Tuesday, June 06, 2006

அகத்தியம் 40000

இணையத்தில் தமிழில் உலாவரும் பலருக்கும் 'கிராமத்துப் பெரிசு' என்றால் தெரிந்திருக்கக் கூடும். யார் அவர் என்பது தெரியாதவர்கள் கடந்த 2 வருடங்களாக மட்டுமே இணையத்தில் தமிழில் உலாவுபவர்களாக இருக்கக் கூடும்.

கிராமத்துப் பெரிசு என அன்புடன் அழைக்கப்படும் அவர் ' மலேசியாவில் இருக்கும் டாக்டர்.ஜேய்பி எனப்படும் டாக்டர்.சி.ஜெயபாரதிதான்.

சுமார் 8 வருடங்கள் முன்பு 1998 ஆடிமாதத்தில் 'அகத்தியம்' எனும் தமிழ் மடலாடற் குழுமத்தைத் துவங்கி, இன்று வரை சுமார் 40000 மடல்களோடு ஜொலிக்கவைத்துள்ள அவரின் பணி மகத்தானது. தமிழ், சமயம், வரலாறு, பக்தி, அறிவியல், பழைய (சில புதிய) திரைப்படங்கள், மருத்துவம், ஆன்மீகம் என அகத்தியத்தில் தோண்டத் தோண்டப்
புதையல் தான்.

மதுரையில் மருத்துவம் படித்து மலேசியாவில், சுங்கைப் பட்டாணியில் வசித்து வரும் டாக்டர் ஜேபி, மலேசியாவில் பல அரசு மருத்துவமனைகளில் உயர் பதவி வகித்தவர். தமிழ்.நெட் என்னும் பாலா பிள்ளையின் தமிழ்.இணையத்தில் தொடங்கி, பல்வேறு மலேசிய மற்றும் தமிழ், ஆங்கில மடலாடற்குழுக்களில் 'பெரிசு' என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

டாக்டர்.ஜேய்பி 70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞர். பல்வேறு உடல்நலக் குறைவுகளையும் தாங்கி, தனக்குத் தெரிந்த, தான் தெரிந்துகொண்ட விஷயங்களை தமிழ் ஆர்வமுள்ளோருக்கு பகிர்ந்து கொள்கிறார் என்றால் - அகத்தியத்தில் உறுப்பினராக இருக்கும் மற்றும் அவர் பங்கு கொண்ட / பங்கு கொள்ளும் மடலாடற்குழுக்குகளில் உள்ள நண்பர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியும். இந்தப் பதிவுமே - பலர் வலைப்பதிவுக்கும் தமிழ் இணைய உலகுக்கும் புதிதாக வந்துள்ளதால் அவர்களுக்கு அகத்தியத்தையும் அதில் தமிழில் உள்ள பொக்கிஷங்களையும் அறிமுகப்படுத்தவே.

கிட்டத்தட்ட பல ஆயிரம் மடல்கள் அவரே எழுதியுள்ளார். அவரது தமிழ் மடல்கள் சூப்பர் ஹிட் ஆனதற்குக் காரணம் - அவரின் விசாலமான விஷய ஞானம், அனுபவம், ஆர்வம் எல்லாவற்றையும் தாண்டி, மற்றவர்களுக்குப் புரியும் படியும், ஆர்வமூட்டும்படியும் எழுதும் அவரது எழுத்து நடை. கையைப் பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்லும் பாங்கு. சின்னச் சின்ன பாராக்கள் மூலம் எளிய முறையில் பத்தி பிரித்து எழுதும் நடை, ஜேபி 'பொடி' எனப்படும் ஒரு 'கொக்கி' போட்டு பலரையும் உள்ளிழுக்கும் தன்மை என சொல்லிக் கொண்டே போகலாம்.

அவரின் எழுத்துக்கள் அவரது வீட்டு நூலகத்திலேயும் (எண்ணற்ற புத்தகங்கள், சேகரிப்புகள்..) இணையத்திலேயும் மட்டுமே இருந்தால் பலருக்குப் போய்ச் சேராது. புத்தகமாக வந்தால் நிச்சயம் தமிழ்நாட்டிலும் மற்ற தமிழ்பேசும் ஊர்களிலும் நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும். தமிழக பதிப்பாளர்கள் அவரது எழுத்துகளை ஏன் இன்னும் புத்தகமாக போட வரவில்லை என்பது ஆச்சரியம். கிழக்கு பதிப்பகம், Anyindian போன்றோர் அவரின் இணைய எழுத்துகளைத் தொகுத்தாலே பல சிறந்த புத்தகங்கள் கிடைக்கும். செய்வார்களா ?

முன் நன்றி.

http://groups.yahoo.com/group/agathiyar/messages

அகத்தியத்தின் பல்லாயிரம் மடல்களைத் தேட வசதி செய்து கொடுத்துள்ள, மற்றும் http://www.treasurehouseofagathiyar.net/index.html இந்த வலைத்தளத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளவர்கள் அனைவருக்கும் நன்றி.

நானும் டாக்டர்.ஜேபிக்கு சில விஷயங்கள்/தொகுப்புகள் செய்கிறேன் எனச் சொல்லிவிட்டு செய்யமுடியாமல் - அடடா சொன்னதைச் செய்யமுடியவில்லையே என இன்னும் வருந்துவதுண்டு. அவரின் பல முக்கிய கட்டுரைகளை E-book வடிவிலாவது கொண்டுவர வேண்டும்.

டாக்டர்.ஜேபி எழுதுவது தாண்டி அகத்தியத்தில் அவரிடம் கேள்வி கேட்டு அவரிடமிருந்து பல புதையல்களை வெளிக்கொணர்ந்த அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி.

தற்போது ஓடிக்கொண்டிருக்கும் இழை - சித்தர்கள் மற்றும் சித்தர் முத்துவடுகநாதர் பற்றியது. சேமித்து வைக்கவேண்டிய பொக்கிஷம்.

- அலெக்ஸ் பாண்டியன்
06-June-2006

பி.கு: சில பல சொந்த காரணங்களால் சில மாதங்கள் வலைப்பதிய முடியாமல் இருந்தது -இருக்கிறது. ஆனாலும் டாக்டர்.ஜேய்பியின் இந்த மகத்தான மைல்கல் பற்றி தமிழ் வலைப்பதிவு உலகு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலிலேயே இந்தப் பதிவு.

2 comments:

Senthil said...

மிகவும் நல்ல முயற்சி . கண்டிப்பாக பல வலைபதிவர்களுக்கு இவரை பற்றி தெரியாது என்றே நினைக்கிறேன்.சில வருடங்களுக்கு முன் "தமிழா முகுந்த்" மற்றும் பலர் இந்த முயற்சியை ஆரம்பித்தனர்.சுங்கை பட்டாணியில் அவரை சந்திக்கவேண்டும் என பீனாங் செல்லும் போது நினைத்தேன் . முடியவில்லை. மற்றொருமுறை KL வாய்ப்பையும் தவற விட்டேன் :( இன்னொரு ஆச்சரியம் இன்றுதான் சில மணி நேரத்துக்கு முன் அவரது மடலை பல மாதங்களுக்கு பிறகு இன்று பார்த்தால் நீங்கள் சொன்ன சித்தர் முத்துவடுகநாதர் பற்றியதே. :).


அன்புடன்
சிங்கை நாதன்.

Alex Pandian said...

நன்றி செந்தில். (சிங்கை நாதன்)

அவரின் உடல் நலம் சிறந்து விளங்கி, நமக்கு மேன்மேலும் பல பொக்கிஷங்கள் அகத்தியத்தில் தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்பதே எனது அவாவும் கூட.

- அலெக்ஸ்