Friday, November 18, 2005

புத்தகமும் நகையும்


பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் சென்ற வார இறுதியில் 6 மணிநேரம் அலசினோம்.


சென்ற வருடத்தை விட இந்த வருடம் நன்றாக இருக்கிறது. ஸ்டால்களின் லே-அவுட்டும் நன்றாக செய்திருக்கிறார்கள். மொத்தமும் மூடிய கொட்டகைக்குள் என்பதால் மழை பெய்தாலும் சுகமாக உள்ளேயே நேரத்தைக் கழிக்கலாம்.http://www.hindu.com/mp/2005/11/16/stories/2005111601320100.htm

படம் நன்றி: த ஹிண்டு

தமிழக / தமிழ் புத்தக / பதிப்பக ஸ்டால்கள் 7-8 இருக்கின்றன. நிறைய புத்தகங்கள். தவிர, ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், உருது என பல்வேறு மொழிகளில் புத்தகங்கள். ISKCON ஸ்டாலில் ஊதுபத்தி, படங்களுடன் கிடைக்கிறது. திருமகள் நிலையம், சுரா, கிழக்கு, காலச்சுவடு, கிரி டிரேடிங், நர்மதா என பல தமிழ் பதிப்பக ஸ்டால்கள். பெரும்பாலானவற்றில் கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் அலை ஓசை, சிவகாமியின் சபதம் போன்றவை அதிகம். சாண்டில்யன், பாலகுமாரன், சுஜாதா, வைரமுத்து புத்தகங்களும் நிறைய. காலச்சுவடு ஸ்டாலில் சு.ரா.வின் பல புத்தகங்கள், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம், பி.ஏ.கிருஷ்ணனின் 'புலி நகக் கொன்றை' ஜெயமோகன் நாவல்கள், சல்மாவின் சமீபத்திய '...ஜாமங்கள்' புத்தகம் என பலவித பெயர்பெற்ற புத்தகங்களும் கண்ணில் பட்டன. சில புத்தகங்கள் புரட்ட முடியாதபடி முழுவதும் சீல் செய்யப்பட்ட பேக்கிங்.

வழக்கமான, பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், சமையல், வாஸ்து, பக்தி சம்பந்தப்பட்டது, கோலங்கள், அரிச்சுவடி என எல்லாவித தமிழ் புத்தகங்களும் இருக்கிறது. நான் தேடிய சில புத்தகங்கள் (தேவன், சோ..) கிடைக்கவில்லை. சென்னை செல்லும் போதுதான் வாங்க வேண்டும்.

பாலகுமாரன் (பச்சை வயல் மனது, காசும் பிறப்பும், தாயுமானவன், ஆயிரம் கண்ணி, கரையோர முதலைகள்), சுஜாதா நாவல்கள் (ஆதலினால் காதல் செய்வீர், பிரிவோம் சந்திப்போம்-1) வாங்கியது தவிர, கிழக்குப் பதிப்பகத்தில் திருக்குறள், சைக்கிள் முனி, மெல்லினம், நாலு மூலை, மிஸ்டர் கிச்சா, கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன். 'அள்ள அள்ள பணம்' (சோம.வள்ளியப்பன்)மற்றும் இன்·போஸிஸ் நாராயணமூர்த்தி' (என். சொக்கன்) புத்தகங்களுக்கும் நல்ல அமைப்பு. பாராவின் 'புவியியலோரிடம்' கிடைக்கவில்லை (அது வேறு பதிப்பகம் போல)புத்தகங்களை நன்றாக அடுக்கி வைத்திருந்தனர். ஹரியண்ணாவின் 'அனுமன் - வார்ப்பும் வனப்பும்' நன்றாக இருக்கிறது. எல்லா (கி.ப) புத்தகங்களிலும் எழுத்தாளரின் வயசைப்
போடுகின்றனர். இது எந்த வருடத்திய வயது என்பது எப்படிக் கண்டுபிடிப்பது :-)

அதே மாதிரி இரா.முருகன் பெங்களூரில் வசிக்கிறார் என பின்னட்டை செய்தி.. ஆனால் அவரோ பெங்களூர் வாசத்தை முடித்து, சென்னையில் வீடு மாறி, தற்போது ஸ்காட்லாண்டில் எடின்பரோ நகரவீதிகளை Full formல் எஞ்சாய் செய்துகொண்டிருக்கிறார். (நமக்கும் அவரது
அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார் - சற்றே நகுக, ரா.கா.கி மற்றும்
http://vembanattukkaayal.blogspot.com மூலம். எமது ஸ்காட்லாண்டு அனுபவம் பற்றி வேறோர் பதிவில்.

கிரி டிரேடிங்கில் சில இசை ஒலி நாடாக்களும் (காசெட்டு), சில சினிமா பட குறுந்தகடுகளும்(விசிடி) வாங்கினேன். (பலே பாண்டியா, கலாட்டா கல்யாணம், கப்பலோட்டிய தமிழன் - ஒவ்வொன்றும் ரூ.100க்கு நல்ல கலெக்ஷன். ப்ரிண்டும் பரவாயில்லை). இதைத் தவிர, வடிவேலு, விவேக், கவுண்டமணி, செந்தில் காமெடி கலெக்ஷன், எம்.ஜி.ஆர், சிவாஜி, கண்ணதாசன், ரஜினி, கமல் பாடல்கள் என விசிடி கலெக்ஷன் வைத்துள்ளனர் (பெரும்பாலனவை மதுரை Modern கம்பெனியின் தயாரிப்புகள்) வாத்யாரின் டூயட் பாடல்கள் (விசிடி) நன்றாக இருக்கும் என்பதால் அது ஒன்று (ரூ.50) வாங்கினேன். சில பாடல்களும் கிளுகிளுப்பு மயம். வாத்யாரின் கலர்ப் பட டூயட்டுகளில் என்றுமே ஒரு தனி கிக் உண்டு. அவரை மாதிரி ஹீரோயினைக் 'கை'யாளுவதில் தெறமை கொண்டவர்கள் வெகு சிலரே ;-)

காந்திஜியின் சத்தியசோதனை புத்தகங்களும் (பரிசளிக்க) வாங்கினேன்.

குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கென்றே பல ஸ்டால்கள். நிறைய அகராதிகளும் கண்பட்டது.(?)

நாங்கள் சென்ற சமயத்தில் கர்நாடக ஆளுனர் டி.என்.சதுர்வேதி ஒரு நடை வந்துபோனார். பெரிய அளவில் ஆர்ப்பாட்டம், ஆள், அம்பு எதுவும் இல்லை (ஓரிரு புகைப்படக்காரர்கள், ஒரு செக்யூரிடி). அவரருகில் மக்களும் சகஜமாக அவரவர்கள் புத்தக தேடல்களில் நடந்துகொண்டிருந்தனர். (இதுவே நம்மூர் பிரபலம் / அரசியல்வாதியாக இருந்திருந்தால் ?)

'த ஹிண்டு'வும் ஒரு ஸ்டால் வைத்துள்ளனர். நன்றான வடிவமைப்பு. Macmillan, British council library, ISKCON என பல்வேறு விதமான, பல்வேறு தலைப்புகளில் - அவரவர்க்கு அதது !

புத்தக ஸ்டால்களுக்கு வெளியே அடிகாஸின் உணவகமும், சூடான மிளகாய் பஜ்ஜியும் உண்டு.

நர்மதா பதிப்பகத்தின் பல புத்தகங்களில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர் - புத்தகம் வாங்குவதை செலவு என்று கருதாமல் ஒரு மூலதனம் என்று கருதவும் என்ற பொருள்படி -- நல்ல செய்தி.

பெங்களூரில் உள்ள புத்தகப் புழுக்களே - 20ஆம் தேதி வரை கண்காட்சி உண்டு. பர்ஸில் நிறைய பணமும், கையில் சுமார் 4-5 மணிநேரமும், வைத்திருந்தால் நிச்சயம் ஒரு நாள் உருப்படியாய் செலவழிக்கலாம். எல்லா கடைகளிலும் 10% தள்ளுபடி உண்டு. கூட்டம் இல்லாத நாளாய்ப் பார்த்துப் போனால் பொறுமையாய்த் தேடலாம்.

புத்தகங்கள் வாங்கியாச்சு - படிக்கலையா என்று கேட்டால் - போன வருஷம் வாங்கினதையே இன்னும் எல்லாம் படிச்சு முடிக்கலை - அது இருக்கு படிக்கவேண்டியது இன்னும் நிறைய என்பது தான் பதில் :-)

--o0o-- --o0o-- --o0o-- --o0o-- --o0o--

கண்காட்சி வளாகத்தில் கண்ட ஒரு விஷயம்.

தமிழ் புத்தக ஸ்டால்களில் தொடர்ந்து ஒரு தமிழ் தம்பதியினரைக் காண முடிந்தது. கணவர் ஒவ்வொரு ஸ்டாலிலும் புத்தகங்களைப் பிரித்து, பிரித்து, நேரம் கடத்தி, பின்னர் சிலதை வாங்கிக் கொண்டிருக்க, கூட வந்த அவரது மனைவி பொறுமை இழந்து ஒவ்வொரு இடத்திலும் சீக்கிரம், சீக்கிரம் என அவசரப் படுத்திக் கொண்டிருந்தார்.

"இந்தப் புஸ்தகம் தான் வீட்ல இருக்கே.. இது பாலகுமாரன்து..ஏற்கனவே வாங்கியாச்சு இல்ல அட்டைபடத்த மாத்திட்டங்க" என கணவரிடம் தொணதொணக்க... ஒரு கட்டத்தில்

கணவர் "ஒங்க கூட புடவை கடைக்கும், நகை கடைக்கும் நான் வந்தப்பலாம் இப்படித்தான நாங்களும் ·பீல் பண்ணுவோம்.. ஒனக்கு நகை/டிரெஸ் எப்படி முக்கியமோ அத மாதிரி எனக்கு தமிழ் பொஸ்தகம் முக்கியம்" என சொல்ல மனைவி கப்சிப்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? புத்தகமா / டிரெஸ்/நகையா ?

--o0o-- --o0o-- --o0o-- --o0o-- --o0o--


- அலெக்ஸ் பாண்டியன்
18-நவம்பர்-2005