Friday, July 28, 2006

AVM: ஏவி.மெய்யப்பன் நூற்றாண்டு விழா

இன்று ஏவி.மெய்யப்ப செட்டியாரின் நூற்றாண்டு விழா. நன்றி: தினமலர்: வாழ்க்கையை வெற்றியாக்கிய ஏவி.எம்., : "நாம் இருவர்' முதல் " சிவாஜி ' வரை தொடரும் சாதனை

இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏவி.மெய்யப்ப செட்டியார் காரைக்குடி என்ற சிறு நகரத்தில் ஆவிச்சி செட்டியாருக்கும், லட்சுமி ஆச்சிக்கும் 28.07.1907ல் மகனாக பிறந்தவர்.

நகரத்தார்களுக்கு வட்டி தொழில் செய்வது தானே வழக்கம். ஆனால், ஆவிச்சி செட்டியார், அந்த காலத்திலேயே ஏவி அண்டு சன்ஸ் என்ற பெயரில் பலபொருள் அங்காடி கடை வைத்தார். தன் தந்தைக்கு உடல் நிலை பாதித்ததால் கடை வேலைகளை கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏவி.எம்.,க்கு ஏற்பட்டது. அதனால், ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை.

ஆனாலும் அவரின் பொது அறிவு அசாத்தியம். இதன் பலன், தன் 22வது வயதிலேயே "போர்டு கார்' கம்பெனியிலே ஏஜென்சி எடுத்தார்.

இசைத்தட்டுகளை வாங்குவதற்காக சென்னை வந்த போது ஏன் நாம் விலைக்கு வாங்கி வியாபாரம் செய்ய வேண்டும் நாமே தயாரித்தால் என்ன என்று செயல்பட தொடங்கினார். அதன் விளைவாக இசைத்தட்டுகளை தயாரிக்கும் சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற நிறுவனத்தை 09.09.1932ல் உருவாக்கினார்.

அதன் வளர்ச்சியாக படங்களை தயாரிக்க கல்கத்தாவுக்கு சென்றார். அல்லி அர்ஜூனா(1935) வில் தொடங்கி முதல் மூன்று படங்கள் தோல்வி அடைந்தன.

தோல்வியை கண்டு பயந்துவிடவில்லை தோல்விக்கு என்ன காரணம் என்று புரிந்து கொண்டு சென்னையில் 1940ல் பிரகதி ஸ்டூடியோவை பங்குதாரர்களுடன் துவக்கினார். பூ கைலாஷ் (31.05.1941), சபாபதி (09.01.1942), என் மனைவி(07.03.1942), ஹரிச்சந்திரா(04.06.1943), ஸ்ரீவள்ளி(14.04.1945) போன்ற படங்களை தயாரித்தார். அதில் ஹரிச்சந்திரா கன்னடத்தில் எடுத்த படம். அதனை தமிழில் மொழி மாற்றம் செய்தார். இது தான் இந்தியாவிலேயே முதலில் டப்பிங் செய்த படம்.

நந்த குமார் படத்தில் "பிளேபேக்' முறையை அறிமுகப்படுத்தியவர் ஏவி.எம்., தான்.

ஸ்ரீவள்ளி படத்தில் ருக்மணி பாடிய பாடலுக்கு பெரியநாயகியை பாட வைத்து "போஸ்ட் சிங்கரைனைசேஷன்' முறையை கையாண்டார். இதுவும் ஏவி.எம்., முதன் முதலாகச் செய்தது.

காரைக்குடிக்கு அருகில் தேவகோட்டை ரஸ்தா என்ற இடத்தில் ஒரு நாடக கொட்டகையில் குடிசை போட்டு 1946ல் ஏவி.எம்., ஸ்டூடியோவை ஆரம்பித்தார்.

அங்கு முதன் முதல் எடுக்கப்பட்ட படம் "நாம் இருவர்'(14.01.1947) தேசிய உணர்வை ஏற்படுத்திய படம். இதில் தான் பாரதியார் பாடல்களை சேர்த்து பட்டி தொட்டியெங்கும் ஒலிக்க செய்து பாமர மக்களிடம் பாரதியார் பாடல்களை கொண்டு சேர்த்தார்.

அடுத்து எடுத்த படம் வேதாள உலகம்(08.08.1948).

கடந்த 1948ம் வருடம் ஏவி.எம்., ஸ்டூடியோவை சென்னைக்கு மாற்றினார். அங்கு எடுத்த முதல் படம் "வாழ்க்கை'(22.12.1949).

ஏவி.எம்., எடுத்த படங்கள் வியாபார ரீதியாக மட்டுமல்லாமல் சமூகத்திற்கு பல விழிப்புணர்வுகளை உண்டாக்கிய கருத்துள்ள படங்கள்.

ஹம் பஞ்சி ஏக் டால்கே(08.08.1957) இந்திய அரசின் தங்க பதக்கத்தை பெற்ற படமாகும்.

ஏவி.எம்.,ல் பணியாற்றிய ஐந்து பிரபலங்கள், முதல்வர் ஆனது ஏவி.எம்.,க்கு கிடைத்த தனி பெருமை

அண்ணா (ஒர் இரவு11.04.1951)

மு.கருணாநிதி (பராசக்தி17.10.1952)

எம்.ஜி.ஆர்.,(அன்பே வா14.01.1966)

ஜெயலலிதா (மேஜர் சந்திரகாந்த்11.11.1966)போன்ற பல படங்கள்

என்.டி.ராமாராவ்(சங்கம்10.07.1954), (பூ கைலாஷ்20.03.1958), (ராமு04.05.1968), (சிட்டி செல்லலு29.07.1970).

வைஜயந்திமாலா, சிவாஜி கணேசன், கமலஹாசன், வி.கே.ராமசாமி, டி.ஆர்.மகாலிங்கம், சிவகுமார் போன்ற பல நடிகர்களும் ஏவி.எம்.,மால் அறிமுக படுத்தப்பட்டவர்கள். இதைப்போல பல இயக்குனர்களும், தொழில் நுட்பக்கலைஞர்களும் இங்கே உருவானவர்கள்.

அறுபது ஆண்டுகளை தாண்டி தொடர்ந்து கலை உலகத்தில் முத்திரை பதித்து கொண்டிருக்கும் இதில் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் சிவாஜி படத்தை தயாரித்து 168வது பட தயாரிப்பு சாதனையை எட்டியுள்ளது இந்நிறுவனம்.

இவர் தான் ஏவி.மெய்யப்பன் :

* ஏவி.எம்., ஒரு பர்பெக்ஷனிஸ்ட். செய்வன திருந்த செய்ய வேண்டும். ஒருவரிடம் ஒரு வேலையை ஒப்படைக்கும் போது, அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொன்னால் தான் அது சரியாக நடக்கும் என்பது அவருடைய சித்தாந்தம்.

* டைம் மேனேஜ்மென்ட் எனப்படும் நேர நிர்வாகம் அவருக்கு கை வந்த கலை.

* எந்த ஊருக்கு போவதாக இருந்தாலும் என்னென்ன அயிட்டங்கள் கொண்டு போக வேண்டும் என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் லிஸ்ட் போடுவார். வேட்டி, சட்டை, பனியன், அன்டர்வேர், விபூதி, துண்டு என்று அத்தனையும் அதில் சேர்த்திருப்பார். இந்த பழக்கத்தால், நீரிழிவுக்காரரான அவர் தன் பயணங்களின் போது இன்சுலின், சிரஞ்ச், ஸ்பிரிட் போன்ற எதையும் ஒரு தரம் கூட அவர் மறந்தது கிடையாது.

* வீட்டில் எது பேசும்போதும் மூன்றாவது மனிதர்கள் இருப்பதை அவர் விரும்பியதில்லை.

* ஓர் இடத்தில் இருந்து கிடைக்கும் தகவலை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்து விட மாட்டார்.

* உதவி செய்ய தோன்றினால் உடனே செய்துவிட வேண்டும். "டுமாரோ ஈஸ் நோ குட்' என்று அடிக்கடி சொல்வார். "அன்றே செய்' என்பது அவரது தாரக மந்திரம்.

* ஒரு படம் எடுக்கும் முன்பாக அதில் எவ்வளவு லாபம் வரும் என்பதை விட அதில் எவ்வளவு நஷ்டம் வரும்; அப்படி வந்தால் அதைத் தாங்க முடியுமா என்று கணக்கிட்டு பார்த்த பின்பே வேலையில் இறங்குவார்.

* எடுத்ததற்கெல்லாம் ராகு காலம், எமகண்டம் பார்ப்பதோ, ஜாதகம், ஜோசியம் என்று அலைவதோ அவருக்கு பிடிக்காத விஷயங்கள். உழைப்பும், நாணயமுமே அவர் நம்பிய தொழில் மூலதனங்கள்.

* பள்ளிக்கூடம், கல்லுõரிகளுக்கு பண உதவி செய்துவிட்டு, பதிலுக்கு ஒரு வருடத்திற்கு ஒரு சீட் கொடுக்க வேண்டும் என்று கேட்பது ஒருவகை லஞ்சம் என்பார் இவர்.

* கேன்டீனுக்கு தினமும் "மெனு' தயாரித்தது இவர் தான். கேன்டீனில் சாப்பிட விரும்புகிறவர்களுக்கு குவாலிட்டி அயிட்டங்களை தர வேண்டும் என்பதில் ரொம்பவும் குறிப்பாக இருப்பார்.

* "அது அப்படித்தான்' என்று சொல்வதில் அவருக்கு விருப்பமே இருந்ததில்லை. மற்றவர்கள் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார். எங்கேயோ மிஸ்டேக் இருக்கு. அதை திருத்தினால் "அது அப்படித்தான்' என்று நழுவி போக தேவையிருக்காது என்று நம்பியவர்.

* மரணத்தை பற்றி ஏவி.எம்., கவலைப்பட்டதில்லை. "எனக்கு எப்போதும் சாவை பற்றி கவலை கிடையாதப்பா. அதை பற்றி பயப்படவே கூடாது. அதே சமயம் அதை பற்றி நினைக்காமலும் இருக்க கூடாது. செய்ய வேண்டியதை அதற்கு முன் செய்து விட வேண்டும். இந்த உலகத்துக்கு வர்ற நாம எல்லாருமே ரிட்டர்ன் டிக்கெட் வாங்கிட்டு தான் வர்றோம். அதுக்கு எண்டார்ஸ்மென்ட் தான் எப்போன்னு தெரியாது. ஆகவே, பயப்படறதுக்கு என்ன இருக்கு?' என்பார்.

* சொத்து என்பது நம்ம காலத்தில் நம்ம கையில இருக்கிற பொசிஷன் மட்டுமே என்பது ஏவி.எம்.,ன் கருத்து. தன்னுடைய 49வது வயதிலேயே சொத்துக்களை பிரித்து மகன்கள் பெயர்களில் எழுதி வைத்து விட்டார். 72வது வயதில் அவர் காலமானபோது அவர் பெயரில் ஒரு துண்டு நிலம் கூட கிடையாது என்ற உண்மை பல பேருக்கு தெரியாது.

* ஏவி.எம்.,மின் மறக்க முடியாத அட்வைஸ்: "பிசினஸ்னா அதில் ஈடுபாடு இருக்கணும். நல்ல பிசினஸ் என்று யாரோ சொல்றாங்கன்னு பண்ணக்கூடாது. இன்னொருத்தரை நம்பி பிசினஸ் பண்ணக்கூடாது.

* "படத்தில் செக்ஸ் இருக்கலாம். ஆனால், வல்காரிட்டி, ஆபாசம் இருக்கக்கூடாது' என்பது அவரது கருத்து. "இரண்டுக்கும் இடையே நுõலிழை அளவே வித்தியாசம் வெறும் பார்வையிலேயே கூட செக்ஸ் கிளாமர் கொண்டு வரலாம். அது தப்பில்லை. ஆனால், அதுவே கொஞ்சம் ஓவராக போனால் ஆபாசமாகிவிடும். எனவே எல்லைக்கோட்டை கவனித்து அதை கடக்காமல் காட்சிகளை அமைக்க வேண்டும்' என்று அறிவுரை சொல்வார்.

* ஏவி.எம்., கடைப்பிடித்து வந்த ஒரு வழக்கம் ரொம்பவும் வித்தியாசமானது. டேப் ரிக்கார்டர் என்ற சாதனம் வராத காலத்தில் ஸ்கிரிப்ளிங் பேட் என்று காகிதங்களை ஒரு நோட்புக் போல இணைத்து அதில் ட்வெயின் நுõலின் ஒரு எச்பி பென்சிலைக் கட்டியிருப்பார். அது கட்டில் தலைமாட்டில் இருக்கும். அதேபோல டெலிபோன் பக்கத்தில், பாத் ரூமில் கம்மோடுக்கு மேலே, டைனிங் டேபிளில், டிராயிங் ஹாலில், கார் டேஷ் போர்டில் என்று பல இடங்களிலும் ஒவ்வொரு ஸ்கிரிப்ளிங் பேட் வைத்திருப்பார். ஏதேனும் செய்யப்பட வேண்டும், அதை உதவியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்று நினைத்தால் உடனே அந்த பேடில் கிராசாக எழுதி கையெழுத்து போடுவார். ஆபீஸ் போனதும் தன் செயலரிடம் தந்து யார் யாருக்கு தகவல் போய் சேர வேண்டுமோ அதை சேர்க்க சொல்வார்.

* பின்னாளில் கையடக்க டேப் ரிக்கார்டர் வந்தது. அதில் தான் தர வேண்டிய உத்தரவுகளை அவ்வப்போது ஒலிப்பதிவு செய்து கொள்வார். ஆபீஸ் போய் சேர்ந்ததும் செக்ரட்டரியிடம் கொடுப்பார். அவர் அதை போட்டு கேட்டு யார் யாருக்கு என்ன உத்தரவோ அதை விளக்கமாக டைப் செய்து அவர்களுக்கு அனுப்பி விடுவார். டேப் ரிக்கார்டரை மகன்களுக்கும் வாங்கி கொடுத்தார். இப்போதும் ஏவி.எம்., போலவே அதை பயன்படுத்தி வருகிறார் சரவணன்.

Courtesy: http://www.dinamalar.com/2006july28/general_tn4.asp

No comments: