Monday, November 28, 2005

தாக்கரே Vs தாக்கரே

தமிழகத்திலும் இது மாதிரி நிகழக்கூடும். சில அறிகுறிகள் இப்போதே தெரிகிறது. சிவசேனா சுப்ரீமோ பால் தாக்கரே எப்போது இரண்டு பேரை (மகன், மருமகன்) கட்சிக்குள் பெரிய தலைகளாக வளர்த்து விட்டாரோ அப்போதிலிருந்தே இருவருக்குள்ளும் மாமியார் மருமகள் மாதிரி உள்ளுக்குள் கனன்ற கோபதாபம் தான்.

சமீபத்திய தேர்தல் தோல்விகளாலும், சிவசேனாவிலிருந்து காங்கிரஸ் சென்று, பல கட்சிக்காரர்களையும் அங்கே இழுத்து, தேர்தலில் சிவசேனா டெப்பாசிட் இழக்கவைத்த நாராயண் ரானேயோ, இதற்கு முன்னால் சேர்ந்த சஞ்சய் நிருபம் என ஒவ்வொருவராய் தாக்கரேயின் நிழலிலிருந்து விலகி சிவசேனைக்கு நஷ்டமேற்படுத்தினர்.http://www.hindu.com/2005/11/28/stories/2005112813920100.htm

Courtesy: The Hindu

தற்போது மருமகன் ராஜ் தாக்கரேயும் போர்க்கொடி தூக்கியுள்ளார். மகன் உத்தவ் தாக்கரேயின் தலைமையின்மையையும், தேர்தல் தோல்விகளும் சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் வயது காரணமான (முன்பு மாதிரி) செயல்படமுடியாமையும் அக்கட்சியினை முடிவை நோக்கி அழைத்துச் செல்கிறது.

இந்த விஷயங்களைத் திசை திருப்புவதற்கு, பெல்காம் மேயர் அவரை சந்தித்தவுடன், பெல்காமில் ஒரு மராட்டியருக்கு ஏதேனும் ஏற்பட்டாலும், மும்பையிலும் மகாராஷ்டிரத்திலும் உள்ள கன்னடியருக்கு வேட்டு என கொக்கரிக்கின்றனர். (மகாராஷ்டிர கவர்னர் கன்னடிகரான எஸ்.எம்.கிருஷ்ணா என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்).


Courtesy: Indian Express
நேற்று ராஜ் தாக்கரேயை சமாதானப்படுத்த வந்த 'சாம்னா' பத்திரிக்கை ஆசிரியர் சஞ்சய் ராட் கார் ராஜின் ஆதரவாளர்களால் அடித்து நொறுக்கும் காட்சி பல இந்தி டிவி சேனல்களில் ஒளிபரப்பப் பட்டது.. பல லட்சம் மதிப்பிருக்கும் காரை கும்பல் அடித்து நொறுக்குவதை போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது இன்னோர் கதை.

இதற்கு முக்கிய காரணம். மருமகனாக இருந்தாலும் ராஜ் தாக்கரேதான் கட்சியில் பெரிய செல்வாக்கு உடையவர். தொண்டர் பலம் பொருந்தியவர். அடித்தட்டு தொண்டர்கள் வரை தொடர்பு வைத்திருப்பவர். பால் தாக்கரேக்குப் பிறகு ராஜ் தான் வருவார் என 10 வருடம் முன்பே பலரும் கணித்து எழுதி வந்தனர். ஆனால் பிள்ளைப் பாசம் - கட்சித் தலைவர் பதவி உத்தவுக்குச் சென்றது. உத்தவுக்கு அவ்வளவு தலைமைப் பண்புகளோ, பேச்சுத் திறனோ, தொண்டர் தொடர்போ இல்லை.

தமிழகத்திலும் இந்த மாதிரி உரசல் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பேரன்களுக்கும் மகனுக்கும் இந்த மாதிரி மோதல்கள் பின்னால் வராமலிருக்க தலைவர் என்ன செய்யப்போகிறார் ? சமீபத்தில் குடும்ப டிவி/பத்திரிக்கையிலிருந்து ஒதுங்கிக் கொண்டதும் இதனால் தானா ?

மருமகன் இருக்கும் காலத்திலேயே கட்சிக்காரர்களின் / அமைச்சர்களின் Performance பற்றி மருமகனார் விரிவாக எடுத்துரைக்க, பலருக்கும் டோஸ் விழுந்தது. சமீபத்தில் பேரனும் பல அமைச்சர்களின் செயல்திறனை எடுத்துரைக்க, அவர்களுக்கும் டோஸ். மகன் தான் தலைவர் என இங்கும் பிள்ளைப் பாசம் தலைதூக்கினால், மற்ற கட்சிப் பெருந்தலைகள் என்ன செய்வர் ?

'ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை வாடியிருக்குமாம் கொக்கு' என்பதைப் போல் சில கூட்டணித் தலைவர்கள் மௌனம் காத்து காத்திருப்பது இதற்குத் தானோ ?

---o0o--- ---o0o--- ---o0o--- ---o0o---

தமிழகத்தின் மழை, வெள்ள சேதப் படங்களை பலரும் நேரிலோ, பத்திரிக்கைகளிலோ, டிவியிலோ பார்த்திருக்கலாம். சிதம்பரம், கடலூர் மற்றும் திருச்சி, தஞ்சை, நாகை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதம் மிகவும் அதிகம். பல லட்சம் ஏக்கர்களில் பயிர்கள் அழிந்துள்ளன. நீரில்லாமல் பயிர்கள் சென்ற வருடங்களில் வாடியது என்றால் இம்முறை அதிக நீரால் அழிந்துள்ளது. இந்த சேதத்திலிருந்து மக்கள் மீண்டு வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். (ராம்கி வேற 26ன்னு தேதி போட்டு பயமுறுத்தரார்)

டிசம்பர் 1 முதல் 15க்குள் இன்னோர் முறை வங்காள விரிகுடாவில் புயல் சின்னம் வரும் என சிலர் தெரிவித்துள்ளனர். மத்தியிலிருந்து வரப்போகும் மூவாயிரம் கோடியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு போய்ச் சேர்ந்தால் நன்று.

- அலெக்ஸ் பாண்டியன்
28-நவம்பர்-2005