Friday, August 22, 2008

நிஜ குசேலர்களும் நிஜ ரஜினியும்

குசேலன், ரஜினி அப்படீன்னு பார்த்தவுடன் கும்மிடாதீங்க. இது கதையல்ல நிஜம். கர்நாடகாவில் பெங்களூர் இருக்கிறது, மைசூர் இருக்கிறது. சோமபுராவும் இருக்கிறது.

பெங்களூருக்கும் மைசூருக்கும் இடையில் அரசின் 4 வழிச்சாலை (அருமையான சாலை) இருக்கிறது. இதைத் தவிர தனியார் மூலம் இரு நகரங்களையும் இணைக்கும் நைஸ் எனப்படும் நந்தி கம்பெனிக்கு பல ஆண்டுகள் முன் சாலை ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. 1995ஆம் ஆண்டு தேவகவுடாவால் ஒப்பந்தம் போடப்பட்டது. (Now it is 2008..!) பெங்களூர் மைசூர் இடையே சாலை மட்டுமில்லாமல் அதையொட்டிய துணை நகரங்களும் அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. வந்தது வினை.


Image Courtesy: http://www.nicelimited.com

பெங்களூர் மைசூர் இடையே உள்ள செழிப்பான பல நிலப் பகுதிகளும் தேவகவுடா மற்றும் குடும்பத்தினரின் பினாமி பேர்களிலோ அரசு அதிகாரிகள், பல்வேறு அரசியல் தலைவர்களின் பினாமி பெயர்களிலோ இருப்பதால் அவர்களின் நிலமெல்லாம் நந்தி கம்பெனிக்கு தாரை வார்க்கப்படும் என்ற பயத்தால் இந்த சாலை அமைக்க சுப்ரீம் கோர்ட் வரை எத்தனை முட்டுக் கட்டைகள் ? எத்தனை வழக்குகள் ? சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் எத்தனையோ முறை கர்நாடக அரசையும், தலைமைச் செயலரையும் திட்டி, கண்டனம் செய்து என்னவெல்லாமோ செய்து பார்த்தும் குமாரசாமியோ அவர் தந்தை தேவகவுடாவோ முட்டுக்கட்டை போடுவதை நிறுத்தவில்லை.

பாஜக அரசு வந்தால் இதற்கு தீர்வு ஏற்படும் என மக்கள் நினைத்தனர். ஆனால் அதற்கும் பல்வேறு குடைச்சல்களை தேவகவுடா குடும்பத்தினர் கொடுத்து வந்தனர். சமீபத்தில் தான் பாஜக அரசு எல்லா வழிகளையும் கொஞ்சம் இலகுவாக்கியது. ஆனாலும் குமாரசாமி 'கர்நாடகத்தில் நந்திகிராம்' நிகழும் என்றெல்லாம் சூளுரைத்திருக்கிறார்.

இந்த சாலை மற்றும் பெங்களூர் நகரத்தின் உள்ளேயே வரும் ஓசூர் சாலை முதல் கனகபுரா சாலை வழியாக தும்கூர் சாலையை அடைய வழிசெய்யும் நைஸ் பைபாஸ் சாலை முடிவடைந்தால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு போக்குவரத்து விடியல் ஏற்படும். இருந்தாலும் அரசியல் தலைகள் இதற்கு தடை ஏற்படுத்தி வருகின்றனர்.

*** *** *** ***

சரி கதைக்கு - ச்சே..! நிஜத்திற்கு வருவோம்.

சோமபுராவில் லக்ஷ்மம்மாவின் குடிசை தற்போது கான்கிரீட் வீடாகியிருக்கிறது. வீட்டில் மின்விசிறி இருக்கிறது, கேஸ் ஸ்டவ் இருக்கிறது. அவர் கணவர் பைக் வைத்திருக்கிறார். கழிப்பிடமோ காம்பவுண்ட் சுவரோ கூட இல்லாதிருந்த முந்தைய குடிசைவாழ்விலிருந்து இந்த கான்கிரீட் வீட்டு வாழ்வு எப்படி ஏற்பட்டது ? நைஸ் கம்பெனி கட்டிக் கொடுத்ததுதான் இது.

லக்ஷ்மம்மாவுக்கு மட்டுமே நிகழ்ந்ததல்ல இது. இன்னும் 23 குடும்பங்களுக்கும் இதுபோலவே நைஸ் கட்டிக் கொடுத்திருக்கிறது. சுமார் 143 கிராமங்களை இதுபோல நைஸ் தத்தெடுத்துள்ளது. அதில் சோமபுரா மட்டும் தற்போது ஒரு மினி நகரத்தைப்போல காணப்படுகிறது. நைஸ் கம்பெனி சாலை போடுவதற்கு விவசாயிகளிடமிருந்து நிலம் வாங்கியிருந்தாலும் அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக இதுபோல வசதியான கிராமங்களை ஏற்படுத்திவருகிறது. வீடுகளை நைஸ் கட்டிகொடுத்திருந்தாலும் அது விவசாயிகளின் விருப்பப்படியே செய்யப்பட்டிருக்கிறது.

*** **** ****

இப்போது இன்னும் நிஜத்திற்கு வருவோம்.

இப்படிக்கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய கிராமமான சோமபுராவைத் துவக்கிவைக்க யாரை வரவழைத்தது நைஸ் தெரியுமா ? வேறு யாருமில்லை மக்களே ! நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியைத்தான்..!!

ரஜினியும் சென்னையிலிருந்து வந்து கிராமத்தைத் துவக்கி (!?) வைத்து கிராமமக்களோடு சில மணிநேரங்கள் அளவளாவி அவர்கள் பிரச்னைகளை கேட்டுத் தெரிந்துகொண்டுள்ளார்.

கிராமத்தில் வாழும் கிருஷ்ணப்பா சொல்கிறார் 'எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. முதலில் புது வீடு கிடைத்தது. இப்போ ரஜினிகாந்தும் வந்திருக்கிறார், நாங்கள் நிச்சயம் செழிப்பாக வாழ்வோம்."

முழுக்கட்டுரை மூலம் இங்கே

*** *** ****
இவ்வாறு கிராமத்தில் குசேலர்களாய் வாழும் பலருக்கும் ரஜினி நிஜமாகவே வந்து அவர்கள் வாழ்வு செழித்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் ?

அனைவருக்கும் கிருஷ்ண ஜன்மாஷ்டமி வாழ்த்துக்கள்..!!

**** **** ****

இது நைஸ் கம்பெனிக்கான விளம்பரம் அல்ல.

இந்த நைஸ் சாலை கூடிய விரைவில் முடிக்கப்பட்டால் பெங்களுர் தெற்கு பகுதியில் டிராபிக் கொஞ்சம் சீரடையும். அதனால் எனக்கும் கொஞ்சம் வசதி. அவ்வளவே.

மற்றபடி நைஸ் கம்பெனி உரிமையாளர் அஷோக் கேனி பாஜகவினருக்கு நெருக்கமானவர். அதனால் தான் ரஜினியைக் கூப்பிட்டனர் - அவரும் வந்தார் போன்ற உள்குத்துகள் பற்றி ஐயா தெரியாதைய்யா!

- அலெக்ஸ் பாண்டியன்
22 ஆகஸ்ட் 2008

Wednesday, July 09, 2008

ஜோதிபாசு - 95

காம்ரேடுகள் மத்திய அரசுக்கு ஆதரவை அதிகாரபூர்வமாக விலக்கிக் கொண்ட இந்த சமயத்தில் 95ஆம் பிறந்த நாள் கொண்டாடும் (8-July) - சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக முதல்வராக ஆட்சி புரிந்து சாதனை படைத்த ஜோதிபாசுவுக்கு வாழ்த்துக்கள்.

அவரது மகன் மீது சில ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தாலும் பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லாமல் ஆண்டவர். அவரது ஆட்சி மேற்குவங்கத்தின் இருண்ட காலம் (தொழிற் வளர்ச்சியில்) என பலர் கூறினாலும் இன்றைக்கும் இடது சாரிகட்சிகளுக்கு (கேரளத்திற்கு வெளியே) இருக்கும் ஒரே இடம் மேற்கு வங்கம் என்பதை ஏற்படுத்திய பெருமை ஜோதிதாவிற்கே சேரும்.


Photo courtesy: Deccan Herald

அவரின் சிஷ்யர் புத்ததேவ் பட்டாசார்யாவையும் நன்றாகவே தயார் படுத்தி வைத்திருந்தார். பின்னவரின் கடந்த சில ஆண்டுகள் ஆட்சியில் தொழிற்வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் - நந்திகிராம், சிங்கூர் என சில கறைகள் இருந்தாலும். ஜோதிபாசு அளவிற்கு எழுச்சியாக பேசக்கூடிய தலைவர்கள் சிலரே இன்னும் உள்ளனர். காவிரிக்கரையிலுள்ள எங்களூருக்கும் ஜோதிபாசு 80களில் வந்துள்ளார்.

அவரின் பெங்காலி மேடைப் பேச்சுக்கள் கேட்டால் சில சமயம் பொறி பறக்கும். கல்கத்தாவில் நான் வசித்த பல வருடங்களில் சிலமுறை சில பொதுக்கூட்டங்களில் பார்த்ததுண்டு. முதல்வராக இருந்தாலும் அவர் முன்னும் பின்னும் ஓரிரு கார்களே செல்லும். அலம்பல் எல்லாம் கிடையாது. மிகவும் சிம்பிளானவர்.

அதே சமயம் டெல்லியில் இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி என பலரும் மதித்த ஒரு மாற்றுக் கட்சித் தலைவர். அவருக்கு பிரதமராக சான்ஸ் கிடைத்தபோதும் அதை கிடைக்கவிடாமல் செய்தது அதே இடது சாரி மார்க்ஸிஸ்டுகள் தாம்.

இடது சாரிகளுக்கு ராஜ்தீப் சர்தேசாயின் மனைவியும் சிஎன்என் ஐபிஎன் சீனியர் எடிட்டருமான சாகரிகா கோஸ் எழுதியுள்ள (அனைவரும் படிக்கவேண்டிய) ஒரு சிறப்பான கடிதம் இங்கே.

Sagarika Ghose writes a letter to the Left parties:

“Why did this happen? Your first mistake was that you refused to join the government or take on ministerships. You preferred to be the eternal college campus rebel, always oppositional, always agitational, but never responsible, or adult enough to recognize that in this country, managing change is about negotiating a myriad interest groups….

“Your second mistake was that you failed to realize that you are aged in a country of the young; you have failed to come to terms with the new India. Economic globalization, despite your consistent opposition, is raging through the country like a wildfire. Like it or not, India’s young are rushing towards new opportunities with open arms.”

நன்றி: சுறுமுறி

- அலெக்ஸ் பாண்டியன்
9- ஜூலை 2008

Monday, July 07, 2008

இதுதாண்டா ஆட்டம்..! (விம்பிள்டன் இறுதி - நடால் வெற்றி)

நேற்றைய விம்பிள்டன் ஒற்றையர் இறுதி ஆட்டத்தை எத்தனை பேர் பார்த்தீர்களோ ? நடால் வெற்றி பெற்ற இந்த ஆட்டம் தான் சமீப வருடங்களிலேயே சிறப்பான கிறாண்ட் ஸ்லாம் இறுதி ஆட்டமாக இருக்கும் என நினைக்கிறேன். முதல் 2 செட்டுகளை நடால் ஜெயித்தாலும் அடுத்த இரண்டு செட்டுகளை டை பிரேக்கரில் ஜெயித்த ரோஜர் ஃபெடரரின் போராட்டமும் சூப்பர். பின்னர் மழை வந்து சஸ்பென்ஸில் நிறுத்த பின்னர் நடால் இறுதி செட்டையும் <<>> ஜெயிக்க.. அமர்க்களம்..!

ஸ்கோர் விவரம்:

நடால் - ஃபெடரர்:
6 - 4
6 - 4
6 - 7 (5-7)
6 - 7 (8-10)
9 - 7

தூர்தர்ஷன் மட்டுமே இருந்த அந்தக்கால சமயங்களில் இந்தியாவில் அதுவும் தமிழர்கள் பலரும் டென்னிசுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஃபிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்கன் ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன் என எல்லா போட்டிகளையும் கவனித்து வருவர். கடந்த 10 வருடங்களில் பல்வேறு ஸ்போர்ட்ஸ் சானல்கள் வந்த பிறகு அதுவும் நாளும் எங்காவது கிரிக்கெட் நடந்து வரும் பொழுதுகளில் டென்னிசுக்கு கிடைத்துவரும் முக்கியத்துவம் குறைந்துதான் விட்டது.

Photos Courtesy: BBC Sport

ஆனாலும் டென்னிஸ் ஆட்ட பிரியர்களுக்கு நேற்றைய ஆட்டம் ஒரு வரலாறு என்றே சொல்லலாம்.

பிபிசி செய்திகள் - இங்கே

- அலெக்ஸ் பாண்டியன்
7-ஜூலை 2008

Monday, May 26, 2008

கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 5

ஆளுங்கள் ஆனால் ஆட்டம் போடாதீர்கள் - இதுதான் கர்நாடக மக்கள் பாஜகவினருக்கு கொடுத்துள்ள மக்கள் தீர்ப்பு என எடுத்துக்கொள்ளும் வகையில் தேர்தல் முடிவுகள். சிம்பிள் மெஜாரிட்டி என 112க்குமேலான சீட்டுகள் கொடுக்காமல் அதே நேரம் 110 கொடுத்து கொஞ்சம் அவர்கள் நிலையை ரொம்பவும் ஊசலில் விடாமலும் செய்துள்ளனர்.


Photo Courtesy: The Hindu


பாஜக - 110
காங்கிரஸ் - 80
ஜனதா தளம் - 28
மற்றவர்கள் - 6
-----------------------
மொத்த இடங்கள் - 224
-----------------------


காங்கிரசுக்கு 80 கிடைத்ததே அதிர்ஷ்டம் எனலாம். ஜனதாதளத்திற்கு 28 சரியான அடி. கவுடா குடும்பத்தினரின் கவிழ்க்கும் அரசியலுக்கும் தேவகவுடாவின் வேஷங்களுக்கும் மக்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர் என்றே கூறவேண்டும். பங்காரப்பா, அவர்தம் இரு மகன்களுக்கும் சரியான அடி.

7-8 முறை சுகமாக வென்று முதல்வராகவும் பின்னர் எதிர்கட்சித்தலைவராகவும் இருந்த தரம்சிங் தனது சொந்த தொகுதியான ஜெவர்கியில் 70 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டிருப்பதும் மக்கள் கற்பித்த பாடமே. 7-8 முறை ஜெயித்திருந்தும் தனது தொகுதிக்கு எதையுமே செய்யாமல் மாநிலத்தில் பிந்தங்கிய தொகுதிகளில் ஒன்றாக வைத்திருந்ததும் இதற்குக் காரணாமாக இருக்கலாம்.

இதே போல அம்பரீஷ். ஸ்ரீரங்கப்பட்டிணாவில் அவரின் வெற்றி உறுதி என்றே பலரும் சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால் மக்கள் அவரின் வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கவில்லை என்றே தெரிகிறது.

இதுகாறும் பல வருடங்களாக சமராஜநகர் தொகுதியில் ஜெயித்து வந்த வட்டாள் நாகராஜுக்கு இந்த முறை ஆப்பு. டெப்பாசிட்டே காலி என்றே நினைக்கிறேன்.

பெங்களூர் நகரத்தைப் பொறுத்தவரை 28 தொகுதிகளில் 17 பாஜக வென்றுள்ளது. நகரம் நரகமாகியதில் காங்கிரஸ் ஆட்களின் பொறுப்பற்ற தன்மை என்று மக்கள் நம்பியதும் காரணமாக இருக்கலாம். பல இடங்களில் பணக்கார முதலைகள் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றனர். சென்ற முறை எம்.எல்.ஏவாக இருந்து ஏதும் செய்யாத ஆட்களெல்லாம் ஓரம்கட்டப்பட்டுவிட்டனர்.

காங்கிரஸ் ஏன் தோற்றது என்பதை இந்த ஹரீஷ்கரே ஹிண்டு கட்டுரை நன்றாக விளக்குகிறது.

காங்கிரசின் அணுகுமுறை பற்றிய இன்னொரு சிறந்த கட்டுரை - சுறுமுறியின் கிருஷ்ணப்ரசாத

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பார்கள். ஆனால் தந்தை சொல்லைக் கேட்டதற்காக இன்று ஒருவர் வருத்ததுடன் இருப்பார் என்றால் அவர் குமாரசுவாமி (த/பெ தேவ கவுடா) வாகத்தான் இருக்கும். தனது தொகுதியில் 40000+ வாக்குகள் வித்தியாசத்தில் அவர் ஜெயித்திருந்தாலும் அவர் கட்சிக்குக் கிடைத்த அடியிலிருந்து மீண்டு கட்சியை வலப்படுத்தவேண்டும் என்றால் முதலில் அவர் தன்னுடைய தந்தை மற்றும் குடும்ப கட்டுகளின் அரசியல் போக்கிலிருந்து விலகி சொந்த முறையில் அரசியல் செய்யத் துணியவேண்டும். அப்படிச் செய்தால், பலரையும் அரவணைத்து சென்று அரசியல் செய்தால், அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்.

ஒன்று மட்டும் தெரிகிறது. மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என முயற்சி எடுப்பவர்களுக்கு கருணை உண்டு. தான், தன் குடும்பம், சொத்து சேர்ப்பது, மற்றவற்களுக்கு நம்பிக்கை துரோகம், ஆட்சி கவிழ்ப்பது என இறங்குபவர்களுக்கு ஒரே தீர்ப்பு ஆப்புதான்.

இந்த தொடர் ஆரம்பித்தபோது முதல் பகுதியில் எழுதிய முதல் பாராவை மீண்டும் படியுங்கள். கலைஞர் எடியூரப்பாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஹோகனேக்கல் திட்டம் மூலம் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்வாரா ?

(நிறைந்தது)

- அலெக்ஸ் பாண்டியன்
26-மே-2008

முந்தைய பகுதிகள்

கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 1
கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 2
கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 3
கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 4

Friday, May 23, 2008

கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 4

மாஜிக் நம்பர் 112.

ஆக மூன்றாவது கட்ட தேர்தலும் முடிவுற்ற நிலையில் யாருக்கு அரியணை என இன்னும் 2 நாளில் தெரிந்துவிடும். ஆளாளுக்கு இன்னும் எக்சிட் போல், சர்வே என பாஜக, காங்கிரஸ், தொங்கு சபை என எடுத்துவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.


Photo courtesy: IBNLIVE.COM
கடைசியில் சிரிக்கப்போவது பத்மனாபநகர் பெருந்தலையே என பட்சி சொல்கிறது.

*** *** *** ***

தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளால் தள்ளிப்போன விமானநிலைய துவக்கு விழா, விழா ஏதும் இல்லாமலேயே இன்று இரவு 12.01மணிக்கு இந்தியா சிங்கப்பூர் ஏர் இந்தியா விமானப் பயணிகள் உதவியுடன் நடக்க இருக்கிறது. ஒரு நகரத்தின் வரலாறில் இது ஒரு மைல் கல் என்பதில் ஐயமில்லை. இன்று சங்கடஹர சதுர்த்தி. பல்வேறு சங்கடங்களைக் கடந்து இன்று வரை காத்திருந்த ஆல்பிரட் பிரன்னர், விக்கின விநாயகரின் அருளால் விமான நிலையம் இனிதே துவங்கி சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்..!

*** *** *** ***

ஓசூரில் விமான நிலையம் அமைக்க இடம் உள்ளதா ? சர்வதேச விமானங்கள் இறங்கும் அளவிற்கு ரன்வே அமைக்குமாறு தட்டையான பெரிய நிலப்பரப்பு ஓசூர் பக்கம் உள்ளதா ? அப்படி இருந்தால் மருத்துவர் ஐயா மாதிரியான பெரிசுகள் அங்கு விமான நிலையம் அமைக்கவிடுவார்களா ? தயாநிதி மாறன் மீண்டும் மத்தியில் அமைச்சரானால், ஸ்டாலினோ ஜெயோ அடுத்த தமிழக முதல்வரானால் - கொஞ்சம் முயற்சி எடுத்து இதைச் செயல்படுத்தினால் தமிழகம் (குறிப்பாக ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம் பகுதி) எங்கோ செல்லும்..! செய்வார்களா ?

(சைக்கிள் கேப்புல அப்படியே பெங்களூர் தெற்குபகுதி மக்களும் அந்த ஓசூர் ஏர்போர்ட்டை உபயோகப்படுத்த ஆரம்பிச்சாங்கன்னா ?)


*** *** *** ***

(தொடரும்)

அலெக்ஸ் பாண்டியன்
23-மே-2008

Wednesday, May 14, 2008

கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 3

மியான்மரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் புயலால் பாதிப்பு. சீனாவில் பூகம்பத்தால் 10000 பேர் உயிரிழந்தனர், பலர் பாதிப்பு. ஜெய்பூரில் 60க்கும் மேற்பட்டோர் குண்டு வெடிப்பில் பலி. என்ன நடக்கிறது ? ஆனால் இதெல்லாம் பற்றி எதையுமே கவலைப்படாமல் தானுண்டு தங்கள் வேலையுண்டு யார் ஆண்டால் என்ன எது எக்கேடு கெட்டுப் போனால் என்ன என இருக்கும் பெங்களூர் வாழ் பெருமக்களில் 44% மட்டுமே தேர்தலன்று வாக்களித்துள்ளனர்.


மேற்சொன்ன நிகழ்வுகளுக்கும் பெங்களூர் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ? வேறொன்றுமில்லை ஜென்டில்மேன்.. முந்தைய பதிவில் சொன்ன 'அபதி' எனப்படும் விட்டேற்றித்தனம் தான் காரணம்.

முதற்கட்டத் தேர்தல் நடந்த மே 10ஆம் தேதி காலை 7 மணியிலிருந்தே கூட்டம் கூடி ஓட்டுப்போட்டனர் என எழுத ஆசைதான். என்ன செய்வது. வெயில் பட்டையை கிளப்புமுன் ஒட்டுப் போட்டுவிட்டு வரவேண்டும் என 7.30மணிக்கு போனால் ஒவ்வொரு பூத்திலும் ஈ காக்கா இல்லை. அங்கிருந்த போலீஸாரும் பூத் ஏஜண்டுகளும் வாங்கய்யா வாங்க என வரவேற்காத குறை. முதலில் அறிவிக்கப்பட்டிருந்த பள்ளியிலிருந்து எங்கள் வாக்காளர் பட்டியல் வேறு பள்ளிக்கு (அருகில் தான்) மாற்றப்பட்டிருந்தது. அங்கும் ஒரு சில நபர்களே. போனோமா, கையில் மையை வைத்துக்கொண்டோமா, கையெழுத்தைப் போட்டுவிட்டு பட்டனை அமுக்கினோமா என ஒரு சில நிமிடங்களில் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட முடிந்தது.

பெரும்பாலும் வயதானவர்களும் சில 35- 45 வயது தம்பதியினரையும் தான் பார்க்க முடிந்தது. சில மணிநேரங்கள் கழித்து ஏரியாவில் உள்ள எல்லா பள்ளிகளையும் எட்டிப்பார்த்ததில் எல்லா இடங்களிலும் இதே நிலைமைதான். 18- 28 வயதுக்காரர்கள் பலரும் சனிக்கிழமை விடுமுறையை கழிப்பதில் இருந்தனரே ஒழிய ஓட்டுப்போடவேண்டும் என பெருங்கூட்டமாக வரவில்லை. 10 மணிக்குப் பிறகு நல்ல வெயில். பல பூத்களில் ஆளில்லை. அதுவும் மதியம் 1 மணிக்கு ஈ காக்கா கூட இல்லை. பெங்களூரிலேயே இப்படி என்றால் அனல் மாவட்டங்களான பெல்லாரி, ராய்ச்சூர், குல்பர்கா போன்ற 2ஆம் 3ஆம் கட்ட தேர்தல் நாட்களில் எத்தனை பேர் வெயிலுக்கு பயந்து வெளியில் வந்து ஓட்டு போடுவார்கள் என தெரியவில்லை. மே மாதம் தேர்தலை வைத்தது தவறோ என தோன்றுகிறது.

*** *** *** ***

இதுவரை வந்துள்ள கருத்து கணிப்புகள், ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்கிறார்கள் ஒரு குழுமம் காங்கிரஸ் வரும் என்கிறது. இன்னொன்று பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கும் என்கிறது. இன்னொன்று மறுபடியும் தொங்கு சட்டசபை தான் என சொல்கிறது. உங்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள் ;-)
25ஆம் தேதி மாலை முடிவுகள் தெரிந்துவிடும்.

தொங்கு சட்டசபை வந்தால் தேவகவுடா கட்சியும், பங்காரப்பா கட்சியும், மாயாவதி கட்சியின் சில எம்.எல்.ஏக்களும் தங்கள் பேரங்களை கடை விரிக்கலாம். மீண்டும் கடந்த 4 ஆண்டுகள் நடந்த கூத்துகள் தொடரும். பாஜக ஆட்சிக்கு வந்தால், ஜெய்பூர் மாதிரி குண்டு வெடிக்காமல் இருக்குமா என பலருக்கும் டவுட்டு. காங்கிரஸ் வந்தால் யார் முதல்வர் என்பதை முடிவு செய்யவே 10 நாட்கள் ஆகலாம்.

*** *** *** *** ***ஆக இதெல்லாம் எது நடக்கிறதோ இல்லையோ ஒன்று மட்டும் நிச்சயம். நீங்கள் பெங்களூருக்கு விமான பயணம் செய்பவரா ? அப்படியென்றால் நிச்சயம் 23ஆம் தேதிக்குப் பிறகு கைவசம் 4- 5 மணிநேரம் வைத்துக்கொண்டு பயணம் செய்யவும். ஆம் அன்று முதல் பழைய HAL விமான நிலையம் மூடப்பட்டு புதிய தனியார் விமானநிலையம் தன் பணியைத் துவக்குகிறது. நகரின் தெற்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து சுமார் 2 அல்லது 3 மணிநேரம் பயணநேரம். இன்னும் சாலைகள் ரெடியாகவில்லை.

*** *** *** ***


Photo courtesy: Rediff.com

16ஆம் தேதி நடக்கும் 2ஆவது சுற்றில் எடியூரப்பாவிற்கு ஆப்பு வைப்போம் என பங்காரப்பா ஷிகாரிபுராவில் களம் இறங்கியுள்ளார். எல்லோர் கண்களும் இங்கே தான். இங்கு காங்கிரசும் ஜனதாதளமும் போட்டியிடவில்லை. அந்த அளவிற்கு ஒற்றுமை !!
பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைத்து எடியூரப்பா தோற்றால் யார் முதல்வர் ? அனந்தகுமார் வருவாரா ?

*** *** *** ***


(தொடரும்)

அலெக்ஸ் பாண்டியன்
14-மே- 2008

Tuesday, May 06, 2008

கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 2

கர்நாடகத் தமிழர்களின் ஓட்டு யாருக்கு ? கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் யாருக்கு ஓட்டு போடலாம் ? போடவேண்டும் ?

ஒகனேக்கல் என்றாலும் காவிரி என்றாலும் வீரப்பன் என்றாலும் எதற்கெடுத்தாலும் அடிவாங்குவது தமிழர்களும் தமிழர்கள் நடத்தும் வணிக/இன்னபிற நிறுவனங்களும்தான்.
1991ல் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வெளியான சமயம் நடந்த கலவரங்களில் பலர் பாதிக்கப்பட்டனர். அப்போது பங்காரப்பாவின் ஊக்குவிப்பும் போலீசாரின் உள்-கை ஆட்டமும்தான் காரணம்.

ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டபோதும் பிரச்னை மாதக்கணக்கில் இழுத்தது என்றாலும் எஸ்.எம்.கிருஷ்ணாவின் சற்றே மேம்பட்ட அணுகுமுறையால் வன்முறை குறைந்த அளவில் காணப்பட்டது. பின் காவிரி இறுதி தீர்ப்பு வந்த (பிப்ரவரி 2007) போது குமாரசாமியும் பரவாயில்லை ரகத்தில் கையாண்டதில் ஓரளவு வன்முறை. தற்போது ஓகனேக்கல் பிரச்னையில் கவர்னர் ஆட்சி. அவருக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணிமாற்றம் செய்யவே நேரம் இருக்கிறது போலும்.

தமிழ்ச்சங்கம் மக்களோ சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என கன்னடா ரக்ஷணா வேதிகே, வாட்டாள் நாகராஜ் போன்றோருடன் பேசுவதிலும் நேரம் செலவழித்துகொண்டு உள்ளது.

தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் 3 நாட்களே உள்ள இந்த நிலையிலும் பெங்களூரில் தேர்தல் சம்பந்தப்பட்ட போஸ்டர்களோ, பேனர்களோ, மைக்செட் சத்தங்களோ அதிகம் இல்லை (இந்த முறை). இன்னும் பல வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளின் எல்லா பகுதிகளுக்கும் வரவில்லை.

முன்பெல்லாம் தேர்தல் வேலை செய்யவென்றே ஒவ்வொரு கட்சியிலும் வேலையில்லா இளைஞர்கள் பட்டாளம் மிகவும் ஆக்டிவாக வேலை செய்வர். தற்போது ஐடி கம்பெனிகள், கால்செண்டர் கம்பெனிகளின் தயவால் பலரும் டாக்ஸி ஓட்டுனர், செக்யூரிடி, உணவு காண்டிராக்ட், கட்டுமான வேலை என பிசியாக இருப்பதால் அரசியல்வாதிகளின் பின்னால் அவ்வளவு கூட்டம் இல்லை.

*** *** *** ***

வெயிலோ பட்டையை கிளப்புகிறது. இதில் கிராம, சிறுநகரப் பகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் சூடு பிடித்திருப்பதாகத் தகவல். பெங்களூரைப் பொறுத்தவரை மக்களிடம் ஒரு வித 'அபதி' (Apathy) என ஆங்கிலத்தில் சொல்லப்படும் விட்டேற்றித்தனம் அல்லது வெறுப்பு தான் காணப்படுகிறது.

ரியல் எஸ்டேட் முதலைகளும், சுரங்க பிசினஸ் பெருச்சாளிகளும்தான் வேட்பாளர்கள், பலருக்கும் பல நூறு கோடிக்கணக்கில் சொத்து. இதில் யார் எம்.எல்.ஏ ஆனாலும் மக்கள் பிரச்னைகளோ மாநிலத்தின் பிரச்னைகளோ கையாளப் போவதில்லை. தங்கள் கோடிகளைப் பெருக்கவே நேரம் செலவழிப்பர் என்பதனால் யாருக்கும் ஆர்வம் இல்லை என்பது தெரிகிறது.

*** *** *** ***

தமிழில் பேசி ஓட்டுக் கேட்டதால் (அதிமுக வேட்பாளர்) ஆட்டோ உடைப்பு என ஒரு பக்கம் செய்தி வந்தாலும் இன்னோரு பக்கம் தமிழர் நிறைந்த அல்சூர், சிவாஜி நகர் பகுதிகளில் ஓட்டுக் கேட்கும் வேட்பாளர்கள் (காங்கிரஸ், பாஜக, ஜனதாதளம்) தமிழிலும் கோஷம் போடத் தவறுவதில்லை.

தமிழர்களுக்கு மட்டுமல்ல. பெங்களூரில் வசிக்கும் பலருக்கும் சரி,, ஏன் கர்நாடகத்தில் வசிக்கும் பலருக்குமே சில பொது பிரச்னைகள்

1) சென்ற 4 ஆண்டுகளில் ஆட்சி, அரசு என்ற ஒன்று இல்லாமலே மாநிலம் குட்டிச்சவர் ஆனதால் இந்த முறையாவது ஏதாவது ஒரு கட்சி ஆட்சி - நல்ல தலைவர் தலைமையில் அமைந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு நிலையான ஆட்சி வேண்டும் என்பதே அவா.

2) பெருகிவரும் நிலம், நீர் மற்றும் விலைவாசி பிரச்னைகள். 10 வருடம் முன்பு சென்னை கண்ட நீர் தட்டுப்பாடு பெங்களூரில் இன்னும் சில வருடங்களில் வந்துவிடும் அளவிற்கு எங்கு பார்த்தாலும் வீடுகள், கட்டிடங்கள். நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவில் ரியல் எஸ்டேட்.

3) பெங்களூரைப் பொறுத்தவரை டிராபிக் பிரச்னை ஒரு பெரிய அளவில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் சரியான முடிவுகளும், வேலைகளும் துவங்காத காரணத்தால் இன்னும் சில ஆண்டுகளில் கட்டுக்கடங்காத நிலைமைக்குச் செல்லும் ஒரு நிலை. மேலும் காவிரி, ஒகனேக்கல்,பெல்காம், இந்தி என எதற்கெடுத்தாலும் தடியைத்தூக்கும் கன்னட ரக்ஷணவேதிகே ஆட்களின் அடாவடியால் வெறுத்துப் போயிருக்கும் மக்கள்.

4) தமிழ்நாடு போல ஒரு கட்டுக்கோப்பான கட்சியை நடத்தும் தலைமை இல்லாதது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மேலிடம் தேர்ந்தேடுக்கும் முதல்வருக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் இன்ன பிற முதல்வர் பதவி ஆசைநாயகர்கள்.

பாஜகவிலும் உட்கட்சிபூசல் உண்டு என்றாலும் எடியூரப்பாதான் முதல்வராக முன்னிறுதப்பட்டாலும் ஆட்சிக்கு வந்தால் நிலையாக இருக்கும் என கியாரண்டி கிடையாது. அதுவும் தோணியில் ஏறி ஓகனேக்கல் சென்றமாதிரி அணுகுமுறைகளை பலரும் வரவேற்கவில்லை.

குமாரசுவாமி நல்ல முதல்வர் என பெயர் எடுத்திருந்தாலும் அவர் வந்தால் நல்லாட்சி நடக்கும் என மக்கள் நம்பினாலும், அவர் தந்தையையையும் அண்ணனையும் நினைத்தால் மக்களுக்கு வெறுப்பே. அவர் குடும்பபாசத்தைவிட்டு தனக்கென ஒரு பாதை வகுத்தால் நிச்சயம் வரவேற்பு பெறுவார். தமிழ்நாடு மாதிரி மாநில கட்சி ஆட்சிக்கு வந்தால்தான் மத்தியில் செல்வாக்குடன் மாநிலத்துக்குண்டான தேவைகளை (மிரட்டிப்) பெறலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் நடக்கப்போவது என்ன ?

மீண்டும் ஒரு தொங்கு சட்டசபை வந்து பேரங்களும், பணப்பறிமாற்றங்களும் நடந்து ஊசலாடும் ஆட்சியும், தலையில்லாத வால்கள் துள்ளி ஆடும் போக்கும் நடந்தால் கர்நாடகம் பீகாராகும் நிலைமை ரொம்ப தூரத்தில் இல்லை.Photos Courtesy: Times of India

*** *** ***
தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளால் எல்லா கட்சிகளும் கொஞ்சம் அடக்கியே வாசிக்கின்றன. என்னைப் பொறுத்தவரை - எங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் யாருக்கு குறைந்த அளவில் சொத்தும், நிறைய நல்ல பெயரும் உள்ளதோ அவருக்கே எனது ஓட்டு. இந்தப் பணமுதலைகளுக்கு ஓட்டு போட்டுவிட்டு அவர்கள் சட்டமன்றத்திலோ இன்ன பிற முக்கிய இடங்களிலோ மக்களுக்குக் குரல் கொடுக்காதவர்களுக்கு எனது ஓட்டு நிச்சயம் இல்லை.

வாக்காளர் அடையாள அட்டை கொடுப்பதில் முதல் சில நாட்களில் சில குளறுபடிகள் இருந்தாலும் தேர்தல் கமிஷன் நிச்சயம் நல்ல பணியை குறைந்த கால அளவில் செய்துள்ளது. தனியார் கம்பெனி வசம் போட்டோ எடுத்து, லாமினேட் செய்து வழங்கும் வேலை கொடுத்திருந்தாலும், எல்லா தொகுதிகளிலும் தினமும் 2 இடங்களில் அமைத்து கடந்த 3 வாரங்களாய் நல்ல பணி. பலரும் வந்து வரிசையில் வெயிலில் நின்று வாங்கிச் சென்றனர். ஓட்டு போட வராவிட்டாலும் முகவரி அத்தாட்சி என்ற அளவில் பலரும் பெற்றுகொண்டனர்.

*** *** ***

யார் வந்தால் நல்லது ? எனது பார்வையில்...

1) முதல்வராக குமாரசுவாமி (மைனஸ் குடும்ப உறவுகள்)
2) கட்சியாக - எம்.எல்.ஏக்களாக - பாஜக - (மைனஸ் மதம் சார்ந்த செயல்கள்பாடுகள்)
3) மந்திரிகளாக காங்கிரஸ் (மைனஸ் சோனியாவின் எடுபிடிகள்)

நடக்குமா இது ? 25ஆம் தேதி மாலை தெரியும் ?


(தொடரும்)

அலெக்ஸ் பாண்டியன்
6-மே-2008

Wednesday, April 30, 2008

கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 1

கள்ளத் தோணியில் ஒகனேக்கல் வந்த எடியூரப்பா மே 26ஆம் தேதி கர்நாடக முதல்வராக பதவியேற்றால் தமிழக முதல்வர் கருணாநிதி அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வாரா இல்லை சுப்ரீம் கோர்ட் வாய்தாக்களில் அம்மாவட்ட மக்கள் வாய் தாகம் மறக்கப்படுமா போன்ற ஆராய்ச்சிகளில் இறங்காமல் கர்நாடகத் தேர்தலில் என்ன நடக்கிறது என பார்ப்போம்.

*** *** ***


Photo Courtesy: தினகரன்


பெங்களூர் உள்ளிட்ட தெற்கு கர்நாடக மாவட்டங்களில் முதல்கட்டமாக மே- 10ஆம்
தேதி தேர்தல்
. இன்னும் 9 நாட்கள் கூட இல்லாத நிலையில் எனக்குத் தெரிந்தவரை செய்தித்தாள்கள் தான் தேர்தல் பற்றி அலப்பரை பண்ணுகிறதே தவிர பெரும்பாலான பகுதிகளில் இன்னும் பெரிய போஸ்டரோ, யார் வேட்பாளர் போன்ற நோட்டிஸ்களோ, போடுங்கய்யா ஓட்டு கோஷங்களோ காணப்படவில்லை.

கிராமப்புறங்களிலும், சிறு டவுன்களில் கொஞ்சம் திருவிழா நிலை இருக்கலாம் தெரியவில்லை. தொகுதி சீரமைப்பு (கட் அண்ட் பேஸ்ட்) செய்து புதிய தொகுதிகளின் நிலவரப்படி பெங்களூரில் 28 தொகுதிகள். அதனால் இங்கு ஜெயிக்க அனைத்து கட்சிகளும் போட்டாபோட்டி. இங்கு கணிசமான சீட்டுகளை ஜெயித்தால் ஆட்சியை பிடிப்பது இலகு என கட்சிகளும் வரிந்து கட்டியுள்ளன.

வேட்பாளர்களின் சொத்துகணக்கு (காட்டியுள்ளது மட்டும்) 100 கோடி 200 கோடி என பத்திரிக்கைகளுக்குத் தீனி. 220 கோடி சொத்துவைத்துள்ள வேட்பாளர் இந்த தேர்தலில் ஜெயித்தால் இன்னும் 5 ஆண்டுகளில் அதனை எத்தனை மடங்கு பெருக்குவார் என அலுவலகங்களில் டீக்கடை பெஞ்சு ரேஞ்சுக்கு உரையாடல்கள்.

BJP candidate from BTM Layout G. Prasad Reddy is the richest of the candidates with assets worth over Rs. 300 crore. He is followed by fellow land developer Kupendra Reddy, the Congress candidate from Bommanahalli, who has properties worth over Rs. 180 crore.

*** *** ***

2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு வந்த போது தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கன்னட நடிகர் "ரிபெல் ஸ்டார்" அம்பரீஷ் (அதாங்க 'ப்ரியா'வில் ஸ்ரீதேவிக்கு ஜோடியாக வருவாரே, சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பர், 'கரையெல்லாம் செண்பகப்பூ' ஹீரோயினி சுமலதாவின் கணவர்) இந்தத் தேர்தலில் ஸ்ரீரங்கப்பட்டிணாவில் போட்டியிடுகிறார். மண்டியாவின் மண்ணின் மகனான அவர் (மண்டியா எம்.பி.யாக இருக்கிறார்) அங்கு ஜெயிப்பதில் கடினமாக இருக்காது.

எஸ்.எம். கிருஷ்ணா போட்டியிடவில்லை. அவரது ஆதரவாளர்களுக்கும் டிக்கெட் கொடுக்கவில்லை என பலபேர் தகராறு செய்ய, சில தொகுதிகளில் ரிபெல் போட்டியாளர்களும் உண்டு. பாஜகவிலும் இந்தமாதிரி கரைச்சல்கள். தனது பேரனுக்கு சிவாஜிநகரில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை என முன்னாள் ரயில்வே மந்திரி ஜாஃபர் ஷெரீப் டெல்லிவரை சென்று அன்னை சோனியாவுடன் மீட்டிங் நடத்தி ராஜினாமாவை திரும்பப் பெற்றுள்ளார். ஏதோ ஒரு மாநிலத்தில் கவர்னர் பதவி என அவருக்கு லாலிபாப் கொடுத்துள்ளார் அன்னை.

இதைத் தவிர மாநில தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் முதல்வர் தரம்சிங், தேவகவுடா கட்சியிலிருந்து வந்த சித்தராமையா (தனது முன்னாள் மைசூர் சாமுண்டீஸ்வரி தொகுதி சீரமைப்பில் மாறிவிட்டது என கண்ணீர் விட்டு அழுது சீன் போட்டுள்ளார் - சென்றமுறை இடைத்தேர்தலில் அங்கு சில நூறு வாக்குகளில் அவரை தண்ணி காட்டினார் தே.கவுடா அண்ட் சன்ஸ்), ஹெச்.கே.பாடீல், கவுடா கட்சியிலிருந்து சமீபத்தில் (சீட் கொடுத்தால் மட்டுமே காங்கிரஸ் பேரியக்கத்திற்கு சேவகம் செய்வேன் என மார்தட்டி) சேர்ந்த எம்.பி.பிரகாஷ் என காங்கிரஸில் 10க்கும் மேற்பட்ட முதல்வர் நாற்காலி ஆசை நாயகர்கள்.

பாஜகவிலே எடியூரப்பாதான் முதல்வர் என அறிவித்துவிட்டே களத்தில் இறங்கியுள்ளனர். ஆனால் அங்கும் உள்குத்துகள், ரிபெல் போட்டியாளர்கள் என ஒரே அதகளம் தான். அனந்தகுமார் ஆட்கள் அதிகம் ஜெயித்துவிட்டால் எடியூரப்பாவிற்குத் தலைவலிதான். குஜராத்தில் நடத்திய வெற்றி தேர்தல் வியூகத்தை இங்கும் நடத்திப்பார்க்க அருண்ஜெட்லியூம் வந்து இறங்கியுள்ளார். தமிழகத்திலிருந்து இல.கணேசனோ இன்ன பிறரோ வந்து தமிழர்கள் பகுதியில் பிரசாரம் செய்வார்களா என தெரியவில்லை.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் தேவகவுடா கட்சியின் முக்கிய தலைவரான பி.ஜி.ஆர் சிந்தியாவை பொறுப்பில் பல இடங்களில் (அதே தலித்-பிராமணர்- சிறுபான்மையினர் கூட்டணி) உ.பி. பார்முலாவில் களம் இறங்கியுள்ளது.

முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி பங்காரப்பா தலைமையில் போட்டியிடுகிறது.

தேவகவுடா அண்ட் சன்ஸ் - குமாரசுவாமி, ரேவண்ணா சந்திலே சிந்து பாடும் விதமாக யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தாங்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடலாம் என கணக்கு போட்டு இறங்கியுள்ளனர். தேவகவுடா குடும்ப வேட்பாளர்களுக்கு எதிராக பெண்களை நிறுத்தினால் அவர்களை மண்ணைக் கவ்வச் செய்யலாம் என எண்ணி (சரித்திரம் அப்படி) காங்கிரஸ் ஹெக்டேயின் மகளையும் இன்னோரு பெரிய தலையின் மருமகளையும் களம் இறக்கியுள்ளது.


ஆக கலக்கப்போவது யாரு என தெரியாத தற்போதைய நிலைமையில் இன்றைய டெக்கான் ஹெரால்ட்- சிஎனென். ஐபிஎன் கணிப்பு காங்கிரஸுக்கு ஆதரவாகத் தெரிகிறது.


கர்நாடகத் தமிழர்கள் யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் ? காவிரிக் கரையின் மண்ணின் மைந்தனான நான் யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் ?

(தொடரும்)

அலெக்ஸ் பாண்டியன்
30-ஏப்ரல்-2008

Wednesday, April 09, 2008

தேவை ஒரு நல்ல பற்பசை

என்னடா இது ஒகனேக்கல் பிரச்னையால் தமிழகமும், கர்நாடகமும், அரசியலும், சினிமாவும், பதிவுலகமும் அல்லோலப்படுகிறது. இந்த பற்றி எரியும் நேரத்தில் பற்பசையா என நீங்கள் கேட்பது புரிகிறது. மேலே படியுங்கள்

வாழ்க்கையில் நீங்கள் இதுவரை எந்த எந்த பற்பசை/பல்பொடி உபயோகித்துள்ளீர்கள் ?

Image courtesy: wired.com and HLL/HUL

 • 1431 பயோரியா பல்பொடி ?
 • சிங்கப்பூர், மலேசியா பிரபல கோபால் பல்பொடி ?
 • ஆற்றில்/குளத்தில் குளிக்கும்போது உபயோகபடுத்தும் செங்கல் பவுடர் ?
 • விக்கோ வஜ்ரதந்தி ?
 • கிராம்பு புகழ் பிராமிஸ் ?
 • வேப்பம் புகழ் நீம் ?
 • டாபர் லால் தந்த் மஞ்சன் (சிவப்பு) ?
 • குரங்கு மார்க் பல்பொடி (சிவப்பு) ?
 • கோல்கேட் பல்பொடி ? பற்பசை ?
 • சமீபகால புகழ் க்ளோசப் ?
 • குழந்தைகளை டார்கெட் செய்யும் பெப்சொடெண்ட் ?
 • பபூல் ?
 • ஃபோர்ஹான்ஸ் ?
 • பினாகா ?
 • சிபாகா ?

  ஹிந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் கால்கேட் பாமாலிவ் கம்பெனிகள் மட்டுமே தற்போது இந்த ஆட்டத்தில் எல்லா வணிகவளாகங்கள் / அங்காடிகள் / பேரங்காடிகள் மற்றும் சிறு குறு கடைகளில் தங்கள் பற்பசை தயாரிப்புகளை அடுக்குகின்றனர். இதில் கால்கேட் மற்றும் க்ளோசப் பல்வேறு நிறம், குணம், மணங்களில் அடுக்கிவைத்துள்ளார்கள் ஆனால் எதுவும் திருப்தி தரவில்லை (எனக்கு). இதில் போலிகளின் (!) நடமாட்டம் வேறு அதிகமாகிவிட்டது :-)

  நான் கேட்பது எல்லாம் ரொம்ப சிம்பிள் ஐயா ! காலையில் எழுந்து பல் தேய்த்தவுடன் வாய்க்கும், நமக்கும் ஒரு புத்துணர்ச்சி தரவேண்டும். (கவனிக்கவும் நான் சொல்வது வாய் துர்நாற்றம் பற்றியதல்ல - அதற்கு பல மவுத்வாஷ் எனப்படும் ஐட்டங்கள் வந்து பல வருடங்கள் ஆகிறது). அப்படி புத்துணர்ச்சி தரும் (என்னளவில்) பல்பொடி அல்லது பற்பசை தற்போது இல்லை. அநேகமாக கடந்த 3 வருடங்களில் அங்காடிகளில் கிடைக்கும் அனைத்து பிராண்ட் பற்பசைகளையும் உபயோகப்படுத்திப் பார்த்து விட்டேன். ஒன்றும் எமது தேவையை பூர்த்தி செய்யவில்லை.

  வாழ்க்கையில் நீங்கள் இதுவரை எந்த எந்த பற்பசை/பல்பொடி உபயோகித்துள்ளீர்கள் ? ஏன் ? மற்றும் எது தற்போது சிறப்பாக உள்ளது என பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால் நன்றி.  அலெக்ஸ் பாண்டியன்
  09-ஏப்ரல்-2008
 • Monday, March 03, 2008

  சுஜாதாவுக்கு PoGo டிவி அஞ்சலி

  ஸ்கிரிப்ட் ரைட்டர் சுஜாதா ரங்கராஜன், இசை இசைஞானி இளையராஜா என டைட்டில் போடும் போதுதான் நேற்று PoGo (போகோ) டிவியில் ஞாயிறு மதியம் 2 மணிக்கு PANDAVAS - THE FIVE WARRIORS படம் பார்க்க ஆரம்பித்தேன்.

  ஒரு பக்கம் கிரிக்கெட்டில் சச்சினின் அபார செஞ்சுரி இருந்தாலும் 2 மணிநேரத்தில் மகாபாரதத்தை குழந்தைகளுக்கான சித்திரக்கதையாக பெண்டாமீடியா தயாரித்திருக்கும் இந்தப்படத்தை பார்த்தபின் தான் ஆங்கில திரைப்படத்திலும் சுஜாதாவின் பங்களிப்பு எவ்வளவு விறுவிறுப்பு என புரிந்தது.

  மகாபாரதத்தை 2 மணிநேரத்தில் அதுவும் குழந்தைகளுக்கு புரியும் விதத்தில் கதையைக் கொண்டுசெல்வது நிச்சயம் ஒரு சேலஞ்சிங்கான விஷயம். சுஜாதா இதையும் விட்டுவைக்கவில்லை என்பது தெரிந்து ஒருவித பூரிப்பே. படம் முடிந்து சுமார் 4 மணிஅளவில் டைட்டில் மட்டுமே சுமார் 3 நிமிடங்கள் ஓடுமளவிற்கு தமிழர்கள் பெயர் (பெரும்பாலும் பெண்டாமீடியா நிறுவன ஊழியர்கள் ?)

  படவரைகலை என்னும் கிராஃபிக்ஸ் அருமை. பீமன் மட்டும் பலசாலியாக/குண்டாக இல்லை. கடோத்கஜன் ஏதோ கிங்காங் பட உருவத்தில். மற்றபடி எல்லாம் நிறைவே. இளையராஜாவின் இசையும் அருமை. அதெல்லாம் விட சுஜாதாவின் திரைக்கதை அமைப்பும் (அவரேதான் அங்கில வசனங்கள் என நினைக்கிறேன்) மிக அருமை. தருமன், துரியோதனன், திரௌபதி, சகுனி போன்றோர் பேசும் வசனங்கள் அருமை.

  மற்ற டிவிக்களில் சுஜாதா பற்றிய நிகழ்ச்சிகள் அஞ்சலியாக (செய்தி தவிர) வந்ததா என தெரியவில்லை. அவரின் படைப்பை இந்தவாரம் காண்பித்த போகோ சேனலுக்கு ஒரு ஓ.

  அலெக்ஸ் பாண்டியன்.
  - 3-மார்ச் - 2008

  Thursday, February 28, 2008

  சுஜாதா - பெங்களூரிலிருந்து ..

  எழுத்தாளர் சுஜாதா மறைவு தமிழ் எழுத்துலகில் ஒரு பெரிய இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் சீடர் தேசிகனின் வலைப்பதிவில் இந்த செய்தியைப் பார்த்ததும் மனது மிகவும் சங்கடப்பட்டது.

  தமிழ் இணைய உலகில் கடந்த 11 வருடங்களாக உலாவந்தாலும் நானெல்லாம் எழுதியது மிகவும் கொஞ்சமே. அந்த கொஞ்சமும் எழுத தூண்டுதலாக இருந்தது சுஜாதாவின் எழுத்து என்றால் மிகையில்லை.

  சுஜாதா எப்போது எனக்கு அறிமுகமானார் ?

  பள்ளிநாட்களிலேயே அவரது தொடர்கதைகளையும் சிறுகதைகளையும் நாவல்களையும் வார, மாத இதழ்களில் படிக்கத்தொடங்கியிருந்தாலும், கணேஷ்-வசந்த் ஜோடியின் தீவிர ரசிகனாய் இருந்திருந்தாலும், அவரது ஏன் எதற்கு எப்படி - ஜுவியில் படித்து தெளிந்திருந்தாலும், அவரது ஆளுமை என்னை(யும்) ஆட்கொண்டது இணையத்தில் தமிழில் எழுதத் தொடங்கியபோதுதான்.

  அந்தக்காலங்களில் தமிழ்.நெட்டில் மெயில் மூலம் மட்டுமே தமிழ்வளர்த்த காலங்களில் பலரும் சுஜாதா ஸ்டைலில் எழுதினார்கள். தேசிகனின் சுஜாதா பக்கமும், அதில் அவரது கதைகள் பட்டியலும், சிறுகதைகளும், அவரது க்ளிக்சுஜாதா இணையதளத்தில் வந்த சிறுகதைகள் இன்றும் இந்தக் கணினியில் சேமிப்பில் உள்ளது.

  காசி எழுதியுள்ளபடி கொலையுதிர்காலமும், கனவுத்தொழிற்சாலையும், ஸ்ரீரங்கத்து தேவதைகளும், கற்றதும் பெற்றதும் போன்ற தொடர்களும் படித்து மகிழ்ந்தவர்கள் தமிழ் வாசகர்களில் பலர்.

  அவரை முதல் முதலில் சந்தித்தது அவரின் நாடகங்களான ' நரேந்திரனின் விநோத கொலை வழக்கு' மற்றும் 'கடவுள் வந்திருந்தார்' நடந்தபோது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் கண்டிப்பாக அவரது புத்தகங்கள் தான் முதலில் வாங்குவது. அவரின் சினிமா பங்களிப்பில் எனக்கு அவ்வளவு பிடிப்பு இல்லையெனினும் 'இந்தியன்' படத்தின் வசனங்களிலும், ரோஜாவும் மிகவும் பிடிக்கும். (சிவாஜி நான் பார்க்கவில்லை - இன்னும்)

  இதற்கு மேல் என்ன எழுதுவது என தெரியவில்லை. இந்த வலைப்பூவில் கட் அண்ட் பேஸ்ட் சமாச்சாரங்களைத் தவிர நான் எழுதிய பதிவுகள் எதிலையாவது ஓரிரு வரிகள் 'அட..!' என உங்களுக்குத் தோன்றினால் அதன் பெருமை சுஜாதாவுக்கே..!

  பெங்களூர் நகரமே சுஜாதாவினால் பெருமை பெற்றது (தமிழ் கதையுலகில்) என்றால் பெங்களூர் வாழ் தமிழ் எழுத்து ரசிகர்கள் நிச்சயம் ஆட்சேபிக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

  சுஜாதா - நீங்கள் நீண்டகாலம் வாழ்ந்த, சுற்றிய பெங்களூரின் ஜலஹள்ளி, மல்லேஸ்வரம், பணஷங்கரி மற்றும் இன்ன பிற பகுதிகளும், நீங்கள் பணியாற்றிய பாரத் எலக்ட்ரானிக்ஸும் இன்று உங்களுக்காக உங்கள் எழுத்துலக ரசிகர்களுடனும் உங்கள் குடும்பத்தினரின் துக்கத்தில் பங்கு கொள்ளும்.

  - அலெக்ஸ் பாண்டியன்
  28-பிப்ரவரி- 2008

  Friday, January 04, 2008

  ஒபாமாவா ? ஹக்கபீயா ?

  கலக்கப்போவது யாரு ? இந்த உலகை இன்னும் 4 ஆண்டுகளுக்கோ அல்லது 8 ஆண்டுகளுக்கோ பெரியண்ணன் புஷ்ஷுக்கு அப்புறம் யாருங்க கலக்கப்போறாங்க ? ஒபாமாவா ? ஹக்கபீயா ?

  அமெரிக்க ஓட்டுரிமை பெற்றவர்களே உங்க ஓட்டு யாருக்கு ? போடுங்கய்யா ஓட்டு கழுதைய இல்லை யானைய பாத்துன்னும் இனிமே ஆரமிச்சுடுவாங்கய்யா ஆரமிச்சுடுவாங்க..

  இதில் யார் ஆட்சிக்கு வந்தால் எண்ணெய் விலை குறையலாம் ?
  ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் ஆகலாம் ?
  சப்-பிரைம் பிரச்னை சரியாகலாம் ?
  அமெரிக்க எகானமி தேறலாம் ?
  இந்தியர்களுக்கு அதிக விசாக்கள் கிடைக்கலாம் ?
  தீவிரவாதம் (அமெரிக்காவை மட்டும் தாக்காத அளவிற்கு) தாக்குதலிருந்து பாதுகாப்பு கிடைக்கலாம் ?

  வேறென்ன லாம்.. லாம் ?

  அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  - அலெக்ஸ் பாண்டியன்
  04-Jan-2008

  Photo and news Courtesy: BBC


  Mike Hucabee (left); Barack Obama (right)  IOWA RESULTS
  DEMOCRATS (official)
  Barack Obama - 37.58%
  John Edwards - 29.75%
  Hillary Clinton - 29.47%
  Bill Richardson - 2.11%
  REPUBLICANS (85% complete)
  Mike Huckabee - 34%
  Mitt Romney - 26%
  Fred Thomson and John McCain - both 13%