Monday, March 03, 2008

சுஜாதாவுக்கு PoGo டிவி அஞ்சலி

ஸ்கிரிப்ட் ரைட்டர் சுஜாதா ரங்கராஜன், இசை இசைஞானி இளையராஜா என டைட்டில் போடும் போதுதான் நேற்று PoGo (போகோ) டிவியில் ஞாயிறு மதியம் 2 மணிக்கு PANDAVAS - THE FIVE WARRIORS படம் பார்க்க ஆரம்பித்தேன்.

ஒரு பக்கம் கிரிக்கெட்டில் சச்சினின் அபார செஞ்சுரி இருந்தாலும் 2 மணிநேரத்தில் மகாபாரதத்தை குழந்தைகளுக்கான சித்திரக்கதையாக பெண்டாமீடியா தயாரித்திருக்கும் இந்தப்படத்தை பார்த்தபின் தான் ஆங்கில திரைப்படத்திலும் சுஜாதாவின் பங்களிப்பு எவ்வளவு விறுவிறுப்பு என புரிந்தது.

மகாபாரதத்தை 2 மணிநேரத்தில் அதுவும் குழந்தைகளுக்கு புரியும் விதத்தில் கதையைக் கொண்டுசெல்வது நிச்சயம் ஒரு சேலஞ்சிங்கான விஷயம். சுஜாதா இதையும் விட்டுவைக்கவில்லை என்பது தெரிந்து ஒருவித பூரிப்பே. படம் முடிந்து சுமார் 4 மணிஅளவில் டைட்டில் மட்டுமே சுமார் 3 நிமிடங்கள் ஓடுமளவிற்கு தமிழர்கள் பெயர் (பெரும்பாலும் பெண்டாமீடியா நிறுவன ஊழியர்கள் ?)

படவரைகலை என்னும் கிராஃபிக்ஸ் அருமை. பீமன் மட்டும் பலசாலியாக/குண்டாக இல்லை. கடோத்கஜன் ஏதோ கிங்காங் பட உருவத்தில். மற்றபடி எல்லாம் நிறைவே. இளையராஜாவின் இசையும் அருமை. அதெல்லாம் விட சுஜாதாவின் திரைக்கதை அமைப்பும் (அவரேதான் அங்கில வசனங்கள் என நினைக்கிறேன்) மிக அருமை. தருமன், துரியோதனன், திரௌபதி, சகுனி போன்றோர் பேசும் வசனங்கள் அருமை.

மற்ற டிவிக்களில் சுஜாதா பற்றிய நிகழ்ச்சிகள் அஞ்சலியாக (செய்தி தவிர) வந்ததா என தெரியவில்லை. அவரின் படைப்பை இந்தவாரம் காண்பித்த போகோ சேனலுக்கு ஒரு ஓ.

அலெக்ஸ் பாண்டியன்.
- 3-மார்ச் - 2008

4 comments:

அருண்மொழி said...

//மற்ற டிவிக்களில் சுஜாதா பற்றிய நிகழ்ச்சிகள் அஞ்சலியாக (செய்தி தவிர) வந்ததா என தெரியவில்லை. //

நான் பார்த்த வரையில் வர வில்லை என்று வருத்தத்துடன் நான் ஒரு பதிவு இட்டிருந்தேன்.
http://arunmozhi985.blogspot.com/2008/02/blog-post_1790.html

போகோ வுக்கு ஒரு ஓ !!!

சகாதேவன் said...

சுஜாதா மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. பல அலைஞர்கள் அவரை போ, கோ என்றுதான் எழுதினார்கள். ஹிந்து பத்திரிகை கூட பழைய போட்டோவுடன் சின்ன செய்தியாகத்தான் கூறியது.
போகோ சானல் அவர் படைப்பை மீண்டும் சின்னத்திரையிட்டு செலுத்திய அஞ்சலிக்கு நன்றி.
சகாதேவன்.

Alex Pandian said...

நன்றி அருண்மொழி மற்றும் சகாதேவன்.

போகோ டிவிக்காரர்கள் எதனால் இந்தப்படத்தை இந்தவாரம் ஒளிபரப்பினார்கள் என அஃபீஷியல் காரணம் எனக்குத் தெரியாது. நானும் இந்தப்படம் பார்க்கவேண்டும் என்றோ இல்லை இந்த நேரத்தில் இந்தப்படம் போடப்போகிறார்கள் என்றோ அல்லது சுஜாதா இந்த படங்களுக்கு திரைக்கதை அமைத்துள்ளார் என்று கூட எனக்கு இது வரை தெரியாது.

நான் யதேச்சையாக போகோ பக்கம் சென்றபோது திரையில் வந்த பெயர்தான் ஸ்க்ரிப்ட் - சுஜாதா ரங்கராஜன்.

அட..! என நான் பார்க்க உட்கார்ந்தபோதுதான் படத்தின் மீது ஒரு இண்டரெஸ்ட் உண்டாகி முழுவதும் பார்த்தேன். இன்னும் 2- 3 பெண்டாஃபோர் படங்களுக்கும் அவர்தான் ஸ்கிரிப்ட் என இன்றுதான் வலையில் படித்தேன். இந்த பதிவின் மூலம் அவரின் இன்னோர் பரிமாணத்தையும் தமிழ் வலைப்பதிவுலக வாசகர்களிடம் பகிர்ந்ததில் ஒரு மகிழ்ச்சியே.

அருண்மொழி: நீங்கள் சொன்ன மாதிரி மற்ற தமிழ்டிவிக்கள் செய்தி தவிர துளியும் கண்டுகொள்ளாதது எனக்கும் குறையாகவே பட்டது.

பார்க்கலாம் அடுத்தவார விகடன், குமுதம், கல்கி, குங்குமம் என்ன மாதிரி கவரேஜ் கொடுக்கிறார்கள் என. விகடன் மீது அவ்வளவு நம்பிக்கையில்லை.

இந்த நிலையில் போகோ டிவியில் இந்தப் படம் வந்தது அவருக்கு அஞ்சலியாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.

Senthil said...

அன்புடையீர்,

நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்புகொள்கிறோம். அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டி தொடர்பாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பவேண்டும். தங்கள் மின்னஞ்சல் முகவரியை sujatha.scifi@gmail.com க்கு அனுப்புங்கள். தொடர்புகொள்கிறோம்.

நன்றி