பிரார்த்திப்போம். இந்த ஆண்டு மட்டுமே மழை, புயல், வெள்ளம், சூறாவளி, பூகம்பம் என பல நாடுகளிலும், பேரழிவுகள். கடந்த 2 நாட்களிலேயே ஆந்திராவில் ரயில் விபத்திலும் பின்னர் புதுடில்லியில் வெடிகுண்டு பாதிப்பு. இத்தகைய நிகழ்வுகள் குறைந்து அனைத்து மக்களுக்கும் அமைதியான வாழ்வு வர வேண்டுவோம்.

<< நகரமும் ணகரமும் னகரமும்>>

'பண்ணித் தமிழ்' கொஞ்சி விளையாடும் தமிழ் நகரங்களில் இந்நாட்களில் பெரும்பாலோர் முக்கியமாக இளைஞர் / இளைஞியர்) ணகரத்திற்கும் னகரத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் உபயோகப்படுத்துகின்றனர். தமிழ் அறிஞர் தாத்தாவின் பேரன் டிவியில் இந்தத் தமிழ்க் கொலை அதிகம்.

அதுவும் சன் மியூசிக் சேனலில் எப்போது பார்த்தாலும் யாரோ ஓர் இள நங்கை தொலைபேசியில் கடலைப் போட்டுக்கொண்டே இருக்கிறார். அவர் என்ன பேசுகிறார் என்பது புரிந்தால் நீங்கள் தமிழக கல்லூரி இளவட்டங்களுடன் அதிகம் பழகுபவராக இருக்கலாம்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு பாடல் ஒளிபரப்பினர். மெல்லத் திறந்தது கதவு படத்தில் வரும் மிக அருமையான பாடல் - 'வா வெண்ணிலா... உன்னைத் தானே வானம் தேடுது..' - அமலாவின் நாட்டியமும், மைக் மோகனின் தேடுதலும்.

அருமையான பாடல், ஆடல். அதற்கு பாடல் செய்தி வெளியிட்ட/டைப் செய்திருந்த இளைஞர்
'வா வென்னிலா' என்றே போட்டிருந்தார். பெரும்பாலானோர் பேசும் போதும் ஒண்ணுமே என்பதற்கு ஒன்னுமே என்றே பேசுகின்றனர். இது தெரியாமல் பேசுகிறார்களா (இவர்கள் அநேகமாக தமிழ் ஒரு பாடமாக படித்திருக்க மாட்டார்கள்) அல்லது மற்றவர்கள் டிவியில் பேசுவதை, கல்லூரியில், கா·பி ஷாப்பில் பேசுவதைக் கேட்டு, தாங்களும் மாறிவிட்டார்களா என்பது தெரியவில்லை. வலைப்பதிவர்கள் கூட பலரும் ஒன்னுமே என்றே உபயோகிக்கின்றனர்.

லகரமும் ளகரமும் ழகரமும் தான் பல வருடங்களாக இந்த பேச்சு வழக்கில் சுட்டிக்காட்டப்படுவதாக இருந்தது. ராதிகா போன்றோர் - சித்தி, அண்ணாமலை, செல்வி சீரியல்களில் ஸ்பஷ்டமாக ழகரத்தை ளகரமாக உச்சரித்து உச்சரித்து, பல தமிழ் சீரியல் பார்ப்போரும் ழகரத்தை ளகரமாக உச்சரிப்பதே சரி போலிருக்கிறது என்ற நிலையை சில நபர்களிடம், குழந்தைகளிடம் காண முடிந்தது. மதுரைக்காரர்களுக்குத்தான் ழகரம் ளகரமாகும் என கேள்விப்பட்டிருக்கிறேன் (No offence meant!)

அந்தக் காலங்களில் பேராசிரியர் நன்னன் - சென்னை தொலைக்காட்சியில் தமிழ் வகுப்பு எடுப்பது கேலியாக பேசப்பட்டது (பத்திரிக்கைகளில், ஜோக்குகளில், கதைகளில்..) ஆனால் இன்றைய தேவை - அந்த நிகழ்ச்சிகளின் மறு ஒலிபரப்பு. ஜெயா டிவியில், காலை 8.10க்கு ஒரு ஆசிரியர் பேசும் ஆங்கிலம், எழுதும் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறார் (நன்றாகவே இருக்கிறது..) அது மாதிரி - தமிழும் 5 அல்லது 10 நிமிட capsuleஆக சன் டிவியின் காலை நிகழ்ச்சியில் செய்திக்கு முன்னர் கற்றுக்கொடுத்தால் கலைஞரின் இத்தனையாண்டுத் தமிழ்ப் பணிக்கு ஒரு துளியூண்டு - பேரனின் சேவையாக இருக்கும். வேண்டுமென்றால் சரவணா, எஸ்.எம், குமரன் சில்க்ஸ் போன்றோரிடம் விளம்பரதாரராக இருக்க வேண்டலாம்.

என்னய்யா இது நகரத்தில் ணகரத்திற்கு வந்த சோதனை ?


-அலெக்ஸ் பாண்டியன்
31-அக்டோபர்-2005