Tuesday, January 03, 2006

சபாஷ் - சரியான போட்டி..!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்..! பிரணாய் ராயின் NDTVக்குப் போட்டியாக அவரிடமே வளர்ந்த ராஜ்தீப் சர்தேசாயின் (மற்றும் TV18ன்) IBN தொலைக்காட்சி சானல் ஆரம்பமே வேகம்.


Photo courtesy: www.indiantelevision.com

வளர்த்த கடா மார்பில் பாயும் என்பார்கள். இங்கோ உடல் முழுவதும் பாய்கிறது. சுமார் 8 மாதங்கள் முன்பு NDTVயை விட்டு ராஜ்தீப் சர்தேசாய் விலகினார். ஏன் விலகினார் என்பதற்கு இங்கே சொடுக்கவும். NDTVயின் வெற்றிக்கு பல செய்தியாளர்கள் காரணம். பிரணாய் ராயின் மத்திய அரசு, மற்றும் அரசியல் கட்சிகளிடம் உள்ள செல்வாக்கு, நம்பிக்கை, track record (80களில் தூர்தர்ஷனில் வந்த The World This Week - அப்பன் மேனன் எல்லாம் ஞாபகம் வருகிறதா ?), செய்திகள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளின் தொகுத்துத் தரும் தன்மை (பட்ஜெட், மாநில, மத்திய தேர்தல் அலசல்கள்) இவையெல்லாம் தாண்டி பிரணாய் ராய் வளர்த்துவிட்ட இளம் படைப்பாளிகளும் காரணம். ராஜ்தீப் தவிர, பர்கா தத், விக்ரம் சந்திரா, ஸ்ரீனிவாசன் ஜெயின், விஷ்ணு சோம், என எண்ணற்ற பல இந்தியர்களுக்கு பழக்கமான Professional படைப்பாளிகள்.


Photo courtesy: www.ibnlive.com

இவற்றில் ராஜ்தீப் பிரிந்து சென்று TV18n ராகவ் பெஹலுடனும் தனது மனைவி சாகரிகா கோஸ் உடனும் இணைந்து துவங்கியுள்ளதுதான் CNN-IBN சேனல். (சாகரிகா கோஸ் பழைய தூர்தர்ஷன் பெரிய தலை - பாஸ்கர் கோஸ் அவர்களின் புத்திரி என்பதும் ராஜ்தீப் சர்தேசாய் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் சர்தேசாயின் புதல்வர் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கலாம்)

NDTVயின் பாணியையே CNN-IBNனும் பின்பற்ற ஆரம்பித்துள்ளது (கலர், பின்னணி, தலைப்புச் செய்திகள் ஒட்டும் ticker placement, செய்திகளுக்கு இடையில் வரும் சானல் பற்றிய விளம்பரம் (ராஜ்தீப்புக்கும் IBNக்கும் வாழ்த்துக்கள் என பெரிய தலைகள் எல்லாம் சொல்லும் க்ளிப்பிங்க்ஸ்)

ராஜ்தீப்பின் மனைவி சாகரிகா கோஸ் - அவரும் செய்தி வாசிக்கிறார் (நன்றாகவே).

ராஜ்தீப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. NDTVயின் சிறந்த செய்தியாளராக இருந்தவர். டைம்ஸ் ஆ·ப் இண்டியாவில் நிருபராக ஆரம்பித்தவர். டில்லி அரசியலில் உள்ள பல பெருந்தலைகளுடன் நல்ல தொடர்பில் இருந்தாலும் அவர்களை அலசலுக்கு கூட்டி வந்தால் கிழிகிழி என கிழித்துவிடுபவர். NDTVயிலிருந்து தன்னுடனேயே சிலரையும் இழுத்து வந்துள்ளார். பால் தாக்கரே போன்ற பெரிய தலைகளுடன் மோதிய அனுபவமும் உண்டு. 2 நாட்கள் முன்பு சோனியாவுடனான முதல் நீண்ட அமர்வு பேட்டியும் உண்டு. அவரின் Big Fight (சனி இரவு 8 மணி) NDTVயில் மிக பிரபலமான மற்றும் விருதுகள் வாங்கிய நிகழ்ச்சி.

நமக்கு நல்ல செய்திச் சேனல் கிடைத்த ஒரு மகிழ்ச்சி. NDTV போரடிக்கும் போது மட்டுமல்ல அவ்வப்போது CNN-IBNக்கும் இனிமேல் ரிமோட் வழிகாட்டும். Both sites have RSS feeds for news and also blogs

இளங்கன்று பயமறியாது என்பார்கள். ராஜ்தீப் மற்றும் அவரது இளம் செய்தியாளர்கள் கடந்த 2 வாரங்களிலேயே பல Exposeகளை தலைப்புச் செய்தியாக்கி வருகின்றனர். பிரணாய் ராய் அளவிற்கு நம்பிக்கை, பலரையும் அணைத்துச் செல்லும் செய்தி தரும் பாங்கு என செல்வார்களா இல்லை இந்தி செய்தி சானல்கள் மாதிரி பரபரப்பு என்னும் மாயையில் சிக்கி பாலிவுட், நிழலுலகம், டெல்லிதான் இண்டியா, இண்டியாதான் டெல்லி என்னும் பாணியில் சிக்கிக் கொள்வார்களா என்பது போகப் போகத் தெரியும்.

- அலெக்ஸ் பாண்டியன்
3-ஜனவரி-2006